Tuesday, 22 October 2013

இசக்கி அம்மன் கதை



இசக்கி அம்மன் கதை


ழகை நல்லூர் என்ற ஊரில் சிவகாமி என்னும் தாசி இருந்தாள்.. அவளுக்கு திருகண்ட நட்டுவன் என்றொரு மகன் இருந்தான். அவன் நன்றாகப் பாடுவான். பழகை நல்லூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் பாடிக்கொண்டிருந்தான்.. தாசிக்குப் பெண்குழந்தை வேண்டுமென்று ஆசை. அவளும் ஈசனாரை வேண்டினாள்.. ஈசனும் அருள் புரிய அருமையான பெண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள்.
தன் பெண்ணிற்கு லெட்சுமி என்று பெயரிட்டாள். மகளும் சர்வ லெட்சணங்களும் பொருந்திய மஹாலெட்சுமியைப் போன்றே இருந்தாள். நாட்டியக் கலையைத் திறம்படக் கற்றறிந்தாள் லெட்சுமி..தாயின் தாசி வாழ்க்கை மகளுக்குப் பிடிக்க வில்லை.. கற்பு நெறியில் வாழவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் தாயோ பணத்தாசை பிடித்தவள்.. தன்
மகளையும் எப்படியாவது தாசியாக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்..
அந்த ஊரின் சிவாலயத்தில் வேலவன் என்னும் வேதியன் பூசை செய்யும் பணியில் இருந்தான்.ஓர் நாள் மாலை லெட்சுமியின் நடன அரங்கேற்றம் ஈசனார் ஆலயத்தில் நிறைவேறியது.. அவளைக் கண்ட நாள் முதல் வேலவனுக்கு உறக்கமில்லை..
அவளைக் காண வேண்டும்.. அவளோடு உரையாட வேண்டும்.. சுகிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. (அட.. இதைத்தான் காதல் என்போம்யா...)
அதே நிலைதான் லெட்சுமிக்கும்...
வேலவன் ஆவல் அதிகமாகி ஓர் நாள் சிவகாமி தாசியின் வீட்டுக் கதவைத் தட்டினான்.வேறு யாரையோ எதிர்பார்த்திருந்த சிவகாமி, வேலவனைக் கண்டு மலைத்தாள்..யாராக இருந்தாலும், தாசியின் இல்லம் தேடி வந்து விட்டால், மரியாதை கொடுத்தே தீரவேண்டும் இல்லையா...
"வாங்க. வாங்க..."
"இன்று தங்கள் மகளின் நடனம் கண்டேன். அற்புதம்."
" அப்படியா.. அமருங்கள். என் மகளை அனுப்பி வைக்கின்றேன்..
வேலவனை அமரவைத்துத் தன் மகளின் கையில் தாம்பூலம் கொடுத்து அனுப்பினாள்..
அதில் வசிய மருந்தையும் கலந்திருந்தாள்..
மகளும் இதை அறியவில்லை... தான் எண்ணியபடி காதலனே தன் மனையேகி வந்ததை
எண்ணி மகிழ்ந்தாள்...
"அத்தான்... தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்.."
"இதோ அன்பே"
இவ்வாறாக இவர்கள் தொடர்பு வளர்ந்தது..
இப்படி இருந்தால் தன் மகள் சரிப்பட்டு வரமாட்டாள் என்று எண்ணிய சிவகாமி,
தனது மகளை வேலவனிடமிருந்து பணம் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாள்.
"மகளே... இதைப் பார்... உன்னைக் காண வரும் வேலவனிடமிருந்து நீ பணத்தைப் பெற வேண்டும்.."
"அம்மா.. நான் உன்னைப் போன்ற தாசி அல்ல... அவரிடம் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன்.. தாசி வாழ்க்கை வாழ நான் தயாரில்லை... அவரை மணம்புரிந்து வாழ்வேன்.."
"நீ திருமணம் செய்தால் உன் கணவனிடமிருந்து வாங்குவாய் இல்லையா... எனவே இவனிடமும் வாங்கு" என்றுரைத்தாள் தாய்.
"சரி அம்மா. அப்படியே செய்கிறேன்" மகளும் சம்மதித்தாள்..
தினமும் மாலை ஆலய நடை சாத்தியபின் தாசியின் இல்லமே கதியெனக் கிடந்தான் வேலவன்..அவளது அழகிலும், நடனக் கலையிலும், தாய் கொடுத்த வசிய மருந்திலும் அடிமையாகி விட்டிருந்தான்..
தினம் தினம் அவளுக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் கைப் பொருட்களையெல்லாம் இழந்தான்..
ஓர் நாள்.. லெட்சுமி குளித்துக் கொண்டிருந்தாள்.
வேலவன் வீட்டுக்குள் நுழைந்தான்..
"வாங்க.. வாங்க..."
"ம்.."
"உட்காருங்க... லெட்சுமி குளிச்சிட்டிருக்கா..."
"அப்படியா... சரி நான் அப்புறம் வரட்டுமா?"
"இல்லை.. உட்காருங்க.." உபசரித்தாள்..
"அப்புறம்.. லெட்சுமி நன்றாக நடனமாடுகின்றாள் இல்லையா?"
"ஆமாம் அத்தை... அதனால்தான் அவளை எனக்குப் பிடித்திருக்கின்றது.."
"அப்படியானால் அவள் அழகுக்கேற்ற ஆபரணங்களால் அவளை அலங்கரித்தால் எப்படியிருக்கும்,?"
"ஆஹா... அருமையாக இருக்கும்... இப்போதே சென்று நகைகள் வாங்கி வருகின்றேன்.."எழுந்தான் சென்றான். நகைகள் வாங்கி வந்தான்.. லெட்சுமிக்குப் பரிசளித்தான்..
நாளாக நாளாக வேலவனின் கையிருப்பு தேய்ந்து கொண்டே வந்தது...
ஓர் நாள் ஆலயத்தில் இறைவனுக்கு அணிவிக்கும் நகைகளைக் கொண்டு வரவேண்டும்
என்றுரைத்தாள் தாசி..
மயக்கத்திலிருந்த வேலவனும் அப்படியே செய்தான்..இவ்வாறாக முழு அடிமையாகி விட்டான்...
அன்று..
அவன் கைகளில் ஏதுமில்லை...
தாசியின் இல்லம் நோக்கி நடந்தான்.. உள்ளே நுழைந்தான்.. வீட்டுத்
திண்ணையில் தாய்க்கிழவி...
"வாங்க... என்ன கொண்டு வந்திருக்கின்றீர்கள்?"
"அத்தை... இன்று கொண்டு வருவதற்கு எதுவுமில்லை... என் லெட்சுமியைக் காண வந்தேன்.."
"அதெல்லாம் பார்க்க முடியாது... ஏதும் கொண்டு வராவிட்டால் என்னைக் காண
அனுமதிக்காதே என்று சொல்லிவிட்டாள்"
"லெட்சுமியா அப்படிச் சொன்னாள்?"
"ஆம் அவள்தான் சொன்னாள்"
இதனால் மனமுடைந்த வேலவன் வந்த பாதையே திரும்பி நடந்தான்.. என்னவெல்லாமோசெய்தேனே... தாசிக் குலத்தில் பிறந்தவள் தன் புத்தியைக் காட்டிவிட்டாளே... இவளுக்காக ஆலயத்தின் நகைகளையும் கொண்டு வந்தேனே... இனி ஆலயத்துள் எப்படி நுழைவேன்.. என்று புலம்பிக் கொண்டே நடந்தான்...
அதே சமயம் லெட்சுமி வெளியே வந்தாள்.
"அம்மா அவர் எங்கே?"
"எவர்?"
"அவர்தானம்மா. நம்ம வேதியர்.."
" அவனா... போய் விட்டான்.."
"போய் விட்டாரா? ஏன்?"
"ஏனென்று என்னைக் கேட்டால்? அவன் கொடுத்த நகைகளையெல்லாம் திருப்பிக்கேட்டான்..முடியாது என்றேன். போய் விட்டான்.."
"அடியே தாய்க் கிழவி.. அவரை விட இந்த நகைகளா பெரிய விசயம்? அவரில்லாமல் இந்த நகைகள் எதற்கு.. இப்போதே போய்க் கொடுத்து வந்து விடுகின்றேன்.."
லெட்சுமி வீட்டிலுள்ள நகைகளையெல்லாம் ஓர் துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு வேலவனைப் பின் தொடர்ந்தாள்..
லெட்சுமி பின் தொடர்வதைக் கண்ட வேலவன் தன் வேகத்தைக் கூட்டினான்..லெட்சுமியும் அழைத்து அழைத்துப் பார்த்து சோர்ந்தாள்.. ஒரு கட்டத்தில் வேலவன் என்னதான் கேட்கிறாள் பார்க்கலாமே என்று நின்றான்..
"என்னை விட்டு எங்கே போகின்றீர்கள் அத்தான்?"
"ம்ம்ம்.. அத்தானா? யாரடி அத்தான்? தாசிக் குலத்தில் பிறந்த நீ உன் புத்தியைக் காட்டி விட்டாயல்லவா? உனக்காக ஆலயத்திலும் திருடினேனே?"
"அத்தான்.. இதோ நீங்கள் கொடுத்த நகைகள் எல்லாம் இதில் உள்ளன.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. என்னை விட்டு மட்டும் போய் விடாதீர்கள் அத்தான்"
"சரி அன்பே.. நாம் மீண்டும் இந்த ஊருக்கு வரவேண்டாம்.. வேறு எங்காவது
போய் விடலாம்.."
இருவரும் முடிவு செய்து நகைகளுடன் மலையாள தேசம் நோக்கிப் போய்க்
கொண்டிருந்தார்கள்..
கானகத்தில் சென்று கொண்டிருக்கும் போது பயங்கர வெயில்..
"அத்தான்.. மிகவும் சோர்வாக இருக்கின்றது.. உறங்க வேண்டும் போல் இருக்கின்றது"
"அன்பே.. இந்த இடத்தில் நிழலே இல்லையே.. என்ன செய்வது?" என்று சுற்றிலும்
பார்த்த வேலவன் ஓர் கள்ளிச் செடியைக் கண்டான்.
"வா அன்பே.. நாம் அந்த கள்ளிச்செடியின் நிழலில் இளைப்பாறலாம்."
லெட்சுமியை அழைத்துச் சென்று தன் தொடைமீது படுக்கவைத்தான்..
களைப்பில் தன்னை மறந்து உறங்கினாள் லெட்சுமி..
இந்த சமயத்தில்தான் வேலவனின் மனம் பல்வேறு விசயங்களை அசைபோடத் தொடங்கியது..
இதனால் பாதகமும் நிகழ்ந்தது...
தன் மடியில் களைப்போடு உறங்கிக் கொண்டிருந்த லெட்சுமியைப் பார்த்தான் வேலவன்.அவன் மனதோ அவளின் தாயின் சொற்களையே எண்ணிக் கொண்டிருந்தது.. என்ன இருந்தாலும் தாசிக்குலப் பெண்தானே.. இவள் என்னையே காதலிக்கிறாள் என்று நான் எண்ணியது முட்டாள்த்தனம் அல்லவா? தாசியின் அன்பு பணத்தின் மேலல்லவா இருந்து விட்டது..

இன்று என்னிடம் பணமில்லை என்று இவள் தாய் விரட்டி விட்டாள்.இவளோ என்னைத்    தொடர்ந்தாள்.. எதிர்காலத்தில் இவளும் மாறமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

விநோதமான விபரீத சிந்தனைகளோடு லெட்சுமியைப் பார்த்துக் கொண்டிருந்த வேலவன் ஓர் முடிவெடுத்தான்.

அருகிலிருந்த மணலைத் தன் தொடை உயரத்துக்குக் கூட்டினான்.லெட்சுமியின் தலையை எடுத்து அதில் வைத்தான்.. சுற்றிலும் பார்த்தான். ஓர் பெரிய பாறாங்கல் கிடந்தது...

எடுத்தான்... என்னை மயக்கி ஏமாற்றிய தாசியே... இன்றோடு இறந்து போ...
என்று எண்ணிக் கொண்டே அந்த கல்லை எடுத்து அவள் தலையில் போட்டான்...

துடிதுடித்தாள் லெட்சுமி...

"அடேய் வேதியா... உன்னை நம்பி என் தாயை விட்டு வந்தேனடா... என்னை ஏமாற்றிக் கொலை செய்கிறாயே... இது நியாயமா? என்னை நீ கொன்றதற்கு சாட்சி எதுவும் இல்லை என்று எண்ணிவிடாதே... நான் பத்தினியடா.. நீ என்னைக் கொலை செய்ததற்கு இந்தக் கள்ளி மரமே சாட்சி... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை வாழ விடமாட்டேன்.. உன்னைப் பழிவாங்கியே தீருவேன்.. " என்று சபதமிட்டு இறந்து போனாள் லெட்சுமி...


இதை சட்டை செய்யாத வேலவன், அந்த நகை மூட்டையை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.. அந்த நகைகளை விற்று புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்பது அவன் எண்ணம்... ஆனால் விதி?

நடந்து கொண்டிருந்தவனுக்குத் தாகம் எடுத்தது.

அருகே ஓர் கிணற்றைக் கண்டான். கிணற்றில் இறங்கி நீரருந்தலாம் என்று எண்ணி இறங்கியவனைக் கண்டு விதி சிரித்தது.

கிணற்றுப் படிக்குள் காத்திருந்த ஓர் நாகம் அவனைத் தீண்டியது.. கிணற்றுள் விழுந்து மடிந்தான்.

அங்கே... வீட்டிற்குத் திரும்பிய திருகண்ட நட்டுவன் தன் தாயிடம் தங்கையைப் பற்றிக் கேட்டான். தன்னை மதிக்காமல் அந்த வேதியன் பின்னாள் லெட்சுமி சென்றுவிட்டாள் என்றுரைத்தாள் தாய்க்கிழவி..


அவளைத் திட்டிவிட்டுத் தங்கையைத் தேடிக் காட்டுக்குள் ஓடினான் திருகண்ட நட்டுவன்.. அங்கே தன் தங்கை தலை சிதைக்கப்பட்டு இறந்திருந்த காட்சியைக் கண்டு பதைத்தான்..


அழுதான். துவண்டான்... "என் அன்புத் தங்கையே... உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? என்னிடம் சொல்லியிருந்தால் அந்த வேதியனோடு உன்னை சேர்த்து வைத்திருப்பேனே... என்ன ஆனதோ உனக்கு?" என்றெல்லாம் புலம்பினான்.. மனம் வெதும்பி அழுத அவனது ஆவி அப்படியே பிரிந்தது.. (வேறு சிலர் பாடும்போது அவன் அங்கே தூக்குப் போட்டு இறந்ததாகப் பாடுவார்கள்)

இறந்தும் மனந்தளராத லெட்சுமியின் ஆவி ஈசனாரிடம் சென்றது.."ஐயனே...தாசிக்குலத்தில் பிறந்தும் பத்தினியாய் வாழ நினைத்தது என் தவறோ? எனக்கு ஏன் இந்தத் தண்டனை?" என்று ஈசனாரிடம் முறையிட்டாள் லெட்சுமி.

ஈசனும் புன்முறுவலோடு "விதியின் வழியை வெல்ல யாராலும் இயலாது..உனக்கு வேறு என்ன வரம் வேண்டும் கேள்." என்றார்.

"என்னைக் கொன்ற அந்த வேதியனை நான் பழிவாங்க வேண்டும், அதற்கேற்ற வரம் தாருங்கள்."

"மகளே.. உன்னைக் கொன்ற பாவத்திற்கு அவனை உடனே தண்டித்தோம்.. பார் அவனும் பாம்பு தீண்டி உயிர் நீத்து விட்டான்.."

"இல்லையில்லை.. என் கரங்களால் நான் அவனைக் கொல்ல வேண்டும்.. அந்த வரத்தை எனக்குத் தாருங்கள்.."
 

"சரி.. அப்படியே தந்தோம். அடுத்த பிறவியில் நீ யார் என்ற உண்மை உனக்குத்
தெரிந்திருக்கும்.. நீ அவனைப் பழிவாங்குவாய்..." என்று ஈசனார்
வரமளித்தார்..
ஈசனிடம் வரம் வாங்கிய லெட்சுமியானவளும் அவள் அண்ணனும் சோழராசனுக்குக்குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் நீலன் நீலி எனப்பட்டனர்.
 
ஈசனது அருளால் பிறந்த குழந்தைகள் ஆதலால் இவர்கள் புறத்தோற்றத்திற்குக் குழந்தைகளாகத் தென்பட்டனர். ஆனால் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர்..
 
தாயின் தாய்ப்பால் இக்குழந்தைகளின் பசியை ஆற்றுவதாக இல்லை..
 
"அண்ணா.. எனக்குப் பசி பொறுக்கவில்லை.. நீ பசியாறினாயா?"
 
"இல்லையம்மா. எனக்கும் பசிக்கின்றது... "
 
"கொஞ்சம் பொறு அண்ணா. இவர்கள் அனைவரும் உறங்கியபின் நாம் வெளியே சென்று
பசியாறி வரலாம்"
 
குழந்தைகள் பெரியவர்கள் உறங்கக் காத்திருந்தனர். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்த பின்னர் இருவரும் வெளியேறி சென்று ஆடுகளையும், மாடுகளையும் கடித்து ரத்தம் குடித்துப் பசியாறித் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டனர்.
 
மறுநாள் பார்த்த மகாராணி குழந்தைகள் மேல் ரத்த வாடை வீசுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். அவளுக்குப் புரியவில்லை.. வாசனைத் திரவியங்களைக் குழந்தைகளுக்குப் பூசினாள்.
 
இந்த சமயத்தில் சோழராசன் ஓர் சோசியனை வரவழைத்துக் குழந்தைகளுக்கு சாதகம்
கணிக்கச் சொன்னார்.
 
வந்த சோசியன் குழந்தைகள் பிறந்த நேரத்தைக் கேட்டு சாதகம் கணித்து விட்டு
 
"அரசே.. இக்குழந்தைகள் மானுடக் குழந்தைகள் அல்ல.. இவர்கள் பிறந்த நேரத்தைப் பார்த்தால் பேய்க்குழந்தைகள் என்றே தோன்றுகிறது. இவர்களால் கோட்டைக்கு ஆபத்து. எனவே இவர்களை காட்டில் விட்டு விடுங்கள்." என்று
சொன்னான்.
 
ஆனாலும் தான் பெற்ற மக்களைக் காட்டுக்குள் கொண்டு விட மன்னன் மனம் ஒப்பவில்லை. எனவே அதை நிராகரித்து விட்டான்.


குழந்தைகள் தினமும் இரவில் ஆடுமாடுகளின் ரத்தத்தைக் குடிப்பதும், அவற்றை அடித்துத் தின்பதுமாகத் தங்கள் பசியை ஆற்றிக் கொண்டிருந்தனர்.
மக்களிடமிருந்து மன்னனுக்கு இதைப் பற்றிய தகவல் வந்தது. திடீர் திடீரென்று ஆடுமாடுகள் காணாமல் போவதைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் இப்பாதகத்தைச் செய்வது யாரென்று கண்டுபிடிக்கச் சொன்னான்.
சேவகர்கள் இரவில் விழித்திருந்து பார்த்தனர். இரவில் இரு குழந்தைகள் வந்து தின்று விட்டு திரும்பி அரண்மனைக்குச் செல்வதைக் கண்டனர். அப்படியே மன்னனிடம் தெரிவித்தனர். இதனால் மன்னன் உண்மையைப் புரிந்து கொண்டான். பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் தவித்த தமக்கு இப்படிப் பேய்க்குழந்தைகள்
பிறந்து விட்டனவே என வேதனை கொண்டான். சேவகர்களை அழைத்து இரு குழந்தைகளையும் காட்டில் போய் விட்டு விட்டு வரச்சொன்னான்.
சேவகர்கள் இரு குழந்தைகளையும் காட்டில் விட்டு வந்தனர். இரு குழந்தைகளும் வனத்தில் ஓர் வேப்ப மரத்தில் குடியிருந்தன. வனத்தில் விலங்குகளை வேட்டையாடி தின்று வாழ்ந்து வந்தன. அண்ணனை ஓய்வில் வைத்து
விட்டுத் தங்கை வேட்டையாடி வருவாள். இருவரும் உண்பார்கள். தங்கையை ஓய்வில் வைத்து விட்டு அண்ணன் சென்று வருவான்.. இவ்வாறாக குழந்தைகள் வளர்ந்தனர். பெரியவர்கள் ஆகினர்.
ஓர் நாள் ...
"அண்ணா இன்று நான் சென்று வேட்டையாடி வருகின்றேன்" என்று சொல்லிவிட்டு நீலி புறப்பட்டுச் சென்றாள்.
அந்த சமயத்தில் அந்த ஊரில் வாழ்ந்து வந்த வேளாளர்கள் ஆலயத்தின் கதவுக்காக மரம் தேடி காட்டுக்குள் வந்தனர்.
அவர்களின் கண்ணில் நீலன் குடியிருந்த வேப்ப மரம் பட்டது. உடனே அதை வெட்டி எடுத்துச் சென்றனர். இதனால் அந்த மரத்தில் குடியிருந்த நீலன் மாண்டான்.
திரும்பி வந்த நீலி வேப்பமரத்தைக் காணாது தவித்தாள். மரத்தை வெட்டி தன் அண்ணனைக் கொன்றது அந்த  ஊரின் வேளாளர்கள் என்பதை அறிந்தாள்..
இந்த ஊரில் உள்ள அத்தனை வேளாளர்களையும் அழித்து இந்த ஊரை நாசம் செய்வேன் என சபதம் செய்தாள்..
தன் முற்பிறவியில் தன்னைக் கொன்றவனைப் பழிவாங்க அந்த வனத்திலேயே காத்திருந்தாள்.
இன்னொரு புறம்...
காவிரிபூம்பட்டினத்தில் பெரும் வாணிபச்செட்டி ஒருவனுக்கு வேதியன் மகனாகப்பிறந்தான்.அவனுக்கு முற்பிறவியைப் பற்றிய ஞானம் இல்லை.. அவனுக்கு ஆனந்த செட்டி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
குழந்தைக்கு சாதகம் கணிக்கும் போது சோசியன் எச்சரிக்கைகளைக் கொடுத்தான்.
"எக்காரணம் கொண்டும் உன் மகன் வியாபார நிமித்தமாக தென் திசை நோக்கிச் செல்லக் கூடாது. எந்த காரணம் கொண்டும் வெளியூரில் தங்கக் கூடாது. அவ்வாறு தங்க நேர்ந்தால் ஏதேனும் சிவாலயத்தில் தங்க வேண்டும். ஒரு பெண்ணால் அவன் உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று சொன்னான்.
இதனால் ஆனந்த செட்டியை தென் திசை அனுப்பாமல், வெளியூரில் தங்க வைக்காமல் வளர்த்து வந்தார்கள். அவனும் வளர்ந்து பெரியவனானான். வாணிபத்தைத் தானே நடத்தத் தொடங்கினான். சில சமயங்களில் வெளியூரில் தங்க நேரும்போது தந்தை தடுத்துவிடுவதைக் கண்டு துன்புற்றான். காரணம் அறிந்து வியந்தான். அவனால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
எனவே ஓர் மந்திரவாதியிடம் சென்று இதைப் பற்றிக் கூறினான். மந்திரவாதியும் ஓர் மந்திரக் கத்தியைக் கொடுத்து,
"இந்த கத்தி உன் இடுப்பில் இருக்கும்வரை உன்னை யாராலும் கொல்ல இயலாது" என்று சொல்லி அனுப்பி
வைத்தான்.
இதனால் பல பகுதிகளுக்கும் சென்று வணிகத்தைப் பார்க்கலானான் ஆனந்த செட்டி..அவனுக்கு எதுவும் நேரவில்லை.. எல்லாம் மந்திரக் கத்தியின் மகிமை என்று எண்ணிக் கொண்டான்.. விதியும் சிரித்தது..
அன்று அவன் தென் திசை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் வந்தது.. தந்தை தடுத்தார். ஆயினும் மந்திரக் கத்தியைக் காட்டி தந்தையிடம் அனுமதி பெற்றான்.
 தந்தையும் "எந்த பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காது சென்று வா" என்று கூறி அனுப்பி வைத்தான்.
தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தான்...
அவன் வந்து கொண்டிருந்த திசையில்தான் அவனைப் பழிவாங்கக் காத்திருந்தாள் நீலி...
கானகத்தில் அவன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்பட்டாள் நீலி..
செவ்வாடை அணிந்து கையில் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துக் கொண்டு அவனருகே
வந்தாள்....
அப்போது...
செவ்வாடை அணிந்து கையில் வெற்றிலைத்தாம்பூலம் எடுத்துக் கொண்டு நீலியானவன் ஆனந்த செட்டியை எதிர்கொண்டாள். அடர்ந்த வனத்தில் செவ்வாடை அணிந்த பெண்ணைக் கண்டதும் அதிர்ச்சியுற்றான் செட்டி. மனத்தில் சோசியனின் எச்சரிக்கை நிழலாடியது..
 
"காட்டு வழிப்போகும் வாணிபரே... வந்து தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்."
என்று அழைத்தாள்.


அவளைத் தவிர்த்து விட்டு ஊருக்குள் நுழைந்தான் ஆனந்த செட்டி.. அவன் கையில் மந்திரக் கத்தி இருந்ததால் நீலியால் அவனை நெருங்க இயலவில்லை.
 
இதற்குள் மாலை ஆகிவிட்டது. நீலியானவள் வனத்தில் அவள் சாட்சியாய் விட்டுச் சென்ற கள்ளி மரத்தைக் குழந்தையாக மாற்றி அவனைத் தொடர்ந்து ஊருக்குள் சென்றாள்..
" அத்தான்.. அத்தான்... என்னை விட்டு எங்கே செல்கின்றீர்கள்.?"
"யாரடி உனக்கு அத்தான்... போ அந்த பக்கம்" என்று சொல்லிவிட்டு சென்று கொண்டிருந்த அவனை நோக்கி கண்ணீருடன் ஓடிக்கொண்டிருந்தாள் நீலி.
இதற்குள் ஊரில் சிலர் பார்த்துவிட்டு என்ன செய்தி என்று வினவ..
"இவர் என் கணவர்.. இது என் குழந்தை.. குழந்தை பிறந்ததும் எங்களைத் தனியாக விட்டு விட்டு ஓடி வந்துவிட்டார்.. நானும் அவரைத் தொடர்ந்து ஓடி வருகின்றேன்" என்றாள் நீலி..
அவனைத் தடுத்த ஊரார் பஞ்சாயத்தைக் கூட்டினர்.
பஞ்சாயத்தாரின் விசாரணையில் அவள் தனது மனைவி என்று சொன்னதை மறுத்தான் ஆனந்த செட்டி. மனதுக்குள்ளோ சோசியன் சொன்ன செய்திகள் நிழலாடிக் கொண்டிருந்தன.
ஆனால் நீலியோ சத்தியம் செய்தாள்.. "இவர் என் கணவர் என்பது சத்தியம்.. வேண்டுமானால் என் பிள்ளையை இறக்கி விடுகின்றேன்.. அதனிடம் அப்பா யார் என்று கேளுங்கள் அது சொல்லும்" என்று சொல்லி தனது குழந்தையை இறக்கி விட்டாள்..
குழந்தையும் "அப்பா" என்று அழுதபடியே ஆனந்த செட்டியை நோக்கி ஓடியது..
அவன் மிரண்டான்.. மறுத்தான்.. ஊராரோ நம்பவில்லை...
"பெண்ணுக்கு அநீதி செய்யாதே" என்று அறிவுறுத்தினார்கள்..
அவனோ தன் தந்தை தாயை அழைத்து வருவதாகக் கூறினான்.. "மறுவிசாரணையைக் காலையில் வைத்துக் கொள்ளலாம். இருட்டி விட்டது. இன்று இரவு நீங்கள் இந்த ஊரில் தங்கியிருங்கள்.. காலையில் விசாரிக்கலாம்" என்றார்கள் பஞ்சாயத்தார்..
நீலியோ "என்னையும் குழந்தையையும் இவரிடம் தனியாக விட்டுச் செல்கின்றீர்களே... இவரிடம் ஒரு கத்தி உள்ளது. அதை வைத்து என்னைக் கொன்றுவிடுவார்" என்று சொல்லி மேலும் அழுதாள்.. அவனை சோதனை செய்த
பஞ்சாயத்தார் அவனிடமிருந்த கத்தியைப் பிடுங்க அவர்கள் மூவருக்கும் ஒரு வீட்டைக் கொடுத்து அங்கு தங்கச் சொன்னார்கள்..
சோசியன் சொன்னதெல்லாம் நடந்ததை எண்ணிய ஆனந்த செட்டி பயந்து போனான்.
இன்றிரவு அவள் என்னைக் கொன்று விடுவாளே என்று பயந்த படியே அவளோடு சென்றான்..
நள்ளிரவு...
நீலி அவனை எழுப்பினாள்...
அவனது முன் ஜென்மத்தை அவனுக்கு நினைவூட்டினாள்.. அவன் கதறக் கதற அவன் வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்றாள்... அவன் குடலை மாலையாக அணிந்து கொண்டு ஓலமிட்டாள்...
தான் சபதம் செய்தபடி முற்பிறவியில் தன்னைக்கொன்ற வேதியனை இப்பிறவியில் பலிவாங்கிய மகிழ்ச்சியில் திளைத்தாள்..
தன் அண்ணனைக் கொன்ற இந்த ஊரின் வேளாளர்களைத் தான் பழிவாங்க வேண்டும் என்று சபதம் செய்தது நினைவுக்கு வந்தது... அந்த ஊரையே எரித்து நாசம் செய்தாள்..
ஒரே ஒரு வேளாளர் மாத்திரம் தப்பி விட்டார்.
அவர் அதிகாலையிலேயே எழும்பி வயலுக்குச் சென்று விட்டதால் ஊரை எரித்த நெருப்பிலிருந்து தப்பி விட்டார்..
நீலி இதை அறிந்தாள்...
அவரைப் பழிவாங்க இடைச்சிறுமி உருவம் கொண்டாள்..
மதிய வேளையில் வயலுக்குச் சென்றாள்.. தலையில் மோர்ப்பானை வைத்திருந்தாள்.. அதில் விசத்தைக் கலந்திருந்தாள்..
"அய்யாவே... வெயிலு அதிகமாக இருக்கின்றது. கொஞ்சம் மோர் அருந்துங்கள்" என்று சொல்லி அவருக்குக் கொடுத்து அவரையும் கொன்றாள்..
இப்படியாக நீலியானவள் தான் செய்த சபதங்களை நிறைவேற்றி வனத்தில் இரத்த வெறியுடன் சுற்றித் திரிந்தாள்...
அதே வெறியுடனே அவள் முப்பந்தல் என்னும் இடத்திற்கு வந்து நிலைகொண்டாள்..நீலியின் ஆவேசம் அதிகமாக இருந்ததால் சுற்றியுள்ள பகுதியின் மக்கள் தொந்தரவுக்கு ஆளானர்கள்.
அவளை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் அவள் ஈசனிடம் வரம் வாங்கியவள் அல்லவா.. ? எனவே அவளைப் பணிந்து அவளுக்குரிய சாந்திகளையெல்லாம் செய்து அவளைத் தெய்வமாக்கினர்..அவளே இசக்கி என்னும் பெயரில் முப்பந்தலில் நிலை கொண்டாள்...
தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் அவர்களுக்கு வேண்டியதை இறைவனிடம் வேண்டி வரமாகப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றாள்...
இசக்கி வனத்தில் ஓடாடிய இடங்களிலெல்லாம் அவளால் அருள் பெற்றோர் பலர் உண்டு... அவர்கள் அந்த இடங்களிலேயே அவளுக்கு ஆலயம் கட்டி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்... ஆயினும் மூலப்பதியாக முப்பந்தல் சென்று இசக்கியை வழிபடுகின்றனர்....
முப்பந்தலைப் பற்றி...
மூவேந்தர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஔவைப் பாட்டி தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் செய்து வைத்தாள்.. அவர்கள் மூவரும் அமர்ந்து பேசிய இடம்தான் முப்பந்தல்...
இப்பதியானது வள்ளியூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது...வாய்ப்பு கிடைக்கையில் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள்...
இசக்கியம்மனின் கதையைக் கேட்ட அனைவருக்கும் நன்றி...
(முற்றும்)


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer