Saturday 4 April 2015

15. சந்திரசயிலப் படலம்

15. சந்திரசயிலப் படலம்


யானைகளை மரத்தில் பிணித்தலும், அவற்றின் செயல்களும்

கோவை ஆர் வடக் கொழுங் குவடு ஒடிதர நிவந்த,
ஆவி வேட்டன, வரிசிலை அனங்கன் மேல் கொண்ட,
பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட,
தேவதாரத்தும், சந்தினும், பூட்டின - சில மா. 1

நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும்
சோர்வு இடம் பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல,
காரொடும் தொடர் கவட்டு எழில், மராமரக் குவட்டை
வேரொடும் கொடு, கிரி என நடந்தது - ஓர் வேழம். 2

திரண்ட தாள் நெடுஞ் செறி பணை மருது இடை ஒடியப்
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல,
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும், ஒருங்கே
இரண்டு மா மரம் இடை இற நடந்தது - ஓர் யானை. 3

கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான், இனியன கழறி,
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன்; பல் நூல்
விதங்களால், அவன், மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது - ஓர் யானை. 4

மாறு காண்கிலதாய் நின்று, மழை என முழங்கும்
தாறு பாய் கரி, வன கரி தண்டத்தைத் தடவி,
பாறு பின் செல, கால் எனச் செல்வது, பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே. 5

பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற,
காத்த அங்குசம் நிமிர்ந்திட, கால் பிடித்து ஓடி,
பூத்த ஏழிலைப் பாலையைப் பொடிப் பொடி ஆக,
காத்திரங்களால், தலத்தொடும் தேய்ந்தது - ஓர் களிறு. 6

அலகு இல் ஆனைகள் அநேகமும், அவற்றோடு மிடைந்த
திலக வாள் நுதல் பிடிகளும், குருளையும், செறிந்த
உலவை நீள் வனத்து, ஊதமே ஒத்த; அவ் ஊதத்
தலைவனே ஒத்துப் பொலிந்தது, சந்திரசயிலம். 7

கருங்கல்லைப் பொன்னாக்கிச் சென்ற தேர்கள்

'தெருண்ட மேலவர், சிறியவர்ச் சேரினும், அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்' எனும் இது வழக்கே:
உருண்ட வாய்தொறும், பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி,
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய - இரதம். 8

மலையில் இறங்கிய மகளிர், மர நிழல் மற்றும் பளிக்குப் பாறையில் இளைப்பாறி, துயில் கொள்ளுதல்

கொவ்வை நோக்கிய வாய்களை, இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் - காட்டு இன மயில்கள்,
நவ்வி நோக்கியர், நலம் கொள் மேகலை, பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன போல்வன, திரிந்த? 9

உய்க்கும் வாசிகள் இழிந்து, இள அன்னத்தின் ஒதுங்கி,
மெய்க் கலாபமும், குழைகளும், இழைகளும் விளங்க,
தொக்க மென் மர நிழல் படத் துவன்றிய சூழல்
புக்க மங்கையர், பூத்த கொம்பு ஆம் எனப் பொலிந்தார். 10

தளம் கொள் தாமரை என, தளிர் அடியினும், முகத்தும்,
வளம் கொள் மாலை வண்டு அலமர, வழி வருந்தினர் ஆய்,
விளங்கு தம் உருப் பளிங்கிடை வெளிப்பட, வேறு ஓர்
துளங்கு பாறையில், தோழியர் அயிர்த்திடத் துயின்றார். 11

பிடி புக்கு ஆயிடை, மின்னொடும் பிறங்கிய மேகம்
படி புக்காலெனப் படிதர, பரிபுரம் புலம்ப,
துடி புக்கா இடைத் திருமகள் தாமரை துறந்து
குடி புக்காலென, குடில் புக்கார் - கொடி அன்ன மடவார். 12

வரிசையாகக் கட்டி வைத்த குதிரைகள்

உண் அமுதம் ஊட்டி, இளையோர் நகர் கொணர்ந்த,
துண்ணெனும் முழக்கின, துருக்கர் தர வந்த,
மண்மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன,
பண் இயல் வயப் பரிகள், பந்தியில் நிரைத்தார். 13

பணியாளர்கள் தங்குவதற்கு வசதி செய்தல்

நீர் திரை நிரைத்த என, நீள் திரை நிரைத்தார்;
ஆர்கலி நிரைத்த என, ஆவணம் நிரைத்தார்;
கார் நிரை என, களிறு காவிடை நிரைத்தார்;
மாருதம் நிரைத்த என, வாசிகள் நிரைத்தார். 14

மங்கையரும் மைந்தரும் மயங்கித் திரிதல்

நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்,
வடிக்கும் அயில் வீரரும், மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின், எங்கும் முரல் சங்கின்,
கொடிக்களின் உணர்ந்து, அரசர் கோ நகர் அடைந்தார். 15


மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை,
சுதைக் கண் நுரையைப் பொருவு தூசு கொடு, தூய்தா
உதிர்த்தனர், இளங் குமரர், ஓவியரின்; ஓவம்
புதுக்கினர் என, தருண மங்கையர் பொலிந்தார். 16

யானைகளிலிருந்து இறங்கி, அரச குமாரர் பட மாடங்களில் புகுதல்

தாள் உயர் தடக் கிரி இழிந்து தரை சேரும்
கோள் அரி என, கரிகள் கொற்றவர் இழிந்தார்;
பாளை விரி ஒத்து உலவு சாமரை படப் போய்,
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார். 17

தூசின் நெடு வெண் பட முடைக் குடிலகள்தோறும்,
வாச நகை மங்கையர் முகம் பொலிவ, வானில்,
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும்,
வீசு திரை வெண் புனல், விளங்கியன போலும். 18

புழுதி படிய வரும் யானை

மண் உற விழுந்து, நெடு வான் உற எழுந்து, -
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் - கார்
உண் நிற நறும் பொடியை வீசி, ஒரு பாகம்
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம். 19

குதிரைகள் அடங்கி வருதல்

தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்,
ஆயவரை, அந் நிலை, அறிந்தனர், துறந்தாங்கு,
ஏய அரு நுண் பொடி படிந்து, உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து உதறி நின்றன, பரந்தே. 20

மும்மை புரி வன் கயிறு கொய்து, செயல் மொய்ம்பால்
தம்மையும் உணர்ந்து, தரை கண்டு, விரைகின்ற,
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும்
செம்மையவர் என்ன, நனி சென்றன - துரங்கம். 21

திரைக் குடிலில் கழங்கு ஆடும் மங்கையர்

விழுந்த பனி அன்ன, திரை வீசு புரைதோறும்,
கழங்கு பயில் மங்கையர் கருங் கண் மிளிர்கின்ற -
தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து,
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழுங் கயல்கள் என்ன. 22

ஆறு உதவும் ஊற்றுப்பெருக்கு

வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்,
கிள்ள எழுகின்ற புனல், கேளிரின் விரும்பி, -
தெள்ளு புனல் ஆறு - சிறிதே உதவுகின்ற;
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த. 23

படமாடத்தில் நுழைகின்ற வீரர்கள்

துன்றி நெறி பங்கிகள் துளங்க, அழலோடும்
மின் திரிவ என்ன, மணி ஆரம் மிளிர் மார்பர்,
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார்,
குன்றின் முழைதோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார். 24

நீரில் விழுந்து உழக்கி நிற்கும் யானைகள்

நெருங்கு அயில் எயிற்றனைய செம் மயிரின் நெற்றிப்
பொருங் குலிகம் அப்பியன, போர் மணிகள் ஆர்ப்ப,-
பெருங் களிறு - அலைப் புனல் கலக்குவன; பெட்கும்
கருங் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த. 25

ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா,
பக்கம் இனம் ஒத்து, அயல் அலைக்க, நனி பாரா,-
மைக் கரி, மதத்த - விலை மாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன, புனல் சிறைகள் ஏறா. 26

அட்டிலில் எழும் புகை

துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி,
பகல் இடைய, அட்டிலில் மடுத்து, எரி பரப்பும்
அகில் இடு கொழும் புகை அழுங்கலின், முழங்கா
முகில் படு நெடுங் கடலை ஒத்து உளது, அம் மூதூர். 27


பொலிவுற்ற சேனை வெள்ளம்

கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார்,
தமரையும் அறியார் நின்று திகைப்புறு தகைமை சான்ற
குமரரும் மங்கைமாரும் குழுமலால், வழுவி விண் நின்று
அமரர் நாடு இழிந்தது என்னப் பொலிந்தது, அவ் அனீக வெள்ளம். 28

மகளிரும் மைந்தரும் மகிழ்வுடன் திரிதல்

வெயில் நிறம் குறையச் சோதி மின் நிழல் பரப்ப, முன்னம்
துயில் உணர் செவ்வியோரும், துனி உறு முனிவினோரும்,
குயிலொடும் இனிது பேசி, சிலம்பொடும் இனிது கூவி,
மயிலினம் திரிவ என்ன, திரிந்தனர் - மகளிர் எல்லாம். 29

தாள் இணை கழல்கள் ஆர்ப்ப, தார் இடை அளிகள் ஆர்ப்ப,
வாள் புடை இலங்க, செங் கேழ் மணி அணி வலையம் மின்ன,
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி,

வாள் அரி திரிவ என்ன, திரிந்தனர் - மைந்தர் எல்லாம். 30

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer