கிருஷ்ண அவதாரம்
பெருமாளின்
அவதாரங்களில் இது 9வது அவதாரமாகும்: வசுதேவருக்கும் தேவகிக்கும்
குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த
அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான்.
கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும்
தர்மத்தை நிலைநாட்டினார். ஒரு முறை பூமாதேவி, நாராயணனிடம், பகவானே ! பூமியில்
நடக்கும் அக்கிரமங்களை என்னால் தாங்க முடியவில்லை. விரைவில்
இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என வேண்டினாள். அதற்கு
நாராயணனும் சற்று பொறுமையா இருக்கும் படி கூறினார். பல காலம்
கழித்து பூமாதேவி நாராயணா! தாங்கள் சொன்னது போல இன்று வரை
பொறுமையுடன் தான் இருக்கிறேன். ஆனால், முனிவர்கள்
செய்யும் யாகத்தைக் கெடுப்பவர்கள், நாத்திகர்கள், காமுகர்கள், கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், உழைப்பைத் திருடுபவர்கள்
ஆகியோரையும் சேர்த்து சுமக்கிறேனே ! இவர்களின் எடையைத்
தாங்கும் சக்தி எனக்கில்லை பிரபு ! இவர்களை அழிக்கும்
அளவுக்கு பலமும் என்னிடமில்லை. புரு÷ஷாத்தமா
! என்னையும், நான் தாங்கும்
நல்லவர்களையும் இவர்களிடம் இருந்து காப்பாற்று... பூமாதேவியின்
புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக்கும் கேட்டது, பிரம்மாவின்
காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்தெழுந்தார். சிவனும், பிரம்மனும், மற்ற
தேவர்களும் முன்செல்ல, பூமாதேவியும் அவர்களின் பின்னால்,
நாராயணனைச் சந்திக்கச் சென்றனர். இவர்கள்
அனைவரும் வைகுண்டத்தில் நாராயணனின் வரவுக்காக காத்திருந்தனர். நாராயணன் வரவில்லை. ஆனால், பிரம்மாவுக்கு
ஒரு செய்தி மட்டும் வந்தது.பிரம்மனே ! பூமாதேவியின்
கவலையை விடச்சொல். உலகத்திலுள்ள பாவிகளை அழிக்க நானே
பூலோகத்தில் பிறக்கப்போகிறேன். அதற்கு முன்னதாக தேவர்கள்
அனைவரும் பூலோகத்திலுள்ள யது வம்ச (இடையர்குலம்) குடும்பங்களில் பிறக்க வேண்டும். எனக்கு உதவியாக
இருக்க வேண்டும், என்பதே அந்தச் செய்தி. பிரம்மா மகிழ்ந்தார். பூமாதேவிக்கு தகவல்
தெரிவித்தார். சிவனும் மற்ற தேவர்களும் மகிழ்ந்தனர். தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர். எல்லா
தேவர்களும் யதுகுலத்தில் அவதரித்தனர்.
யதுகுலத்தின்
அரசனாக இருந்தவர் சூரசேனன்.
இவரது புத்திரன் வசுதேவர். இவருக்கு தேவகர்
என்பவரின் மகள் தேவகியை பெண் பார்த்து நிச்சயமாயிற்று. தேவகரின்
அண்ணன் உக்ரசேனன் போஜகுல மக்களின் ராஜாவாக இருந்தார். அவருக்கு
ஒரு மகன். பெயர் கம்சன். தேவகி
கம்சனின் சித்தப்பா மகள். கம்சன் தோற்றத்தால் தான் மனிதனே
தவிர, உள்ளத்தால் அசுரன். மேலும்,
அவன் ஒரு நாத்திகவாதி. ஒரு சுபமுகூர்த்த
வேளையில் தேவகியைக் கைப்பிடித்தார் வசுதேவர். தேவகிக்கு
ஏகப்பட்ட சீர் வரிசையை அள்ளிக் கொடுத்தார் தேவகர். திருமணம்
முடிந்தவுடன் மணமக்களை, மணமகளின் சகோதரன் அவளது புகுந்த
வீட்டில் கொண்டு விடுவது அக்கால வழக்கம். தேவகிக்கு
உடன்பிறந்த சகோதரர்கள் இல்லையென்பதால், பெரியப்பா மகன்
கம்சன் தன் தங்கையை தேரில் அழைத்துச் சென்றான். மின்னல்
வேகத்தில் குதிரைகள் பறந்து கொண்டிருந்தன. அப்போது, வானம் அதிர்ந்தது. அங்கிருந்து ஒரு குரல் எழுந்தது.
நில்லு கம்சா! போஜகுலத்தின் இளவரசனை இவ்வளவு
தைரியத்துடன் பெயர் சொல்லி ஒருமையில் அழைத்து, தடுத்து
நிறுத்திய மாயக்குரலே.. யார் நீ ? என்ற
கம்சனுக்கு பதிலாக பயங்கர சிரிப்பொலி வானிலிருந்து எழும்பியது. மூடனே ! எமனுக்கு யாராவது தேரோட்டுவார்களா ? உன்னைப் போல் மடையர்கள் தான் உண்டா ? யார் அந்த எமன்
என்கிறாயா ? உனது சகோதரியின் வயிற்றில் பிறக்கப்போகும்
எட்டாவது குழந்தை தான் அது, குரல் அடங்கிவிட்டது. கம்சன் ஆவேசமானான். அத்தனை நாளும் ஊட்டி வளர்த்த
அன்புத்தங்கையுடன் விளையாடிய காலத்தை மறந்தான். அவளுக்கு
அன்று தான் திருமணமே நடந்திருக்கிறது என்பதையும் மறந்தான். இந்த
உலகத்து இன்பங்களையெல்லாம் எப்படி எப்படியோ துய்க்க வேண்டுமென கனாக்கண்டு
கொண்டிருக்கும் அவன் மடிவதா ? ஏ தேவகி ! கேட்டாயா அசரீரியின் குரலை ! ஒழிந்துபோ ! என்பவனாய், வாளை உருவினான்.புது
மணப்பெண்ணைக் கொல்வதற்கு கம்சன் வாளுடன் பாய்ந்ததைக் கண்ட வசுதேவர் கம்சனைத்
தடுத்தார். மைத்துனரே ! நீர் வீரத்தில்
வல்லவர். உம்மை அழிக்க யாரால் இயலும் ? அசரீரி சொல்வது உண்மையே ஆனாலும் கூட, தேவகி அதற்கு
எப்படி பொறுப்பாவாள் ? அவளுக்கு பிறக்கும் எட்டாவது
குழந்தையால் தானே உமக்கு ஆபத்து ! நான் அவளுக்கு பிறக்கும்
அத்தனை குழந்தைகளையும் உம்மிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்களை
என்ன வேண்டுமானாலும் செய்யும். மேலும் மரணத்தைக் கண்டு நீர்
அஞ்சுவீர் என நான் கனவிலும் எண்ணவில்லை. மரணத்தைக் கண்டு
மனிதன் ஏன் பயப்பட வேண்டும் ? மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட
ஒன்று. அது எல்லாருக்கும் வந்து சேரும். அது எந்தநாள் என்பதும் குறிக்கப்பட்ட ஒன்றுதான். அப்படியிருக்க,
தைரியசாலிகள் மரணத்தைக் கண்டு அஞ்சுவார்களா ? தேவகியின்
குழந்தையால் இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் உமக்கு மரணம்
சம்பவிக்கத்தானே போகிறது. உனக்கு வயது 25 என்றால், நீர் ஏற்கனவே 25 ஆண்டுகள்
இறந்து விட்டீர். மனிதன் தான் கடந்து செல்லும் ஒவ்வொரு
விநாடியும் மரணத்தின் வாசலை நோக்கித்தானே நகர்ந்து கொண்டிருக்கிறான்! இந்த உண்மையை நீர் அறிந்திருந்தும், இவ்வாறு செய்வது
முறையானதாக தெரியவில்லை, என பணிவு கலந்தது போலும், அதே நேரம் அழுத்தமாகவும் தெரிவித்தார். கம்சன் கோபம்
தணிந்தார்.
வசுதேவரே
! உமது
சமாதானத்தை ஏற்கிறேன். நீர் உமது எட்டாவது குழந்தையை
என்னிடம் தந்துவிடுவீர் என்பதை நான் அறிவேன். ஏனெனில்,
நீர் சத்தியசீலர், என்ற கம்சன் அவர்களை
வீட்டில் கொண்டுபோய் விட்டான். காலம் ஓடியது. தேவகி முதல் குழந்தையைப் பெற்றாள். அந்தக்
குழந்தையுடன் கம்சனின் அரண்மனைக்குச் சென்றார் வசுதேவர். கம்சன்
ஆச்சரியப்பட்டான். வசுதேவரே ! உலகில்
சொன்ன சொல் காப்பாற்றுபவர்கள் மிகவும் குறைவு. நீர் உயர்ந்த
ஆத்மா என்பதை நிரூபித்து விட்டீர். என் பாசத்திற்குரியவரே !
உமது பண்பை மதிக்கிறேன். இந்தக் குழந்தை
எனக்கு வேண்டாம். உமது எட்டாவது குழந்தை தான் என்னைக்
கொல்லும் என்ற விதி இருக்கிறது. எனவே, இந்தக்
குழந்தையை நீரே வளர்த்துக் கொள்ளும், என்று சொல்லி
மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான். வசுதேவர் சென்றதும்,
நாரதர் கம்சனைக் காண வந்தார். கம்சன் அவரை
வரவேற்று ஆசனமளித்து உபசரித்தான். அவர் கம்சனிடம், உன் மீது கொண்ட அன்பின் காரணமாக நான் ஒரு ரகசியத்தை உனக்குச் சொல்கிறேன்.
தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறக்கப்போவது உறுதி. அது விஷ்ணுவின் அவதாரம் என்பதைத் தெரிந்து கொள். அதற்கு
முன்னதாக யது குலத்தில், தேவர்களே குழந்தைகளாக வந்து
பிறக்கப் போகிறார்கள். உன் தங்கைக்கு பிறந்த முதல்
குழந்தையும், இனி பிறக்கப்போகும் குழந்தைகளும் எட்டாவது
குழந்தைக்கு உதவி செய்வதற்காகவே பிறக்கப் போகின்றன. எனவே,
நீ உன் தங்கைக்கு பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிடு. அதில் எது விஷ்ணு அம்சமுடையது என்று கண்டுபிடிப்பது கஷ்டம், என்று தூபம் போட்டார். அவ்வளவு தான் ! கம்சனின் மிருக குணம் தலைதூக்கி விட்டது. நாரதரே !
காலம் முழுவதும் நான் உமக்கு கடமைப்பட்டவன். இனி
என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும், என்றவன்,
யாரங்கே ! உடனே வசுதேவரையும், தேவகியையும் கைதுசெய்து பாதாள சிறையில் அடையுங்கள், என்றான்.
சில மணி நேரத்தில் வசுதேவரும், தேவகியும்
சிறையில் தள்ளப்பட்டனர்.
வசுதேவருக்கு
பிறந்த குழந்தைகள் அஷ்டவசுக்கள் எனப்பட்டனர்.
இவர்கள் ஒரு சாபத்தின் விளைவாக பூமியில் பிறந்து, உடனே இறந்து இறைவனை அடைய விரும்பினர். அதன்படி
அவர்களில் ஆறுபேர் இறையடி சேர்ந்து விட்டனர். இப்படியிருக்க,
ஏழாவது குழந்தையாக தேவகியின் வயிற்றில் பிறக்க கிருஷ்ணர் தன்னைத்
தாங்கும் அனந்தனை (நாகம்) அனுப்பி
வைத்தார். கிருஷ்ணாவதாரத்துக்கு முந்தைய அவதாரத்தில்,
அனந்தன், ராமனின் தம்பி லட்சுமணனாகப் பிறந்து,
சேவை செய்தார். அதற்கு நன்றி சொல்லும் வகையில்,
இப் பிறப்பில் தனது அண்ணனாக அனந்தனை அனுப்ப முடிவெடுத்தாராம்
பரமாத்மா. இவரே பலராமர் எனப்பட்டார். கிருஷ்ணரிடமே
பல மாயசக்திகள் உண்டு என்றும், அதில் ஒரு சக்தியே அனந்தனாகிய
பலராமர் என்றும் அதிதீவிர கிருஷ்ண பக்தர்கள் சொல்வார்கள். அதாவது
இறைவனை யாராலும் தாங்க முடியாது. அவரே தன்னை தாங்க முடியும்.
எனவே, கிருஷ்ணரே அனந்தனாகிய பாம்பு வடிவில்
இருந்தார் என்றும் சொல்வதுண்டு. இதே கிருஷ்ணருக்குள்,
இன்னொரு பெண் சக்தியும் அடங்கிக் கிடந்தது. அவளுக்கு
யோக மாயை எனப்பெயர். அவளை கிருஷ்ணர் வரவழைத்தார். மாயா ! நீ பூலோகம் செல். மதுராபுரி
சிறையிலே தேவகியும், வசுதேவரும் சிறைப்பட்டு கிடக்கின்றனர்.
அவர்களின் வயிற்றில் நான் அவதரிக்கப் போகிறேன். அதற்கு முன்னதாக எனது மற்றொரு சக்தியான அனந்தன் தேவகியின் வயிற்றுக்கு
போய் விட்டான். நீ, யதுகுலத்தின்
தலைவரும், கோகுலத்தில் வசிப்பவருமான நந்தகோபனின் மனைவி
யசோதையின் கருவில் உருவெடு. சில காலம் கழித்து, நீ தேவகியின் வயிற்றிலுள்ள கருவை மாய சக்தியால் அகற்றி, வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றிவிடு. பின்னர் நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார்.
தலைவணங்கி அவரது உத்தரவை ஏற்ற யோகமாயை, பரந்தாமா
! என் பங்கு பூலோகத்தில் என்ன ? என்றாள்.
தங்கையே
! பூலோக
மக்கள் உன்னை என் சகோதரியாக கருதுவர். உன்னை துர்க்கை என
அழைப்பர். வைஷ்ணவி, சாமுண்டி, காளி, விஜயா, சாரதா, அம்பிகா இப்படி பல பெயர்களை சூட்டுவர். புஷ்பம்,
பழங்களால் ஆராதிப்பர். மேலும் உன்னை நம்பி
யாகங்கள் பல நடத்தி, தங்கள் சொந்த நலனை எல்லாம்
நிறைவேற்றித்தர வேண்டுவர். தகுதியானவர்களுக்கு நீ
தகுதியானதைச் செய்வாய், என்றார். மகிழ்ச்சியடைந்த
துர்க்கை பூமிக்கு வந்து யசோதையின் வயிற்றில் கருவானாள். சில
காலம் சென்றதும், தேவகியின் வயிற்றில் இருந்த பலராமனை,
ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றி விட்டாள். இதன்மூலம்
கிருஷ்ணர், தன்னோடு என்றும் இருக்க வேண்டிய ஒரு சக்தியை
உறுதிப்படுத்திக் கொண்டார். பலராமனின் கரு பலவந்தமாக இன்னொரு
பெண்ணின் வயிற்றுக்கு ஈர்க்கப்பட்டதால் அவரை ஆகர்ஷணன் என்றும், ரமணன் என்றும் சொல்வார்கள். அவரை யார் உளமார
நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அவரே குழந்தையாவார் என்பது
இதன் உட்கருத்து. ஆறு குழந்தைகளைக் கொன்ற பாவமும், ஒரு குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்து போகவும், தன்மூலம்
தேவகிக்கு ஏற்பட்ட பயமே என்பதால் அதையும் ஏழாவது கொலையாகக் கருதி, அதனால் தனக்கு துன்பம் விளையுமோ என்று அச்சமும் கொண்டிருந்தான் கம்சன்.
கிருஷ்ணர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்தார். ஒரு
நன்னாளில் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை வசுதேவர்
பார்த்தார். பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டார். ஆம்... குழந்தையின் கைகளில் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம்
ஆகியவை இருந்தன. மஞ்சள் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் அணிந்திருந்தான் சின்னக்கண்ணன். பிறந்த
குழந்தைக்கு நான்கு கைகள், ஆடை, ஆபரணம்.
இதெப்படி சாத்தியம்? தன் வயிற்றில் பிறந்த
மகன் சாட்சாத் பரமாத்மாவே என வசுதேவர் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார்.
தேவகி
வைத்த கண் வாங்காமல் திருமாலை ரசித்து...
உஹும்... தரிசித்துக் கொண்டிருந்தாள். கடவுளை பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்த வேளையில், அண்ணன் கம்சன் அவளது நினைவில் ஊசலாடினான். அவள் அந்த
தெய்வக் குழந்தையிடம், பரந்தாமா ! உலகம்
உய்விக்க வந்த விளக்கே ! தாங்கள் உங்கள் சொந்தக் கோலத்தில்
எங்களிடம் எப்படி வளர முடியும் ? என் அண்ணன் கம்சன் உங்களைக்
கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அத்துடன் எங்களையும் அவன்
கொன்று விடுவான். என்னைத் திருமணம் செய்த பாவத்திற்காக,
என் கணவர் உயிர்விடுவது எவ்வகையில் நியாயம் ? தாங்கள்
தான் இதற்கொரு வழி சொல்ல வேண்டும், என பிரார்த்தித்தாள்.
அந்தக் கணமே குழந்தை பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். என்னைப் பெற்ற புண்ணியவதிக்கும், என் தந்தை
வசுதேவருக்கும் நமஸ்காரம். தாயே ! முன்னொரு
பிறவியில் தந்தை வசுதேவர் சுதபா என்ற பெயரில் ஒரு நாட்டின் மன்னனாக இருந்தார்.
தாயான நீ பிருச்னி என்ற பெயருடன் அவரது மனைவியாய் இருந்தாய்.
அப்போது இந்தப் பூவுலகில் மக்கள் தொகை குறைந்தது. இதனால் கலவரமடைந்த பிரம்மன், உன்னை அணுகி
மக்கள்தொகையை அதிகரிக்க உதவ வேண்டும் என்றான். ஆனால்,
நீயும், சுதபாவும் ஐம்புலன்களையும் அடக்கி
விரதம் ஒன்றை அனுஷ்டித்துக் கொண்டிருந்தீர்கள். இதனால்
பிரம்மாவுக்கு நீங்கள் கட்டுப்படவில்லை. கோபமடைந்த பிரம்மன்
புயலை உருவாக்கி தவத்தை கெடுக்க முயன்றான். ஆயினும், உங்களை இயற்கை கூட ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனெனில்,
உங்கள் இதயம் பரிசுத்தமாயிருந்தது. பரிசுத்தமான
மனம் எங்கே உள்ளதோ, அங்கே இயற்கை பாதிப்பை ஏற்படுத்தாது.
இப்படி
12 ஆயிரம்
தேவஆண்டுகள் விரதம் அனுஷ்டித்தீர்கள். உங்கள் மனம் முழுவதும்
என்னைப் பற்றிய சிந்தனையே தவிர வேறில்லை. அப்போதும், நான் உங்களுக்கு காட்சி தந்து, என்ன வரம்
வேண்டுமெனக் கேட்டேன். நீங்கள் வைகுண்டம் வர விரும்புவீர்கள்
என எண்ணினேன். ஆனால், நீயோ, பரந்தாமா ! நீ என் வயிற்றில் பிள்ளையாக பிறக்க
வேண்டும் என்றாய். நானும் சம்மதித்தேன். அதன்பின் நீங்கள் தவ வாழ்க்கையை நிறுத்திவிட்டு இல்லறத்தில் புகுந்தீர்கள்.
நான் உங்கள் வயிற்றில் பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாய் பிறந்தேன்.
அடுத்த பிறவியில், நீங்கள் காஷ்யபர் - அதிதி என்ற தம்பதியராய் பிறந்தீர்கள். அந்தப்பிறவியில்
நான் உபேந்திரன் என்ற பெயரில் உங்களுக்கு பிறந்தேன். இப்போது,
கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்திருக்கிறேன். நீங்கள்
வைகுண்டம் வந்து விட வேண்டியது தான். பல பிறவிகளில் என்னை
அன்புடன் மகனாய் வளர்த்த உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கம்சனிடமிருந்து உங்களைக் காப்பது என் கடமை. நீங்கள்
உடனே என்னை கோகுலத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கே
வசுதேவரின் நண்பர் நந்தகோபனுக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து
விடுங்கள். என்னை நந்தகோபரின் மனைவி யசோதையிடம் கொடுத்து
வளர்க்கச் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்,
என்று சொல்லிவிட்டு சாதாரண குழந்தையாக உருமாறி விட்டார். பின்னர், ஒரு குழந்தை பிறந்துள்ள நினைவும், தன்னை கோகுலத்துக்கு கொண்டு போகச் சொன்னதையும் தவிர மற்ற எல்லாவற்றையும்,
தன் தாய் தந்தைக்கு மறக்க செய்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். கனவிலிருந்து விழித்தவர் போன்ற வசுதேவர், குழந்தையைப்
எடுத்துப் போகும் ஏற்பாட்டைச் செய்தார். அவர் குழந்தையைத்
தொட்டாரோ இல்லையோ, கையிலிருந்த விலங்குகள் கழன்றுவிட்டன.
சிறைக்கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்களோ
மயக்கம் வந்தது போன்ற தூக்கத்தில் கிடந்தனர். அங்கு கிடந்த
ஒரு பழைய கூடையில் தன் அங்கவஸ்திரத்தை விரித்தார். குழந்தையை
அதற்குள் வைத்தார். பெண் குழந்தை பெற்றிருந்த யசோதை, மயக்கத்தில் இருந்து எழவில்லை. அவளுக்கு தனக்கு
குழந்தை பிறந்துவிட்டது என்ற உணர்வு இருந்ததே தவிர, என்ன
குழந்தை பிறந்தது என்று பார்ப்பதற்குள் மயக்கமாகி விட்டாள். சப்தமின்றி,
வசுதேவர் கண்ணனை யசோதையின் அருகில் கிடத்தினார். பெண் குழந்தையை எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு சிறைக்கு வந்து
சேர்ந்தார். சந்தேகமின்றி இருக்க விலங்குகளை பூட்டிக்
கொண்டார். குழந்தை வீறிட்டு அழவே, காவலர்கள்
விழித்தனர். தேவகிக்கு குழந்தை பிறந்து விட்டதென்ற செய்தி
கம்சனுக்கு பறந்தது. மிகப்பெரிய வாளுடன் வசுதேவர் பூட்டப்பட்டிருந்த
அறைக்குள் புகுந்தான் கம்சன். என் உயிரைக் குடிக்க வந்த அந்த
எமன் எங்கே ? அவனுக்கு எமனாய் நான் வந்திருக்கிறேன், என்ற கம்சனின் பாதத்தில் விழுந்தாள் தேவகி. அண்ணா !
ஏதோ ஒரு அசரீரி சொன்னது என்பதற்காக, என் ஆண்
குழந்தைகளையெல்லாம் கொன்றாய். இப்போது பிறந்திருப்பது பெண்.
அசரீரியின் வாக்கு உண்மையே என்றாலும் கூட, என்
வயிற்றில் பிறக்கும் எட்டாவது ஆண்பிள்ளையால் தான் உனக்கு மரணமே தவிர, பெண்ணால் இல்லை. பார்த்தாயா, இது
பெண் குழந்தை, என குழந்தையை நீட்டினாள். கொடிய உள்ளம் கொண்ட கம்சன், அவள் சொன்னதைக் காதில்
வாங்கவே இல்லை. குழந்தையின் கால்களைப் பிடித்தான். தலையை சுவரில் ஓங்கி அடித்தான். அவ்வளவு தான் !
மதுராபுரியே கிடுகிடுக்கும் வகையில், ஓங்கி
ஒலித்த சிரிப்புடன் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது அந்தக் குழந்தை. அந்த நடுநிசியில் சூரியன் உதித்து விட்டது போல பிரகாசம். கையில் சங்கு, சக்கரம் மின்ன, திரிசூலம்,
வாள் பளபளக்க, மண்டை ஓடுகள் மாலையாய் கழுத்தை
அலங்கரிக்க அந்தப் பெண் ஆங்காரமாய் சிரித்தாள். அவள்
விஷ்ணுவின் சகோதரி என்பதாலும், உலகைக் காக்கப்போகும் ரட்சகி
என்பதாலும் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல், வானத்து
தேவர்களும், கந்தர்வர்களும், கிங்கரர்களும்
அந்த தேவியைத் தரிசிக்க பரிசுப் பொருள்களுடன் வந்து அவளை பணிந்தார்கள். துர்க்கை கர்ஜித்தாள்.
கொடியவனே
! உன்
தங்கைக்கு நீ இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா ! மனிதனாய்
பிறந்தவன் அழிவது உறுதி என்று தெரிந்திருந்தும், இவ்வுலகம்
உள்ளளவும் உயிர் வாழப்போவதாக எண்ணி, அப்பாவி குழந்தைகளைக்
கொன்றாயே ! உன்னைக்கொல்லப் போகிறவன் பிறந்து விட்டானடா !
அவன் ஒளிந்து வளர்கிறான் உன் அழிவு நெருங்கிவிட்டது. இவர்களை விடுதலை செய்து ஒரு புண்ணியத்தையாவது தேடிக்கொள், என்றாள். அத்துடன் அவள் மறைந்து விட்டாள். கம்சனின் மனம் அந்தக்கணமே மாறிவிட்டது. அம்மா தேவகி !
என் அன்பு சகோதரியே ! உனக்கு எவ்வளவு பெரிய
கொடுமையை இழைத்து விட்டேன். என் கொடுமைக்கு பலனாக
பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) என்னைப்
பற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே என்னை
இருவரும் மன்னிக்க வேண்டும் என்று கூறி வசுதேவரின் கால்களில் விழுந்து வணங்கினான்.
தன்னையுமறியாமல் அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது. வசுதேவர் அவனைத் தேற்றும்படியான சூழ்நிலை உருவாகி விட்டது. அதன்பின் கம்சன் ஒருநாள் அரசவையில் வீற்றிருந்தான். அவனுடைய
சகாக்கள் வந்தனர். கம்சா ! நீ ஏதோ
தியாகி போல உன் தங்கையை விடுவித்து விட்டாய். உன்னைக்கொல்ல
பிறந்திருப்பவன் விஷ்ணு என்பதை நீ அறிவாய். எங்கோ, அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். குழந்தை பிறந்து
ஒரு மாதமே ஆகிறது. அவன் வளர்ந்து அதன்பிறகு தானே உன்னைக்
கொல்ல வருவான். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து
விட்டாயோ ? அசரீரி சொன்னதை ஒரு பொருட்டாக நீ மதிக்கவில்லை.
இதன் பலனை நீ அனுபவிக்கத்தான் போகிறாய் என கம்சனை எச்சரித்தனர்.
உடனே கம்சன் அரசவையைக் கூட்டி நமது அதிகார எல்லைக்குள் கடந்த பத்து
நாட்களுக்குள் பிறந்துள்ள எல்லாக் குழந்தைகளையும் கொன்று விடுமாறு கூறினான்.
இந்த தகவல் வசுதேவருக்கு தெரிய வந்தது. நந்தகோபருக்கு
இதை தெரிவித்து, கோகுலத்தில் இருக்கும் தன் குழந்தைகளான
கிருஷ்ணரையும், பலராமரையும் பாதுகாக்க ஏற்பாடு செய்வது பற்றி
யோசித்துக் கொண்டிருந்தார். இந்நேரத்தில், தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவே நம்பிவிட்ட கோகுலத்தலைவர்
நந்தகோபரும், அவர் மனைவி யசோதையும் குழந்தைக்கு ஜாதகம்
கணிக்க முடிவெடுத்தனர். தன் மகன் கிருஷ்ணரின் ஜாதக கணிப்பு
திருநாளை, மலை போல் செல்வத்தை குவித்து வைத்து கொண்டாடினார்
நந்தகோபர். பசுக்களையும், பொன்னையும்,
நவரத்தினங்களையும், தகுதியானவர்களுக்கு தானம்
செய்ய வேண்டும் என வேதம் சொல்கிறது. பிராமணர்களுக்கு இத்தகைய
தகுதி இருந்தால், அவர்களுக்கு தங்கள் பொருளை தானமாகக்
கொடுத்து, தங்களைப் புனிதப் படுத்திக் கொண்டனர் கோகுலவாசிகள்.
நந்தகோபர் மிக அதிகமாகவே தானம் கொடுத்தார். ஏனெனில்
அவர் வீட்டில் லட்சுமியின் மணவாளனே பிறந்திருந்ததால், செல்வத்திற்கு
ஏது குறை ! கிருஷ்ணனுக்கு மிக சிறப்பாக ஜாதக்கணிப்பு
நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதன்பிறகு, கோகுலத்தின் சார்பில் கம்சனுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகையை செலுத்த
நந்தகோபர் மதுராபுரி வந்தடைந்தார். அவரை வசுதேவர்
சந்தித்தார். குழந்தைகளைக் கொல்ல கம்சன்
முடிவெடுத்திருக்கிறான் என்ற விபரத்தை நேரடியாகச் சொல்லி அவரை பயமுறுத்தாமல்,
கோகுலத்தின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் வரப்போகிறது. நீங்கள் கவனமாக இருப்பது நல்லது என்று மட்டும் சொல்லி வைத்தார். வசுதேவர் க்ஷத்திரியர், நந்தகோபர் வைசியர். இருப்பினும், இவர்கள் சிறந்த நண்பர்களாகத்
திகழ்ந்தனர். தன் நண்பர், தனக்கு தந்த
எச்சரிக்கையை மறக்காத நந்தகோபர் மிக கவனமாகவே இருந்தார். இதற்குள்
கம்சன் குழந்தைகளைக் கொல்வதற்குரிய ஏற்பாட்டை செய்து முடித்து விட்டான்.
சூன்யக்காரியான
பூதனா என்பவளை அழைத்தான். குழந்தைகளைக் கொல்லும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். இப்படிப்பட்ட சூன்யக்காரிகளை கேசரீ என்பார்கள். சூன்யம்,
தெய்வ வழிபாட்டில் ஊறிப்போனவர்களை தாக்காது. கோகுலத்திலும்
அதுவே நிகழ்ந்தது. பூதனா, கோகுலத்திற்குள்
நுழைந்தவுடன் தன்னை பேரழகியாக மாற்றிக் கொண்டாள். முகத்தில்
கனிவை படரவிட்டுக் கொண்டாள். அவளது அழகும், போலி சாந்தமும் அங்கிருந்தவர்களின் கண்களை ஏமாற்றி விட்டது. அவ்வூர் மக்கள் அந்தப் புதியவளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கவில்லை. நல்லவர்களின் கண்களுக்கு கெட்டது கூட நல்லதாகத்தான் தெரியும், இதைப் பயன்படுத்திக் கொண்டு, தன் மார்பில் நஞ்சை
தடவி பல குழந்தைகளை அவர்களது பெற்றவர்கள் அறியாமல் கொன்றாள். அவள் நந்தகோபரின் மாளிகைக்குள் நுழைந்தாள். அவள்
மீது சந்தேகம் கொள்ளாத வாயிற்காவலர்கள், அவள் யசோதையைப்
பார்க்க வந்திருக்கலாம் எனக் கருதி தடுக்கவில்லை. யாரும்
அறியாமல், கிருஷ்ணன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.
குழந்தையைப் பார்த்ததும் பூதனாவின் மனதில் ஏதோ சஞ்சலம். அது சாதாரண குழந்தையாகத் தெரியவில்லை.
ஏதோ
ஒரு சக்தி அதனுள் மறைந்து கிடப்பதைப் புரிந்து கொண்டாள். இருப்பினும், கம்சனின் கட்டளையை அவளால் மீற முடியுமா ? குழந்தையை
மடியில் வைத்தாள். அவள் மார்புக்காம்பை வாயில் திணித்தாள்.கிருஷ்ணன் விஷப்பாலோடு அவளது உயிரையும் சேர்த்துக் குடித்தான். அவள் அலறினாள். கோகுலத்தையே அதிர வைத்தது அந்த அலறல்.
அது மட்டுமா ! அவளது அசுர உருவம் வெளிப்பட்டது.
12 மைல் நீளத்துக்கு அவளது உடல் நீண்டது.பூதனாவின்
உடலைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. கோகுலத்தையே
அதிரச்செய்த அவளது அலறல் கேட்டு, யசோதையும் ரோகிணியும் இதர
கோபியர்களும் ஓடிச் சென்று கிருஷ்ணரை தூக்கினர். தங்கள்
அன்புக்குழந்தையின் உயிர்காப்பாற்றப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு கண்ணேறு பட்டுவிட்டது என எண்ணி பசுவின் வாலைப்பிடித்து
குழந்தையின் உடலைச்சுற்றி திருஷ்டி கழித்தார்கள். பசுக்கன்றுகளின்
பாதத்தில் ஒட்டியிருந்த தூசை குழந்தையின் உடல் மீது தூவினார்கள். இதன் பிறகு கிருஷ்ணரை நாராயணின் 22 திருநாமங்கள்
சொல்லி பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள் : நாராயணின் 22
நாமங்களை சொல்வோர் அருகில் எந்த கெட்ட சக்திகளும் நெருங்குவதில்லை
என நம்பிய கோகுல மக்கள், மணிமான், யக்ஞர்,
அச்யுதா, ஹயக்ரீவர், கேசவா,
விஷ்ணு, உருக்ரமா, ஈஸ்வரா,
சக்ரதாரி, கதாதரா, மதுசூதனா,
குபேந்திரா, தாரக்ஷயா, ஹலாதரா,
ஹ்ருஷிகேசா, நாராயணா, ப்ருஷ்ணிஹர்பா,
யோகேஸ்வரா, புரு÷ஷாத்தமா,
கோவிந்தா, மாதவா, வைகுண்டாதிபதி,
என்ற நாமங்களால் அவரைப் பூஜித்தனர். இந்த
நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பூதனா கொடுமைக்காரியாக
இருந்தாலும் கூட, குழந்தைகளை கொன்றவள் என்றாலும் கூட,
கடைசி நேரத்தில் கிருஷ்ணருக்கு பாலூட்டிய காரணத்தால் அவள்
வைகுண்டத்தை அடைந்தாள். அவளுக்கும் முக்தியும் கிடைத்தது.
அவளது உடலை கோகுலவாசிகள் எரித்த போது, அதிலிருந்து
நறுமணம் கிளம்பியது.
நாட்கள்
கடந்தன. கிருஷ்ணருக்கு
ஒரு வயதானது. இந்த நிகழ்வை யசோதா மிக சிறப்பாகக்
கொண்டாடினாள். வாத்தியங்கள் முழங்கின. ஆயர்குல
மக்கள் ஒருவர் விடாமல் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள்
வேத பாராயணம் செய்தனர். யசோதா மகனை அன்போடு நீராட்டினாள்.
வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணர்
அப்படியே கண்ணயர்ந்தார். யசோதை குழந்தையை மடியில்
வைத்திருந்தாள். குழந்தை உறங்கி விட்டதால், ஒருபட்டுமெத்தையை தரையில் விரித்து ஒரு வண்டியின் கீழே நிழலில் குழந்தையை
படுக்க வைத்தாள். பின்னர், மற்ற
வேலைகளைக் கவனிக்க வீட்டுக்குள் போய்விட்டாள். சற்றுநேரத்தில்
கிருஷ்ணர் விழித்து விட்டார். சாதாரண குழந்தைக்குரிய
இயல்புடன் அழ ஆரம்பித்தார். கால்களை உதைத்தார். அவை பார்ப்பதற்கு பிஞ்சுக்கால்கள், ஆனால், அதன் சக்தி தாளாமல், அருகில் இருந்த வண்டியே
நொறுங்கி விட்டது. சப்தம் கேட்டு வெளியே வந்த யசோதையும் மற்ற
ஆயர்குல பெண்களும் இது என்ன விந்தை என்று மூக்கின் மீது விரலை வைத்தனர். யசோதைக்கு பயம் வந்துவிட்டது. வேதம் ஓத வந்த
அந்தணர்களிடம், ஐயன்மீர் ! இந்தக்
குழந்தை பிறந்தது முதல் இப்படித்தான் அற்புதமான செயல்களைச் செய்கிறான். ஓர் அரக்கியையே கொன்றான். இப்போது, உங்கள் கண்முன்னால் வண்டியை நொறுக்கி விட்டான்.எனவே
குழந்தையின் மீது எதுவும் அண்டாமல் இருக்க மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்ய வேண்டும்
என வேண்டினாள். அவ்வாறே வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓதினர்.
அவர்களுக்கு நிறைய பரிசுகளை அள்ளிக் கொடுத்தார் நந்தகோபர். பூதனாவைக் கிருஷ்ணர் கொன்று விட்டார் என்பதையறிந்து கம்சன், த்ருணாவர்த்தன் என்ற கொடிய அரக்கனை அனுப்பினான். இவன்
பறக்கும் வல்லமையுள்ளவன். இவன் வேகமாக மூச்சுவிட்டால்
சூறாவளியாக மாறிவிடும். அந்த கொடுமைக்காரன் கோகுலத்துக்குள்
புகுந்தானோ இல்லையோ, கோகுலத்தில் பெரும் புயல் வீசியது.
எங்கும் புழுதி மண்டலம். ஒருவருக்கொருவர்
முகத்தையே பார்க்க முடிய வில்லை. இதைப் பயன்படுத்தி, கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு உயரே பறந்து விட்டான் அசுரன். யசோதை கிருஷ்ணரைக் காணாமல் அழுதாள். ஐயோ ! என் மகன் புழுதிப்புயலில் சிக்கிக் கொண்டானோ ! அவன்
எங்கே ? என அரற்றினாள்.
த்ருணாவர்த்தன்
உயரே சென்று, குழந்தையை தூக்கி வீச எத்தனித்தான். குழந்தை அவனை
விட்டால் தானே ! குழந்தையின் கைகள் விஸ்தாரமாக விரிந்தன.
வர்த்தனின் கழுத்து அதன் பிடியில் சிக்கியது. அப்படியே
கழுத்தை இறுக்கிய குழந்தை அவனை வதம் செய்தது. அவன் கீழே
விழுந்தான். புயல் அடங்கியது. கீழே
விழுந்து கிடந்த அசுரனை கோகுலவாசிகள் பார்த்தனர். கிருஷ்ணர்
அவன் உடல் மீது விளையாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு
அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இது தெய்வக் குழந்தையாக
இருக்குமோ என எண்ணினர். இதை நிரூபிக்கும் வகையில், அடுத்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் மணலை
அள்ளித் தின்று கொண்டிருந்தார். யசோதை அவரைக் கண்டித்தாள்.
கண்ணா ! என்னிடம் நீ ஓடோடி வந்தால், நான் பால் தருவேனே ! ஏன் மண்ணைத் தின்கிறாய் ?
என்று செல்லமாய் கண்டித்தாள். அன்று கிருஷ்ணர்
அவளது கண்களுக்கு பூரண லட்சணமாய் தெரிந்தார். அதுகண்டு
பூரித்த அவளது மார்புகளில் பால் நிறைந்தது. அதை அன்போடு ஊட்ட
முயன்றாள். கிருஷ்ணர் வாய் திறக்க மறுத்தார். அவள் அவரது வாயை கட்டயாப்படுத்தி திறந்தாளோ இல்லையோ ! வாய்க்குள் அண்ட சராசரமும் சுழன்று கொண்டிருந்தது. நந்தகோபரிடம்,
இந்த அதிசய நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னாள் யசோதை. நந்தருக்கும் குழந்தையைப் பற்றிய கவலை அதிகரித்தது. குழந்தையின்
ஜாதகத்தைப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஜாதகம்
கணிப்பதில் மிகச்சிறந்த ஞானியாகத் திகழ்ந்தவர் கர்கமுனிவர். அவரை
வரவழைத்து தகுந்த உபசாரம் புரிந்த நந்தகோபர், கிருஷ்ணரின்
ஜாதகத்தை மட்டுமின்றி, ரோகிணியின் மகனான பலராமனின்
ஜாதகத்தையும் கொடுத்தார். ஜாதகத்தைப் பார்த்த முனிவர் அதிர்ந்தே
போய்விட்டார். நந்தகோபரும், யசோதையும்
இதுவரை கிருஷ்ணன் தங்கள் பிள்ளை தான் என எண்ணிக் கொண்டிருந்தனர். தனக்கொரு பெண் குழந்தை பிறந்ததும், அது கூடையில்
சுமக்கப்பட்டு கம்சனின் மாளிகைக்கு சென்றதும், சிறையில்
பிறந்த கிருஷ்ணன் தன்னருகே படுக்க வைக்கப்பட்டதையும் யசோதையும் அறியமாட்டாள்.
தான் பெற்ற மகன் என்றே அவள் எண்ணியிருந்தாள். ஆனால்,
கிருஷ்ணர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்பதை உணர்ந்து விட்டார்
கர்கமுனிவர். பலராமனும், தேவகியின்
வயிற்றில் கருவாகி,ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டவன்
என்பது தெரிந்தது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு தந்தை
வாசுதேவர் என்பதை புரிந்து கொண்டு விட்டார் கர்கமுனிவர். இதை
நந்தகோபரிடம் தெரிவித்தும் விட்டார். நந்தகோபரே ! இக்குழந்தை சாதாரண பிறவியல்ல. அந்த விஷ்ணுவின்
அம்சம். ஒரு பிறவியில் சிவப்பாக இன்னொரு பிறவியில்
மஞ்சளாகவும், இப்போது கருப்பாகவும் பிறந்திருக்கிறார்.
மனிதர்களுக்குள் நிறபேதம் இருக்கக்கூடாது. என்பது
அவரது எண்ணமாக இருக்கலாம். ஆனால், அவர்
தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்று ஜாதகம் சொல்கிறது. உம்
மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது. அவள்
துர்க்கை என்னும் தெய்வமாக மாறிவிட்டாள். பெற்ற பிள்ளையே
தன்னுடையது இல்லை என்பதும், தனக்கு பிறந்த குழந்தை தெய்வமாகி
விட்டது என்பதையும் அறிந்தபிறகும் எந்த சலனத்தையும் அவர் காட்டவில்லை. மாறாக, விஷ்ணுவே, தன் மகனாய்
வளர்வதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தான் அடைந்தார். பலராமரும்,
கிருஷ்ணரும் இப்போது தங்கள் பால்ய லீலைகளைத் துவங்கி விட்டார்கள்.
கோபியரின் வீடுகளுக்குள் நுழைவார்கள். பசுக்கள்
பால் பொங்கும் மடுவுடன் காட்சி தருவதைப் பார்த்து மகிழ்வார்கள. கன்றுகளை யாருக்கும் தெரியாமல் அவிழ்த்து விடுவார்கள். அவை மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று தாயில் மடியில் சுரந்து நிறைந்திருக்கும்
பாலைக் குடிக்கும். அதுகண்டு கைகொட்டி ஆனந்தமடைவார்கள்.
பின்பு, கோபியரின் வீட்டுக்குள்
புகுந்து வெண்ணெயைத் திருடுவார்கள். அதை குரங்குகளுக்கு
கொடுப்பார்கள்.கோபியர் அவர்களின் புத்திசாலித்தனத்தை
ரசிப்பார்கள். அதே நேரம், திருடுவது
தவறு என கண்டிப்பார்கள். யசோதையிடம் ஒருத்தி சென்றாள்.
அம்மா யசோதா ! உன் மகன் என் வீட்டில் வெண்ணெய்
திருட வருகிறான் என்று பானையை இருளில் ஒளித்து வைத்தேன். அவன்
என்னடா வென்றால், தன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளின்
ஒளியிலேயே அந்தப் பானையை கண்டுபிடித்து விடுகிறான். பானை
காலியாகி விட்டது, என்றாள். சரி...
சரி... அவன் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை
இனி கழற்றி விடுகிறேன், என்றவள் கிருஷ்ணரைக் கண்டிப்பதற்காக
கையை ஓங்கினாள். பால் வழியும் முகத்துடன் அந்த
சிங்காரக்கண்ணன், அவளை ஒரு அன்பு பார்வை பார்க்கவே, கை தானகவே கீழே வந்து விட்டது. வசுக்களில் ஒருவரான
துரோணர் (இவர் மகாபாரத துரோணர் அல்ல) என்பவர்
தரா என்ற தன் மனைவியுடன் வசித்தார். அவர்களிடம் பிரம்மா,
நீங்கள் இருவரும் உலகத்தை விருத்தி செய்ய வேண்டும். என உத்தரவிட்டார். அப்போது அவர்கள், தந்தையே ! நீங்கள் சொல்லும் உத்தரவின்படி நடக்கிறோம்.
எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தர வேண்டும். மகா
விஷ்ணுவை நாங்கள் நேசிப்பது தங்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார் ? என்னென்ன
சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேணடும். பிற்காலத்தில்,
அவரது இந்த சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும்
பாவ விமோசனம் பெற வேண்டும், என்றார். அந்தப்
பிறவியில் அப்படி நடக்காதென்றும், மகாவிஷ்ணு பூலோகத்தில்
நடக்கும் அநியாங்களை தடுத்து நிறுத்த, மானிட ரூபத்தில்
கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது, அந்தப் பாக்கியம் உங்களுக்கு
கிடைக்குமென்றும் சொன்னார் பிரம்மா. அதன்படி இப்பிறவியில்
அந்த தம்பதியர் நந்தகோபர் - யசோதையாக கோகுலத்தில் அவதரிக்க,
அவர்களிடத்தில் கிருஷ்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்து பால்ய
பருவத்தை கழிக்க வந்திருக்கிறார்.
யசோதையின்
வீட்டில் பல வேலைக்காரிகள் உண்டு.
அதில் வீட்டு வேலை செய்பவளுக்கு, அன்று
கடுமையான வேலை இருந்தது. எனவே, வெண்ணெய்
கடையும் பொறுப்பை யசோதை எடுத்துக் கொண்டாள். அவள் மனமெல்லாம்
கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் செய்யும் சேஷ்டைகளை
பாடியபடியே அவனது நினைவில் மூழ்கிப்போனாள். அப்போது, அவளையறியாமல் அவளது மார்பில் பால் சுரந்தது. அந்நேரத்தில்
கிருஷ்ணர் வந்தார். தாயிடம், வெண்ணெய்
கடைவதை நிறுத்தி விட்டு, தனக்கு பாலூட்ட வேண்டுமென்ற தன்
ஆசையைக் குறிப்பால் தெரிவித்தார். இதை உணர்ந்த யசோதையும்
கிருஷ்ணருக்கு பால் புகட்டினார். அந்த நேரத்தில் அவள்
அடுப்பில் வைத்திருந்த பால் கொதித்து வழிய ஆரம்பிக்கவே, குழந்தையை
ஒதுக்கி விட்டு, அடுப்பை நோக்கி ஓடினாள் யசோதா. எனவே, கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவரது முகம் கோவைப்பழமாகச் சிவந்து விட்டது. ஒரு
கல்லை எடுத்தார். எறிந்தார்; அம்மா
விட்டுச் சென்றிருந்த வெண்ணெய் தாழி உடைந்தது. சிந்திய
வெண்ணெய் ஒரு கை நிறைய அள்ளிக் கொண்டார். ஒரு தனியிடத்திற்கு
போனார். தலைகுப்புற கவிழ்த்தப்பட்டிருந்த ஒரு உரலில்
அமர்ந்து வெண்ணெய்த் தின்ன ஆரம்பித்து விட்டார். பசி பொறுக்க
மாட்டார் போலும் நம் சின்னக்கண்ணன்! பகிர்ந்துண்ணும் குணம்
அவரை விடுமா. அங்கே வந்த குரங்குகளுக்கும் கொடுத்தார்.
யசோதா பால் பானையை இறக்கி வைத்து விட்டு திரும்பினான். பானை உடைந்திருந்தது. கிருஷ்ணன் தான் இதைச்
செய்திருப்பான் என்பதை அவள் அறிவாள்! அந்தப் பொல்லாதவனைத்
தேடினாள். தூரத்தில் உரல் மீது அமர்ந்திருந்தான். அவனைப் பிடிக்க ஓடினாள். அவன் அவளுக்கு போக்கு
காட்டிவிட்டு ஆங்காங்கே மறைந்து கொண்டான். அவள் மீது கொண்ட
அன்பு காரணமாக அவனே அவளது பிடியில் சிக்கிக் கொண்டான். மாயனே
! வசமாக சிக்கினாயா ? வெண்ணெயை எவ்வளவு
சிரமப்பட்டு கடைந்தேன். நீயோ, அதை
எவ்வளவு எளிதாக உடைத்து விட்டாய். உன்னைக் கட்டிப்போட்டால்
தான் சரி வருவாய் போலும் ! என்றவள் கயிறை எடுத்தாள். அவனை இழுத்து வந்து கட்டிப் போட முயற்சித்தாள். கயிறு
போதவில்லை. இன்னும் சில கயிறுகளை எடுத்து வந்து சேர்த்துக்
கட்டினாள். என்ன அதிசயம் ! எப்படி
கட்டினாலும் கயிறின் நீளம் கூடவே இல்லை. அவள் சோர்ந்து விட்டாள்.
இப்போதும் கிருஷ்ணர் அவள் மீது கிருபை வைத்தார். அவளது அன்புக்கு கட்டுப்பட்டார். கயிறு நீளமானது.
யசோதைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ! அந்தக்
குறும்புக்காரரை கட்டிப்போட்டாள். வேலையைப் பார்க்க போய்
விட்டாள். அங்கே இரண்டு அர்ஜுன மரங்கள் இருந்தன. கண்ணனை வணங்கி அவை பேச ஆரம்பித்தன.
பரந்தாமா
! நாங்கள்
நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் மக்களான நளகூவரன், மணிக்ரீவன்.
எங்களை நாரத மகரிஷி சபித்து விட்டார். எங்களின்
இந்த ரூபத்தைக் மாற்றி சுயரூபம் தர வேண்டும், என
வேண்டிக்கொண்டன அந்த மரங்கள். உலகத்து செல்வம் அனைத்தையும்
குவித்து வைத்திருக்கும் குபேரனின் பிள்ளைகள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல !
பணமுள்ளவனிடம் மூன்று பழக்கங்கள் பிரதானமாக இருக்கும். மது, மாது, சூது ஆகியவையே அவை.
இதில், முதல் இரண்டிலும் ஊறிக் கிடந்தார்கள்
கூவர க்ரீவர்கள். ஒருமுறை, பல
பெண்களுடன் ஒரு குளத்தில் ஜலக்ரீடையில் ஆழ்ந்திருந்தனர். அந்தப்
பெண்களும் ஆடை கலைந்து போதையில் இருந்தனர். அப்போது அங்கு
வந்த நாரதரை மதிக்கவில்லை. இதைக் கண்ட நாரதர், இருவரையும் அர்ஜுன மரமாகும் படி சபித்து விட்டார். மேலும்
இருவரும் தேவர்கள் என்பதால், அவர்களுக்கு விஷ்ணுவின் தரிசனம்
மூலம் விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதே நாரதரின் விருப்பம். அவர்களை மரமாக மாறும்படி சபித்துவிட்டார். பகவான்
நாராயணன், கிருஷ்ணாவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போது தான்,
உங்களுக்கு சுயரூபம் கிடைக்கும் என சொல்லி விட்டார். கிருஷ்ணர் உரலை இழுத்துக் கொண்டு நெருங்கி நின்ற மரங்களுக்கிடையே சென்றார்.
அவரது ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அந்த தேவர்கள்
உயிர் பெற்று பகவானை வணங்கி, இனி தவறு செய்வதில்லை என
உறுதியளித்து விடை பெற்றனர். பின்னர் உயிரற்ற அந்த மரங்களை
இழுத்துச் சாய்த்தார் கிருஷ்ணர். மரங்கள் சாயும் சப்தம்
கேட்டு நந்தகோபரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். குழந்தை
காயமின்றி தப்பியதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். இந்த
அதிசயம் நிகழ்வுகளும், கிருஷ்ணர் அதில் இருந்து தப்பித்து
வருவதும் நந்தகோபரின் சகோதரரான உபநந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் கோபாலர்களின் சபைக்கூட்டத்தை கூட்டினார்.
கோபாலர்களே
! கிருஷ்ணன்
அரக்கர்களிடமிருந்து பலமுறை தப்பிவிட்டான். ஆனால், எப்போதுமே இப்படி தப்பமுடியும் என சொல்ல முடியாது. நம்
குழந்தைகளுக்கு பலமுறை ஆபத்து வந்து விட்டது. இனியும்,
நாம் கோகுலத்தில் வசிப்பது உசிதமல்ல. மனிதர்களுக்கு
இறைவன் அவ்வப்போது சில எச்சரிக்கைகளைத் தருவான். அதைப்
புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் செயல்களை மாற்றிக் கொள்ள
வேண்டும். எனவே, நாம் யமுனை
நதிக்கரையிலுள்ள விருந்தாவனத்திற்கு சென்று விடுவோம். அங்கு
கோவர்த்தனம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையில், நம் பசுக்களுக்கு தேவையான புல் செழித்துக் கிடக்கிறது. புறப்படுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்றார். உபநந்தரின் கருத்தை மக்கள் ஏற்றனர். அவர்கள்,
விருந்தாவனத்தை அடைந்தனர். குழந்தைகள்
கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் மாடுகளை மேய்க்கும் பயிற்சி
அளிக்கப்பட்டது. கோபாலர் இல்லப் பிள்ளைகளுக்கு மாடு மேய்க்க
கற்றுக் கொடுப்பது தான் தலையாய பணி. தொழிலில் எதுவுமே
கேவலமல்ல. கோபாலர்கள் வசித்த கோகுலம், விருந்தாவனம்
போல் செழிப்பான பகுதியை பூமி இதுவரை பார்த்ததில்லை. கன்றுகளுக்கு
போக எஞ்சிய பாலும், நெய்யும், வெண்ணெயுமே
அவர்களின் வாழக்கைத் தரத்தை உயர்வாக வைத்திருந்தது. மாடு
மேய்க்கச்செல்லும் சிறுவர்களுக்கு கல்வியறிவு இல்லை. ஆனால்,
என்ன ஆச்சரியம்... ஒவ்வொருவர் வீட்டிலும்
செல்வம் கொட்டிக் கிடந்தது. சிறுவர்களெல்லாம், ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள். அவற்றை
அணிந்தபடிதான் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்வார்கள். கிருஷ்ணரும்,
பலராமரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு கோவர்த்தன மலைக்குச் செல்வார்கள்.
இருவரும் புல்லாங்குழல் இசைத்தபடி இருப்பார்கள். மாடுகளும் மயங்கும், மேய்க்கச் சென்ற மற்ற
சிறுவர்களும் அந்த இசையில் மயங்கிக் கிடப்பார்கள்.
ஒருமுறை, கம்சனால் அனுபப்பட்ட
வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அவன் கன்றுக்
குட்டியாக உருமாறி, கிருஷ்ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து
நின்றான். கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன்
மடிந்தான். அவனது சுயவடிவைக் கண்டு அனைவரும் அஞ்சினர்.
இன்னொரு முறை, ஒரு பெரிய வாத்தின் வடிவில்
பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளைப்
பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். ஒருமுறை,
அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். அவன் தேவர்களை தன் வலிமையால் மிரட்டுபவன். அவனைக்
கண்டு தேவர்களுக்கு அச்சம். அவர்கள் அமிர்தம் பருகி, தங்கள் உயிர் போகாது என்று தெரிந்திருந்தாலும் கூட, பயந்த
நிலையில் இருந்தனர். அகாசுரன், பூமியில்
கிருஷ்ணர் செய்த செயல்களைப் பார்த்தான். கிருஷ்ணனும்,
அவரது நண்பர்களும் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லை. இவன் பூதனாவின் சகோதரன். அவனுக்கு தன் சகோதரியைக்
கொன்ற கிருஷ்ணனைக் கொலை செய்து விட என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன்
மஹிமா என்னும் யோகவித்தை அறிந்தவன். இந்த வித்தையின் மூலம்,
ஒருவர் தனது உருவத்தை மிகப்பெரிதாக்கிக் கொள்ளமுடியும். அகாசுரன் தன் உருவத்தை 12 கி.மீ.
நீளத்துக்கு பெரிதாக்கி, ஒரு பாம்பின்
வடிவெடுத்து கிருஷ்ணரையும், அவரது நண்பர்களையும் கொல்ல
வந்தான். கிருஷ்ணரும், அவரது
தோழர்களும் கன்று மேய்க்கும் இடத்தில் வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான்.
கன்று மேய்க்க வந்த சிறுவர்கள், ஒரு சர்ப்பம்
வாயைத் திறந்து படுத்திருப்பதைப் பார்த்து விட்டனர். அவர்களில்
ஒருவன் சொன்னான். இன்னும் சிறிது நேரத்தில் கிருஷ்ணன் இங்கு
வருவான். அவன் நம் இனிய நண்பன். அவனால்
தான் விருந்தாவனத்தில் உள்ள மக்களெல்லாம் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவனை இந்தப் பாம்பு விழுங்கிவிட்டால் அவர்களின் நிலைமை என்னாவது ?
மேலும், கஷ்ட காலத்தில் நண்பனைக்
காப்பாற்றுபவனே உண்மையான தோழன். நாம், இந்த
பாம்பின் வாய்க்குள் முதலில் செல்வோம். அது வாயை மூடிக்
கொண்டு போய்விடும். கிருஷ்ணன் தப்பி விடுவான் என்றான்.
எல்லா தோழர்களும் ஆஹா... அருமையான யோசனை
என்றனர். வேகமாக ஓடி பாம்பின் வாய்க்குள் சென்றுவிட்டனர்.
பின்னால் வந்த கிருஷ்ணர் இதைப் பார்த்து விட்டார். தன் நண்பர்களுக்காக வருத்தப்பட்டார். அவர் நின்ற
நிலையிலேயே அந்த பாம்பைக் கொல்ல முடியும் ! ஆனால், மனுஷ ஜென்மாவாக பூமிக்கு வந்திருக்கிறாரே .... அந்த
எல்லையை அவ்வப்போது அவர் கடைபிடிக்கத்தான் செய்வார். தன்
நண்பர்கள் சென்ற அதே வாய்க்குள் புகுந்து விட்டார். சதிகார
பாம்பு வாயை மூடிவிட்டது வானத்து தேவர்களே இதைக்கண்டு கலங்கிவிட்டனர். கிருஷ்ணர் இல்லாவிட்டால் தங்கள் கதி என்னாவது என்று ! வயிற்றுக்குள் இருந்த நண்பர்களும் அலறினர். கிருஷ்ணர்
அவர்களை தன் கருணைப் பார்வையால் அமைதிப்படுத்தினார்... பெரிதாக்கிக்
கொண்டே இருந்தார். அகாசுரப்பாம்புக்கு மூச்சடைத்தது. அதன் வயிறு கிழிந்தது. வலி தாளாமல் வாயைப் பிளந்தது.
கிருஷ்ணரும், தோழர்களும் தப்பி வந்து விட்டனர்.
வயிறு கிழிந்த பாம்பு இறந்தது. கிருஷ்ணரின்
பாதம்பட்ட காரணத்தால், அதன் உயிரொளி அவரிடமே கலந்தது.
நண்பர்களைக் காத்த கண்ணன், தன்னைக் கொல்ல
வந்தவனுக்கும் முக்தி கொடுத்தார்.
ஒரு
சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரைக்கு தனித்துச் சென்றார். அன்று
பலராமன் உடன் வரவில்லை. அந்த ஆற்றில் காளிங்கன் என்ற நாகம்
வசித்தது. அதற்கு நூறு தலைகள். அந்தக்
கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது.
கரைகளில் நின்ற பெரும்பாலான மரங்கள் அதன் விஷக்காற்று பட்டு
கருகிவிட்டன. காளிங்களின் இந்தப் போக்கு கிருஷ்ணருக்கு
கோபத்தைத் தந்தது. ஆனாலும், கரையில்
ஒரே ஒரு மரம் மட்டும் பச்சை பசேலென கிளைகளுடன் உயரமாக நின்றது. இந்த மரத்தில் கிருஷ்ணர் பிற்காலத்தில் ஏறுவார் எனத்தெரிந்து, கருடபகவான் அதன் மீது அமிர்தத்தை தெளித்து வைத்திருந்தாராம். அதனால் அது அழியவில்லை. அந்த மரத்தின் மீதேறிய
கிருஷ்ணர் தண்ணீரில் குதித்தார். தண்ணீர் சிதறியது. அப்போது ஏற்பட்ட நீரலைகள், பல மிக்க காளிங்கனையே
அசைத்தது. அது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. யாரோ ஒரு சிறுவன் தண்ணீரில் குதித்து தன்னை இம்சை செய்ததைக் கண்ட
காளிங்கன், ஆத்திரத்துடன் கிருஷ்ணரை நோக்கி வந்தான். கிருஷ்ணரின் அழகு அவனைக் கவர்ந்து விட்டது. அப்படியே
அதிசயித்து பார்த்தான். இருப்பினும், தன்
ஆக்ரோஷத்தைக் காட்டி அவரை வளைத்தான். கிருஷ்ணர் தன் பலத்தைப்
பிரயோகித்து விடுபட்டு, அவனது தலையில் ஏறி நர்த்தனமாடினார்.
அப்போது, அவரது பாதங்களின் வலிமையை உணர்ந்தான்
காளிங்கன். ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவும் தாங்க முடியாத
வலியைத் தர, ஒவ்வொரு தலையாக உயர்த்தி தாக்குப் பிடித்தான்.
ஒரு கட்டத்தில் வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர் அவர் பகவான்
நாராயணின் அவதாரம் என்பதைத் தெரிந்து ஓடி வந்தனர். இங்கே
இப்படி இருக்க, கரையில் நின்ற நண்பர்கள், கிருஷ்ணர் நீரில் குதித்து காளிங்கனால் இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்து,
யசோதையிடம் தகவல் சொன்னார்கள். அவள்
பதறியடித்து வந்தாள். பலராமனுக்கு தெரியும், காளிங்கனின் கதை முடிந்து விடுமென்று. எனவே, அவன் பதட்டமின்றி வந்தான். யாசோதை தண்ணீரில் குதிக்க
முயன்றாள். என் மகனை இழுத்திச் சென்ற அந்த பாம்பு என்னையும்
இழுத்துச் செல்லட்டும், என்றாள். யசோதயை
கரையில் நின்ற கோபியர்கள் பிடித்து இழுத்து வந்தனர். அவள்
மூர்ச்சையாகி விட்டாள். காளிங்கனின் பத்தினிகள், கிருஷ்ணரிடம் சென்றனர்.
மகாபிரபு
! உமது
சக்தியை அறியாமல் எங்களது கணவர் உம்மிடம் தவறு செய்து விட்டார். அவரை ரட்சிக்க வேண்டும். எங்களுக்கு மாங்கல்ய
பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர்
அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி
நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. கிருஷ்ணர்
கரைக்கு வந்த பின்னர் தான் எல்லாருக்கும் உயிர் வந்தது. காளிங்கனின்
பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். காளிங்கன் அவரிடம்,
முன்வினைப்பட்டது. நான் கொடுத்து வைத்தவன்.
கடிப்பதும், சீறுவதும் எனது இயற்கை குணம்.
அது உம்மால் தரப்பட்டது. அதை உம்மால் தான்
மாற்ற முடியும். எனவே, நான் சீறியது
குறித்து கவலைப்படவில்லை. இருப்பினும், மகாபிரபு தண்டிக்க நினைத்தாலும் அதையே ஏற்கிறேன், என்றது
பணிவுடன். உடனே கிருஷ்ணர், காளிங்கா !
நீ உனது மனைவி, குழந்தை மற்ற சகாக்களுடன்
கடலுக்கு போய்விடு. யமுனையை அசுத்தப்படுத்தாதே. பசுக்களும், சிறுவர்களும் அதை குடிக்கிறார்கள்.
அதில் விஷத்தன்மை ஏற்படுவதை அனுமதிக்கமாட்டேன். நீ கருடனுக்கு பயந்தே இங்கு வந்தாய். இப்போது,
நான் நடனமாடியாதால் ஏற்பட்ட குறிகள் உன் தலையில் உள்ளன. இதைப் பார்க்கும் கருடன் உன்னை ஏதும் செய்யமாட்டான், என்றார். காளிங்கனும் அதை ஏற்று, கடல் நோக்கி போய்விட்டது. கோகுலமக்கள் நிம்மதி
பெற்றனர். கிருஷ்ணரின் உறுதியான மனம், வீரம்,
அலங்காரம் ஆகியவை கோபியர்களை பெரிதும் கவர்ந்திருந்து. பல சிறுமிகள் கிருஷ்ணன் தனக்கும் கணவனாக மாட்டானா என எண்ணத் துவங்கினர்.
அவரது புல்லாங்குழல் இசையால் ஈர்க்கப்படும் அவர்கள் தங்களை மறந்து
நிற்பார்கள். சில சமயங்களில் அவர்களது ஆடைகள் விலகியோ,
நெகிழ்ந்தோ இருக்கும். ஆனால், இசையிலும் கிருஷ்ணரின் அழகிலும் லயித்துப் போகும் அவர்கள் இவ்வாறு ஆடை
நெகிழ்ந்தது கூட தெரியாமல் அவரையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருப்பார்கள்.
அப்பகுதியில் வசித்த பழங்குடி இனப்பெண்களும் கிருஷ்ணரை காதலித்தனர்.
கிருஷ்ணர் நடந்து செல்லும்போது, அவரது
திருவடிப்பட்டு மண் சிவந்து போகும். அந்த சிவந்தமண்னை
எடுத்து குழைத்து தங்கள் மார்பிலும், முகத்திலும்
பூசிக்கொள்வார்கள் பழங்குடிப் பெண்கள். அவர்களுக்கு ஏற்கனவே
காதலர்களே கணவர்களோ உண்டு. இருப்பினும் அவர்கள் தொட்டால்
தீராத காம இச்சை, கிருஷ்ணரின் காலடிபட்ட மண்ணை எடுத்து
மார்பில் தடவினால் அடங்கிப்போகும். இது தவறில்லையா ? பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வுடன் வாழ வேண்டாமா ? என கேட்பீர்கள். அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உணர்வுடன் தான் வாழ்ந்தார்கள், ஆனாலும், காமம் குறையவில்லை. கிருஷ்ணரின் காலடி பட்டமண்
உடலில் பட்டதும் காமஇச்சை தீர்ந்து விடுகிறது. அதாவது,
காமம் மிகுந்தவர்கள் பகவான் கிருஷ்ணரின் பாதங்களில் சரணடைந்தால்
போதும். காமம் என்ற பேய் உடலில் இருந்து பறந்து விடும்
என்பதே இதன் தாத்பர்யம். மேலும், கோபியர்
கிருஷ்ணரின் நினைவிலேயே மூழ்கிக்கிடந்தனர். கிருஷ்ணர் கடவுள்.
கடவுளின் நினைப்பில் மூழ்கிக் கிடப்பது எவ்வகையிலும் தவறாகாது.
இப்போதும், இது தொடரத்தான் செய்கிறது. திருமணத்துக்கு முன்னும், பிறகும், நம் பெண்கள் சிவனையோ, திருமாலையோ, முருகனையோ உள்ளன்போடு வணங்கத்தான் செய்கிறார்கள். அது
பக்தி என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிர, ஒரு ஆணுடன் கொண்ட
உறவாகக் கொள்ளப்படாது. காமம் என்ற உணர்வு கிருஷ்ணனை
நினைத்தாலே போய்விடும். காமம் நீங்கிவிட்டால் உலகில்
பிறப்புகளே இருக்காதே ! மீண்டும் பிறக்கக்கூடாது. கிருஷ்ணனுடன் கலந்திருக்க வேண்டும் என்பதே கோபிகிருஷ்ண காதல் மூலம் நாம்
தெரிந்துகொள்ள வேண்டியது.
கிருஷ்ணர்
யமுனையில் அதிகாலையில் குளிக்கும் பெண்களின் பின்னால் செல்வார். ஒரு மரத்தின் மீது
அமர்ந்து கொள்வார். கோபியர், தங்கள்
ஆடைகளை முழுமையாகக் களைந்து விட்டு, ஆற்றில் இறங்கி
நீராடினார்கள். கோபியர் கரையில் கழற்றி வைத்திருந்த ஆடையை
எடுத்து மரப்பொந்தில் ஒளித்து வைத்தார் கிருஷ்ணர். கரைக்கு
வந்த கோபியர் ஆடையைக் காணாமல் தவித்தனர். எப்படி
வீட்டுக்குச் செல்வது என தவித்த வேளையில், உங்கள் ஆடைகள்
என்னிடம் உள்ளன என மரத்தின் மீதிருந்து குரல் கேட்டது. கோபியர்
நிமிர்ந்து பார்த்தனர். மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த
கிருஷ்ணரைக் கண்டு வெட்கப்பட்டனர். கண்ணா ! பெண்கள் குளிக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை ? போதாக்குறைக்கு
எங்கள் ஆடைகளையும் கவர்ந்து கொண்டாய். இப்போது, நாங்கள் எப்படி மேலே வருவது ? என்றாள். கிருஷ்ணர் கலகலவென சிரித்தபடியே, நானாகவே இந்து
வந்தேன். நீங்கள் என்னை மனதில் நினைத்தீர்கள் ! என்னைப் பற்றி பாடினீர்கள். என்னையே அடைய வேண்டுமென
மனதார வேண்டினீர்கள். அது எனக்கு கேட்டது வந்தேன் என்றார்.
இது நிஜம் தானே ! கோபிகைகளால் அவருக்கு
பதிலளிக்க முடியவில்லை. இருந்தாலும் உடைகளைப் பெறும்
பொருட்டு, அதற்காக, நாங்கள் ஆடைகளை
எப்படி மேலே வந்து பெற முடியும். நீயாக கீழே வைத்து விட்டு
போய்விடு என்றனர். கோபியரே ! ஒரு பெண்
கணவனைத்தவிர பிறர் முன்னிலையில் ஆடையின்றி இருக்கலாகாது. நீங்கள்
என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென துர்க்கையை வழிபட்டு விரதம் இருந்தீர்கள்.
உங்கள் கணவனாகிய என் முன்னால் வருவதற்கு என்ன வெட்கம் ? வாருங்கள். வந்து பெற்றுக் கொள்ளுங்கள், என்றார். அவர்கள் தயங்கவே, பெண்களே
! ஆடையின்றி தண்ணீரில் இறங்குவது குற்றம் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். உங்கள் செயலால் வருணன் கோபமடைந்துள்ளான்.
எனவே, நீங்கள் வருணனை நினைத்து மனதார வணங்கி,
இனி இவ்வாறு ஆடையின்றி குளிக்கமாட்டோம். எனச்
சொல்லி அவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பிறகு மேலே வந்து
ஆடையைப் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான். இப்படி கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டிருக்க நாரத முனிவர் கம்சனை
அழிப்பதற்குரிய காலம் நெருங்கி விட்டதை அறிந்தார். அவர்
நேராக கம்சனிடம் சென்றார். கம்சா ! சவுக்கியமாக
இருக்கிறாயா ? உன் சவுக்கியம் நீண்டு நீடிக்க வேண்டும் என்ற
ஆசையில் நான் இங்கே வந்திருக்கிறேன். ஆனால், நீயோ, உன்னை அழிக்கப்போகும் கிருஷ்ணனும், பலராமனும் பெரியவர்களாக வளர்ந்து விட்டதை அறியாமாலேயே இருக்கிறாய்.
அவர்களை சீக்கிரம் கொன்றுவிடு. இல்லாவிட்டால்,
உன் அழிவை யாராலும் தடுக்க இயலாமல் போய்விடும் நீ சுதாரிப்பாக
இருக்க வேண்டும் என்பதாலும், உன்மீது நான் அக்கறை கொண்டவன்
என்பதாலும் சொல்கிறேன். உன்மீது ஏமாற்றிய வசுதேவரையும்,
நந்தகோபனையும் விட்டுவிடாதே, என்றார். கம்சனும் அவரது கருத்தை ஆமோதித்து, வேண்டிய
ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதாகச் சொன்னான். நாரதர் தன் கடமை
முடிந்த திருப்தியுடன் சென்றார்.
அந்த
மாவீரர்கள் அரங்கில் நுழையவும்,
ஒவ்வொருவரும் கிருஷ்ணரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது பற்றி
மகிழ்ச்சியடைந்தனர். பார்வையாளர்கள் வரிசைக்கு கிருஷ்ணரும்
பலராமரும் சென்றனர். அப்போது சாணூரன், கிருஷ்ணா
! பலராமா ! ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள் ?
போட்டியில் நீங்கள் பங்கேற்கவில்லையா ? என்றான்.
கிருஷ்ணர் அவனிடம், சாணூரா ! இங்கே பலத்திலும், வீரத்திலும், அனுபவத்திலும் சிறந்த வீரர்கள் இருக்கிறீர்கள். நீங்கள்
ஒருவருக்கொருவர் மோதினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் சிறுவர்கள். எங்களோடு நீங்கள் மோதினால்,
பார்ப்பவர்களுக்கு ரசனை இருக்காது. மேலும்,
அது நியாயமும் அல்ல, என்றார். கிருஷ்ணா ! நீங்கள் குவாலயபீட யானையையே கொன்றவர்கள்
என்ற தகவல் எங்களுக்கு நீங்கள் வரும் முன்பே கிடைத்துவிட்டது. அதை விடவா நாங்கள் பலசாலிகள். அதனால், நீங்கள் எங்களோடு மோதலாம், வாருங்கள் என்றான்.
கிருஷ்ணர் சாணுரனையும், பலராமர் முஷ்டிகனையும்
எதிர்த்து யுத்தம் செய்தனர். அவர்களது அடியை அந்த
மல்லர்களால் தாங்க முடியாமல் கூக்குரலிட்டு இறந்தனர். அடுத்து
மற்ற மல்லர்கள் சிலர் களமிறங்க அவர்களும் கொல்லப்பட்டார்கள். இதைக் கண்ட மற்றமல்லர்கள் களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். மக்கள் கைத்தட்டி மகிழ்ந்தனர். கம்சன் அதிர்ந்து
போனான். கிருஷ்ண பலராமரை பாரட்ட மனமில்லாதது மட்டுமின்றி,
வீரர்களே ! இந்த கிருஷ்ணனையும், பலராமனையும் மதுராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோதா, வஞ்சகம் புரிந்த வசுதேவர், இவர்களுக்கு ஆதரவளித்த
எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும் கொல்லப்பட வேண்டும், என
ஆணையிட்டான். கிருஷ்ணருக்கோ மகாகோபம். சற்றும்
நியாயமின்றி நடந்த அந்தக் கொடியவன் மீது பாய்ந்தார். அவனது
கிரீடத்தை தட்டிவிட்டார். அவனது தலைமுடியை பிடித்து
இழுத்தார். ஆசனத்தில் இருந்து சரிந்து விழுந்த அவனை இழுத்து
வந்தார். மல்யுத்த களத்தில் அவனைக் கொண்டு வந்து கீழே
தள்ளினார். மார்பின் மீது ஏறி அமர்ந்தார். கம்சனுக்கு மூச்சு முட்டியது. ஒரே குத்தில் அவன்
உயிரை விட்டான். அவனது உயிர் வைகுண்டத்தை அடைந்தது, கொடுமைக்காரனாயினும், சதாசர்வகாலமும் கிருஷ்ணரையே
நினைத்தவன் அவன். அவரால் தனக்கு மரணம் ஏற்படுமோ என பயந்து
கொண்டே சிந்தித்தவன். வைகுண்டத்தில் அவனுக்கு ஸாரூப்ய
சொரூபம் கிடைத்தது. இந்த சொல்லுக்கு நாராயணனைப் போலவே
உருவமெடுத்தல் என்பது பொருள். வைகுண்டத்தில் இருப்பவர்கள்
நாராயணனை வணங்கி, நாராயண வடிவத்தைப் பெறுவார்களாம். அந்த வடிவத்தை கருணைக்கடலான நாராயணன், கம்சனுக்கு
அளித்தருளினார். கீதையில் தத் பாவ பாவித் என்று
சொல்லப்பட்டுள்ளது. ஒருவன் பூமியில் இருக்கும் போது என்ன
நினைக்கிறானோ அதற்கேற்ற மறுபிறவியை அடைகிறான். கம்சன்
பயத்தின் காரணமாக கிருஷ்ணரை நினைத்தாலும், அவரையே நினைத்துக்
கொண்டிருந்தால் இந்த உயர் நிலையை அடைய முடிந்தது. கம்சனுக்கு
கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோரர்கள் இருந்தனர். கிருஷ்ணரால்,
அவன் கொல்லப்பட்டதை அறிந்ததும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டனர்.
தாய்மாமனைக்
கொல்வதை வேதம் அனுமதிக்கவில்லை.
ஆனால், கம்சனைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்
கிருஷ்ணருக்கு ஏற்பட்டது. ஏனெனில், கம்சனைக்
கிருஷ்ணரைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது என்பது அசரீரி வாக்கு. அதன் காரணமாக, பகவான் இங்கே வேதத்தின் கட்டளையை மீற
வேண்டியதாயிற்று. சரி.... இது
அனுமதிக்கப்பட்ட ஒன்றானால், இப்போது தன்னைத் தாக்க வரும்
மற்ற தாய் மாமன்களை என்ன செய்வது ? எல்லாருமே தேவகியின்
சகோதரர்கள். இவர்களை அழிக்க ஒரே வழி தன் அண்ணன் பலராமன் தான்.
ஏனெனில், அவர் ரோகிணியின் மகன். அவ்வகையில், எதிரே நிற்பவர்கள் தாய்மாமன்மார் ஆக
முடியாது. அந்த எட்டு பேரையும் கொல்லும் பணியை பலராமர்
ஏற்றுக் கொண்டார். குவலாயபீட யானையைக் கொன்ற போது, கிருஷ்ணரும் அவரும் ஆளுக்கொரு தந்தத்தை ஒடித்து வந்திருந்தனர். அந்த தந்தத்தைக் கொண்டு, கம்சனின் சகோதரர்களைத்
தாக்கினார் பலராமர். ஒருவன் பின் ஒருவராக அவர்களை கொன்றார்.
அப்போது, தேவலோகத்தில் இருந்து மலர் மாரி
பொழிந்தது. கிருஷ்ணபலராமரின் வீரமான செயல்களால் யசோதையும்,
நந்தகோபனும் ஆனந்தமாகி கண்ணீர் வடித்து நின்றனர். கிருஷ்ணர் கடவுள் என்பது நன்றாகத் தெரிந்து விட்டதால், அவரைத் தொட அவர்களுக்கு தைரியம் வரவில்லை. கிருஷ்ணரோ
அவர்களின் பாதத்தில் விழுந்து ஆசி வழங்கச் சொன்னார். அவர் கடவுள்
என்பதால் அவருக்கு ஆசி வழங்கும் தகுதி தங்களுக்கு இல்லை எனக்கருதி, அவர்கள் ஒதுங்கி நின்றனர். அப்போது கிருஷ்ணர்
அவர்களிடம், தாயே ! தேவகி என்னைப்
பெற்றவள் என்றாலும் நீயே என்னை வளர்த்தாய். என் பால்ய பருவ
விளையாட்டுகளை நீயே ரசித்தாய். அம்மா ! இந்த உடல் தாய் தந்தையின் உறவால் பிறக்கிறது. அதன்
காரணமாக பெற்றவர்களுக்கு கடன்படுகிறது. இந்தக் கடனை
தீர்க்குமளவுக்கு சமஅளவுள்ள பொருள் எவ்வுலகிலும் இல்லை. ஏனெனில்,
மனிதனாகப் பிறந்தவனுக்கு மட்டுமே எல்லாவற்றையும் அனுபவிக்கும்
பாக்கியம் கிடைக்கிறது. மனிதப்பிறவிக்கு மட்டுமே இந்த உடலை
விடுத்து, இறைவனிடம் சேர்வதற்குரிய அறிவு தரப்பட்டிருக்கிறது.
பெற்றவர்கள் வேறு, வளர்த்தவர்கள் வேறல்ல !
அவ்வகையில், நீங்கள் என்னை ஆசீர்வாதிக்க
தகுதியுள்ளவர்கள் ஆகிறீர்கள். இதைக்கேட்டு மகிழ்ந்த யசோதையை
தம்பதியர் தங்கள் அன்பு மகனை வாரியணைத்தனர். பலராமனுக்கு
முத்தமழை பொழிந்தனர். அவர்களது கண்களில் கண்ணீர் பெருகியது.
இதன் பிறகு தன் தாத்தா உக்ரசேனரை (கம்சனின்
தந்தை) சந்தித்த கிருஷ்ணர், யது
ராஜ்யத்தின் அதிபதியாக அவரை அறிவித்தார். கம்சனுக்கு பயந்து
ஒளிந்திருந்த மன்னர்களெல்லாம் மகிழ்ந்து, உக்ரசேனரை பணிந்து
வணங்கினர். மதுரா மக்கள் கிருஷ்ணரை தினமும் வணங்கும்
பாக்கியம் பெற்றனர். முகுந்தா எனக் கூறி அழைத்தனர். இதற்கு முக்தியும் பரமானந்தமும் தருபவன் எனப் பொருள். நிச்சயமாக, மதுரா மக்கள் பரமானந்தத்தில் மூழ்கினர்
என்றால் மிகையல்ல. சில நாட்களுக்கு பிறகு, விருந்தாவனத்துக்கு யசோதையும், நந்த குமாரரும்
புறப்பட்டனர். கிருஷ்ணரை அவர்கள் அழைத்தனர். அம்மா ! எனக்கு இன்னும் சில கடமைகள் இங்குள்ளன.
வசுதேவர், தேவகியை சிறையில் இருந்து
விடுவித்து, அவர்களுடன் சில நாட்கள் தங்கி வருகிறேன்.
என்னை வளர்த்த உங்களை என்னால் மறக்க முடியாது. அண்ணாவும் என்னுடன் தான் இருப்பார். நாங்கள்,
நிச்சயம் விருந்தாவனத்துக்கு வருவோம், என்றார்.
அவர்கள், மகன்களைப் பிரிந்து கண்ணீருடன்
புறப்பட்டனர். இதன் பின்னர் தேவகியையும், வசுதேவரையும் கிருஷ்ணர் சிறையில் இருந்து விடுவித்தார். வசுதேவர் தன் பிள்ளைகளுக்கும், கர்க முனிவர் என்பவர்
மூலம் புனிதநூல் சடங்கை செய்து வைத்தார். கிருஷ்ணர் பிறந்த
போது, மனதால் செய்த பசுதானத்தை இப்போது அவர், நிஜமாகவே செய்தார். பின்னர், தன்
மகன்களை சாந்தீபனி முனிவரிடம் கல்விபயில அனுப்பி வைத்தார். இத்தனை
காலமும் மாடு மேய்த்து திரிந்த அந்த இளைஞர்கள் இப்போது அறிவியல், அரசியல், கணிதம், சகுனக்கலை,
வைரங்களுக்கு பட்டை தீட்டும் கலை என சகல சாஸ்திரங்களையும் ஆசானிடம்
கற்றனர். பயிற்சி முடிந்ததும், ஆசானிடம்,
குருவே ! தங்களுக்கு தர வேண்டிய குருதட்சணை
என்ன ? என்றதும், குரு ஏதும் பேசாமல்,
அருகில் இருந்த தன் மனைவியை பார்த்தார், அவளது
கண்களில் கண்ணீர் பனித்திருந்தது.
தாயே ! தங்கள் கண்கள்
பனித்திருக்கின்றன. தாங்கள் ஏதோ எங்களிடம் கேட்க
விரும்புகிறீர்கள். தாரளமாகக் கேளுங்கள், என்றனர் கிருஷ்ணரும் பலராமரும்.குறுக்கிட்ட
சாந்தீபனி முனிவர், அவர்களிடம் சீடர்களே ! எங்கள் மகனுடன் பிரபாஸ÷க்ஷத்திர (குஜராத்திலுள்ள சோமநாதம் என கருதப்படுகிறது) கடற்கரைக்குச்
சென்றிருந்தோம். அவன் அதில் மூழ்கி விட்டான். அவனை மீட்டுத்தர வேண்டும், என்றனர். இறந்து போன ஒருவனை மீட்பதென்றால், அது தெய்வத்தாலேயே
முடியும். இங்கே பகவான், இரட்டை
அவதாரம் எடுத்து வந்துள்ளார். அவரால் முடியாதது தான் என்ன ?
அவரிடம் ஆசிபெற்று உடனே புறப்பட்டு கடற்கரையில் நின்றனர் கிருஷ்ண
பலராமர். சமுத்திரராஜன் அவர்களின் திவ்யதரிசனம் கண்டு ஓடோடி
வந்து பணிந்தான். ஸ்ரீகிருஷ்ணா! நான்
தங்களுக்கு செய்ய வேண்டியது என்ன ? உன்னிடம் மூழ்கியுள்ள
எங்கள் குரு சாந்தீபனியின் மகனை திருப்பிக்கொடு, என்றார்
கிருஷ்ணர். தேவாதி தேவா ! அவன்
எனக்குள் இல்லை. அவனை என்னுள் மூழ்கி அட்டூழியம் செய்து
கொண்டிருக்கும் பஞ்சஜனன் என்ற அசுரன் பிடித்துச் சென்றான். ஒருவேளை
அச்சிறுவனை அவன் உயிருடன் விழுங்கியிருக்க கூடும். சங்கு வடிவில்
என்னுள் மறைந்திருக்கும் அவனைப் பிடித்தால் விபரம் தெரியும், என்றான் பணிவுடன். கிருஷ்ண பலராமர் சற்றும்
தாமதிக்காமல், கடலுக்குள் சென்றனர். அங்கே
சங்கின் வடிவில் உருண்டுகொண்டிருந்த பஞ்சஜனனைப் பிடித்தனர். அவனது
வயிற்றைக் கிழித்தார் கிருஷ்ணர். உள்ளே சிறுவன் இல்லை.
சங்கு வடிவ அசுரனைக் கொன்று வெளியே தூக்கி வந்தனர். அவர்கள் நேராக யமலோகம் சென்றனர். எமலோக வாசலில்,
எமதர்மராஜா அவர்களை தண்டனிட்டு வரவேற்றான். காலனே
! எங்கள் குருவின் மகன் இங்கிருந்தால் உடனே என்னுடன் அனுப்ப
வேண்டும், என்றார். தங்கள் கட்டளை என்
பாக்கியம், என்றவன் சிறுவனை அழைத்து வந்தான். அவர்கள் சிறுவனை குருவிடம் ஒப்படைத்தனர். சாந்தீபனி
முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சீடர்களே !
நீங்கள் ஆசிர்வாதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இருப்பினும்,
குரு என்ற முறையில் உங்களை ஆசிர்வதிக்கிறேன். நீங்கள்
இந்த யுகத்தில் பேசப்படுபவர்களாக இருப்பீர்கள். உங்கள்
போதனைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும், என்றார். பயிற்சி முடித்து மதுராவுக்கு அவர்கள் திரும்பினர். தேவகியும்,
நந்தகோபரும் தங்கள் மக்களைப் பார்த்து மகிழ்ந்தனர். மாடு மேய்த்த சிறுவர்களுக்கு, கல்வி கற்றுத்தந்ததில்,
தந்தை வசுதேவருக்கு மிகுந்த திருப்தி. கிருஷ்ணர்
மதுராவில் சூழ்நிலை காரணமாக இருந்தாலும், விருந்தாவனத்தில்
தந்தை, தாய் மற்றும் கோபியருக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும்
உறுத்திக்கொண்டே இருந்தது. அங்கு வருவதாகச் சொல்லியிருந்த
வாக்குறுதியே அது. விருந்தாவனத்தில் யசோதை, நந்தகோபர் மட்டுமின்றி, கோபியர்களும் கிருஷ்ணரின்
நினைவிலேயே இருந்தனர். பார்க்கும் இடத்தில் எல்லாம் அந்த
பரந்தாமன் தான் தெரிந்தான். அங்கே ராதா என்ற கோபிகை
வசித்தாள். அவள் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் நினைப்பவள்
இல்லை. உண்ணும் போதும் கிருஷ்ணா, உறங்கும்
போதும் கிருஷ்ணா, எந்த செயல் ..... என்ன
நடந்தாலும் கிருஷ்ணா... கிருஷ்ணா.... கிருஷ்ணா....
இப்படி கிருஷ்ணனையே நினைத்துக் கிடந்தவள் அவள். இவள் பிறந்த பிறகு கண்விழிக்கவே இல்லையாம். ஒருநாள்
யசோதை கண்ணனை இடுப்பில் சுமந்தபடி இவள் வீட்டுக்கு வரவே, விழித்துப்
பார்த்தாளாம். அப்படி ஒரு தீராத காதல் அந்த மாயவன் மீது.
நெஞ்சுக்குள் அவனது திருவடிகளைப் பற்றி நினைவு மட்டுமே அவளுக்கு.
கிருஷ்ணர் விருந்தாவனத்தில் இருந்தபோது, அவளைத்
தழுவி இனிய மொழி பேசுவார். அவர் இங்கிருந்து சென்றதில்
இருந்து, கலங்கிப்போய் இருந்தாள். கிருஷ்ணரின்
நினைவு அவளை வாட்டியது. மதுராவுக்கு கிருஷ்ணரின் பெரியப்பா
பிள்ளையான (வசுதேவரின் சகோதரர் மகன்) உத்தவர்
என்பவர் வந்தார். இவர் தோற்றத்தில் கிருஷ்ணரை ஒத்திருப்பார்.
அவர்கள் சகோதரர்கள் என்றாலும், நண்பர்கள் போல்
பேசிக்கொள்வார்கள்.
உத்தவரே
! நீர் உடனே
விருந்தாவனம் செல்ல வேண்டும். என்னால் தற்போதைக்கு அங்கு வர
இயலாது என்பதைச் சொல்ல வேண்டும். குறிப்பாக என் தாய்,
தந்தை மற்றும் என்னையே உயிராய்க் கருதி, நான்
வருவேன் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் கோபியருக்கும் ஆறுதல்
சொல்ல வேண்டும். நான் நிச்சயம் அங்கு வருவேன் என்பதை
எடுத்துச் சொல்ல வேண்டும். காரணத்துடன் தான் நான் அங்கு
வரவில்லை. கம்சனைக் கொன்றதால், அவனது
ஆதரவாளர்கள் என்னை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டுள்ளனர். நான் மதுராவில் இருந்தால், இங்கு தான் அவர்கள்
வருவார்கள். விருந்தாவனம் சென்றால், பாவம்...
ஏதுமறியா அப்பாவி ஜனங்களும், பசுக்களும்
துன்பப்படுவர். அதற்காகவே, நான்
வரவில்லை என்பதை எடுத்துச் சொல்லுங்கள், என்றார். உத்தவர் அதை ஏற்று ரதத்தில் புறப்பட்டார். அவர்
விருந்தாவனத்தை அடைந்து, நந்தகோபரிடம் கிருஷ்ணர் சொன்னதை
எடுத்துச் சொன்னார். பின்னர், கோபியரை
சமாதானம் செய்ய அவர் சென்றார். ராதாவிடம் சென்று, தாயே ! உன் கிருஷ்ணன் உன்னை மட்டுமல்ல, இங்கிருக்கும் அனைத்து கோபியர்களையும் பார்க்க ஆவல் கொண்டுள்ளார். விரைவில் உங்களைக் காண வருவதாகச் சொல்லியுள்ளார். அந்த
தகவலை அறிவித்து போகவே இவ்வூர் வந்தேன், என்றவர், மதுராவில் அவன் நிகழ்த்திய வீரச்செயல்களை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லச்
சொல்ல, கோபியர்களின் தாபம் மேலும் அதிகமானது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் அவரை உயர்த்திப் பேசினாள். அதை ரசித்துக் கேட்டார் உத்தவர். கிருஷ்ணரைப்
புகழ்ந்து பேசுவதைக் கேட்டாலே புண்ணியம் கிடைத்து விடும். அதுபோல்
தான், உத்தவரின் நிலையும் அமைந்தது. உத்தவர்
பிரியாவிடை பெற்று ஊர் திரும்பினார். கிருஷ்ணரிடம் கோபியர்
நிலை பற்றி எடுத்துச் சொன்னார். இதன்பிறகு ஒருநாள், தான் மதுராவுக்குள் நுழைந்த அன்று, தனக்கு சந்தனம்
தடவி உபசரித்த கூனிப் பெண்ணான குப்ஜாவின் இல்லத்துக்கு கிளம்பினார். குப்ஜா, கிருஷ்ணரை இன்முகத்துடன் வரவேற்றாள்.
அவரை ஆசனத்தில் அமர வைத்தாள். அவருக்கு
சந்தனம் பூசினாள். வாசனைத் திரவியங்களை தடவினாள். இது அவளது தொழில். அவள், தான்
வாழ்ந்த நாட்டின் மன்னனுக்கு சந்தனம் பூசும் தொழிலைச் செய்பவள். கிருஷ்ணரை அவள் ஒரு கட்டிலில் அமர வைத்தாள். ஒரு
கிண்ணம் சந்தனத்தை அவர் மேல் பூசினாள். என் அன்பானவரே என்னை
ஏற்றுக்கொள்ளும் என்று கெஞ்சினாள். கிருஷ்ணர் சிரித்தார்.
அவளை அவர் தொடவில்லை. அவரது பாதங்களை தொட்டு
வணங்கினாள். இச்சை உணர்வுடன் அந்த பாதங்களை எடுத்து சற்றே நாணத்துடன்
தன் மார்பில் வைத்தாள். அவ்வளவுதான் ! அவளது
இச்சை உணர்வுகள் மறைந்து இப்போது குப்ஜா புது மனுஷியாகி விட்டாள். கிருஷ்ணரை மனதார துதித்தாள். அவளது குணமே
மாறிப்போயிருந்து. குப்ஜாவிடம் விடை பெற்றார் கிருஷ்ணர்.
அவரைத் தன்னுடனேயே தங்கும்படி அவள் வற்புறுத்தினாள். அது தன்னால் இயலாதென்ற கிருஷ்ணர், தன்னை
மதுராபுரிக்கு கம்சன் உத்தரவின் பேரில் அழைத்து வந்த அக்ரூரனின் இல்லத்துக்கு
புறப்பட்டார். அக்ரூரர் மிகச்சிறந்த ராஜதந்திரி. கிருஷ்ணரின் மகாபக்தர். அவர், கிருஷ்ணரை
தகுந்த முறையில் வரவேற்று அவரது பாதத்தை கழுவி தீர்த்தத்தை தலையில் தெளித்துக்
கொண்டார். அவரது பாதத்தை தன் மடியில் தூக்கி வைத்து
வருடினார். கண்ணீர் மல்க அவரைப் பிரார்த்தித்தார். கம்சனையும் அவனது கொடிய நண்பர்களையும் கொன்றதற்காக நன்றி கூறினார்.
அக்ரூரரை மிக முக்கிய காரியம் நாடியும் கிருஷ்ணர் பார்க்க
வந்திருந்தார்.
கிருஷ்ணரின்
மைத்துனர்களான பாண்டவர்கள்.
ஹஸ்தினாபுரத்தில் வசித்து வந்தனர். ஹஸ்தினாபுரம்
என்றால் யானைகள் நிறைந்த இடம். யானைகள் கட்டிக் காக்க நிறைய
செல்வம் வேண்டும். அந்தளவுக்கு செல்வம் படைத்த பூமி அது.
பாண்டவர்களுக்கு எதிராக அவர்களது பெரியப்பா திருதராஷ்டிரனின்
மக்களான கவுரவர்கள் செயல்பட்டு வந்தனர். அவர்கள்
பாண்டவர்களின் பூமியை அபகரித்திருந்தனர். இதுபற்றி
விசாரித்து, திருதராஷ்டடரனுக்கு நல்லறிவு புகட்ட தகுதியானவர்
அக்ரூரர் என்பதை உணர்ந்திருந்தார் கிருஷ்ணர். மேலும் அவர்
பாண்டவர்களின் தாய் குந்திக்கும் உறவினர். அதை அக்ரூரரிடம்
எடுத்துச் சொன்னார். அவரது கட்டளையை ஏற்ற அக்ரூரர் சில
நாட்களிலேயே ஹஸ்தினாபுரம் புறப்பட்டு விட்டார். திருதராஷ்டிரனின்
சகோதரர் விதுரர் நியாயத்துக்கு கட்டுபட்டவர். அவர் மூலமாக,
ஹஸ்தினாபுரத்தில் நடக்கு விஷயங்களை அறிந்து கொண்டார். அக்ரூரர் அதனால் தான் நியாயத்தைப் பேசும் விதுரரைத் தொடர்பு கொண்டார்.
பின்னர் குந்தியை சந்தித்து நடந்த விஷயங்களை அறிந்தார். திருதராஷ்டிரன் பிள்ளைப்பாசத்தால், பாண்டவர்களைக்
கொல்ல திட்டமிடுவதை உறுதி செய்தி பின்னரே திருதராஷ்டிரனிடம் சென்று அறிவுரை
வழங்கினார். அவன் செய்வது நியாயமல்ல என்பதை ஆணித்தரமாக
எடுத்துச் சொன்னார். அப்போது திருதராஷ்டிரன் தன் தவறை
உணர்ந்திருப்பதை ஒப்புக் கொண்டான். ஆனாலும் அவன் அவரிடம்,
அக்ரூரரே ! உமது போதனைகள் எல்லோராலும்
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பதை நானறிவேன். ஆனாலும்,
ஒருவனுக்கு மரணம் என விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் யார் அறிவுரை
சொன்னாலும் அதனால் பயனில்லாமல் போய்விடும். அந்த அறிவுரைகள்
அமுதம் என்று தெரிந்தாலும் அதை அவன் ஏற்க மாட்டான். உமது
அறிவுரைகளை நான் ஏற்காதது கூட அந்த கடவுளின் சித்தம் தான். ஏனெனில்,
கடவுளின் சித்தத்தை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை.
அது நம் இருவருக்கும் பொருந்தும். அறிவுரை
சொல்பவனும், பெறுபவனும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. பூமியில் பாவிகளைக் குறைக்க யது வம்சத்தில் பரமாத்மா தோன்றியுள்ளதை நான்
அணிந்திருந்தும் என்னால் ஏதும் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன், என்றான். திருதராஷ்டிரன் நிர்ப்பந்தத்தின் பிடியில்
இருக்கிறான் என்பதை அக்ரூரர் அறிந்து கொண்டார். திருதராஷ்டிரனும்
தன் பிள்ளைகளைக் காவு கொடுப்பதற்கென்றே நிர்ப்பந்தத்தின் பிடியில்
சிக்கியிருந்தான். அக்ரூரர் மதுராவுக்கு திரும்பி, கிருஷ்ண பலராமரிடம் விஷயத்தைச் சொன்னார். போரைத்
தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக
பலவகையில் போராடி வெற்றி ஈட்டிக் கொடுத்தார். இந்த
போர்க்களத்திலே கீதை என்னும் வாழ்க்கையின் யதார்த்த நிலையை உணர்த்தும்
அருமருந்தையும் தந்தார்.
கிருஷ்ணர்
நிகழ்த்திய லீலைகள் கொஞ்சமா !
பக்தர்களை பரிசோதித்து பார்ப்பதில் அவனுக்கு நிகர் அவனே ! ஆனால், அந்த பரந்தாமனையே பரீட்சித்து பார்த்து
விட்டான் ஒரு பக்தன் ! அவன் தான் சகாதேவன். பாண்டவர்களில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்றால் இவன் தான். கவுரவர்களை அழிக்காவிட்டால் தலை முடிக்கமாட்டேன் என அடம் பிடக்கிறாள்
திரவுபதி. கிருஷ்ணா இவர்களுக்கு உதவி செய்பவர் தான். ஆனால், தன் சொந்த அத்தை குந்தி உள்ளிட்ட அனைவரின்
பக்தியையும் ஆழம் பார்ப்பவர். தர்மர் உத்தமர். அவரையும் விட்டு வைக்காதவர். ஆனால், சகாதேவனிடம் மட்டும் அவரது சோதனைப்படலம் எடுபடவில்லை. உன்னை விட்டால் யாருமில்லை, எனக்கு ஒன்றும் தெரியாது,
நீ என்ன செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறாயோ அதுதான் நடக்கப்
போகிறது என்பது மட்டுமே அவன் வாயில் வரும் வார்த்தை. பாண்டவர்கள்
காட்டில் வாசம் செய்த போது, திரவுபதி கேட்டாளே என்பதற்காக,
ஒரு நெல்லிக்கனியைப் பறித்துக் கொடுத்து விட்டான் அர்ஜுனன். அது ஆண்டுக்கொரு முறை காய்க்கும் அபூர்வக்கனி என்ற விஷயமும், அமித்ர முனிவர் என்பவரே அதைச் சாப்பிட்டு வந்தார் என்ற விபரமும்
இருவருக்கும் தெரியாது. அவர்கள் கனியைப் பறித்து விட்டதைப்
பார்த்த சில முனிவர்கள், நீங்கள் அமித்ரரின் சாபத்திற்கு
ஆளாவது உறுதி என சொல்லி விட்டனர். பறித்த இடத்திலேயே வைத்து
விடலாம் என்றால், அது நடக்கிற காரியமா ? வேறு வழியே இல்லை.... கூப்பிடு கிருஷ்ணனை... அவன் தான் ஆபத்துக்காலத்தில் நமக்கு உதவுபவன் என்று பாண்டவர்கள் அவரை
அழைத்தனர். கிருஷ்ணர் வந்துவிட்டார். இதற்கு
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீங்கள் கடைபிடிக்கும் தர்மத்தை
ஒளிக்காமல் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே உரைக்க வேண்டும். நீங்கள்
சொல்வது நிஜமானால், பழம் மீண்டும் மரத்திலேயே
ஒட்டிக்கொள்ளும் என்றார். ஒவ்வொருவரும் தங்கள் பதிலைச்
சொன்னார்கள். அப்போது சகாதேவன், கிருஷ்ணா
! சத்தியமே தாய், ஞானமே தந்தை, கருணையே தோழன், சாந்தகுணமே மனைவி, பொறுமையே குழந்தை... இதுவே நான் கடைபிடிக்கும்
தர்மம். நான் சொன்னது உண்மையென்றால் கனி ஒட்டிக்கொள்ளட்டும்,
என்றான். பழம் திரும்பவும் கிளைக்கு
போய்விட்டது. பின்னர், அவர்கள் தனியாக
உரையாடினர். சகாதேவா ! நீ ஒரு முட்டாள்.
எவனாவது எதிரிக்கு போருக்குரிய களபலி கொடுக்கும் நாளை குறித்துக்
கொடுப்பானா, நீ செய்து விட்டாயே, என்றார்.
தொழில் தர்மம் தவறக்கூõடது. கிருஷ்ணா ! என்ற சகாதேவனிடம், அப்படியானால்,
திரவுபதி அவள் கூந்தலை முடிவது சிரமம் தான் ! எதிரிகள்
வெற்றி பெறுவார்கள். நீ என்ன செய்வாய் ? என்றார் கிருஷ்ணர். அதெப்படி ? நீயிருக்கும் போது அது நடந்து விடுமா ? என்று
சகாதேவன் கூறவும், அந்த அதிசயம் நிகழ்ந்தது.
கிருஷ்ணா
! நீ எங்களை
விட்டு பிரிய முடியாது. ஏனெனில் நான் உன் மீது நிஜமான பக்தி
வைத்தவன். இப்போதே இங்கே உன்னைக் கட்டிப் போட்டு விடுகிறேன்.
கிருஷ்ணர் சிரித்தபடியே, அதெப்படி சாத்தியம் ?
முடிந்தால் என்னைக் கட்டிப்பார். என்றவராய்,
அந்த அறை முழுக்க பல்வேறு வடிவமாய் பிரிந்து வியாபித்து நின்றார்.
சகாதேவன் அவரிடம், கிருஷ்ணா ! நீ மாயவன். உன்னைக் கட்ட கயிறு வேண்டுமென்று
நினைத்து தானே இப்படி பல வடிவங்களில் மாயம் கட்டுகிறாய். உன்னை
கயிறால் கட்டமுடியும் என்று நினைக்கும் அஞ்ஞானியா நான் ! உன்னை
நான் என் மனதால் தியானிப்பது நிஜமென்றால், மனதால் உன்னைக்
கட்டிப்போடுகிறேன், என்றான். கிருஷ்ணரால்
அசைய முடியவில்லை. ஆம்... பகவானை
பக்தியால் மட்டுமே கட்டிப் போட முடியும் என்பதை சகாதேவன் மூலமாக நமக்கு
கற்றுத்தந்தவர் கிருஷ்ணர். கிருஷ்ணரின் திருமண, லீலைகளைக் கேட்டு முக்தியடைந்த முதல் பக்தர் யார் என்று தெரியுமா ?
பாண்டவர்களின் தர்மபத்தினியான திரவுபதி தான். அபூர்வமாக
எப்போதாவது ஒருமுறை நிகழும் சூரிய கிரகண நாளில், குரு÷க்ஷத்திரத்தில் உள்ள ஸமந்த பஞ்சகம் என்ற இடத்தில் மக்கள் கூடி புனித
நீராடுவார்கள். பகவான் கிருஷ்ணரும் அவரது ஆயிரக்கணக்கான
ராணியரும் அங்கே வந்தார்கள். இவ்விழாவில் பங்கேற்க
குந்திதேவி, அவளது அண்ணன் வசுதேவர், திருதராஷ்டிரன்,
அவன் தேவி காந்தாரி, தர்மர், துரியோதனன் மற்றும் அவன் மனைவி பானுமதி, கிருபாச்சாரியார்
இன்னும் மகாபாரத வி.ஐ.பிக்கள் அத்தனை
பேரும் ஆஜராகி விட்டனர். குந்தியும், வசுதேவரும்
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர். அவர்கள்
அங்கு ஆற்றிய உரையாடல் மனித குலம் முழுமைக்கும் ஆறுதலளிக்கும் கருத்துக்களைக்
கொண்டது. இவர்கள் இங்கே இப்படி பேசிக்கொண்டிருக்க திரவுபதி,
கிருஷ்ணரின் பெரிய ராணியான ருக்மிணியைச் சந்தித்தாள். அங்கே முக்கிய ராணிகளான சத்யபாமா, பத்ரா, ஜாம்பவதி, சத்யா, காளிந்தி,
சைப்யா, லட்சுமணா, ரோகிணி
ஆகியோரிடம், கிருஷ்ணா எவ்வாறு உங்களைத் திருமணம் செய்து
கொண்டார் ? என்ற விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.ஒருசமயம் யதுகுல மக்களுக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படவே, கிருஷ்ணர் மதுராவின் ஒரு பகுதியாக இருந்த துவாரகையில் ஒரு கோட்டையை
நிறுவினார். கடலின் நடுவே இக்கோட்டை நிறுவப்பட்டது. வீதிகளும், மாடமாளிகைகளும் அமைக்கப்பட்டன. அங்கே யது குல மக்களை குடியேற்றினார். அங்கு தன்
மனைவி ருக்மணியுடன் வசித்து வந்தார். கிருஷ்ணர் சாந்தீபனி
முனிவரிடம் படித்த காலத்தில் அவருக்கு சுதாமா என்ற நண்பர் இருந்தார். குசேலன் என்றும் இவரைச் சொல்வார்கள். இருவரும்
இணைந்தே இருப்பார்கள். அவர் பிராமணர். வேதம்
கற்ற பிறகு, அதைக்கொண்டே பிழைப்பு நடத்தி வந்தவர். அவருக்கு சுசீலை என்ற மனைவி. குழந்தைகளின்
எண்ணிக்கையோ அதிகம். குடும்பத்தை நடத்த தனக்கு கிடைத்த
வருமானமே போதும் என்ற நிலையில் இருந்தார். பிராமணன் என்பவன்
வேதம் படித்தவன் மட்டுமே. பிற வேலைகள் அன்றைய சமுதாயத்தில்
அவனுக்கு விதிக்கப்படவில்லை. அந்த தர்மப்படியே சுதாமா
வாழ்ந்தார். மேலும், சுதாமா தனக்கு
அதிகமான குழந்தைகள் இருந்தது பற்றி கவலைப்படவும் இல்லை. அவர்
பகவான் கிருஷ்ணரிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். அவன் என்ன
நிகழ்த்த வேண்டுமென நினைக்கிறானோ அதை நிகழ்த்தியே தீருவான். அவன்
நடத்தும் நாடகத்தில் நாம் பாத்திரங்கள். அவன் என்ன செய்ய
வேண்டும் என நினைக்கிறானோ அதை செய்யட்டும் என்ற பக்குவநிலைக்குச் சொந்தக்காரர்.
தந்தை எப்படியிருந்தாலும், தாய் குழந்தைகளின்
பசி பொறுக்க மாட்டாள். அவள் தன் கணவரிடம், அன்பரே ! தாங்கள் தங்கள் நண்பர் கிருஷ்ணரை
துவாரகையில் சென்று சந்தியுங்கள். அவர் நம் வாழ்வு வளம்பெற
உதவாமலா போவார் ? என்றாள்.
சுசீலையும்
பணத்தின் மீது பற்றுக் கொண்டவளல்ல.
வறுமையைக் கண்டு அவள் பயப்படுபவளும் அல்ல. ஆனால்,
மாங்கல்யத்தின் மீது எந்தப் பெண்ணுக்குத்தான் பற்று இருக்காது...
தன் கணவர் பசியாலேயே உயிர் விட்டுவிடுவாரோ என அவள் கலங்கினாள்.
அதன் காரணமாகவே கிருஷ்ணரைப் பார்த்து வரச்சொன்னாள். குசேலர் புறப்படும் சமயத்தில் பக்கத்து வீடுகளில் போய் சிறிது அவல்
கடனாகப் பெற்று வந்து, அவரிடம் கொடுத்து அனுப்பினாள்.
கிழிந்த தன் அங்கவஸ்திரத்தில் அதைக் கட்டிக்கொண்டு சுதாமா
கிளம்பினார். சுதாமா தனித்துப் போகவில்லை. தங்கள் ஊரிலுள்ள கிருஷ்ண பக்தர்களான அந்தணர்கள் சிலரையும் உடன் அழைத்து
வந்திருந்தார். அவர்களும் பற்றற்ற நிலையிலுள்ளவர்கள்.
எந்த எதிர்பார்ப்பும் கருதி அவர்கள் அங்கே வரவில்லை. துவாரகையில் அரண்மனை களை கட்டியிருந்தது. கிருஷ்ணருக்கு
கப்பம் செலுத்தவும், அவரிடம் சன்மானம் பெற்று செல்லவும் பல
குறுநில மன்னர்கள் அரண்மனை வாசலில் காத்துக் கிடந்தனர். அவர்களை
காவலர்கள் ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு
கிருஷ்ணர் ஒரு உத்தரவு போட்டிருந்தார். வேதம் படித்த
பிராமணர்கள் அரண்மனைக்கு வந்தால், அவர்களைத் தடுக்காமல்,
காவலர்கள் உடனடியாக தனக்கு அறிவிக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
அப்போது, கிருஷ்ணர் ருக்மணியின் மடியில் தலை
வைத்து, திருவடியை சத்யபாமாவின் மடிமீது வைத்து, பத்தாயிரம் நாயகியர் சாமரம் வீச சுகமாக சயனித்திருந்தார். காவலன் ஒருவன் ஓடிவந்து, கிருஷ்ணரை அவரது நண்பர்
பார்க்க வந்துள்ள விபரத்தை அறிவித்தான். துள்ளிக்குதித்து
எழுந்தார் கிருஷ்ணர். ஒரு ஏழை நண்பனைக் காண அம்பு போல
பாய்ந்து நண்பரைக் காணச்சென்றார். சுதாமா ! உம்மைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று ? உம்மை
மீண்டும் சந்திக்க நான் என்ன தவம் செய்தேனோ ? என் பாக்கியம்
தான் என்னே என்று நெக்குருகிப் போன அவர் சுதாமாவை அணைத்தார். அந்த அணைப்பிலேயே சர்வ வறுமையும் அழிந்து போனது. இது
எப்படி... கிருஷ்ணரின் மார்பில் உறைபவள் அல்லவா மகாலட்சுமி.
அவளது பார்வை சுதாமாவின் மேல் பட்டு விட்டது. வறுமை
நீங்கி விட்டது. சுதாமாவுடன் வந்தவர்களுக்கம் தனி அறைக்குள்
ஒதுக்கப்பட்டு விருந்து உபசாரம் தடபுடலாயிற்று. கிருஷ்ணர்
சுதாமாவுக்கு தனி மரியாதை செய்தார். சுதாமா ஒரு பிராமணர்
என்ற முறையிலே, அவருக்கு பாதபூஜை செய்து, தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். ருக்மணியும்
அவ்வாறே செய்தாள். பின்னர் தனது பஞ்சணையிலேயே அமரச்சொன்ன
கிருஷ்ணர், சுதாமா ! அவந்தியில்
இருந்து என்னைக் காண நடந்தே வந்தீரா ! உமது கால்கள் எவ்வளவு
வலித்திருக்கும் என்றவராய் அவரது கால்களைபிடித்து விட்டபடியே பேசினார். நீண்ட நாள்களுக்கு பிறகு நண்பர்கள் சந்திக்க நேர்ந்தால், பள்ளியில் சக மாணவர்களுடன் செய்த குறும்பு, ஆசிரியருக்கு
தெரியாமல் செய்த சேஷ்டைகள், நெகிழ்வான நிகழ்வுகள் என பல
விஷயங்களைப் பற்றி பேசத்தானே செய்வோம். கிருஷ்ணர்
சுதாமாவுடன் அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்தார்.
பின்னர்
சுதாமா ! நம்
பழைய நினைவுகள் பற்றியே பேசிக்கொண்டிருந்து விட்டேன். வீட்டைப்பற்றி
விசாரிக்கவே இல்லை. மன்னியார் சவுகரியமாக இருக்கிறாரா ?
பிள்ளைகள் கல்விக்கூடம் செல்கிறார்களா ? என்று
குசலம் விசாரித்த கையுடன், சுதாமா ! என்
மன்னி என் மீது மிகுந்த பாசம் கொண்டவராயிற்றே ! எனக்காக
பலகாரம் கொடுத்து அனுப்பியிருப்பாரே ! சுதாமா ! அதைக் கொண்டு வந்துள்ளீரா ? என்றதும், இங்குள்ள செல்வச் செழிப்பைப் பார்த்து அரண்டு போயிருந்த சுதாமா, தன் கிழிந்த அங்கவஸ்திரத்தை மறைத்தார். விடுவாரா
மாயக்கண்ணன் ! அதை அப்படியே பறித்து விட்டார். அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்தார். ஒரு பிடி
அவலை வாயில் போட்டார். அவல் வாய்க்குள் போனதோ இல்லையோ,
அவந்தியிலுள்ள சுதாமா வீடு மட்டுமல்ல.... அவரது
ஊரிலுள்ள எல்லா குடிசைகளுமே மாளிகைகளாகி விட்டன. எல்லாருமே
செல்வத்தில் திளைத்தனர். இது இங்கிருக்கும் அப்பாவி
சுதாமாவுக்கு எப்படி தெரியும் ?
இதற்குள்
இன்னொரு பிடி அவலை எடுத்த வாயில் போடச் சென்ற போது, ருக்மணி தடுத்து விட்டாள். ஒரு இனிய கிருஷ்ண பக்தன் தனக்கு கிடைக்கப்போகும் பணத்தால் மனம் மாறி,
பக்தியை மறந்து உலக இன்பங்களில் மூழ்கி விடலாம் இல்லையா ? அதனால், அதில் இருந்து சுதாமரைக் காப்பாற்றினாளாம்
அந்த தேவி ! பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் சுதாமர்.
அவர் கிருஷ்ணரிடம் செல்வத்தைக் கேட்கவுமில்லை. அந்த மாயக்கள்ளன் நண்பனின் வறுமையைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தும்
அவரும் கேட்கவில்லை. ஆனால், நண்பன்
கொண்டு வந்த அழுக்குத்துணியில் இருந்த அவலை மட்டும் எடுத்துக்கொண்டார். பிறர் பொருளுக்கு யாரொருவன் ஆசைப்படுகிறானோ, அவன்
அவ்வாறு பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்து விடுவான். சுதாமரின் வாழ்விலும் இதுவே நிகழ்ந்தது. பால்யத்தில்,
இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கற்றுவந்தபோது, ஒருநாள் முனிவரின் மனைவி, இரண்டு குழந்தைகளையும்
அழைத்து, சமையலுக்கு விறகு பொறுக்கிவர அனுப்பினாள். போகும்போது, இருவரும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் எனச்
சொல்லி, வெல்லம் கலந்த அவலைக் ஒரே பொட்டலமாகக் கொடுத்தாள்.
விறகு வெட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பசியெடுக்கவே,
குசேலர் பொட்டலத்தைப் பிரித்தார். சாப்பிட்டார்.
கிருஷ்ணரை அழைத்த அவருக்குரிய பங்கை கொடுத்திருக்க வேண்டாமோ !
ஆசையோ, பசியோ முழுமையாக சாப்பிட்டு விட்டான்.
அன்று கிருஷ்ணர் அதற்காக ஏதும் சொல்லவில்லை. பகவான்,
உடனே எதையும் தட்டிக் கேட்க மாட்டார். இப்போது
அவருடைய நேரம் ! அன்று தர வேண்டிய தனக்குரிய பங்கை எத்தனையோ
வருடங்கள் கழித்து, இன்று கட்டாயமாக பெற்றுக் கொண்டார்.
உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், அடுத்தவன்
பொருளை வலுக்கட்டாயமாக பறித்தால், அவன் இறந்தாலும் சரி...
அவனுடைய வம்சத்தில் வருபவனாவது நிச்சயமாக அதற்கு பதில் சொல்ல
வேண்டிய காலம் வரும். ஒரு வழியாக குசேலர் அவந்தி வந்து
சேர்ந்தார். அங்கு வைத்து ஏதும் தரமறுத்த அந்தக் கள்வன்
கண்ணன், குசேலர் ஊருக்குள் நுழைந்ததும், அடையாளமே தெரியாமல் உருமாறி விட்டார். உடலெங்கும்
நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
பகவானின் இந்த விளையாட்டில் அவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும், கிருஷ்ண நாமத்தை விடாமல் சொன்னபடி,
வீட்டை தேடியலைந்தார். சுசீலை அவரை ஒரு
மாடத்தில் நின்று அழைத்தாள். நம் வீடு இதுதான் ! இங்கே வாருங்கள் என்றாள். குழந்தைகள் தங்கம்,
வைரம், மாணிக்கச் சிறுதேர் ஓட்டி விளையாடிக்
கொண்டிருந்தனர். இவ்வளவு வறுமையிலும், அவர்
வீட்டில் கூலியை என்றாவது ஒருநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று வேலை செய்து வந்த
வேலைக்காரியின் கழுத்திலேயே நூறு பவுனுக்கு குறையாமல் தொங்கியது. இப்படி அதிசயங்களை நுகர்ந்தபடியே, வீட்டுக்குள்
நுழைந்த சுதாமர், நடந்ததை அறிந்தார்.
கிருஷ்ணா
! ஏ மாயவனே !
என் ஆத்ம நண்பனே ! அடேய் ! இந்த அழியும் செல்வத்தை நாடியா உன்னை நாடி வந்தேன். ஏ
கயவனே ! என்னை ஏமாற்றி விட்டாயடா ! நான்
உன்னிடம் செல்வத்தை கேட்டேனா ! என் பக்திக்கு மரியாதை
அவ்வளவு தானா ! தாமோதரா ! புண்டரீகாக்ஷõ
! என் இதயத்தில் உறைபவனே ! பக்தன் என்றால்
யார் தெரியுமா உனக்கு ? யார் ஒருவன் தன் கஷ்டத்தை கடவுளிடம்
கூட சொல்லமாட்டோனோ, அதை அவன் கொடுத்த வரப்பிரசாதமாக எண்ணி,
அதையும் அனுபவித்து ரசித்து வாழ்கிறானோ அவனே பக்தன். உன்னிடம் நான் தினமும் என்ன கேட்கிறேன் ! அழியா
உலகான வைகுண்டத்தில் ஒரு இடம்..... உன் கமல பாத தரிசனத்தை
தினமும் காணும் பாக்கியம்.... இந்த நிரந்தரச் செல்வத்தை
நாடியல்லவா வந்தேன் ! பரந்தாமா ! இந்த
செல்வம் எனக்கு வேண்டாமடா ! என்னை உன்னோடு சேர்த்துக் கொள்,
எனக் கதறினார். நண்பனின் கதறல் கண்டு கண்மணி
கிருஷ்ணர் பொறுப்பாரா ! வந்து விட்டார் சங்கு சக்ர
காதாதாரியாய் குசேலர் அவருடன் ஐக்கியமானார். பகவான்
கிருஷ்ணரின் இந்த வரலாற்றை படித்தவர்கள் இதிலுள்ள கருத்துக்களை பின்பற்றி நடந்தால்,
இப்பிறவியில் எல்லா இன்பமும், இனி பிறப்பற்ற
நிலையும் பெறுவது உறுதி.
No comments:
Post a Comment