Saturday, 2 April 2016

ரிஷபம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) போகப் போக தெரியும் ராகுவின் அருமை புரியும்! (65/100)

உறுதியான உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சி ஆரம்பத்தில் சிரமங்களையும், போகப்போக நன்மைகளை தரும் வகையில் அமையும். ராகு இதுவரை 5-ம் இடமான கன்னி ராசியில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4-ம் இடமான சிம்மத்திற்கு வருவதால் அந்த பிரச்னை மறையும்.அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், வேறு பிரச்னையையும் உருவாக்கலாம். கேது இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மீனத்தில் இருந்து, நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார். அவர் இப்போது 10-ம் இடமான கும்பத்திற்கு செல்வது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கும் அவர் உடல் உபாதைகளை தரலாம். ஆனால், பெயர்ச்சிக் காலத்தின் பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார்.
2016 ஜனவரி முதல்  டிசம்பர் வரை: ராகு, கேது சாதகமற்ற இடங்களில் இருந்தாசலும், குரு பலத்தால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பனிபோல் விலகும். ஏனெனில், குரு சாதகமான இடத்தில் உள்ளதுடன், அவரது 5,7-ம் பார்வையும் சிறப்பாக உள்ளது. உங்கள் செல்வாக்கு அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். மதிப்பு,மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்துமுடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வசதியானவீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் மாறி மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். இந்த காலகட்டத்தில், ராகுவால் நீங்கள் அனுபவிக்கப் போவது, தம்பதியினர் இடையே ஏற்படும் உரசல் மட்டுமே. விட்டுக் கொடுத்து போனால், இதையும் சமாளித்து விடலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் வளர்ச்சி காணலாம். பங்குதாரர்கள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். மார்ச் மாதத்திற்கு பிறகு புதிய தொழில் தொடங்கலாம். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். போட்டியாளர்களின் தொல்லை அடியோடு மறையும்.
பணியாளர்கள் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர்.
கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடுபுதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். சமூகத்தில் ஒரு அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர்.
விவசாயிகள் நெல், சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.
பெண்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். உங்களை புரிந்து கொள்ளாத குடும்பத்தினர் இனி படிப்படியாக உங்களை புரியும் நிலை ஏற்பட்டு உங்களிடமே தஞ்சம் கொள்ளும் நிலை உருவாகும்.
2017 ஜனவரி முதல்   ஜூலை வரை:  ராகுவும்-கேதுவும் சாதகமற்ற இடத்தில்தான் இருக்கிறார்கள். இந்த காலத்தில் குருவும் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அடி யெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப் புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும், அவரது 9-ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண முடியும்.
விவசாயத்தில் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.
பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: ராகு கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நயினாரை மனதில் நினைத்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில்

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer