Saturday, 4 April 2015

9. அகலிகைப் படலம்


9. அகலிகைப் படலம்


மூவரும் சோணை நதியை அடைய, சூரியன் மறைதல்

அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின
நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல்,
புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல்,
சிலம்பு சூழும் கால், சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார். 1

நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன்,
உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல், கடல் குளித்தான். 2

மூவரும் இரவு சோலையில் தங்குதல்

கறங்கு தண் புனல், கடி நெடுந் தாளுடைக் கமலத்து
அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்ப,
பிறங்கு தாமரைவனம் விட்டு, பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு, உறைந்தார். 3

மூவரும் கங்கை நதியைக் காணுதல்

காலன் மேனியின் கருகு இருள் கடிந்து, உலகு அளிப்பான்
நீல ஆர்கலி, தேரொடு நிறை கதிர்க் கடவுள்,
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான். 4

அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும் அனையார்,
செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார். 5

மூவரும் மிதிலை சேர்தல்

பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா,
அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார். 6

மிதிலை நாட்டு வளம்

வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்,
கரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை. 7

பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும் தூதால்,
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. 8

தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர,
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய்,
ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று ஊடி,
பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை. 9

முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி தேம்
நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள். 10

இழைக்கும் நுண் இடை இடைதர, முகடு உயர் கொங்கை,
மழைக் கண், மங்கையர் அரங்கினில், வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன-ஓடை. 11

படை நெடுங் கண் வாள் உறை புக, படர் புனல் மூழ்கி,
கடைய முன் கடல் செழுந் திரு எழும்படி காட்டி,
மிடையும், வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல்லியலார்
குடைய, வண்டினம் கடி மலர் குடைவன-குளங்கள். 12

அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டைக் காணுதல்

இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார். 13

கல்லின்மேல் இராமனது பாத தூளி பட, அகலிகை பழைய வடிவம் பெற்று எழல்

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 14


அகலிகையை வரலாறு

'மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்' என்றான். 15

பொன்னை ஏய் சடையான் கூறக் கேட்டலும், பூமி கேள்வன்,
'என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது உண்டோ ?
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக!' என்றான். 16

அவ் உரை இராமன் கூற, அறிவனும், அவனை நோக்கி,
'செவ்வியோய்! கேட்டி: மேல்நாள், செறி சுடர்க் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்விபோல் விழியினாள்தன் வன முலை நணுகலுற்றான்; 17

'தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும், பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான். 18

'புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்,
'தக்கது அன்று' என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான். 19

'சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா,
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்;
புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான். 20

'தீ விழி சிந்த நோக்கி, செய்ததை உணர்ந்து, செய்ய
தூயவன், அவனை, நின் கைச் சுடு சரம் அனைய சொல்லால்,
"ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக" என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன், இமைப்பின் முன்னம். 21

'எல்லை இல் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
மெல்லியலாளை நோக்கி, "விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி" என்றான்; கருங்கல் ஆய், மருங்கு வீழ்வாள். 22

'"பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால்,
அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!" என்ன,
"தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி" என்றான். 23

'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.' 24

அகலிகை இராமன் பாதம் பணிந்து செல்லுதல்

தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு
'மா தவன் அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே,
போது நீ, அன்னை!' என்ன பொன் அடி வணங்கி போனாள். 25

அகலிகையை கௌதமரிடம் சேர்த்த பின் மூவரும் மிதிலையில் புறமதிலை அடைதல்

அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி, 26

'அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!' என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான். 27

குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். 28

மிகைப் பாடல்கள்

'இனைய சோலை மற்று யாது?' என இராகவன் வினவ,
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான்; 'மேல்நாள்,
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள், இவண்' என வலித்தான். 3-1

'அண்ட கோளகைக்கு அப்புறத்து, என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி, ஓர் விஞ்சையர் கோதை,
புண்டரீக மென் பதத்தியைப் புகழ்ந்தனள்; புகழ,
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து. 3-2

'அன்ன மாலையை யாழிடைப் பிணித்து, அயன் உலகம்,
கன்னி மீடலும், கசட்டுறு முனி எதிர் காணா,
"என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள்" என்று,
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும், அனையாள். 3-3

'"உலகம் யாவையும் படைத்து, அளித்து, உண்டு, உமிழ், ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து, உயிர் யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்,
அலகு இல் மா முனி பெறுக" என் அளித்தனள் அளியால், 3-4

'"தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்,
ஐய! யான் பெறப் புரிந்தது எத் தவம்?" என ஆடி,
வெய்ய மா முனி சென்னியில் சூடியே, வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து, உம்பர் நாடு அடைந்தான். 3-5

'பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து, செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு, அயிராவதக் களிற்றின் மேல் விலங்க, 3-6

'அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப,
கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர், விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர், வீதிகள் நெருங்க, 3-7

'நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை
போலவே, இரு புடையினும், சாமரை புரள,
கோல மா மதி குறைவு அற நிறைந்து, ஒளி குலாவி,
மேல் உயர்ந்தென வெள்ளி அம் தனிக் குடை விளங்க, 3-8

'தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப,
முழங்கு நான்மறை, மூரிநீர் முழக்கு என, உலகை
விழுங்க, மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான். 3-9

'தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால், வாசவன் தன் கை
வனையும் மாலையும் நீட்டலும், தோட்டியால் வாங்கி,
துனை வலத்து அயிராவதத்து எருத்திடைத் தொடுத்தான்;
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது, அப் பகடு. 3-10

'"கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெங் கனலால்,
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும்" என்று, அழியா,
விண்டு நீங்கினர் விண்ணவர்; இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது; சுழன்றது எவ் உலகும். 3-11

'புகை எழுந்தன, உயிர்த்தொறும்; எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம், நல் நுதலில்;
சிகை எழும் சுடர் விழியினன், அசனியும் திகைப்ப,
"மிகை எழுந்திடு சதமக! கேள்" என வெகுண்டான். 3-12

'"பூத நாயகன், புவிமகள் நாயகன், பொரு இல்
வேத நாயகன், மார்பகத்து இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென், முயன்ற மா தவத்தால். 3-13

'"இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு, உவகையின் ஈந்த
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை; நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப,
குன்றி, நீ துயர் உறுக" என உரைத்தனன், கொதித்தே. 3-14


'அரமடந்தையர், கற்பகம், நவ நிதி, அமிர்தம்,
சுரபி, வாம்பரி, மதமலை, முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின, கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின். 3-15

'அந்த வேலையில், இந்திரன் சிந்தை நொந்து அழிந்து,
வந்து, வானவ முனிவனை வழிபட்டு வழுத்த,
"நந்தும் நின் பெருஞ் செல்வம் மால் அருளினால், நயக்க
முந்தும்" என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான். 3-16

'வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய, வானோரும்,
தையல் பாகனும், சதுமுகக் கடவுளும், கூடி,
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார். 3-17

'வெஞ் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி,
கஞ்ச நாள் மலர்க் கிழவனும், கடவுளர் பிறரும்,
"தஞ்சம் இல்லை; நின் சரணமே சரண்" எனச் செப்ப,
"அஞ்சல், அஞ்சல்!" என்று உரைத்தனன், உலகு எலாம் அளந்தோன். 3-18

'"மத்து மந்தரம்; வாசுகி கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர் வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்; ஓடதி கொடுத்து,
கத்து வாரிதி மறுகுற, அமிழ்து எழக் கடைமின்; 3-19

'"யாமும் அவ் வயின் வருதும்; நீர் கதுமென எழுந்து
போமின்" என்று அருள்புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்து,
"நாமம் இன்று" எனக் குனித்தனர், நல்குரவு ஒழிந்தது.
ஆம் எனும் பெருங் களி துளக்குறுதலால், அமரர். 3-20

'மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
நிலை தளர்ந்திட, அனந்தனும், கீழுற நெளித்தான். 3-21

'திறல் கொள் ஆமை ஆய், முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள் பரப்பி, மீ வலிப்ப,
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே,
அறன் இலா மனத்து அடைகிலா நெடுந் தகை அமைத்தான். 3-22

'இறந்து நீங்கின யாவையும், எம்பிரான் அருளால்,
பிறந்த; அவ்வயின் சுராசுரர் தங்களில் பிணங்க,
சிறந்த மோகினி மடந்தையால், அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார். 3-23

'வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு அளித்து,
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி,
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி,
திருவும் ஆரமும் அணிந்தனன், சீதர மூர்த்தி, 3-24

'அந்த வேலையில் திதி பெருந் துயர் உழந்து அழிவாள்,
வந்து காசிபன் மலரடி வணங்கி, "என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு" என்றாள். 3-25

'என்று கூறலும், "மகவு உனக்கு அளித்தனம்; இனி, நீ,
சென்று பாரிடை, பருவம் ஓர் ஆயிரம் தீர,
நின்று, மா தவம் புரிதியேல், நினைவு முற்றுதி" என்று
அன்று கூறிட, புரிந்தனள் அருந்தவம் அனையாள். 3-26

'கேட்ட வாசவன், அன்னவட்கு அடிமையில் கிடைத்து,
வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மி,
நாட்டம் நீர் தர, "மருந்து" எனும் நாமமும் நவின்றான். 3-27

'ஆயது இவ் இடம்; அவ் இடம் அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின் தோன்றியே, தொல்லை
வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான்.' 3-28

'இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும்,
எந்தை! கூறுக' என்று இராகவன் வினவுற, 'எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தான். 5-1

'விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார். 5-2

'திண் திறல் புனை சகரனும், தனையர் சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று,
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர், வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான். 5-3

'வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி,
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன், மீண்டு. 5-4

'கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அம்மொழி கிளத்த,
வாட்டம் மீக் கொள, சகரர்கள் வடவையின் மறுகி,
நாட்டம் வெங் கனல் பொழிதர, நானிலம் துருவி,
தோட்டு நுங்கினர் புவியினை, பாதலம் தோன்ற. 5-5

'நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின்
சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார். 5-6

'மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து, எரி விழிப்ப,
பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்,
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர். 5-7

'உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன் தன் மைந்தனை, "அவர் கழிந்தனரேல்,
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?" என, அவன் எழுந்து,
தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான். 5-8

'விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ,
"கொண்டு போக, நின் இவுளி!" என்று, உற்றதும் குறித்தான். 5-9

'பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான் -
எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து. 5-10

'சகரம் தொட்டலால், "சாகரம்" எனப் பெயர் தழைப்ப,
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்,
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான். 5-11

'உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம்,
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்: 5-12

'"கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம்,
அடிகள்! சாற்றுக" என்றலும், அந்தணன் அறைவான்: 5-13

'"வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே,
செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி;
நையல்!" என்று இனிது உரைத்தனன், நவை அறு முனிவன், 5-14


'ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி,
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி,
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப,
மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்: 5-15

'"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர்,
முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று இசைத்தான். 5-16

'"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு" என்று
ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான். 5-17

'மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்" என்று அகன்றான்;
கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான். 5-18

'ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து,
பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள். 5-19

'கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை,
நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், 5-20

'எதிர்ந்து, "நின் நினைவு என்?" என, இறைஞ்சி, "எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்" என்றலும், "அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்" என்று ஏகிய பின்றை,
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான். 5-21

'பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு
சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து, மற்று எதையும்
பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம்,
உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான். 5-22

'உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து,
வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன்
சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர. 5-23

'புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன்
சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து,
மன்னன் நிற்றலும், "வருந்தல்; நம் சடையள், வான் நதி இன்று"
என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள். 5-24

'இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப,
கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில் கொள்ளா, 5-25

'உண்டு உவந்தனன், மறை முனிக் கணங்கள் கண்டு உவப்ப,
கண்ட வேந்தனும் வணங்கி, முன் நிகழ்ந்தன கழற,
"கொண்டு போக!" என, செவிவழிக் கொடுத்தனன்; குதித்து,
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே. 5-26

'நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடுங் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன, விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க,
அரைசன், அப்பொழுது, அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான். 5-27

'அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப் பிறந்து, பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய், பகிரதன் தவத்தினால் கொணர,
மண்தலத்து வந்து அடைந்தது, இம் மா நதி, மைந்த! 5-28

'சகரர்தம் பொருட்டு அருந் தவம் பெரும் பகல் தள்ளி,
பகிரதம் கொணர்ந்திடுதலால், "பகிரதி" ஆகி,
மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால்,
நிகர் இல், "சானவி" எனப் பெயர் படைத்தது, இந் நீத்தம்'. 5-29

என்று கூறலும், வியப்பினோடு உவந்தனர், இறைஞ்சி,
சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து, அடி இணை குறுக,
நின்று, நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா, 5-30

மது மலைந்த் வெண் தரளமும், (வயிரமும்), மணியும்,
கதிர் வளம் செயும் பவளமும், கழுத்திடைக் காட்டி,
எதிர் மலைந்த பைங் கூந்தலை இன வண்டு (நணுக),
புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம். 7-1

அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்க,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள், கல் ஆய். 23-1

'வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும் ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம், முனிவ! நீ பொறுத்தி' என்ன,
'பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும் போக,

அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம்' என்றான். 23-2

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer