61. ஈஸ்வர:
ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந
திஷ்டதி
ப்ராமயந்ஸர்வபூதாநி
யந்த்ராரூடாநி மாயயா
அர்ஜுந-அர்ஜுனா, யந்த்ராரூடாநி ஸர்வபூதாநி-உடல் என்கிற எந்திரத்தில்
ஏற்றி அனைத்து உயிர்களையும், ஈஸ்வர:-ஈசுவரன், மாயயா ப்ராமயந்-மாயையினால்
சுழற்றிக் கொண்டு, ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸே-எல்லா உயிர்களின் உள்ளத்தில்,
திஷ்டதி-நிற்கிறான்.
பொருள்
: அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன்
உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும்
சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.
கிருஷ்ணனும்
அர்ஜுனனும் போர்க்களத்துக்கு வந்த கோலமே இக்கோட்பாட்டை
விளக்குகிறது. ரதத்தின் மீது அர்ஜுனன் ஏறியிருந்தான்.
அந்த ரதம் உடலுக்குச் சமானம்;
அவன் ஜீவாத்மாவாகிறான். ரதமும் இயங்கியது. பார்த்தனும்
போர் புரிந்தான். இயங்கியதைப் பற்றிய உணர்ச்சி ரதத்துக்கு
இல்லை. சண்டை செய்ததைப் பற்றிய
உணர்ச்சி அர்ஜுனனுக்கு இருந்தது. நிகழ்ந்தது தன் செயல் என்று
எண்ணியிருந்த அப்போர்வீரன் அது உண்மையில் ஈசன்
செயல் என்று அறிந்து கொள்ளக்
கடமைப்பட்டிருந்தான். கிருஷ்ணன் தேர் ட்டினான்; ஆனால்
ஆயுதம் எடுத்துப் போர்புரியவில்லை. அங்ஙனம் எல்லாருடைய ஹிருதய
கமலத்திலும் அவன் சாக்ஷியாக வீற்றிருக்கிறான்.
அர்ஜுனன்
என்பது வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று
பொருள்படுகிறது. தூய மனமுள்ளவன் உண்மையைத்
தெரிந்துகொள்ள வல்லவனாகிறான். ஹிருதயத்தில் வீற்றிருக்கின்ற சர்வேசுவரனின் சன்னிதான விசேஷத்தால் மாயை இயங்குகிறது. இயங்குகின்ற
மாறை அதன் வசப்பட்டிருக்கிறவர்களையெல்லாம் இயக்குகிறது. சக்கரங்களில் கட்டுண்ட பொம்மைகள் போன்று அவர்கள் அசைகிறார்கள்.
அசைவைத் தங்கள் சொந்தக் கர்மமென்று
அவிவேகிகள் எண்ணிக்கொண்டு அதைச் செய்வேன் என்றும்,
இதைச் செய்யமாட்டேனென்றும் இச்சா சுதந்தரம் பாராட்டுகிறார்கள்.
அதனால் மாயையில் அவர்கள் அதிகம் கட்டுண்கின்றனர்.
ஈசா, நீ ஆட்டுவிக்கும் விதத்தில்
நான் ஆடுகிறேன் என்ற மன நிலை
வேண்டும். விதவிதமான ஜீவர்களைக் கருவிகளாகக் கொண்டு ஈசன் தன்
செயலைச் செய்து கொள்கிறான் என்ற
எண்ணத்துடன் கர்மம் செய்தலே அதை
முறையாகக் கையாளுவதாகும்.
பாம்புக்குப்
பல்லில் விஷமிருந்தபோதிலும் அவ்விஷத்தால் அது தீமையை அடைவதில்லை.
ஆனால் அது பிறரைக் கடித்தால்
அவ்விஷம் கடியுண்டவனுக்கு மரணத்தைத் தரும். இதைப்போல ஈசுவரனிடத்திலும்
மாயை உள்ளது. ஆனால் அது
அவரைப் பந்தப்படுத்தாது. ஜகத் முழுதையும் அவர்
தனக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.
கடவுள்
ஆட்டுவிக்கிறார் என்ற கருத்தில் வரும்
பயன் இனி விளக்கப்படுகிறது :
62. தமேவ
ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம்
ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்
பாரத-பாரதா, ஸர்வபாவேந-எல்லா
வடிவங்களிலும், தம் ஏவ ஸரணம்
கச்ச-அவனையே சரணெய்து! தத்ப்ரஸாதாத்-அவனருளால், பராம் ஸாந்திம் ஸாஸ்வதம்
ஸ்தாநம்-பரம சாந்தியாகிய நித்திய
ஸ்தானத்தை, ப்ராப்ஸ்யஸி-அடைவாய்.
பொருள்
: அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே
சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய
ஸ்தானத்தை எய்துவாய்.
எல்லாப்
பாங்கிலும் அவனையே தஞ்சமடைதல் ஜீவாத்மாவினது
செயற்கரிய செயலாகும். உடலைத் தன்னுடையது என்று
கருதுதல், தன் செயலுக்குத் தான்
கர்த்தாவென்று நினைத்தல், உலக நடைமுறையில் தனக்குத்
தனியந்தஸ்து ஒன்று உண்டு என்று
எண்ணுதல் இவையாவும் ஜீவபோதத்தை வளர்க்கின்றன. அது தஞ்சமாகாது. கடலில்
அலை இருப்பதுபோன்று ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருக்கின்றன. அலைக்குச் சொந்தமான நீர் கிடையாது. ஜீவனுக்குச்
சொந்தமான சரீரம் கிடையாது. அலைக்கிருக்கின்ற
வடிவம் வேளைக்கு ஒன்று. தேகத்துக்கு இருக்கிற
வடிவமும் அத்தகையது. அலையின் செயலோ உண்மையில்
கடலின் செயல். கடலுக்கு அன்னியமாக
அலை இருக்கமுடியாது. ஜீவனுடைய செயல்களெல்லாம் உண்மையில் ஈசனுடைய செயல்கள். ஈசனுக்கு
அன்னியமாக ஜீவர்கள் இல்லை. இப்பேருணர்ச்சியில் நிலைபெற்றிருப்பது
தஞ்சமாகும்.
பாண்டவர்,
விதுரர், திரௌபதி, குசேலர் முதலாயினோர் கிருஷ்ணனைத்
தஞ்சமடைந்திருந்தனர். உடன் பிறந்த சகோதரர்கள்
தசரத ராமனைத் தஞ்சமடைந்திருந்தனர். குகன், சுக்ரீவன்,
விபீஷணன் முதலாயினோர் அவனைத் தஞ்சமடைந்தனர். அங்ஙனம்
அடைக்கலம் புகுந்தவர்க்கு மன அமைதி உடனே
உண்டாயிற்று. கைகேயி, வாலி, ராவணன்
முதலியவர்கள் அடைக்கலம் புகவில்லை; அவர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர்.
ஈசனுடைய
அருள் என்னும் காற்று சதா
வீசிக்கொண்டிருக்கிறது. தங்களை முற்றும் ஈசனிடம்
ஒப்படைத்தவர்கள் அக்காற்றைப் பயன்படுத்தும் மாலுமிகளுக்குச் சமமானவர்கள். காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குக் கஷ்டமில்லை. அருளைப் பயன்படுத்தும் அன்பனுக்கு
அல்லல் இல்லை. அவன் கர்மம்
செய்வதற்கிடையில் கர்ம பந்தம் கலைகிறது.
சாந்தியும் முக்தியும் அவனுக்கு வாய்க்கின்றன.
ஸ்ரீ ராதை தன் கற்பு
நிலையை நிரூபிப்பதற்கு ஆயிரம் துவாரங்கள் உள்ள
ஒரு பாத்திரத்தில் ஜலங்கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டாள். ஒரு துளி ஜலங்கூடக்
கீழே விழாமல் அவள் கொண்டுவந்தவுடன்,
அங்கிருந்தவர்கள் எல்லாரும் இவளைப் போல் கற்புடைய
ஸ்திரீ ஒருத்தி இதுவரையில் இருந்ததுமில்லை,
இனி இருக்கப்போவது மில்லை என்று வெகுவாகச்
சிலாகித்தனர். அப்போது ராதை ஏன்
என்னை சிலாகிக்கிறீர்கள்? கீர்த்தியெல்லாம் கிருஷ்ணனுடையதே என்று சொல்லுங்கள். நான்
கேவலம் அவனுடைய பணிப்பெண் என்றாள்.
63. இதி
தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா
விம்ருஸ்யைததஸேஷேண
யதேச்சஸி ததா குரு
இதி குஹ்யாத் குஹ்யதரம் ஜ்ஞாநம்-இங்ஙனம் ரகசியத்திலும்
ரகசியமாகிய ஞானத்தை, மயா தே ஆக்யாதம்-என்னால் உனக்கு கூறப்பட்டது,
ஏதத் அஸேஷேண விம்ருஸ்ய-இதனை
முற்றிலும் ஆராய்ச்சி செய்து, யதா இச்சஸி
ததா குரு-எப்படி இஷ்டமோ
அப்படிச் செய்.
பொருள்
: இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை
முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ
அப்படிச் செய்.
விளங்காத
ஒன்றை இரகசியம் என்றும் மறைபொருள் என்றும்
பகர்கிறோம். இயற்கையின் உட்பொருள் முழுதும் நமக்கு விளங்குகிறதில்லை. அது
ரகசியமாய் மறைந்து கிடக்கிறது. இயற்கையைப்பற்றி
இக்காலத்தில் நாம் அறிந்துள்ள பல
மர்மங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்தன. உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம்.
மின் சக்தியை உண்டு பண்ணும்
முறை இப்பொழுது நமக்குத் தெரிந்திருக்கிறது. இயற்கையில் இதுகாறும் மறைந்து கிடந்த விசையானது
இப்பொழுது வெளிப்படையாயிற்று. அந்த விசையின் தன்மை
எத்தகையதென்றும், அதை எப்படி உண்டுபண்ணுவது
என்றும், அதை எங்ஙனம் உபயோகப்படுத்தலாம்
என்றும் புகட்டுவது சாஸ்திரம். விளங்காததை விளக்குவது சாஸ்திரம். இயற்கையைப் பற்றி அப்படி எண்ணிறந்த
சாஸ்திரங்கள் இருக்கின்றன. மானுட வாழ்க்கையைப் பற்றிய
சாஸ்திரம் இருக்கிறது. அது பிரம்ம வித்தையென்றும்
யோக சாஸ்திரம் என்றும் பெயர் பெற்று
உள்ளது. அனுஷ்டான முறையில் சாஸ்திரம் நமக்கு அளிக்கப்படும்பொழுது அது
உடன்பாட்டு முறையென்றும் எதிர்மறை முறையென்றும் இரண்டுவித வடிவெடுக்கிறது. இன்னதைச் செய் என்று ஆக்ஞாபிக்கும்பொழுது
அது உடன்பாட்டு முறை. இன்னதைச் செய்யாதே
என்று ஆக்ஞாபிக்கும் பொழுது அது எதிர்மறை
முறை. ஏன் ஒரு விதத்தில்
ஒழுகவேண்டும், ஏன் மற்றொரு விதத்தில்
ஒழுகலாகாது என்பதற்குத் தக்க காரணங்களையும் அது
எடுத்துப் போதிக்கிறது. யுக்தி பூர்வமாகக் புகட்டுவது
சாஸ்திரம். குருட்டு நம்பிக்கையை சாஸ்திரம் ஆமோதிப்பதில்லை. குருட்டு நம்பிக்கையை விரைவில் கலைத்துவிடலாம். ஆனால் யுக்திக்கும் அனுபவத்துக்கும்
ஒத்திருக்கும் கோட்பாட்டை யாரும் அசைக்க முடியாது.
மிக ஆழ்ந்தவைகளான வாழ்க்கைத் தத்துவங்களைக் கருணை கூர்ந்து கிருஷ்ண
பகவான் அர்ஜுனனுக்கு எடுத்து வழங்கினார். அவர்
புகட்டியவைகளை வேண்டியவாறு ஆராய்ச்சி செய்வதற்கான இச்சா சுதந்தரத்தையும் அவனுக்கு
அவர் அன்புடன் அளித்தார். உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல.
உண்மை தனக்குத் தானே சான்று ஆகிறது.
உண்மையை நன்றாக அலசி ஆராய்ந்து
நீ விரும்பியதைச் செய் என்கிறார் பகவான்.
உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம
வளர்ச்சிக்கும் சுதந்தரம் முற்றிலும் அவசியமானது. அடிமைத் தனத்தில் அடக்கி
வைக்கப்பட்ட உயிர் ஓங்கி வளராது.
புகட்ட வேண்டிய யாவையும் சொல்லியான
பிறகு, அவைகளுள் விரும்பியதைச் செய் என்று கிருஷ்ணன்
அனுமதி கொடுக்கிறார். சான்றோர் புகட்டும் செந்நெறியின் சிறப்பு இதுவேயாம்.
மனிதனுடைய
முயற்சிகளெல்லாம் எதில் முற்றுப்பெறுகின்றன என்ற
முடிவான உண்மையை இனி மூன்று
சுலோகங்களில் பகவான் பகர்கின்றார்.
64. ஸர்வகுஹ்யதமம்
பூய: ஸ்ருணு மே பரமம்
வச:
இஷ்டோऽஸி
மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே
ஹிதம்
ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய, மே
பரமம் வச:-என்னுடைய பரம
வசனத்தை, பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை
கேள், மே த்ருடம் இஷ்ட:
அஸி-நீ திடமான நண்பன்,
தத: ஹிதம் இதி தே
வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று
உனக்கு சொல்லுகிறேன்.
பொருள்
: மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது
பரம வசனத்தைக் கேள். நீ திடமான
நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச்
சொல்லுகிறேன்.
நீருக்குள்
மிக ஆழமான இடத்தில் எல்லாரும்
மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே
அது இயலும். இப்பொழுது பகவான்
புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால்
அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது. சிரேயஸைப்
பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில்
விண்ணப்பித்தான். அதைப் பெறுதற்கு உற்ற
வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர்
பகரும் சொல்லானது- பரமம் வசனம்- மேலாம்
மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம்.
வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள்
ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே
பகர்கின்ற சொல்லாகிறது. ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை
முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.
புறவுலகின்
அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள
தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது. எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும்
நல்ல உறவு ஆகின்றான் இறைவன்.
உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது.
இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை
நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத் தனக்கு
உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம்
தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய தொழிற்சாலையில் இந்த
அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் காலில்
மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய
நாணல் ஒன்றைக் கண்ணன் கையில்
எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில்
உண்டுபண்ணும் கானமோ மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக்
கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன்
செய்யும் ஜாலம் அத்தகையது. பிறகு
சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே
அவன் ஆட்கொள்கிறான். இனி, இதிலும் ஆழ்ந்ததொரு
கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த
சுலோகத்தில் வருகிறது.
உண்மையான
பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம்
காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய
கோபிநாதனாகவே கண்டதைப்போல, பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய
பந்துவாகவே காண்கிறான்.
பகவான்
புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது
:
65. மந்மநா
பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி
ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி
மே
மந்மநா
பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக, மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க, மாம்
நமஸ்குரு-என்னையே வணங்குக, மாமேவ
ஏஷ்யஸி-என்னையெய்துவாய், ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது
சபதமுரைக்கிறேன், மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.
பொருள்
: உன் மனதை எனக்காக்குக. என்
தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே
வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது
சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.
சத்தியம்
சொல்லுகிறேன் என்று சத்தியப்பொருளாகிய பகவான்
பகர்கிறார். சூரியனிடத்திருந்து கிளம்பி வருவதெல்லாம் அக்கினி
சொரூபம். வெப்பத்தைத் தவிர வேறு ஒன்றும்
ஆங்கில்லை. பரமாத்மா உடல் தாங்கி வந்து
உரைப்பது சத்தியமே. அதைப் பின்பற்றுகின்ற சான்றோரது
ஜீவிதம் அதை சத்தியமென்றே நிரூபிக்கிறது.
நீ எனக்குப் பிரியமானவன் என்பது மகாவாக்கியம். ஜீவர்கள்
எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குதற்கான
பரிபாகம் வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம்
பகரப்படுகிறது. துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளும்
பிரியத்தைப் படிப்படியாய் உறுதிப்படுத்திக்கொண்டு போகின்றன. அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும்
தாழ்? நானே நீ, நீயே
நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை. இது வெறும் பேச்சில்
நிரூபிக்கப்படுவதன்று ; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாம்.
வண்டியில்
ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம்.
வண்டியில் செல்லுவது நெறி. ஊரை அடைவது
குறி. கடவுள் விஷயத்தில் நெறியும்
குறியும் ஒன்றே. அவனைத் துணையாகக்கொண்டு
அவனை அடைகிறோம். அவன் அருளால் அவன்தாள்
வணங்குகிறோம். பிறகு அவன் அருளால்
அவனை அடைகிறோம். அவன் யாண்டும் துணைபுரிந்தும்,
அவன் துணையை ஏற்க நம்மில்
பலர் மறுக்கிறோம். இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நிற்பது
நமது பண்படாத மனது. அந்த
மனது பல ஜன்மாந்தரங்களில் வேறு
பல காரியங்களுக்கு உதவிவந்தது. விழலுக்கு நீர் இறைத்தவாறு அது
அநித்தியப் பொருள்களை நாடிநின்றது. ஆனால் அது கடவுளை
அடைதற்கே கருவியாக அமைவது அவசியமாகிறது. உள்ளம்
அவனுக்கே இடமாக வைக்கப்படவேண்டும். மனிதன்
செய்யவேண்டிய செயல் அதுவேயாம். அவன்
மீது பக்தி பண்ணுமளவு மனது
மிக உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான்.
பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது
ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன்
ஊறியிருப்பதால் செயல்கள் அனைத்தின் வாயிலாக இறைவனுக்கு அவன்
இடையறா நமஸ்காரம் செய்கிறான். கடலை அணுகிய நதியானது
கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அங்ஙனம் இத்தகைய பான்மையைப்
பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே
ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம்
செய்கிறார். உறுதிமொழி கூறுகிறார்.
ஒன்பதாவது
அத்தியாயம் முப்பத்தொன்றாவது சுலோகத்தில் பக்தன் அழிந்துபட்டுப் போவதில்லை
என்பதைப் பிரகடனம் பண்ணும்படி அர்ஜுனனைத் தூண்டினார். இறுதியில் அப் பேருரையைப் பகர
பகவான் தாமே முன் வந்துள்ளார்.
தண்ணீரில்
மூழ்கிவிட்டவன் மூச்சு விடுவதற்கு மிகவும்
தவிப்பதைப் போல, ஈசுவரனைக் காண்பதற்கு
முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும்
ஆசைகொள்ள வேண்டும்.
பகவான்
கூறும் அந்த உறுதிமொழிதான் யாது?
விடை வருகிறது :
66. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய
மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
மா ஸுச:
ஸர்வதர்மாந்
பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு
விட்டு, மாம் ஏகம் ஸரணம்
வ்ரஜ - என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும், அஹம்
த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.
பொருள்
: எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே
சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.
ஜீவன் செய்கிற செயல்களிலெல்லாம் கடைசியான
செயல் ஈசனிடத்து அடைக்கலம் புகுதலாம். அடைக்கலம் புகுதல் என்பதன் பொருள்,
தன் முயற்சி போதவில்லை அல்லது
பலிதமாக வில்லை; ஆகையால் தெய்வத்தினிடம்
தஞ்சமடைந்து அவர் துணையையும் கொஞ்சம்
தேடிக்கொள்ளலாம் என்பதல்ல. சிற்றோடை பெரிய நதியில் கலந்து
பிறகு சமுத்திரத்தில் சங்கமமாவது போன்றது சரணாகதி. ஜீவனுடைய
இச்சா சுதந்தரமெல்லாம் ஈசுவர சங்கற்பத்தில் சேர்ந்துவிடுகிறது.
தனக்கெனத் தனிச் செயல் ஒன்றுமில்லை.
ஈசன் செயல் கடலின் செயல்
போன்றது. ஜீவன் செயல் அலையின்
செயல் போன்றது. அலையானது கடலுக்கு அன்னியமானதல்ல. ஜீவன் செயலெல்லாம் உண்மையில்
ஈசுவரன் செயல். கர்மயோகம் ஜீவனை
முடிந்த இந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.
பக்தன்
எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக்கிறான்.
தனக்கு வரும் நன்மை கேடுகளெல்லாம்
கடவுளது ஆணை. ஆகையால் ஒரு
செயலை நன்கு என்றும் மற்றொரு
செயலைக் கேடு என்றும் பக்தன்
பொருள்படுத்துவதில்லை. தர்மம் அதர்மம் ஆகிய
இரண்டும் ஈசன் செயல் என்ற
புனித நிலையை அடைவனவாகின்றன.
அன்றே என்தன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமுங்
குன்றே
அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர்
இடையூறெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!
பக்தர்கள்
எல்லாரும் அடைக்கலம் என்னும் பெருநிலையை அடைந்திருக்கிறார்கள்.
இறைவனது பேரன்பில் அவர்கள் தங்களை மறந்துவிட்டார்கள்.
ஞாபகக் குறைவில் ஒருவன் நடுவீதியில் நடப்பானாகில்
அவன் ஓடும் வண்டிகளால் ஆபத்துக்கு
உள்ளாவான். பக்தனோ அன்பில் தன்னை
மறந்தவன் என்றாலும் ஒரு சிறு செயலிலும்
சொப்பனத்திலும் அவன் பிழைபோவதில்லை. ஒழுங்குப்பாடே
வடிவெடுத்ததாக அவனது வாழ்க்கை நடை
பெறுகிறது. தாயின் மார்பில் அணைக்கப்பெற்ற
சேய்போன்று அவன் சரணாகதியில் இன்பம்
துய்க்கிறான்.
இனி ஞானியின் ஞானோதயமும் சரணாகதி எனப்படுகிறது. கண்ணாடியில்
நல்லது கெட்டது ஆகிய இரண்டின்
பிம்பங்கள் தோன்றலாம். எனினும் கண்ணாடியின் சொரூபம்
மாறுவதில்லை. தர்மம் அதர்மம் என்று
சொல்லப்படும் கர்மங்களெல்லாம் பிரகிருதியினுடையவைகள். அந்தராத்மாவாயிருக்கும் சித் சொரூபம் என்னும்
பரவெளியை அவைகள் பாதிக்கமாட்டா. சுத்த
சைதன்யமாகிய தன்னில் தானாயிருப்பவன் உபாதிகளையெல்லாம்
தியஜித்து பரவெளியில் ஒன்றாய்விடுகிறான். பேரறிவு அல்லது பேருணர்வு
ஒன்றே பாக்கியிருக்கிறது. உள்ளும் புறமும் என்கிற
பாகுபாடுகள் அப்பரவெளிக்கில்லை. ஞானியடையும் சரணாகதி இதுவே.
யோகி, பக்தன், ஞானி ஆகிய
மூவரும் அடையும் சரணாகதி ஒன்றேயாம்.
அது மூன்று விதமாக விளக்கப்படுகிறது.
சத் சொரூபத்தில் யோகி லயமாகிறான்; சித்
சொரூபத்தில் ஞானி லயமாகிறான்; ஆனந்த
சொரூபத்தில் பக்தன் லயமாகிறான்.
சிறு குழந்தையொன்று தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறது.
அதனிடத்து மற்றவர்கள் காட்டும் அன்பை அங்கீகரிக்கும் பரிசு
அதற்கு வந்திருக்கிறது. ஆனால் அதனுடைய மனது
இன்னும் விகாரப்படவில்லை. எந்த நாட்டுக்கு உரிய
குழந்தை எந்த மொழி பேசும்
குழந்தை, எத்தகைய பழக்க வழக்கங்களையுடையது
ஆகிய பேதங்களையும் பாகுபாடுகளையும் அது இன்னும் அறியவில்லை.
பூர்வ ஜன்மத்திலிருந்து அது கொண்டுவந்திருக்கும் இயல்புகளும்
இன்னும் அவ்யக்தமாக மறைந்து கிடக்கின்றன. அதாவது
அதன் மனத்தகத்து இருக்கும் மனோதர்மங்களெல்லாம் இன்னும் வடிவெடுக்கவில்லை. இந்த
நிலையில் குழந்தையானது ஞானிக்கு ஒப்பானது. அதன்பால் உள்ள அபேத நிலை
உயிரனைத்தையும் தனக்குரிய தாக்குகிறது. குழந்தையின் தூய அன்புக்கு வசப்படாத
உயிர் இல்லை.
தான் அடைந்துள்ள மன பரிபாகத்தால் ஞானி
குழந்தை போன்று ஆகிறான். அந்தக்கரண
மடங்கத் துறப்பதுவே எந்தத் துறவினும் நன்று
என்பது கோட்பாடு. ஞானியாவதற்கு முன்பு விதவிதமான இயல்புகள்
மனதைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்றன.
அவரவர் ஸ்வதர்மம் என்பது அதுவே. ஸ்வதர்மத்தைக்
கையாளுதலே ஸ்வதர்மத்தை விட்டொழிப்பதற்கு உற்ற உபாயம். நோய்
வந்தால் அது தன் வேலையைச்
செய்ய இடங் கொடுப்பதே அதை
ஒழிப்பதற்கு உபாயமாகிறது. நோயை அடக்கினால் வேறு
ஒரு நோயாக அது வடிவெடுக்கும்.
வந்துள்ள நோய் உடலில் வேலை
செய்தால் அந்நோய் ஓய்ந்து அறவே
அகன்றுபோம். நாம் எடுத்துக்கொண்ட ஸ்வதர்மம்
அத்தகையது. ஸ்வதர்மத்தைக் கையாண்டு அதன் வேகத்தை ஒழித்து
விடுவது நம் குறிக்கோள். மழைபெய்து
மேகம் ஒழிந்துபோனால் எஞ்சியிருப்பது வெட்டவெளி. பற்றற்று தர்மம் செய்து தர்மத்தை
ஒழித்துவிட்டால் எஞ்சியிருப்பது சுத்த சைதன்யமாகிய ஆத்ம
சொரூபம்.
தனக்கு
அன்னியமானதெல்லாம் தன்னை வந்து சாரும்
பொழுது அது அழுக்கு அல்லது
பாபம் ஆகிறது. ஜீவபோதம் பெற்றிருப்பது
பாபம்; அது தனது நிஜ
சொரூபமல்ல. கடலுக்குள் வந்த நதியின் நதித்தன்மையை
நீக்கிவிட்டுக் கடலின் தன்மையைப் பெறும்படி
அது செய்துவைக்கிறது. பரமாத்மாவை சரணடைந்த ஜீவனிடத்திருந்து ஜீவபோதம் என்ற பாபத்தை அகற்றிவிட்டு
பரபோதத்தை அது வழங்குகிறது. ஜீவபோதத்திலிருந்து
விடுதலை யடைவதே மோக்ஷமாம். பரமாத்மா
அமிர்த சொரூபம்; அதனுள் அழிவு என்பதில்லை.
அது பரமானந்தம். ஆக, அதனுள் துன்பமில்லை.
அது பரஞானச்சுடர் ; ஆக, அதனுள் அக்ஞான
இருள் இல்லை. சத்தியம், ஞானம்,
ஆனந்தம் பிரம்மம். அந்தக்கரணம் அகன்றபின் ஜீவன் பிரம்மமே.
கோழைத்தனத்தை
அகற்று ; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய்
என்ற கருத்துடன் கீதா ஆசாரியன் கீதையைத்
துவக்கினான். உன் கடமைகளை யெல்லாம்
நீத்து விட்டு எனது அகண்ட
சத் சித் ஆனந்த சொரூபத்தில்
திளைத்திருப்பாயாக என்று கீதாசாரியன் முடிவு
கூறினான். இடையில் பகர்ந்துள்ள யாவும்
கர்மத்தைக் கடப்பதற்கு உற்ற உபாயங்களாம். அவனைச்
சரணடைந்து, அவன் அருளை நாடி
நிற்பவர்க்கு அவனருளால் அவனுடைய போதனையும் நன்கு
விளங்கும். பிறகு ஜீவபோதத்தைக் கலைத்துவிட்டு
அவனுடைய அகண்ட ஸத் சித்
ஆனந்த சொரூபத்தில் இரண்டறக் கலத்தலும் எளிதாகின்றது.
பரிபூரண
சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன்,
அன்றைய வேலையை முடித்த பிறகு
தலையணையின் மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய்ப்
புகைச் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆனந்த நிலையைப் போன்றது
அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.
இத்துடன்
கீதா உபதேசம் முற்றுப் பெறுகிறது.
இந்தக் கீதா சாஸ்திரத்தைப் படித்தும்
அனுஷ்டித்தும் பயன் அடைய வல்ல
அதிகாரி யார் என்னும் கேள்வி
எழுகிறது. அதற்கு விடை வருகிறது
:
67. இதம்
தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச
மாம் யோऽப்யஸூயதி
தே இதம் கதாசந-உனக்கு
(சொல்லப் பட்ட) இதை எப்போதும்,
அதபஸ்காய-தவமிலாதோனுக்கும், அபக்தாய ச-பக்தியில்லாதோனுக்கும்,
அஸுஸ்ரூஷவே-கேட்க விரும்பாதோனுக்கும், ய:
மாம் அப்யஸூயதி-என்பால் பொறாமையுடையோனுக்கும், ந வாச்யம்-சொல்லாதே.
பொருள்
: இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால்
பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.
வாழ்க்கைத்
தத்துவங்கள் அனைத்தும் அடங்கப் பெற்றது பகவத்கீதை.
அதை முறையாக எல்லார்க்கும் எடுத்து
வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த
அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தியமையும். ஆனால் இதை யாருக்குப்
புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான்
பண்ணுகிறார். கண்ணில்லாதவர்க்குச் சித்திரம் பயன்படாதது போன்று தவம் அல்லது
நெறியான வாழ்க்கையில்லாதவர்களுக்குக் கீதோபதேசம் பெரும் பயன் அளிக்காது.
வெறும் தவம் மட்டும் போதாது.
அது பக்தியோடு கூடியதாயிருக்க வேண்டும். பக்தியே தவத்தைத் தூயதாக்குகிறது.
பிறகு பக்தியின் அறிகுறியாக சேவை வந்தமைகிறது. ஈசனிடத்தும்
உயிர்களிடத்தும் விருப்பமிருக்குமளவே தொண்டுபுரிய ஒருவன் துணிகிறான். தோன்றாத்
துணையாயுள்ள ஈசுவர பக்தி பண்ணுகிறவர்களுள்
தோற்றத்தில் வந்துள்ள கிருஷ்ணனைச் சாமான்ய மனிதன் என்று
இகழ்பவர் உண்டு. பலவிதச் செருக்கும்
தேகாத்ம புத்தியும் உடையவர்கள் அக்காலத்தில் இருந்ததுபோன்று எக்காலத்திலும் இருக்கிறார்கள். அப்படி அகங்கரிக்கிறவர்கள் கீதையின்
உட்கருத்தை அறிந்துகொள்ளமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு அதைப் புகட்டுவது பயன்படாது.
அசுச்ரூஷவே என்பது கேட்க விருப்பமில்லாதவனுக்கு
என்றும் பொருள்படுகிறது. தன்னைப்பற்றிய பெரிதாக நினைத்துக்கொண்டோ அல்லது
வேறு எக்காரணத்தை முன்னிட்டோ இதை ஊக்கத்தோடு கேட்க
மனமில்லாதவனுக்கு இதை உபதேசிக்கலாகாது.
மழைத்தண்ணீர்
மேட்டுநிலத்தில் தங்கிநிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்துவிடுகிறது.
அதுபோல ஈசுவர கிருபையானது தற்பெருமையும்,
கர்வமுமுள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கிநிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் அது தங்கிநிற்கும்.
ஈசுவர கைங்கரியமாக கீதா பிரசாரம் செய்பவன்
அடையும் நன்மை யாது? விடை
வருகிறது:
68. ய இமம் பரமம் குஹ்யம்
மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம்
மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:
ய: மயி பராம் பக்திம்
க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த
பக்தி செலுத்தி, இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை
(கீதையை), மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என்
பக்தர்களிடையே சொல்லுவோனோ, மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான், அஸம்ஸய:-ஐயமில்லை.
பொருள்
: இந்தப் பரம ரகசியத்தை என்
பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி
என்னையே எய்துவான். ஐயமில்லை.
மனிதன்
பிறர்க்கு எதை எடுத்து மனமுவந்து
வழங்குகிறானோ அது அவனுக்குச் சொந்தமாகிறது.
தனக்கென்று எதைப் பிடித்து வைக்கிறானோ
அது சொந்தமாவதில்லை. உடலுக்கு இன்றியமையாத ஒன்றை முதல் சான்றாக
எடுத்துக்கொள்வோம். உணவு இல்லாது யாரும்
உயிர்வாழ முடியாது. உணவைத் தனக்கென்று தேடிவைத்துக்
கொள்ளுதல் உயிர்களிடத்து அமைந்துள்ள இயல்பு. ஒருவன் பிறர்க்கு
உணவு வழங்கிப் பிறகு தான் உண்கிறான்.
மற்றொருவன் பிறரைப்பற்றி ஒன்றும் நினையாது தனக்கென்றே
தேடிவைத்து உண்கிறான். இவ் இருவருள் பிறரைப்பற்றி
நினைப்பவன் அடைகிற உடல் நலனை
மற்றவன் அடையமாட்டான். இதை ஒவ்வொருவனும் தன்
சொந்த அனுபவத்தில் காணலாம்.
அடுத்தபடியாக
அறிவுக்கு உரியது கல்வி. கற்பவர்களுள்
நன்கு கற்பவன் யார் என்ற
கேள்வி எழுகிறது. தனக்கு என்று கற்பவனைவிடப்
பிறர்க்குப் பயன்படுமாறு புகட்டுதற்குக் கற்பவன் நன்கு கற்கிறான்.
பிறர்க்குப் புகட்டும்பொழுதெல்லாம் தனது அறிவு தெளிவடைகிறது.
பிறர்க்கு ஒரு விஷயத்தை விளங்கச்
செய்யுமளவு தனக்கே அது நன்கு
விளங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்குமளவு நீர்
ஊறுவதுபோன்று கல்வியைப் புகட்டுமளவு ஒருவனிடத்துக் கல்வி வளர்கிறது.
பகவத் விஷயங்களைப் பக்தர்களிடத்து பக்தி விசுவாசத்தோடு எடுத்தோதுவதே
பகவத் சேவையாகிறது. தன்னை ஓர் ஆசாரியன்
என்று அத்தகையவன் அகங்கரிப்பதில்லை. அகங்காரம் கொள்கிறவனுக்கு பக்தி பெருகுவதில்லை. பகவத்
மகிமையானது நல்லார்க்கிடையில் பேசப்பெறுகிறது என்று இன்புறுபவனுக்கு அன்பும்
அறிவும் வளர்கின்றன. அத்தகைய பேச்சாளன் பணிவுடன்
செய்யும் பகவத் கைங்கரியமாக அது
கருதப்படுகிறது. கடவுளை அடைதலே அதில்
விளையும் பயனாகும்.
பகவான்,
பாகவதம் (சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.
சாஸ்திரங்களின்
உட்கருத்தை நல்லாரிடம் பரப்புபவனைக் கடவுள் எப்படிப் பொள்படுத்துகிறார்?
விடை வருகிறது:
69. ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்சிந்மே
ப்ரியக்ருத்தம:
பவிதா ந ச மே
தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி
தஸ்மாத்
மே ப்ரியக்ருத்தம-அவனைக் காட்டிலும் எனக்கினிமை
செய்வோன், மநுஷ்யேஷு கஸ்சித் ச ந-மானிடருள்ளே வேறில்லை, புவி தஸ்மாத் மே-உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு,
ப்ரியதர: அந்ய:-எனக்கு உகந்தவன்
வேறு எவனும், ந பவிதா-ஆக மாட்டான்.
பொருள்
: மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை
செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு
உகந்தவன் வேறெவனுமாகான்.
எல்லாச்
செயல்களும் இறைவனுடைய செயல்களே. இயற்கை விளக்குவதெல்லாம் இறைவனுடைய
மகிமையையேயாம். அவ்விளக்கங்கள் அனைத்திலும் பகவத் கீதையின் விளக்கம்
தனிப்பெருமை பெற்றுள்ளது. இயற்கையின் சிறப்பை அது விளக்குகிறது.
வாழ்க்கைத் தத்துவத்தை அது விவரித்துச் சொல்லுகிறது.
அனைத்துக்கம் மூலப்பொருள் எது என்பதை அது
இயம்புகிறது. பரவித்தை அபரவித்தை ஆகிய இரண்டும் கீதையில்
அடங்கியிருக்கின்றன. அதாவது கடவுளை அடைதற்கான
வழியும் இவ்வுலக வாழ்க்கையை நன்கு
நடாத்துதற்கான வழியும் கீதையினால் புகட்டப்படுகின்றன.
அதன் போதனையைக் கேட்டு அதன்படி நடப்பவன்
விரைவில் நல்லான் ஆவது திண்ணம்.
ஆகவே தக்கார்க்கிடையிலே கீதா தத்துவத்தைப் புகட்டுதற்கொப்பான
செயல் வேறு எதுவுமில்லை. அப்படிப்
புகட்டுபவனைப் போன்று கடவுளுக்குச் சொந்தமானவனும்
வேறு யாருமில்லை. கடவுளின் மகிமை அவன் மூலம்
நன்கு வெளியாவதே அதற்குக் காரணமாகிறது.
வீட்டுக்
கூரையின் மேலிருந்து விழும் மழை ஜலம்
புலித்தலை போன்ற குழாயின் மூலமாகக்
கீழே தரையில் விழும்போது, பார்வைக்குப்
புலித்தலையினின்றும் விழுவதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது ஆகாயத்திலிருந்து விழுகிறது.
அதுபோல, தெய்விகம் வாய்ந்த மனிதர்கள் கூறும்
உபதேச மொழிகள் பார்வைக்குக் கேவலம்
மனிதர்களிடமிருந்து வருவனவாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் ஈசுவர ஸன்னிதியினின்றே வருகின்றன.
பிறர்க்கு
எடுத்துப் புகட்ட இயலாதவர்க்கும் கீதையின்பால்
ஒரு கடமையுண்டு. அது யாதெனின் விடை
வருகிறது :
70. அத்யேஷ்யதே
ச ய இமம்
தர்ம்யம் ஸம்வாதமாவயோ:
ஜ்ஞாநயஜ்ஞேந
தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:
இமம் ஆவயோ: தர்ம்யம் ஸம்வாதம்-நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான
சம்பாஷணையை, ய: அத்யேஷ்யதே-எவன்
கற்றறிகிறானோ, தேந ச அஹம்-அவனாலும் நான், ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட:
ஸ்யாம்-ஞான யக்ஞத்தால் திருப்தி
பெற்றவனாவேன், இதி மே மதி:-இஃதென் கொள்கை.
பொருள்
: நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை
எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த
ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன்.
இஃதென் கொள்கை.
கேள்வியால்
கீதையை அறிந்துகொள்வது போன்று சொந்த ஆராய்ச்சியாலும்
கீதையை அறிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.
கீதையை ஓதி அறிவது பகவத்
விஷயத்தை அறிவதாகிறது. பகவத் விஷயத்தை நன்கு
அறிந்தவனே பகவானை வழுத்த வல்லவனாகிறான்.
உண்மையை அறிந்து அதற்கேற்ற பிரகாரம்
வாழுதல் சிறந்த பிரசாரமாகிறது. வாழ்க்கையைப்பற்றிய
மேலாம் தத்துவத்தை உபதேசிப்பவன் ஒருவன் இருக்கிறான். அக்கோட்பாட்டின்படி
வாழ்பவன் மற்றொருவன் இருக்கிறான். இவ்விருவருள் நல்வாழ்வு வாழ்பவனே நல்ல பிரசாரம் செய்கிறான்.
நல்ல பேச்சைவிடச் சிறந்தது நல்ல பழக்கம். பேசுபவர்
ஏராளமாயிருக்கின்றனர்; நல்வாழ்வு வாழ்பவர் மிகச் சிலரே. கீதையை
ஓதும் அவர்களது நல்வாழ்வு மற்றவர்களை நல்வழியில் தூண்டுகிறது. ஆக, அது ஞான
யக்ஞ ஆராதனை என்னும் பெயர்
பெறுகிறது.
தனக்குத்
தானே கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு இயலவில்லை.
அப்பொழுது அவன் என் செய்வது
என்ற கேள்வி எழுகிறது. அதற்கு
விடை வருகிறது :
71. ஸ்ரத்தாவாநநஸூயஸ்ச
ஸ்ருணுயாதபி யோ நர:
ஸோऽபி
முக்த: ஸுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்
ய: நர:-எந்த மனிதன்,
ஸ்ரத்தாவாந்-நம்பிக்கை உடையவனாக, அநஸூய: ச-பொறாமை
போக்கியவனாக, ஸ்ருணுயாத் அபி-கேட்பது மட்டுமே
செய்வானெனினும், ஸ: அபி முக்த:-அவனும் பாவங்களில் இருந்து
விடுபட்டு, புண்யகர்மணாம் ஸுபாந் லோகாந்-புண்ணியம்
செய்தவர்கள் அடையும் உலகங்களை, ப்ராப்நுயாத்-எய்துவான்.
பொருள்
: நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி
இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும்,
அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர்
நண்ணு நல்லுலகங்களெய்துவான்.
உணவை அலட்சியப்படுத்துபவன் தனது உடல் வாழ்வை
அலட்சியப்படுத்துகிறான். உணவுப் பொருளின் தத்தவத்தை
அறிந்து ஒருவன் உணவு உண்கிறான்.
மற்றொருவன் அதன் தத்துவம் தெரியாது
விருப்புடன் அதைப் புசிக்கிறான். அறிந்தவன்
அறியாதவன் ஆகிய இருவரும் உணவினின்று
பெறும் நன்மை ஒன்றேயாம். அதே
விதத்தில் கீதா சாஸ்திரத்தைச் சிரத்தையோடு
கேட்டுத் தெரிந்துகொள்பவன் எல்லா நன்மைகளையும் அடைகிறான்.
பிறர்க்கு எடுத்துப் புகட்டுவதால் அது ஒருவன் மனிதன்
நன்கு பதிகிறது. பக்தி விசுவாசத்துடன் கேட்பதால்
இன்னொருவன் மனதில் அது பதிகிறது.
இருவரும் கீதா தத்துவத்தை அறிந்துகொண்டவர்
ஆகின்றனர். மனதுக்கு ஊட்டும் நல்லெண்ணங்களுக்கு சம்ஸ்காரங்கள்
என்று பெயர். பகவத் விஷயங்களைக்
கேட்பது சம்ஸ்காரங்களுள் சிறந்த சம்ஸ்காரமாகிறது. பக்தி
சிரத்தையுடன் கேட்பவன் கீழ்மையினின்று விடுதலையடைந்து முன்னேற்றமடைவது உறுதி.
மாணாக்கனுக்கு
எல்லாம் பிடிபட்டு விட்டதாவென்று ஓர்வது ஆசிரியரின் இயல்பு.
அக்கோட்பாட்டுக்கு இணங்க பகவான் இப்பொழுது
கேட்பதாவது:
72. கச்சிதேதச்ச்ருதம்
பார்த த்வயைகாக்ரேண சேதஸா
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ:
ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய
பார்த-பார்த்தா, ஏதத் த்வயா ஏகாக்ரேண
சேதஸா-உன்னால் ஒருமுகப் படுத்தப்
பட்ட மனதோடு, கச்சித் ஸ்ருதம்-கேட்கப் பட்டதா? தநஞ்ஜய!
தே அஜ்ஞாநஸம்மோஹ:-தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம்,
கச்சித் ப்ரநஷ்ட:-அழிந்து விட்டதா?
பொருள்
: பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு
வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம்
அழிந்ததா?
ஞானோபதேசம்
புகட்டுபவர் புகட்டப் பெறுபவனிடத்து எதை எதிர்பார்க்கிறார் என்பது
ஈண்டு விளங்குகிறது. ஒருமை மனது உண்மையைத்
தெரிந்துகொள்ளுதற்கு முற்றிலும் அவசியமானது. எவ்வளவு தான் புகட்டினாலும்
சிதறடைந்த மனது போதனையின் உட்பொருளைத்
தெரிந்துகொள்ளாது. கொஞ்சம் எடுத்துப் புகட்டினாலும்
குவிந்த மனது புகட்டப்பெறும் கோட்பாட்டை
உள்ளபடி வாங்கிக்கொள்கிறது. புகட்டப்பெறுபவன் அத்தகைய நலன் அடையவேண்டும்
என்பதே புகட்டுபவரது எண்ணம்.
குவிந்த
மனது ஞானத்துக்கு உரியதாகிறது. சூரியகிரணங்கள் குவிந்து வருமளவு அவை பேரொளி
பெறுகின்றன. ஒளிப்பிழம்பு மற்றப் பொருள்களையும் விளக்க
வல்லது; தன்னையும் அது சர்வகாலமும் விளக்கிக்கொண்டிருக்கிறது.
அங்ஙனம் குவிந்த மனது ÷க்ஷத்ரம்
÷க்ஷத்ரக்ஞனாகிய பொருள்களை உள்ளபடி தெரிந்துகொள்கிறது. ஞான
வெளிச்சமும் அக்ஞான இருளும் ஒன்று
சேர்ந்து இருக்கமாட்டா. ஞானவெளிச்சத்தில் பொருள் உள்ளபடி தென்படுகிறது.
அக்ஞான இருளில் அதே பொருள்
வெவ்வேறு வடிவெடுத்துத் தென்படுகிறது. இருளில் தென்பட்ட ஒரு
வடிவத்தைத் திருடன் போலீஸ்காரன் என்று
நினைத்தான். அதே வடிவத்தைப் போலீஸ்காரன்
திருடன் என்று எண்ணினான். அச்சம்
கொண்ட ஒருவன் அவ்வடிவத்தைப் பிசாசு
என்று பொருள்படுத்தினான். வெளிச்சத்தில் அதை ஏற்கனவே பார்த்திருந்த
ஒரு விவேகி அத்தகைய மயக்கம்
ஒன்றும் கொள்ளவில்லை. அதை ஒரு மரக்கட்டை
என்று உள்ளபடி ஓர்ந்தான். ஞானோதயம்
பிறந்திருக்குமிடத்து அக்ஞான ஸம்மோஹம் தானே
அகன்றுபோகிறது. அத்தகைய தெளிந்த நிலை
அர்ஜுனனுக்கு வந்துவிட்டதாவென்று பகவான் வினவுகிறார்.
நல்லாசிரியரை
அடையும் தலைமாணாக்கன் அடையப்பெறும் தகைமையானது அர்ஜுனனுடைய விடையிலிருந்து வெளியாகிறது :
அர்ஜுந
உவாச
73. நஷ்டோ
மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி
கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ
அர்ஜுந
உவாச அச்யுத!-அர்ஜுனன் சொல்லுகிறான்,
அச்சுதா, த்வத்ப்ரஸாதாத் மோஹ: நஷ்ட:-நின்னருளாலே
மயக்கம் அழிந்தது, மயா ஸ்ம்ருதி: லப்தா-நான் நினைவு அடைந்தேன்,
கதஸந்தேஹ: ஸ்தித: அஸ்மி-ஐயம்
விலகி நிற்கிறேன், தவ வசநம் கரிஷ்யே-நீ செய்யச் சொல்வது
செய்வேன்.
பொருள்
: அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே,
அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்;
ஐயம் விலகி நிற்கிறேன்; நீ
செய்யச் சொல்வது செய்வேன்.
போர் புரியமாட்டேன் என்று சொல்லித் தேர்த்
தட்டின் மீது அர்ஜுனன் சும்மா
இருந்துவிட்டான். அப்படிச் சும்மா இருந்தவன் உபதேசம்
கேட்ட பிறகு ஒரு சிறந்த
செயலைச் செய்தான். மிச்சமின்றித் தன்னை மாதவனிடம் ஒப்படைக்கலாயினான்.
விறகுக்கட்டையானது பச்சையாயிருந்தாலும் உலர்ந்திருந்தாலும் தன்னைத் தீயினிடம் ஒப்படைத்தால்
அது தானே அக்கினி சொரூபத்தை
யடைகிறது. அங்ஙனம் அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு
சிஷ்யன் ஆனான். பிரபத்தியும் பண்ணலானான்.
அதாவது மேலும் நிகழ்வது எதுவானாலும்
தான் கண்ணனிடமிருந்து பின் வாங்குவதில்லை; அதைப்பற்றி
நினைப்பதும் இல்லையென்று முடிவு கட்டினான். தீயில்
குதிக்கின்ற விட்டில் பூச்சி அதன் விளைவைப்பற்றி
நினைப்பதில்லை. பகவானிடம் பிரபத்தி பண்ணுபவன் மனநிலை அத்தகையது. செயற்கரிய
அச்செயலை தனஞ்ஜயன் செய்தான்.
அத்தகையவனுக்கு
கீதோபதேசம் நிகழ்ந்தது. அது நல்லார் அனைவருக்கும்
நலம் தரும் அருள் விருந்து.
எக்காலத்துக்கும் உதவுகிற இன்னமுது என்று
அதை இயம்பவேண்டும். பெரு வாழ்வுக்கு அதுவே
உற்றதுணை. பிறவிப்பிணியைப் போக்கவல்ல அருமருந்து அது. ஆனால் உலகில்
ஒருவர்க்காக ஆயத்தப்படுத்தும் அரிய பொருள் ஒன்று
வேறு யாருக்கோ உதவுவதாக முடிந்துவிடுவதுண்டு. ஓர் இடத்தில் மேகம்
கூடி மற்றோர் இடத்தில் போய்
அது பொழிவது போன்று பல
சம்பவங்கள் நிகழ்ந்து போவதைக் காண்கிறோம். கீதா
சாஸ்திரம் அப்படிப் போய்விடவில்லை. ஒருவன் பொருட்டு உதித்த
அந்த அருள் வெள்ளம் உலகனைத்துக்கும்
யாண்டும் அருட்பேறு ஆயிற்று. யாருக்காக அந்த ஆரமுது உதயமாயிற்றோ
அவன் அதை வாய்மடுத்து உண்டு
பெரும் பேறு பெறலானான். அதன்
விளைவை இங்குக் காண்கிறோம். இதுவரையில்
அக்ஞானத்திலிருந்த அர்ஜுனன் பெரியதொரு வாக்குமூலம் பண்ணுகிறான். அவன் பெற்றபேறு எது
என்பதை அந்த வாக்குமூலமே நிரூபிக்கிறது.
அவன் வாயினின்று வந்த ஒவ்வொரு சொல்லிலும்
பொருள் ஏராளமாகப் புதைந்து கிடக்கிறது :
அச்யுதா
என்று தன்னை ஆட்கொண்டவனை அவன்
அழைக்கிறான். அச்யுதன் என்பது பெருநிலையினின்று பிறழாதவன்
எனப் பொருள்படுகிறது. தீயில் குதித்த வீட்டில்
பூச்சி தீயின் செயலுக்கு இரையாகிறது.
அச்யுதனிடம் அடைக்கலம் புகுபவன் தானும் பிறவி என்னம்
படுகுழியில் வீழாத பெருநிலையடைவனன்றோ! அர்ஜுனன்
பெற்ற பேறு அதுவே.
மோஹ: நஷ்ட :- மோகம் அழிந்து
ஒழிந்தது, அல்லது மயக்கம் போய்விட்டது
என்பது முதல் வாக்குமூலம். மயக்கம்
வரும்பொழுது நடுப்பகலில் விண்ணில் நக்ஷத்திரம் தென்படும். வாமனன் போன்ற சிறிய
ஆள் ஈரடியாலே மூவுலகளக்கும் பெரிய ஆள்போன்று அவனுக்குத்
தென்படுவான். அத்தகைய மயக்கம் அர்ஜுனனைப்
பிடித்திருந்தது. இவ்வுலக வாழ்வு அவனுக்கு
ஒரு பெரிய தலைச்சுமையாகத் தோன்றியது.
அதைக் கீழே இறக்கிவைக்கவும் முடியவில்லை;
தூக்கிக்கொண்டு நடக்கவும் இயலவில்லை. இப்படித் தனக்குத்தானே அவன் கற்பித்துக்கொண்டிருந்த மயக்கம் ஒழிந்தது.
ஸ்ம்ருதி:
மயா லப்தா - ஞாபகம் என்னால்
அடையப் பெற்றுள்ளது என்பது இரண்டாவது வாக்குமூலம்.
மயங்கியிருப்பவனுக்கு, தான் எங்கு, எக்காரணத்தால்,
எந்நிலையில் இருக்கிறான் என்பது விளங்காது. மயக்கம்
தெளிந்த பிறகே உண்மையான ஞாபகம்
வருகிறது. தான் ஏன் மண்ணில்
கிடந்தான் என்பதைப் பிறகு சிந்திக்கிறான்; எதைப்
பிதற்றினான் என்று விசாரிக்கிறான். பின்பு
அதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தன் எதார்த்த நிலையைப்
பற்றி நினைவு கூர்கிறான். தனது
பேரியல்பைப்பற்றிய ஞாபகம் இப்பொழுது அர்ஜுனனுக்கு
வந்துள்ளது. ஒவ்வொரு ஜீவனும் மயக்கத்தால்
ஜனன மரணங்களுக்கு ஆளாயினான். சித்த சுத்தியடைந்த பிறகு
உறுதியான ஞாபகம் வருகிறது. அது
தனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இணக்கத்தைப்பற்றிய
ஞாபகமாம். ஜீவன் எத்தகைய பெருநிலைக்குரியவன்
என்பதை அந்த ஞாபகம் விளக்குகிறது.
த்வத் ப்ரஸாதாத் - உமது பிரசாதத்தால் அல்லது
உமது அருளால் என்பது மூன்றாவது
வாக்குமூலம். மயங்கிக் கிடந்த ஒருவனை மற்றொருவன்
கிருபைகூர்ந்து, நீர் தெளித்து, விசிறி
வீசிப் பிரக்ஞைக்குக் கொண்டு வருகிறான் என்று
வைத்துக் கொள்வோம். அச்செயல் சாமானியமானதன்று. அது பாராட்டுதற்குரிய பெருஞ்செயலாம்.
ஈண்டு அர்ஜுனனுக்கு மயக்கம் தெளிந்ததும், தனது
மேலாம் சொரூப ஞாபகம் வந்ததும்
தன் சுயப் பிரயத்தனத்தாலன்று. அது
சுயப்பிரயத்தனம் என்று எண்ணி அவன்
செருக்குறலாகாது. அது கண்ணனது காருண்யத்தால்
விளைந்தது. குந்தியின் மகன் அதற்குக் கடப்பாடு
உடையவன் ஆனான். முழுமனதோடு அதை
எடுத்து அவன் மொழிந்துகொள்கிறான். ஜீவாத்மா
பரபோதம் பெறும்போது அது பரம்பொருளின் பேரருள்
என்று இயம்புகிறான். தன் முயற்சியின் சிறுமையும்,
அவனருளின் பெருமையும் அப்பொழுது உள்ளபடி அவனுக்கு விளங்குகிறது.
ஸ்தித:
அஸ்மி- உறுதியாய் இருக்கிறேன் என்பது இதன் பொருள்.
இது நான்காவது வாக்குமூலம். புயல் காற்றும் பெருமழையும்
சேர்ந்து வந்தமையுங்கால் மரம், செடி, கொடியெல்லாம்
அசைகின்றன, ஒடிகின்றன வேருடன் பெயர்த்து எடுக்கப்படுகின்றன.
அந்நிலைமையில் அவைகளுள் உறுதி பெற்றிருப்பது ஒன்றுமில்லை.
பூமியில் உள்ள மண்ணும் பறித்தெடுக்கப்படுகிறது.
ஆனால் மலையொன்றோ இதற்கெல்லாம் அசைவதில்லை. அது உறுதியாக நிற்கிறது.
ஞானம் அங்ஙனம் உறுதி பெற
வேண்டும். அத்தகைய ஞானம் அடையப்பெற்றவன்
ஸ்திதப் பிரக்ஞன் எனப்படுகிறான். அர்ஜுனன் இப்பொழுது ஸ்திதப் பிரக்ஞன் ஆய்
உள்ளான். தன் சொரூபத்தைப்பற்றி இப்பொழுது
அவன் கொண்டுள்ள பேரறிவை யாரும் கலைத்துவிடமுடியாது.
பரஞானம் அடையப்பெற்றபின் அது மறைந்துவிட்டுப் போவதில்லை.
கத ஸந்தேஹ : - சந்தேகங்கள் போய்விட்டன. இது ஐந்தாவது வாக்குமூலம்.
ஆத்ம சொரூபத்தை அனுபூதி வாயிலாக சாக்ஷõத்கரித்தவனுக்கு அதைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. இன்னும்
உயிரோடிருக்கும் ஒருவனுக்குத் தன் உயிர் வாழ்க்கையைப்
பற்றி எப்படிச் சந்தேகம் உண்டாவதில்லையோ அப்படி அனுபூதி பெற்றவனுக்கு
ஆத்ம சொரூபத்தைப்பற்றிச் சந்தேகம் வருவதில்லை.
தவ வசனம் கரிஷ்யே என்பது
உமது சொற்படி செய்வேன் என்று
பொருள்படுகிறது. இது கடைசி வாக்குமூலம்.
அவன் எதைச் செய்ய ஆரம்பத்தில்
மறுத்தானோ, அதைச் செய்ய இப்பொழுது
துணிந்தான். செய்வது இன்னதென்று இப்பொழுது
விளங்கிற்று. மெய்ஞ்ஞானம் பெற்றதே அதற்குக் காரணமாயிற்று.
சாஸ்திரம் புகட்டுவதும், குரு கிருபை புரிவதும்,
சாதகன் அனுபவ பூர்வமாகப் பெறுவதும்
முடிந்த நிலையில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
தவளைக்குஞ்சினுடைய
வால் விழுந்ததும் அது தண்ணீரிலும் தரையிலும்
வாழக்கூடும். அக்ஞானமாகிய வால் மனிதனிடமிருந்து விழுந்துவிட்டால்
அவனுக்க முக்தியுண்டாகிறது. அப்போது அவன் கடவுளிடத்தும்,
அதுபோலவே உலகத்தினிடத்தும் நன்கு வாழக்கூடியவனாகிறான்.
ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதம் இத்துடன் முடிவடைகிறது. இனி, இது மற்ற
சம்பவங்களுடன் தொடர்வு பெறுவது மேலும்
சில சுலோகங்களில் விளக்கப்படுகிறது :
ஸஞ்ஜய உவாச
74. இத்யஹம்
வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:
ஸம்வாதமிமமஸ்ரௌஷமத்புதம்
ரோமஹர்ஷணம்
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான்,
இதி அஹம்-இப்படி நான்,
வாஸுதேவஸ்ய மஹாத்மந: பார்தஸ்ய ச-வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய
பார்த்தனுக்கும், இமம் அத்புதம் ரோமஹர்ஷணம்-இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும்,
ஸம்வாதம் அஸ்ரௌஷம்-உரையாடலைக் கேட்டேன்.
பொருள்
: சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும்
மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த
சம்பாஷணையைக் கேட்டேன்.
உள்ளத்தில்
பேருணர்ச்சி உண்டானால் மயிர்க்கூச்செடுக்கிறது. நல்லது கெட்டது இரண்டும்
உடலில் மயிர் சிலிர்க்கச் செய்யும்.
பொதுவாக நல்ல விஷயந்தான் நல்லவர்களுக்கு
இப்படிப் புளகாங்கிதம் உண்டாகும்படி செய்யும். பேசுபவனாகிய கிருஷ்ணன், பேசப்படுபவனாகிய அர்ஜுனன், பேசும் விஷயமாகிய கீதா
தத்துவம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்து
ஸஞ்ஜயன்பால் புளகாங்கிதம் உண்டாக்கியதில் வியப்பொன்றுமில்லை. திருதராஷ்டிரனுக்கு அது எவ்வளவு தூரம்
பயன்பட்டது என்பதற்குச் சரித்திரமே சான்றாயிருக்கிறது.
அர்ஜுனனை
மகாத்மாவென்று மொழிவதன் மூலம் அவன் பக்கத்தைச்
சேர்ந்தவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுபவர்கள் என்பது
குறிப்பிடப்படுகிறது.
தொலைவில்
போர்க்களத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பாஷணையைக் கேட்க
ஸஞ்ஜயனுக்கு எப்படி முடிந்தது என்ற
கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது
:
75. வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம்
பரம்
யோகம் யோகேஸ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷõத்கதயத: ஸ்வயம்
யோகேஸ்வராத்
க்ருஷ்ணாத்-யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து,
பரம் குஹ்யம்-பரம ரகசியமான,
ஏதத் யோகம் ஸ்வயம்-இந்த
யோகத்தை தான், ஸாக்ஷõத்
கதயத:-நேராகவே சொல்லும்போது, அஹம்
வ்யாஸப்ரஸாதாத்-நான் வியாசனருளால், ஸ்ருதவாந்-கேட்டேன்.
பொருள்
: யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம
ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது
நான் அதை வியாசனருளால் கேட்டேன்.
ஸஞ்ஜயனுக்கு
ஞானக் கண்ணை வழங்கியவர் வியாசர்.
ஆகையால் கிருஷ்ணனுடைய திவ்விய தர்சனத்தைப் பெறவும்
விச்வரூப தர்சனத்தைப் பெறவும் அவர் பகர்ந்ததை
யெல்லாம் அப்படியே கேட்கவும் அவனுக்கு இயன்றது. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும்
பயன் படுவதுபோன்று தான் பெற்ற பேறு
யாது, அது யாருடைய அனுக்கிரகத்தால்
ஆயிற்று என்பதை சஞ்ஜயன் தெரிவிக்கிறான்.
அது பெரும்பேறு என்பதற்கு அத்தாட்சி மேலும் வருகிறது :
76. ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்
கேஸவார்ஜுநயோ:
புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:
ராஜந்-அரசனே, கேஸவார்ஜுநயோ:-கேசவ
அர்ஜுனரின், அத்புதம் புண்யம் ச இமம்
ஸம்வாதம்-வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை,
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து, முஹுர்முஹு:-மீண்டும் மீண்டும், ஹ்ருஷ்யாமி-மகிழ்கிறேன்.
பொருள்
: அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை
நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும்
களிப்பெய்துகிறேன்.
ஸஞ்ஜயன்
அடைந்த மகிழ்வு சாஸ்திரத்தின் மகிமையைக்
குறிக்கிறது. நலத்தை அடையப்பெற்ற நல்லார்
அந்த நலத்தினின்று உலப்பிலா ஆனந்தத்தை அடைவது இயல்பு.
77. தச்ச
ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ
மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச
புந: புந:
ராஜந்-அரசனே! ஹரே: அதி
அத்புதம்-ஹரியின் மிகவும் அற்புதமான,
தத் ரூபம் ச-அந்த
ரூபத்தை, ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து, மே மஹாந் விஸ்மய:-எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது, ச
புந: புந: ஹ்ருஷ்யாமி-மீட்டு
மீட்டும் களிப்படைகிறேன்.
பொருள்
: அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான
அந்த ரூபத்தை நினைத்து நினைத்து
எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு
மீட்டும் களிப்படைகிறேன்.
பல யோகிகளுக்கும் பக்தர்களுக்கும் காண்பதற்கரிய விசுவரூப தரிசனத்தைத் தற்செயலாய் ஸஞ்ஜயன் கண்டான். சூழ்நிலையால்
சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் இது மிகப்பெரியது. விசுவரூப
தரிசனத்தின் ஒரு சிறு பகுதியைக்
காணாத ஜீவன் ஜகத்தில் இல்லை.
வியப்புக்குரியதும் மனதை மேல் நிலைக்குக்
கொண்டு போகக் கூடியதும் எதுவானாலும்
அது இறைவனுடைய மகிமையேயாம். ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தகைய
காட்சிகள் கிடைக்கின்றன. பெரும்பாலார்க்கு அவைகளைப் பயன்படுத்தும் வழி தெரிகிறதில்லை. திரும்பத்
திரும்ப அக்காட்சிகளைப் பற்றி நினைப்பது ஒருவித
தியானமாகும். மனது அதனால் நன்கு
பண்படுகிறது. தனது மனதை உயிர்நிலைக்குக்
கொண்டுபோன காட்சி எதுவென்று சாதகன்
ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும். பிறகு
அதை பக்தியுடன் ஞாபகத்துக்குக் கொண்டு வரவேண்டும்.
78. யத்ர
யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம
யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ண:-எங்கு யோகக் கடவுள்
கண்ணனும், யத்ர தநுர்தர: பார்த:-எங்கு வில்லினை யேந்திய
விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ, தத்ர ஸ்ரீ: விஜய:
பூதி:-அங்கு திருவும் ஆக்கமும்
வெற்றியும் ஐஸ்வர்யமும், த்ருவா நீதி-நிலை
தவறாத நீதியும் (இருக்கும்),
மம மதி:-என் உறுதியான
கருத்து (இது).
பொருள்
: கண்ணன் யோகக் கடவுள், எங்குளன்,
வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்?
அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும்
நிற்கும்; இஃதென் மதம்.
இது ஸஞ்ஜயனுடைய சொந்த அபிப்பிராயம் என்றாலும்
சிறந்த கீதை தத்துவங்களில் இதுவும்
ஒன்றாகும். கண்ணன் யோகேசுவரனாதலால் புருஷார்த்தங்களெல்லாம்
அவன் மூலம் நிறைவேறுகின்றன. தர்மம்,
அதர்மம், காமம், மோக்ஷம் ஆகிய
நான்கில் ஜீவாத்மாவுக்கு எது வாய்க்கப்பெற்றாலும் அது
யோகமாகிறது. அவைகளுள் சிறப்பாயுள்ள மோக்ஷத்தைக் கிருபைகூர்ந்து வழங்க வல்லவன் கிருஷ்ணன்.
முதல் அத்தியாயத்தில் தனுசைத் தூர எறிந்து
விட்டவனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான். முயற்சியற்ற
அல்லது முயற்சி குன்றிய வாழ்க்கையை
அது எடுத்துக் காட்டுவதாகும். இப்பொழுது காண்டீவம் என்னும் வில்லை ஏந்திய
அர்ஜுனன் காட்சி கொடுக்கிறான். கிருஷ்ணனுடைய
யோக வல்லமையும் பார்த்தனுடைய பராக்கிரமமும் சேர்ந்து ஆகாத காரியத்தை ஆக்குவிக்கும்.
இதைக் கேட்ட பிறகாவது திருதராஷ்டிரனுக்கு
மனது மாறியிருக்கவேண்டும் ! அதாவது தன் பிள்ளைகளுக்கு
வெற்றியுண்டாகாது; உயிர் நஷ்டமும், பொருள்
நஷ்டமும் ஏற்படுவது உறுதி. அதைத் தடுக்க
ஒருவிதத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருக்கவேண்டும்.
ஆனால் அவிவேகமே வடிவெடுத்திருப்பவனுக்கு அது ஒன்றும் விளங்காது.
கடவுளே அருகிலிருந்து கொண்டு செய்கிற செயலும்
அவனுக்குப் புலப்படாது.
தெய்வத்தின்
சகாயமும் மனிதனுடைய நேர்மையான முயற்சியும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும்.
மனிதனுக்கு ஆகவேண்டியதை யெல்லாம் தெய்வம் செய்துவைக்கும் என்று
நினைத்துக் கொண்டு தன் முயற்சியை
நிறுத்திவிடலாகாது. பிறகு துர்யோதனன் கூட்டம்
செய்தது போன்று ஈசுவரனது திட்டத்தைப்
புறக்கணித்துவிட்டுத் தனது சொந்த முயற்சியால்
எல்லாம் ஆய்விடும் என்று கருதி வினையாற்றலாகாது.
யாண்டும் கடவுளைச் சார்ந்திருந்து தன் கடமையைக் கடவுள்
பொருட்டு முழுமனதுடன் செய்யவேண்டும்.
கார் இருளில் கண் தெரியாது.
பேர் ஒளியிலும் கண் தெரியாது. கண்தெரியாமையை
முன்னிட்டுக் கார் இருளையும் பேர்
ஒளியையும் ஒன்றாகக் கருதலாகாது. தமோ குணத்தில் புதைந்து
கிடப்பவன் வினையாற்ற மாட்டான். சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் வினையாற்றுவதில்லை. அதை முன்னிட்டு அவர்கள்
இருவரும் ஒப்பாகமாட்டார்கள். தேகம் எடுத்திருப்பவன் தேகம்
இருக்கும் வரையில் நல்வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வினையை ஈசுவர ஆராதனையாகச் செய்ய
வேண்டும். அதனால் ஞான முதிர்ச்சி
தானே வந்தமைகிறது. இகம் பரம் ஆகிய
இரண்டிலும் வாழ்க்கையின் குறிக்கோள் இனிது நிறைவேறுகிறது. பாரமார்த்திக
வாழ்வின் பெயரால் சோம்பித் திரிபவனும்,
சமுதாயத்துக்கு வெறும் சுமையாக வாழ்ந்திருப்பவனும்
கீதா தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகார். தூக்கி வினையாற்றுபவனே
வேதாந்தம் அறிந்தவனாகிறான்.
ஸ்ரீ என்பது இங்கு ராஜ்யலக்ஷ்மி.
எடுத்துக்கொண்ட காரியங்களெல்லாம் ஈசுவர சங்கற்பத்துக்கு உட்பட்டவைகளாக
இருக்கவேண்டும். அப்பொழுது விஜயம் அல்லது வெற்றி
நிச்சயமாக வந்தமையும். அதற்குமேல் நல்ல முயற்சியுடையவனுக்குச் செல்வமும் சீரும்
சிறப்பும் வளரும். வெற்றியையும் ஆக்கத்தையும்
முன்னிட்டுக் கடவுளை நம்பியிருப்பவன் முறைதவறி
நடந்து கொள்ளமாட்டான். நேர்மையையும், நிலைத்த நீதியையும், தெளிந்த
ராஜ தர்மத்தையும் அவனிடத்துக் காணலாம்.
ஈசுவர கிருபையும் ஜீவப்பிரயத்தனமும் ஒன்று சேருமானால் இகபரமிரண்டுக்கும்
அவை நல்ல சாதனமாகின்றன. அவைகளின்
சேர்க்கையே சிறந்த யோகமாகிறது. மற்ற
யோகங்களெல்லாம் அதினின்று உருவெடுக்கின்றன. ஈசுவர கிருபை சந்ததமும்
நம் பொருட்டுக் காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாம்
நேர்மையாக முயற்சி செய்வது ஒன்றே
பாக்கி. இப்பொழுதே முயலுவது முறை.
சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் வீழ்கிறது;
ஆனால் ஜலம், கண்ணாடி, மெருகிட்ட
உலோகம் இவைபோன்ற வஸ்துக்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் தெய்விக ஒளியும். அது
எல்லாரிடத்தும் சமமாயும் பாரபக்ஷமின்றியும் வருகின்றது. என்றாலும் ந்லலாருடைய தூய மனமும், ஸாதுக்களுடைய
இருதயமுமே அவ்வொளியை நன்றாய்ப் பிரதிபலிக்கச் செய்கின்றன.
பகவத் பக்திகொண்ட பரிசுத்த பக்தர்களுக்காகவே பகவான் உலகத்தில் அவதாரம்
செய்கின்றார். அவதார புருஷரோடு வருபவர்கள்
நித்தியமுக்தர்களாவார்கள்;
அல்லது கடைசி ஜன்மம் எடுத்தவர்களாவார்கள்.
இதி ஸ்ரீமஹாபாரதே சதஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம்வையா
ஸிக்யாம்
பீஷ்மபர்வணி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன
ஸம்வாதே
மோக்ஷஸந்யாஸயோகோ நாம
அஷ்டாதசோऽத்யாய:
வியாசர்
இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய
மஹாபாரதத்தில், பீஷ்மபருவத்தில், பிரம்ம வித்தையைப் புகட்டுவதும்,
யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக
வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் மோக்ஷ
ஸந்யாஸ யோகம் என்ற பதினெட்டாம்
அத்தியாயம்.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.