Friday, 28 August 2015

12. தானை காண் படலம்

12. தானை காண் படலம்


சேனைத் தலைவர் தம் பெருஞ் சேனையுடன் வந்து சேர்தல்

அன்று அவண் இறுத்தனர்; அலரி கீழ்ட்டிசைப்
பொன் திணி நெடு வரை பொலிவுறாதமுன்,
வன் திறல் தூதுவர் கொணர, வானரக்
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம்; 1

ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த
வானராதிபர் ஆயிரர் உடன் வர, வகுத்த
கூனல் மாக் குரங்கு - இரண்டு ஆயிர கோடித்
தானையோடும், - அச் சதவலி என்பவன் - சார்ந்தான். 2

ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை,
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான், வந்து - சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல். 3

ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்
சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை
ஆறு - எண் ஆயிர கோடி அது உடன் வர, - அமிழ்தம்
மாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் - வந்தான். 4

ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த,
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப, -
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி - கடல் என நடந்தான். 5

மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின, வயிரத்
திண் கொள் மால் வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு, - எறுழ் வலித் தூமிரன் - இறுத்தான். 6

முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும்,
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும்,
இனிய மாக் குரங்கு ஈர் - இரண்டு ஆயிர கோடி
அனிகம் முன் வர, -ஆன் பெயர்க் கண்ணன் - வந்து அடைந்தான். 7

தனி வரும் தடங் கிரி எனப் பெரியவன், சலத்தால்
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்குறும் நிலையன்,
பனசன் என்பவன் - பன்னிரண்டு ஆயிர கோடிப்
புனித வெஞ் சின வானரப் படை கொடு - புகுந்தான். 8

இடியும், மாக் கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும்
முடிவு இல் பேர் உறுக்கு உடையன, விசையன, முரண்,
கொடிய கூற்றையும் ஒப்பன, பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படை கொண்டு புகுந்தனன் - நீலன். 9

மா கரத்தன, உரத்தன, வலியன, நிலைய,
வேகரத்து, வெங் கண் உமிழ் வெயிலன, மலையின்
ஆகரத்தினும் பெரியன, ஆறு - ஐந்து கோடி
சாகரத்தொடும் - தரீமுகன் என்பவன் - சார்ந்தான். 10

இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க,
முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும்,
விளைத்த வெஞ் சினத்து, அரி இனம் வெருவுற விரிந்த
அளக்கரோடும், -அக் கயன் என்பவனும்-வந்து அடைந்தான். 11

ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த
பாயிரப் பெரும் படை கொண்டு, பரவையின் திரையின்
தாய், உருத்து உடனே வர - தட நெடு வரையை
ஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும்,-வந்து இறுத்தான். 12

வகுத்த தாமரை மலர் அயன், நிசிசரர் வாழ்நாள்
உகுத்த தீவினை பொருவரும் பெரு வலி உடையான்,
பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி
தொகுத்த கோடி வெம் படை கொண்டு,-துன்முகன்-தொடர்ந்தான். 13

இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி
உயர்ந்த வெஞ் சின வானரப் படையொடும், ஒருங்கே,-
சயம் தனக்கு ஒரு வடிவு எனத் திறல் கொடு தழைத்த
மயிந்தன் - மல் கசகோமுகன் தன்னொடும், வந்தான். 14

கோடி கோடி நூறாயிரம் எண் எனக் குவிந்த
நீடு வெஞ் சினத்து அரி இனம் இரு புடை நெருங்க,
மூடும், உம்பரும், இம்பரும், பூழியில் மூழ்க,-
தோடு இவர்ந்த தார்க் கிரி புரை துமிந்தனும்-தொடர்ந்தான். 15

கறங்கு போல்வன, காற்றினும் கூற்றினும் கடிய,
பிறங்கு தெண் திரைக் கடல் புடைபெயர்ந்தெனப் பெயர்வ,
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த,
திறம்கொள், வெஞ் சினப் படைகொடு,-குமுதனும்-சேர்ந்தான். 16

ஏழின் ஏழு நூறாயிர கோடி என்று இசைந்த
பாழி நல் நெடுந் தோள் கிளர் படை கொண்டு, பரவை
ஊழி பேரினும் உலைவில, உலகினில் உயர்ந்த
பூழி விண் புக,-பதுமுகன் என்பவன்-புகுந்தான். 17

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும், தாழ்வு இலாத் தட வரைக் குலங்கள்
சூழும் தோற்றத்த, வலி கொள் தொள்ளாயிரகோடிப்
பாழி வெம் புயத்து அரியொடும்,-இடபனும்-படர்ந்தான். 18




தீர்க்கபாதனும், வினதனும், சரபனும், - திரைக்கும்
மால் கருங் கடற்கு உயர்ந்துள மைம் முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ண அருங் கோடி கொண்டு, அண்டமும் புறமும்,
போர்க்கும் பூழியில் மறைதர, - முறையினின் புகுந்தார். 19

கை நஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும்
மெய் அஞ்சாதவன், மாதிரம் சிறிது என விரிந்த
வையம் சாய்வரத் திரிதரு வானரச் சேனை
- அஞ்சு ஆயிர கோடி கொண்டு, அனுமன் வந்து அடைந்தான். 20

நொய்தின் கூடிய சேனை, நூறாயிரகோடி
எய்த, தேவரும், 'என்கொலோ முடிவு?' என்பது எண்ண,
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்குற்று மயங்க,-
தெய்வத் தச்சன் மெய்த் திரு நெடுங் காதலன்-சேர்ந்தான். 21

கும்பனும், குலச் சங்கனும், முதலினர், குரங்கின்
தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை,
இம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது, இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய; மற்று உரைப்பு அரிது அளவே. 22

வானர சேனைகளின் ஆற்றலும், சிறப்பும்

தோயின், ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;
சாயின், அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்;
ஏயின், மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்;
காயின், வெங் கனல்-கடவுளும் இரவியும் கரியும். 23

எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின், அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்குறின், கண்ணுதலானுக்கும் கதுவா, -
மண்ணின்மேல் வந்த வானர சேனையின் வரம்பே! 24

ஒடிக்குமேல், வட மேருவை வேரொடும் ஒடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல், பெருங் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். 25

ஆறு பத்து எழு கோடியாம், வானரர்க்கு அதிபர்,
கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்,
மாறு இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர், -
ஊறும் இப் பெருஞ் சேனை கொண்டு-எளிதின் வந்துற்றார். 26

வானரத் தலைவர்கள் வந்து சுக்கிரீவனை வணங்குதல்

ஏழு மாக் கடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச்
சூழும் வானரப் படையொடு, அத் தலைவரும் துவன்றி,
'ஆழி மாப் பரித் தேரவன் காதலன் அடிகள்
வாழி! வாழி!' என்று உரைத்து, அலர் தூவினர், வணங்கி. 27

இராமனை சேனையைக் காணுமாறு சுக்கிரீவன் வேண்டுதல்

அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும், அருக்கன்
தனையன், நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்;
'நினையும் முன்னம் வந்து அடைந்தது, நின் பெருஞ் சேனை;
வினையின் கூற்றுவ, கண்டருள், நீ' என விளம்ப, 28

சேனை காண இராமன் ஓர் மலைச்சிகரத்தில் ஏறுதல்

ஐயனும் உவந்து, அகம் என முகம் மலர்ந்தருளி,
தையலாள் வரக் கண்டனன் ஆம் எனத் தளிர்ப்பான்,
எய்தினான், அங்கு ஓர் நெடு வரைச் சிகரத்தின் இருக்கை;
வெய்யவன் மகன், பெயர்த்தும், அச் சேனையின் மீண்டான். 29

சேனையை ஒழுங்காகச் செல்ல உத்தரவிட்டு, சேனைத் தலைவர்களுடன் சுக்கிரீவன் இராமனை அடைதல்

அஞ்சொடு -இரண்டு யோசனை அகலத்தது ஆகி,
செஞ்செவே வட திசைநின்று தென் திசைச் செல்ல,
எஞ்சல் இல் பெருஞ் சேனையை, 'எழுக' என ஏவி,
வெஞ் சினப் படை வீரரை உடன் கொண்டு மீண்டான். 30

சுக்கிரீவன் வந்த படைகளை இராமனுக்கு வரன்முறை காட்டுதல்

மீண்டு, இராமனை அடைந்து, 'இகல் வீரருள் வீர!
காண்டி, நீ' என, வரன்முறை தெரிவுறக் காட்டி,
ஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே,
ஈண்டு சேனை, பால் எறி கடல் நெறி படர்ந்தென்ன. 31

வானரப் படையின் பெருக்கம்

எட்டுத் திக்கையும், இரு நிலப் பரப்பையும், இமையோர்
வட்ட விண்ணையும், மறி கடல் அனைத்தையும், மறையத்
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி,
அட்டிச் செம்மிய நிறை குடம் ஒத்தது, இவ் அண்டம். 32

அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்;
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ?
பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்,
எத் திறத்தினும் நடுவு கண்டிலர், முடிவு எவனோ? 33

படையைப் பெருக்கம் குறித்து இராம இலக்குவர் உரையாடல்

விண்ணின், தீம்புனல் உலகத்தின், நாகரின், வெற்றி
எண்ணின், தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன்,
கண்ணின், சிந்தையின், கல்வியின், ஞானத்தின், கருதி,
அண்ணல்-தம்பியை நோக்கினன், உரைசெய்வதானான்: 34

'அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு, நாமும் நம் அறிவால்
உடல் கண்டோ ம்; இனி முடிவு உள காணுமாறு உளதோ? -
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்! - மண்ணிடை மாக்கள்,
"கடல் கண்டோ ம்" என்பர்; யாவரே முடிவு உறக் கண்டார்? 35

'ஈசன் மேனியை, ஈர் - ஐந்து திசைகளை, ஈண்டு இவ்
ஆசு இல் சேனையை, ஐம் பெரும் பூதத்தை, அறிவை,
பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, -
வாச மாலையாய்! - யாவரே முடிவு எண்ண வல்லார்? 36

'இன்ன சேனையை, முடிவுற இருந்து இவண் நோக்கி,
பின்னை காரியம் புரிதுமேல், நாள் பல பெயரும்;
உன்னி, செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி'
என்ன - வீரனைக் கைதொழுது, இளையவன் இயம்பும்: 37

'யாவது எவ் உலகத்தினின், இங்கு, இவர்க்கு இயற்றல் -
ஆவது ஆகுவது; அரியது ஒன்று உளது எனல் ஆமே? -
தேவ! - தேவியைத் தேடுவது என்பது சிறிதால்;
பாவம் தோற்றது, தருமமே வென்றது, இப் படையால். 38

'தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த
வரம் கொள் பேர் உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள்,
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்
குரங்கின் மாப் படைக்கு, உறையிடப் படைத்தனன் கொல்லாம்? 39

'ஈண்டு, தாழ்க்கின்றது என், இனி - எண் திசை மருங்கும்,
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்?
நீண்ட நூல்வலாய்!' என்றனன், இளையவன்; நெடியோன்,
பூண்ட தேரவன் காதலற்கு, ஒரு மொழி புகலும்: 40




மிகைப் பாடல்கள்

அன்று அவண் வானரச் சேனை யாவையும்,
வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,
குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,
வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே. 1-1

இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க, முன் போகச்
சொன்ன ஆயிர கோடியில் தூதர்தம் திறத்தால்,
பன்ன ஆறு - இரு வெள்ளம் ஆம் கவிப் படை பயில,-
பொன்னின் வார் கழல் இடபன் - அக் கிட்கிந்தை புகுந்தான். 1-2

'தாமரைப் பெருந் தவிசு உறை சதுமுகக் கடவுள்
ஓம அங்கியில் உதித்தன, உலப்பு இல கோடி
ஆம்' எனப் புகல் வானரத் தானை அங்கு அணித்தா,-
மா வயப் புயத்து எறுழ் வலி மயிந்தன்-வந்து அடைந்தான். 1-3

கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய முன் வாலி
பொங்கும் ஆணையின் எண் திசைப் பொருப்பினும் பொலியத்
தங்கி வாழ் கலித் தானை அங்கு ஆறு-ஐந்து கோடி
வங்க வேலையின் பரந்திட,-வசந்தன்-வந்து அடைந்தான். 1-4

வட்ட விண்ணையும் மண்ணையும் எடுக்குறும் வலிய,
நெட்டு அராவினைச் சினத்தொடு பிடுங்குவ நிமிர்வ,
அட்ட திக்கையும் மறைப்பன, ஆயிரம் கோடி
துட்ட எண்கு வெம் படையொடு தூமிரன் வந்தான். 19-1

ஓங்கு மேருவை வேருடன் பறித்து, ஒரு கையால்
வாங்கும் எண் அருங் கோடி மேல் மந்தியின் சேனை
பாங்கு சூழ்தர, பரவை அது ஆம் எனப் படியில்
ஆங்கு உயர்ந்திடு கபாடனும் அக் கணத்து உற்றான். 19-2

வீரை ஏழையும் கலக்குறு மிடுக்கினர், விரிந்த
பாரை வேரொடும் பறித்திட வேண்டினும் பறிப்பர்,
ஈர்-ஐஞ்ஞூற்று எழு கோடி வானரப் படை ஈண்ட,

தாரையைத் தந்த ததிமுகன் நொடியினில் சார்ந்தான். 19-3

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer