சுவாமி
விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.
இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின்
சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை
எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும்
அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக்
கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில்
உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
விவேகானந்தர்
1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில்
விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய்
மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த
நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும்
திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார்.
இள வயது முதலே தியானம்
பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில்
உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு
கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள்,
மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார்.
இச்சமயத்தில் அவர் மனதில் இறை
உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும்
சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின்
வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல
பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த
பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும்
அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
சுவாமி
விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத்
தத்தர் எனும் இரு இளைய
சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும்
இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப்
போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம்
செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை
தாளாது தற்கொலை செய்து கொண்டார்.
இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக,
இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம்
சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர்
சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக்
கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப்
பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது
அருவ வழிபாடு என்று ஒரே
தனி வழியினை போதிக்காமல், இரண்டு
வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன.
இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும்
ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
1886 ஆம்
ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும்
இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும்
துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள்
இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம்
இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம்,
பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து
அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை
நிலை மிகவும் கீழானதாக இருந்தது.
மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம்
அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில்
24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற
விவேகானந்தர் அங்கே கடல் நடுவில்
அமைந்த ஒரு பாறை மீது
மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
அந்த மூன்று நாட்கள் இந்தியாவின்
கடந்த காலம், நிகழ்காலம், மற்றும்
எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர்
அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை
விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.
கன்னியாகுமரியில்
இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம்,
அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக
சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக
கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள்
வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர்
அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில்
அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில்
பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள்
மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள்
ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம்
அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில்
வேதாந்த மையங்களை நிறுவினார்.
இந்தியா
திரும்புதல்
1897 ஆம்
ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு
முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய
பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த
இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை
உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து
மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால்
நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு
இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால்
பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை
அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான
மன்னர் பாஸ்கர சேதுபதி.
கல்கத்தாவில்
இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை
நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர்
வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம்
மேற்கொண்டார்.
மறைவு:
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம்
நாள், தனது 39ஆம் வயதில்
பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய
இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம்
இன்று உலகம் முழுவதும் கிளைகள்
பரவி செயல்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment