Thursday 4 June 2015

2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்



2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

மூவரும் சபரங்கன் தவக்குடில் அடைதல்

குரவம், குவி கோங்கு, அலர் கொம்பினொடும்,
இரவு, அங்கண், உறும் பொழுது எய்தினரால்-
சரவங்கன் இருந்து தவம் கருதும்,
மரவம் கிளர், கோங்கு ஒளிர், வாச வனம். 1

வந்தனன் வாசவன்

செவ் வேலவர் சென்றனர்; சேறல் உறும்
அவ் வேலையின் எய்தினன்-ஆயிரமாம்,
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர், கண்ணினன், விண்ணவர் கோன். 2

அன்னச் செலவின், படிமேல், அயல் சூழ்
பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளிமேல்
மின்னின் செறி கற்றை விரிந்தனபோல்,
பின்னிச் சுடரும், பிறழ், பேர் ஒளியான்; 3

வானில் பொலி தோகையர் கண்மலர் வண்
கானில் படர் கண்-களி வண்டொடு, தார்
மேனித் திரு நாரதன் வீணை இசைத்
தேனில் படியும் செவி வண்டு உடையான்; 4

அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும், நூல்
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன்; முது தேவரில் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலங் கழலான்; 5

செம் மா மலராள் நிகர் தேவியொடும்,
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள்
வெம் மா மிசையான்; விரி வெள்ளி விளங்கு
அம் மா மலை அண்ணலையே அனையான்; 6

தான், இன்று அயல் நின்று ஒளிர் தண் கதிரோன்,
'யான் நின்றது என்?' என்று, ஒளி எஞ்சிட, மா
வான் நின்ற பெரும் பதம் வந்து, உரு ஆய்
மேல் நின்றென, நின்று ஒளிர் வெண் குடையான்; 7

திசை கட்டிய மால் கரி தெட்ட மதப்
பசை கட்டின, கிட்டின பற்பல போர்
விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர்
இசை கட்டிய ஒத்து இவர், சாமரையான்; 8

தேரில் திரி செங் கதிர் தங்குவது ஒர்
ஊர் உற்றது எனப் பொலி ஒண் முடியான்;
போர் வித்தகன்; நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான்; 9

செற்றி, கதிரின் பொலி செம் மணியின்
கற்றைச் சுடர் விட்டு எரி கஞ்சுகியான்;
வெற்றித் திருவின் குளிர் வெண் நகைபோல்
சுற்றிக் கிளரும் சுடர் தோள்வளையான்; 10

பல் ஆயிரம் மா மணி பாடம்உறும்
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகைதாம்
எல்லாம் உடன் ஆய் எழலால், ஒரு தன்
வில்லால், ஒளிர் மேகம் எனப் பொலிவான்; 11

மானா உலகம்தனில், மன்றல் பொரும்,
தேன் நாறு, நலம் செறி, தொங்கலினான்;
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம்
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான்; 12

வெல்லான் நசையால், விசையால், விடு நாள்,
எல் வான் சுடர் மாலை இராவணன்மேல்,
நெல் வாலும் அறாத, நிறம் பிறழா,
வல் வாய் மடியா, வயிரப் படையான்;- 13

இந்திரனை சரபங்கன் வரவேற்றல்

நின்றான். எதிர் நின்ற நெடுந் தவனும்
சென்றான், எதிர்கொண்டு; சிறப்பு அமையா,
'என்தான் இவண் எய்தியவாறு?'எனலும்,
பொன்றாத பொலங் கழலோன் புகலும்: 14

"நின்னால் இயல் நீதி நெடுந் தவம், இன்று,
என்னானும் விளம்ப அரிது" என்று உணர்வான்
அந் நான்முகன், நின்னை அழைத்தனனால்;
பொன் ஆர் சடை மாதவ! போதுதியால்; 15



'எந்தாய்! உலகு யாவையும் எவ் உயிரும்
தந்தான் உறையும் நெறி தந்தனனால்;
நந்தாத பெருந் தவ! நாடுஅது நீ
வந்தாய்எனின், நின் எதிரே வருவான்; 16

'எல்லா உலகிற்கும் உயர்ந்தமை, யான்
சொல்லாவகை, நீ உணர் தொன்மையையால்;
நல்லாளுடனே நட, நீ' எனலும்,
'அல்லேன்' என, வால் அறிவான் அறைவான்: 17

'சொல் பொங்கு பெரும் புகழோடு! தொழில் மாய்
சிற்பங்களின் வீவன சேர்குவெனோ?
அற்பம் கருதேன்; என் அருந் தவமோ
கற்பம் பல சென்றது; காணுதியால்; 18

'சொற்றும் தரம் அன்று இது; சூழ் கழலாய்!
பெற்றும், பெறுகில்லது ஓர் பெற்றியதே
மற்று என் பல? நீ இவண் வந்ததனால்,
முற்றும் பகல்தானும் முடிந்துளதால்; 19

'சிறு காலை இலா, நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம் வேறுபடா,
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா, நெறி எய்துவென்;- வான் உடையாய்!' 20

என்று, இன்ன விளம்பிடும் எல்லையின்வாய்,
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா,
ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார்,
நின்று, 'என்னைகொல் இன்னது?' எனா நினைவார்: 21

'கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிரக்
கம்பக் கரி நின்றது கண்டனமால்;
இம்பர், தலை மா தவர்பால், இவன் ஆம்
உம்பர்க்கு அரசு எய்தினன்' என்று உணரா, 22

மானே அனையாளொடு மைந்தனை அப்
பூ நேர் பொழிலின் புறமே நிறுவா,
ஆன்ஏறு என, ஆள் அரிஏறு இது என,
தானே அவ் அகன் பொழில் சாருதலும், 23

இந்திரன் துதி

கண்தாம் அவை ஆயிரமும் கதுவ,
கண் தாமரைபோல் கரு ஞாயிறு எனக்
கண்டான், இமையோர் இறை- காசினியின்
கண்தான், அரு நான்மறையின் கனியை. 24

காணா, மனம் நொந்து கவன்றனனால்,
ஆண் நாதனை, அந்தணர் நாயகனை,
நாள் நாளும் வணங்கிய நன் முடியால்,
தூண் ஆகிய தோள்கொடு, அவன்-தொழுவான், 25

துவசம் ஆர் தொல் அமருள், துன்னாரைச் செற்றும்,
    சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும்,
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும்,
    திரு அளித்தும், வீடு அளித்தும், சிங்காமைத் தங்கள்
கவசம் ஆய், ஆர் உயிர் ஆய், கண் ஆய், மெய்த் தவம் ஆய்,
    கடை இலா ஞானம் ஆய், காப்பானைக் காணா,
அவசம் ஆய், சிந்தை அழிந்து, அயலே நின்றான்,
    அறியாதான் போல, அறிந்த எலாம் சொல்வான்: 26

'தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற
    சுடரே! தொடக்கு அறுத்தோர் சுற்றமே! பற்றி
நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம்
    நிலயமே! வேதம் நெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே! பகையால்
    அலைப்புண்டு அடியேம் அடி போற்ற, அந் நாள்
ஈந்த வரம் உதவ எய்தினையே? எந்தாய்!
    இரு நிலத்தவோ, நின் இணை அடித் தாமரைதாம்? 27

'மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை;
    வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;
மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை;
    முதல் இடையொடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;
தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால்,
    சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,
காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே;
    கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ ? 28

'நாழி, நரை தீர் உலகு எலாம் ஆக,
    நளினத்து நீ தந்த நான்முகனார்தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால், என்றும்
    உலவாப் பெருங் குணத்து எம் உத்தமனே! மேல்நாள்,
தாழி தரை ஆக, தண் தயிர் நீர் ஆக,
    தட வரையே மத்து ஆக, தாமரைக் கை நோவ
ஆழி கடைந்து, அமுதம் எங்களுக்கே ஈந்தாய்;
    -அவுணர்கள்தாம்நின் அடிமை அல்லாமை உண்டோ ? 29

'ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி,
    உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி
சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி,
    திறத்து உலகம்தான் ஆகி, செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே! எங்கள்
    நவை தீர்க்கும் நாயகமே! நல் வினையே நோக்கி
நின்றாரைக் காத்தி; அயலாரைக் காய்தி;
    நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே? 30

'வல்லை வரம்பு இல்லாத மாய வினைதன்னால்
    மயங்கினரோடு எய்தி, மதி மயங்கி, மேல்நாள்,
"அல்லை இறையவன் நீ ஆதி" என, பேதுற்று
    அலமருவேம்; முன்னை அறப் பயன் உண்டாக,
"எல்லை வலயங்கள் நின்னுழை" என்று, அந் நாள்
    எரியோனைத் தீண்டி, எழுவர் என நின்ற
தொல்லை முதல் முனிவர், சூளுற்ற போதே,
    தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ? -எந்தாய்!' 31

இன்னன பல நினைந்து, ஏத்தினன் இயம்பா,
துன்னுதல் இடை உளது என நனி துணிவான்,
தன் நிகர் முனிவனை, 'தர விடை' என்னா,
பொன் ஒளிர் நெடு முடிப் புரந்தரன் போனான். 32

மூவரும் சரபங்கன் தவக்குடில் சேர்தல்

போனவன் அக நிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான்;
ஆனவன் அடி தொழ, அருள் வர, அழுதான்
தானுடை இட வகை தழுவினன், நுழைவான். 33

'ஏழையும் இளவலும் வருக' என, இனிதா
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால்,
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக,
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான். 34

அவ் வயின், அழகனும் வைகினன் -அறிஞன்
செவ்விய அற உரை செவிவயின் உதவ,
நவ்வியின் விழியவளொடு, நனி இருளைக்
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின். 35

விலகிடு நிழலினன், வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன், இசையன திசை தோய்,
அலகிடல் அரிய, தன் அவிர் கர நிரையால்,
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான். 36

சரபங்கன் உயர்பதம் அடைதல்

ஆயிடை, அறிஞனும், அவன் எதிர் அழுவத்
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்,
'நீ விடை தருக' என நிறுவினன், நெறியால்,
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான். 37

வரி சிலை உழவனும், மறை உழவனை, 'நீ
புரி தொழில் எனை? அது புகலுதி' எனலும்,
'திருமகள் தலைவ! செய் திருவினை உற, யான்
எரி புக நினைகுவென்; அருள்' என, இறைவன்: 38


'யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ?-
மான் வரு தனி உரி மார்பினை!' எனலும்,
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன்
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான்: 39

'ஆயிர முகம் உள தவம் அயர்குவென், யான்;
"நீ இவண் வருகுதி" எனும் நினைவு உடையேன்;
போயின இரு வினை; புகலுறு விதியால்
மேயினை; இனி ஒரு வினை இலை;-விறலோய்! 40

'இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா
வந்தனன், "மருவுதி மலர் அயன் உலகம்;
தந்தனென்" என, 'அது சாரலென்,-உரவோய்!-
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன். 41

'ஆதலின், இது பெற அருள்' என உரையா,
காதலி அவளொடு கதழ் எரி முழுகி,
போதலை மருவினன், ஒரு நெறி-புகலா
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன். 42

தேவரும், முனிவரும், உறுவது தெரிவோர்,
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர்,
ஏவரும், அறிவினில் இரு வினை ஒருவி,
போவது கருதும் அவ் அரு நெறி புக்கான். 43

அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிதுஎனின், இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ? 44

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer