Friday, 3 July 2015

குரு பெயர்ச்சி பலன் (06.07.15 முதல் 01.08.16 வரை) மிதுனம்



மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) 100/65 (விருந்துக்கு குறைவில்லை விழாக்களுக்கு பஞ்சமில்லை)

கண்ணியமுடன் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ல் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டிருக்கும். பகைவர்களின் சதி தவிடு பொடியாகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து சாதனை படைத்திருப்பீர்கள். பொருளாதார வளம் சேமிக்கும் விதத்தில் கைகொடுத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் முதலிடம் வகித்திருப்பீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மன நிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள். சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். வீடு, மனை வாங்கி இருக்கலாம். இப்போது குருபகவான் 3-ம் இடமான சிம்மத்துக்கு வருகிறார். இதனால், முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள் தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குரு பார்வையால் கோடி நன்மை உண்டாகும். எந்த இடையூறையும் அவரின் பார்வை பலத்தால் தகர்த்தெறிவீர்கள். மொத்தத்தில் சிம்மகுரு நன்மை  தர காத்திருக்கிறார். அதோடு மற்ற கிரகங்களின் நிலையையும் கொண்டு பலனை கணக்கிட வேண்டும். டிச.20ல் குரு, கன்னிராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கு அவர் உறவினர்கள் வகையில் பிரச்னை, வீண்விரோதம் ஏற்படலாம். சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். 5-ம் இடத்தில் சனிபகவான் இருக்கும் போது, பல்வேறு இடையூறுகளைத் தரலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை உருவாகும். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தர மாட்டார். 2015 செப். 5ல் வக்ர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனி பகவான் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அப்போது வழங்குவார்.  மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். செலவுகள் அதிகரித்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் வருமானமும் புதிய வழிகளில் வந்து சேரும். உறவினர் மத்தியில் மரியாதை சுமாராக இருக்கும். வீண் விரோதத்தைத் தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். புதிய தொழில் முயற்சி ஓரளவு கை கொடுக்கும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும், எளிதில் முறியடிப்பீர்கள். தொழில் விஷயமாக வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் உருவாகும். வீட்டுக்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. அனுசரித்து போவது
நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். பணிச்சுமை, அலைச்சல் ஏற்படலாம். தீவிர முயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாராட்டை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள்.

மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல மகசூலைக் காண்பர். குறிப்பாக நெல், சோளம், கேழ்வரகு போன்ற பயிர் வகைகள் மூலம் அதிக வருவாய் காணலாம். சிலர் புதிதாகச் சொத்து வாங்குவர்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வர். மனம் போல புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு
விளக்கேற்றுங்கள். ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யுங்கள். ராகு
காலத்தில் காளிக்கு தீபமிடுங்கள். முருகன் கோவிலில் தரிசனம் செய்து வாருங்கள்.

குரு பெயர்ச்சி பலன் (06.07.15 முதல் 01.08.16 வரை) கடகம்



கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) 100/75 (கிளம்பிட்டார் ஜென்ம குரு தொட்டதெல்லாம் தூள்)

அதிகாரத்திற்கு அடிபணிய மறுக்கும் கடக ராசி அன்பர்களே!

இந்த குரு பெயர்ச்சி உங்களை மேலும் உயர்த்தும். இது வரை குருபகவான் உங்கள் ராசியில் இருந்து சிற்சில சிரமங்களைக் கொடுத்திருப்பார். குறிப்பாக, குடும்பத்தில் குழப்பமும், பிரச்னைகளும் வந்திருக்கும். தொழில், வேலையில் ஏதேனும் ஒரு  பிரச்னையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில், குருபகவான் 2-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்ப்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். இனி தொட்டதெல்லாம் தூள் பறக்கும். 2015 டிசம்பர் 20ல், குரு 3-ம் இடமான கன்னி ராசிக்கு வக்ரமாகி செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும்.சனிபகவான் 2015 ஜூன் 12 அன்று, வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். வக்கிரம் அடைந்து 4-ம் இடத்தில் இருக்கும் சனிபகவான் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம். ஆனால், வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்கள் குறைந்தே இருக்கும். மேற்கண்ட கிரக நிலையின் அடிப்படையில் ஒட்டு மொத்த பலனைப் பார்ப்போம்.
பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்கள் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தொழில் காரணமாக குடும்பத்தை வெளியூர் மாற்ற வேண்டியது இருக்கும். புதிய வீடு
வாகனம் வாங்கலாம்.

தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வருமானம் அதிகரிக்கும்.  எந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவைப் பயன்படுத்தி வருமானத்தை காணலாம்.

பணியாளர்களுக்கு வேலையில் திருப்திகரமான நிலை இருக்கும். பல்வேறு அனுகூலங்களைப் பெறலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் பக்கத் தொழில் செய்து, வருவாயை அதிகரிக்கச் செய்வர். எதிர்பாராத மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வக்கீல்கள், ஆசிரியர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். நல்ல வளத்தையும் அடைவர்.

கலைஞர்கள் புகழும், பாராட்டும் பெறலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிலும் எந்த குறையும் இருக்காது.

மாணவர்கள் கல்வியில் சிறப்பு அடைவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடம் பெறலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல வருவாயோடு மகிழ்வுடன் இருப்பர். மகசூல் அதிகரிக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதியசொத்து வாங்கலாம். கால்நடைத்தொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பம் உங்களால் சிறப்பு அடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருட்கள், சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். ஆனால், மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி அளியுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும். இதன் மூலம் தடையின்றி முன்னேற்றம் அடையலாம்.

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer