#திருச்செந்தூர்_கடலில்_நடந்த_அதிசயம்
★ஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர்.
மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியது.
★கடலும் கொந்தளித்தது. மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசினர். மழையும் நின்றது. கடல் கொந்தளிப்பு அடங்கியது.
★அக்காலத்தில் திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு தென்பாண்டிய நாட்டை, மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார்.
★அன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தனது விக்கிரகம் கிடக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார்.
அதாவது, சிலை கடலுக்குள் வீசப்பட்டு கிடக்கும் இடத்தின் மேலே ஒரு கருடன் பறக்கும், சிலை உள்ள இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்பதை உணர்த்தினார்.
★மறுநாள் கடலுக்குள் மரக்கலத்தில் பயணித்த வடமலையப்பன், ஓரிடத்தில் கருடன் பறப்பதையும், அந்த பகுதியில் கடல்நீரில் எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்து, அந்த இடத்தில் சிலையை தேடினார். நீருக்குள் வீசப்பட்டுக் கிடந்த சிலை மீட்கப்பட்டது.
★இந்த சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பார்க்கலாம்.
#தகவல் : மாலை மலர்