Tuesday, 10 September 2019

சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்

*சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்*

பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும்.

ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும்.

எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.

அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.

எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான்.

அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.

சக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.

மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.

கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.

அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம்.

ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும்.

வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer