காவிரிப்பூம்பட்டினத்தில்
வசித்த சிவநேசர், வணிகம் செய்து வந்தார்.
இவரது மனைவி ஞானகலாம்பை. அவர்களுக்கு
பெண்மகவு ஒன்று இருந்தும், ஆண்மகட்பேறுக்காக
இறைவனை வேண்டினர். சிவபெருமான் அருளால் ஆடிமாதம் பவுர்ணமியன்று
அடிகளார், பிறந்தார். அவரது இளமைக்காலப் பெயர்
திருவெண்காடர். திருவெண்காடு தலம் காவரிப்பூம்பட்டிணத்தின் அருகிலுள்ள சிவத்தலம்.
அவருடைய 5ம் வயதில் தந்தையார்
சிவபதம் எய்தினார். இருப்பினும் அவரது தாய் நல்ல
முறையில் படிக்க வைத்தார். ஒருமுறை
சிவபெருமான், அடிகளாரின் கனவில் ஒரு முதியவர்
வடிவில் தோன்றி திருவெண்காடு வந்து,
ஒரு பெரியவர் தரும் சிவலிங்கத்தை வைத்து
வழிபாடு செய்க, என கட்டளையிட்டார்.
அடிகளார் திருவெண்காடு வந்தார். அவரிடம் வந்த ஒரு
தவமுனிவர். மகனே ! சிவ பெருமான்,
என் கனவில் தோன்றி, உனக்கு
பூஜை செய்ய இந்த சம்புடத்தை
தரச்சொன்னார், என்ற சொல்லி, ஒரு
செப்பு டப்பாவை தந்து சென்றார்.
அடிகளார் அதில் இருந்த மகேஸ்வரனை
எடுத்து பூஜை செய்யலானார். சிவவழிபாடு
செய்யவும், அடியவர்க்கு அன்னதானம் செய்யவும், நிதி போதாமையினால் அடிகளார்
கவலைப்பட்ட போது, இறைவன் அவர்
வீட்டில் ஒரு நிதிக்குவியலை தந்து
மறைந்தார். இந்நிலையில் அடிகளாருக்கு மணப்பருவம் வந்தது. சிவகலை அம்மையாரை
வாழ்க்கை துணைவியாக ஏற்று சிறப்புடன் இல்வாழ்க்கை
நடத்தினார். மகப்பேறு வெகு நாட்கள் இல்லாததால்
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானை வழிபட்டார்.
திருவிடைமருதூரில்
வசித்து வந்த ஆதிசைவர் என்ற
சிவனடியார் அடியவர்க்கு அமுது செய்ய இயலாமல்
வருந்திப்போன மகாலிங்கப்பெருமான் அவர்
கனவில் தோன்றி திருக்கோவிலைச் சார்ந்த
குளத்திற்கு அருகில் உள்ள மரத்தடியில்
தான் ஒரு குழந்தையாக இருப்பதாகவும்,
அக்குழந்தையைக் கொண்டுபோய் காவிரிப்பூம்பட்டிணத்தில் உள்ள திருவெண்காடரிடம் கொடுத்து,
தன் எடை அளவு பொன்
பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதே சமயம் அடிகளாரின்
கனவில் தோன்றி, உனக்கு குழந்தை
பெறுவதற்கான ஊழ்வினை இல்லை என்றும்,
யாமே உனக்கு ஒரு ஆண்மகவாக
இருக்கத் தீர்மானித்துள்ளோம். உன் வீட்டின் தோட்டத்திற்கு
வரும் ஒரு அந்தணரிடம் உள்ள
குழந்தையை பெற்று, அதற்கு மருதவாணர்
என்று பெயரிட்டு வளர்த்து வா என்றார்.அதன்படியே
குழந்தை வெண்காடரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருதவாணர் உரிய பருவத்தில் கல்விகற்று
வைரம், மணி, ரத்னம் இவற்றின்
மதிப்பறிவதில் ஆற்றல் மிக்கவராக விளங்கினார்.
மருதவாணர் சிறுவனாக இருக்கும்போது, கடலில் படகில் பிற
வணிகர்களுடன் சென்றபோது ஒரு பெரும் மீன்
அந்த படகை கவிழ்க்க வந்தவுடன்,
அதை காலால் உதைக்கவும், அதுஒரு
முனிவராக மாறி, மருதவாணரிடம் நிறைந்த
பொற்காசுகளை கொடுத்து சென்றது. மருதவாணர் இளமைப்பருவம் அடைந்தவுடன், பொருளீட்டி வர, பிற அதிக
நண்பர்களுடன் மரக்கலத்தில் கடல் யாத்திரை சென்றார்.
பல நாடுகளுக்கு சென்று, பண்டமாற்று வியாபாரம்
செய்து, பெரும் பொருள் ஈட்டி,
அவற்றை பிறர் அறியாமல் சாதுர்யமாக
எடுத்து வந்தார்.
ஒருநாள்
அடிகளாரிடம் மருதவாணர் தரச்சொன்னதாக ஒரு சிறு பெட்டியை
அவர் மனைவி தரவும் அதை
அடிகளார் திறந்து பார்த்தபோது, அதில்
ஒரு காதற்ற ஊசியும், ஓலையும்
இருக்கக்கண்டார். அந்த ஓலையில் காதற்ற
ஊசியும், வாராது காணுங் கடைவழிக்கே
என்ற உபதேச மொழி இருந்தது.
இதன் பொருள் என்ன ? காதற்ற
ஊசி எதற்கும் பயன்படாது. இந்த பயன்படாத பொருள்
கூட நீ இறந்தால் உன்னோடு
வரப்போவதில்லை. அப்படியிருக்க, உனக்கேன் பொருள் மீது பற்று
? என்பது தான். இதைப் பார்த்தவுடன்,
இந்த உலக நிலைமையை உணர்ந்துகொண்டார்
அடிகளார். அந்த வாசகம் அவரது
வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து.
உடனடியாக உலக இன்பங்களையும் பொருள்
செல்வத்தையும் துறந்து துறவு மேற்கொண்டார்.
அதன்பின் மருதவாணரை அங்கு காணப்பெறவில்லை. தான்
வந்த வேலை முடிந்துவிட்டதால் மருதவாணர்
உருவில் வந்த ஈசன் மறைந்துவிட்டார்.
அடிகளார் தாயிடம் வந்தார். நான்
துறவு மேற்கொண்டதை சொன்னார். அம்மா அழுதாள். தாயே
! நீ இறந்து போனால், உன்
ஈமக்கடன்களை நான் வந்து செய்து
முடிப்பேன். பெற்ற கடனை அடைப்பேன்,
என வாக்கு தந்தார். மனைவியிடம்
சிவபெருமானை வழிபட அறிவுரை கூறினார்.
பின்னர் துறவு பூண்டார். ஊருக்குள்
சென்று பிச்சை எடுத்து உண்டுவந்தார்.
அவரது இனத்தார், இவரால் தமது குலத்திற்கு
இழிவு நேர்ந்ததாக எண்ணி, அவரை கொன்றுவிட
கருதி, நஞ்சு கலந்த அப்பத்தை
தந்தனர். இறைவனருளால் இதையறிந்த அடிகளார், ஓட்டப்பம் வீட்டைச்சுடும், தன்வினை தன்னைச்சுடும் என்றுரைத்து
அதனை ஒரு வீட்டில் கூரையில்
தூக்கி எறியவும், அவருக்கு தீங்கு நினைத்தவர்களின் வீடுகள்
தீப்பற்றி எரிந்தது. பிறகு அடிகளார் திருவிடைமருதூர்
சென்று தங்கியபோது, சிவ பெருமாள் தரிசனம்
தந்து, கோயில்களுக்கு சென்று பாடும்படி கட்டளையிட்டார்.
ஒரு சமயம், அடிகளார் வடமாநிலம்
ஒன்றிலுள்ள பிள்ளையார் கோயிலில் தியானத்தில் இருந்தபோது, சில திருடர்கள் தாங்கள்
திருடிய நகையை அவர் கழுத்தில்
போட்டு சென்றனர். இதையறிந்த அரசன், அடிகளாரை திருடன்
என்று எண்ணி, தூக்கி விடும்படி
கட்டளையிட்டான். அடிகளார், சிவ, சிவ என்று
கூறி புன்னகையுடன் அந்த கழுமரத்தை பார்த்தபோது
அது தீப்பற்றி எரிந்தது. அரசன் இவரது சிஷ்யர்
ஆனான். சிவபெருமான் ஆணையின்படி அடிகளார் திருவொற்றியூரை அடைந்து அங்குள்ள சிறுவர்களிடம்,
தன்னை குழிதோண்டி, புதைக்க கூறினார். அந்த
குழியிலேயே சிலநாள் இருந்து பின்னர்
சிறு லிங்க வடிவில் சமாதிநிலை
அடைந்து சிவபெருமானோடு ஐக்கியமாகி விட்டார்.
No comments:
Post a Comment