Thursday, 4 June 2015

5. சூர்ப்பணகைப் படலம்



5. சூர்ப்பணகைப் படலம்

கோதாவரி நதியின் பொலிவு

புவியினுக்கு அணி ஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி,
அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி என, கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார். 1

வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய, வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி, ஊழின்
தெண் திரைக் கரத்தின் வாரி, திரு மலர் தூவி, செல்வர்க்
கண்டு அடி பணிவது என்ன, பொலிந்தது கடவுள் யாறு. 2

எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து, ஏங்கி ஏங்கி,
பழுவ நாள் குவளைச் செவ்விக் கண் பனி பரந்து சோர,
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி,
அழுவதும் ஒத்ததால், அவ் அலங்கு நீர் ஆறு மன்னோ. 3

இராமனும் சீதையும் கண்டு மகிழ்ந்த இயற்கைக் காட்சிகள்

நாளம் கொள் நளினப் பள்ளி, நயனங்கள் அமைய, நேமி
வாளங்கள் உறைவ கண்டு, மங்கைதன் கொங்கை நோக்கும்,
நீளம் கொள் சிலையோன்; மற்றை நேரிழை, நெடிய நம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள், சுடர் மணித் தடங்கள் கண்டாள். 4

ஓதிமம் ஒதுங்க, கண்ட உத்தமன், உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கி, சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாதுஅவள்தானும், ஆண்டு வந்து, நீர் உண்டு, மீளும்
போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர் முறுவல் பூத்தாள். 5

வில் இயல் தடக் கை வீரன், வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்,
வல்லிகள் நுடங்கக் கண்டான், மங்கைதன் மருங்குல் நோக்க,
எல்லிஅம் குவளைக் கானத்து, இடை இடை மலர்ந்து நின்ற
அல்லிஅம் கமலம் கண்டாள், அண்ணல்தன் வடிவம் கண்டாள். 6

அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்,
பனி தரு தெய்வப் 'பஞ்சவடி' எனும், பருவச் சோலைத்
தனி இடம் அதனை நண்ணி, தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூஞ் சாலை எய்தி இருந்தனன் இராமன். இப்பால், 7

இராமனைச் சூர்ப்பணகை காணல்

நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும் பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய நோய் அனாள். 8

செம் பராகம் படச் செறிந்த கூந்தலாள்,
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள்,
உம்பர் ஆனவர்க்கும், ஒண் தவர்க்கும், ஓத நீர்
இம்பர் ஆனவர்க்கும், ஓர் இறுதி ஈட்டுவாள், 9

வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ் வனத்து வைகுவாள்,
நொய்தின் இவ் உலகு எலாம் நுழையும் நோன்மையாள்,-
எய்தினள், இராகவன் இருந்த சூழல்வாய். 10

எண் தகும் இமையவர், 'அரக்கர் எங்கள்மேல்
விண்டனர்; விலக்குதி' என்ன, மேலைநாள்
அண்டசத்து அருந் துயில் துறந்த ஐயனைக்
கண்டனள், தன் கிளைக்கு இறுதி காட்டுவாள். 11

சூர்ப்பணகையின் வியப்பு

'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம் நயனம்; ஈசற்கு
முந்திய மலர்க் கண் ஓர் மூன்று; நான்கு தோள்,
உந்தியில் உலகு அளித்தாற்கு' என்று உன்னுவாள். 12

'கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்
இற்றவன், அன்றுதொட்டு இன்றுகாறும், தான்
நல் தவம் இயற்றி, அவ் அனங்கன், நல் உருப்
பெற்றனனாம்' எனப் பெயர்த்தும் எண்ணுவாள். 13

'தரங்களின் அமைந்து, தாழ்ந்து, அழகின் சார்பின;
மரங்களும் நிகர்க்கல; மலையும் புல்லிய;
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின்
கரங்களே, இவன் மணிக் கரம்' என்று உன்னுவாள். 14

'வில் மலை வல்லவன் வீரத் தோளொடும்
கல் மலை நிகர்க்கல; கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது, நாம மேருவும்
பொன்மலை ஆதலால், பொருவலாது' என்பாள். 15

'தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேள் உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான்
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நீளிய அல்ல கண்; நெடிய, மார்பு!' என்பாள். 16




'அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் வாள் முகம்,
பொதி அவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ?
கதிர் மதி ஆம் எனின், கலைகள் தேயும்; அம்
மதி எனின், மதிக்கும் ஓர் மறு உண்டு' என்னுமால். 17

'எவன் செய, இனிய இவ் அழகை எய்தினோன்?
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்;
நவம் செயத்தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செய, தவம் செய்த தவம் என்?' என்கின்றாள். 18

'உடுத்த நீர் ஆடையள், உருவச் செவ்வியள்,
பிடித் தரு நடையினள், பெண்மை நன்று; இவன்
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர்
பொடித்தன போலும், இப் புல்' என்று உன்னுவாள். 19

'வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியைக்
காணலனேகொலாம், கதிரின் நாயகன்?
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி, சிந்தையில்
நாணலம், மீமிசை நடக்கின்றான்' என்றாள். 20

'குப்புறற்கு அரிய மாக் குன்றை வென்று உயர்
இப் பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர்
ஒப்பு என, உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ?
துப்பினில் துப்புடை யாதைச் சொல்லுகேன்? 21

'நல் கலை மதி உற வயங்கு நம்பிதன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற,
வற்கலை நோற்றன; மாசு இலா மணிப்
பொன்-கலை நோற்றில போலுமால்' என்றாள். 22

'தொடை அமை நெடு மழைத் தொங்கல் ஆம் எனக்
கடை குழன்று, இடை நெறி, கரிய குஞ்சியைச்
சடை எனப் புனைந்திலன் என்னின், தையலா-
ருடை உயிர் யாவையும் உடையுமால்' என்றாள். 23

'நாறிய நகை அணி நல்ல, புல்லினால்,
ஏறிய செவ்வியின் இயற்றுமோ?' எனா,
'மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால் விளங்குமோ?' என்பாள். 24

'கரந்திலன், இலக்கணம் எடுத்துக் காட்டிய,
பரம் தரு நான்முகன்; பழிப்பு உற்றான் அரோ-
இரந்து, இவன் இணை அடிப் பொடியும், ஏற்கலாப்
புரந்தான், உலகு எலாம் புரக்கின்றான்' என்றாள். 25

சூர்ப்பணகையின் காம வேட்கை

நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள,
ஏத்தவும், பரிவின் ஒன்று ஈகலான், பொருள்
காத்தவன், புகழ் எனத் தேயும் கற்பினாள். 26

வான் தனில், வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள்; புலர்ந்தனள்; புழுங்கும் நெஞ்சினள்;
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள், பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள். 27

நின்றனள்-'இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென்; அன்றுஎனின், அமுதம் உண்ணினும்
பொன்றுவென்; போக்கு இனி அரிது போன்ம்' எனா,
சென்று, எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள். 28

சூர்ப்பணகை மந்திரத்தால் அழகியாதல்

'"எயிறுடை அரக்கி, எவ் உயிரும் இட்டது ஓர்
வயிறுடையாள்" என மறுக்கும்; ஆதலால்,
குயில் தொடர் குதலை, ஓர் கொவ்வை வாய், இள
மயில் தொடர் இயலி ஆய், மருவல் நன்று' எனா, 29

பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா,
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்;
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள், செவ்வியள்,
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள். 30

சூர்ப்பணகையின் நடை அழகு

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். 31

பொன் ஒழுகு பூவில் உறை பூவை, எழில் பூவை,
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள்,
கன்னி எழில் கொண்டது, கலைத் தட மணித் தேர்,
மின் இழிவ தன்மை, இது, விண் இழிவதுஎன்ன, 32

கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று, விளை காமம் நிறை வாசத்
தேனின் மொழி உற்று, இனிய செவ்வி நனி பெற்று, ஓர்
மானின் விழி பெற்று, மயில் வந்ததுஎன,-வந்தாள். 33

இராமனும் வியத்தல்

'நூபுரமும், மேகலையும், நூலும், அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும், இவை பூசலிடும் ஓசை-
தாம் உரைசெய்கின்றது; ஒரு தையல் வரும்' என்னா,
கோ மகனும், அத் திசை குறித்து, எதிர் விழித்தான். 34

விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன,
வண்ண முலை கொண்டு, இடை வணங்க வரு போழ்தத்து
எண் அருளி, ஏழைமை துடைத்து, எழு மெய்ஞ்ஞானக்
கண் அருள்சேய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான். 35

பேர் உழைய நாகர்-உலகில், பிறிது வானில்,
பாருழையின், இல்லது ஒரு மெல் உருவு பாரா,
'ஆருழை அடங்கும்? அழகிற்கு அவதி உண்டோ ?
நேரிழையர் யாவர், இவர் நேர்?' என நினைத்தான். 36

சூர்ப்பணகை இராமன் அருகில் வந்து நிற்றல்

அவ் வயின், அவ் ஆசை தன் அகத்துடைய அன்னாள்,
செவ்வி முகம் முன்னி, அடி செங்கையின் இறைஞ்சா,
வெவ்விய நெடுங் கண்-அயில் வீசி, அயல் பாரா,
நவ்வியின் ஒதுங்கி, இறை நாணி, அயல் நின்றாள். 37

இராமன்-சூர்ப்பணகை உரையாடல்

'தீது இல் வரவு ஆக, திரு! நின் வரவு; சேயோய்!
போத உளது, எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ?
ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு?' என்றான்,
வேத முதல்; பேதை அவள் தன் நிலை விரிப்பாள்: 38

'பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி; முப்புரங்கள் செற்ற
சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை; திக்கின்
மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை எடுத்து, உலகம் மூன்றும்
காவலோன் பின்னை; காமவல்லி ஆம் கன்னி' என்றாள். 39

அவ் உரை கேட்ட வீரன், ஐயுறு மனத்தான், 'செய்கை
செவ்விதுஅன்று; அறிதல் ஆகும் சிறிதின்' என்று உணர, '"செங்கண்
வெவ் உரு அமைந்தோன் தங்கை" என்றது மெய்ம்மை ஆயின்
இவ் உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின்' என்றான். 40

தூயவன் பணியாமுன்னம் சொல்லுவாள், சோர்வு இலாள்; 'அம்
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன்,
ஆய்வுறு மனத்தேன் ஆகி, அறம் தலைநிற்பது ஆனேன்;
தீவினை தீய நோற்றுத் தேவரின் பெற்றது' என்றாள். 41

'இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின், உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின்,
சுமையுறு செல்வத்தோடும் தோன்றலை; துணையும் இன்றி,
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என்? தையல்!' என்றான். 42

வீரன் அஃது உரைத்தலோடும், மெய் இலாள், 'விமல! யான் அச்
சீரியரல்லார் மாட்டுச் சேர்கிலென்; தேவர்பாலும்
ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்; இறைவ! ஈண்டு ஓர்
காரியம் உண்மை, நின்னைக் காணிய வந்தேன்' என்றாள். 43


அன்னவள் உரைத்தலோடும், ஐயனும், 'அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறிப் பால அல்ல;
பின் இது தெரியும்' என்னா, 'பெய் வளைத் தோளி! என்பால்
என்ன காரியத்தை? சொல்; அஃதுஇயையுமேல் இழைப்பல்' என்றான். 44

'தாம் உறு காமத் தன்மை தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால், அருங் குல மகளிர்க்கு அம்மா!
ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்? யாரும் இல்லேன்;
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி' என்றாள். 45

சேண் உற நீண்டு, மீண்டு, செவ் அரி சிதறி, வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து, நானாவிதம் புரண்டு, இருண்ட வாள்-கண்
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும்,
'நாண் இலள், ஐயள், நொய்யள்; நல்லளும் அல்லள்' என்றாள். 46

பேசலன், இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள்;
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்ம் மகள், 'புகன்ற என்கண்
ஆசை கண்டருளிற்று உண்டோ ? அன்று எனல் உண்டோ ?' என்னும்
ஊசலின் உலாவுகின்றாள்; மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள்: 47

'எழுத அரு மேனியாய்! ஈண்டு எய்தியது அறிந்திலாதேன்;
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி,
பழுது அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக,
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும்' என்றாள். 48

'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான். 49

'ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக் கற்பின் எம் மோய்,
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல்;
போர் அணி பொலம் கொள் வேலாய்! பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின், என் உயிர் காண்பென்' என்றாள். 50

அருத்தியள் அனைய கூற, அகத்துறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல் உண்டாட்டம் கொண்டான்,
'"வருத்தம் நீங்கு அரக்கர்தம்மில் மானிடர் மணத்தல், நங்கை!
பொருத்தம் அன்று" என்று, சாலப் புலமையோர் புகல்வர்' என்றான். 51

'பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது,
'இராவணன் தங்கை" என்றது ஏழைமைப் பாலது' என்னா,
அரா-அணை அமலன் அன்னாய்! அறிவித்தேன் முன்னம்; தேவர்ப்
பராவினின் நீங்கினேன், அப் பழிபடு பிறவி' என்றாள். 52

'ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன், ஊங்கில்
ஒருவனோ குபேரன், நின்னொடு உடன்பிறந்தவர்கள்; அன்னார்
தருவரேல், கொள்வென்; அன்றேல், தமியை வேறு இடத்துச் சார;
வெருவுவென்;-நங்கை!' என்றான்; மீட்டு அவள் இனைய சொன்னாள்: 53

'காந்தர்ப்பம் என்பது உண்டால்; காதலின் கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம்;
ஏந்தல்-பொன்-தோளினாய்! ஈது இயைந்தபின், எனக்கு மூத்த
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும்; வேறும் ஓர் உரை உண்டு' என்றாள். 54

'முனிவரோடு உடையர், முன்னே முதிர் பகை; முறைமை நோக்கார்;
தனியை நீ; ஆதலால், மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த
வினையம் ஈது அல்லது இல்லை; விண்ணும் நின் ஆட்சி ஆக்கி,
இனியர் ஆய், அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர்' என்றாள். 55

'நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் நலம் பெற்றேன்; நின்னோடு
ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன்; ஒன்றோ,
திரு நகர் தீர்ந்த பின்னர், செய் தவம் பயந்தது?' என்னா,
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான். 56

சீதையைக் கண்ட சூர்ப்பணகையின் எண்ணங்கள்

விண்ணிடை, இம்பர், நாகர், விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்
கண்ணிடை ஒளியின் பாங்கர், கடி கமழ் சாலைநின்றும்,
பெண்ணிடை அரசி, தேவர் பெற்ற நல் வரத்தால், பின்னர்
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள், வந்தாள். 57

ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி, உருவில் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க, நோக்கி,
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள். 58

'மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான்;
உரு இங்கு இது உடையர் ஆக, மற்றையோர் யாரும் இல்லை;
அரவிந்த மலருள் நீங்கி, அடி இணை படியில் தோய,
திரு இங்கு வருவாள் கொல்லோ?' என்று அகம் திகைத்து நின்றாள். 59

பண்பு உற நெடிது நோக்கி, 'படைக்குநர் சிறுமை அல்லால்,
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம்' என்று நின்றாள்;
'கண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின், அஃதே; கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால், என்படும் பிறருக்கு?' என்றாள். 60

பொரு திறத்தானை நோக்கி, பூவையை நோக்கி, நின்றாள்;
'கருத மற்று இனி வேறு இல்லை; கமலத்துக் கடவுள்தானே,
ஒரு திறத்து உணர நோக்கி, உருவினுக்கு, உலகம் மூன்றின்
இரு திறத்தார்க்கும், செய்த வரம்பு இவர் இருவர்' என்றாள். 61

'பொன்னைப் போல் பொருஇல் மேனி, பூவைப் பூ வண்ணத்தான், இம்
மின்னைப் போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன்;
தன்னைப் போல் தகையோர் இல்லா, தளிரைப்போல் அடியினாளும்,
என்னைப் போல் இடையே வந்தாள்; இகழ்விப்பென் இவளை' என்னா, 62

சீதையை அரக்கி என சூர்ப்பணகை கூறல்

'வரும் இவள் மாயம் வல்லள்; வஞ்சனை அரக்கி; நெஞ்சம்
தெரிவு இல; தேறும் தன்மை, சீரியோய்! செவ்விது அன்றால்;
உரு இது மெய்யது அன்றால்; ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென்; எய்திடாமல் விலக்குதி, வீர!' என்றாள். 63

'ஒள்ளிது உன் உணர்வு; மின்னே! உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார்?
தெள்ளிய நலத்தினால், உன் சிந்தனை தெரிந்தது; அம்மா!
கள்ள வல் அரக்கி போலாம் இவளும்? நீ காண்டி' என்னா,
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட, வீரன் நக்கான். 64

சூர்ப்பணகை வெகுள, இராமன் அவளை விரட்டுதல்

ஆயிடை, அமுதின் வந்த, அருந்ததிக் கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும், வீரனைச் சேரும் வேலை,
'நீ இடை வந்தது என்னை? நிருதர்தம் பாவை!' என்னா,
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும். 65

அஞ்சினாள்; அஞ்சி அன்னம், மின் இடை அலச ஓடி,
பஞ்சின் மெல் அடிகள் நோவப் பதைத்தனள்; பருவக் கால
மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்ன,
குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் தழுவிக் கொண்டாள். 66

'வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும்,
விளைவன தீமையே ஆம்' என்பதை உணர்ந்து, வீரன்,
'உளைவன இயற்றல்; ஒல்லை உன் நிலை உணருமாகில்,
இளையவன் முனியும்; நங்கை! ஏகுதி விரைவில்' என்றான். 67

பொற்புடை அரக்கி, 'பூவில், புனலினில், பொருப்பில், வாழும்
அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும், அமரர் மற்றும்,
எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை நீ இகழ்வது என்னே,
நல் பொறை நெஞ்சில் இல்லாக் கள்வியை நச்சி?' என்றாள். 68

'தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள்; தான் இக்
கல் நெடு மனத்தி சொல்லும், கள்ள வாசகங்கள்' என்னா,
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம்போல், மிதிலைவேந்தன்
பொன்னொடும் புனிதன் போய், அப் பூம் பொழிற் சாலை புக்கான். 69



மனம் நைந்து ஏகிய சூர்ப்பணகை

புக்க பின் போனது என்னும் உணர்வினள்; பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள்; ஒன்றும் உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்;
'தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்; சலமும் கொண்டான்;
மைக் கருங் குழலினாள்மாட்டு அன்பினில் வலியன்' என்பாள். 70

நின்றிலள்; அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள்;
'இன்று, இவன் ஆகம் புல்லேன் எனின், உயிர் இழப்பென்' என்னா,
பொன் திணி சரளச் சோலை, பளிக்கரைப் பொதும்பர் புக்காள்;
சென்றது, பரிதி மேல் பால்; செக்கர் வந்து இறுத்தது அன்றே. 71

சூர்ப்பணகையின் காமம்

அழிந்த சிந்தையளாய் அயர்வாள்வயின்,
மொழிந்த காமக் கடுங் கனல் மூண்டதால்-
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே. 72

தாடகைக் கொடியாள் தட மார்பிடை,
ஆடவர்க்கு அரசன் அயில் அம்புபோல்,
பாடவத் தொழில் மன்மதன் பாய் கணை
ஓட, உட்கி, உயிர் உளைந்தாள் அரோ! 73

கலை உவா மதியே கறி ஆக, வன்
சிலையின் மாரனைத் தின்னும் நினைப்பினாள்,
மலையமாருத மா நெடுங் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட, ஓயுமால். 74

அலைக்கும் ஆழி அடங்கிட, அங்கையால்,
மலைக் குலங்களின், தூர்க்கும் மனத்தினாள்;
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா
மலைக்க, நீங்கும் மிடுக்கு இலள்; மாந்துவாள். 75

'பூ எலாம் பொடி ஆக, இப் பூமியுள்
கா எலாம் ஒடிப்பென்' என, காந்துவாள்;
சேவலோடு உறை செந் தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச, நடுங்குவாள். 76

'அணைவு இல் திங்களை நுங்க, அராவினைக்
கொணர்வென், ஓடி' எனக் கொதித்து உன்னுவாள்;
பணை இன் மென் முலைமேல் பனி மாருதம்
புணர, ஆர் உயிர் வெந்து புழுங்குமால். 77

கைகளால், தன் கதிர் இளங் கொங்கைமேல்,
ஐய தண் பனி அள்ளினள், அப்பினாள்;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால். 78

அளிக்கும் மெய், உயிர், காந்து அழல் அஞ்சினாள்;
குளிக்கும் நீரும் கொதித்து எழ, கூசுமால்;
'விளிக்கும் வேலையை, வெங் கண் அனங்கனை,
ஒளிக்கல் ஆம் இடம் யாது?' என, உன்னுமால். 79

வந்து கார் மழை தோன்றினும், மா மணிக்
கந்து காணினும், கைத்தலம் கூப்புமால்;
இந்து காந்தத்தின் ஈர நெடுங் கலும்
வெந்த காந்த, வெதுப்புறு மேனியாள். 80

வாம மா மதியும் பனி வாடையும்,
காமனும், தனைக் கண்டு உணராவகை,
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால். 81

அன்ன காலை, அழல் மிகு தென்றலும்
முன்னின் மும்மடி ஆய், முலை வெந்து உக,
இன்னவா செய்வது என்று அறியாது, இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள் அரோ. 82

வீரன் மேனி வெளிப்பட, வெய்யவள்,
கார் கொள் மேனியைக் கண்டனளாம் என,
சோரும்; வெள்கும்; துணுக்கெனும்; அவ் உருப்
பேருங்கால், வெம் பிணியிடைப் பேருமால். 83

ஆகக் கொங்கையின், ஐயன் என்று, அஞ்சன
மேகத்தைத் தழுவும்; அவை வெந்தன
போகக் கண்டு புலம்பும், அப் புன்மையாள்-
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்கொலோ? 84

சூர்ப்பணகை காம வெறியால் புலம்புதல்

'ஊழி வெங் கனல் உற்றனள் ஒத்தும், அவ்
ஏழை ஆவி இறந்திலள்; என்பரால்
'ஆழியானை அடைந்தனள், பின்னையும்
வாழலாம் எனும் ஆசை மருந்தினே.' 85

'வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என்
நெஞ்சு புக்கு, எனது ஆவத்து நீக்கு' எனும்;
'அஞ்சனக் கிரியே! அருளாய்' எனும்;
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள். 86

'காவியோ, கயலோ, எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும்கொலோ?' எனும்-
ஆவி ஓயினும், ஆசையின் ஓய்வு இலாள். 87

'மாண்ட கற்புடையாள் மலர் மா மகள்,
ஈண்டு இருக்கும் நல்லாள் மகள்' என்னுமால்;
வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடைத்
தீண்டகிற்பது அன்றோ, தெறும் காமமே?' 88

ஆன்ற காதல் அஃது உற எய்துழி,
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம்
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்
தோன்றினான் என, வெய்யவன் தோன்றினான். 89

விடியல் காண்டலின், ஈண்டு, தன் உயிர் கண்ட வெய்யாள்,
'படி இலாள் மருங்கு உள்ள அளவு, எனை அவன் பாரான்;
கடிதின் ஓடினென் எடுத்து, ஒல்லைக் கரந்து, அவள் காதல்
வடிவினானுடன் வாழ்வதே மதி' என மதியா, 90

வந்து, நோக்கினள்; வள்ளல் போய், ஒரு மணித் தடத்தில்
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள்; தம்பி,
இந்து நோக்கிய நுதலியைக் காத்து, அயல், இருண்ட,
கந்தம் நோக்கிய, சோலையில் இருந்தது காணாள். 91

'தனி இருந்தனள்; சமைந்தது என் சிந்தனை; தாழ்வுற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல்' என, எண்ணா,
துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள்;
கனி இரும் பொழில், காத்து, அயல் இருந்தவன் கண்டான். 92

இலக்குவன் சூர்ப்பணகையின் உறுப்பு அறுத்தல்

'நில் அடீஇ' என, கடுகினன், பெண் என நினைத்தான்;
வில் எடாது, அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியைச் செங் கையில் திருகுறப் பற்றி,
ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி கிளர் சுற்று-வாள் உருவி, 93

'ஊக்கித் தாங்கி, விண் படர்வென்' என்று உருத்து எழுவாளை,
நூக்கி, நொய்தினில் 'வெய்து இழையேல்' என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால்
போக்கி, போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான். 94

சூர்ப்பணகையின் ஓலம்

அக் கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை,
திக்கு அனைத்தினும் சென்றது; தேவர்தம் செவியும்
புக்கது; உற்றது புகல்வது என்? மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று, உருகியது உலகம். 95

கொலை துமித்து உயர் கொடுங் கதிர் வாளின், அக் கொடியாள்
முலை துமித்து, உயர் மூக்கினை நீக்கிய மூத்தம்,
மலை துமித்தென, இராவணன் மணியுடை மகுடத்
தலை துமித்தற்கு நாள் கொண்டது, ஒத்தது, ஒர் தன்மை. 96




அதிர, மா நிலத்து, அடி பதைத்து அரற்றிய அரக்கி-
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர், வெங் கதப் போர்
எதிர் இலாதவர், இறுதியின் நிமித்தமா எழுந்து, ஆண்டு,
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து,-உயர்ந்தாள். 97

உயரும் விண்ணிடை; மண்ணிடை விழும்; கிடந்து உழைக்கும்;
அயரும்; கை குலைத்து அலமரும்; ஆர் உயிர் சோரும்;
பெயரும்; 'பெண் பிறந்தேன் பட்ட பிழை' எனப் பிதற்றும்;-
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத் தொல் குடிப் பிறந்தாள். 98

ஒற்றும் மூக்கினை; உலை உறு தீ என உயிர்க்கும்;
எற்றும் கையினை, நிலத்தினில்; இணைத் தடங் கொங்கை
பற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்; தன் பரு வலிக் காலால்
சுற்றும்; ஓடும்; போய், சோரி நீர் சொரிதரச் சோரும். 99

ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதிச்
சேற்று வெள்ளத்துள் திரிபவள், தேவரும் இரிய,
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி,
ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி நின்று; அழைத்தாள். 100

சூர்ப்பணகை உறவினர்களைக் கூவி உதவி கோரல்

'நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ? 101

'"புலிதானே புறத்து ஆக, குட்டி கோட்படாது" என்ன,
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ? ஊழியினும்
சலியாத மூவர்க்கும், தானவர்க்கும், வானவர்க்கும்,
வலியானே! யான் பட்ட வலி காண வாராயோ? 102

'ஆர்த்து, ஆனைக்கு-அரசு உந்தி, அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது, அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட பழி வந்து பாராயோ? 103

'காற்றினையும், புனலினையும், கனலினையும், கடுங் காலக்
கூற்றினையும், விண்ணினையும், கோளினையும், பணி கொண்டற்கு
ஆற்றினை நீ; ஈண்டு, இருவர் மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ, உன் வலத்தை? சிவன் தடக்கை வாள் கொண்டாய்! 104

'உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய, தோள் நிமிர்த்த வலியோனே! 105

'தேனுடைய நறுந் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும், தம்பியர்க்கும், தவிர்ந்ததோ?
ஊனுடைய உடம்பினர் ஆய், எம் குலத்தோர்க்கு உணவு ஆய
மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி? அம்மா! 106

'மரன் ஏயும் நெடுங் கானில் மறைந்து உறையும் தாபதர்கள்
உரனையோ? அடல் அரக்கர் ஓய்வேயோ? உற்று எதிர்ந்தார்.
"அரனேயோ? அரியேயோ? அயனேயோ?" எனும் ஆற்றல்
கரனேயோ! யான் பட்ட கையறவு காணாயோ? 107

'இந்திரனும், மலர் அயனும், இமையவரும், பணி கேட்ப,
சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு ஏழும் தொழுது ஏத்த,
சந்திரன்போல் தனிக் குடைக்கீழ் நீ இருக்கும் சவை நடுவே
வந்து, அடியேன் நாணாது, முகம் காட்ட வல்லேனோ? 108

'உரன் நெரிந்துவிழ, என்னை உதைத்து, உருட்டி, மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க, நான் கிடந்து புலம்புவதோ?
கரன் இருந்த வனம் அன்றோ? இவை படவும் கடவேனோ?-
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ! அண்ணாவோ!! 109

'நசையாலே, மூக்கு இழந்து, நாணம் இலா நான் பட்ட
வசையாலே, நினது புகழ் மாசுண்டது ஆகாதோ?-
திசை யானை விசை கலங்கச் செருச் செய்து, மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ! இராவணவோ!! 110

'கானம் அதினிடை, இருவர், காதொடு மூக்கு உடன் அரிய,
மானமதால், பாவியேன், இவண் மடியக் கடவேனோ?-
தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளை இட்டு,
வானவரைப் பணி கொண்ட மருகாவோ! மருகாவோ!! 111

'ஒரு காலத்து, உலகு ஏழும் உருத்து எதிர, தனு ஒன்றால்,
திருகாத சினம் திருகி, திசை அனைத்தும் செல நூறி,
இரு காலில், புரந்தரனை இருந் தளையில் இடுவித்த
மருகாவோ! மானிடவர் வலி காண வாராயோ? 112

'கல் ஈரும் படைத் தடக் கை, அடல், கர தூடணர் முதலா,
அல் ஈரும் சுடர் மணிப் பூண், அரக்கர் குலத்து அவதரித்தீர்!
கொல் ஈரும் படைக் கும்பகருணனைப்போல், குவலயத்துள்
எல்லீரும் உறங்குதிரோ? யான் அழைத்தல் கேளீரோ?' 113

இராமனிடம் முறையிட வந்த சூர்ப்பணகை

என்று, இன்ன பல பன்னி, இகல் அரக்கி அழுது இரங்கி,
பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து,
நின்று, அந்த நதியகத்து, நிறை தவத்தின் குறை முடித்து,
வன் திண் கைச் சிலை நெடுந் தோள் மரகதத்தின் மலை வந்தான். 114

வந்தானை முகம் நோக்கி, வயிறு அலைத்து, மழைக் கண்ணீர்,
செந் தாரைக் குருதியொடு செழு நிலத்தைச் சேறு ஆக்கி,
'அந்தோ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய்! யான் பட்டபடி இது காண்' என்று, எதிர் விழுந்தாள். 115

விரிந்து ஆய கூந்தலாள், வெய்ய வினை யாதானும்
புரிந்தாள் என்பது, தனது பொரு அரிய திருமனத்தால்
தெரிந்தான்; இன்று, இளையானே இவளை நெடுஞ் செவியொடு மூக்கு
அரிந்தான் என்பதும் உணர்ந்தான்; அவளை, 'நீயார்?' என்றான். 116

அவ் உரை கேட்டு, அடல் அரக்கி, 'அறியாயோ நீ, என்னை?
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான்;
வெவ் இலை வேல் இராவணனாம், விண் உலகம் முதல் ஆக
எவ் உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான்' என்றாள். 117

'தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய, தவம் இயற்ற
யாம் இருந்த நெடுஞ் சூழற்கு என் செய வந்தீர்?' எனலும்,
'வேம் இருந்தில் எனக் கனலும் வெங் காம வெம் பிணிக்கு
மா மருந்தே! நெருநலினும் வந்திலெனோ யான்?" என்றாள். 118

'"செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்
நங்கை இவர்" என நெருநல் நடந்தவரோ நாம்?' என்ன,
'கொங்கைகளும், குழைக்காதும், கொடிமூக்கும், குறைந்து, அழித்தால்,
அம் கண் அரசே! ஒருவர்க்கு அழியாதோ அழகு?' என்றாள். 119

இராமன் சூர்ப்பணகை இழைத்த பிழை என்ன கேட்க இலக்குவன் விடையளித்தல்

மூரல் முறுவலன், இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி,
'வீர! விரைந்தனை, இவள் தன் விடு காதும், கொடி மூக்கும்,
ஈர, நினைந்து இவள் இழைத்த பிழை என்?' என்று இறை வினவ,
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி, சொல்லுவான்: 120

'தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ? தீவினையோர்
கூட்டம்தான் புறத்து உளதோ? குறித்த பொருள் உணர்ந்திலனால்;
நாட்டம்தான் எரி உமிழ, நல்லாள்மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள்; அரிதின் இவள் உடன்று எழுந்தாள்' என உரைத்தான். 121

சூர்ப்பணகை மறுத்துரைத்தல்

ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பாமுன், இகல் அரக்கி,
'சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப, சினம் திருகி,
சூல் தவளை, நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட!
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம்?' என்றாள். 122


இராமன் ஓடிப் போகச் சொல்லியும் சூர்ப்பணகை தன்னை ஏற்குமாறு வேண்டுதல்

'பேடிப் போர் வல் அரக்கர் பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம்; இன்று, தீ மாற்றம் சில விளம்பி,
வீடிப் போகாதே; இம் மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப் போ' என்று உரைத்த உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்: 123

'நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர்
கரை இறந்தோர், இராவணற்குக் கரம் இறுக்கும் குடி என்றால்,
விரையும் இது நன்று அன்று; வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது, நுமக்கு உறுதி உணர்வு உளதேல்' என்று உரைப்பாள்: 124

'"ஆக்க அரிய மூக்கு, உங்கை அரியுண்டாள்" என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார்; நாகரிகர் அல்லாமை,
மூக்கு அரிந்து, நும் குலத்தை முதல் அரிந்தீர்; இனி, உமக்குப்
போக்கு அரிது; இவ் அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே! 125

'வான் காப்போர், மண் காப்போர், மா நகர் வாழ் உலகம்-
தான் காப்போர், இனி தங்கள் தலை காத்து நின்று, உங்கள்
ஊன் காக்க உரியார் யார்? என்னை, உயிர் நீர் காக்கின்,
யான் காப்பென்; அல்லால், அவ் இராவணனார் உளர்!' என்றாள். 126

'காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார்;
ஆவல் பேர் அன்பினால், அறைகின்றேன் ஆம் அன்றோ?
'"தேவர்க்கும் வலியான் தன் திருத் தங்கையாள் இவள்; ஈண்டு
ஏவர்க்கும் வலியாள்" என்று, இளையானுக்கு இயம்பீரோ?'. 127

'மாப் போரில் புறங் காப்பேன்; வான் சுமந்து செல வல்லேன்;
தூப் போல, கனி பலவும், சுவை உடைய, தர வல்லேன்;
காப்போரைக் கைத்து என்? நீர் கருதியது தருவேன்; இப்
பூப் போலும் மெல்லியலால் பொருள் என்னோ? புகல்வீரே. 128

'குலத்தாலும், நலத்தாலும், குறித்தனவே கொணர்தக்க
வலத்தாலும், மதியாலும், வடிவாலும், மடத்தாலும்,
நிலத்தாரும், விசும்பாரும், நேரிழையார், என்னைப்போல்
சொலத்தான் இங்கு உரியாரைச் சொல்லீரோ, வல்லீரேல்? 129

'போக்கினீர் என் நாசி; போய்த்து என்? நீர் பொறுக்குவிரேல்,
ஆக்குவென் ஓர் நொடி வரையில்; அழகு அமைவென்; அருள்கூறும்
பாக்கியம் உண்டுஎனின், அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ ?
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ? 130

'விண்டாரே அல்லாரோ, வேண்டாதார்? மனம் வேண்டின்,
உண்டாய காதலின், என் உயிர் என்பது உமது அன்றோ?
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ?
கொண்டாரே கொண்டாடும் உருப் பெற்றால், கொள்ளீரோ? 131

'சிவனும், மலர்த்திசைமுகனும்; திருமாலும், தெறு குலிசத்து-
அவனும், அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே!
புவனம் அனைத்தையும், ஒரு தன் பூங் கணையால் உயிர் வாங்கும்
அவனும், உனக்கு இளையானோ? இவனேபோல் அருள் இலனால் 132

'பொன் உருவப் பொரு கழலீர்! புழை காண, மூக்கு அரிவான் பொருள் உண்டோ ?
"இன் உருவம் இது கொண்டு, இங்கு இருந்துஒழியும் நம் மருங்கே; ஏகாள் அப்பால்;
பின், இவளை அயல் ஒருவர் பாரார்" என்றே, அரிந்தீர்; பிழை செய்தீரோ?
அன்னதனை அறிந்து அன்றோ, அன்பு இரட்டி பூண்டது நான்? அறிவு இலேனோ? 133

'வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின்,
அப் பழியால், உலகு அனைத்தும், நும் பொருட்டால் அழிந்தன ஆம்; அறத்தை நோக்கி,
ஒப்பழியச் செய்கிலார் உயர் குலத்துத் தோன்றினோர்; உணர்ந்து, நோக்கி,
இப் பழியைத் துடைத்து உதவி, இனிது இருத்திர், என்னொடும்' என்று, இறைஞ்சி நின்றாள். 134

இராமன் அச்சுறுத்தி சூர்ப்பணகையை அகற்றல்

'நாடு அறியாத் துயர் இழைத்த நவை அரக்கி, நின் அன்னைதன்னை நல்கும்
தாடகையை, உயிர் கவர்ந்த சரம் இருந்தது; அன்றியும், நான் தவம் மேற்கொண்டு,
தோள் தகையத் துறு மலர்த் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான், தோன்றி நின்றேன்;
போடு,அகல,புல் ஒழுக்கை;வல் அரக்கி!' என்று இறைவன் புகலும்,பின்னும்: 135

'தரை அளித்த தனி நேமித் தயரதன் தன் புதல்வர் யாம்; தாய்சொல் தாங்கி,
விரை அளித்த கான் புகுந்தேம்; வேதியரும் மா தவரும் வேண்ட, நீண்டு
கரை அளித்தற்கு அரிய படைக் கடல் அரக்கர் குலம் தொலைத்து, கண்டாய், பண்டை,
வரை அளித்த குல மாட, நகர் புகுவேம்; இவை தெரிய மனக்கொள்' என்றான். 136

'"நெறித் தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே, நெடிய தேவர்
மறித்தார்; ஈண்டு, இவர் இருவர்; மானிடவர்" என்னாது, வல்லை ஆகின்,
வெறித் தாரை வேல் அரக்கர், விறல் இயக்கர், முதலினர், நீ, மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும், கொணருதியேல், நின் எதிரே கோறும்' என்றான். 137

சூர்ப்பணகை மீண்டும் வற்புறுத்துதல்

'கொல்லலாம்' மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம்; கொற்ற முற்ற
வெல்லலாம்; அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம்;-"மேல் வாய் நீங்கி,
பல் எலாம் உறத் தோன்றும் பகு வாயள்" என்னாது, பார்த்திஆயின்,
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட! கேள்' என்று நிருதி கூறும்: 138

'காம்பு அறியும் தோளானைக் கைவிடீர்; என்னினும், யான் மிகையோ? கள்வர்
ஆம், பொறி இல், அடல் அரக்கர் அவரோடே செருச் செய்வான் அமைந்தீர் ஆயின்,
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து, அவற்றைத் தடுப்பென் அன்றே?
"பாம்பு அறியும் பாம்பின கால்" என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ? 139

'"உளம் கோடல் உனை இழைத்தாள் உளள் ஒருத்தி" என்னுதியேல், நிருதரோடும்
களம் கோடற்கு உரிய செருக் கண்ணியக்கால், ஒரு மூவேம் கலந்தகாலை,
குளம் கோடும் என்று இதுவும் உறுகோளே? என்று உணரும் குறிக்கோள் இல்லா
இளங்கோவோடு எனை இருத்தி, இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையேன்' என்றாள். 140

'பெருங் குலா உறு நகர்க்கே ஏகும் நாள், வேண்டும் உருப் பிடிப்பேன்; அன்றேல்,
அருங் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம்; இளையவன் தான், "அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ?" என்பானேல், இறைவ! "ஒன்றும்
மருங்கு இலாதவளோடும் அன்றோ", நீ, "நெடுங் காலம் வாழ்ந்தது" என்பாய். 141

சூர்ப்பணகை அச்சுறுத்தி அகலள்

என்றவள்மேல், இளையவன் தான், இலங்கு இலை வேல் கடைக்கணியா, 'இவளை ஈண்டு
கொன்று களையேம் என்றால், நெடிது அலைக்கும்; அருள் என்கொல்? கோவே!' என்ன,
'நன்று, அதுவே ஆம் அன்றோ? போகாளேல் ஆக!' என நாதன் கூற,
'ஒன்றும் இவர் எனக்கு இரங்கார்; உயிர் இழப்பென், நிற்கின்' என, அரக்கி உன்னா, 142

'ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும், முலை இரண்டும், இழந்தும், வாழ
ஆற்றுவனே? வஞ்சனையால், உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ?
காற்றினிலும் கனலினிலும் கடியானை, கொடியானை, கரனை, உங்கள்
கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன்' என்று, சலம்கொண்டு போனாள். 143

மிகைப் பாடல்கள்

கண்டு தன் இரு விழி களிப்ப, கா ....கத்து
எண் தரும் புளகிதம் எழுப்ப, ஏதிலாள்
கொண்ட தீவினைத் திறக் குறிப்பை ஓர்கிலாள்
அண்டர் நாதனை, 'இவன் ஆர்?' என்று உன்னுவாள். 11-1

பொன்னொடு மணிக் கலை சிலம்பொடு புலம்ப,
மின்னொடு மணிக் கலைகள் விம்மி இடை நோவ,
துன்னு குழல் வன் கவரி தோகை பணிமாற,
அன்னம் என, அல்ல என, ஆம் என, நடந்தாள். 33-1

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer