Friday, 7 October 2016

சிவகாமி அம்மன் பொன்னூசல்

சிவகாமி அம்மன் பொன்னூசல்

1. அப்பம் அவல் பொரி விரும்பும் ஐங்கரத்தான்
அன்னை சிவ சங்கரியே ஆடீர் ஊசல்
சுப்பிரமா மணிவள்ளி தெய்வ யானை
சுடர் வேலன் தாயாரே ஆடீர் ஊசல்
எப்பொழுதும் சிரவணமா புரத்தீசன் தன்
இடப்பாகம் கொண்டருள்வீர் ஆடீர் ஊசல்
செப்பரிய சீர் நலம்சேர் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

2. இமயமலைப் பார்வதியே ஆடீர் ஊசல்
எங்கள் குல தேவதையே ஆடீர் ஊசல்
குமரியிலே கன்னிகையாய்க் கோயில் கொண்ட
குணக்குன்றே தவத்தகையே ஆடீர் ஊசல்
சமயபுரம், பண்ணாரி, திருவேற் காட்டில்
சார்மாரி யம்பிகையே ஆடீர் ஊசல்
திமதிம் எனமுழவொலிக்கச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

3. திருக்கடவூர் அபிராமி ஆடீர் ஊசல்
திருக்காஞ்சிக் காமாட்சி ஆடீர் ஊசல்
திருமதுரை மீனுட்சி ஆடீர் ஊசல்
திருமயிலைக் கற்பகமே ஆடீர் ஊசல்
அருள்பொழியும் அவிநாசி ஆலயத்தில்
அன்னை கருணாம்பிகையே ஆடீர் ஊசல்
செருக்கடையா(து) எமைக்காக்கச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

4. தேசமெலாம் புகழ்தில்லைச் சிதம்பரத்தில்
திருநடம்செய்தேவீ நீர் ஆடீர் ஊசல்
பேசு புகழ்ப் பட்டீசன் பேரூர் தன்னில்
பெறும் பச்சை மரகதமே ஆடீர் ஊசல்
ஆசுகவிப் புலவர்களுன் அடிகள் போற்ற
அறம் வளர்த்த நாயகியே ஆடீர் ஊசல்
தேசுடையோர் புகழ்பரப்பும் சிரவையூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

5. திங்கள் அணி கங்கைமுடிச் சிவன் தனக்குத்
தேர்ந்தெடுத்த நற்றுணையே ஆடீர் ஊசல்
மங்கையர்க்குத் தனியரசி மகிழ்ந்து போற்றி
வணங்க அருள் தந்தவரே ஆடீர் ஊசல்
எங்கள் குரு முதல்வர் திரு ராமா னந்தர்
ஏத்த அருள் செய்தவரே ஆடீர் ஊசல்
செங்கமல அடிகாட்டிச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

6. சீர் காழித் திருத்தலத்தில் சம்பந்தர்க்குத்
திருமுலைப்பால் சுரந்தவரே ஆடீர் ஊசல்
பார்புகழும் அபிராமி பட்டர் பாடப்
பவுர்ணமியாய் ஒளிர்ந்தவரே ஆடீர் ஊசல்
கார் முகிலாய்க் கவுமாரக் கந்தச்சாமி
கவிபொழியச் செய்தவரே ஆடீர் ஊசல்
தேர்வலம் செய் திருவீதிச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

7. பந்த பாசங்கள் அறப் பணிவோர் தங்கள்
படுதுயரம் தீர்த்திடுவீர் ஆடீர் ஊசல்
வந்தனைக்குச் செவிசாய்ப்பீர் ஆடீர் ஊசல்
வரும் இடர்கள் மாற்றிடுவீர் ஆடீர் ஊசல்
சந்ததமும் சுந்தரமா முனிவர் போற்றச்
சரண் அளித்த சங்கரியே ஆடீர் ஊசல்
சிந்தனை மிக் கவர் வாழும் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

8. தவத் தவரின் தவப்பொருளே ஆடீர் ஊசல்
சமத்துவ மெய்ச் சிவத்துமையே ஆடீர் ஊசல்
சுவைத் தமிழின் தனிச்சுவையே ஆடீர் ஊசல்
சுமப்பவரின் சுகச்சுமையே ஆடீர் ஊசல்
பவக்கடலில் அலைக்கழியும் மனக் கலக்கம்
பணித்திடு மெய்ப் படைக்கலமே ஆடீர் ஊசல்
சிவத்திலகம் எனத்திகழும் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

9. நாரணியே நற்பரையே ஆடீர் ஊசல்
நான் மறையின் நவில் பொருளே ஆடீர் ஊசல்
பூரணியே புரந்தரியே ஆடீர் ஊசல்
புண்ணியத்தின் புண்ணியமே ஆடீர் ஊசல்
காரணியே கார்முகிலே ஆடீர் ஊசல்
கன்னல் மொழிக் கௌமாரீ ஆடீர் ஊசல்
சீரணியாய்த் திகழ்ந்திலகு சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

10. திரு முகத்தில் பொலிவுடையீர் ஆடீர் ஊசல்
திலகம் ஒளிர் பிறை நுதலீர் ஆடீர் ஊசல்
கருணை பொழிகண்ணுடையீர் ஆடீர் ஊசல்
கங்குல் நிறக் கார் குழலீர் ஆடீர் ஊசல்
மருவுமிதழ்ப் புன்னகையீர் ஆடீர் ஊசல்
வளம் வழங்கு கரம் உடையீர் ஆடீர் ஊசல்
திருவடிகள் சரண் அடைந்தோம் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

வாழி விருத்தம்

11. கார் முகில்கள் மழைபொழிக பயிர் விளைக
கல்வியுடன் ஒழுக்கம் ஓங்க
சீர் பெருகு சான்றோர்கள் சிறந்திடுக
திருப்பணி செய் தொண்டர் வாழ்க
பார்புகழும் கண்மணியாய்ச் சிரவைநகர்
பாரதத்தில் பரந்தே வாழ்க
நேர்மைமிகு சைவநெறி நிலவுலகில்
நிறைந்தோங்கி வாழ்க வாழ்க.

பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு

பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு

1. அப்பம் அவல்விரும்பும் ஆனை முகன் அடியார்
ஒப்பரிய நலம்சேர் உளமென் உயர்தொட்டில்
இப்போ துனக்காக இங்கே விடுதந்தார்
செப்பரிய செல்வியே தாலேலோ
சிரவையூர் நாயகியே தாலேலோ.

2. இலகு தமிழ் இறையாம் எம்முருகன் தன்அடியார்
அலகில் மனமென்னும் அணிசேர் மணித்தொட்டில்
திலகநுதலா யுனக்குத் தேர்ந்து விடுதந்தார்
உலகு கொருதாயே தாலேலோ
உயர்சிரவை நாயகியே தாலேலோ.

3. தண்டாயுதபாணிச் சாமி அடியார்கள்
நண்பார் மனமென்னும் நலஞ்சேர் நற்தொட்டில்
பண்பாய் அமைத்துப் பாங்காய் விடுதந்தார்
விண்ணோர் பணிதேவீ தாலேலோ
வியன்சிரவை நாயகியே தாலேலோ

4. குன்றமாம் ரத்னகிரிக் குமரன் அடியார்கள்
பொன்றா மனமென்னும் புகழ்சேர் பூந்தொட்டில்
இன்றைக் கணிபூட்டி எழிலாய் விடுதந்தார்
என்றைக்கும் தாயேநீ தாலேலோ
எம்சிரவை நாயகியே தாலேலோ.

5. பொடியார் திருமேனிப் பொன்னம்பல வாணன்
அடியார் மனமென்னும் அன்புத் திருத்தொட்டில்
வடிவாம் பிகையுனக்கே வகையாய் விடுதந்தார்
முடியா முதலே தாலேலோ
முதற்சிரவை நாயகியே தாலேலோ

6. திருமண் அணிநெற்றித் திருமால் அடியார்கள்
இருகண் நிறைவாக இலங்கும் எழில்தொட்டில்
பெருகும் மனத்தொடு பெய்து விடுதந்தார்
உருகும் மனத்துமையே தாலேலோ
ஒண்சிரவை நாயகியே தாலேலோ

7. வெள்ளைக் கமலத்தாய் விரவும் அடியார்கள்
தெள்ளத்தெளியப் பாத்தொடுத்த செழுந்தொட்டில்
உள்ளத்தால் ஆக்கி உனக்கே விடுதந்தார்
ஒள்ளியசீர்க் காளியம்மை தாலேலோ
ஒளிர்சிரவை நாயகியே தாலேலோ.

8. செல்வத்திருமடந்தை சீரார் அடியார்கள்
நல்ல மனமென்னும் நயஞ்சேர் நறுந்தொட்டில்
வல்லி உனக்கே வகையாய் விடுதந்தார்
எல்லையில் கருணையாய் தாலேலோ
எழிற்சிரவை நாயகியே தாலேலோ.

9. வில்லார் நுதல்வீர மாச்சி அடியார்கள்
வெல்லும் மனமென்னும் விரைசேர் மலர்த்தொட்டில்
மல்லிகையாற்கட்டி மகிழ்ந்து விடுதந்தார்
தில்லை நடத் தாய் தாலேலோ
திருச்சிரவை நாயகியே தாலேலோ

10. வடகிழக்குத் திக்கில் வளர் மாரித் தாயடியார்
திடஞ்சேர் மனமென்னும் சீரார் பணித்தொட்டில்
படமார் அணிபூட்டிப் பாங்காய் விடுதந்தார்
அடல்மிகும் எம்தாயே தாலேலோ
அணிச்சிரவை நாயகியே தாலேலோ

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer