Saturday, 4 April 2015

16. வரைக் காட்சிப் படலம்

16. வரைக் காட்சிப் படலம்


சந்திரசயில மலையின் மாட்சி

சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக் குன்றைப்
பற்றிய வளைந்தவென்ன, பரந்து வந்து இறுத்த சேனை;
கொற்றவர், தேவிமார்கள், மைந்தர்கள், கொம்பனார், வந்து
உற்றவர், காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே! 1

பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட,
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும்
கொம்புகள், பனைக் கை நீட்டி, குழையொடும் ஒடித்து, கோட்டுத்
தும்பிகள், உயிரே அன்ன துணை மடப் பிடிக்கு நல்கும். 2

பண் மலர் பவளச் செவ் வாய்ப் பனி மலர்க் குவளை அன்ன
கண் மலர்க் கொடிச்சிமார்க்குக் கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி, புதிய தேன் உதவும் நாகத்
தண் மலர் என்று, வானத் தாரகை தாவும் அன்றே! 3

மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டிக் குத்திட, குமுறிப் பாயும்
தேன் உகு மடையை மாற்றி, செந் தினைக் குறவர், முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி, ஐவனம் வளர்ப்பர் மாதோ! 4

குப்புறற்கு அருமையான குல வரைச் சாரல் வைகி,
ஒப்புறத் துளங்குகின்ற உடுபதி ஆடியின்கண்,
இப் புறத்தேயும் காண்பார், குறத்தியர், இயைந்த கோலம்;
அப் புறத்தேயும் காண்பார், அரம்பையர், அழகு மாதோ! 5

உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும், வாயின்
அதி விட நீரும், நெய்யும், உண்கிலாது, ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு,
மதியினை வாங்கி, ஒப்புக் காண்குவர், குறவர் மன்னோ! 6

பேணுதற்கு அரிய கோலக் குருளை, அம் பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழக் கன்றொடு களிக்கும் முன்றில்,
கோணுதற்கு உரிய திங்கட் குழவியும், குறவர் தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு, தவழும் மாதோ! 7

அஞ்சனக் கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற
வெஞ் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு, - விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும், நீலக் குல மணித் தலத்தும், - மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த பசுஞ் சுவடு உடைத்து மன்னோ. 8

செங் கயல் அனைய நாட்டம் செவி உறா, முறுவல் தோன்றா,
பொங்கு இருங் கூந்தல் சோரா, புருவங்கள் நெரியா, பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி, நரம்பு அளைந்து, அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டு, கின்னரம் மயங்கும் மாதோ! 9

கள் அவிழ் கோதை மாதர், காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாட் கண்ணினார்தம் குங்குமக் குழம்பு தங்கும்
தெள்ளிய பளிக்குப் பாறைத் தெளி சுனை, மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன, வரம்பு இல பொலியும் மன்னோ! 10

ஆடவர் ஆவி சோர, அஞ்சன வாரி சோர,
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர் தம் அரம்பை மாதர்,
தோடு அவிழ் கோதை நின்றும் துறந்த மந்தார மாலை,
வாடல, நறவு அறாத, வயின் வயின் வயங்கும் மாதோ. 11

மாந் தளிர் அனைய மேனிக் குறத்தியர் மாலை சூட்டி,
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்புக் காண்பார்;
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணிக் கடகம் வாங்கி,
காந்தள் அம் போதில் பெய்து, கைகளோடு ஒப்புக் காண்பார். 12

சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா,
நரம்பினோடு இனிது பாடி, நாடக மயிலோடு ஆடி,
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணிக் கோவை ஆரம்,
மரம் பயில கடுவன் பூண, மந்தி கண்டு உவக்கும் மாதோ. 13

சாந்து உயர் தடங்கள் தோறும் தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும்;
காந்து இன மணியின் சோதிக் கதிரொடும் கலந்து வீசச்
சேந்து, வானகம், எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே. 14

நிலமகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி,
மலைமகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான,
அலகு இல் பொன் அலம்பி ஓடி, சார்ந்து வீழ் அருவி மாலை,
உலகு அளந்தவன் தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த. 15


மாந்தர் கண்ட மலை நிகழ்ச்சிகள்

கோடு உலாம் நாகப் போதோடு இலவங்க மலரும் கூட்டிச்
சூடுவார், களி வண்டு ஓச்சித் தூ நறுந் தேறல் உண்பார்,
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார். 16

பெருங் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணைக் கொங்கை அன்ன, பொரு இல், கோங்கு அரும்பின் மாடே,
மருங்கு எனக் குழையும் கொம்பின் மடப் பெடை வண்டும், தங்கள்
கருங் குழல் களிக்கும் வண்டும், கடிமணம் புணர்தல் கண்டார். 17

'படிகத்தின் தலம்' என்று எண்ணி, படர் சுனை முடுகிப் புக்க
சுடிகைப் பூங் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்தம்
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப, நோக்கி,
கடகக் கை எறிந்து, தம்மில் கருங் கழல் வீரர் நக்கார். 18

பூ அணை பலவும் கண்டார்; பொன்னரிமாலை கண்டார்,
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலைத் தம்பல் கண்டார்;
ஆவியின் இனிய கொண்கர்ப் பிரிந்து, அறிவு அழிந்த விஞ்சைப்
பாவையர் வைக, தீய்ந்த பல்லவ சயனம் கண்டார். 19

பானல் அம் கண்கள் ஆட, பவள வாய் முறுவல் ஆட,
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட,
தேன் முரன்று அளகத்து ஆட, திரு மணிக் குழைகள் ஆட,
வானவர் மகளிர் ஆடும், வாசம் நாறு ஊசல் கண்டார். 20

சுந்தர வதன மாதர் துவர் இதழ்ப் பவள வாயும்,
அந்தம் இல் கரும்பும், தேனும், மிஞிறும் உண்டு - அல்குல் விற்கும்
பைந் தொடி மகளிர், 'கைத்து ஓர் பசை இல்லை' என்ன விட்ட
மைந்தரின் - நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார். 21

அல் பகல் ஆக்கும் சோதிப் பளிக்கு அறை அமளிப் பாங்கர்,
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த, கோல,
வில் பகை நுதலினார், தம் கலவியில் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்பக் கண்டார். 22

கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி,
பை அரவு இது என்று அஞ்சி, படைக் கண்கள் புதைக்கின்றாரும்;
நெய் தவழ் வயிரப் பாறை நிழலிடைத் தோன்றும் போதை,
'கொய்து இவை தருதிர்' என்று, கொழுநரைத் தொழுகின்றாரும்; 23

பின்னங்கள் உகிரின் செய்து, பிண்டி அம் தளிர்க் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி, தே மலர் கொய்கின்றாரும்;
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன, அகன் சுனை குடைகின்றாரும். 24

மலைக் காட்சிகள்

ஈனும் மாழை இளந் தளிர் ஏய் ஒளி
ஈனும், மாழை இளந் தளிரே - இடை,
மானும், வேழமும், நாகமும், மாதர் தோள்
மானும் வேழமும், நாகமும் - மாடு எலாம். 25

திமிர மா உடல் குங்குமச் சேதகம்
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால்;
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர, மா தரை ஒத்தது, அவ் வானமே. 26

பேர் அவாவொடு மாசுணம் பேர, வே
பேர, ஆவொடு மா சுணம் பேரவே!
ஆர, ஆரத்தினோடும் மருவியே,
ஆரவாரத்தின் ஓடும் அருவியே! 27

புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம்,
புகலும் வாள் அரிக் கண்ணியர் பூண் முலை,
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே!
அகிலும், ஆரமும் மாரவம் கோங்குமே. 28

துன் அரம்பை நிரம்பிய, தொல் வரை,
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்;
கின்னரம் பயில் கீதங்கள் என்ன, ஆங்கு,
இன் நரம்பு அயில்கின்றனர், ஏழைமார். 29

ஊறு, மா கடம் மா, உற ஊங்கு எலாம்,
ஊறுமா கட மா மதம் ஓடுமே;
ஆறு சேர் வனம் , வரை, ஆடுமே;
ஆறு சேர்வன, மா, வரையாடுமே. 30

கல் இயங்கு கருங் குற மங்கையர்,
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா,
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம்,
வல் இயங்கள் நெருங்கி மயங்குமே. 31

கோள் இபம் கயம் மூழ்க, குளிர் கயக்
கோளி, பங்கயம், ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய்,
ஆளி பொங்கும், அரம்பையர் ஓதியே. 32

ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி-
வாக மால் ஐயன் நின்றெனல் ஆகுமால் -
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக, மாலை கிடந்தது, கீழ் எலாம். 33

மலைமேல் மாதர் மைந்தர் விளையாடுதல்

பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என,
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி, அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி, நீங்கலர், தாம் இனிது ஆடுவார். 34

இறக்கம் என்பதை எண்ணிலர், எண்ணுங்கால்,
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால்,
துறக்கம் எய்திய தூயவரே என,
மறக்ககிற்றிலர், அன்னதன் மாண்பு எலாம். 35

அந்திப் பொழுதில் அம் மலையின் அழகு

மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெஞ் சாயையுடைக் கதிர், அங்கு, அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய, ஏறு
செஞ் சோரி எனப் பொலிவுற்றது, செக்கர் வானம். 36

திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய,
தணியாத நறுந் தளிர் தந்தன போன்று தாழ,
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின், அங்கம் எங்கும்,
மணியால் இயன்ற மலை ஒத்தது - அம் மை இல் குன்றம். 37

கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும்,
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும்,
வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோந்தனை ஒத்தது - அவ் ஆசு இல் குன்றம். 38


மகளிரும் மைந்தரும் மலையிலிருந்து இறங்குதல்

ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்,
தேனும், மிஞிறும், சிறு தும்பியும், பம்பி ஆர்ப்ப,
ஆனை இனமும் பிடியும், இகல் ஆளி ஏறும்,
மானும் கலையும், என, மால் வரை வந்து இழிந்தார். 39

இருள் பரவ, எங்கும் தீபம் ஏற்றுதல்

கால் வானகத் தேருடை வெய்யவன், காய் கடுங் கண்
கோல் மாய் கதிர்ப் புல் உளைக் கொல் சினக் கோள் அரிம்மா,
மேல்பால் மலையில் புக, வீங்கு இருள், வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என, வந்து பரந்தது அன்றே. 40

மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன் தன் அனீக வெள்ளம்,
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்தென, தீபம் எடுத்தது அன்றே. 41

மதியம் தோன்ற, முக மலர்ச்சி பெறும் மகளிர்

தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி,
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது, மீன்கள் சூழ -
வண்ணக் கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று, ஒளிர் வால் வளை, ஊர்வது ஒத்தே. 42

மீன் நாறு வேலை ஒரு வெண் மதி ஈனும் வேலை,
நோனாது அதனை, நுவலற்கு அருங் கோடி வெள்ளம்
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது, அனீக வேலை. 43

கூத்தரின் ஆடலும், மகளிர் கோலம் கொள்ளுதலும்

மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை,
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் முடை வேய் இசை, - கண்ணுளர் ஆடல்தோறும் -
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே. 44

மணியின் அணி நீக்கி, வயங்கு ஒளி முத்தம் வாங்கி,
அணியும் முலையார், அகில் ஆவி புலர்த்தும் நல்லார்,
தணியும் மது மல்லிகைத் தாமம் வெறுத்து, வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை சேர்த்துவாரும். 45

பல வகை ஒலிகள்

புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை,
கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை. 46

இரவுப் பொழுதை கழித்த வகை

உண்ணா அமுது அன்ன கலைப் பொருள் உள்ளது உண்டும்,
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும்,
பண் ஆன பாடல் செவி மாந்திப் பயன் கொள் ஆடல்

கண்ணால் நனி துய்க்கவும், கங்குல் கழிந்தது அன்றே. 47

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer