Saturday, 4 April 2015

19. உண்டாட்டுப் படலம்

19. உண்டாட்டுப் படலம்


நிலா எங்கும் பரந்து தோற்றுதல்

வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்,
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்,
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்,
தண் நிறை நெடு நிலாத் தழைத்தது, எங்குமே. 1

கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய், பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது, நெடு நிலா - மதனன் வேண்டவே. 2

ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்,
கூறு பாற்கடலையே ஒத்த; குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த; என் இனி
வேறு நாம் புகல்வது, நிலவின் வீக்கமே? 3

எள்ள அருந் திசைகளோடு யாரும், யாவையும்,
கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால்,
வள் உறை வயிர வாள் மகர கேதனன்
வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே. 4

முத்துப் பந்தரில் தங்கி மகளிர் மதுப் பருகுதல்

தயங்கு தாரகை புரை தரள நீழலும்,
இயங்கு கார் மிடைந்த கா எழினிச் சூழலும்,
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்,
வயங்கு பூம் பந்தரும், மகளிர் எய்தினார். 5

பூக் கமழ் ஓதியர், போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்,
ஆக்கிய அமிழ்து என, அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா, மாந்தல் மேயினார். 6

மீனுடை விசும்பினார், விஞ்சை நாட்டவர்,
ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்,
மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார் -
தேனுடை மலரிடைத் தேன் பெய்தென்னவே. 7

உக்க பால்புரை நறா உண்ட வள்ளமும்,
கைக் கொள் வாள் ஒளிபடச் சிவந்து காட்ட, தன்
மைக் கணும் சிவந்தது; ஓர் மடந்தை வாய்வழிப்
புக்க தேன் அமிழ்தமாய்ப் பொலிந்த போன்றவே. 8

கள் காமத்தை தூண்டுதல்

காமமும் நானமும் ததைந்த, தண் அகில்
தூமம் உண், குழலியர் உண்ட தூ நறை,
ஓம வெங் குழி உகு நெய்யின், உள் உறை
காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே. 9

கள் உண்ட மயக்கத்தால் நிகழ்ந்த தடுமாற்றங்கள்

விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோ ? - வாள் நுதல் ஒருத்தி காண,
தடன் ஒக்கும் நிழலை, 'பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி, தோழி!' என்றாள். 10

அச்ச நுண் மருங்குலாள், ஓர் அணங்கு அனாள், அளகபந்தி
நச்சுவேல் கருங் கண் செவ் வாய் நளிர்முகம், மதுவுள் தோன்ற,
'பிச்சி நீ என் செய்தாய்? இப் பெரு நறவு இருக்க, வாளா,
எச்சிலை நுகர்தியோ?' என்று, எயிற்று அரும்பு இலங்க நக்காள். 11

அறம் எலாம் நகைசெய்து ஏசப் பொரு அரு மேனி வேறு ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள், மணியின் வள்ளத்து, வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய, நிறைந்தது போன்று தோன்ற,
நறவு என, அதனை, வாயின் வைத்தனள்; நாண் உட்கொண்டாள். 12

'யாழ்க்கும், இன் குழற்கும், இன்பம் அளித்தன இவை ஆம்' என்ன,
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்,
தாள் கருங் குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள், தன்
வாள் கணின் நிழலைக் கண்டாள்; வண்டு என ஓச்சுகின்றாள். 13

களித்த கண் மதர்ப்ப, ஆங்கு ஓர் கனங் குழை, கள்ளின் உள்ளே
வெளிப்படுகின்ற காட்சி வெண் மதி நிழலை நோக்கி,
'அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை; அஞ்சல்!' என்று, ஆங்கு இனியன உணர்த்துகின்றாள். 14

அழிகின்ற அறிவினாலோ, பேதமையாலோ, ஆற்றில்
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந் தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரைத்துக் கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை, நறவு என, வள்ளத்து ஏற்றாள். 15

மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி, வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல், இடை தடுமாறி என்ன,
வன்ன மேகலையை நீக்கி, மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்;
பொன்னரிமாலை கொண்டு, புரி குழல் புனையலுற்றாள். 16


கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி,
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி,
'உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள், வெம்மை நீங்கி,
தண் மதி ஆகின், யானும் தருவென், இந் நறவை' என்றாள். 17

எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி, முன்கை
தள்ள, தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும், தேறாள்,
உள்ளத்தின் மயக்கம் தன்னால், 'உப் புறத்து உண்டு' என்று எண்ணி
வள்ளத்தை, மறித்து வாங்கி, மணி நிற இதழின் வைத்தாள். 18

வான் தனைப் பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப,
தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர நாணி,
ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால், ஒருத்தி, உண்டாள். 19

புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஓட,
வள் உறை கழித்த வாள்போல் வசி உற வயங்கு கண்ணாள்,
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள்,
'உள் உறை அன்பன் உண்ணான்' என உன்னி, நறவை உண்ணாள். 20

கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப, கூன் நுதல்
ஏற்றி, வாள் எயிறுகள் அதுக்கி, இன் தளிர்
மாற்ற அருங் கரதலம் மறிக்கும் - மாது, ஒரு
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே. 21

துடித்த வான் துவர் இதழ்த் தொண்டை, தூ நிலாக்
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி, கண்களால்
வடித்த வெங் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர், புறத்து உகு நறவம் போன்றவே! 22

கனித் திரள் இதழ் பொதி செம்மை கண் புக,
நினைப்பது ஒன்று, உரைப்பது ஒன்று, ஆம் ஒர் நேரிழை,
தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும்
குனித்தது; பனித்தது, குழவித் திங்களே. 23

இலவு இதழ் துவர் விட, எயிறு தேன் உக,
முலைமிசை, கச்சொடு கலையும் மூட்டு அற,
அலை குழல் சோர்தர, அசதி ஆடலால்,
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே. 24

'கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை,
அனகனுக்கு அறிவி' என்று, அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள், 'தோழி! நீயும் என்
மனம் எனத் தாழ்தியோ? வருதியோ?' என்றாள். 25

மான் அமர் நோக்கி, ஓர் மதுகை வேந்தன்பால்,
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்,
போனவர் போனவர் தொடரப் போக்கினாள்;
தானும், அங்கு, அவர்கள்பின் தமியள் ஏகினாள். 26

விரை செய் பூஞ் சேக்கையின் அடுத்த மீமிசை,
கரை செயா ஆசை ஆம் கடல் உளான், ஒரு
பிரைச மென் குதலையாள், கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள். 27

மன்றல் நாறு ஒரு சிறை இருந்து, ஒர் வாணுதல்,
தன் துணைக் கிள்ளையைத் தழீஇ, 'என் ஆவியை
இன்று போய்க் கொணர்கிலை; என் செய்வாய்? எனக்கு
அன்றிலோடு ஒத்தி' என்று அழுது, சீறினாள். 28

வளை பயில் முன்கை ஓர் மயில் அனாள்தனக்கு
இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும்,
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது கயற் கண் ஆலியே. 29

செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல், வெம்மையால்
பற்றலும், அல்குலில் பரந்த மேகலை
அற்று உகு முத்தின் முன்பு, அவனி சேர்ந்தன,
பொன் - தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே. 30

தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி, 'தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகு நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ?' எனப் பலவும் பன்னினாள். 31

மாடகம் பற்றினள்; மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் - ஒருத்தி, தன் பாங்கிமார்களோடு
ஊடினது உரைசெயாள்,-உள்ளத்து உள்ளதே. 32

குழைத்த பூங் கொம்பு அனாள் ஒருத்தி, கூடலை
இழைத்தனள்; அது, அவள் இட்ட போது எலாம்
பிழைத்தலும், அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும்
உழைத்தனள்; உயிர்த்தனள், உயிர் உண்டு என்னவே. 33

பந்து அணி விரலினாள் ஒருத்தி, பையுளாள்,
சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள்;
'வந்தனன்' என, கடை அடைத்து மாற்றினாள்;
சிந்தனை தெரிந்திலம்; சிவந்த, நாட்டமே. 34

உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு, ஒருத்திக்கு; அது, அன்பன் தேர்கிலான்;
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்,
'எத்தனை இறந்தன கடிகை, ஈண்டு?' என்றாள். 35

விதைத்த மென் காதலின் வித்து, வெஞ் சிறை
இதைப் புனல் நனைத்திட முளைத்ததே என -
பதைத்தனள் ஒருத்தன்மேல், ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும், - பொடித்தன, உரோம ராசியே. 36

பொலிந்த வாள் முகத்தினான், பொங்கி, தன்னையும்
மலிந்த பேர் உவகையால், - மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன், ஓர் நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கி, - தன் புயங்கள் வீங்கினான். 37

ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான்,
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெங் கணை
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம்
தீய்ந்தன நோக்கினன், திசைக்கும் சிந்தையான். 38

ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால், -
'நாட்டினை அளித்தி நீ' என்று நல்லவர்,
ஆட்டு நீர்க் கலசமே என்னல் ஆன - ஓர்
வாள் தொழில் மைந்தற்கு, ஓர் மங்கை கொங்கையே. 39

பயிர் உறு கிண்கிணி, பரந்த மேகலை,
வயிர வான் பூண் அணி, வாங்கி நீக்கினான்;
உயிர் உறு தலைவன்பால் போக உன்னினாள்;
செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள். 40

ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும் -
ஆலை மென் கரும்பு அனான் ஒருவற்கு, ஆங்கு, ஒரு
சோலை மென் குயில் அனாள் சுற்றி வீக்கிய
மாலையை நிமிர்ந்தில, வயிரத் தோள்களே? 41

சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்,
மாரனை நோக்கி, ஓர் மாதை நோக்கினாள்;
காரிகை இவள், அவள் கருத்தை நோக்கி, ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள். 42

சினம் கெழு வாட் கை ஓர் செம்மல்பால், ஒரு
கனங் குழை மயில் அனாள் கடிது போயினாள்;
மனம் குழை நறவமோ? மாலைதான் கொலோ?
அனங்கனோ? யார் கொலோ, அழைத்த தூதரே? 43

தொகுதரு காதற்குத் தோற்ற சீற்றத்து ஓர்
வகிர் மதி நெற்றியாள் மழைக் கண் ஆலி வந்து
உகுதலும், 'உற்றது என்?' என்று, கொற்றவன்
நகுதலும், நக்கனள், நாணும் நீங்கினாள். 44

பொய்த் தலை மருங்குலாள் ஒருத்தி, புல்லிய
கைத்தலம் நீக்கினள், கருத்தின் நீக்கலள்;
சித்திரம் போன்ற அச் செயல், ஒர் தோன்றற்குச்
சத்திரம் மார்பிடைத் தைத்தது ஒத்ததே. 45


மெல்லியல் ஒருத்தி, தான் விரும்பும் சேடியை,
புல்லிய கையினள், 'போதி தூது' எனச்
சொல்லுவான் உறும்; உற, நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து, விம்மினாள். 46

ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி, தன் உயிர்
மாறு இலாக் காதலன் செயலை, மற்று ஒரு
நாறு பூங் கோதைபால் நவில நாணுவாள்;
வேறு வேறு உற, சில மொழி விளம்பினாள். 47

கருத்து ஒரு தன்மையது; உயிரும் ஒன்று; தம்
அருத்தியும் அத் துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று எனப்
பொருத்துவர் ஆம் எனப் புல்லினார் அரோ. 48

வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி, வேந்தன் வந்து
எதிர்தலும், தன் மனம் எழுந்து முன் செல,
மதிமுகம் கதுமென வணங்கினாள்; அது,
புதுமை ஆதலின், அவற்கு அச்சம் பூத்ததே. 49

துனி வரு நலத்தொடு, சோர்கின்றாள், ஒரு
குனி வரு நுதலிக்கு, கொழுநன் இன்றியே
தனி வரு தோழியும், தாயை ஒத்தனள் -
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே. 50

ஆக்கிய காதலாள் ஒருத்தி, அந்தியில்
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்,
நோக்கினள், நின்றனள்; நுவன்றது ஓர்கிலள்;
போக்கின தூதினோடு, உணர்வும் போக்கினாள். 51

மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள்,
பிறப்பினொடு இறப்பு எனப் பெயரும் சிந்தையாள், -
துறப்ப அரு முகிலிடைத் தோன்றும் மின் என,
புறப்படும்; புகும்; - ஒரு பூத்த கொம்பு அனாள். 52

எழுத அருங் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு
உழுத வெம் புண்களில், வளைக் கை ஒற்றினாள்;
அழுதனள்; சிரித்தனள்; அற்றம் சொல்லினாள்;
தொழுதனள் ஒருத்தியை, தூது வேண்டுவாள்! 53

'ஆர்த்தியும், உற்றதும், அறிஞர்க்கு, அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ?' என
வேர்த்தனள்; வெதும்பினள்; மெலிந்து சோர்ந்தனள்;
பார்த்தனள், ஒருத்தி தன் பாங்கு அனாளையே. 54

தனங்களின் இளையவர் தம்மின், மும் மடி,
கனம் கனம் இடை இடைக் களிக்கும் கள்வன் ஆய்,
மனங்களில் நுழைந்து, அவர் மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே. 55

மது உண்ட மகளிர் ஆடவர் இடையே நிகழ்ந்த ஊடலும் கூடலும்

நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறுங் குஞ்சி மைந்தர்,
துறை அறி கலவிச் செவ்வித் தோகையர் தூசு வீசி,
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் -
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோ தான்? 56

பொன் அருங் கலனும், தூசும், புறத்து உள துறத்தல் வம்போ?
நல் நுதல் ஒருத்தி, தன்பால் அகத்து உள நாணும், நீத்தாள்;-
உன்ன அருந் துறவு பூண்ட உணர்வுடை ஒருவனே போல்,
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே. 57

பொரு அரு மதனன் போல்வான் ஒருவனும், பூவின்மேல் அத்
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும், சேக்கைப் போரில்,
ஒருவருக்கு ஒருவர் தோலார், ஒத்தனர்;- 'உயிரும் ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே' என்ற போது யாவர் வெல்வார்? 58

கொள்ளைப் போர் வாட்கணாள் அங்கு ஒருத்தி, ஓர் குமரன் அன்னான்
வள்ளத் தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி,
'"உள்ளத்து, ஆர் உயிர் அன்னாள் மேல் உதைபடும்" என்று, நீர் நும்
கள்ளத்தால் புதைத்தி' என்னா, முன்னையின் கனன்று மிக்காள். 59

பால் உள பவளச் செவ் வாய், பல் வளை, பணைத்த வேய்த் தோள்,
வேல் உள நோக்கினாள், ஓர் மெல்லியல், வேலை அன்ன
மால் உள சிந்தையான், ஓர் மழை உள தடக் கையாற்கு,
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை, ஈந்தாள். 60

புனத்து உள மயில் அனாள், கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள், ஒருத்தி, நீடிய
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை,
மனத்து உறை காதலே வாகை கொண்டதே. 61

கொலை உரு அமைந்தெனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள், கணவற் புல்குவாள்,
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என, முதுகை நோக்கினாள். 62

குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
சங்குஇனம் ஆர்த்தன; கலையும் சாறின;
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன; -
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே. 63

துனி உறு புலவியைக் காதல், சூழ் சுடர்
பனி என, துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள்,
புனை இழை ஒரு மயில், பொய் உறங்குவாள்,
கனவு எனும் நலத்தினால், கணவற் புல்லினாள். 64

வட்ட வாள் முகத்து ஒரு மயிலும், மன்னனும்,
கிட்டிய போது, உடல் கிடைக்கப் புல்லினார்; -
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்; -
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால். 65

அருங் களி மால் கயிறு அனைய வீரர்க்கும்
கருங் குழல் மகளிர்க்கும், கலவிப் பூசலால்,
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது - அம் மாலைக் கங்குலே. 66

சந்திரன் மறைவும், சூரியன் தோற்றமும்

கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என, இந்து நந்தினான்,
படர் திரைக் கருங் கடல் பரமன் மார்பிடைச்
சுடர் மணி அரசு என, இரவி தோன்றினான். 67

மிகைப் பாடல்கள்

அரம்பையரினும், இவர் ஆடல் நன்று எனப்
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி, வான்
நிரம்பிய கண்களை முகிழ்த்து, நீள் நகர்

கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே. 66-1

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer