Tuesday, 29 November 2016

3 சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பாதாள அறை கண்டுபிடிப்பு

3 சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பாதாள அறை கண்டுபிடிப்பு

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே மலையாண்டவர் கோவிலில் 3 சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த பாதாள அறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.

கோவில் திருப்பணி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே சி.என்.பாளையத்தில் புஷ்பகிரி மலையாண்டவர் கோவில் உள்ளது. இங்கு தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் வழக்கம் போல் கோவிலில் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பூமிக்கடியில் பாதாள அறை இருப்பதை திருப்பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் பார்த்தனர்.

இதையடுத்து ஊர் பொதுமக்கள், திருப்பணி குழுவினர் அந்த பாதாள அறை வழியாக உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்கு அடியில் அழகிய தோற்றத்துடன் ஒரு கட்டிடம் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

ஜீவசமாதி

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் மலையாண்டவர் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.

இதுபற்றி அறிந்த இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்களும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், அந்த அறைக்குள் தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் மட்டும் சென்றனர்.

அந்த அறைக்குள் வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் 3 சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் 3 பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலேயே முக்தி அடைந்திருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பார்க்க அனுமதியில்லை

இதுகுறித்து திருப்பணிக்குழு தலைவர் வைத்திலிங்கம் கூறியதாவது:-

புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெருமைகளை கொண்டதாகும். இந்த கோவிலில் தைப்பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் மீது சூரிய கதிர்கள் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர். வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவச்சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது.

இந்த நிலையில் தற்போது இங்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வரலாற்று தடயங்களும், கி.பி.7-ம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டுவரை இறை உணர்வு நிறைந்த வாழ்க்கையை மேற் கொண்டிருந்த 3 சித்தர்கள் பாதாள அறையில் தியான நிலையில் ஜீவ சமாதியான நிகழ்வு பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது பாதாள அறையை அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, மேலும் பல தகவல்கள் சேகரிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer