Friday, 28 August 2015

04. மராமரப் படலம்

04. மராமரப் படலம்


சுக்கிரீவன் இராமனை ஏழு மராமரங்களுள் ஒன்றை ஓர் அம்பினால் எய்ய வேண்டுதல்

'ஏக வேண்டும் இந் நெறி' என, இனிது கொண்டு ஏகி,
'மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ, நின் அம்பு
போகவே, என் தன் மனத்து இடர் போம்' எனப் புகன்றான். 1

இராமன் வில்லை நாணேற்றி, மராமரங்களின் அருகே செல்லுதல்

மறு இலான் அது கூறலும், வானவர்க்கு இறைவன்,
முறுவல் செய்து, அவன் முன்னிய முயற்சியை உன்னி,
எறுழ் வலித் தடந் தோள்களால் சிலையை நாண் ஏற்றி,
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று, அணைந்தான். 2


மராமரங்கள் நின்ற காட்சி

ஊழி பேரினும் பேர்வில; உலகங்கள் உலைந்து
தாழும் காலத்தும், தாழ்வில; தயங்கு பேர் இருள் சூழ்
ஆழி மா நிலம் தாங்கிய அருங் குலக் கிரிகள்
ஏழும், ஆண்டுச் சென்று ஒரு வழி நின்றென, இயைந்த; 3

கலை கொண்டு ஓங்கிய மதியமும், கதிரவன் தானும்,
'தலைகண்டு ஓடுதற்கு அருந் தவம் தொடங்குறும் சாரல்
மலை கண்டோ ம்' என்பது அல்லது, மலர்மிசை அயற்கும்,
'இலை கண்டோ ம்' என, தெரிப்ப அருந் தரத்தன ஏழும்; 4

ஒக்க நாள் எலாம் உழல்வன, உலைவு இல ஆக,
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் -
திக்கும், வானமும், செறிந்த அத் தரு நிழல் சீதம்
புக்கு நீங்கலின், தளர்வு இல், இரவி தேர்ப் புரவி; 5

நீடு நாள்களும், கோள்களும், என்ன, மேல் நிமிர்ந்து
மாடு தோற்றுவ மலர் எனப் பொலிகின்ற வளத்த;
ஓடு மாச் சுடர் வெண் மதிக்கு, உட்கறுப்பு, உயர்ந்த
கோடு தேய்த்தலின், களங்கம் உற்ற ஆம் அன்ன குறிய; 6

தீது அறும் பெருஞ் சாகைகள் தழைக்கின்ற செயலால்
வேதம் என்னவும் தகுவன; விசும்பினும் உயர்ந்த
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின், அங்கு அவன் ஊர்
ஓதிமம், தனிப் பெடையொடும் புடை இருந்து உறைவ. 7

நாற்றம் மல்கு போது, அடை, கனி, காய், முதல் நானா
வீற்று, மண்தலத்து யாவையும் வீழ்கில, யாண்டும்
காற்று அலம்பினும்; கலி நெடு வானிடைக் கலந்த
ஆற்றின் வீழ்ந்து போய், அலை கடல் பாய்தரும் இயல்ப; 8

அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால்
முடியின்மேல் சென்ற முடியன ஆதலின், முடியா
நெடிய மால் எனும் நிலையன; நீரிடைக் கிடந்த
படியின்மேல் நின்ற மேரு மால் வரையினும், பரிய; 9

வள்ளல் இந்திரன் மைந்தற்கும், தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என, ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய;
தெள்ளு நீரிடைக் கிடந்த பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர; 10

சென்று திக்கினை அளந்தன, பணைகளின்; தேவர்,
'என்றும் நிற்கும்' என்று இசைப்பன; இரு சுடர் திரியும்
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன; ஒன்றினும் குறுகா;
ஒன்றினுக்கு ஒன்றின் இடை, நெடிது யோசனை உடைய. 11

இராமன் அம்பு எய்தல்

ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று, அமலன்,
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற,
சேய வானமும், திசைகளும், செவிடு உற, தேவர்க்கு
ஏய்வு இலாதது ஓர் பயம் வர, சிலையின் நாண் எறிந்தான். 12

ஒக்க நின்றது, எவ் உலகமும் அங்கு அங்கே ஓசை;
பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ?
திக்கயங்களும் மயங்கின; திசைகளும் திகைத்த;
புக்கு, அயன் பதி சலிப்புற ஒலித்தது, அப் பொரு வில். 13

அரிந்தமன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும், அமரர்
இரிந்து நீங்கினர், கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார்;
பரிந்த தம்பியே பாங்கு நின்றான்; மற்றைப் பல்லோர்
புரிந்த தன்மையை உரைசெயின், பழி, அவர்ப் புணரும். 14

'எய்தல் காண்டும்கொல், இன்னம்?' என்று, அரிதின் வந்து எய்தி,
பொய் இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில்,
மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி,
வெய்ய வாளியை, ஆளுடை வில்லியும், விட்டான். 15

ஏழு மா மரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது, அவ் இராகவன் பகழி;
ஏழு கண்டபின், உருவுமால்; ஒழிவது அன்று, இன்னும். 16




அம்பு எய்தமையால் உலகில் உண்டான அச்சம்

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்,
ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி
ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப -
'ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்?' என்று எண்ணி. 17

அன்னது ஆயினும், அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன்
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும், எவையும்;
பொன்னின் வார் கழல் புது நறுந் தாமரை பூண்டு,
சென்னிமேல் கொளூஉ அருக்கன் சேய், இவை இவை செப்பும்: 18

சுக்கிரீவன் இராமனைப் புகழ்ந்துரைத்தல்

'வையம் நீ! வானும் நீ! மற்றும் நீ! மலரின்மேல்
ஐயன் நீ! ஆழிமேல் ஆழி வாழ் கையன் நீ!
செய்ய தீ அனைய அத் தேவும் நீ! நாயினேன்,
உய்ய வந்து உதவினாய், உலகம் முந்து உதவினாய்! 19

'என் எனக்கு அரியது, எப் பொருளும் எற்கு எளிது அலால்?
உன்னை இத் தலை விடுத்து உதவினார், விதியினார்;
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான்;
மன்னவர்க்கு அரச!' என்று உரைசெய்தான் - வசை இலான். 20

வானர வீரர்களின் மகிழ்ச்சி

ஆடினார்; பாடினார்; அங்கும் இங்கும் களித்து
ஓடினார்; உவகை இன் நறவை உண்டு உணர்கிலார்;-
'நேடினாம் வாலி காலனை' எனா, நெடிது நாள்

வாடினார் தோள் எலாம் வளர, மற்று அவர் எலாம். 21

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer