Saturday, 2 April 2016

சிம்மம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமில்லே! (55/100)

சிரமப்பட்டு முன்னேற துடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
இதுவரை ராகு, உங்கள் ராசிக்கு 2-ம் இடமான கன்னி ராசியில் இருந்து குடும்பத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தி இருப்பார். சிலர் வீட்டில் திருட்டு போயிருக்கலாம். இனி, அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. ஆனாலும், ராகு பெயர்ச்சி இப்போதும் சாதகமாக இல்லை. அவர் உங்கள் ராசிக்கு வருவதால், வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிக்கு தகுந்த பலன் இல்லாமல் போகலாம்.ஆனாலும், எவ்வளவு தான் சோதனை வந்தாலும் சிங்கம் போல் எதிர்த்து போராடும் இயற்கை குணமுள்ள உங்களுக்கு நல்ல@த நடக்கும். கேது இதுவரை 8-ம் இடமான மீனத்தில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். இப்போது அவர் 7-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். இதுவும் உகந்த இடம் இல்லை. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்ததுபோல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்னையையும், அலைச்சலையும் தரலாம். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை வரத்தான் செய்யும். இருப்பினும், குரு ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பதால், ராகு கேது தரும் கெடு பலன்கள் குறையும்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேதுவால் பாதிப்பு என்ற போதிலும், குரு சாதகமான இடத்தில் இருப்பதால் சுபங்களை தருவார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகி தெளிவடையும். எந்த பிரச்னையையும் முறியடித்து முன்னேறும் வல்லமையை பெறுவீர்கள். பொருளாதார நிலை வளர்ச்சி அடையும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். உறவினர்கள் வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடு மறையும். ஆனால், வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு
ஏற்படலாம்.
பணியாளர்களுக்கு வேலைப் பளு குறையும். விருப்பமான இட மாற்றத்தை முயற்சி செய்தால் பெற்று விடலாம். உங்கள் திறமை மேம்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு வரும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலர் வணிக விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக்காணலாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல்போடாமல் முன்னேற வழிவகை காணலாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் காண்பர். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குதுõகலமான பலனைக் காண்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டவும். உடல் நலம் சுமாராக இருக்கும்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  ராகு, கேது மட்டுமின்றி பிற முக்கிய கிரகங்களும் சாதகமாக காணப்படவில்லை. கடந்த காலங்ளை போல் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. தீவிர முயற்சியின் பேரில் காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை மனைவியிடம் ஒப்படைக்கவும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதுநல்லது. ஆனால், குருபகவானின் வக்ர காலமாகிய 9-3-2017 முதல்3-8-2017 வரை அவரால் ஓரளவு பலன் கிடைக்கும்.
பணியாளர்கள் கடந்த காலத்தை போல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரத்தில் அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். தீயோர் சேர்க்கையால் அவதிப்படலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். அரசு உதவி கிடைப்பது அரிது.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்கள் அதிகமாக சிரத்தை எடுத்து படித்தால் தான் உயர் மதிப்பெண் பெற முடியும்.
விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். வேலைக்குச் செல்லும் பெண்கள்விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும்.
பரிகாரம்: பத்ரகாளியம்மனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer