Wednesday, 17 December 2014

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி

1.
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
      புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
      எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

                போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !
பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு அதுபோன்ற
மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில்
எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக்
கண்டு, அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான
வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சேறு - கள்/ தேன்; ஏறு - இடபம்.


2.
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
      அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
      கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !

                அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில்
விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன்
எழுவதால் உதயமாகின்றது. கண்களைப் போன்ற மணமுள்ள
மலர்கள் மலர்கின்றன. மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி
போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில்
வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் ! அருளாகிய செல்வத்தைத்
தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே ! (ஓயாது வந்துகொண்டிருக்கின்ற)
அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க !

அருணன் - சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன்
தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்); இந்திரன் திசை - கிழக்கு;
நயனம் - கண்; கடி - மணம்; அறுபதம் - வண்டு.

3.
கூவின பூங்குயில்; கூவின கோழி;
      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
      ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

                குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;
சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி
மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல
செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் ! திருப்பெருந்துறை
வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்;
ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.

4.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
     இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

                ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும்,
    (விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

5.
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
      போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
      கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
      சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

                "பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,
இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை" என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை
நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை ! குளிர்ந்த வயல்களுடைய
திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்
நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.

6.
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
      பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
      வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
      திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !

                விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),
வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய
கட்டுக்களை அறுத்தனர். அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய
பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் (காதலனாக),
(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற
(இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச்
சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.

7.
"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

                "அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

ஆறு - வழி.

8.
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

                முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !
பள்ளி எழுந்தருள்க !

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !

                விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

10.
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

                "இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !


புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.



                                திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer