Friday 24 April 2015

அயோத்தியா காண்டம் 8. வனம் புகு படலம்



8. வனம் புகு படலம்

இராமன், சிதை இலக்குவனுடன் காட்டு வழியில் பயணித்தல்

பூரியர் புணர் மாதர் பொது மனம் என, மன்னும்
ஈரமும், 'உளது, இல்' என்று அறிவு அருள் இளவேனில்,
ஆரியன் வரலோடும், அமுது அளவிய சீதக்
கார் உறு குறி மானக் காட்டியது, அவண் எங்கும். 1

வெயில், இள நிலவேபோல், விரி கதிர் இடை வீச,
பயில் மரம் நிழல் ஈன, பனி புரை துளி மேகப்
புயல் தர, இள மென் கால் பூ அளவியது எய்த,
மயிலினம் நடம் ஆடும் வழி இனியன போனார். 2

வழியில் உள்ள இனிய காட்சிகளை இராமன் சீதைக்குக் காட்டுதல்

'மன்றலின் மலி கோதாய்! மயில் இயல் மட மானே!-
இன் துயில் வதி கோபத்து இனம் விரிவன எங்கும்,
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள், குல மாலைப்
பொன் திணி மணி மானப் பொலிவன-பல-காணாய்! 3

'பாண், இள மிஞிறு ஆக, படு மழை பணை ஆக,
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல்,
"பூணியல்! நின சாயல் பொலிவது பல கண்ணின்
காணிய" எனல் ஆகும், களி மயில்-இவை காணாய்! 4

'சேந்து ஒளி விரி செவ் வாய்ப் பைங் கிளி, செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக் கோதுவ,-கவின் ஆரும்
மாந் தளிர் நறு மேனி மங்கை!-நின் மணி முன் கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின; இவை காணாய்! 5

'நெய்ஞ் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றிக்
கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய்!- கருதின இனம் என்றே
மெய்ஞ் ஞிறை விரி சாயல் கண்டு, நின் விழி கண்டு,
மஞ்ஞையும் மட மானும் வருவன பல-காணாய்! 6

'பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல், துயில் எழு மயில் ஒன்றின்
தூவியின் மணம் நாற, துணை பிரி பெடை, தான் அச்
சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் காணாய்! 7

'அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே!-
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின் பொலிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன;-இயல் காணாய்! 8

'ஏந்து இள முலையாளே! எழுத அரு எழிலாளே!
காந்தளின் முகை கண்ணின் கண்டு, ஒரு களி மஞ்ஞை,
'பாந்தள் இது' என உன்னிக் கவ்விய படி பாரா,
தேம் தளவுகள் செய்யும் சிறு குறுநகை-காணாய்! 9

'குன்று உறை வய மாவின் குருளையும், இருள் சிந்திப்
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்,
அன்றில பிரிவு ஒல்லா; அண்டர்தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல-காணாய்! 10

'அகில் புனை குழல் மாதே! அணி இழை எனல் ஆகும்
நகு மலர் நிறை மாலைக் கொம்புகள், நதிதோறும்
துகில் புரை திரை நீரில் தோய்வன, துறை ஆடும்
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல-காணாய்! 11

'முற்றுறு முகை கிண்டி, முரல்கில சில தும்பி,
வில் திரு நுதல் மாதே! அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறு மலர் ஏறித் துயில்வன, சுடர் மின்னும்
பொன் தகடு உறு நீலம் புரைவன பல-காணாய்! 12

'கூடிய நறை வாயில் கொண்டன, விழி கொள்ளா
மூடிய களி மன்ன, முடுகின நெறி காணா,
ஆடிய, சிறை மா வண்டு, அந்தரின், இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா வருவன பல-காணாய்! 13

'கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன,
பொன் அணி நிற வேங்கை கோங்குகள், புது மென் பூ,
அன்ன மென் நடையாய்! நின் அளக நல் நுதல் அப்பும்
சின்ன மென் மலர் மானச் சிந்துவ பல-காணாய்! 14

'மணம் கிளர் மலர், வாச மாருதம் வர வீச,
கணம் கிளர்தரு சுண்ணம், கல்லிடையன, கானத்து;
அணங்கினும் இனியாய்! உன் அணி வட முலை முன்றில்
சுணங்கினம் அவை மானத் துறுவன-அவை காணாய்! 15

'"அடி இணை பொறைகல்லா" என்றுகொல், அதர் எங்கும்,
இடை இடை மலர் சிந்தும் இன மரம்?-இவை காணாய்!
கொடியினொடு இள வாசக் கொம்புகள், குயிலே! உன்
துடி புரை இடை நாணித் துவள்வன-அவை காணாய்! 16

'வாள் புரை விழியாய்! உன் மலர் அடி அணி மானத்
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு-இவை காணாய்!
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை-காணாய்!
தோள் புரை இள வேயின் தொகுதிகள்-அவை காணாய்! 17

'பூ நனை சினை துன்றி, புள் இடை இடை பம்பி,
நால் நிற நளிர் வல்லிக் கொடி நவை இல பல்கி,
மான் இனம், மயில் மாலை, குயில் இனம், வதி கானம்-
தீ நிகர் தொழில் ஆடைத் திரை பொருவன-பாராய்!' 18



இராமன் சீதைக்கு சித்திரகூட மலையை காட்டுதல்

என்று, நல் மடவாளோடு இனிதினின் விளையாடி,
பொன் திணி திரள் தோளான்; போயினன் நெறி; போதும்
சென்றது குடபால்; 'அத் திரு மலை இது அன்றோ?'
என்றனன்; 'வினை வென்றோர் மேவு இடம்' எனலோடும், 19

இராமனை எதிர்கொள்ள பரத்துவாச முனிவர் வருதல்

அருத்தியின் அகம் விம்மும் அன்பினன், 'நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று' எனல் தெரிகின்றான்,
பரத்துவன் எனும் நாமப் பர முனி, பவ நோயின்
மருத்துவன் அனையானை, வரவு எதிர்கொள வந்தான். 20

பரத்துவாச முனிவரின் பண்புகள்

குடையினன்; நிமிர் கோலன்; குண்டிகையினன்; மூரிச்
சடையினன்; உரி மானின் சருமன்; நல் மர நாரின்
உடையினன்; மயிர் நாலும் உருவினன்; நெறி பேணும்
நடையினன்; மறை நாலும் நடம் நவில் தரு நாவான்; 21

செந் தழல் புரி செல்வன்; திசைமுக முனி செவ்வே
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும்
அந்தணன்; 'உலகு ஏழும் அமை' எனின், அமரேசன்
உந்தியின் உதவாமே, உதவிடு தொழில் வல்லான். 22

முனிவர் இராமன் வந்த காரணத்தை வினவுதல்

அம் முனி வரலோடும், அழகனும், அலர் தூவி
மும் முறை தொழுதான்; அம் முதல்வனும், எதிர்புல்லி,
'இம் முறை உருவோ நான் காண்குவது?" என உள்ளம்
விம்மினன்; இழி கண்ணீர் விழி வழி உக நின்றான். 23

'அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை; அது தீர,
புகல் இடம் எமது ஆகும் புரையிடை, இது நாளில்,
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என்-
இகல் அடு சிலை வீர!- இளையவனொடும்?' என்றான். 24

இராமன் நடந்தது உரைக்க, முனிவரின் வருத்தம்

உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான்;
நல் தவ முனி, 'அந்தோ! விதி தரு நவை!' என்பான்,
'இற்றது செயல் உண்டோ இனி?' என, இடர் கொண்டான்,
'பெற்றிலள் தவம், அந்தோ! பெரு நிலமகள்' என்றான். 25

'"துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும்
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது" என்னா,
ஒப்பு அறும் மகன் உன்னை, "உயர் வனம் உற ஏகு" என்று,
எப் பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன்?' என்றான். 26

முனிவரின் ஆசிரமத்துள் மூவரும் செல்லுதல்

'அல்லலும் உள; இன்பம் அணுகலும் உள அன்றோ?
நல்லவும் உள; செய்யும் நவைகளும் உள; அந்தோ!
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின்' என்னா,
புல்லினன், உடனே கொண்டு, இனிது உறை புரை புக்கான். 27

முனிவரின் விருந்தோம்பல்

புக்கு, உறைவிடம் நல்கி, பூசனை முறை பேணி,
தக்கன கனி காயும் தந்து, உரைதரும் அன்பால்
தொக்க நல்முறை கூறி, தூயவன் உயிர்போலும்
மக்களின் அருள் உற்றான்; மைந்தரும் மகிழ்வு உற்றார். 28

இராமனை தம்முடன் தங்கியிருக்க முனிவர் வேண்டுதல்

வைகினர் கதிர் நாறும் அளவையின் மறையோனும்,
'உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின்' என்பான்,
செய்தனன் இனிது எல்லாம்; செல்வனை முகம் முன்னா,
'கொய் குல மலர் மார்ப! கூறுவது உளது' என்றான்; 29

'நிறையும், நீர், மலர், நெடுங் கனி, கிழங்கு, காய் கிடந்த;
குறையும் தீயவை; தூயவை குறைவு இல; எம்மோடு
உறையும் இவ் வழி, ஒருங்கினில் உயர் தவம் முயல்வார்க்கு
இறையும், ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது; இன்னும், 30

'கங்கையாளொடு கரியவள், நாமகள், கலந்த
சங்கம் ஆதலின், பிரியலென்; தாமரைச் செங்கண்
அம் கண் நாயக! அயனுக்கும், அரும் பெறல் தீர்த்தம்;
எங்கள் போலியர் தரத்தது அன்று; இருத்திர் ஈண்டு' என்றான். 31

தங்க இயலாமை குறித்து இராமன் கூறுதல்

பூண்ட மா தவன், அம் மொழி விரும்பினன் புகல,
'நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு; நெடு நாள்,
மாண்ட சிந்தைய! இவ் வழி வைகுவென் என்றால்,
ஈண்ட யாவரும் நெருங்குவர்' என்றனன் இராமன். 32

இராமனுக்கு முனிவரின் அறிவுரை

'ஆவது உள்ளதே; ஐய! கேள்; -இரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அப் புறம் கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர்-விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர கூடம் என்று உளதே.' 33

மூவரும் முனிவரிடம் விடைபெற்று யமுனைக் கரை அடைதல்

என்று காதலின் ஏயினன்; அடி தொழுது ஏத்தி,
கொன்றை வேய்ங் குழல் கோவலர் முல்லை, அம் குடுமி
சென்று செங் கதிர்ச் செல்வனும் நடு உற, சிறு மான்
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார். 34

மூவரும் யமுனையில் நீராடி உணவு உண்ணுதல்

ஆறு கண்டனர்; அகம் மகிழ்ந்து இறைஞ்சினர்; அறிந்து,
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்;
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு, நீர் உண்டார்;
'ஏறி ஏகுவது எங்ஙனம்?' என்றலும், இளையோன், 35

தெப்பம் அமைத்து இலக்குவன் இருவரையும் அக்கரை சேர்த்தல்

வாங்கு வேய்ங் கழை துணித்தனன்; மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து, அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான், அந்த நெடு நதி, இரு கையால் நீந்தி. 36

ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான்
மாலை மால் வரைத் தோள் எனும் மந்தரம் திரிய,
காலை வேலையைக் கடந்தது, கழிந்த நீர் கடிதின்;
மேலை வேலையில் பாய்ந்தது, மீண்ட நீர் வெள்ளம். 37

மூவரும் பாலை நிலத்தை அடைதல்

அனையர், அப் புனல் ஏறினர்; அக் கரை அணைந்தார்;
புனையும் வற்கலைப் பொற்பினர் நெடு நெறி போனார்;
சினையும் மூலமும் முகடும் வெந்து, இரு நிலம் தீய்ந்து,
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடுஞ் சுரம் நேர்ந்தார். 38


இராமன் நினைவால் பாலை மாறிக் குளிர்தல்

'நீங்கல் ஆற்றலள் சனகி' என்று, அண்ணலும் நினைந்தான்;
ஓங்கு வெய்யவன், உடுபதி எனக் கதிர் உகுத்தான்;
தாங்கு வெங் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த;
பாங்கு வெங் கனல்; பங்கய வனங்களாய்ப் பரந்த; 39

வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள்,
பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன; பசைந்த;
இறுத்து எறிந்தன வல்லிகள் இளந் தளிர் ஈன்ற;
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உகக் களித்த; 40

குழுமி மேகங்கள் குமுறின, குளிர் துளி கொணர்ந்த;
முழு வில் வேடரும், முனிவரின் முனிகிலர், உயிரை;
தழுவி நின்றன, பசி இல, பகை இல, தணிந்த,
உழுவையின் முலை மான் இளங் கன்றுகள் உண்ட; 41

கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு,
அல்லல் உற்றில, அலை புனல் கிடந்தன அனைய;
வல்லை உற்ற வேய், புற்றொடும் எரிவன, மணி வாழ்
புல் எயிற்று இளங் கன்னியர் தோள் எனப் பொலிந்த; 42

படர்ந்து எழுந்த புல், பசு நிறக் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன; கேகயம் தோகைகள் கிளர,
மடந்தைமார் என, நாடகம் வயிந்தொறும் நவின்ற;
தொடர்ந்து பாணரின் பாங்கு இசை முரன்றன தும்பி; 43

காலம் இன்றியும் கனிந்தன கனி; நெடுங் கந்தம்,
மூலம் இன்றியும் முகிழ்த்தன, நிலன் உற முழுதும்;
கோல மங்கையர் ஒத்தன, கொம்பர்கள்;-இன்பச்
சீலம் அன்றியும், செய் தவம் வேறும் ஒன்று உளதோ? 44

எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த;
வயின் வயின்தொறும், மணி நிறக் கோபங்கள் மலர்ந்த;
பயில் மரம்தொறும், பரிந்தன பேடையைப் பயிலும்
குயில் இரங்கின; குரங்கின; குருந்தம் நின்று அரும்பின முருந்தம். 45

பந்த ஞாட்புறு பாசறை, பொருள்வயின், பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத் தழுவினர், பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது-அக் கழலோர்
வந்த போது, அவர் மனம் எனக் குளிர்ந்தது-அவ் வனமே! 46

சித்திரகூட மலையை மூவரும் காணுதல்

வெளிறு நீங்கிய பாலையை மெல்லெனப் போனார்,
குளிறும் வான் மதிக் குழவி, தன் சூல் வயிற்று ஒளிப்ப,
பிளிறு மேகத்தைப் பிடி எனப் பெரும் பனைத் தடக் கை
களிறு நீட்டும் அச் சித்திர கூடத்தைக் கண்டார். 47

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer