விஷ்ணு புராணம்
விஷ்ணு புராணம் முதல் அம்சம்(பகுதி-2)
9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்
பராசரர் மேலும் தொடர்ந்து கூறலானார்;
மைத்திரேயரே! நீர் அறிந்து கொள்ள விரும்பிய பிராட்டியாரின் திருவவதார சரித்திரத்தை, நான் முன்பு மரீசி மாமுனிவரிடம் கேட்டறிந்தபடிக் கூறுகிறேன், கேளும். ருத்திரருடைய அம்சமான மிகவுங்கோபமுள்ள துர்வாச மஹாமுனிவர், பூமண்டலமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு சமயம், மனிதர்கள் எளிதில் அடைய முடியாத வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது, அங்கே ஒரு வித்தியாதர மங்கை தென்பட்டாள். அவளது கையில் பரிமள மிகுந்த ஒரு மலர் மாலை இருப்பதைத் துர்வாச முனிவர் கண்டார். அவர் அந்த மங்கையை நோக்கி, பெண்ணே! இந்தப் பரிமளம் மிகுந்த மலர் மாலையை என்னிடம் கொடுப்பாயாக என்று யாசித்தார். அந்த மாலையை வித்தியாதர மங்கை அவரிடம் பக்தியோடு கொடுத்தாள். அந்த மலர் மாலையை துர்வாசர் தமது தலையிலே சுற்றிக்கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது, வழியிலே தேவேந்திரன் தன் வாகனமான ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்தான், அவனை துர்வாசர் கண்டதும் தமது சிரசில் சுற்றியிருந்த மலர் மாலையை அவிழ்த்து யானையின் மீது அமர்ந்திருக்கும் இந்திரன் மீது விட்டெறிந்தார். இந்திரன் அந்த மலர் மாலையை பிடித்து, ஐராவத யானையின் மத்தகங்கள் மீது போட்டான். அதனால் அந்த யானை மதங்கொண்டு, அந்தப் பூமாலையை தன் துதிக்கையால் எடுத்து, முகந்து பார்த்துத் தரையில் எறிந்தது. அதைக் கண்டதும் துர்வாசருக்கு மிகவும் கோபம் பொங்கியது. அவர் இந்திரனை நோக்கி, அடா, வாசவா! ஸ்ரீ ஐசுவரிய கர்வத்தால் ஸ்ரீமகாலக்ஷ்மியின் வாசஸ்தலமான மலர்மாலையை அங்கீகரிக்காமற் போனாய். சிரசில் நான் சூடிய மாலையை நீ மதிக்காமல் தரையில் எறிந்துவிட்டாய். ஆகையால் உன்னுடைய ஐசுவரியங்கள் சீக்கிரம் நாசம் அடையக்கடவது! என்னை அவமதித்த காரணத்தால் உன் உலகம் மகாலட்சுமியின் வாசம் ஒழிந்து துர்த்தசை அடையக் கடவது என்று சபித்தார். பிறகு இந்திரன் வெகு பரபரப்புடன் தன் யானையிலிருந்து இறங்கி, துர்வாச முனிவரின் பாதங்களில் வீழ்ந்து, தன்னை மன்னிக்கும்படி கெஞ்சினான். அப்படியவன் வேண்டிக்கொண்டும், துர்வாசரின் கோபம் அடங்கவில்லை.
தேவேந்திரா! தயையுடைய இதயமற்றவன் நான்! என்னிடம் மன்னிக்கும் சுபாவம் இல்லை. உனக்கு உட்பட்டுப் பின் பாட்டு பாடும் முனிவர்கள் வேறே இருக்கிறார்கள்! நான் துர்வாசன்! மற்ற முனிவர்களைவிட மாறுபட்டவன்! கவுதமர் முதலியவர்கள், நீ முன்பு செய்த துரோகத்திற்காக உன்னைச் சபித்துப் பிறகு உன்னுடைய விநயத்தின் காரணமாக உனக்கு தயவுசெய்தார்கள். அதுபோலவே என்னையும் நினைத்து விட்டாய்! நான் அப்படிப்பட்டவனல்ல வசிஷ்டர் முதலிய முனிவர்கள் உன்னைச் சிறப்பாகத் துதிப்பதாலேயே உனக்கு இவ்வளவு இறுமாப்பு! அதனால் தான் என்னை நீ அவமதித்தாய். குற்றஞ்செய்தால் தண்டிப்பது தான், நீதியே ஒழிய மன்னிப்பது என் வழக்கமல்ல! நீ ஏன் பயந்தவனை போலக் கபட நாடகம் ஆடுகிறாய்? வந்த வழியே செல்! என்று சொல்லி விட்டுத் துர்வாச முனிவர் சென்று விட்டார். இந்திரனும் தன் யானையின் மீது ஏறித் தேவலோகம் சென்று விட்டான். கேளும் மைத்ரேயரே! அன்று முதல் மூன்று உலகங்களும் லட்சுமி கடாக்ஷமற்று, தாவரங்களுங்கூட க்ஷீணித்தன. அன்று முதல் யாகாதி கர்மங்களும் நன்றாக நடைபெறவில்லை. தவமுனிவர்கள் நன்றாகத் தவஞ்செய்யவில்லை. தான தருமங்களில் மக்கள் கவனஞ் செலுத்தவில்லை. மக்களிடையே சத்துவகுணம் நலிந்து லோபம் மிகுந்தது. அற்ப விஷயத்திலும் பேராசை மிகுந்தது. அது ஏனென்றால், சத்துவகுணம் எங்கே இருக்குமோ, அங்கே தான் திருமகள் வாசம் செய்வாள். சத்வகுணமும் லட்சுமி கடாட்சத்தையே அனுசரித்திருக்கும் லட்சுமி கடாட்ச மற்றவர்களிடம் சத்துவ குணமும் இராது இந்தப்படியே திரிலோகங்களும் லட்சுமி கடாட்சம் குறைந்தவனாய் மிகவும் துர்தசையடைந்ததால், அரக்கர் கூட்டத்தினர் தேவர்களுக்கு தீங்கிழைக்கலானார்கள்.
அதனால் லோபாதி துர்க்குணங்களுடையவர்களாகவும், லட்சுமி கடாட்சமில்லாதவர்களாகவும் பலமும் சத்துவமும் இல்லாமலும் இருந்த அசுரர்கள் துள்ளியெழுந்து தேவர்களுடன் போர் செய்யத் துவங்கினர். தேவர்கள் தோற்று, பிருமதேவனைச் சரணடைந்தார்கள். தேவேந்திரன் தனக்கு அசுரர்களால் ஏற்பட்டுள்ள துர்த்தசையைக் கூறினான். அதைக்கேட்டதும் பிருமதேவன், தேவர்களே! பராபரங்கள் என்று சொல்லப்படும் உயர்ந்தவைகளுக்கும், தாழ்ந்தனவற்றிற்கும் ஈசுவரனும் அசுரரையெல்லாம் நாசஞ்செய்ய வல்லவனும் உற்பத்தி, ஸ்திதி, லயங்களுக்குக் காரணமானவனும் தனக்கு ஒரு காரணமின்றிதானே சுதந்தரமாக இருப்பவனும், பிரஜாபதிகளுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவனும் ஒருவராலும் வெல்ல முடியாதவனும், முடிவற்றவனும் பிரகிருதி புருஷாக்களிடம் உட்புகுந்து காரியங்களைச் செய்பவனும், தனது திருவடிகளையடைந்தவரின் துன்பங்களை நீக்க வல்லவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவை சரணமடையுங்கள். அவர் உங்களுக்கு ஷேமத்தைச் செய்தருளுவார்! என்று சொல்லி, அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு திருப்பாற்கடலின் வடகரையிற்சென்று ஸ்ரீயப்பதியை உத்தேசித்துத் தேவர்களுடன் துதி செய்யலானார். சர்வமயனும், சர்வ ஈசனும், முடிவற்றவனும் பிறப்பில்லாதவனும்; சுருங்கல் முதலியவையற்றவனும் உலக ஆதாரனும் தனக்கு வேறு ஆதாரமற்றவனும்; அப்பிரமேயனும்; பேதிக்க முடியாதவனும் சூட்சுமத்திலும் அதிசூட்சுமமானவனும் ஸ்தூலங்களில் அதிஸ்தூலமானவனும் ஆகிய ஸ்ரீமந் நாராயணனுக்குத் தண்டனிடுகிறேன்! அடியேன் முதலான சகல பிரபஞ்சமும் எவனிடமிருந்து தோன்றியதோ; எவனிடம் இருக்கின்றதோ; எவனிடம் லயமாகுமோ; சர்வ பூதங்களும் எவனுடைய சரீரமோ எந்தத் தேவன் மேலானவர்களுக்கும் மேலானவனோ; எவன் இருபத்து நான்கு தத்துவங்களுக்கும் பரனான புருஷனுக்கும் மேற்பட்டவன் என்று பரமான்மா என்னும் மோட்சத்தை அபேட்சிக்கிற யோகிகளால் மோட்சத்துக்காக நினைக்கப்படுகிறானோ எவனிடத்தில் பிராகிருதமான சத்துவாதி குணங்களில்லையோ, தூய்மையான சகல வஸ்துக்களுக்கும் மிகவும் தூயவனான அந்த ஆதிபுருஷன் அடியவரான எங்களுக்குப் பிரத்தியட்சமாக வேண்டும். கலை; காஷ்டை; நிமிஷம் முதலிய கால சூத்திரத்திற்குக் கோசரமான இடத்தில் பிராட்டி, திவ்விய மங்கள விக்கிர சமபரி ஜனம் முதலான விபூதிகள் இல்லையோ அப்படிப்பட்ட ஸ்ரீஹரி, எங்களுக்குப் பிரசன்னமாவானாக!
எவன் பரமேசுவரனாயும் அஜனுமாக இருந்தும் எல்லோருக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் முக்தியடைந்த ஆன்மாவாக உபசார வழக்காகச் சொல்லப்படுகிறானோ, அந்த ஸ்ரீமந்நாராயணனானவன் எங்களுக்குப் பிரசன்னமாவானாக! எவன் காரணமாகவும், காரியமாகவும், காரணத்திற்குக் காரியமாகவும், காரியத்திற்குக் காரியமாகவும் இருக்கிறானோ, அவன் பிரசன்னமாவானாக! பிரகிருதியின் காரியமான மகத்தின் காரியமான அகங்காரம் எது உண்டோ, அதன் காரியமான தன் மாத்திரைகளும் உண்டல்லாவா? அவற்றின் காரியமான பஞ்ச மகாபூதங்கள் உண்டல்லவா? அவற்றின் காரியமான பிரம்மாண்டத்தின் காரியமாக இருக்கிற பிரம்மனும், அவனிடத்தில் உண்டான தட்சாதிகளும் ஆகிய இந்த லோகப் பிரவாகம் எல்லாம் எவன் தானேயாக இருக்கிறானோ, அத்தகைய எம்பெருமானை நாங்கள் சரணடைகிறோம்! எவன் சப்தம் முதலிய சகல போக்கியங்களையும் அனுபவிப்பவனாகவும், சப்தம் முதலிய அனுபவப் பொருளாகவும், சகலப் பிரபஞ்சங்களுக்கும் சிருஷ்டி கர்த்தாவாகவும், சிருஷ்டி காரியமாகவும், சர்வ சரீரகனாவும் இருக்கிறானோ அப்படிப்பட்ட கர்த்தனை நாங்கள் வணங்குகிறோம்! விசுத்த ஞானமயமும் அஜமும் அட்சரமும் அவ்யயமும் அவ்யக்தமுமாய்த் தூலமும் சூட்சுமமுமல்லாமல், சகல விசேஷண வர்ச்சினமாக இருக்கிற அந்த பரமாத்மாவான விஷ்ணு சொரூபத்தை வணங்குகிறோம்! பரப்பிரும்ம சொரூபனான அந்தப் புரு÷ஷாத்தமனுடைய பதினாயிரத்தில் பதினாயிரம் அம்சமான ஏகதேசமான அம்சத்தில், சகல பிரபஞ்ச சக்தியும் இருக்கிறதோ, அந்த அவ்யனுக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்? எப்போதும் தியானத்தில் இருக்கிற யோகிகள் தங்களுடைய பாவ புண்ணிய ரூபமான கர்மங்கள் நசித்தவுடன் எந்தச் சொரூபத்தைப் பிரணவப் பொருளாகக் காண்கின்றனரோ, எந்த சொரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் நானும் சங்கரனும் அறியமாட்டாமோ, தனக்கு முன்பு யாரும் இன்றி தானே யாவற்றுக்கும் முன்னாக இருக்கிற எந்தத் தேவனுடைய சக்திகள் பிரம்ம விஷ்ணு சிவாத்துமகங்களாகி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்யுமோ அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவினுடைய சொரூபத்திற்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம். சர்வேசுவரா! சர்வபூத சொரூபா! அச்சுதா! ஸ்ரீவிஷ்ணுபகவானே! உனது திருவடித்தாமரையை நம்பியிருக்கும் அடியோர்களுடைய கண்களுக்கு எதிரே பிரசன்னமாவீராக! என்று சதுர்முகப் பிருமதேவன் துதித்தார் மற்ற தேவர்களும் எம்பெருமானைத் தெண்டனிட்டு, தேவதேவ! எங்கள் முன் பிரசன்னமாகிச் சேவை சாதித்தருள வேண்டும்! எம்பெருமானே ! இரண்யகர்ப்பனும் ருத்திரனும் உன்னுடைய பரமசொரூபத்தை மெய்யாக அறியமாட்டார்கள். ஜகத்நிவாசனாய் எங்கும் நிறைந்தவனான உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! என்று துதி செய்தார்கள். அதைக்கண்ட பிருகஸ்பதி முதலான தேவரிஷிகளும் துதி செய்வாராயினர்.
ஆதியாயும், யக்ஞ புருஷனாயும், சகல யக்கியங்களால் ஆராதிக்கத் தக்கவனாயும், பூர்விகர்களுக்குப் பூர்விகனாவும், ஜகத்தை சிருஷ்டிக்கிற பரமேஷ்டிக்குத் தந்தையாயும், இன்னபடி என்று சிறப்பிக்கப்படக்கூடாதவனாயும் இருக்கிற ஸ்ரீயப்பதிக்குத் தெண்டன் இடுகிறோம். ஆறுகுண சம்பன்னனே! முற்பட்டவைகளுக்கும் பிற்பட்டவைகளுக்கும் அதிபதியானவனே! பாக்கிய சொரூபியே! அழிவற்றவனே! உன்னுடைய திருவடித் தாமரைகளைச் சரணமாகப் பற்றிய அடியேங்கள்மீது கிருபை கொண்டு சேவை சாதிப்பாயாக! எம்முன் இந்தப் பிரமதேவனும், ஏகாதச ருத்திரர்களுடன் இந்த மகாதேவனும், துவாதச ஆதித்தர்களுடன் இந்தப் பூஷாவும், திரேதாக்கினிகளோடு இந்த அக்கினியும் அசுவினி தேவதைகளும் வசுக்களும் மருத்துகளும், விசுவ தேவதைகளும், சாத்தியரும்; மற்றுமுள்ள தேவகணங்களுடன் இந்தத் தேவேந்திரனும் அசுர சேனைகளால் ஜெயிக்கப்பட்டு உன் திருவடித் தாமரைகளையே தஞ்சமாகப் பற்றித் தெண்டன் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கண்ணோக்கம் காட்டி அருள்செய்ய வேண்டும் பரமாத்மா! என்று தேவரிஷிகள் துதித்தார்கள். அப்போது எம்பெருமானான ஸ்ரீமகாவிஷ்ணு சக்கராதி லட்சணங்களுடன் அத்தேவ கணங்களுக்குப் பிரத்தியட்சமாகி சேவை தந்து அருளினார். இவ்விதம் திருவாழித் திருச்சங்குடன் திவ்விய மங்கள விக்கிரகாதிகளையுடையவராய், தேஜோராவியாய்ச் சேவை சாதித்த எம்பெருமானைச் சதுர்முகப் பிருமாவும் மற்ற தேவர்களும் சேவித்து ஆனந்தத்தால் கண்கள் மலர்ந்து, அதிசயத்தால் அடிக்கடி கீழே விழுந்து வணங்கி எம்பிரானைத் துதிக்கலானார்கள். சுவாமி! அநந்தமான தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமின்றி சமமான அனுக்கிரகம் செய்பவன் நீ! பிரமனும் ருத்திரமூர்த்தியும் இந்திரனும் அக்கினியும் வாயுவும் வருணனும் ஆதித்தனும் யமனும் வசுக்களும் மருத்துக்களும் விசுவதேவர்களும் மற்றும் இங்கு வந்திருக்கிற சகல தேவர்களும் நீயே! ஏனெனில் நீயே அனைவரிடமும் இருந்து நடத்துகிறாய், ஆத்மாவுக்குக் கரணங்கள் போல எல்லோரும் உனக்குச் சேஷபூதராக இருக்கிறார்கள். அன்றியும் உன்னுடைய ஆராதனையான யாகங்களும் சகலவேத மூலமான பிரணவமும் நீ! இவ்விதமான சகல ஆராதனைகளையும் ஏற்று மனமிரங்கிக் காப்பவனும் நீ! எல்லாவற்றையும் அறிபவனும் நீயே! எல்லாவற்றாலும் அறியப்படுவதும் நீயே! உன்னிடமே அகிலப்பிரபஞ்சமும் நிற்கின்றது. அடியேங்கள் அசுரர்களால் ஜயிக்கப்பட்டு மிகவும் விசனமடைந்து, சர்வலோக கரணியனான உன்னைச் சரணமடைந்தோம். சகல பாபநாசகரனான உன்னைச் சரணமடையுமளவு தான் புருஷனுக்கு உபத்திரவமும் விஷயா பிலாஷையும் மோகமும் துக்கமும் உண்டாகியிருக்கும். தயா சமுத்திரனே! சரணாககரான எங்கள் முன் பிரசன்னமாக வேண்டும், என்று கைகூப்பித் தொழுதார்கள். அப்போது சர்வக்ஞனான எம்பெருமான் முகம் மலர்ந்து அனுக்கிரகம் புரிந்து அருள்புரியலானார்.
தேவதைகளே! எனது தேஜஸ் சிறப்பினால் உங்களுடைய பல, சத்துவ, தேஜோ தைரியங்களை அபிவிருத்தியடையச் செய்கிறேன். அசுர தைத்தியர்களோடு நீங்கள் ஓர் உடன்பாடு செய்து கொண்டு திருப்பாற்கடலில் சகல அவுஷதிகளையும் போட்டு, மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கடையும் கயிறாகவும் செய்து கொண்டு அமிர்தத்தை அடையவேண்டிக் கடையுங்கள். அதனால் உண்டாகும் பயனை நாம் இரு தரத்தாரும் சரியாகப் பங்கிட்டுக் கொள்வோமென்று அந்த தைத்திரியர்களிடம் பேசி, அவர்களை உங்கள் வசம் செய்து கொள்ளுங்கள். இவ்விதமாக, நீங்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும்போது உண்டாகும் அமிர்தத்தை நீங்கள் பானஞ்செய்து நீங்களே மகா பலசாலிகளாகி அமரர்களாவீர்கள்! நான் அந்த அமிர்தம் அசுரர்களுக்குக் கிடைக்காதவாறு செய்கிறேன். இந்தச் செயலில் உங்களுக்கு வேண்டிய சகாயங்களைச் செய்கிறேன் என்று மகாவிஷ்ணு கூறினார். அதைக் கேட்டு தேவர்கள் மகிழ்ந்து, சுவாமியின் சன்னதியிலிருந்து விடைபெற்றுச் சென்று, தங்களுடைய விரோதிகளான அசுரர்களோடு சாம உபாயத்தினால் சமாதானம் செய்து கொண்டு, அமிர்தம் கடைவதில் ஒன்றுபட்டார்கள். இருதரப்பினரும் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைவதில் முனைந்தார்கள். சகல மூலிகைகளையும் கொண்டு வந்து, சரத்கால மேகத்தைப் போல மிகவும் வெண்மையாக இருக்கும். திருப்பாற்கடலில் போட்டு, மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, அதிக உற்சாகத்தோடு கடையத் துவங்கினார்கள். அப்பொழுது எம்பெருமானான விஷ்ணு ஒரு தந்திரம் செய்து, வாசுகி சர்ப்பத்தின் வாலைத் தேவர்கள் பிடிக்கும்படியும் அசுரர்கள் அதன் தலையைப் பிடிக்கும்படியும் செய்தார். அதன் விளைவாக வலுவும் பராக்கிரமங்களும் மிக்க அசுரர்கள் விஷாக்கினிச் சுவாலையுடன் கூடிய வாசுகி என்ற பாம்பின் பெருமூச்சுக் காற்றினால் தேஜசு குறைந்து, பலவீனர்களானார்கள். அந்தக் கொடிய பாம்பின் சுவாச வேகத்தினால் மேகங்கள் அடித்துத் தள்ளப்பட்டு அதன் வால் பக்கமாகச் சேர்ந்த அம்மேகங்கள் பெருமழை பொழியவே, தேவர்கள் அம்மழைத் திவலைகளால் களைப்பு நீங்கிச் சுகமடைந்தார்கள். அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலின் மையத்தில் மகா கூர்மரூபந்தரித்து, (ஆமை உருவம் தரித்து) மந்திர மலைக்கு ஆதாரமாக இருந்து அதைச் சுழலச் செய்யச் சாதகமாக இருந்தார். மேலும் வேறொரு திருமேனியுடன் அசுரர்களின் பக்கத்திலே நின்று சங்கு, சக்கராதி திவ்விய ஆயுதங்களைத் தரித்து வாசுகியின் வாலையும், தலையையும் பிடித்து இடமும் வலமுமாக இழுத்துக் கடைந்தார். அதுமட்டுமல்ல, அவர் மிகவும் பெரியதான ஒரு திவ்விய உருவமெடுத்து, அந்த மந்த மலையின், மேற்புறத்தை ஆக்கிரமித்து, அதைப் பலப்படுத்தியருளினார். பின்னர் விஷ்ணுபகவான், தேவரும், அசுரரும் அறியமாட்டாத அதிரகசியமான வேறொரு சொரூபத்தால் தேவர்களுக்கும் தைரியவுற்சாகங்களை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார். இவ்விதமாக ஸ்ரீயப்பதியின் சகாயத்தைக் கொண்டு, தேவர்களும் அசுரர்களும் கடைந்த திருப்பாற்கடலிலிருந்து சகல தேவர்களாலும் பூஜிக்கத்தக்க காமதேனு உற்பத்தியாயிற்று. அதை கண்ட அசுரரும் தேவரும் மகிழ்ந்தனர்.
பின்னர் சித்தர்களும் மோகத்தால் கலக்கமுற்று அதிசயிக்க சகலலோக மோகினியான வாருணிதேவி, மோனமயக்கத்தால் சுழலும் கண்களுடன் தோன்றினாள். மீண்டும் மந்திரமலையால் கடையப்பட்ட திருப்பாற்கடலிலிருந்து அபூர்வமான திவ்வியப் பரிமள சுகந்தத்துடன் பாரிஜாத விருட்சம் தோன்றியது. அதன்பிறகு ஜகன்மோகன ரூபலாவண்யமுள்ள அற்புதமான அப்சரஸ்திரீகளும், குளிர்ச்சியடைய கிரணங்களைக் கொண்ட சந்திரனும் தோன்றினர். அந்தச் சந்திரனை ருத்திரமூர்த்தி எடுத்துக்கொண்டார். பிறகு பாற்கடலில் உற்பவமான ஆலகால விஷத்தைச் சிவபெருமானும் நாகேந்திரர்களும் கிரகித்துக் கொண்டார்கள். அதன் பிறகு, பகவதம்சமான தன்வந்திரி என்ற தேவன் வெண்மையான ஆடைகளையும், மலர் மாலைகளையும் அணிந்து, அமிர்தம் நிறைந்த கமண்டலத்தைக் கையிலே ஏந்திய வண்ணம், அந்தத் திருப்பாற்கடலிலிருந்து உதயமானான். அமிர்த கலசத்தோடு தோன்றிய அந்தத் தேவனைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் மனக்களைப்பு நீங்கி மகிழ்ந்தார்கள். பிறகு அதியற்புதமாகவும், அபூர்வமாகவும், திவ்வியப் பிரகாசச் சிறப்போடும் மலர்ந்த செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்டும், தாமரை மலர்களைத் திருக்கரங்களில் தரித்து கொண்டும், மகாலட்சுமி வடிவமான ஜகன்மாதாவான பெரிய பிராட்டியார் திருவவதாரஞ் செய்வதைக் கண்டு, முனிவர்களெல்லாம் மகிழ்ந்து ஸ்ரீசூக்தங்களைக் கொண்டு துதித்தார்கள். அப்போது பிராட்டியின் சன்னதியில் விசுவாவசு முதலிய கந்தருவர்கள் கீதங்களைப் பாடினார்கள். கிருதாகி முதலிய அப்சரசுகள் நடனமாடினார்கள். கங்கை முதலிய மகாநதிகள் தங்கள் தூய நன்னீரைக் கொண்டு, பிராட்டியின் திருமஞ்சனத்திற்குச் சேவை செய்தன. திக்கு கஜங்கள் நவரத்தின கசிதமான பொற்கலசங்களில் அந்த நத நீரை எடுத்து, பிராட்டிக்குத் திருமாலையொன்றைத் தாயாருக்குச் சமர்ப்பித்து விசுவகர்மன் ரத்தினாபரணங்களைத் தாயாரின் திருமேனியிலே சாற்றினான். இவ்விதமாக அவரவர் செய்த கைங்கரியங்களைத் திருவுள்ளம் பற்றிப் பிராட்டியார் திருமஞ்சனம் செய்தருளி, திருவாபரணம் திருமாலை முதலியவற்றைச் சாற்றிக்கொண்டு, மூவரும் தேவரும் பார்த்திருக்க விஷ்ணுபெருமானின் திருமார்பில் எழுந்தருளினாள். பிறகு பெரிய பிராட்டியார் அகங்குளிர்ந்து கடாட்சித்ததால் தேவர்கள் மகிழ்ந்தார்கள். அசுரர்களோ பெருமானிடத்தில் பக்தியற்றவர்களாக இருந்ததால் பிராட்டியாரின் கடாட்சத்தை இழந்து தீன ஸ்திதியை அடைந்தார்கள். இப்படியிருக்கும்போது அசுரர்களான தைத்திரியர்கள், தன்வந்திரியின் கரத்திலிருந்த அமிர்த கலசத்தைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டார்கள். அப்போது ஸ்ரீமந்நாராயணன் ஜகன்மோகனகரமான மங்கையுருவமெடுத்து, அசுரர்களை மயக்கியிழுத்து, வஞ்சித்து அமிர்தம் அவ்வசுரர்களுக்கு எட்டாதபடி செய்து அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தார். இவ்விதம் பகவத்கிருபையினால் கிடைத்த அந்த அமிருதத்தைத் தேவர்கள் அருந்தியதால் பலம் பெற்று விளங்கினார்கள். அதைக்கண்டு கோபங்கொண்ட அசுரர் தைத்ய தானவர்கள் பலவித ஆயுதங்களை ஏந்தித் தேவர்களுடன் போர் புரிந்தார்கள். அமிர்தபானஞ்செய்த அமரர்களோ, அசுரர்களுடன் தைரியமாகப் போரிட்டு, அவர்களைப் பாதாளத்திற்குத் துரத்தினார்கள். பிறகு தேவேந்திரனும் தேவர்களும் ஸ்ரீயப்பதியை வணங்கி விடைபெற்று தேவலோகம் சென்று சுகபோகங்களை இடையூறின் அனுபவித்து வரலானார்கள்.
முனிவரே! அப்போது சூரியன் பிரகாசமான கிரணங்களுடன் தன் வழியில் மாறாமல் சஞ்சரித்து வந்தான். மற்றுமுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் தம் வழியில் மாறாமல் சஞ்சரித்தன. அக்கினியும் வலஞ்சுழித்தது. சகல ஜனங்களும் தரும சிந்தையுடையவராய்ச் சுகமாக வாழ்ந்தார்கள். இவ்விதம் மூன்று உலகங்களும் லக்ஷ்மிகடாட்சம் பெற்றன. இப்படியிருக்குங் காலத்தில் தேவேந்திரன் தன் பதவியை அடைந்து மகாலட்சுமியான பிராட்டியைத் துதித்துத் தோத்திரம் செய்யலானான். சகல உலகத்திற்கும் தாயாராய், திருப்பாற்கடலில் திருவவதாரம் செய்தவளாய், மலர்ந்த தாமரையைப் போன்ற திருக்கண்களுடையவளாய், திருமாலின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். தாமரை மலரில் வீற்றிருந்து, தாமரை மலரைத் திருக்கையில் தரித்து, தாமரை மலர் போன்ற திருவிழிகளுடன் தாமரை மலரையொத்த திருமுக மண்டலமுள்ளவளும், உந்தித் தாமரை பூத்தவனின் திருவுள்ளத்திற்கு உகந்தவளுமான ஸ்ரீதேவியைச் சேவிக்கிறேன்! உலகங்களைத் தூய்மை செய்து அருள்கின்ற தாயே, சித்தியும் சுவாகையும் சுதையும் சொதையும் சந்தியும் ராத்திரியும் பிரபையும் மேதையும் சிரத்தையும் சரஸ்வதியும் எல்லாம் நீயே! சகலமங்கள சொரூபிணியான தாயே! யக்ஞவித்தை என்கின்ற கர்ம மீமாம்சையும், மகாவித்தையென்கின்ற இந்திர ஜாலவித்தையும் குஹ்ய வித்தை என்கின்ற வேதாந்த வித்தையும் நீயே! தர்க்க வித்தையும், வேத வித்தையும் கிருஷிகோரக்ஷண வாணிப வித்தையும், தண்டநீதி வித்தையும் நீயே! இவ்விதம் சாந்தங்களாகவும் அசாந்தங்களாகவும் இருக்கிற உருவங்களைக் கொண்டு மூன்று உலகங்களையும் நீயே நிறைந்திருக்கிறாய். தாயே! சகல யக்ஞ சொரூபனாகவும், மகா யோகிகளுக்கும் தியானித்து அறியத்தக்க தேவதேவனுமான கதாதரனின் திருமேனியில் உன்னைத் தவிர வேறு யார்தான் வீற்றிருக்க முடியும்? உலகமாதாவே! உன் கடாட்சத்தை இழந்த போது மூன்று உலகங்களும் நாசமடைந்தவை போலாகித் திரும்பவும் உனது கடாட்சத்தைப் பெற்றதால் சவுபாக்கியங்களைப் பெற்றன. தாயே! கருணை நிறைந்த உனது கடாட்ச வீட்சண்யத்தாலே பிராணிகளுக்கு பாரியா, புத்திர, பந்து, மித்திர, கிருக, ÷க்ஷத்திர, தன வாகனாதிகள் எப்பொழுதுமே உண்டாகின்றன.
எம்பெருமாட்டியே! உன் கடாட்சம் பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் அதிகாரமும் சத்துரு வெற்றியும் சுகமும் கிடைப்பது அரிதல்ல. பிராட்டியே! சகல பிரபஞ்சத்துக்கும் நீயே அன்னை! தேவதேவனான நாராயணனே தந்தை! தாயே! நீங்கள் இருவரும் சேர்ந்தே சராசர ஸ்வரூபமான இந்த பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கிறீர்கள். ஸ்ரீவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் தாயே! அடியேங்களது புத்திர, மித்திர வர்க்கங்களையும் பசுக்களையும், பூஷணங்களையும் ஒருநாளும் பிரியாது இருந்தருள வேண்டும். யாவற்றையும் தூய்மையாக்கவல்ல தாயே; எங்களுடைய தனகோசத்தையும் தொழுவத்தையும், இல்லங்களையும், உடலையும், களத்திரத்தையும், ஒருநாளும் பிரியாமல் இருந்தருள வேண்டும். நிர்மலையான தாயே! உன் கடாட்சம் தூரமானால் மக்கள் சவுசீல மகாகுணங்களும் தன தானியமும் இல்லாமற் போவார்கள். குணக்குறையுடையோராலும் உன் கடாட்சம் பெற்றவர்கள். எல்லா சவுபாக்கியங்களையும் பெற்றுப் பிரபுக்களாக வாழ்வார்கள். ஸ்ரீவிஷ்ணு வல்லபையான தாயே! உன் கருணைக்குப் பாத்திரமானவனே குணவான்; புண்ணியவான்; புத்திமான். சூரன், பராக்கிரமசாலியாவான்! ஜகத்தையெல்லாம் வளர்க்கும் தாயே! நீ வெறுத்தால், ஒருவனுடைய வாய்மை, சமதர்மம் முதலிய சற்குணங்களும் துர்க்குணங்களாகி விடும். உனது திருக்கல்யாண குணங்களை நான்முகப் பிரமனாலும் துதிக்க இயலாதே அப்படியிருக்க அடியேன் எப்படிப் புகழ்வேன்? ஆயினும் தாயே கருணை கூர்ந்து எம்மை விட்டுவிடாமல் காத்தருள வேண்டும் என்று தேவேந்திரன் துதித்தான். அப்பொழுது, எங்கும் நிறைந்தவளான ஸ்ரீதேவிப்பிராட்டியார் திருவுள்ளம் உவந்து புரந்தரன் முன்பு தோன்றி, தேவேந்திரா! நீ செய்த வழிபாட்டில் நான் மகிழ்ந்து உனக்கு வரமளிக்க வந்தேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள் என்று அருளிச்செய்தாள். தேவேந்திரன் உடனே ஸ்ரீதேவியை வணங்கித் தாயே, நீ திரிலோகத்திலும் இடைவிடாமல் எழுந்தருளியிருக்க வேண்டும். எவனருகிலும் இந்தத் தோத்திரத்தினால் உன்னைத் துதித்தால் அவனை நீ ஒருநாளும் கைவிடாமல் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று இரண்டு வரங்களைக் கொடுத்தருளும்படி வேண்டினான். அவன் வேண்டிய பிரார்த்தனையை ஸ்ரீதேவிப்பிராட்டியார் ஏற்றுக்கொண்டு, அமரேந்திரா! நீ விரும்பிய வண்ணம் ஆட்சிபுரியும் உனது உலகத்தை விட்டு நான் நீங்குவதில்லை. எவன் தினந்தோறும் காலை மாலைகளில் இந்த ஸ்ரீ தோத்திரத்தால் என்னைத் துதிக்கிறானோ, அவனுக்கு நான் அருள்புரிகிறேன்! என்று இரண்டு வரங்களைத் தந்தருளினாள்.
மைத்ரேயரே! பூர்வத்தில் ஸ்ரீதேவி, பிருகு முனிவருக்கு கியாதி என்ற மங்கையினிடத்தில் அவதரித்தாள் என்று சொன்னேனல்லவா? பிறகு அமிர்தங்கடைந்த காலத்தில், திருப்பாற்கடலிலும் அவதரித்தாள். இதுமட்டுமல்ல, உலகநாதரான ஜனார்த்தனன் எப்போதெப்போது உலகங்களில் அவதரிப்பானோ, அப்போதைக்கப்போது ஸ்ரீதேவியும் அவனுடன்கூட, அந்த அவதாரப் பயன்பெற, அவதாரம் செய்து அருள்வாள். முன்பு ஸ்ரீமந்நாராயணன் அதிதியின் குமாரனாக அவதரித்தபோது ஸ்ரீதேவிப்பிராட்டியார் பதுமை என்ற திருப்பெயரோடு அவதரித்தாள். விஷ்ணு, பரசுராமனாக அவதரித்தபோது இவள் தரணியாக அவதரித்தாள், அவன் சக்கரவர்த்தித் திருமகன் ராமனாக அவதரித்தபோது இவள் சீதா பிராட்டியாக அவதரித்தாள். அந்த எம்பெருமான் கண்ணனாக அவதாரம் செய்த போது இவள் ருக்மணியாக அவதரித்தாள். இதுபோலவே மற்றைய அவதாரங்களிலேயும் இப்பிராட்டி, பெருமாளை விட்டு பிரியாமல் கூடவே அவதரித்துக் கொண்டிருப்பாள். எம்பெருமான் தேவதா சொரூபத்தோடு அவதரித்தால் ஸ்ரீதேவியும் அதற்கேற்ற தெய்வத் திருமேனியுடன் அவதரிப்பாள். மனுஷ்ய சொரூபத்தோடு பெருமாள் அவதரித்தால் தேவியும் மனுஷ்ய ரூபத்தோடு அவதரிப்பாள். மைத்திரேயரே! ஸ்ரீமகாலக்ஷ்மியின் இந்த திருவவதாரத்தை எந்த மனிதன் பக்தியுடன் பாராயணம் செய்கிறானோ, எவன் பக்தியோடு கேட்கிறானோ, அவனுடைய இல்லத்தில் பெரிய பிராட்டியாரான ஸ்ரீதேவி என்றும் பிரியாமல் எழுந்தருளியிருப்பாள். எந்தக் கிருஹங்களிலே இந்த ஸ்ரீதேவியின் சரித்திரம் தினந்தோறும் படிக்கப்படுகிறதோ, அந்தக் கிருகங்களில் கலகத்திற்கு ஆதாரமான வறுமை இராது. ஸ்ரீதேவி, முன்பு பிருகு முனிவரின் புத்திரியாகிப் பின்னர் மீண்டும் திருப்பாற்கடலில் அவதாரஞ்செய்த விதத்தை உமக்கு அறிவித்தேன். சகல ஐசுவரிய காரணமாக, இந்திரனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை யாராகிலும் தினந்தோறும் பக்தியுடன் படிப்பார்களானால் அவர்கள் ஒருக்காலும் அசுபத்தை அடையமாட்டார்கள். சர்வாபீஷ்டங்களும் நிறைவேறி அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள்.
10. பிருகு, மரீசி முதலானோர் வமிசம்
பராசர மகரிஷியே! உங்கள் தயவால் ஸ்ரீதேவியின் திருவவதார வைபவத்தை அறிந்து கொண்டேன். இனிமேல் பிருகு முதலானோருடைய வமிச வரலாற்றைக் கூறியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார். மைத்ரேயரே! பிருகு முனிவருக்குக் கியாதி என்ற பத்தினியிடம் ஸ்ரீவிஷ்ணு பத்தினியான லட்சுமியும் தாதா விதாதா என்ற பிள்ளைகள் இருவரும் உண்டானார்கள் அல்லவா?அந்தத் தாதாவும் விதாதாவும் மேரு புத்திரிகளான ஆயதி, நியதி என்னும் கன்னியரை முறைப்படியே விவாகஞ் செய்து கொண்டார்கள். அவர்களில் தாதாவுக்குப் பிராணன் என்கிற மகன் பிறந்தான். அவனுக்கு துதிமான் என்னும் மகன் பிறந்தான். அவனுக்கு அசாவான் என்ற குமரன் பிறந்தான். விதாதாவுக்கு மிருகண்டு என்று புத்திரன் உற்பத்தியானான். அந்த மிருகண்டுக்கு மார்க்கண்டேயன் பிறந்தான். அந்த மார்க்கண்டேயனுக்கு வேதசிரன் என்ற மகன் பிறந்தான். அவர்களாலே பிருகு வமிசம் உலகத்தில் பரவி வந்தது. இந்நிலையில் மரீசி மாமுனிவருக்குச் சம்பூதி என்ற மனைவியிடம் பவுர்ணமாசன் என்ற புத்திரன் பிறந்தான். அவனுக்கு விரசன், பர்வதன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுடைய சந்ததிக் கிரமத்தைப் பின்னால் சொல்லுவேன். ஆங்கிரசமுனிக்கு பத்தினியான ஸ்மாருதி என்பவள் சீனிவாலி, குரு, ராகை அனுமதி என்று சொல்லப்பட்ட நான்கு பெண்களைப் பெற்றாள். அத்திரி மாமுனிவருக்கு மனைவியான அனுசூயை என்பவள் சந்திரனையும், துர்வாசரையும் தத்தாத்திரேயர் என்ற மகாயோகியையும் பெற்றாள். அவன் பூர்வ ஜன்மத்தில் சுவாயம்புவ மநுவந்திரத்திலே அகஸ்தியனாக இருந்தான். புலஹன் என்ற முனிவருக்குக்ஷமை என்பவளிடத்தில் கர்த்தமன் அர்வரீவான் சகிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் தோன்றினார்கள். கிரது என்னும் மாமுனிவருக்கு சன்னதி என்பவளிடத்தில், ஊர்த்துவரேதஸரும் கட்டை விரற் பரிமாணமுள்ளவரும் சூரியப்பிரகாசிகளுமான வாலக்கில்யர் என்ற அறுபதினாயிரம் முனிவர்கள் உண்டானார்கள். வசிஷ்டருக்கு ஊர்ச்சை என்ற பெண்ணிடம் ரசனும், காத்திரனும்; ஊர்த்தபாகுவும் சவனனும், அனகனும் சுதபனும் சுக்கிரனும், ஆகிய சப்த மாமுனிவர்கள் பிறந்தார்கள். பிரமதேவனுக்கு மூத்த மகனான அக்கினி என்பவனுக்கு சுவாஹா என்ற பத்தினியிடம் பாகவன், பவமானன், சுசி என்னும் பிள்ளைகள் மூவர் பிறந்தார்கள். அவர்களது சந்ததியில் நாற்பத்தைந்து பிள்ளைகள் பிறந்தார்கள். இவர்களும் இவர்களுடைய தகப்பன்மார்கள் மூன்று பேரும் கூடஸ்தனான அக்கினியபிமானி தேவதையும் ஆக நாற்பத்தொன்பது பேர்களும் அக்கினிகள் என்று வழங்கப்படுகிறார்கள். மைத்ரேயரே! சதுர்முகப் பிரமன் சிருஷ்டித்த அக்கினிஷ்வாத்தர் என்றும் பர்ஹீஷதர் என்றும் சொல்லப்பட்டு யாகம் செய்தவர்களும் யாகம் செய்பவர்களுமான பிதுர்க்கணங்களைச் சேர்ந்து ஸ்வதை என்னும் பெண்மணியானவள் மேனை, வைதரணி என்கிற இரு பெண்களைப் பெற்றாள். அவ்விருவரும் யோகப் பயிற்சியில் சிறந்து பிரமவாதிகளாய்த் திகழ்ந்தார்கள். இவ்விதமாக விருத்தியான தக்ஷ புத்திரிகளுடைய சந்தானக்கிரமம் சொன்னேன். இதை விசுவாசத்தோடு ஸ்மரணஞ் செய்த மனிதன் சந்தானமில்லதாவனாக மாட்டான்.
11. துருவன் கதை
பராசரர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேய முனிவரே! சுவாயம்புவ மநுவுக்குப் பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அப்பத்தினிகளில் சுருசி என்பவள் தான் உத்தனபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு உத்தமன் என்று வழங்கப்பட்ட மகன் ஒருவன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் பிரிய மகனாக இருந்தான். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. அந்தப் பெண்ணுக்குத் துருவன் என்ற மகன் பிறந்தான். அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்டவன். ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தன் தந்தையான உத்தானபாத மன்னனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே தனது தகப்பனது மடியில் தன் சகோதரன் உத்தமன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். தானும் அவனைப் போல, தன் தகப்பன் மடியில் உட்கார வேண்டும் என்று துருவன் ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான். அப்போது சுருதி தன்னருகில் இருந்ததால், துருவனின் விருப்பத்தை அரசன் ஏற்கவில்லை. இவ்விதமாகத் தகப்பன் மடியின் மீது உட்கார வந்த சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து, பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய்! என் வயிற்றில் பிறக்காமல் வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ, இத்தகைய உயர்ந்த சிம்மாசனத்தில் இருக்க நினைப்பதா? விவேகமல்லாத நீ இந்த அரசனின் மகன் தான் என்றாலும், ராஜ்யலட்சுமி வாசம் புரியும் இந்தச் சிங்காசனத்துக்கு நீ தகுந்தவனல்ல. என் மகனே அதற்குத் தகுதியுடையவன், வீணாக ஏன் வருந்த வேண்டும். பாக்கியமில்லாத சுநீதி வயிற்றில் நீ பிறந்ததை நினைக்க வேண்டாமா? இங்கிருந்து போ! என்று இழிவாகக் கூறினாள். அவள் பேசியதைக் கேட்ட துருவன் கோபங்கொண்டு, மனக்கலக்கமடைந்து, சரேலென்று தன் தாய் வீட்டுக்குச் சென்றான்.
கோபமாகக் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க வந்த துருவனை அவனுடைய அன்னை சுநீதி தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு, மகனே! உன் கோபத்துக்குக் காரணம் என்ன? உன்னை யார் சமாதானஞ் செய்வார்கள்? உன் தந்தையை யாராவது அவமதித்தார்களா? என்று கேட்டாள். அதற்குத் துருவன், தன் மாற்றாந்தாயான சுருசி கூறியவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னான். அதைக்கேட்ட சுநீதி, மகனே! சுருசி சொன்னவைகள் யாவும் உண்மைதான். நீ சொற்ப பாக்கியமுடையவன். ஏனென்றால் மிகவும் புண்ணியமுள்ள குழந்தை சத்துருக்களால் இப்படி தூற்றப்படுமோ? இத்தனையும் உன்னுடைய பூர்வ ஜன்ம நற்பலனை யாராவது அபகரிக்க முடியுமா? செய்யாத கர்ம பலனைக் கொடுக்கத்தான் யாரால் முடியும்? பாக்கியவான்களுக்கே, மகாராஜயோக்கியமான சிம்மாசனமும், ரதகஜதுரகபதாதிகள் போன்ற நால்வகை சேனைகளும் சுகபோகங்களும் கிடைக்கும். சுருசியானவள் பாக்கியசாலி! புருஷன் தன்னிடத்திலேயே பிரியமாக இருப்பதற்குப் பாக்கியஞ் செய்திருக்கிறாள். நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டுமே உடையவளாய் துக்கப்படுகிறேன். உத்தமன் புண்ணியம் செய்தவன். அதனால் தான் அவன் சுருசியின் மகனாகப் பிறந்தான். சொற்ப பாக்கியமுடைய நீ என் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தாய் மகனே! இதற்கு நாம் என்ன செய்யலாம்? எவனுக்கு எந்த மட்டும் அதிர்ஷ்டமோ அந்த மட்டிலே அவன் மகிழ்ந்திருக்க வேண்டும். இதுதான் புத்திமான்களின் செயல். ஆகையால் ஐசுவரியத்தை நினைத்துத் துக்கப்படாமல் இரு! சுருசி சொன்னவைகளைக் கேட்டு உன் மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மையுண்டாவதற்குச் சகல முயற்சிகளையும் புண்ணியத்தையும் செய்ய எத்தனஞ்செய். தர்மாத்மாவாய், நல்ல நடத்தையுடையவனாய், சர்வபூத தயாபரனாகவும், சர்வஜனமித்திரனாகவும் இருந்து கொண்டு நல்லவற்றைச் செய்து வந்தால், தண்ணீர் பள்ளத்தை நாடிச்செல்வது போல், சம்பத்துக்களும் குணவானான மனிதனிடத்தில் தானாகவே வந்து சேர்கின்றன என்று சொன்னாள். அதைக்கேட்ட துருவன், தாயே! நீ சொன்ன வார்த்தைகள் சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த என் இதயத்தில் பதியவில்லை. ஐசுவரிய கர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான், மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய எத்தனஞ் செய்கிறேன். பார்! புண்ணியசாலி என்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல், உன்னுடைய ரத்தத்திலே நான் பிறந்தவனானலும், என்னுடைய ஆற்றலைப் பார் என் அண்ணன் உத்தமனே என் தந்தையின் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். நான் என்னுடைய சுயசக்தியினாலே அதைவிட உயர்ந்த பதவியை அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் அசாத்தியமான மிகவும் உயர்ந்த பதவியை எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்! என்று சொல்லி தாயாரின் அனுமதியைப் பெற்று அங்கிருந்து அதிவிரைவாகப் புறப்பட்டு தலைநகரைக் கடந்து, அருகிலிருந்த ஒரு காட்டுக்குள் சென்றான்.
அங்கே, கறுப்பு மான் தோல்களைத் தரித்து குசப்புல்லை ஆசனமாகக் கொண்டு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, முனிவர்களே! நான் மன்னன் உத்தானபாதனுக்குச் சுநீதி வயிற்றில் பிறந்த மகன். துருவன் என்பது என் பெயர். நான் மிகவும் மனக்கவலையோடு தங்களது திவ்யசன்னதிக்கு வந்தேன் என்றான். ராஜகுமாரனே! நீயோ நாலைந்து வயதுள்ளவனாகவே இருக்கிறாய். இவ்வளவு சிறியவனான உனக்கும் மனக்கிலேசம் உண்டாகக் காரணம் என்ன? உன் தந்தை வாழ்ந்து கொண்டிருப்பதால் உன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாரமில்லையே! உன் ஆசைக்கு உரியபொருள் அகப்படவில்லையே என்று மன்னன் மகனான நீ வருந்த வேண்டியுமிராது! உன் உடம்பில் எந்தவிதமான நோயும் இருப்பதாக உன் தோற்றத்திலேயே தெரியவில்லை! அப்படியிருக்க உன் மன வெறுப்புக்குக் காரணம் என்ன? என்று சப்தரிஷிகள் கேட்டார்கள். என் தாய்க்குச் சக்களத்தியாகிய சுருதி சொன்ன வார்த்தைகளால் எனக்கு வெறுப்புண்டாயிற்று. அந்த அவமானத்தாங்காமல் இங்கு வந்தேன் என்றான். துருவன் அதைக் கேட்டதும் ஏழு முனிவர்களும் ஒருவருடன் ஒருவர் கலந்து இந்த சிறுவன் மாற்றாந்தாயின் பேச்சைப் பொறுக்கமாட்டாமல் இங்குவந்து விட்டான். இவனது ராஜகளையைப் பார்த்தீர்களா? இவ்வளவு சிறிய பையனுக்கும் அவமானம் பொறுக்க முடியவில்லையே, என்று பேசிக்கொண்டு, துருவனை நோக்கி, ராஜகுமாரனே, நீ மனஸ்தாபங்கொண்டு மனம் நொந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாய்! உனக்கு எங்களால் ஆகவேண்டிய உதவி என்ன? என்று கேட்டார்கள். துருவன் அவர்களை நோக்கி, முனிவர்களே! அடியேன்ராஜ்யத்தையோ அல்லது மற்ற பொருள்களையோ விரும்புகிறவன் அல்ல. ஆனால் பூர்வத்தில் ஒருவனாலேயும் அனுபவிக்கப்படாததாய், அபூர்வமானதாய், சகல ஸ்தானங்களுக்கும் உன்னதமானயிருக்கிற ஸ்தானத்தை நான் அடைய விரும்புகிறேன். இந்த மனோரதம் நிறைவேறுவதற்காக உபாயத்தை எனக்கு கூறியருள வேண்டும் என்றான். அதற்குச் சப்தரிஷிகள் ஒவ்வொருவராகப் பின்வருமாறு கூறினார்கள்.
அரசகுமாரனே! ஸ்ரீகோவிந்தனுடைய சரணாரவிந்தங்களையடைந்து ஆராதனை செய்யாதவர்களுக்கு, சர்வ உத்தமமான பதவி கிடைக்காது. ஆகையால் நீ பக்தியுடன், அச்சுதனை ஆராதிப்பாயாக! என்றார் மரீசி முனிவர். ராஜகுமாரனே! உலகநாயகனாக ஜனார்த்தனன் யாரைக் கடாட்சிக்கிறானோ அவனே, அக்ஷயமான திவ்விய ஸ்தானத்தை உடையவனாவான். என் வாக்கு சத்திய வாக்கென்று நினை! என்றார். அத்திரி முனிவர் ஆங்கிரசர், சராசராத்மகமான சகல பிரபஞ்சமும் எவனுடைய குட்சியில் இருக்கிறதோ, அந்தக் கோவிந்தனுடைய சரண கமலங்களை அர்ச்சனை செய்! சர்வ உன்னதப் பதவியை அடைவாய்! என்றார். பிறகு, புலஹ முனிவர், எவன் பரப்பிரமமும், பரமப்பிராப்பியமாகவும் சர்வ வியாபகனுமாக இருக்கிறானோ அந்த ஸ்ரீஹரியை ஆராதனம் செய்வதால், அத்தியந்தம் அசாத்தியமான மோட்சத்தையும் அடையலாம் என்றால் இதர ஸ்தானங்களை அடைவதற்கு என்ன சந்தேகம்? என்றார். அப்புறம் கிருதுமாமுனிவர் எவன் யக்ஞங்களாலே ஆராதிக்கப்படும் புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும், யக்ஞங்களுக்கு அதிபதியாகவும் இருக்கும் மகா புருஷனே, அந்த ஜனார்த்தனன் திருவுள்ளங்கொண்டானானால் அடையத் தகாத ஸ்தானமும் உண்டோ? என்றார். அதன் பிறகு, புலஸ்திய முனிவர், பூர்வத்திலே இந்திரன் ஜகத்பதியான எவனை ஆராதித்து சர்வ உன்னதமான இந்திரப்பதவியை அடைந்தானோ. அப்படிப்பட்ட யக்ஞேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவை ஆராதனை செய்! என்றார். பிறகு வசிஷ்ட முனிவர், குழந்தாய், ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதனை செய்வாயாகில் இதுவரையில் இல்லாத நூதனமான ஸ்தானம் ஒன்றை நீ மனத்தால் நினைத்தாலும், அதையும் சித்தமாக அடைவாய், அப்படியிருக்க முன்பே படைக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் உட்பட்ட மேலான ஸ்தானத்தை அடைவதற்குச் சந்தேகம் என்ன? என்று கூறினார். மாதவர்களே! தாங்கள் ஆராதக்க வேண்டிய அச்சுதனை அடியேனுக்குத் தெரியும்படி செய்தீர்கள், அவ்வெம்பெருமான் கிருபை செய்யும்படி ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும் ஆராதனை செய்யும் முறைகளையும் அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று துருவன் கேட்டான்.
ஓ ராஜபுத்திரனே! ஸ்ரீவிஷ்ணுவிடம் பக்தி செய்ய விரும்பும் மனிதன் முதலாவதாக விஷய அபிலாøக்ஷகளை நீத்து விட்டு மனதை நிர்மலமாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மனதை முகுந்தனுடைய சரணாரவிந்தங்களிலே தன்னுள்ளே நிச்சலமாகச் சேர்ந்து, வேறு நினைவில்லாமல் அந்தத் திருவடிகளையே பாவித்துக்கொண்டு, தூயவனாய், வியஷ்டி சமஷ்டி ரூபமாய் பிரகிருதியும் புருஷனும் சரீரமாகவுமுள்ள சுத்த ஞானமயனான வாசுதேவனுக்கு தெண்டன் சமர்ப்பிக்கிறேன் என்ற பொருளையுடைய மகாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும். உனது பிதாமகனான சுயாம்புவமநுவானவர் இந்த மகாமந்திரத்தினாலே ஜனார்த்தனனை உபாசித்தார். அதனால் பகவான் திருவுள்ளம் உகந்து, அந்த மநுவுக்கு அவர் விரும்பியபடியே திரிலோக துர்லபமான ஐசுவரியத்தைப் பிரசாதித்து அருளினார். நீயும் அப்படியே அந்த மகாமந்திரத்தை ஜெபித்து ஸ்ரீயப்பதியை ஆராதனை செய் என்று மகரிஷிகள் கூறினார்கள்.
12. சிறுவன் துருவனின் பெருந்தவம்!
சப்தரிஷிகளிடமும் உபதேசம் பெற்ற துருவன் மனமகிழ்ந்து அவர்களை வணங்கி விட்டு, யமுனை நதி தீரத்திலிருந்த மதுவனத்துக்குச் சென்றான். அங்கு மாமுனிவர்கள் உபதேசித்த வண்ணம் ஸ்ரீவிஷ்ணுவைத் தனது இதய கமலத்தில் தியானித்துக் கொண்டிருந்தான். இப்படியே ஒரே நினைவாகத் தியானம் செய்துகொண்டிருந்த துருவனின் சித்தத்தில் சர்வ பூதங்களிலும் உள்ளவனான ஸ்ரீஹரிபகவான் அதிகப் பிரகாசமாய்த் தோன்றியருளினார். மைத்திரேயரே! இவ்விதம் அந்தப் பரமயோகியான துருவனுடைய இதயத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருந்ததால் சகலத்தையும் தரிக்கிற பூதேவி, அந்தப் பரமயோகியைத் தாங்கமாட்டாமல் இருந்தாள். பூமியில் துருவன் தன் இடக்காலை ஊன்றி, வலக்காலை மடித்துத் தவம் செய்தபோது, பூமியானது இடதுபக்கத்தில் தாழ்ந்தும், வலக்காலை ஊன்றிய போது வலப்பக்கம் தாழ்ந்தும் நின்றது. பிறகு துருவ யோகி ஒரே பாதத்தில் எட்டை விரலால் பூமியில் நின்றபோது, பூமண்டலமே மலைகளுடன் நடுங்கியது. மகா நதிகளும் சப்த சாகரங்களும் கலங்கிப்போயின. இவ்விதமாக மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் கலக்கம் உண்டானதைக் கண்டு, அந்த மநுவந்திரத்திலே இருந்த யாமர் என்னும் தேவதைகள் சித்தங்கலங்கினர். அவர்கள் இந்திரனுடன் ஆலோசித்துத் துருவனுடைய தியானத்திற்கு விக்கினம் செய்ய முயன்றார்கள். இந்திரனின் கட்டளையை ஏற்ற கூசுமாண்டங்கள் என்னும் பயங்கர பூதகணங்கள் அந்த மகாயோகியான துருவனின் தவத்தைக் கலைக்கப் பல மாயங்கள் செய்தன. எப்படியெனில், துருவனுக்குத் தாயான சுநீதியின் சொரூபத்தைத் தரித்த மாயை ஒன்று துருவனிடம் வந்து, மகனே! உன் உடல் அபாயமடைய்கூடிய கொடிய தவத்தை உடனே நிறுத்து! ஐயோ மகனே! அநேக காலம் தவமிருந்து உன்னைப் பெற்றேனடா? அனாதையும் பேதையுமான என்னைத் தனியே அலைய விட்டு மாற்றாந்தாயின் பேச்சிற்காக, நீ இப்படி வருவது நியாயமோ? கதியற்ற எனக்கு நீ அல்லவா கதி! ஐந்து வயதுப் பாலகனான நீ எங்கே? மிகவும் கடுமையான இந்தத் தவம் எங்கே? பயனற்ற இந்த முயற்சியிலிருந்து உன் மனதைத் திருப்பிக்கொள். அப்பனே! நீ விளையாடுகிற பருவமடா இது! இதற்குப் பிறகு வேதங்களை அத்தியனஞ்செய்யும் காலம்! அதன்பிறகு மோகானுபவங்களுக்குரிய காலம். அதன் பிறகே தவஞ்செய்வதற்குரிய காலமாகும்! விளையாடும் காலத்தில் ஆன்மக்கிலேசமான தவஞ் செய்வது நல்லதல்ல. தாயான என் வார்த்தையைக் கேட்டு; இந்தப் பிராயத்துக்குத் தக்கபடி, என்னுடன் வரவேண்டியது தான் உனக்கு நியாயம். இந்த தவத்தை விடாமற் போனால் நான் இப்போது உன் எதிரில் என் பிராணனை விட்டு விடுகிறேன் என்று இப்படியாகத் தன் கண்களிலே கண்ணீர் தாதை தாரையாகப் பெருகக் கதறியழுது கொண்டு நின்றாள். மாயையான சுநீதியை தன் முன்னால் கண்டும், துருவன் ஸ்ரீமந்நாராயணனின் திவ்விய திருவடிகளிலேயே சித்தத்தை வைத்திருந்ததால், கண் திறந்து பார்க்கவில்லை. பிறகு அந்த மாயா சுநீதி துருவனை நோக்கி, குழந்தாய்! கோர அரக்கர்கள் உன்னைச் சம்கரிப்பதற்காகக் கதை கட்கம் முதலான ஆயுதங்களோடு வருகிறார்கள். இப்பொழுதே உன் தவத்தை விட்டுவிட்டு ஓடிவா! என்று சொல்லி விட்டு மறைந்து போனாள். பிறகு பலவித ஆயுதங்களுடன் அக்கினிச்சுவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றினார்கள். அவர்கள் போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக்கொண்டு அகோரமாக ஊளையிட்டன.
சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள் என்று பெருங்கூச்சலிட்டுப் பயமுறுத்தினார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதை லயப்படுத்தியதால், அப்பூதகணங்களின் சப்தங்களும் பயமுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற் போயின. அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திர சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்து கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக்கண்ட தேவதைகள் அந்த மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, ஜகத்தாரகண பூதனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, தேவதேவனே! துருவனின் தவ வலிமையினால் நாங்கள் தகிக்கப்படுகிறோம். அதனால் உம்மைச் சரணடைந்தோம் சந்திரன் தினந்தோறும் தனது கலைகளினால் அபிவிருத்தியடைவதைப் போல, உத்தானபாதனின் மகன் துருவனும் தவச்சிறப்பால் வளர்ந்து வருகிறான். ஆகையால் நாங்கள் பயப்படுகிறோம். அந்தப்பாலகன், இந்திர, வருண, குபேர, சூரிய சந்திராதிகளுடைய பதவிகளிலே எதைக்கேட்பானோ தெரியவில்லை. ஆகையால் அவனுடைய தவத்தை நிறுத்தி; எங்களுடைய கவலையைத் தீர்க்க வேண்டும்! என்றார்கள். அவர்களை மகாவிஷ்ணு கடாட்சித்து, சிறுவன் துருவன் பெருந்தவம் புரிகிறான் என்றாலும் இந்திரன், சூரியன், சந்திரன் ஆகியோரது அதிகாரங்களில் எதையும் அவன் விரும்பவில்லை. அவனது மனோரதத்தை நான் அறிவேன். ஆகையால் நீங்கள் கவலைப்படாமல், உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள். நான் துருவனுக்கு இஷ்டமான வரத்தைக் கொடுத்து அவனது தவத்தை நிறுத்துகிறேன் என்று அருளிச்செய்தார். பிறகு, தேவர்கள் திருமாலிடம் விடைபெற்றுச் சென்றார்கள். அதன் பின்னர் சர்வாத்மகனான எம்பெருமான் துருவனுடைய ஒன்றித்த தியானத்துத் திருவுள்ளம் உவந்து நான்கு திருத்தோளுடைய திருமேனியோடு துருவன் முன்பு காட்சி கொடுத்து உத்தானபாதனின் மகனே! உனக்குச் சுபமுண்டாகக் கடவது. உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்து, உனக்கு விருப்பமான வரத்தைத் தருவதற்கே நான் வந்தேன். நீ உனது சித்தத்தை என் மீது நிலையாக நிறுத்தியதால் நான் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேட்பாயாக! என்றார். துருவன் கண்களைத் திறந்து தான் தியானித்த விதத்திலேயே சங்கு சக்கரம் கதை கட்கம் சாரங்கம் முதலிய பஞ்சாயுதங்களோடும், கிரீட வனமாலிகா கௌஸ்துப பீதாம்பர அலங்காரத்தோடும் எழுந்தருளிய ஸ்ரீயப்பதியைக் கண்டு பூமியில் விழுந்து தெண்டனிட்டு; மெய்சிலிர்க்க பயபக்தியுடன் தேவதேவனான ஸ்ரீமந்நாராயணனைத் துதி செய்யலானான்.
இந்த மகாபுருஷனைக் குறிப்பிட என்ன வாக்கியத்தை சொல்வேன்? யார் சொன்னது போலத் துதிப்பேன்? என்று துருவன் மனங்கலங்கி, ஒன்றுமே தோன்றாமல் விஷ்ணு பகவானைச் சரணடைந்து ஸ்வாமி ஷட்குண ஐசுவரிய சம்பன்னனே! அடியேனது தவத்துக்குத் திருவுள்ளம் உகந்தீரானால் உம்மையே ஸ்தோத்திரம் செய்ய நினைக்கும் எனக்கு அதற்கேற்ற ஞானத்தை வழங்கியருள வேண்டும். வேதாந்த வேதிகளான பிரமாதிகளும் உமது மகிமையைச் சொல்ல வல்லவர்களல்லர். அப்படிப்பட்ட உம்மைப் பாலகனான நான் எப்படித் துதிப்பேன்? அடியேன் மனது மது சரண கமலங்களிலே பதிந்து, பக்தியுடன் உம்மைத் துதிக்கவே விரும்புகிறது. ஆகையால் அடியேனுக்கு அதற்கேற்ற ஞானோதயத்தை தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க, ஸ்ரீகோவிந்தன், சகல வித்யாமயமான தமது பாஞ்சசன்யத்தினாலே, அப்பாலகனின் முகத்தில் ஸ்பரிசித்து அருளினான். துருவனுக்கு ஞானோதயமானதால் அவன் பிரசன்ன முகத்துடன் தெண்டனிட்டு பிரிதிவி அப்பு தேஜசு, வாயு, ஆகாயங்களும் தன்மாத்திரைகளும் மனசும், மற்றுமுள்ள இந்திரியங்களும் மகத்தகங்காரங்களும் மூலப்பிரகிருதியும் எவனுடைய ரூபங்களோ, அந்தச் சர்வேஸ்வரனான விஷ்ணு பகவானுக்குத் தெண்டனிடுகிறேன்! இயல்பிலேயே தூய்மையானவனாய், சூட்சும ரூபியாய், ஞானத்தால் எங்கும் வியாபித்திருப்பவனாய், பிரகிருதிக்கும் பரனாக இருக்கும் புருஷனும் எவனுடைய ரூபமாக இருக்குமோ, அந்தக் குணாகரனான புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்! பிருதிவி முதலான பூதங்களும், சந்தாதி குணங்களும், புத்தி முதலியவைகளும், சம்சாரியான ஜீவனும் ஆகியவர்களைக் காட்டிலும் பரனான மூத்த புருஷன் எவனுடைய ரூபமாக இருக்குமோ அத்தகைய ஜகத்பதிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்! பிரம லக்ஷ்ணமுள்ளதாய் சகல உலகத்திற்கும் அதிபதியாய் தூய்மையானதாயுள்ள உமது சொரூபத்துக்கு வணக்கம். சர்வாத்மகனே! சமஸ்த சக்திகளும் அமைந்துள்ள பிரகத்துவத்தினாலும் ஜகதாகாரத்தினாலும் மகாப்பிரமாணமாக இருப்பதாலும், பிரமம் என்ற நாமதேயமுடையதாய், விகாரமில்லாதாய், யோகி சிந்தியமாய் விளங்கும் உமது திவ்விய சொரூபத்துக்கு வணக்கம். நீரே சகஸ்ர சிரசுகளும், ஆயிரம் பாதங்களும், ஆயிரம் கண்களும் உடையவராய், புருஷராய், சர்வத்தையும் வியாபித்து, பூமியென வழங்கும் சராசரமயமான பிரபஞ்சத்தைவிடப் பதின்மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளீர்! புரு÷ஷாத்தமனே! விராட்டு என்று வழங்கப்பட்ட அவ்யக்த சரீரகனான அநிருத்தனும் ஸ்வராட்டு என்று சொல்லப்பட்ட கேவல ஆத்ம பிராப்தியுள்ளவனும், சம்ராட்டு என்று சொல்லப்பட்ட பிரமதேவனும், உம்மிடமிருந்தே உண்டானார்கள். சமஷ்டி தேகனான ஹிரணியகர்ப்பன் என்ற அந்தப் புருஷன் பிரிதிவிக்கு அதோ பாகத்திலும் பாரிச தேகத்திலும், ஊர்த்துவ தேகத்திலும் வியாபித்துள்ளான். உம்மிடத்திலேயே பிரபஞ்சங்களெல்லாம் உண்டாயின. இவ்விதம் உம்மால் படைக்கப்பட்டு உம்முடைய ரூபமாயிருக்கிற இரணியகர்ப்பனு தரத்திலே அகில பிரபஞ்சங்களும் அடங்கியிருப்பதால் எல்லாமே உமக்குள்ளே என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமோ? யாவும் ஓமஞ்செய்யப் பெற்ற யாகமும், பிரஷதாச்சியம் என்ற அவிசும் கிராமியங்கள் ஆரணியங்கள் என்ற இருவிதமான பசுக்களும், ரிக்கு, யஜுர், சாம வேதங்களும் சந்தங்களும் அசுவங்களும், அஜாதிகங்களும், ஒற்றைப்பல் வரிசையுள்ள ஜந்து சாதங்களும் மிருகங்களும் உம்மிடத்தலேயே உண்டாயின.
இன்னும் உம்மிடத்திலேயே உண்டாகவும் போகின்றன. உமது வானத்திலே பிராமணர்களும் உமது புயங்களில் க்ஷத்திரியர்களும், கண்களிலே சூரியனும், மனதிலே சந்திரனும், பிராணத்திலே வாயுவும், முகத்திலே அக்கினியும், நாபியில் அந்தரிட்சமும் சரீரத்திலே சொர்க்கமும், கர்ணங்களிலே திசைகளும் பாதங்களிலே பூமியும் உண்டாயின. அது விஸ்தீரணமுள்ள ஆலமரம், அதிக நுண்ணிய பீஜத்திலே அடங்கியிருந்தாற்போல, மகத்தான இந்தப் பிரபஞ்சம் எல்லாம் பிரளய காலத்திலே ஆதிகாரண பூதனான உம்மிடத்திலேயே அடங்கியிருந்தன. வடவிருட்சம் மறுபடியும் விதையிலிருந்து தோன்றிச் சாகோபசாகமாக விஸ்தாரமாவது போல், படைப்புக் காலத்திலேயே பிரபஞ்சம் எல்லாம் உம்மிடத்திலிருந்தே உண்டாகிப் பரவின. ஜகந்நாயகனே! பட்டைகள் ஒன்றின்மேல் ஒன்றாய் மூடப்பெற்று, ஏகாதாரமாகத் தோன்றும் இளவாழைக் கன்றே பெரிதானதும் வேறாகாமல் இருப்பதுபோல, சூக்ஷ்ம சிதசித்தர்களோடு கூடிக் காரணரூபமான உம்மைக் காட்டிலும் ஸ்தூல சிதசித்துக்களின் ரூபமாய்க்காரியமான இந்தப் பிரபஞ்சம் வேறாகாமல் இருக்கிறத. சுத்த ஆனந்தம் இடைவிடாமல் நிகழ்வதும் எப்பொழுதும் ஒரே விதமாயிருக்கிற ஞானமும் உம்மிடத்தில் உண்டு இப்படியல்லாமல் மகிழ்ச்சியும் துக்கமும் உண்டாக்குவதும் சுத்த துக்கத்தை உண்டாக்குவதுமான ஞானங்கள் உம்மிடம் இல்லை. ஏனெனில் பிராகிருதங்களான சத்துவாதி குணங்களோடு நீங்கள் கலப்பில்லாமல் அப்பிராகிருத சுத்தசத்துவ மயனாக இருக்கிறவரல்லவா? பிரபஞ்சத்துக்கு வேறாய் நிற்கின்ற ஒரே ஆத்மாவாய், சர்வபூத சரீரகனாய் விளங்கும் உமக்கு வந்தனஞ் செய்கிறேன். சூட்சும பிரகருதியும் ஸ்தூலப் பிரகிருதியும் புருஷனும் விராட்டு; ஸ்வராட், சம்ராட்டு என்பவர்களும் எல்லாம் நீரே அல்லவா? எல்லோருடைய அந்தக் கரணங்களிலேயும் அக்ஷயமான ஞானமயனாகப் பிரகாசிப்பவரும் நீரே அன்றே நீரே அதனதன் சாரமாக எல்லாவற்றிலும் இருக்கிறீர்? உம்மிடத்திலேயே சர்வமும் இருக்கின்றன. ஆகையால் சர்வாத்மகனான உனக்குத் தெண்டனிடுகிறேன்! எல்லாவற்றுக்கும் காரணமாய் எல்லாவற்றிலும் வியாபித்து எல்லாவற்றினுள்ளேயும் இருக்கின்றவர் நீரே! ஆகையால் நீரே என் மனோரதத்தை அறிந்திருப்பீர். ஆகையால், அடியேன் விண்ணப்பம் செய்ய வேண்டுவது என்ன? சுவாமி, உம்மைப் பிரத்யட்சமாகக் கண்டு தெண்டன் சமர்ப்பித்தேனாகையினால் அடியேனது மனோரதங்கள் நிறைவேறின அடியேனது தவமும் பலித்தது. நான் கிருதார்த்தனானேன்! என்று துதி செய்து நின்றான். அவனை நோக்கி விஷ்ணு புன்முறுவலுடன், அரசகுமாரனே! என்னைக் கண்டு வணங்கியதால் உன் தவம் பலித்தது சரிதான், ஆயினும் நான் உனக்கு சேவை கொடுத்தது வீணாகக் கூடாது. ஆகையால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக. நான் பிரத்யட்சமானோனானால் எவருக்குமே சகல மனோரதங்களும் கைகூடும்! என்றார்.
தேவதேவனே! சர்வபூத அந்தர்யாமியான உமக்கு அடியேனது விருப்பம் தெரிந்தேயிருக்கும் இருப்பினும் நீரே நியமித்ததால் விண்ணப்பிக்கிறேன். இந்திரன் உமது அனுக்கிரகத்தினால் அல்லவோ, திரிலோக ராஜ்யத்தை அனுபவிக்கிறேன்? ஜனார்த்தனனே! சுருசியானவள் தனது கர்ப்பத்தில் நான் பிறவாததால் ராஜருக்குத் தகுதியான சிங்காதனத்துக்குநான் அருகனல்ல என்று என்னைப் பார்த்து இறுமாப்புடன் ஏளனம் செய்தாள். ஆகையால் ஜகத்துக்கு ஆதாரமும் சர்வ உத்தமும் அவ்யயமுமான உன்னத ஸ்தானத்தை அடையவே நான் விரும்புகிறேன். இதற்கு தேவரீர் திருவருள் புரிய வேண்டும்! என்றான் துருவன். ஸ்ரீபகவான், துருவனைக் கடாட்சித்து, பாலனே! நீ விரும்பிய பதவியை அடையக் கடவாய், இதற்குக் காரணம் வேறொன்றுண்டு சொல்கிறேன் கேள். பூர்வ ஜன்மத்திலே நீ ஒரு பிராமணனாகப் பிறந்து, தாய் தந்தையருக்குப் பணிவிடைகள் செய்தும், ஏகாக்கிர சித்தத்துடன், என்னையும் ஆராதித்து வந்தாய். சிலகாலம் சென்ற பிறகு, உனக்கு யௌவன வயது வந்தபோது, சர்வாபரண பூஷிதனும் சகல போக சம்பன்னனும் மகா சுந்தர தேகமுடையவனுமான ஒரு ராஜகுமாரன் உனக்கு நண்பனானான். அப்போது நீ அவனுடைய ஐசுவரிய போகங்களைக் கண்டு ஆசைப்பட்டு, ராஜபுத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று இச்சித்தாய். ஆகையால் உன் மனோரதத்துக்கு ஏற்றதாக உனக்குத் துர்லபமான உத்தானபாதனது மாளிகையில் பிறந்தாய். என்னைத் துதியாத மற்றவர்களுக்கு ஜகத் பூசிதமான சுவாயம்புவமநுவின் வமிசத்தில் பிறவியுண்டானது கிட்டாததாகும். இப்பொழுதும் நீ அத்யந்த பக்தியால் என்னை மகிழ்வித்தாய். என்னிடத்தில் சித்தத்தை நிறுத்தி என்னைத் தியானித்த மனிதன் அதிசீக்கிரத்தில் சர்வோத்தமனான மோட்சத்தை அடைவானானால், அற்பமான சொர்க்காதி பயன்களை அடைவதில் விந்தையில்லை. நீயும் எனது அனுக்கிரகத்தினால் மூன்று உலகங்களுக்கும் மேன்மையானதாய் சந்திர, அங்காரக, புத, பிரகஸ்பதி ஸ்தானங்களுக்கும், நட்சத்திர மண்டலத்துக்கும், சப்த ரிஷிகளின் மண்டலத்திற்கும் விமானரூடராய்ச் சித்தர்கள், சஞ்சரிக்கிற ஸ்தானங்களுக்கும் அதியுன்னதமாய் திகழும் ஸ்தானத்தை அடைந்து, சுகமாய் இருப்பாயாக. தேவதைகளில் சிலர் நான்கு யுகங்கள் வரையிலும் சில மநுவந்தரப் பரியந்தமுமல்லாமல் அதிக காலம் இருக்கமாட்டார்கள். நீயோ எனது கிருபையால், கல்ப காலம்வரை அந்தச் சர்வ உன்னத ஸ்தானத்தில் சுகமாக இருக்கக் கடவாய். உன்னுடைய தாயான சுநீதியும் திவ்ய விமானத்தில் ஏறிக்கொண்டு, நட்சத்திர ரூபமாய் பிரகாசித்துக் கொண்டு கல்பாந்த பரியந்தமும் உன் அருகிலேயே இருக்கக் கடவள். வானத்திலே துருவ நட்சத்திரமாய்த் திகழும் உன்னை எவனாகிலும் அதிகாலையிலும் மாலையிலும் மனவுறுதியுடன் கீர்த்தனம் செய்வானாகில் அவன் மகாபுண்யத்தைப் பெறுவான் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இவ்விதமாக திருமாலிடம் வரம் பெற்ற துருவன், சர்வலோகன்னத ஸ்தானத்தை அடைந்தான். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்ததனாலும் தவச்சிறப்பாலும், ஸ்ரீமத்துவாத சாக்ஷர மகாமந்திர மகிமையினாலும் மகான்மாவான துருவனுக்கு உண்டான அபிமானத்தையும், ஐஸ்வரியத்தையும் பார்த்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் மகிழ்ந்து, சப்த ரிஷிகளும் எந்த மகாத்மாவை குறித்துக்கொண்டு சஞ்சரிக்கின்றனரோ, அந்தத் துருவனது மேன்மையான தவத்தின் சிறப்பை என்னவென்று சொல்வேன்? இது வெகுவிந்தையானது இந்தப் பிரபாவத்தைக் கொண்டாட யாராலே ஆகும்? இதமும் சத்தியமுமான வாக்குள்ள துருவனின் தாயான சுநீதியின் மகிமையை வர்ணிக்கத்தக்க கவிகளும் உலகில் உண்டோ? அந்தப் பெண்ணரசி துருவனைக் கர்ப்பத்தில் தரித்ததால்; சர்வ உத்தமும் நிலையான தன்மையும் உடைய அந்தத் திவ்விய ஸ்தானத்தையடைந்தாள் என்ன அதிர்ஷ்டம்! என்ன விந்தை! என்று சில கவிகளால் துதித்தார். மைத்ரேயரே! துருவன் சர்வோன்னதமான பதவியைப் பெற்றதைக் கண்டு எந்த மனிதன் கீர்த்தனம் செய்வானோ, அவனது சகல பாவங்களும் நிவர்த்தியாகும். சொர்க்கலோகத்தில் வாசஞ்செய்வான். அன்றியும் அவன் வானத்திலும் பூமியிலும் ஸ்தானப் பிரஷ்டமாகாமல் சகல சவுபாக்கியமும் கொண்டவனாய்த் தீர்க்காயுளுடன் வாழ்வான்!
13. பிருது சக்கரவர்த்தியின் சரிதம்
துருவ சரித்திரத்தை பராசரர் கூறிவிட்டு அந்த வமிசத்தின் வரிசையையும் கூறலானார். அருந்தவஞ் செய்து ஸ்ரீமந் நாராயணனுடைய கிருபையினால் சர்வ உத்தமமான பதவியை அடைந்த துருவன், சம்பு என்பவளை திருமணம் செய்து கொண்டான். அவனுக்கு சிஷ்டி, பவியன் என்ற பிள்ளைகள் இருவர் பிறந்தார்கள். அவர்களில் சிஷ்டி என்பவன், சுச்சாயை என்பவளைத் திருமணம் செய்து கொண்டு ரிபு, ரிபுஞ்சயன், ரிப்பிரன்; விருகலன், விருக தேஜசன் என்னும் பிள்ளைகள் ஐவரைப் பெற்றான். அவர்களில் ரிபு என்பவன் பிரகதீ என்ற மனைவியிடத்தில் சாட்சுஷன், சர்வதேஜசன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் சாட்சுஷன் வருண சந்ததியில் பிறந்தவரும் வீரணாப் பிரஜாபதிக்கு மகளுமான புஷ்கரணியிடத்தில் ஆறாவது மநுவந்தரத்துக்கு அதிபதியான மநுவைப் பெற்றான். அந்த மநுவுக்கு வயிராசன் என்ற பிரஜாபதியின் மகளான நட்வளை என்பவளிடத்தில் ஊரு பூரு, சதத்தியும்னன், தபஸ்வி, சத்தியவான், சுசி, அக்கினிஷ்டோமன், அதிராத்திரன், சுத்தியும்னன், அபிமன்யு என்னும் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். ஊரு என்பவன், அக்கினியின் குமாரியை மணந்து மகா தேஜசுடைய அங்கன் சுமனசு, சுவாதி, கிரதி அங்கிரசு, சிபி என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அங்கனுக்கு மிருத்து புத்திரியான சுநீதை என்பவளிடத்தில் வேனன் என்பவன் பிறந்தான். மகாமுனிவர்கள் புத்திரார்த்தமாக அந்த வேனன் என்பவனது வலது கையைக் கடைந்தனர். அப்போது அதனிடமிருந்து பிருது என்பவன் பிறந்தான். அவன் பிரஜைகளின் நன்மைக்காக தேனு ரூபம் தரித்த பூமியிலிருந்து வேண்டிய பொருள்களைக் கறந்து கொடுத்தான்! இவ்வாறு பராசரர் கூறிவரும்போது, மைத்ரேயர் குறுக்கிட்டு முனிவரே! வேனனுடைய வலது கரத்தை மகரிஷிகள் கடைந்தார்களே. அதிலிருந்து பிருது என்பவன் எப்படித் தோன்றினான்? அதை விவரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டார்.
பராசரர் கூறலானார்: மைத்ரேயரே! மிருத்துவுக்கு முதல் மகளான சுருதை என்பவள், அங்கன் என்னும் அரசனுக்கு மனைவியாகி வேனன் என்ற புதல்வனைப் பெற்றாள். அந்த வேனன் மிருத்துவின் தோஷத்தினால் குணவீனனாய்ப் பால்யம் முதல் துஷ்ட சுபாவமுடையவனாகவே இருந்தான். அவன் பட்டாபிஷேகம் செய்து கொண்டது முதல் யாரும் இன்று முதல் யக்ஞங்களைச் செய்ய வேண்டாம். தானங்கள் கொடுக்க வேண்டாம் ஓமங்கள் செய்யவேண்டாம். நானே யக்ஞங்களுக்கு அதீஸ்வரன்! என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்று பறையறைவித்தான். அதைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் அந்த அரசனிடம் சென்று, அரசே! நாங்கள் தேசத்துக்கும் மக்களுக்கும் இதமான தீர்க்க சத்திர யாகம் செய்து, யக்கிய ஈசுவரனான ஸ்ரீஹரியை ஆராதிக்கிறோம். அதனால் உனக்கும் யக்ஞ பாகத்தில் பங்கு கிடைக்கும். யக்ஞ புருஷனான ஸ்ரீமந்நாராயணன், நாங்கள் செய்யும் வேள்வியினால் திருவுள்ளம் உவந்து, உனக்குச் சகல பீஷ்டங்களையும் வழங்கியருள்வான். எவனது ஆட்சியில் யாகாதி சத்கருமங்களாலே யக்ஞேசுவரனான புரு÷ஷாத்தமன் பூஜிக்கப்படுவானோ அந்த அரசனுக்கு அவ்வெம்பிரான் சகல மனோரதங்களையும் அருள்வான்! என்று நயமாகக் கூறினார்கள். அதற்கு மன்னன் வேனன், என்னைவிட அர்ச்சிக்கத் தகுந்தவன் வேறு யார் உண்டு? யக்ஞேசுவரன் என்று நீங்கள் கூறும் அந்த ஹரி என்பவன் யார்? பிரேமா, விஷ்ணு, சிவன், இந்திரன், யமன்! வருணன், குபேரன், வாயு, அக்கினி, சந்திரன்! சூரியன், பூமி என்ற தேவர்களும், மற்ற சுபானுக்கிரக ஆற்றலுடைய யாவரும் அரசனுடைய சரீரத்திலேயே இருக்கின்றனர். ஆகையால் மன்னவனே சர்வதேவ சொரூபி என்று சாஸ்திரங்கள் கூறுவதை அறிந்தே நான் கட்டளையிட்டான். ஆகவே, கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். மங்கையர் தங்கள் கணவருக்குப் பணிவிடை செய்வதே முக்கிய தருமம் என்பது போல், அரசனாகிய என்னுடைய ஆக்ஞையை ஏற்று நடப்பதே உங்களுக்குத் தர்மமாகும் என்றான். அரசே! யக்ஞங்கள் செய்ய எங்களுக்கு அனுமதியுங்கள். தர்மத்தை நாசஞ்செய்ய வேண்டாம். சராசராத்மகமான பிரபஞ்சங்கள் எல்லாம் வேள்விகளிலே ஓமஞ்செய்யும் அவிசினாலேயே செழிப்படைகின்றன! என்றார்கள் ரிஷிகள். அவர்கள் கூறியதற்கு வேனன் இணங்காமல் பிடிவாதமாகவே இருந்தான். அதனால் முனிவர்களுக்கு கோபம் பொங்கியது. அவர்கள், இவன் ஆதியந்தமில்லாதவனும் ஜகத்பிரபுவும் யக்ஞ புருஷனுமான ஸ்ரீயப்பதியை இகழ்கிறான் அல்லவா? இவன் ராஜ்ய பரிபாலனத்துக்குத் தகுந்தவனல்ல; இந்தத் துராத்மாவைக் கொன்றாலும் நமக்குப் பாவம் வராது! என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு, மந்திரங்களால் சுத்தி செய்யப்பட்டிருந்த குச தர்ப்பைகளாலே அந்த அரசனை அடித்தார்கள். அவன் பூர்வத்திலேயே; சர்வேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவையும் அவனது மகிமையை விளக்கும் வேதத்தையும் அவனது ஆராதனையான யாகத்தையும் நிந்திப்பதாகிய அக்கினியால் தகிக்கப்பட்டிருந்ததால் முனிவர்களின் தருப்பைப் புல்லின் அடிபட்டவுடனே உயிர் இழுந்து கீழே விழுந்தான்.
அந்த சமயத்தில் நான்கு திசைகளிலும் ஏராளமான துன்பும் தூசியும் பறந்து ஆகாயம் எங்கும் வியாபித்தது. அதைக் கண்ட மகரிஷிகள் அங்கிருந்த மக்களைப் பார்த்து; இந்தத் தூசி என்ன காரணத்தால் உண்டாயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு ஜனங்கள், உங்களால் பூமண்டலம் அராஜகமானதினால் அனேக ஜனங்கள் ஆங்காங்கே பிரவேசித்துப் பிறருடைய திரவியங்களை அபகரிப்பதற்காக வேகமாய் வருகிறார்கள். அத்தகைய கள்ளர்களின் கால்பட்ட வேகத்தினால் தூளிப்படலமாகிய இந்தத் தூசியும் தும்பும் தோன்றியது? என்றார்கள். அதைக்கேட்ட முனிவர்கள் ஆலோசித்து, ஒரு புத்திரனை உண்டாக்க வேண்டுமென்று தீர்மானித்து அபுத்திரனான வேனனது தொடையைக் கடைந்தார்கள். அப்போது அதிலிருந்து எரிந்த கட்டையைப் போன்ற கறுப்பு நிறமும் விகாரமான முகமும், குட்டையான உடலும் கொண்ட ஒரு மனிதன் தோன்றி, முனிவர்களை நோக்கி, நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அவர்கள் நிஷீத (உட்கார்) என்று சொன்னார்கள். அதன் காரணமாக அவன் நிஷாதன் என்ற பெயரைப் பெற்றான். விந்தியமலை வாசியரான வேடர்கள் அவனது பரம்பரையில் உண்டானார்கள். ஆகையால் அவர்கள் நிஷாதர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாக மன்னன் வேனனின் பாபங்களெல்லாம் ஒருங்கே திரண்டு புருஷாகாரமாகப் பிறந்தன. அன்று முதல் நிஷாத ஜாதி உலகத்தில் உண்டாயிற்று. அதன் பிறகு முனிவர்கள் வேனனுடைய வலதுகையைக் கடைந்தார்கள். அந்தக் கையிலிருந்து அக்கினியைப் போல் ஜொலிக்கும் திவ்ய தேஜோவிராஜிதனும் மகாப் பிரதாபம் கொண்டவனுமான ஒரு குமாரன் தோன்றினான். பிருது மாமன்னன் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்பட்டது, அவன் பிறந்ததுமே ஆகாயத்திலிருந்து அசகவம் என்ற ஒரு வில்லும் திவ்வியமான பாணங்களும் விழுந்தன. அவற்றை பிருது கைக்கொண்டான். அவன் தோன்றியதுமே சகல பூதங்களும் பெருமகிழ்ச்சியடைந்தன. வேனனும் சற்புத்திரன் உண்டானதால் புத்து என்ற நரகத்திலிருந்து நீங்கிச் சொர்க்கத்தையடைந்தான். அப்போது சமுத்திரங்களும் நதிகளும் பிருதுவுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனித நன்னீரையும் திவ்விய ரத்தினங்களையும் கொண்டு வந்து வணங்கி நின்றன. பிரமனும் ஆங்கிரசர் என்னும் தேவதைகளோடும் சகல பூதங்களோடும், வந்து வேனனுடைய மகனான பிருது சக்கரவர்த்தியைச் சகல பூமண்டலங்களுக்கும் அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்தான். அப்போது பிருது சக்கரவர்த்தியின் வலது கையில், சக்கரம் இருப்பதை பிருமா பார்த்து, இவன் நாராயண அம்சமுடையவன் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார். மைத்ரேயரே! எவருடைய வலது ஹஸ்தத்தில்; விஷ்ணு சின்னமான சக்கரரேகை காணப்படுமோ அவர்கள் தேவர்களாலும் வெற்றி பெறக்கூடாத பராக்கிரமமுடையவர்களாய்; மாமன்னர்களிலே உயர்ந்தவராய் விளங்குவார்கள்.
இவ்விதம்; பிருது சக்கரவர்த்தி முடிசூட்டிக்கொண்டு, முறைப்படி ஆட்சி செலுத்தி வரும்போது, அவனது தகப்பனான வேனனுடைய உபத்திரவத்தினால் வருந்திய மக்கள், இவனது நற்குணங்களைக் கண்டு மகிழ்ந்தனர். பிரஜைகளைக் காத்து, அவர்களுடைய அன்பைப் பெற்றதால்; அவன் அவனிராஜன் என்று வழங்கப்பட்டான். அவன் தேரில் ஏறிப் புறப்படும்போது சமுத்திரங்கள் இரையாமல் ஸ்தம்பித்தன. பர்வதங்கள் எல்லாம் அவனுக்கு வழிவிட்டு நின்றன. அவனது விருதுக்கொடிகள் கிளைகளிலே படுமே என்ற பயத்தினால் உயர்ந்த மரங்கள் தணிந்து நின்றன. பூமி உழாமலே விளைந்தது. நினைத்த மாத்திரத்திலேயே பயன்கள் சித்தித்தன. பசுக்கள் வேண்டும் அளவு பாலைச் சுரந்தன. இலை மடிப்புக்களில் எல்லாம் தேன் நிறைந்திருந்து பிரும்மாவைக் குறித்துச் செய்த வேள்வியிலே, இந்தப் பிருது மாமன்னன் தோன்றியவுடனே, அந்த யக்கியத்தின் சுத்தியா காலத்தில் சூதனும் மாகதனும் தோன்றினர். இப்படிப் பிறந்த சூதமாகதர்களைப் பார்த்து மகாமுனிவர்கள், பிரதாப சாலியான பிருது மன்னனை அவனது குணகர்ம வரலாறுகளைச் சொல்லித் துதியுங்கள்! இவன் துதிப்பதற்குத் தகுந்தவன் என்று கட்டளையிட்டார்கள். சூதமாகதர் தயங்கி, முனிவர்களே! இவர் இப்போது தானே பிறந்தவர்? ஆகையால் இவரது குணங்களையும் புகழையும் நாங்கள் அறியோமே! எதைச் சொல்லி, நாங்கள் இவரைப் புகழ்வோம்? என்று கேட்டார்கள். அதற்கு முனிவர்கள், இவன் சக்கரவர்த்தியும் மிக வலிவுடையவனுமாகி, உலகத்துக்கு இதமான பல செயல்களைச் செய்வான்! ஆகையால் இவனுக்கு இனிமேல் விளங்கத்தக்க குணங்களைப் பற்றித் துதி செய்யுங்கள்! என்றார்கள். அதைக்கேட்டு, பிருது சக்கரவர்த்தியும் தன்னுள்ளே தனக்குத்தானே நினைக்கிறான். உலகத்திலே சற்குணங்களினால் மன்னனுக்குப் புகழும் பெருமையும் உண்டாகும். இம்முனிவர்கள் என்னைத் துதிக்கச் சொன்னதே நான் சற்குணங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்கான ஓர் உபதேசமாகும். ஆகையால் நான் குணவான் ஆவேன். இம்மாகதர்கள் கீர்த்தனஞ்செய்யும் குணங்களை ஏற்று, இவர்கள் காட்டும் துர்க்குணங்களை விட்டு விடுகிறேன் என்று சித்தமாக இருந்தான்.
அப்போது சூதமாகதர்கள் அந்த அரசகுமாரனான பிருதுவை இந்த மகாராஜகுமாரன் சத்தியசீலன்; தானசீலன்; பிரதிக்ஞையை நிறைவேற்ற வல்லவன்; செய்யத்தகாத காரியத்தைச் செய்யக் கூசுபவன். ஜெயசாலி பொறுமையுள்ளவன் நட்புக்குணமுடையான், மகாப் பிரதாபவான், துஷ்டர்களைத் தண்டிக்கும் குணமுடையவன், இனிய பேச்சுத் திறனுடையான்; பூஜிக்க தகுந்தவரைப் பூஜிப்பவன்; யாகசீலன்; பிராமண பக்தன்; யோக்கியரிடத்தில் அன்புடையவன். சத்துரு மித்துருக்களிடம் சமபுத்தியோ பட்சபாதமற்று சகல விவகாரங்களையும் தீர்ப்பவன்! என்று நல்ல குரலோடு நன்றாகத் துதி செய்தார்கள். சூதனும் மாகதனும் இவ்வாறு எடுத்துக் கூறிய சற்குணங்களையெல்லாம் பிருது மன்னன் தன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு; அக்குணங்களுடன் ஆட்சி செய்து; பலவிதமான யாகங்களை நடத்தி அதிக தட்சணை கொடுத்து வந்தான். அவனது தந்தை வேனன் மடிந்ததால்; பூமி அராஜகமாயிற்று. அதனால் பிருது மன்னனது ஆட்சியின் ஆரம்பத்திலே; பிரஜைகள் அனைவரும் பசியால் வருந்தியவர்களாய் அரசனிடம்; சென்று அரசே! நீர் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பே; பூமண்டலம் அராஜகமாகி சகலவோஷதி வர்க்கங்களையும் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விட்டது. ஆகையால் இப்போது ஆகார வசதியில்லாமல் பிரஜைகள் பசி வாதையால் அழிந்து வருகின்றனர். அன்ன பானங்களைக் கொடுத்து எங்களை ரட்சிப்பதற்காகவே பிரம்மா உங்களைப் படைத்து எங்களுக்கு வழங்கினார். ஆகையால் பசியால் பீடிக்கப்பட்ட எங்களைக் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று முறையிட்டார்கள். அதைக் கேட்ட பிருது மன்னன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, அசகவம் என்ற வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு பூமியை எதிர்க்கச் சென்றான், அப்போது பூமாதேவியானவள்; பசுவின் ரூபத்தைத் தரித்து பயந்து ஓடினாள். மன்னனும் அவளை விடாமல் பின் தொடர்ந்து சென்றான். அதனால் பூதேவி பிரம்மலோகம் முதலிய உலகங்களுக்கும் ஓடிச்சென்று எங்கும் அடைக்கலம் அடைய முடியாமல் வில்லும் கையுமாய்த் தன்னைத் துரத்திவரும் வேந்தனை நோக்கி; பிருது மன்னனே! பெண் வதையினால் பாதகம் சம்பவிக்கும் அல்லவா, அதையறிந்தும் ஏனிப்படிச் செய்கிறாய்? என்று கேட்டாள். வசுந்தரையே! துஷ்டகாரியஞ் செய்பவரை வதைப்பதால் பலருக்கு நன்மையுண்டாகுமானால் அப்படிப்பட்ட வதையைச் செய்வதால் புண்ணியம்தான் உண்டாகும்! என்றான் பிருது.
அரசே! பிரஜைகளுக்கு இதமுண்டாவதற்காக என்னை அழித்தால், சதுர்வித பூதசாதங்களுக்கும் ஆதாரம் என்ன? என்றாள் பூமிதேவி. உற்று அவளை பிருது நோக்கி வசுந்தரா என்னுடைய ஆக்ஞையை மீறி துர்விநீதையாய் நடக்கிற உன்னை என்னுடைய அம்புகளால் சங்கரித்து எது யோக சக்தியினால் சகல பிரஜைகளையும் தரிக்கிறேன்! என்றான். அதைக்கேட்ட பூதேவி பயத்தால் நடுங்கி, பிருதுவை வணங்கி அரசே! உபாயத்தினால் சகல காரியங்களும் சிந்திக்குமேயல்லாமல் வேறு வகையால் சித்திக்காது. ஆகையால் நான் ஓர் உபாயம் சொல்கிறேன். கேட்பாயாக உலகத்தில் உண்டான ஓஷதி நிகரங்களையெல்லாம் நான் என்னுள்ளேயே அடங்கும்படி கிரகித்திருக்கிறேன். ஆகையால் அவை என்னிடம் க்ஷீரரூபமாக இருக்கின்றன. வேண்டுமானால் பால்ரூபமாக இருக்கும் அந்த ஓஷதிகளை உலக நன்மைக்காக நான் வழங்குகிறேன். தகுந்தவொரு கன்றையுண்டாக்கிக் கொடுப்பாயாக. அந்தக் கன்றினிடமுள்ள அன்பினால் பால் ரூபமாகவுள்ள ஓஷதிகளைக் கறக்கச் செய்வேன். நான் கொடுக்கும் க்ஷீரங்கள் ஜகமெல்லாம் வியாபிக்கும் பொருட்டு தடையாகவுள்ள மலைகளையெல்லாம் விலக்கி; என்னை மேடுபள்ளமில்லாமல் நிரவவும் என்றாள். பிருதுவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லித் தன்னுடைய வில்லின் நுனியால் அவற்றைப் புறத்தே தள்ளி பூமண்டலத்தைச் சமமாகச் செய்தான். மைத்ரேயரே! பூர்வ காலத்தில் மலைகள் எல்லாம் மிகவும் நெருங்கி முழுவதும் பரவியிருந்ததாலே பூமண்டலத்தில் நகரப்புரங்களும் கிராமங்களுமாகிய குடியிருப்புகள் பிரிவு படாமல் இருந்தன. பயிர்த்தொழிலும் பசு வளர்ப்பும் வாணிபமும் இல்லை. பிருது மன்னன் முடிசூட்டிக் கொண்டது முதல் இவ்வேறுபாடுகள் உண்டாயின. எங்கெங்கே பூமியானது மேடு பள்ளங்கள் இல்லாமல் சமமாக இருக்குமோ அங்கங்கே, புரங்களையும் கிராமங்களையும் அந்த அரசன் ஏற்படுத்தி, அவற்றில் பிரஜைகளை வசிக்கச் செய்தான். பூர்வத்தில் கந்த, மூல பலாதிகளே பிரஜைகளுக்கு ஆதாரமாக இருந்தன. ஜகம் அராஜகமானபோது அவைகளும் கிடைப்பது கஷ்டமாயிற்று. ஆகையால் பிருது மன்னன் சுவாயம்புவமனுவைக் கன்றாக்கி தனது ஹஸ்தத்தை பாத்திரமாகச் செய்து, தேனுரூபிணியான பூமியினிடத்தில் சகல ஸஸ்யங்களையும் கறந்தான். அதனால் பிரஜைகள் மகிழ்ச்சியடைந்து, அவன் உண்டாக்கிய ஆகாரத்தினால் பலத்தையும் சக்தியையும் பெற்று சுகமாக இருந்தார்கள். அவன் கொடுத்த அன்னத்தால் தான் இன்றளவும் பிரஜைகள் ஜீவித்திருக்கின்றனர். பிருது மன்னன் பூமிக்குப் பிராணனைக் கொடுத்ததால் தந்தையானான் அந்தக் காரணத்தாலேயே பூமிக்கு பிருத்வி என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு தேவதைகளும், முனிவர்களும், தைத்தியர்களும், ராக்ஷசர்களும், கந்தருவர்களும், நாகர்களும், பிதுர்க்களும், விருட்சங்களும், பிருது மன்னனின் கருணையால் தத்தமது சாதிக்கான பாத்திரத்தையும் கன்றையும் கறப்பவனையும் உண்டாக்கி, தங்களுக்குரிய மகிழ்ச்சியை அடைந்தார்கள். சகல பூததாரணியாயும், எல்லாவற்றையும் உண்டாக்குபவளாயும், காப்பவளாயும், ஸ்ரீமகாவிஷ்ணுவின் பாதாம்புயத்தில் பிறந்தவளுமான பூமாதேவி என்னும் பிருதிவி முன்புபோல் சகல பூதங்களுக்கும் இஷ்டங்களைக் கொடுக்கத் துவங்கினாள். மைத்ரேயரே! இவ்விதமான வேனன் மன்னனின் குமாரனான பிருது சக்கரவர்த்தி புகழுடையவனாய் விளங்கினான். எவன் இத்தகைய பிருது மாமன்னனுடைய சரித்திரத்தைப் படிக்கிறானோ, படிக்கக் கேட்கிறானோ, அவன் பாவந்தீர்ந்து, துர்ச்சொப்பன பயமில்லாமல் சுகமாக இருப்பான்!
14. பிரசேதசர்களின் இலட்சியம்
பராசர முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே! பிருது மன்னனுக்கு அந்தர்த்தானன்; வாதி என்றும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அந்தர்த்தானன் திருமணம் புரிந்து கொண்டு சிகண்டி நீ என்னும் மனைவியிடம் ஹவிர்த்தானன் என்ற மகனைப் பெற்றான். அவனுக்கு அக்கினியின் மகளான தீக்ஷிணையிடத்தில் பிராசீனபர்ஹி, சுக்கிரன், கயன், கிருஷ்ணன், விரசன், அசினன் என்று ஆறு குமாரர்கள் உண்டாயினர். அவர்களில் ஹிவர்த்தானனின் மூத்த மகனான பிராசீனபர்ஹி என்பவன், பிராசீனக்கிரகங்களான தருப்பைகளை பூமியில் பரப்பி யக்ஞங்கள் செய்ததால் அவனுக்கு பிராசீனபர்ஹி என்ற பெயர் உண்டாயிற்று. அவன் சமுத்திரனின் புதல்வியான சுவர்ணை என்பவளைக் கல்யாணம் செய்து கொண்டு பிரசேதர்கள் என்னும் பத்துப்பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் தனுர் வேதத்தில் கரை கண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே பயனை அபேட்சித்து, ஒரே தர்மத்தைச் செய்து, சமுத்திர நீரில் பதினாயிரம் ஆண்டுகள் மூழ்கியிருந்து தவஞ்செய்தார்கள். ஏனெனில், பிரும்மாவின் கட்டளைப்படி பிராசீனபரிஹியானவன் பிரஜைகளை அபிவிருத்தி செய்ய நினைத்தான். தன் புத்திரரான பிரசேதசர்களை நோக்கி, பிள்ளைகளே! வேததேவனான பிதாமகர், பிரஜாவிருத்தி செய்யும்படி என்னை நியமித்தார். நான் அப்படியே ஆகட்டும் என்று அவரது கட்டளைக்கு இசைந்தேன். ஆகையால், நீங்கள் எனக்குப் பிரியமாகும்படிப் பிரஜாவிருத்தி செய்யுங்கள் என்றார். பிரசேதசரும் தந்தையின் வாக்கை ஏற்று, ஐயா! நாங்கள் பிரஜாபிவிருத்தி செய்யத்தக்க ஆற்றலையுடையவராக, எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அதை விளங்கச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள்.
பிராசீனபரிஹி தன் புத்திரர்களைப் பார்த்து, ஸ்ரீவிஷ்ணுவை ஆதரித்து ஒருவன் தன் இஷ்டத்தைப் பெறுவானே அல்லாமல், வேறு ஓர் உபாயத்தினாலும் இஷ்ட சித்தியைப் பெறமுடியாது. இனி நான் சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. ஆகையால் உங்கள் இஷ்டம் சித்தியாக வேண்டும் என்று விரும்பினால் ஸ்ரீகோவிந்தனை ஆராதனை செய்யுங்கள். பிரஜாவிருத்தி செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள், புருஷனுக்குத் தர்மார்த்த காம மோக்ஷம் என்கின்ற நான்குவித புருஷார்த்தங்களிலே அபிலாஷையுண்டானால், ஆதியந்தரகிதனும் பகவானுமான புரு÷ஷாத்தமனை அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதிகாலத்தில் பிரும்மா ஜனார்த்தனனை ஆராதித்துத் தான் சிருஷ்டிக்கும் ஆற்றலைப் பெற்றான். அதுபோல், உங்களுக்கும் அச்சுதனை ஆராதிப்பதால் பிரஜா விருத்திக்குரிய சாமார்த்தியமும் உண்டாகும்! என்று சொன்னான். அதைக்கேட்ட பிரசேதசர்கள் பத்துப் பேரும் தந்தையின் வாக்குப்படி தவஞ்செய்ய நிச்சயித்தார்கள். அதனால் சமுத்திரத்திலே மூழ்கி ஏக சிந்தனையுடன் சர்வலோக சரண்யனும் ஜகத்பதியுமான ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடித்தாமரைகளில் மனதை நிறுத்தி, பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்த வண்ணம் சகல அபீஷ்டங்களையும் வழங்கவல்ல லக்ஷ்மி நாராயணனை மனமாரத் துதித்தார்கள். இவ்வாறு பராசரர் கூறிவரும்போது மைத்ரேயர் அவரை நோக்கி முனிவரே! பிரசேதசர்கள் சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டு ஸ்ரீவிஷ்ணுபகவானைத் துதித்தார்கள் என்றீர்கள். அந்தத்தோத்திரத்தை அடியேனுக்குச் சொல்ல வேண்டும் என்றார். அதற்குப் பராசரர் பிராமண உத்தமரே! பக்திப் பரவசத்தினால் தன்மயமாய் சாகா ஜலத்தில் நின்று கொண்டு, பிரசேதசர்கள் செய்த ஸ்ரீவிஷ்ணு ஸ்துதியைச் சொல்கிறேன். அமைதியாகக் கேளுங்கள்! என்று கூறலானார்.
சகலமான சப்தஜாதங்களும் எங்கே சென்று நிலைபெறுமோ அத்தகைய சகல உலகங்களுக்கும், சிருஷ்டி சங்காரகர்த்தாவான பரமபுருஷனை நாங்கள் வணங்குகிறோம்! சூரிய சந்திராதி சோதிக் கணங்களையும் பிரகாசிக்கச் செய்யும் அந்தப் பிராகிருத ஜோதிமயனும் உபமானரகிதனும் நுண்ணிய ரூபனும், கால பரிச்சேதமில்லாதவனும் சராசரத்மகமான ஜகத்துக்குக் காரண பூதனுமான ஸ்ரீவிஷ்ணு மூர்த்திக்குத் தெண்டஞ் சமர்ப்பிக்கிறோம்! எவனுக்குப் பகலானது முதல் ரூபமாகவும் இரவு இரண்டாவது ரூபமாகவும், சக்தி மூன்றாவது ரூபமாகவும் இருக்குமோ காலவடிவான அந்தப்பரந்தாமனுக்குத் தண்டனிடுகிறோம். எவன் அமிர்தமாகித் தினந்தோறும் தேவதைகளாலும் பிதுர்க்களாலும் உண்ணப்படுகிறானோ எவன் ஓஷதிகளைக் கொண்டு எல்லாவற்றிற்கும் ஜீவனாக விளங்குகிறானோ, அந்தச் சந்திரரூபியான பகவானுக்குத் தண்டனிடுகிறோம். எவன் உஷ்ணமயமாகித் தனது கிரணங்களால் இருளைப் போக்கி ஆகாயத்தை ஒளிரச் செய்து கொண்டு, தாபத்திற்கும் சயத்திற்கும் ஜலத்திற்கும் காரணமாக இருக்கிறானோ சூரியாத் மகனான அந்தப் பகவானுக்குத் தண்டனிடுகிறோம்! எவன் கடினமான ரூபமுள்ளவனாய் இந்தவுலகத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு, சப்த, ஸ்பரிச, ரூப, ரச கந்தங்களுக்கு ஆசிரயமாய் விளங்கிறானோ அந்தப் பூமிஸ்வரூபியான எம்பெருமானை வணங்குகிறோம்! சுக்கிலமும் சுரோணிதமுமாய், உலகங்களுக்குக் காரணமாக இருக்கிற ஜலம் என்பது யாதோ, பக்தாக்ஷகனுடைய அந்த ஸ்வரூபத்துக்கு வந்தனஞ் செய்கிறோம். எவன் சகல தேவதைகளுக்கும் மூலமாக இருந்து கவ்யத்தைப் புசிக்கிறானோ, அந்த அக்னி ஸ்வரூபியான பரமாத்மாவுக்குத் தெண்டனிடுகிறோம்! பிராண அபானதி ரூபமாகச் சரீரங்களிலே இருந்து கொண்டு, எப்பொழுதும் சுவாசிப்பது போன்ற செயல்களைச் செய்பவனாகவும், ஆகாயத்தினின்று முற்பன்னனாயும் இருக்கிற வாயுதேவதா ஸ்வரூபியான ஜெகதீஸ்வரனுக்குத் தெண்டனிடுகிறோம்! எவன் சர்வபூதங்களுக்கும் அவகாசம் கொடுத்து, அனந்தமூர்த்தியாயும் சுத்தமாயும் இருக்கிறானோ அத்தகைய ஜகத்துக்கு கர்த்தாவாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிரணாமஞ் செய்கிறோம்! எவன், க்ஷரமும் அக்ஷரமும் ஆன இந்திரிய ஸ்வரூபியாய், சப்தாதி விஷயங்களைக் கிரகித்துக் கொண்டு, ஞானத்துக்கு ஆதாரமாக இருக்கிறானோ, அந்தப் பிரணதார்த்திஹரனான் பெருமானுக்குத் தெண்டம் சமர்ப்பிக்கிறோம்! இந்திரியங்களாலே கிரகிக்கப்பட்ட சப்தாதி விஷயங்களை ஆன்மா அறிவதற்குக் கருவியாய் நிற்கும் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்று சொல்லப்பட்ட அந்தக்கரண சொரூபியான சர்வேசுவரனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்!
அளவில்லாதவனான எவனிடத்திலிருந்து சகல பிரபஞ்சமும் இருக்கிறதோ, எவனிடத்திலிருந்து அவை உண்டாயிற்றோ, எங்கே லயிக்கிறதோ, அந்தப் பிரகிருதி ரூபமுடையவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம்! எவன் பிராகிருதமான சத்வாதி குணங்களல்லாமல் சுத்தனாக இருந்து பிரகிருதி சம்பந்தமுடைய சத்துவாதி குணங்களைக் கொண்டவனைப் போலப் பிராந்தியினால் தோற்றமளிக்கிறானோ அந்த ஜீவாத்மா ரூபியான புரு÷ஷாத்தமனுக்கு தண்டம் சமர்ப்பிக்கிறோம். அறிவு குறுகுவதும் விரிவதுமான விகாரமில்லாதவனும், பிறப்பற்றவனும், சுத்தனும் பிரகிருதி சம்பந்தமில்லாதவனும், பிரகிருதி புருஷர்களைவிட உயர்வுள்ளவனுமாக இருக்கிற மூத்த ஜீவன் உண்டோ அந்த ஸ்வரூபத்தில் விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறோம்! தீர்க்கமும் ஸ்தூலமும் சூட்சுமமும் ரத்தமும் நீலமுமல்லாமல் இருப்பதாய், ஒட்டுதலும் சாயையும் தேகமும் அவயவங்களும் இல்லாததாய், இடைவெளி இல்லாததாய் இன்ப துன்பமுற்றதாய் சப்த ஸ்பரிச ரூபரச கந்தங்கள் இல்லாததாய், கண் மூக்கு காது முதலியவையும், வாக்கு பாணி பாதாதிகளும், அந்தக்கரணமும் இல்லாததாய் நாமே தோத்திரங்களும் அன்னபானாதிகளில் உண்டாகும் சுகமும்; தன்னைவிட வேறொரு தேஜஸும் தனக்கு ஒரு காரணமும் இல்லாததாய்; பயம் பிரமம் நித்திரை ஜனன மரணம் முதலிய குற்றங்கள் இல்லாததாய், சலனமில்லாததாய், பரமேசுரத்துவாதி சகல கல்யாண குணங்களுடையதாய் யாவற்றுக்கும் இருப்பிடமாய், தனக்கு ஓர் ஆதாரமற்றதாய், வாக்கு மனம் இரண்டுக்கும் எட்டாததாய், கண்ணால் காணக்கூடாததாய், இவ்விதமாக எல்லாவிதத்திலும் உயர்ந்ததாய், பரமபிராப்பியமுமாய் விளங்கும் அந்த ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய ஸ்வரூபத்தை நாங்கள் வணங்குகிறோம்! என்று பிரசேதசர்கள் எம்பெருமானைத் துதித்த வண்ணம் சமுத்திர ஜலத்தில் இருந்தவாறு பதினாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்தார்கள். பிறகு ஷட்குண சம்பன்னனான ஹரி அவர்களிடம் கிருபை கூர்ந்து, அந்த சமுத்திர ஜலத்திலேயே பிரத்யட்சமானார். அப்பொழுது மலர்ந்த நீலோத்பல மலரிதழைப் போன்ற நீலச்சாயையுடன் பிரகாசிக்கும் திவ்வியத் திருமேனியோடும் கிரீட மகாகுண்டலங்களாகிய திவ்விய ஆபரணங்களோடும், சங்கு சக்கராதி திவ்ய ஆயுதங்களோடும், ஸ்ரீமந்நாராயணன் தோன்றி, பட்சியரசான பெரிய திருவடியின் (கருடனின்) திருத்தோளில் அமர்ந்து வந்து சேவை சாதித்தார். அவரைப் பிரசேதசர்கள் தங்கள் கண்குளிரக் கண்டு பக்திப் பரவசத்தால் தலைவணங்கித் தண்டப் பிரணமங்கள் செய்து, கைகூப்பி வணங்கி நின்றார்கள். பகவான் அவர்களை நோக்கி பிரசேதசரே உங்கள் தவத்தைக் கண்டு மகிழ்ந்த நான் உங்களுக்குப் பிரசன்னமானேன். உங்களுக்கு வேண்டும் வரங்களை கேட்பீராக என்று அருளிச் செய்தார். அவர்கள் மீண்டும்; ஸ்ரீயப்பதியை வணங்கி எமது தந்தையின் வாக்குப்படி நாங்கள் பிரஜாவிருத்தி செய்வதற்கு எங்களுக்குச் சாமர்த்தியம் ஏற்படும்படி கிருபை செய்ய வேண்டும்! என்று பிரார்த்தித்தார்கள். பகவான் அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார். பிரசேதசர்களும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தினால் இச்சித்த வரத்தைப் பெற்று, கடலிலிருந்து எழுந்து தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.
No comments:
Post a Comment