Tuesday 29 November 2016

எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?

எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பேரியாக வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான்.

ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும் மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும்.

வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் அழகிய வீடு .

அன்பே சிவம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer