Wednesday 11 October 2017

ஞானேஸ்வரர்

ஞானேஸ்வரர்



கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான கோவிந்த பண்டிதர்-நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம்  நூற்றாண்டில் மகனாகப் பிறந்தான், விடோபா. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா, புனிதத் தலங்களுக்கு யாத்திரை  மேற்கொண்டான். அப்படி, ஆலந்தி நகருக்கு வந்தபோது, அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை  ஆகியவற்றால் அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர், தன் மகள் ருக்மிணியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நாட்கள்  நகர்ந்தன. ஒருநாள், மனைவியின் சம்மதத்துடன் காசிக்குச் சென்றார் விடோபா. அங்கே, சுவாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்குத்  துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான் திருமணமானவன் என்பதை மறைத்து, ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம்  பூண்டார். பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரின் மனைவி ருக்மிணி கணவரைக் காணோமே எனப்  பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த நிலையில், சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார். வழியில் ஆலந்தியை அடைந்தார். அவரைச்  சந்தித்து தனது குறையைச் சொன்னாள் ருக்மிணி. அதைக் கேட்ட சுவாமி, விடோபா தான் இவளின் கணவன் என அறிந்து  வேதனைப்பட்டார். பிறகு காசிக்குத் திரும்பியவர், விடோபாவைக் கடிந்து கொண்டதுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாயாக! என்றார்.  அவரின் கட்டளைப்படி, ஆலந்திக்கு திரும்பிய விடோபாவை அன்புடன் வரவேற்றாள் ருக்மிணி. காலங்கள் ஓடின. அந்த தம்பதிகளுக்கு  மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின் இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வரர் (கி.பி. 1275ம் வருடம்).

அவரை விஷ்ணுவின் அம்சம் எனப் போற்றுவர். வேதங்களையும் உபநிடதங்களையும் இளமையிலேயே கற்றுத் தேர்ந்த ஞானேஸ்வர்,  அவற்றை மிக எளிமையாகப் போதித்து வந்தார். தான் செய்த தவற்றால், சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டு, தான் அடைந்த துன்பத்தை  குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது எனக் கருதிய விடோபா, தவற்றுக்குப் பிராயச் சித்தமாக, மனைவியை அழைத்துக்கொண்டு கங்கை,  யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மூழ்கி, உயிர்த் தியாகம் செய்தார். ஆதரவற்ற நிலையில் தவித்த  குழந்தைகளைக் கண்டு, ஆலந்தி அந்தணர்கள் மனமிரங்கினர். குல வழக்கப்படி அவர்களுக்கு உபநயனம் செய்யவும் முடிவு செய்தனர்.  இருப்பினும், பைதன் நகர பண்டிதர்களின் அனுமதியைப் பெற்று வரும்படி, அவர்களை அனுப்பி வைத்தனர்.வேத சாஸ்திரங்களில்  கரைகண்டவர்கள் அந்த அந்தணர்கள். அவர்களின் முன், இளம் சகோதரர்கள் மூவர் பணிவுடன் நின்றனர். அந்தணர்களின் புனிதக்  கடமை, உபநயனம் செய்து கொள்வது ! எங்களது ஆலந்தி கிராமத்து அந்தணர்கள், எங்களுக்கு உபநயனம் செய்துவைக்கத் தயாராக  உள்ளனர். ஆனாலும், உங்களின் அனுமதிக்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். எங்களுக்கு அனுமதி வழங்கி உதவுங்கள் ! என்றனர்.  அதைக் கேட்டதும் அந்தப் பண்டிதர்கள், உபநயனம் செய்துகொள்ள, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? எனப் பரிகசித்தனர். அதில்  ஆவேசமான மூவரும், மடமடவென வேதத்தை ஓதத் துவங்கினர். உடனே பண்டிதர்கள், முறையற்று வாழ்ந்த அந்தணன் பெற்றெடுத்த  மக்கள் நீங்கள். எனவே, உங்களுக்கு வேதம் ஓதுகிற உரிமையில்லை. அது, எங்களைப் போன்ற உயர் மக்களுக்கே உரித்தானது! என்று  கர்வத்துடன் சொன்னார்கள். இதைக் கேட்டு, மூன்று சகோதரர்களில் ஒரு சிறுவன், கொதித்து எழுந்தான்; அவனுக்கு வயது எட்டு.

அருகில் தண்ணீர்ப் பானைகளைச் சுமந்தபடி வந்த எருமைக் கிடாவைச் சுட்டிக் காட்டி, வேதம் ஓதும் தகுதி உங்களுக்கு மட்டுமே  உரியதல்ல! இதோ... இந்த எருமைக்கும் தகுதி உண்டு என்று சொல்லிவிட்டு, அந்த எருமையின் முதுகில் கைவைக்க... அப்போது  நிகழ்ந்தது அந்த அதிசயம் ! மூவரும் வேதம் ஓதி நிறுத்தினார்கள், அல்லவா... அந்த இடத்தில் இருந்து வரி பிசகாமல், வேதம் ஓதத்  துவங்கியது, எருமை. இறுதியில், பிறப்பால் தாழ்ந்த குலத்தவனாக இருப்பினும், கர்மானுஷ்டானங்களான செயல்களாலும் நடத்தையாலும்  ஒருவன் உயர்ந்த குலத்தவனாகிறான் எனப் பொருள்படும்படி, நான்கு கவிதைகளை அழகாகச் சொல்லிற்று. எருமை வேதம் ஓதியதைக்  கேட்டு, வாயடைத்துப் போனது பண்டிதர் கூட்டம். அனைவரும் ஓடோடி வந்து, சிறுவனை நமஸ்கரித்தனர். தனது மூத்த சகோதரரான  நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று, குண்டலினி யோகம் முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருநாதர் அறிவுரைப்படி, தனது 15-வது  வயதில், மராட்டிய மொழியில், பாமரர்க்கும் புரியும் வகையில், 18 அத்தியாயங்களில் அற்புதமான விளக்கவுரை எழுதினார், ஞானேஸ்வர்.  பாவார்த்த தீபிகா தீகா எனும் பெயரில் அறியப்பட்ட அந்த உரை, பிறகு அவரது திருநாமத்துடன் ஞானேஸ்வரி எனப் போற்றப்படுகிறது.  அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் அம்ருதானுபவ எனும் நூல், அவரின் மற்றொரு படைப்பு. அவர் நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம் !  இறை நம்பிக்கையற்ற ஒருவனைத் திருத்துவதற்காகத் தனது முதுகையே அடுப்பாக்கி, கொதிக்கச் செய்து, தனது சகோதரி  முக்தாபாயை, தன் முதுகின் மீது ரொட்டி சுடச் செய்திருக்கிறார், ஞானேஸ்வர். தனது யோக சக்தியின் மீது கர்வம் கொண்டு, புலியின்  மீது அமர்ந்து, பாம்பைக் கையில் பிடித்தபடி வாதம் செய்ய வந்த சித்த புருஷர் சாங்கதேவரை, தாம் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை  அப்படியே நகர்த்தி தடுத்து நிறுத்தி, அவருக்கு உபதேசித்து ஆட்கொண்டருளினார் ஞானேஸ்வர். சகோதர - சகோதரிகள் மற்றும்  நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம், துவாரகை, அயோத்தி, மதுரா, காசி, மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று  உபதேசங்கள் செய்து, பக்தர்களை நெறிப்படுத்தியுள்ளார். பிறகு, 1296-ஆம் வருடம், தனது 22 - வது வயதில், பிறவியெடுத்ததன் நோக்கம்  நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர், கார்த்திகை மாதம், ஆலந்தி நகரில், தியான நிலையில் இருந்தபடி மகாசமாதியானார். தனது  ஞானம் மற்றும் உபதேசத்தால் மக்களுக்கு இறையுணர்வூட்டி, மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட ஞானேஸ்வர்  இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer