Friday, 24 April 2015

அயோத்தியா காண்டம் 6. கங்கைப் படலம்



6. கங்கைப் படலம்

இராமன் சீதை இலக்குவனோடு காட்டில் செல்லல்

வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-
"மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!" என்பதோர் அழியா அழகு உடையான். 1

சீதையுடன் செல்லும் இராமன் மருத நிலத்தில் திரியும் அன்னம் முதலியவற்றைக் காணுதல்

அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள், கடல் அமிழ்தின்
தெளிவு அன்னது ஓர் மொழியாள், நிறை தவம் அன்னது ஓர் செயலாள்,
வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான். 2

அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா,
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான்,
துஞ்சும்களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும்
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள். 3

மா கந்தமும், மகரந்தமும், அளகம்தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு, பவளந்தரும் இதழான்,
மேகந்தனி வருகின்றது மின்னோடு என, மிளிர்பூண்,
நாகம் நனி வருகின்றது பிடியோடு என, நடவா, 4

தொளைகட்டிய கிளைமுட்டிய சுருதிச் சுவை அமுதின்,
கிளைகட்டிய கருவிக்கிளர், இசையின், பசை நறவின்,
விளைகட்டியின், மதுரித்துஎழு கிளவிக் கிளி விழிபோல்,
களைகட்டவர் தளைவிட்டெறி குவளைத்தொகை கண்டான். 5

மூவரும் மருத நிலக் காட்சிகளை கண்ட வண்ணம் கோசல நாட்டைக் கடத்தல்

'அருப்பேந்திய கலசத்துணை, அமுதேந்திய மதமா
மருப்பேந்திய' எனலாம் முலை, மழையேந்திய குழலாள்,
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள், இடர் காணாள்,
பொருப்பேந்திய தோளானொடு விளையாடினள், போனாள். 6

பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர்
அன்னந்துயில் வதி தண்டலை, அயல்நந்து உளை புளினம்,
சின்னம் தரும் மலர்சிந்திய செறிநந்தன வனம் நல்
பொன் நந்திய நதி, கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார். 7

கால்பாய்வன முதுமேதிகள் கதிர்மேய்வன, கடைவாய்ப்
பால்பாய்வன; நறைபாய்வன மலர்வாய் அளி படரச்
சேல்பாய்வன; கயல்பாய்வன; செங்கால்மட அன்னம்
போல், பாய்புனல் மடவார்படி நெடு நாடு அவை போனார். 8

மூவரும் கங்கையை அடைதல்

பரிதி பற்றிய பல்கலன் முற்றினர்,
மருத வைப்பின் வளங்கெழு நாடு ஒரீஇ,
சுருதி கற்று உயர் தோம் இலர் சுற்றுறும்
விரிதி ரைப்புனல் கங்கையை மேவினார். 9

கங்கைக் கரையில் தங்கியிருக்கும் முனிவர்கள் இராமனைக் காண வருதல்

கங்கை என்னும் கடவுள் திருநதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்,
'எங்கள் செல்கதி வந்தது' என்று ஏமுறா,
அங்கண் நாயகன் காண, வந்து அண்மினார். 10

வந்த முனிவர்களை இராமன் தரிசித்து மகிழ்தல்

பெண்ணின் நோக்கும் சுவையில், பிறர்பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
பண்ணின் நோக்கும் பராஅமு தைப்பசுங்
கண்ணின் நோக்கினர், உள்ளங் களிக்கின்றார். 11

முனிவர்கள் இராமனை புகழ்ந்து பாடி ஆடுதல்

எதிர்கொடு ஏத்தினர்; இன்னிசை பாடினர்;
வெதிர்கொள் கோலினர், ஆடினர்; வீரனைக்
கதிர்கொள் தாமரைக் கண்ணனைக் கண்ணினால்,
மதுர வாரி அமுதென, மாந்துவார். 12

முனிவர்கள் இராமனைத் தம் இருப்பிடம் அழைத்துச் செல்லுதல்

மனையின் நீங்கிய மக்களை வைகலும்
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார்,
அனையர் வந்துற, ஆண்டு எதிர்ந்தார்கள்போல்,
இனிய மாதவப் பள்ளிகொண்டு எய்தினார். 13

இராமன் வழி வந்த வருத்தத்தை முனிவர்கள் போக்குதல்

பொழியும் கண்ணீர் புதுப்புனல் ஆட்டினர்;
மொழியும் இன்சொலின், மொய்ம்மலர் சூட்டினர்;
அழிவில் அன்பெனும் ஆரமிழ்து ஊட்டினர்;
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர். 14


இராமனை நீராடி அமுது உண்ண முனிவர்கள் வேண்டல்

காயும், கானிற் கிழங்கும், கனிகளும்,
தூய தேடிக் கொணர்ந்தனர்; 'தோன்றல்! நீ
ஆய கங்கை அரும்புனல் ஆடினை,
தீயை ஒம்பினை, செய்யமுது' என்றனர். 15

இராமனும் சீதையும் கங்கையில் நீராடுதல்

மங்கையர்க்கு விளக்கன்ன மானையும்,
செங்கை பற்றினன், தேவரும் துன்பு அற,
பங்கயத்து அயன், பண்டு, தன் பாதத்தின்
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான். 16

இராமனை கங்கை புகழ்தல்

கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழாப்
'பன்னி நீக்க அரும் பாதகம், பாருளோர்,
என்னின் நீக்குவர்; யானும், இன்று என் தந்த
உன்னின் நீக்கினென்; உய்ந்தனென் யான்' என்றாள். 17

கங்கையில் மூழ்கும் இராமனின் தோற்றம்

வெம் கண் நாகக் கரத்தினன், வெண்ணிறக்
கங்கை வார்சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காணநின்றாடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான். 18

தள்ளும் நீர்ப்பெருங் கங்கைத் தரங்கத்தால்,
வள்ளி நுண்ணிடை மாமல ராளொடும்,
வெள்ளி வெண் நிறப் பாற்கடல், மேலைநாள்
பள்ளி நீங்கிய பான்மையின், தோன்றினான். 19

சீதை கங்கையில் நீராடுதல்

வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள். 20

சீதை நீராடியதால் கங்கை நறுமணம் பெறுதல்

தேவ தேவன் செறிசடைக் கற்றையுள்
கோவை மாலை எருக்கொடு கொன்றையின்
பூவு நாறலள்; பூங்குழல் கூந்தலின்
நாவி நாள்மலர் கங்கையும் நாறினாள். 21

கங்கையின் அலைகள் சீதை மீது மோதுதல்

நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி,
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்,
திரைக்கை நீட்டிச் செவிலியின் ஆட்டினாள். 22

சீதையின் கூந்தல் கங்கை வெள்ளத்தில் தோன்றும் காட்சி

மங்கை வார்குழல் கற்றை மழைக்குலம்,
தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன,
கங்கை யாற்றுடன் ஓடும் கரியவள்
பொங்கு நீர்ச்சுழி போவன போன்றதே. 23


சீதை புனித கங்கையில் மூழ்கி எழுதல்

சுழிபட்டு ஓங்கிய தூங்குஒலி ஆற்றுத்தன்
விழியில் சேலுகள் வானிற வெள்ளத்து,
முழுகித் தோன்றுகின்றாள், முதற் பாற்கடல்
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள். 24

இராமன் நீராடியதால் கங்கையின் மகிமை மிகுதல்

செய்ய தாமரைத் தாள்பண்டு தீண்டலால்,
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்
ஐயன் மேனி எலாம் அளைந்தாள், இனி,
வையம் மா நரகத்திடை வைகுமோ? 25

இராமன் கடன் முடித்து முனிவரின் நல்விருந்து உண்ணுதல்

துறை நறும்புனல் ஆடிச் சுருதியோர்
உறையுள் எய்தி, உணர்வு உடையோர் உணர்
இறைவன் கைதொழுது, ஏந்துஎரி ஓம்பிப்பின்
அறிஞர் காதற்கு அமைவிருந்து ஆயினான். 26

முனிவர் கொடுத்த விருந்தால் இராமன் மகிழ்தல்

வருந்தித் தான் தர வந்த அமுதையும்,
'அருந்தும் நீர்' என்று அமரரை, ஊட்டினான்,
விருந்து மெல்லடகு உண்டு விளங்கினான்-
திருந்தினார் வயிற் செய்தன தேயுமோ? 27

மிகைப் பாடல்கள்

அன்ன காரணத்து ஐயனும், ஆங்கு அவர்
உன்னு பூசனை யாவும் உவந்தபின்,
மின்னு செஞ் சடை மெய்த் தவர் வேண்டிட,
பன்ன சாலையின் பாடு இருந்தான் அரோ. 27-1

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer