விநாயகர் சதுர்த்தி வரலாறு!
முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று, தமிழகத்தில் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரின் சிலைகளை வைத்து பூஜை செய்கிறார்கள். பிள்ளையாருக்குப் பிடித்தமானது கொழுக் கட்டை எனப்படும் மோதகம். விநாயக சதுர்த்தியன்று இந்த மோதகத்தை தயாரித்து, அதனுடன் பல்வேறு இனிப்புப் பண்டங்களையும் நவேதனமாகப் படைப்பார்கள்.
பொது இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் விநாயகரின் பெரிய சிலைகளை பொது இடங்களில் வைத்து பூஜை செய்கிறார்கள். தானியங்கள், அருகம்புல் உள்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் மிகப் பெரிய சிலைகள் கருத்தைக் கவரும்.
விழாவின் கடைசி நாளான ஆனந்த சதுர்த்தசியன்று, இச்சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ பெரிய நீர் நிலைகளிலோ கரைப்பார்கள். விநாயக சதுர்த்தி நம் நாட்டின் பல பாகங்களில் பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. உத்திர பிரதேசத்தில் பெண்கள் விரதம் இருந்து சந்திரனைப் பார்த்த பிறகே சாப்பிடுகிறார்கள். கர்நாடகத்தில் இது கௌரி கணேசஹப்ப என்று கொண்டாடப்படுகிறது. வழிபாட்டு முறைகளில் மிகச் சிறிய வேறுபாடுகளைத் தவிர, நாடு முழுவதும் படையல்கள் மற்றும் ஊர்வலங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.
பிள்ளையாருக்கு யானைத்தலை எப்படி வந்தது என்று தெரியுமா? பார்வதிதேவி களி மண்ணால் ஒரு சிறுவனின் உருவத்தைச் செய்து வாசலில் நிறுத்தி, அதனிடம் நான் குளிக்க உள்ளே போகிறேன். யார் வந்தாலும் வீட்டிற்குள் விடாதே எனக் கூறி விட்டுச் சென்றார். சற்று நேரத்திற்குப் பின் சிவபிரான் வரவே, களிமண்ணாலான அச்சிறுவன் அவரைத் தடுத்து உள்ளே போக விடவில்லை.
அதனால் கோபம் கொண்ட சிவபிரான் அச்சிறுவனின் தலையைக் கிள்ளி எறிந்து விட்டார். குளித்து விட்டு வந்த பார்வதி தான் காவலுக்கு வைத்த சிறுவன் தலை இல்லாது இருப் பதைக் கண்டு கண்ணீர் வடித்தார். உடனே வடக்கே தலை வைத்து உறங்கும் விலங்கின் தலையைக் கொண்டு வர உத்தரவிட்டார் சிவபிரான். ஆனால் யானை மட்டுமே வடக்கில் தலை வைத்து படுத்திருந்ததால், அதன் தலையைக் கொண்டு வந்து பிள்ளையாருக்குப் பொருத்தி உயிர்பெறச் செய்தனர்.
பிள்ளையாரின் தலை பற்றிய இன்னொரு கதை இது. பார்வதி விநாயகரைப் பெற்றதும், தன் குழந்தையை ஆசீர்வதிக்கும்படி அனைத்து தேவ, தேவதைகளுக்கும் அழைப்பை அனுப்பினாராம். தேவர்கள் வந்து பிள்ளையாரை ஆசீர்வதித்தார்கள். ஆனால் சனீஸ்வரன் மட்டும் வரவில்லை. பார்வதி அவரை வரவழைத்து தன் மகனைக் கண்டு ஆசீர்வதிக்கும்படிக் கூறவே அவரோ நான் யாரைப் பார்த்தாலும் அவரது தலை வெடித்துவிடும். அப்படி ஒரு சாபம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் உங்கள் மகனைக் கண்டு ஆசி கூற முடியாதுஎன்றார்.
பார்வதியோ அதெல்லாம் இல்லை. நீங்கள் என் மகனைப் பார்த்து ஆசீர்வதியுங்கள் என்றாள். அவரும் வேறு வழியின்றி பிள்ளையாரைப் பார்த்தார். மறு விநாடியே பிள்ளையாரின் தலை வெடித்து சுக்கு நூறாகியது. அதனால் பிள்ளையாருக்கு யானையின் தலை பொருத்தப்படவே பார்வதிதேவி ஆறுதல் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.
இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு: முல்லை இலை பலன்: அறம் வளரும்
கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
வில்வம் இலை பலன்: இன்பம், ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
அறுகம்புல் பலன்:அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
இலந்தை இலை பலன்:கல்வியில் மேன்மையை அடையலாம்.
ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்
தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது.
சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
No comments:
Post a Comment