மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) கடனை வாங்குவீங்க! கல்யாணத்தை முடிப்பீங்க! (75/ 100)
எல்லாரிடமும் பாசத்துடன் பழகி மகிழும் மீன ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சியால் முன்னேற்றம் பெறுவீர்கள். இவர்கள் கடந்த காலத்தில் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவை தந்திருப்பார்கள். ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பல்வேறு இன்னல்களை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். மக்கள் மத்தியில் செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இனி பிரச்னை அனைத்தும் நீங்கும். தீயவர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். புதிய முயற்சியில் வெற்றியைக் கொடுப்பார். ராகு நன்மை தரும் போது கேது நன்மை தர மாட்டார். அவர் இது வரை உங்கள் ராசியில் இருந்து உடல் உபாதை, அரசாங்க வகையில் பிரச்னையைத் தந்திருப்பார். முயற்சியில் தடைகளும் நேர்ந்திருக்கலாம். இப்போது கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கும்பத்திற்குச் செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் கடந்த காலத்தில் இருந்த பிற்போக்கான நிலை மறையும். ஆனால், உடல் உபாதை உருவாகலாம்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர்கள் விரும்பி வந்து உறவாடுவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நிறைவேறும். அதுவும் மனதிற்குப் பிடித்த வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. சிலர் தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடி புகுவர். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபச்செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும்.
பணியாளர்களுக்கு கடந்தகாலத்தில் இருந்த பின் தங்கிய நிலை மறையும். தன்னம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். படித்து முடித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமைபெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து விருது பெற வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். புதிய பதவியும் கிடைக்கும்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான வளர்ச்சி காணலாம். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பைப் பெறுவர்.
விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.
2017 ஜனவரி முதல் ஜூலை வரை: குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சாதகமாக அமையும். ராகுவின் பலன் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சமுக மதிப்பு குறைந்தாலும், குடும்ப மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியிடையே அன்பும், நெருக்கமும் நீடிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பணியாளர்கள் நிர்வாக அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
வியாபாரிகள் உழைப்புக்கேற்ப பலன் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். புதிய தொழில் முயற்சியைத் தற்போது தொடங்க வேண்டாம்.
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெற முடியும்.
மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.
விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயத்தை தவிர்ப்பது அவசியம். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம்.
பரிகாரம்: சனி, கேதுவை வழிபாடு செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கையை வணங்குங்கள். ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்ட பின் சாப்பிடுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் விளக்கேற்றுங்கள்.
செல்ல வேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்.
No comments:
Post a Comment