Thursday, 27 August 2015

ஓணம் பண்டிகை



கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. "அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை' என்பது சொல்வழக்கு.
ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து தீபாவளி போன்றே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர்.

மகாபலி மன்னனும் வாமனனும்
ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னாக பிறந்து சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தான்.
மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் எந்த துன்பமும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியைக் கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால்.
அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன் மகாபலியின் அரண்மனைக்குச் சென்று தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம்தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார். இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன் குரு சொன்னதை கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற மகாபலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான்.
அந்த சமயத்தில் மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார். அப்படி தன் மக்களை காண மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவே மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
ஓண சத்ய விருந்து
ஓண சத்ய எனப்படும் ஓணவிருந்தில் பரிமாறப்படும் பலகார வகைகளை கேட்டாலே வயிறு நிறைந்து விடும். கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கரி ஆகியவற்றை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் வைத்து உண்ணுவார்கள். பின்னர் சாம்பார் சேர்த்து உண்டபின் பிரதமன் எனப்படும் பாயசாத்தை ஒரு பிடி பிடிப்பார்கள். பின் புளுசேரி கூட்டி, இன்னொரு சுவை, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் வயிறு நிறைந்துவிடும்.
கும்மி கொட்டி விளையாட்டு
விருந்துண்ட பின்பு பெண்கள் ஓணம் சேலை கட்டிக்கொண்டு கோலத்தை சுற்றி கும்மி கொட்டுவர். பின்னர் வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியுடன் ஓணத்தை கொண்டாடுகின்றனர். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு மீண்டும் பாதள லோகம் செல்கின்றார் என்பது புராணகதை.
புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கேரளம் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. மலையாள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் இது கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer