விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வெற்றி வேண்டுமா! எதிர்நீச்சல் போடுங்க! (60/ 100)
தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!
ராகு-கேது பெயர்ச்சியால் சுமாரான பலன் என்றாலும் கவலை வேண்டாம். காரணம் குரு பகவான் மற்றும் சனி பகவானால் அவ்வப்போது நன்மை கிடைக்கவே செய்யும். 11-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பொருளாதார வளத்தையும், பெண்களால் அனுகூலத்தையும் கொடுத்து வந்த ராகு, இனி 10-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுக்கக் கூடும். கேது இதுவரை மீனத்தில் அதாவது 5-ம் இடத்தில் இருந்தார். அவர் உடல் நலக்குறைவு, பிள்ளைகளால் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கலாம். இனி 4-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தொழிலில் பிரச்னை குறுக்கிடலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். பிரச்னைகள் வாழ்வில் குறுக்கிட்டாலும் விடாமுயற்சியுடன் எதிர்நீச்சல் போட்டால் வெற்றி கிடைக்காமல் போகாது.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேது நிலைமை இப்படி இருந்தாலும், குரு சாதகமான இடத்தில் இருக்கிறார். அவரது 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலம் எண்ணற்ற நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். குருவால் நற்பலன் கிடைத்தாலும் ஏழரை சனிகாலம் என்பதால் சிரமத்தையும் சந்திக்க நேரிடும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடி புகலாம்.திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறலாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரிகள் குருவால் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கவனம் தேவை. 2016 மார்ச்சுக்குப் பின் சனி வக்கிரம் அடைவதால் நன்மை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நற்பெயர் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலன் காணலாம். விரும்பிய நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் சூழல் உருவாகும்.
விவசாயிகள் மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியங்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர்.
பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடல் நலத்தை பொறுத்தவரை கேதுவால் வயிறு பிரச்னை வரலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
2017 ஜனவரி முதல் ஜூலை வரை: குரு 12-ம் இடத்தில் இருப்பதால் நன்மை தரமாட்டார். மற்ற கிரகங்களும் சாதகமாக இல்லாததால், வாழ்வில் தடைகள் குறுக்கிடலாம். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். பண வரவு திருப்தி அளித்தாலும், செலவும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. வெளியூர் பிரயாணத்தில் கவனம் தேவை.
பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ப வருமானம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படலாம். எதிரிகளால் அவ்வப்போது பிரச்னை குறுக்கிடும். புதிய முதலீடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் முயற்சியுடன் படிப்பது நல்லது.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்காது.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். யானைக்கு கரும்பு, பழம் கொடுங்கள். காளியம்மனை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரம், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
No comments:
Post a Comment