Friday, 3 July 2015

குரு பெயர்ச்சி பலன் (06.07.15 முதல் 01.08.16 வரை) கன்னிகன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 100/65 (ஆரம்பத்தை சமாளிச்சுட்டா அப்புறம் சந்தோஷம் தான்)

நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்கும் கன்னி ராசி அன்பர்களே! 

உங்களுக்கு குரு பகவான் இதுவரை 11ல் இருந்து நன்மைகளை வாரி வழங்கினார். பதவி, சம்பள உயர்வு பெற்று மகிழ்ந்திருப்பீர்கள். வேலையில் திருப்தி இருந்திருக்கும். கையில் பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பீர்கள். இப்படி நன்மை அளித்த குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. பொருள் விரயமாகலாம். மனக்குழப்பம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உருவாகலாம். குரு பகவான் கெடு பலனை செய்யும் போது, அது பிரச்னையில் ஆரம்பித்தாலும், இறுதியில் சந்தோஷத்தில் முடியும். ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றே குரு பகவான் செயல்பாடும் அமையும். டிசம்பர் 20ல் குரு பகவான் உங்கள் ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதனால் மந்த நிலை உருவாகும். குருபகவான் சாதகமற்று இருந்தாலும், அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டாகும்.  சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். ஆனால் அவரது 10ம் பார்வை சிறப்பாக இருப்பதால், அதற்கான தீர்வு கிடைக்கும். வாழ்வில் பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். செப்டம்பர் 5ல் வக்ர நிவர்த்தி அடைந்து, விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது நன்மை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி இருந்தாலும், திடீர் செலவுகளைத் தவிர்க்க முடியாது. எந்த ஒரு விஷயத்திலும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கம். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். தேவையற்ற வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தேவைகள் நல்ல முறையில் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு மலரும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உருவாகும். பிள்ளைகளாலும் பிரச்னையைச் சந்திக்கலாம். அதிக முயற்சி எடுத்தால் புதியமனை வாங்கவோ, வீடு கட்டவோ முடியும். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும்.

தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதேநேரம் நிர்வாகச் செலவு அதிகரிக்க நேரிடும். செப்டம்பர் வரை தொழிலில் பிரச்னை உருவாகலாம். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உண்டாகும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். விரிவாக்கப்பணி, புதிய முயற்சி ஏதும் தற்போது வேண்டாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை சிறக்கும்.

பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இட, பணி மாற்றத்தைச் சந்திப்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் நாளடைவில் நன்மையாக மாறும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள் சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு வர வேண்டிய விருது போன்றவை தட்டி பறிக்கப்படலாம். அதே நேரம் பண விஷயத்தில் எந்த பின்னடைவும் உண்டாகாது.

அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். பொருளாதார வளம் சிறக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைக்காது.

மாணவர்கள் இந்த ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மையளிக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர விடாமுயற்சி தேவைப்படும்.

விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். ஆனால், அதிக உடல் உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். அதிக பணச்செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். கூலி வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வழக்கு, விவகாரத்தில் எதிர்பார்த்தது நடக்க வாய்ப்பில்லை.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அதே நேரம் குடும்ப நன்மைக்காக விட்டுக் கொடுத்து போவது நல்லது.

பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நவக்கிரக வழிபாடு செய்யவும். ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள். ராமநாமத்தை ஜெபியுங்கள். கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள்.

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer