Thursday, 24 March 2016

பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

பங்குனி உத்தரம் ஆன பகற்போது
அங்க இருக்கினில் ஆயிரநாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான்

–கம்ப ராமாயணம், பால காண்டம், கடிமணப் படலம்

வசிட்ட முனிவன் பங்குனி மாத உருத்திர நட்சத்திரம் கூடிய அந்த நல்ல நாளில், அங்கங்களோடு கூடிய வேதங்களில் சொல்லப்பட்ட, ஆயிரம் திருநாமங்களை (ஸஹஸ்ரநாமம்) உடைய – சிங்கம் போன்ற ராமனது திருமணச் சடங்கைச் செய்த முறைமைக்கு ஏற்ப, மங்கலமான ஓமாக்கினியை (ஹோம அக்னி) வளர்த்து மண வினையை முடித்தான்.

வால்மீகி கூறியதையே கம்பரும் கூறி இருக்கிறார் (பால காண்டம், சர்கம் 72)

பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தது என்பதற்கு தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கிய நூல்களும் சான்று தருகின்றன. மனு தர்ம சாத்திரம் சொல்லும் எண் வகைத் திருமணத்தைத் தொல்காப்பியர் சொன்னதை முன்னர் கண்டோம். அவர் தச விதப் (பத்து) பொருத்தங்களையும் கூறுகிறார். இதைவிட முக்கியமானது கல்யாணத்துக்கு உரிய நட்சத்திரங்கள் என்று வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதையும் ஏனைய பல சம்ஸ்கிருத நூல்களும் சொல்லும் ரோகிணி , உத்தர பல்குனி முதலிய நட்சத்திரங்களில் தமிழர்கள் கல்யாணம் செய்ததும் ஒரே பண்பாட்டை உறுதி செய்கின்றன.

Kalyana sundara (Parvati–Paramasiva) picture from wikipedia (choza Bronzes)

அகநானூறு பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் தெய்வ வழிபாட்டுடன் ரோகிணி நட்சத்திரத்தில் தமிழர்கள் திருமணம் செய்து கொண்டதை முன்னர் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டோம். இதே போல கண்ணகி திருமணமும் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்தது.

இதே போல பங்குனி உத்தரமும் முக்கிய முகூர்த்த நாளானதால் தமிழ் நாட்டில் எல்லா பெரிய சிவன் கோவில்களிலும் அன்று சிவன் – உமை கல்யாணம் நடத்தப் படுகிறது. முருகன் கோவில்களில் தேவயானை—முருகன் திருமணம் நடத்தப்படுகிறது.. தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் சிறப்பு ஆராதனைகளும் நடக்கின்றன. இவை எல்லாம் கி.மு முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற காளிதாசனுக்கும் முந்தைய வழக்கம். காளிதாசன் எழுதிய குமார சம்பவம்(Chapter 7, Sloka 6)

என்னும் காவியத்திலும் சிவன் – உமை திருமணம் பங்குனி உத்திர நன்னாளில் நடந்ததாக எழுதிவைத்துள்ளான். அதே நாளில்தான் ராமன் – சீதா கல்யணமும் நடந்துள்ளது.

பங்குனி உத்தரப் பெருவிழாக்கள் ஏழாம் நூற்றாண்டில் வழ்ந்த திருஞான சம்பதருக்கும் முந்தைய வழக்கம் என்பது தேவாரப் பாடலில் இருந்து தெளிவாகிறது:–

பலவிழாப் பாடல் செய் பங்குனி

உத்திர நாள் ஒலி விழா – சம்பந்தர் தேவாரம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் ஒரு காலத்தில் பங்குனி உத்தரத்தில் நடந்ததாகவும், சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்காகவும், நடைமுறை வசதிகளுக்காவும் திருமலை நாயக்கர் இரண்டு விழாக்களை ஒன்றுபடுத்தி சித்திரைத் திருவிழா ஆக்கியதாகவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

ஆக புற நானூறு, அக நானூறு பாடல் ஒவ்வொன்றும் ஆரிய- திராவிட இன வெறிக் கொள்கையை தவிடு பொடியாக்கி வருவதைக் கண்டு வருகிறோம். எட்டு வகைத் திருமணங்கள், பத்துவிதப் பொருத்தங்கள், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், தீ வலம் வருதல், கடவுளை வணங்கி தீர்க்க சுமங்கலிக்களை வைத்து திருமணத்தை  நடத்தல் முதலிய எவ்வளவோ விசயங்களில் ஒற்றுமை காண்கிறோம்.

பங்குனி உத்தரத்தில் காம தஹனம், ஹோலி பண்டிகைகளும் நடைபெறுகின்றன.

தமிழர்கள் வாழக்கூடிய இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முருகன் கோவில்களில் தேர், காவடி சகிதம் பங்குனி உத்தரம் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் பௌர்ணமி நாட்களில் நடைபெறும் 1880 ஆம் ஆண்டுக்கு முன் உலகில் மின்சார விளக்குகள் இருந்ததில்லை. ஆகையால் எல்லாப் பௌர்ணமி நாட்களையும் பெரும் கோவில் திருவிழா நாட்களாகக் கொண்டாடினர் இந்துக்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து கட்டுச் சோறுடன் மாட்டு வண்டிகளிலும் நடைப் பயணமாகவும் வருவதற்கு இந்த முழு நிலவு நாட்கள் உதவின. அவைகளிலும் குறிப்பாக மாசி முதல் வைகாசி வரையுள்ள முழுநிலவு நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. காலநிலை ரீதியில் இவை மழை இல்லாமல் மிகவும் அனுசரணையாக இருந்தது இதற்குக் காரணம் ஆகும்.

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer