Friday 24 April 2015

அயோத்தியா காண்டம் 5. தைலம் ஆட்டுப் படலம்



5. தைலம் ஆட்டுப் படலம்

நகரத்தார் தொடர இராமன் தேரில் செல்லுதல்

ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார்?
மா இயல் தானை அம் மன்னை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால். 1

இராமனின் தேர் சென்ற காட்சி

கைகள் நீர் பரந்து, கால் தொடர, கண் உகும்
வெய்யநீர் வெள்ளத்து மெள்ளச் சேறலால்,
உய்ய, ஏழ் உலகும் ஒன்று ஆன நீர் உழல்
தெய்வமீன் ஒத்தது-அச் செம்பொன் தேர் அரோ! 2

சூரியன் மறையும் காட்சி

மீன் பொலிதர, வெயில் ஒதுங்க, மேதியோடு
ஆன் புக, கதிரவன் அத்தம் புக்கனன் -
'கான் புகக் காண்கிலேன்' என்று கல்லதர்
தான்புக முடுகினன் என்னும் தன்மையான். 3

தாமரை மலர்கள் குவிதல்

பகுத்தவான் மதிகொடு பதுமத்து அண்ணலே
வகுத்தவாள் நுதலியர் வதன ராசிபோல்,
உகுத்தகண் ணீரினின் ஒளியும் நீங்கின,
முகிழ்த்து, அழகு இழந்தன, முளரி ஈட்டமே. 4

இருள் பரவுதல்

அந்தியில் வெயில் ஒளி அழிய, வானகம்,
நந்தலில் கேகயன் பயந்த நங்கைதன்,
மந்தரை உரையெனும் கடுவின் மட்கிய
சிந்தையின் இருண்டது, செம்மை நீங்கியே. 5

வானில் விண்மீன்களின் ஒளி

பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்,
அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால்,
நிரந்தரம் இமைப்பு இலா நெடுங் கண் ஈண்டிய
புரந்தரன் உரு எனப் பொலிந்தது எங்குமே. 6

இராமன் ஒரு சோலையை அடைந்து முனிவருடன் தங்குதல்

திரு நகர்க்கு யோசனை இரண்டு சென்று, ஒரு
விரை செறி சோலையை விரைவின் எய்தினான்;
இரதம் நின்று இழிந்து, பின், இராமன், இன்புறும்
உரை செறி முனிவரோடு உறையும் காலையே. 7

நகர மக்களும் சோலையின் அருகே தங்குதல்

வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய், நடு
எள்தனை இடவும் ஓர் இடமிலா வகை,
புள்தகு சோலையின் புறத்துப் போர்த்தென
விட்டது-குரிசிலை விடாத சேனையே. 8

உடன்வந்தவர்கள் ஊண் உறக்கமின்றி துயருடன் தங்குதல்

குயின்றன குலமணி நதியின் கூலத்தில்,
பயின்று உயர் வாலுகப் பரப்பில், பைம்புலில்,
வயின் தொறும் வயின் தொறும் வைகினர்; ஒன்றும்
அயின்றிலர்; துயின்றிலர்; அழுது விம்மினார். 9

இராமனுடன் வந்தவர் உறங்குதல்

வாவி விரி தாமரையின் மா மலரின் வாசக்
காவி விரி நாள் மலர் முகிழ்த்தனைய கண்ணார்,
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக,
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார். 10

பெரும் பகல் வருந்தினர், பிறங்கு முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில்,
அரும்பு அனைய கொங்கை, அயில் அம்பு அனைய உண் கண்,
கரும்பு அனைய செஞ்சொல் நவில், கன்னியர் துயின்றார். 11

பூவகம் நிறைந்த புளினத் திரள்கள் தோறும்
மா வகிரின் உண்கணர் மடப்பிடியின் வைகச்
சேவகம் அமைந்த சிறு கண்கரிகள் என்னத்
தூ அகல் இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார். 12

மாகமணி வேதிகையில், மாதவிசெய் பந்தர்,
கேகய நெடுங்குலம் எனச்சிலர் கிடந்தார்;
பூகவனம் ஊடு, படு கர்ப்புளின முன்றில்,
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார். 13

சம்பக நறும்பொழில்களில், தருண வஞ்சிக்
கொம்பு அழுது ஒசிந்தன எனச்சிலர் குழைந்தார்;
வம்பளவு கொங்கையொடு, வாலுலகம் வளர்க்கும்
அம்பவள வல்லிகள் எனச் சிலர் அசைந்தார். 14


தகவுமிகு தவமும் இவை தழுவ, உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும் நுகர் கிலர்கள், துயர் முடுக,
அகவும் இள மயில்கள், உயிர் அலசியன அனையார்,
மகவுமுலை வருட, இள மகளிர்கள் துயின்றார். 15

குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்னத்
துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார்;
அங்கை அணையில், பொலிவு அழுங்க, முகம் எல்லாம்
பங்கயம் முகிழ்த்தன எனச் சிலர் படிந்தார். 16

இராமன் சுமந்திரனை அழைத்து தேருடன் ஊர் திரும்பக் கூறுதல்

ஏனையரும் இன்னணம் உறங்கினர்; உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை, 'வா' வென்று,
'ஊனம் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள்' என விளம்பும். 17

'பூண்ட பேரன்பினாரைப் போக்குவது அரிது; போக்காது,
ஈண்டு நின்று ஏகல் பொல்லாது; எந்தை! நீ இரதம் இன்னே
தூண்டினை மீள நோக்கிச் சுவட்டையோர்ந்து, என்னை "அங்கே
மீண்டனன்" என்ன மீள்வர்; இது நின்னை வேண்டிற்று' என்றான். 18

வெறுந்தேருடன் திரும்பிச் சென்று தயரதனுக்கு என்ன பதில் சொல்லுவது என சுமந்திரன் வருந்துதல்

செவ்விய குரிசில் கூற, தேர் வலான் செப்புவான், 'அவ்
வெவ்விய தாயின், தீய விதியினின் மேலன் போலாம்;
இவ் வயின் நின்னை நீக்கி, இன் உயிர் தீர்ந்து இன்று ஏகி,
அவ் வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன்' என்றான். 19

'தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூவியல் கானகம் புக உய்த்தேன் என்கோ?
கோவினை உடன்கொடு குறுகினேன் என்கோ?
யாவது கூறுகேன், இரும்பின் நெஞ்சினேன்? 20

'"தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா
வார் உடை முலையொடும், மதுகை மைந்தரைப்
பாரிடைச் செலுத்தினேன், பழைய நண்பினேன்,
தேரிடை வந்தனன், தீது இலேன்" என்கோ? 21

'வன்புலம் கல்மன மதியில் வஞ்சனேன்,
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்,
உன்புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கெனோ?
தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ? 22

'"நால்திசை மாந்தரும், நகர மாக்களும்,
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன் தன்னை" என்று
ஆற்றின அரசனை, ஐய! வெய்யஎன்
கூற்று உறழ் சொல்லினால், கொலைசெய் வேன்கொலோ? 23

'"அங்கிமேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின்
சிங்க ஏறு அகன்றது" என்று உணர்த்தச் செல்கெனோ?
எங்கள் கோமகற்கு, இனி, என்னின், கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்!' 24

சுமந்திரன் இராமனின் பாதங்களில் விழுந்து துயருடன் கூறுதல்

முடிவுற இன்னை மொழிந்த பின்னரும்,
அடி உறத் தழுவினன், அழுங்கு பேர் அரா
இடி உறத் துவளுவது என்னும் இன்னலன்;
படி உறப் புரண்டனன்; பலவும் பன்னினான். 25

துயருற்ற சுமந்திரனை இராமன் எடுத்து அணைத்து ஆறுதல் கூறுதல்

தடக்கையால் எடுத்து, அவன் தழுவிக், கண்ணநீர்
துடைத்து, வேறு இருத்தி மற்றினைய சொல்லினான்;
அடக்கும் ஐம் பொறியொடு கரணத்து அப்புறம்
கடக்கும்வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான். 26

'பிறத்தல் ஒன்று உற்றபின் பெறுவ யாவையும்
திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்!
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும்,
அறத்தினை மறத்தியோ, அவலம் உண்டு எனா? 27

'முன்பு நின்று இசை நிறீஇ, முடிவு முற்றிய
பின்பும் நின்று, உறுதியைப் பயக்கும் பேரறம்,
இன்பம் வந்து உறும் எனின் இனிது; ஆயிடைத்
துன்பம் வந்து உறும் எனின், துறங்கல் ஆகுமோ? 28

'நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற,
மறப்பயன் வினைக்குறும் வன்மை அன்று அரோ;
இறப்பினும், திருவெலாம் இழப்ப எய்தினும்,
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே. 29

'கான்புறம் சேறலில் அருமை காண்டலால்,
வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம்,
யான்பிறந்து, அறத்தினின்று இழுக்கிற்று என்னவோ?-
ஊன் திறந்து உயிர்குடித்து உழலும் வேலினாய்! 30

'வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள் விட்டனன்,
மனக்கு அரும் புதல்வனை' என்றல் மன்னவன்
தனக்கு அரும் தவம்; அது தலைக்கொண்டு ஏகுதல்
எனக்கு அருந் தவம்; இதற்கு இரங்கல் எந்தை! நீ. 31

தன் தந்தை முதலியோரிடம் சொல்ல வேண்டி இராமன் சிலவற்றை சுமந்திரனிடம் சொல்லுதல்

'முந்தினை முனிவனைக் குறுகி, முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறினை,
எந்தையை அவனொடும் எய்தி, "ஈண்டு, என
சிந்தனை உணர்த்துதி" என்று, செப்புவான். 32

'முனிவனை, எம்பியை, "முறையில் நின்று, அரும்
புனித வேதியர்க்கும், மேல் உறை புத்தேளிர்க்கும்,
இனியன இழைத்தி" என்று இயம்பி, "எற் பிரி
தனிமையும் தீர்த்தி" என்று உரைத்தி, தன்மையால். 33

'"வெவ்வியது, அன்னையால் விளைந்தது, ஈண்டு ஒரு
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன்,
எவ் அருள் என்வயின் வைத்தது, இன் சொலால்,
அவ் அருள் அவன் வயின் அருளுக!" என்றியால். 34

'வேண்டினென் இவ் வரம் என்று, மேலவன்
ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி, ஏகினை,
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு, இனிது
ஆண் தகை வேந்தனை அவலம் ஆற்றி, பின், 35

'"ஏழ்-இரண்டு ஆண்டும் நீத்து, ஈண்ட வந்து உனைத்
தாழ்குவென் திருவடி; தப்பிலேன்" எனச்
சூழி வெங் களிற்று இறை தனக்குச் சோர்வு இலா
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய். 36

'முறைமையால் எற்பயந்து எடுத்த மூவர்க்கும்
குறைவிலா என்நெடு வணக்கம் கூறிப்பின்
இறைமகன் துயர்துடைத்து இருத்தி, மாடு' என்றான்
மறைகளை மறைந்துபோய் வனத்துள் வைகுவான். 37

இராமனை வணங்கி சுமந்திரன் சீதையை நோக்குதல்

'ஆள்வினை, ஆணையின் திறம்பல் அன்று' எனா,
தாள்முதல் வணங்கிய தனித் திண் தேர் வலான்,
'ஊழ்வினை வரும் துயர் நிலை' என்று உன்னுவான்,
வாழ்வினை நோக்கியை வணங்கி நோக்கினான். 38

சீதை சுமந்திரனிடம் செய்தி கூறல்

அன்னவள் கூறுவாள், 'அரசர்க்கு, அத்தையர்க்கு,
என்னுடை வணக்கம், முன் இயம்பி, யானுடைப்
பொன் நிறப் பூவையும், கிளியும், போற்றுக என்று
உன்னும் என் தங்கையர்க்கு உணர்த்துவாய்' என்றாள். 39


இராமன் தேற்றவும், சுமந்திரன் பொருமி விம்முதலும்

தேர் வலான், அவ் உரை கேட்டு, 'தீங்கு உறின்
யார் வலார்? உயிர் துறப்பு எளிது அன்றே?' எனாப்
போர் வலான் தடுக்கவும், பொருமி விம்மினான் -
சோர்வு இலாள் அறிகிலாத் துயர்க்குச் சோர்கின்றான். 40

இராமனிடம் விடைபெற்று சுமந்திரன், இலக்குவனை வினாவுதல்

ஆறினன் போல் சிறிது அவலம், அவ் வழி,
வேறு இலா அன்பினான், 'விடை தீந்தீக' எனா
ஏறு சேவகன் - தொழுது, இளைய மைந்தனை,
'கூறுவது யாது?' என, இனைய கூறினான். 41

இலக்குவன் சொன்ன கோபச் செய்தி

'உரைசெய்து எம் கோமகற்கு உறுதி ஆக்கிய
தரைகெழு செல்வத்தைத் தவிர, மற்று ஒரு
விரை செறி குழலிமாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையற் பாலதோ? 42

'கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண,
போனகம் பற்றிய பொய் இல் மன்னற்கு, இங்கு
ஊனகம் பற்றிய உயிர்கொடு, இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு' என்றான். 43

இலக்குவன் பரதனுக்கு சொல்லிய கோபச் செய்தி

'மின்னுடன் பிறந்தவாள் பரத வேந்தற்கு, "என்
மன்னுடன் பிறந்திலென்; மண்கொண்டு ஆள்கின்றான்,
தன்னுடன் பிறந்திலென்; தம்பி முன்னலென்;
என்னுடன் பிறந்தயான் வலியன்" என்றியால். 44

இராமன் இலக்குவனை அடக்க, சுமந்திரன் அயோத்தி நோக்கி புறப்படுதல்

ஆரியன் இளவலை நோக்கி, 'ஐய! நீ
சீரிய அல்லன செப்பல்' என்றபின்,
பாரிடை வணங்கினன், பதைக்கு நெஞ்சினன்;
தேரிடை வித்தகன் சேறல் மேயினான். 45

கூட்டினன் தேர்ப்பொறி; கூட்டிக் கோள்முறை
பூட்டினன் புரவி; அப் புரவி போம் நெறி
காட்டினன்; காட்டித்தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன்; ஒருவரும் உணர்வுறாமலே. 46

இராமன், சீதை இலக்குவனுடன் இரவில் செல்லுதல்

தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மையறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்யதன் வில்லுமே, சேமமாகக் கொண்டு
ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே. 47

நிலவின் தோற்றம்

பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரைப் பொருந்தி, அன்னார்
செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர்த் தடுப்பது ஏய்க்கும்,
மை விளக்கியதே அன்ன வயங்கு, இருள் துரக்க, வானம்
கைவிளக்கு எடுத்தது என்ன, வந்தது - கடவுள் திங்கள். 48

மருமத்துத் தன்னை ஊன்றும் மறக் கொடும் பாவம் தீர்க்கும்
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற
கருமத்தின் விளைவை எண்ணிக் களிப்பொடு காண வந்த
தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது - தனி வெண் திங்கள். 49

மலர்கள் குவிந்திருத்தல்

காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி,
தேம்பின குவிந்த போலும் செங்கழு நீரும்; சேரைப்
பாம்பின தலைய ஆகிப் பரிந்தன, குவிந்து சாய்ந்த,
ஆம்பலும்; என்றபோது, நின்ற போது அலர்வது உண்டோ ? 50

நிலவொளியில் மூவரும் செல்லுதல்

அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும், அழகன் தன்னை
எஞ்சலில் பொன் போர்த்தன்ன இளவலும், இந்து என்பான்
வெஞ்சிலைப் புருவத் தாள்தன் மெல்லடிக்கு ஏற்ப, வெண் நூல்
பஞ்சிடைப் படுத்தாலன்ன வெண்ணிலாப் பரப்பப் போனார். 51

சீதை தரையில் நடந்து செல்லுதல்

சிறுநிலை மருங்குல் கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறியிருங் கூந்தல் நங்கை சீறடி, நீர்க்கொப் பூழின்
நறியன, தொடர்ந்து சென்று நடந்தனள், 'நவையின் நீங்கும்
உறுவலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டென' நுவல்வது உண்டோ ? 52

மூவரும் தென் திசையில் மூன்று யோசனை தூரம் செல்லுதல்

பரிதி வானவனும், கீழ்பால் பரு வரை பற்றாமுன்னம்,
திருவின் நாயகனும், தென்பால் யோசனை இரண்டு போனான்;
அருவி பாய் கண்ணும், புண்ணாய் அழிகின்ற மனமும், தானும்,
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம். 53

சுமந்திரன் வசிட்டனை கண்டு செய்தி தெரிவித்தல்

கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான்;
அடி இணை தொழுதான், ஆதி முனிவனை; அவனும், உற்ற
படி எலாம் கேட்டு, நெஞ்சில் பருவரல் உழந்தான், முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான், 'அந்தோ! முடிந்தனன், மன்னன்' என்றான். 54

வசிட்டனும் சுமந்திரனும் தயரதனின் அரண்மனை புகுதல்

'நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க, வள்ளல்;
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான், தருமத்திற்கு உறுதி பார்ப்பான்;
வென்றவர் உளரோ மேலை விதியினை?' என்று விம்மிப்
பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான். 55

'தேர் கொண்டு வள்ளல் வந்தான்' என்று தம் சிந்தை உந்த,
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றிக்
கார் கொண்ட மேனியானைக் கண்டிலர்; கண்ணில், வற்றா
நீர் கொண்ட நெடுந் தேர்ப் பாகன் நிலை கண்டே, திருவின் தீர்ந்தார். 56

இரதம் வந்தது அறிந்த தயரதன் கண்விழித்து இராமன் வந்தானா என வினவுதல்

'இரதம் வந்து உற்றது' என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும்,
வரதன் வந்துற்றான் என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான்;
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி,
விரத மா தவனைக் கண்டான், 'வீரன் வந்தனனோ?' என்றான். 57

வசிட்டன் பதில் உரையாது அவ்விடம் விட்டு அகலுதல்

'இல்லை' என்று உரைக்கலாற்றான் ஏங்கினன், முனிவன் நின்றான்;
வல்லவன் முகமே, 'நம்பி வந்திலன்' என்னும் மாற்றம்
சொல்லலும், அரசன் சோர்ந்தான்; துயர் உறு முனிவன், 'நான் இவ்
அல்லல் காண்கில்லேன்' என்னா, ஆங்கு நின்று அகலப் போனான். 58

இராமன் காடு சென்றதை சுமந்திரன் மூலம் அறிந்த தயரதன் உயிர் நீத்தல்

நாயகன், பின்னும், தன் தேர்ப் பாகனை நோக்கி, 'நம்பி
சேயனோ? அணியனோ?' என்று உரைத்தலும், தேர் வலானும்,
'வேய் உயர் கானம், தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும்,
போயினன்' என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான். 59


தயரதனை வானோர் மீளா உலகில் சேர்த்தல்

இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி,
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி,
'வந்தனன், எந்தை தந்தை!' என மனம் களித்து, வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர் மீள்கிலா உலகத்து உய்த்தார். 60

தயரதன் மாண்ட செய்தி கேட்டு கோசலை புலம்பல்

'உயிர்ப்பிலன், துடிப்பும் இல்லன்' என்றுணர்ந்து, உருவம் தீண்டி
அயிர்த்தனள் நோக்கி, மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி,
மயிற்குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள்,
வெயிற்சுடு கோடை தன்னில் என்பிலா உயிரின் வேவாள். 61

இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈனப்
பெருந் தவம் செய்த நங்கை, கணவனில் பிரிந்து, தெய்வ
மருந்து இழந்தவரின் விம்மி, மணி பிரி அரவின் மாழ்கி,
அருந் துணை இழந்த அன்றிற் பெடை என, அரற்றலுற்றாள்: 62

'தானே! தானே! தஞ்சம் இலாதான், தகைவு இல்லான்,
போனான்! போனான்! எங்களை நீத்து, இப்பொழுது' என்னா,
வான் நீர் சுண்டி மண் அற வற்றி, மறுகுற்ற
மீனே என்ன, மெய் தடுமாறி விழுகின்றாள். 63

'ஒன்றோ நல்நாட்டு உய்க்குவர்; இந்நாட்டு உயிர்காப்பார்
அன்றே? மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே?
இன்றே வந்து, ஈண்டு 'அஞ்சல்' எனாதுஎம், மகன் என்பான்,
கொன்றான் அன்றே தந்தையை?' என்றாள் குலைகின்றாள். 64

'நோயும் இன்றி, நோன்கதிர் வாள், வேல், இவை இன்றி
மாயும் தன்மை மக்களினாலோ; மறமன்னன்
காயும் புள்ளிக் கர்க்கடம், நாகம், கனிவாழை,
வேயும் போன்றான்' என்று மயங்கா விழுகின்றாள். 65

'வடித்தாழ் கூந்தலில் கேகயன் மாதே! மதியாலே
பிடித்தாய் வையம்; பெற்றனை பேரா வரம்; இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம்?" என்றாள் முகில்வாய் மின்
துடித்தால் என்ன, மன்னவன் மார்பில் துவள்கின்றாள். 66

'அருந்தேரானைச் சம்பரனைப் பண்டு அமர் வென்றாய்;
இருந்தார் வானோர் உன்னருளாலே இனிது; அன்னார்
விருந்தா கின்றாய்' என்றனள், வேழத்து அரசு ஒன்றைப்
பிரிந்து ஆர் அன்பில் தாழ்பிடி என்னப் பிணியுற்றாள். 67

'வேள்விச் செல்வம் துய்த்திகொல்? மெய்ம்மைத் துணை இன்மை
சூழ்வின் செல்வம் துய்த்திகொல்? தோலா மனு நூலின்
வாழ்வின் செல்வம் துய்த்திகொல் மன்?' என்றனள் - வானோர்
கேள்விச் செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான். 68

அறுபதினாயிரம் தேவிமார்களும் திரண்டு வந்து புலம்புதல்

ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற,
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர,
ஊழி திரிவது எனக் கோயில் உலையும் வேலை, மற்று ஒழிந்த
மாழை உண்கண் தேவியரும், மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார். 69

தேவிமார்கள் அனைவரும் தயரதனுடன் உயிர் துறக்க எண்ணுதல்

துஞ்சினானை, தம் உயிரின் துணையைக் கண்டார்; துணுக்கத்தால்
நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார்; என்றாலும்,
அஞ்சி அழுங்கி விழுந்திலரால்; - அன்பின் தறுகண் பிறிது உண்டோ?-
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார். 70

அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில், அண்டர் உலகில், அப்புறத்தில்
விளங்கும் மாதர், 'கற்பினார், இவரின் யாரோ!' என, நின்றார்;
களங்கம் நீத்த மதி முகத்தார்; கான வெள்ளம் கால் கோப்ப,
துளங்கல் இல்லாத் தனிக்குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார். 71

கைத்த சொல்லால் உயிர் இழந்தும், புதல்வற் பிரிந்தும், கடை ஓட
மெய்த்த வேந்தன் திரு உடம்பைப் பிரியார் பற்றி விட்டிலரால்;
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவிப் பெரிய கடல் கடக்க,
உய்த்து மீண்ட நாவாயில், தாமும் போவார் ஒக்கின்றார். 72

சுமந்திரனால் செய்தி அறிந்த வசிட்டன் வருந்துதல்

மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப,
கோது இல் குணத்துக் கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க,
சோதி மணித் தேர்ச் சுமந்திரன் சென்று, அரசன் தன்மை சொல, வந்த
வேத முனிவன், விதி செய்த வினையை நோக்கி விம்முவான். 73

வந்த முனிவன், 'வரம் கொடுத்து மகனை நீத்த வன் கண்மை
எந்தை தீர்த்தான்' என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான்,
உந்து கடலில் பெருங் கலம் ஒன்று உடையா நிற்கத் தனி நாய்கன்
நைந்து நீங்கச் செயல் ஓரா மீகாமனைப் போல், நலிவுற்றான். 74

தயரதனின் உடலை தையலத்திலிடுதல்

'செய்யக் கடவ செயற்குரிய சிறுவர், ஈண்டை யார் அல்லர்;
எய்தக் கடவ பொருள் எய்தாது இகவாது' என்ன, இயல்பு எண்ணா,
'மையற் கொடியான் மகன், ஈண்டு வந்தால் முடித்தும் மற்று' என்னத்
தையற் கடலில் கிடந்தாளைத் தயிலக் கடலின் தலை உய்த்தான். 75

பரதனை அழைத்து வர வசிட்டன் ஓலை அனுப்புதல்

தேவிமாரை, 'இவற்கு உரிமை செய்யும் நாளில், செந் தீயின்
ஆவி நீத்திர்' என நீக்கி, அரிவைமார்கள் இருவரையும்,
தா இல் கோயில் தலை இருத்தி, 'தண் தார்ப் பரதற் கொண்டு அணைக' என்று
ஏவினான், மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்து, அவரை. 76

போனார் அவரும், கேகயர்கோன் பொன் மா நகரம் புக எய்த;
ஆனா அறிவின் அருந் தவனும், அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான்;
சேனாபதியின் சுமந்திரனை 'செயற்பாற்கு உரிய செய்க' என்றான்;
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம்: 77

சூரியன் உதித்தல்

மீன் நீர் வேலை முரசு இயம்ப, விண்ணோர் ஏத்த, மண் இறைஞ்ச,
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க, சுடர்த் தேர் ஏறித் தோன்றினான் -
'வானே புக்கான் அரும் புதல்வன்; மக்கள் அகன்றார்; வரும் அளவும்
யானே காப்பென், இவ் உலகை' என்பான் போல, எறி கதிரோன். 78

காட்டில் விழித்தெழுந்த மக்கள் இராமனைக் காணாது வருந்துதல்

வருந்தா வண்ணம் வருந்தினார்; மறந்தார், தம்மை 'வள்ளலும் ஆங்கு
இருந்தான்' என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார்; அருள் இருக்கும்
பெருந்தாமரைகண் கருமுகிலைப் பெயர்ந்தார், காணார்; பேதுற்றார்;
'பொருந்தா நயனம் பொருந்தி நமைப் பொன்றச் சூழ்ந்த' எனப் புரண்டார். 79

இராமனைக் காணாத நகரமாந்தர் செய்தவை

எட்டுத் திசையும் ஓடுவான் எழுவார்; விழுவார் இடர்க் கடலுள்;
'விட்டு நீத்தான் நமை' என்பார்; 'வெய்ய, ஐயன் வினை' என்பார்;
'ஒட்டிப் படர்ந்த தண்டகம், இவ் உலகத்து உளது அன்றோ? உணர்வைச்
சுட்டுச் சோர்தல் பழுது அன்றோ? தொடர்தும் தேரின் சுவடு' என்பார். 80

தேர்ச்சுவடு அயோத்தி நோக்கி செல்வது கண்டு மக்கள் ஆரவாரித்தல்

தேரின் சுவடு நோக்குவார்; திரு மா நகரின் மிசைத் திரிய
ஊரும் திகிரிக் குறி ஒற்றி உணர்ந்தார்; எல்லாம் உயிர் வந்தார்;
'ஆரும் அஞ்சல்; ஐயன் போய் அயோத்தி அடைந்தான்' என, அசனிக்
காரும், கடலும், ஒருவழிக் கொண்டு ஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார். 81


மகிழ்ச்சி அடைந்த மக்களின் தன்மை

மானம் அரவின் வாய்த் தீய வளைவான் தொளைவாள் எயிற்றின்வழி
ஆன கடுவுக்கு, அருமருந்தா அருந்தும் அமுதம் பெற்றுய்ந்து,
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார், பொருவரிய
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர். 82

தேர்ச்சுவட்டினை தொடர்ந்து மக்கள் அயோத்தி அடைதல்

ஆறு செல்லச் செல்ல, தேர் ஆழி கண்டார், அயற்பால
வேறு சென்ற நெறி காணார்; விம்மாநின்ற உவகையராய்,
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும்
ஏறி ஒடுங்கும் எறிகடல்போல், எயில் மா நகரம் எய்தினார். 83

மக்கள் இராமன் கானகம் சென்றதையும், மன்னன் இறந்ததையும் அறிந்து பெருந்துயருறுதல்

புக்கார், 'அரசன் பொன்னுலகம் போனான்' என்னும் பொருள் கேட்டார்;
உக்கார், நெஞ்சம்; உயிர் உகுத்தார்; உற்றது எம்மால் உரைப்ப அரிதால்;
'தக்கான் போனான் வனம்' என்னும் தகையும் உணர்ந்தார்; - மிகை ஆவி
அக் காலத்தே அகலுமோ, அவதி என்று ஒன்று உளதானால்? 84

மக்களின் வருத்தத்தை வசிட்டன் ஆற்றுதல்

மன்னற்கு அல்லார்; வனம்போன மைந்தற்கு அல்லார்; வாங்க அரிய
இன்னல் சிறையின் இடைப்பட்டார், இருந்தார்; நின்ற அருந்தவனும்,
'உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான்?' என்று,
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து, பதைப்பை நீக்கினான். 85

வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத
பள்ளக் கடலின், முனி பணியால், பையுள் நகரம் வைகிட, மேல்
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால், வயங்கு இருளின்
நள்ளில் போன வரி சிலைக் கை நம்பி செய்கை நடத்துவாம். 86

மிகைப் பாடல்கள்

தொடுத்த கல் இடைச் சிலர் துவண்டனர் துயின்றார்;
அடுத்த அடையிற் சிலர் அழிந்தனர் அயர்ந்தார்;
உடுத்த துகில் சுற்று ஒரு தலைச் சிலர் உறைந்தார்;
படுத்த தளிரில் சிலர் பசைந்தனர் அசந்தார். 16-1

ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து, மற்று அவண்
இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலைத் தாங்கி, தாழ்வு இலாப்
பொரு திறல் சுமந்திரன் போய பின்னரே. 46-1

துந்துமி முழங்க, தேவர் தூய் மலர் பொழிந்து வாழ்த்த,
சந்திர வதனத்து ஏயும் அரம்பையர் தழுவ, தங்கள்
முந்து தொல் குலத்துளோரும் முக்கணான் கணமும் சூழ,
அந்தரத்து அரசன் சென்றான், ஆன தேர்ப் பாகன் சொல்லால். 59-1

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer