Saturday, 2 April 2016

விருச்சிகம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வெற்றி வேண்டுமா! எதிர்நீச்சல் போடுங்க! (60/ 100)

தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!
ராகு-கேது பெயர்ச்சியால் சுமாரான பலன் என்றாலும் கவலை வேண்டாம். காரணம் குரு பகவான் மற்றும் சனி பகவானால் அவ்வப்போது நன்மை கிடைக்கவே செய்யும். 11-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பொருளாதார வளத்தையும், பெண்களால் அனுகூலத்தையும் கொடுத்து வந்த ராகு, இனி 10-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுக்கக் கூடும். கேது இதுவரை மீனத்தில் அதாவது 5-ம் இடத்தில் இருந்தார். அவர் உடல் நலக்குறைவு, பிள்ளைகளால் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கலாம். இனி 4-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தொழிலில் பிரச்னை குறுக்கிடலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். பிரச்னைகள் வாழ்வில் குறுக்கிட்டாலும் விடாமுயற்சியுடன் எதிர்நீச்சல் போட்டால் வெற்றி கிடைக்காமல் போகாது.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேது நிலைமை இப்படி இருந்தாலும், குரு சாதகமான இடத்தில் இருக்கிறார். அவரது 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலம் எண்ணற்ற நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். குருவால் நற்பலன் கிடைத்தாலும் ஏழரை சனிகாலம் என்பதால் சிரமத்தையும் சந்திக்க நேரிடும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடி புகலாம்.திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.  பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறலாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரிகள் குருவால் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கவனம் தேவை. 2016 மார்ச்சுக்குப் பின் சனி வக்கிரம் அடைவதால் நன்மை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நற்பெயர் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலன் காணலாம். விரும்பிய நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் சூழல் உருவாகும்.
விவசாயிகள் மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியங்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர்.
பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடல் நலத்தை பொறுத்தவரை கேதுவால் வயிறு பிரச்னை வரலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை: குரு 12-ம் இடத்தில் இருப்பதால் நன்மை தரமாட்டார். மற்ற கிரகங்களும் சாதகமாக இல்லாததால், வாழ்வில் தடைகள் குறுக்கிடலாம். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். பண வரவு திருப்தி அளித்தாலும், செலவும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. வெளியூர் பிரயாணத்தில் கவனம் தேவை.
பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ப வருமானம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படலாம். எதிரிகளால் அவ்வப்போது பிரச்னை குறுக்கிடும். புதிய முதலீடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் முயற்சியுடன் படிப்பது நல்லது.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்காது.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். யானைக்கு கரும்பு, பழம் கொடுங்கள். காளியம்மனை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரம், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

தனுசு ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தீர்ந்தது பிரச்னை திருப்தியுடன் வாழ்வீங்க! (75/100)

குறிக்கோளுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!
ராகு-கேது இதுவரை திருப்தியற்ற நிலையில் இருந்தன. ராகு 10-ம் இடமான கன்னி ராசியில் இருந்து மனைவி வகையில் பிரச்னை, சமுகத்தில் மதிப்பு குறைவு கொடுத்திருப்பார். கேது 4-ம் வீடான மீனத்தில் இருந்து உடல் உபாதை, பிள்ளைகளால் தொல்லை தந்திருப்பார். வாழ்வில் குறுக்கிட்ட பிரச்னைக்கு விடைகொடுக்கும் காலம் இது. இனி மனதிருப்தியுடன் வாழ்வீர்கள். கேது 3-ம் இடமான கும்பத்திற்கு வந்து நன்மையை வாரி வழங்குவார். வாழ்வில் பொன், பொருள் சேரும். உடல் உபாதை நீங்கி குணம் பெறுவீர்கள். ராகு 9-ம் இடமான சிம்மத்திற்கு மாறுவார். இது சிறப்பான இடம் இல்லைஎன்றாலும், கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை இருக்காது. அவ்வப்போது தடைகளை உருவாக்கலாம்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை:  குரு பகவான் கன்னி ராசியில் இருப்பது சிறப்பானது அல்ல. ஆனால் அவரது 5-ம் இடத்து பார்வையால் நன்மை கிடைக்கும். பணப்புழக்கம் இருந்தாலும், குடும்பச் செலவும் அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. முயற்சியில் தடைகள் குறுக்கிட்டு மறையும். முக்கிய விஷயங்களை குடும்ப பெரியவர்களின் ஆலோசனை கேட்டுச் செய்வது நன்மை தரும்.
கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். வீட்டில் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் மகிழ்ச்சி நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபட்டாலும், குருவின் வக்கிர காலமான 7-2-2016 முதல் 20-6-2016 வரைக்குள் சுபவிஷயம் கைகூட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு தலைதுõக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.உறவினர்கள் வகையில் வாக்குவாதம் தவிர்க்கவும்.
பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கான பலனைப் பெறுவதில் தாமதமும் ஏற்படும். பணிச்சுமை காரணமாக சிலர், வகித்து வந்த பொறுப்பை கைவிடும் சூழ்நிலை உருவாகலாம். சிலருக்கு இட மாற்றம் ஏற்படலாம். அதிகாரிகளை அனுசரித்து போகவும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் மார்ச் முதல் ஜுன் வரை முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் அலைச்சலும், பளுவும் இருக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய தொழிலில் இப்போது முதலீடு செய்ய வேண்டாம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை வருமானம் மேம்படும்.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர். எதிர்பார்த்த புதிய பதவி முயற்சியின் பேரில் கிடைக்கும். கேதுவால் வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே வெற்றி காண்பர்.
விவசாயத்தில் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.
பெண்கள் குடும்பநலன் கருதி கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு திருப்தியுடன் பணியாற்றுவர்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  குருபகவான் சாதகமான இடத்தில் இருப்பதால், கடந்த கால பின்தங்கிய நிலை இனி இருக்காது. பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி அனைத்தும் சிறப்பாக முடியும். தடைகளை முறியடித்து எளிதில் வெற்றி காண்பீர்கள். மக்கள் மத்தியில் மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். குடும்பத்தில் வாய்ப்பு வசதி பெருகும். தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும்.பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு கட்டவும், புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்புண்டு. குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
பணியாளர்களுக்கு கடந்த கால பிற்போக்கான நிலை மறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இட,பணி மாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர்.
வியாபாரிகளுக்கு அலைச்சலும், பணிச்சுமையும் இருக்கும். அரசுவகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
கலைஞர்கள் மிகச் சிறப்பான பலன் பெறுவர்.
அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். விவசாயத்தில் ஆதாயம் அதிகரிக்கும். நெல், கோதுமை, மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.
பெண்கள் பிறந்த வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வர்.
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரம் சாத்தி வழிபடுவது நல்லது. பிரதோஷத்தன்று சிவனை வணங்குங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

மகரம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) தனிச்சு நில்லுங்க! துணிச்சலோடு சமாளியுங்க! (55/ 100)

பிறர் மனம் நோகாமல் பேசும் மகர ராசி அன்பர்களே!
இதுவரை ராகு 9-ம் இடமான கன்னி ராசியில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி இருந்தார். எதிரிகள் வகையில் இருந்து இடையூறு வந்திருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளை உருவாக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மீனத்தில் இருந்து இறை அருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். எடுத்த காரியங்களில் வெற்றி பெற்றிருப்பீர்கள். இப்போது அவர் 2-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தருவது சிரமம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. பொருட்கள் திருட்டு போகலாம் என்பதால் கவனமாக இருக்கவும். ஆனாலும், தனித்து நின்று எதையும் துணிச்சலோடு சமாளிக்கும் நீங்கள் இதையெல்லாம் ஊதித் தள்ளி விடுவீர்கள். ராகு-கேது இரண்டு கிரகமுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்களே என்று கவலை கொள்ள வேண்டாம். மற்ற கிரகங்கள் அவ்வப்போது நன்மை தருவார்கள். குருவின் 9-ம் இடத்துப்பார்வை ரிஷபத்தில் விழுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், குழந்தை பாக்கியத்தையும் தருவார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு கேதுவால் உங்களுக்கு பாதிப்பு தான் என்றாலும், அவர்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த காலத்தில் குரு மட்டுமின்றி , சனியும் நற்பலனை தரும் இடத்தில் உள்ளனர். இதனால் பணவிரயம் மறைந்து பொருளாதார வளம் பெருகும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். கடந்த சில மாதங்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். ஆனால், குருவின் வக்கிர காலமான பிப்ரவரி முதல் ஜுன் வரை சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும்.
வியாபாரிகள் கடந்த காலத்தை விட அதிக முன்னேற்றம் காணலாம். தொழில் சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை மார்ச்சுக்குள் தொடங்கினால் நல்ல வளர்ச்சி அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எனினும் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். கவனக்குறைவு ஏற்பட்டால் மேற்கண்ட பலன்கள் கிடைப்பது அடிபட்டு விடும்.
கலைஞர்கள் தெம்புடன் காணப்படுவர்.
அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மாணவர்கள் கடந்த ஆண்டைவிட நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயத்தில் நெல், கோதுமை சோளம், மொச்சை மற்றும் மானாவாரி பயிர்கள் சிறப்பான மகசூல் தரும். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.
பெண்கள் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும்.  2017 ஜனவரி முதல்  ஜூலை வரை: முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாத காலம். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமகலாம்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வளர்ச்சி சீராக இருக்கும்.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டி இருக்கும்.
விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தட்டிபோகும். பக்கத்து நிலத்துகாரரிடம் அனுசரித்து போவது நல்லது.
பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.
பரிகாரம்: ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்யலாம். மேலும் சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம். விநாயகரையும், நரசிம்மரையும் வழிபட்டு வாருங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  மதுரை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில்.

கும்பம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) தடைகளைத் தகர்ப்பீங்க! சாதனை படைப்பீங்க! (60/100)

உழைப்பில் உறுதி மிக்க கும்ப ராசி அன்பர்களே!
ராகு-கேது பெயர்ச்சி சுமாரான பலனையே தரும் என்றாலும், மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ராகு இதுவரை 8-ம் இடமான கன்னி ராசியில் இருந்து முயற்சியில் தடையும், குடும்பத்தில் பிரிவும் ஏற்படுத்தி இருப்பார். உறவினர் வகையிலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகி இருக்கலாம். இப்போது ராகு 7-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இடப்பெயர்ச்சியும், அவப்பெயரும் சந்திக்க நேரலாம். கேது இதுவரை 2-ம் இடமான மீனத்தில் இருந்து பகைவரால் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் போன்றவற்றை ஏற்படுத்தி இருப்பார்.தொழிலதிபர்கள் அரசின் கெடுபிடியால் இன்னலுக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் கேது இப்போது உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல என்றாலும், கெடுபலன் ஓரளவு குறையும். தடைகள் குறுக்கிட்டாலும் குருவின் பார்வை பலத்தால் தடைகளை தகர்த்து வாழ்வில் சாதனை படைப்பீர்கள்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை:  குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப்பார்வையால் மந்த நிலை படிப்படியாக மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு அவ்வப்போது வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். வீண் விவாதம் பேசுவதைத் தவிர்க்கவும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். புதிதாக வீடு-மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூரில் வசிக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
பணியாளர்களுக்கு பணியில் பொறுப்பு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் இட, பணி மாற்றம் ஏற்படலாம்.
வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். புதிய வியாபார முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. தொழில் தொடங்க விரும்பினால், வக்கிர காலத்தில் குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பது நல்லது. பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாமல் போகும். அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநல தொண்டர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ப கல்வி வளர்ச்சி உண்டாகும். குருவின் பார்வையால் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
விவசாயம் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்க்கவும். பிறந்த வீட்டில் இருந்து உதவி அவ்வப்போது கிடைக்கப்
பெறலாம். குடும்ப ஒற்றுமைக்காக கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
2017 ஜனவரி முதல் ஜூலை வரை:  குருபகவான் துலாம் ராசிக்கு வருவதால் சிறப்பான பலன் கிடைக்கும். அவரது 9-ம் இடத்துப் பார்வையால் நன்மை மேலோங்கும். எந்த தடைகளையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் உள்ள கருத்துவேறுபாடு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடி வரும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். சிலர்அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப் படுவர்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.
மாணவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம்.
விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு உண்டாகும்.
பெண்கள் மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும்.
பரிகாரம்: ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுங்கள். பாம்பு புற்றுக் கோவிலுக்குச் சென்று வரலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குவது நல்லது. ஆதரவற்றோருக்கு உதவுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  திருச்செந்துõர் முருகன் கோவில்

மீனம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)


மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) கடனை வாங்குவீங்க! கல்யாணத்தை முடிப்பீங்க! (75/ 100)

எல்லாரிடமும் பாசத்துடன் பழகி மகிழும் மீன ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சியால் முன்னேற்றம் பெறுவீர்கள். இவர்கள் கடந்த காலத்தில் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவை தந்திருப்பார்கள். ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பல்வேறு இன்னல்களை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். மக்கள் மத்தியில் செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இனி பிரச்னை அனைத்தும் நீங்கும். தீயவர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். புதிய முயற்சியில் வெற்றியைக் கொடுப்பார். ராகு நன்மை தரும் போது கேது  நன்மை தர மாட்டார். அவர் இது வரை உங்கள் ராசியில் இருந்து உடல் உபாதை, அரசாங்க வகையில் பிரச்னையைத் தந்திருப்பார். முயற்சியில் தடைகளும் நேர்ந்திருக்கலாம். இப்போது கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கும்பத்திற்குச் செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் கடந்த காலத்தில் இருந்த பிற்போக்கான நிலை மறையும். ஆனால், உடல் உபாதை உருவாகலாம்.
2016 ஜனவரி முதல்  டிசம்பர் வரை:  கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர்கள் விரும்பி வந்து உறவாடுவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நிறைவேறும். அதுவும் மனதிற்குப் பிடித்த வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. சிலர் தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடி புகுவர். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபச்செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும்.
பணியாளர்களுக்கு கடந்தகாலத்தில் இருந்த பின் தங்கிய நிலை மறையும். தன்னம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். படித்து முடித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமைபெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து விருது பெற வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். புதிய பதவியும் கிடைக்கும்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான வளர்ச்சி காணலாம். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பைப் பெறுவர்.
விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சாதகமாக அமையும். ராகுவின் பலன் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சமுக மதிப்பு குறைந்தாலும், குடும்ப மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியிடையே அன்பும், நெருக்கமும் நீடிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பணியாளர்கள் நிர்வாக அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
வியாபாரிகள் உழைப்புக்கேற்ப பலன் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். புதிய தொழில் முயற்சியைத் தற்போது தொடங்க வேண்டாம்.
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெற முடியும்.
மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.
விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயத்தை தவிர்ப்பது அவசியம். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம்.
பரிகாரம்: சனி, கேதுவை வழிபாடு செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கையை வணங்குங்கள். ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்ட பின் சாப்பிடுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் விளக்கேற்றுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer