மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) கேது தரும் சோதனை படைப்பீர்கள் சாதனை! (75/100)
வெற்றியை லட்சியமாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!
இதுவரை ராகு 4-ம் இடமான கன்னி ராசியில் இருந்து இருந்து வீண் கலகத்தையும், அலைச்சலையும் உருவாக்கி இருப்பார். குடும்பத்தில் பகையையும், பிரிவையும் உருவாக்கி இருக்கலாம். இப்போது ராகு 3-ம் இடமான சிம்மத்திற்கு சென்று பல்வேறு நன்மைகளை தர உள்ளார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் கொடுப்பார். ராகு நன்மை தரும்போது, கேதுவால் நன்மை தர இயலாது. அவர் இதுவரை 10-ம் இடமான மீனத்தில் இருந்து உடல் உபாதைகளை தந்திருப்பார். இனி அவர் 9-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். அதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் அவரால் இருந்து வந்த நோய்கள் குணம் அடையும். அதே நேரம் பொருள் இழப்பை சந்திக்கலாம். ஆனால், அந்த சோதனைகளை பெயர்ச்சி காலத்தின் பிற்பகுதியில் ஊக்கத்துடன் சந்தித்து சாதனை படைப்பீர்கள்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேதுவின் நிலை இப்படி இருக்க, குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான இடம் தான். ஆனால், 7-2-2016 முதல் 20-6-2016 வரை, அவர் வக்கிரம் அடைவதால் கெடுபலன் நடக்காது. செலவு அதிகரித்தாலும், பணநிலை கைகொடுக்கும் அளவுக்கு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தேவைகள் பூர்த்தியாகும். கேதுவால் மனைவி வகையில் சிற்சில பிரச்னை வரலாம். சற்று விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். அல்லது அவர்களிடம் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம்.
பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். கடந்த காலத்தைவிட வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் குறையும். அதிகாரிகளிடம் அனுசரித்து போனால் போதும். இடமாற்றம் ஏற்படலாம். சிலர் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியிருக்கும்.
தொழில், வியாபாரத்தில் பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். போட்டியாளர்கள் வகையில் எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக பெறமுடியாது. சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும்.
அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சுமாரான நிலையில் இருப்பர். தீவிர முயற்சி எடுத்தால் நல்ல முன்னேற்றம் காணலாம். பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து உழைப்புக்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் கொடுக்கும்.
விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைத்தான் பெற முடியும். ஜூலை மாதத்திற்கு பிறகு முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். கால்நடை மூலம் சீரான வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைவிட்டு போகலாம். வழக்குகள் பாதகமாகவும் அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள், தங்கள் தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
2017 ஜனவரி முதல் ஜூலை வரை: இந்த சமயத்தில், கேது-ராகுவால் ஏற்படும் பிரச்னைகளை குரு 5ம் இடத்துக்கு வந்து சரி செய்வார். பொருளாதார நிலை வளர்ச்சி அடையும். நீங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் மறையும்.
பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடலாம். உங்கள் திறமை மேம்பட்டு இருக்கும். புதிய பதவி கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது சிலர் வணிக விஷயமாக வெளிநாடு செல்வர். முதல்போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அரசு வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். மாணவர்களுக்கு விரும்பிய பாடம், கல்லுõரியில் இடம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து பாராட்டு, விருது கிடைக்கும். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
விவசாயிகள் புதிய சொத்து வாங்குவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குதூகலமான பலனை காண்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். பத்ரகாளியம்மனுக்கு விளக்கேற்றி பூஜை செய்யவும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
செல்ல வேண்டிய தலம்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் (மதுரையில் இருந்து 20 கி.மீ.,)
No comments:
Post a Comment