Friday, 24 April 2015

அயோத்தியா காண்டம் 12. கங்கை காண் படலம்



12. கங்கை காண் படலம்

பரதன் கங்கைக் கரையை அடைதல்

பூவிரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான். 1

கங்கையை சென்று சேர்ந்த சேனையின் மிகுதியும் சிறப்பும்

எண்ண அருஞ் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது,
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெங் கரி மதத்து அருவி பாய்தலால்,
உண்ணவும், குடையவும், உரித்து அன்று ஆயதே. 2

அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்;
நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும்,
பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே. 3

பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;-
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையே மடுத்தது, அக் கங்கை வெள்ளமே. 4

கான் தலை நண்ணிய காளைபின் படர்
தோன்றலை, அவ் வழித் தொடர்ந்து சென்றன-
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே. 5

பரதன் சேனையுடன் வருதல் கண்ட குகனின் ஐயமும் சீற்றமும்

அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
'துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது?' என்று, எடுத்த சீற்றத்தான். 6

குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் -
நகை மிக, கண்கள் தீ நாற, நாசியில்
புகை உற, குனிப்புறும் புருவப் போர்விலான். 7

மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான்
-ஐந் நூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான், வில்லின் கல்வியான். 8

கட்டிய சுரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
'கிட்டியது அமர்' எனக் கிளரும் தோளினான். 9

'எலி எலாம் இப் படை; அரவம், யான்' என,
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் -
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே. 10

மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் -
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அருங் கடையுகம் தனில், அசனி மா மழை
கருங் கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே. 11

தன் சேனைக்கு குகன் இட்ட கட்டளை

தோன்றிய புளிஞரை நோக்கி, 'சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென், என் உயிர்த் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம்' என்றான். 12

'துடி எறி; நெறிகளும், துறையும், சுற்றுற
ஒடியெறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி, பட' எனா, பெயர்த்தும் கூறுவான்: 13

குகனின் வீர உரை

'அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், "நாய்க்குகன்" என்று, எனை ஓதாரோ? 14

'ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
"தோழமை" என்று, அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
"ஏழைமை வேடன் இறந்திலன்" என்று எனை ஏசாரோ? 15

"முன்னவன்" என்று நினைந்திலன்; 'மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன்" என்றிலன்; அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது? இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில், வேடர் விடும் சரம் வாயாவோ? 16


'பாவமும் நின்ற பெரும் பழியும், பகை நண்போடும்,
ஏவமும், என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ?
ஆவது போக, என் ஆர் உயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ? 17

'அருந் தவம் என் துணை ஆள, இவன் புவி ஆள்வானோ?
மருந்துஎனின் அன்று உயிர், வண் புகழ் கொண்டு, பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை உகந்தவர்தம்மொடு போகாதே
இருந்தது நன்று, கழிக்குவென், என் கடன் இன்றோடே. 18

'தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும்,
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்! துறை ஓடம் விலக்கீரோ?
நம்பி முன்னே, இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ? 19

'போன படைத் தலை வீரர்தமக்கு இரை போதா இச்
சேனை கிடக்கிடு; தேவர் வரின், சிலை மா மேகம்
சோனை பட, குடர் சூறை பட, சுடர் வாளோடும்
தானை பட, தனி யானை பட, திரள் சாயேனோ? 20

'நின்ற கொடைக் கை என் அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை, என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல், கங்கை மடுத்து இடை தூராதோ? 21

'"ஆடு கொடிப் படை சாடி, அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார்" எனும் இப் புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி, எடுத்தது காணீரோ? 22

'"மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும்
கோ முனியத் தகும்" என்று, மனத்து இறை கொள்ளாதே,
முனை உற்றிடில், ஏழு கடற் படை என்றாலும்,
முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ? 23

என்பன சொல்லி, இரும்பு அன மேனியர் ஏனோர்முன்,
வன் பணை வில்லினன், மல் உயர் தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது கண்டு, அரிஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன், மூரிய தேர் வல்லான்: 24

குகனைப் பற்றி சுமந்திரன் பரதனுக்கு உரைத்தல்

'கங்கை இரு கரை உடையான்; கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்; வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க் குகன் என்னும் குறி உடையான். 25

'கல் காணும் திண்மையான்; கரை காணாக் காதலான்;
அற்கு ஆணி கண்டனைய அழகு அமைந்த மேனியான்;-
மல் காணும் திரு நெடுந் தோள் மழை காணும் மணி நிறத்தாய்!-
'நிற் காணும் உள்ளத்தான், நெறி எதிர் நின்றனன்' என்றான். 26

குகனைக் காண வடகரைக்கு பரதன் விரைதல்

தன் முன்னே, அவன் தன்மை, தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலாத் திரு மனத்தான்,
'மன் முன்னே தழீஇக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென், யானே சென்று' என எழுந்தான். 27

பரதன் நிலை கண்ட குகன் திடுக்கிடுதல்

என்று எழுந்த தம்பியொடும், எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக் குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்; துண்ணென்றான். 28

வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். 29

'நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?' என்றான். 30

குகனும் தனியே வடகரை அடைதல்

'உண்டு இடுக்கண் ஒன்று உடையான், உலையாத அன்பு உடையான்,
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம்
கண்டு, உணர்ந்து, பெயர்கின்றேன்; காமின்கள் நெறி' என்னா,
தண் துறை, ஓர் நாவாயில், ஒரு தனியே தான் வந்தான். 31

பரதனும் குகனும் ஒருவரை ஒருவர் வணங்கித் தழுவுதல்

வந்து எதிரே தொழுதானை வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும், அவன் அடிவீழ்ந்தான்;
தந்தையினும் களிகூரத் தழுவினான் - தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான். 32

பரதனிடம் குகன் வந்த காரணம் கேட்டல்

தழுவின புளிஞர் வேந்தன் தாமரைச் செங்கணானை,
'எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்தியது என்னை?' என்ன,
'முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும்
வழுவினன்; அதனை நீக்க, மன்னனைக் கொணர்வான்' என்றான். 33

குகன் பரதனை வணங்கிப் பாராட்டுதல்

கேட்டனன், கிராதர் வேந்தன்; கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,
மீட்டும், மண் அதனில் வீழ்ந்தான்; விம்மினன், உவகை வீங்க;
தீட்ட அரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன், பொய் இல் உள்ளத்தன், புகலலுற்றான்: 34

'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
"தீவினை" என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா! 35

'என் புகழ்கின்றது, ஏழை எயினனேன்? இரவி என்பான் -
தன் புகழ்க் கற்றை, மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்,
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய்-உயர் குணத்து உரவுத் தோளாய்! 36

பரதனிடம் குகன் கொண்ட பேரன்பு

என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி,
புனை சுழல், புலவு வேற் கை, புளிஞர்கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான்; ஆர் அவற்கு அன்பு இலாதார்?-
நினைவு அருங் குணம்கொடு அன்றோ, இராமன்மேல் நிமிர்ந்த காதல்? 37

இராமன் தங்கிய இடம் பற்றி பரதன் குகனிடம் வினாவுதல்

அவ் வழி அவனை நோக்கி, அருள்தரு வாரி அன்ன
செவ் வழி உள்ளத்து அண்ணல், தென் திசைச் செங் கை கூப்பி,
'எவ் வழி உறைந்தான் நம்முன்?' என்றலும், எயினர் வேந்தன்,
'இவ் வழி, வீர! யானே காட்டுவல்; எழுக!' என்றான். 38


இராமன் தங்கிய இடத்தைக் கண்ட பரதனின் நிலை

கார் எனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல், வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான் -
வார் மணிப் புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான். 39

'இயன்றது, என் பொருட்டினால், இவ் இடர் உனக்கு என்ற போழ்தும்,
அயின்றனை, கிழங்கும் காயும் அமுது என; அரிய புல்லில்
துயின்றனை எனவும், ஆவி துறந்திலென்; சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே!' 40

இலக்குவனின் செயல்கள் பற்றி குகனிடம் பரதன் வினாவுதல்

தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான்! 'அந்
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே போந்தவன், பொழுது நீத்தது
யாண்டு?' என, இனிது கேட்டான்; எயினர்கோன், இதனைச் சொன்னான்: 41

இலக்குவன் செயல் பற்றி குகனின் பதில் உரை

'அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும், வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!-கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம்' என்றான். 42

பரதனின் துயர் உரை

என்பத்தைக் கேட்ட மைந்தன், 'இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில், யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்; அவன், அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ ? அழகிது, என் அடிமை!' என்றான். 43

தென் கரை சேர்க்க, குகனை பரதன் வேண்டுதல்

அவ் இடை, அண்ணல்தானும், அன்று, அரும் பொடியின் வைகி,
'தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர் கோமா அன்!
இவ் இடை, கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர்க் கடல் நின்று ஏற்றி, வேந்தன்பால் விடுத்தது' என்றான். 44

குகன் கட்டளைப்படி நாவாய்கள் வருதல்

'நன்று' எனப் புளிஞர் வேந்தன் நண்ணினன் தமரை; 'நாவாய்
சென்று இனித் தருதிர்' என்ன, வந்தன-சிவன் சேர் வெள்ளிக்
குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என, குபேரன் மானம்
ஒன்று என, நாணிப் பல் வேறு உருவு கொண்டனைய ஆன. 45

நாவாய்களின் தோற்றப் பொலிவு

நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய்,
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன-கலந்த எங்கும்,-
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின், அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன. 46

பரதன் சேனையோடு கங்கையை கடத்தல்

'வந்தன, வரம்பு இல் நாவாய்; வரி சிலைக் குரிசில் மைந்த!
சிந்தனை யாவது?' என்று, சிருங்கிபேரியர்கோன் செப்ப,
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி,
'எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி, விரைவின்' என்றான். 47

குரிசிலது ஏவலால், அக் குரகதத் தேர் வலானும்,
வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி வகையின் ஏற்ற,
கரி, பரி, இராதம், காலாள், கணக்கு அறு கரை இல் வேலை,
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே! 48

இடிபடு முழக்கம் பொங்க, இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப, ஊழி இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின, நெடுங் கை வேழம். 49

சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி,
வங்க நீர்க் கடலும் வந்து தன் வழிப் படர, மானப்
பொங்கு வெங் களிறு நூக்க, கரை ஒரீஇப் போயிற்று அம்மா-
கங்கையும் இராமற் காணும் காதலது என்ன மாதோ! 50

பாங்கின் உத்தரியம் மானப் படர் திரை தவழ, பாரின்
வீங்கு நீர் அழுவம் தன்னுள், விழு மதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற, ஒளித்து அவண் உயர்ந்த கும்பம்,
பூங் குழற் கங்கை நங்கை முலை எனப் பொலிந்த மாதோ! 51

கொடிஞ்சொடு தட்டும், அச்சும், ஆழியும், கோத்த மொட்டும்,
நெடுஞ் சுவர்க் கொடியும், யாவும், நெறி வரு முறையின் நீக்கி,
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றிச் சென்ற-
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என-வயிரத் தேர்கள்! 52

நால்-இரண்டு ஆய கோடி, நவை இல் நாவாய்கள் மீதா,
சேல் திரண்டனைய ஆய கதியொடும், நிமிரச் சென்ற-
பால் திரண்டனைய மெய்ய, பயம் திரண்டனைய நெஞ்ச,
கால் திரண்டனைய கால, கடு நடைக் கலினப் பாய் மா. 53

மகளிர் ஓடத்தில் செல்லுதல்

ஊடு உற நெருக்கி, ஓடத்து, ஒருவர்முன் ஒருவர் கிட்டி,
சூடகத் தளிர்க் கைம் மாதர் குழுமினர் துவன்றித் தோன்ற,
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம் கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன, மிடைந்தன குவவுக் கொங்கை. 54

பொலங் குழை மகளிர், நாவாய்ப் போக்கின் ஒன்று ஒன்று தாக்க,
மலங்கினர்; இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர, அங்கும் இங்கும்
கலங்கலின், வெருவிப் பாயும் கயற்குலம் நிகர்த்த, கண்கள். 55

இயல்வு உறு செலவின் நாவாய், இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அறத் தளிப்ப, உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா! 56

மரக்கலங்கள் சென்று வரும் காட்சி

இக் கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன அணுகும் நாவாய்-
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா! 57

அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த
முகிழுடை முரண் மாத் தண்டு கூம்பு என, முகிலின் வண்ணத்
துகிலொடு தொடுத்த செம் பொன் தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா, நவ் எனச் சென்ற நாவாய். 58

ஆனனம் கமலத்து அன்ன, மின் அன்ன, அமுதச் செவ் வாய்,
தேன் நனை, குழலார் ஏறும் அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என, விரிந்த கங்கை விண் என, பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ! 59

துளி படத் துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற,
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு எனச் செல்லும் நாவாய்,
களியுடை மஞ்ஞை அன்ன, கனங் குழை, கயல் கண், மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட, உயிர் படைத்தனவே ஒத்த. 60

முனிவர் வான் வழியாக கங்கையை அடைதல்

மை அறு விசும்பில், மண்ணில், மற்றும் ஓர் உலகில், முற்றும்
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ? கீழோர்
செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர்; மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக, தேவரின் முனிவர் போனார். 61

அனைவரும் கங்கையை கடத்தல்

'அறுபதினாயிரம் அக்குரோணி' என்று
இறுதி செய் சேனையும், எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும், மகளிர் வெள்ளமும்,
செறி திரைக் கங்கை, பின் கிடக்கச் சென்றவே. 62

நாவாயில் பரதன் ஏறுதல்

கழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான் தானும் ஏறினான். 63


பரதன் குகனுக்கு கோசலையை அறிமுகம் செய்தல்

சுற்றத்தார், தேவரொடும் தொழ நின்ற கோசலையைத் தொழுது நோக்கி,
'கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?' என்று குகன் வினவ, 'கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால், துறந்த பெரியாள்' என்றான். 64

பரதன் கோசலைக்கு குகனை அறிமுகம் செய்தல்

என்றலுமே, அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை, 'இவன் யார்?' என்று,
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ, கழல் கால் மைந்தன்,
'இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும் இளையவற்கும், எனக்கும், மூத்தான்;
குன்று அனைய திரு நெடுந் தோள் குகன் என்பான், இந் நின்ற குரிசில்' என்றான். 65

கோசலை குகனையும் பரதனுக்கு சகோதரனாக்குதல்

'நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்; நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங் காலம் அளித்திர்' என்றாள். 66

பரதன் குகனுக்கு சுமித்திரையை அறிமுகம் செய்தல்

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை நோக்கி, 'ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை' என்ன, 'நெறி திறம்பாத் தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான் தன் இளந் தேவி; யாவர்க்கும் தொழுகுலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப் பயந்த பெரியாள்' என்றான். 67

குகன் கைகேயியை யார் என வினவுதல்

சுடு மயானத்திடை தன் துணை ஏக, தோன்றல் துயர்க் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி ஏக, கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம், தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால், அளந்தாளை, '"ஆர் இவர்?" என்று உரை' என்ன, குரிசில் கூறும்: 68

பரதன் கைகேயியை அறிமுகம் செய்தல்

'படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும் உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும் உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை,அறிந்திலையேல்,இந்நின்றாள் என்னை ஈன்றாள்."69

குகன் கைகேயியை வணங்குதலும், தோணி கரை சேர்தலும்

என்னக் கேட்டு, அவ் இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என;
அன்னப் பேடை சிறை இலது ஆய்க் கரை
துன்னிற்று என்னவும் வந்தது, தோணியே. 70

தாயர் பல்லக்கில் வர, பரதன் முதலியோர் நடந்து செல்லல்

இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான்,
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான் -
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் -
கழிந்தனன், பல காவதம் காலினே. 71

பரத்துவாச முனிவர் பரதனை எதிர் கொள்ளல்

பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்,
அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான். 72

மிகைப் பாடல்கள்

வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான்; வணங்காமுன்,
சந்த நெடுந் திரள் புயத்தான் தழுவினான்; தழுவியபின்,
இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய்-இமையோர் தம்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய்! 32-1

ஏறினர் இளவலோடு, இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும் உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி நீங்கி, பெட்பொடும்
கூறு தென் கரையிடைக் குழீஇய போதிலே. 63-1

தன் அன தம்பியும், தாயர் மூவரும்,
சொன்ன தேர் வலவனும், தூய தோழனும்,
துன்னியர் ஏறலும், துழா துடுப்பு எனும்
நல்நயக் காலினால் நடத்தல் மேயினான். 63-2

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer