பன்னிரண்டாம்
அத்தியாயம்
பகவத்கீதை
| பக்தி யோகம்
ஞான யோக பக்தி யோகங்களுள்,
ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும்,
அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும்,
பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில்
மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப்
பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்கார
மற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய்
எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க
வேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து
பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது.
இவ்விதமான பக்தர்களிடத்தில் தான் கடவுளுக்கு அதிக
பிரீதி. சகுண நிர்க்குண பிரம்ம
உபாஸனைகள் 1-5 -சகுண பிரம்ம உபாஸனை
முறைகள் 6-12 -பக்தனது பேரியல்புகள் 13-20.
அர்ஜுந
உவாச
1. ஏவம்
ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:
அர்ஜுந
உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், யே பக்தா: ஏவம்
ஸததயுக்தா:-எந்த பக்தர்கள் இவ்வாறு
யோகத்தமர்ந்து, த்வாம் பர்யுபாஸதே-நின்னை
வழிபடுகிறார்களோ, யே ச அக்ஷரம்
அவ்யக்தம் அபி-மேலும் எவர்கள்
அழிவற்ற வஸ்துவை வழிபடுகிறார்களோ,
தேஷாம்
யோகவித்தமா: கே-இவ்விரு திறத்தாரில்
யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
பொருள்
: அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து
நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்ற “அவ்யக்த”
வஸ்துவை வழிபடுவோரா இவ்விரு திறத்தாரில் யோக
ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
முன் அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் சொல்லியபடி
சகுண பிரம்ம உபாசனை செய்வது
சிறந்ததா அல்லது நிருபாதி, நிர்விஷய,
நிர்க்குண பிரம்ம உபாசனை செய்வது
சிறந்ததா என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
2. மய்யாவேஸ்ய
மநோ யே மாம் நித்யயுக்தா
உபாஸதே
ஸ்ரத்தயா
பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
மயி மந: ஆவேஸ்ய-என்னிடத்தே
மனத்தைச் செலுத்தி, நித்யயுக்தா:-நித்திய யோகிகளாய், யே-எந்த பக்தர்கள், பரயா
ஸ்ரத்தயா உபேதா:-சிறந்த சிரத்தையுடன்
கூடியவர்களாக, மாம் உபாஸதே-என்னை
வழிபடுகிறார்களோ, தே யுக்ததமா-அவர்கள்
யோகிகளிலேயே மேலானவர் என்று, மே மதா:-என்னால் மதிக்கப் படுபவர்.
பொருள்
: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே
மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த
நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர்,
அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.
பகவான்
விசுவரூபத்தை யுடையவர்; பரமேசுவரன். அவர் சகுண பிரம்மம்.
உலகுக்கு அந்தர்யாமியாயிருந்து அதை ஆளுகிறார். யோகிகளுக்கெல்லாம்
அவரே மேலான ஈசுவரன். சர்வக்ஞன்
என்று அவரைத்தான் சொல்ல வேண்டும். முழுமனதையும்
ஒழுங்குப்படுத்தி அவர்மீது செலுத்துகிறவர்கள் பக்தர்கள். அவர்களுக்கு விருப்பு, வெருப்பு, மனக்கிலேசம் முதலியன கிடையா. இரவும்
பகலும் இறைவனைப் பற்றிய சிந்தனை யொன்றே
அவர்களின் உள்ளத்தில் குடிகொள்கிறது. அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பதும்
இறைவன் பொருட்டேயாம். ஆதலால் அவர்கள் சிறந்த
யோகிகள் ஆகிறார்கள்.
கடவுளை
அரூபியெனத் தியானிப்பது முற்றிலும் சரியானதே. ஆனால் அதுதான் உண்மை,
மற்றக் கொள்கைகளெல்லாம் பொய் என்று எண்ணிவிடாதே.
அவன் ரூபி எனத் தியானிப்பதும்
சரியானதே. ஆனால் அவனை நீ
காணும் வரையில் உனது பிரத்தியேகமான
கொள்கையைக் கைவிடாதே. அப்பால் எல்லாம் தெளிவாகும்.
மற்று,
நிர்க்குண நிராகார பிரம்மத்தை உபாசிப்பவர்கள்
சிறந்த யோகிகள் ஆகமாட்டார்களா? அதற்கு
விடை வருகிறது :
3. யே த்வக்ஷரமநிர்தேஸ்யமவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகமசிந்த்யம்
ச கூடஸ்தமசலம் த்ருவம்
4. ஸந்நியம்யேந்த்ரியக்ராமம்
ஸர்வத்ர ஸமபுத்தய:
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:
து யே அக்ஷரம் அநிர்தேஸ்யம்
அவ்யக்தம்-எவர், அழிவற்றதும், குறிப்பற்றதும்,
அவ்யக்தமும் (தெளிவற்றதும்), ஸர்வத்ரகம் அசிந்த்யம்-எங்கும் நிறைந்ததும், மனம்-புத்திகளுக்கு அப்பாற்பட்டதும், கூடஸ்தம் அசலம் த்ருவம்-நிலையற்றதும்,
அசைவற்றதும் , உறுதி கொண்டதுமாகிய பொருளை,
பர்யுபாஸதே-வழிபடுகின்றனரோ.
இந்த்ரியக்ராமம்
ஸந்நியம்ய-புலன்களின் கூட்டத்தை நன்கு அடக்கி, ஸர்வத்ர
ஸமபுத்த, :-எங்கும் சமபுத்தியுடையோராய், ஸர்வபூதஹிதே
ரதா:-எல்லா உயிர்களுக்கும் நன்மை
விரும்புவோராகிய, தே மாம் ஏவ
ப்ராப்நுவந்தி-அவர்களும் என்னையே அடைகிறார்கள்.
பொருள்
: இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும்,
நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ
பொருள்
: இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும்
சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை
விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்
நிர்க்குண
பிரம்மம் எத்தகையது என்பது விளக்கப்படுகிறது. அது
அநிர்தேச்யம்-உலகப்பொருள் எதனோடும் சீர்தூக்க இடந்தருகிறதில்லை யாதலால் அது எத்தகையது
என்ற சொல்லால் விளக்க முடியாது. உலகமோ
தோன்றவும் மறையவும் செய்கிறது. தோன்றியபொழுது வியக்தமாகவும் மறைந்தபொழுது அவ்யக்தமாகவும் உலகம் இருக்கிறது. ஆனால்
பரபிரம்மத்தின் கண் இத்தகைய விகாரம்
ஒன்றும் கிடையாது. அதீதத்தில் அது இருந்தபடி இருக்கிறது.
ஆதலால் அது அவ்யக்தம். கடலின்
கீழ் உள்ள பனிக்கட்டி தோன்றாது
இருந்தபடி இருப்பது போன்றதா பிரம்மம் என்ற
கேள்வி எழுகிறது. அப்படியல்ல, இது ஸர்வத்ரகம்-அங்கு
இங்கு என்று சொல்ல இடந்தராது
நீக்கமற எங்கும் நிறைபொருள். இடமே
அதனுள் ஒடுங்கியது எனலாம். சொப்பனத்தில் பார்த்த
ஒரு பெரிய இடம் மனதில்
ஒடுங்குகிறது. அதே மனதானது நன்மை
தீமை, இன்ப துன்பம் ஆகியவைகளை
எண்ணவும் உணரவும் செய்கிறது. ஆனால்
அம்மனது பிரம்மத்தை உணரவல்லதன்று. பிரம்மம் அசிந்த்யம்-சிந்தனைக் கெட்டாதது. கூட என்ற சொல்
மாறுபடும் தன்மையுடையது என்று பொருள்படுகிறது. பிரபஞ்சம்
மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. மாறுபடும்
பிரபஞ்சத்துக்கு பிரம்மம் இருப்பிடமாகிறது. நிலையற்றதை இது நிலைத்திருந்து தாங்குவதால்
இதற்கு கூடஸ்தன் என்று பெயர். ஓயாது
மாறுபடுகிற மேகத்தைத் தூக்கிக்கொண்டு காற்று நகர்ந்தோடுகிறது. சலிப்பது
காற்றின் இயல்பு. பிரம்மத்திலோ சலனம்
இல்லை. அது அசலம்-நகராதது.
இனி, ஆகாசம் அசைவதில்லை. இருந்தபடி
அது தோன்றுகிறது. பிரளயத்தில் இருந்தபடி அது அழிகிறது. பிரம்மம்
அத்தகையதோ? அல்ல, அது த்ருவம்-நிலைபேறு உடையது. சுத்த சைதன்யமாகிய
அது கால தேச வர்த்தமானத்தால்
அடிபடாதிருப்பதால் அது அக்ஷரம், அதாவது
அழியாதது.
இனி, நிர்க்குண பிரம்ம உபாசனைக்குத் தகுதியுடையவர்
யார் எனின், அவர்களிடத்து சமபுத்தி
யிருக்க வேண்டும். இன்பம் தருபவைகள், துன்பம்
தருபவைகள் ஆகிய இரண்டையும் ஒரே
பான்மையுடன் கருதுதல் சமபுத்தியாகும். இந்திரியக் கூட்டங்களை யெல்லாம் யார் நன்கு கட்டியாளுகிறார்களோ
அவர்களுக்கே மனதின் நடுநிலை வந்தமைகிறது.
மனதின் நடுநிலை என்பது உலகுக்குப்
பயன்படாது பிணம்போன்று கிடப்பதல்ல. எல்லா உயிர்களையும் பிரம்ம
சொரூபமாகக் கண்டு அவர்களுக்குச் சேவை
செய்ய வேண்டும். அவர்களின் நன்மையில் நாட்டம் வைத்திருப்பதற்குச் சேவை
செய்வதே அறிகுறியாகும். ஒரு சிலர் பிரம்ம
சொரூபத்தில் லயித்துக் கர்மமற்றிருப்பார்கள். அங்ஙனம் ஜீவர்களை யெல்லாம்
பிரம்ம சொரூபமாகக் காண்பதும் அந்த ஜீவர்களுக்கு பரம
நன்மையை விளைவிக்கிறது. தைலதாரை போன்று இடையறாது
மனது பிரம்ம சொரூபத்தில் போவது
உபாஸனையாகும்.
மணியை அடிக்கும்போது, அடுத்தடுத்து வரும் அதன் ஒவ்வொரு
ஓசையும் தனித்தனி உருவத்தையுடையதுபோலத் தோன்றும்; ஆனால் அடிப்பதை நிறுத்தினால்
ஓசை சிறிது நேரம் வரையில்
கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தொழியும்.
தெளிவற்ற சப்தமோ உருவமில்லாதது போலத்
தோன்றுகிறது. மணியின் ஓசையைப் போலக்
கடவுள் உருவமுள்ளவனாயும் உருவமில்லாதவனாயுமிருக்கிறான்.
இரண்டு
உபாஸனையும் ஒன்று எனில் எதை
வேண்டுமானாலும் ஒருவன் உபாஸிக்கலாமா? உபாஸிக்கலாகாது.
ஏனென்றால் : (3-4)
5. க்லேஸோऽதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம்
அவ்யக்தா
ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே
அவ்யக்த
ஆஸக்த சேதஸாம்-உருவற்ற (அவ்யக்த)
பிரம்மத்தில் மனதை ஏற்படுத்தும், தேஷாம்
க்லேஸ: அதிகதர:-அந்த மனிதர்களுக்கு
சாதனையில் உழைப்பு அதிகம், ஹி
தேஹவத்பி-ஏனெனில் உடலில் பற்றுள்ளவர்களால்,
அவ்யக்தா கதி-உருவற்ற பிரம்ம
விஷயமான மார்க்கம், து:கம் அவாப்யதே-மிகுந்த சிரமத்துடன் அடையப்
படுகிறது.
பொருள்
: ஆனால், அவ்யக்தத்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம்,
உடம்பெடுத்தோர் அவ்யக்த நெறியெய்துதல் மிகவும்
கஷ்டம்.
இருதர உபாஸகர்களும் அடையும் குறி ஒன்றே.
ஆனால் தேகாபிமானம் உடைய ஒருவனுக்கு நிர்க்குண
பிரம்ம உபாஸனையைவிட சகுண பிரம்ம உபாஸனை
எளிது. நிர்க்குண பிரம்ம உபாஸகன் துவக்கத்திலேயே
உடல் பற்றை அறவே நீக்க
வேண்டும். பிஞ்சாகிக் காயாகிக் கனியாகின்றவிடத்து மேலோடு பழத்தினின்று தானாகப்
பிரிந்து போகிறது. அங்ஙனம் ஞான முதிர்ச்சி
யடைபவனுக்கு தேகாபிமானம் போய்ஒழிகிறது. தேகப்பற்றுடையவனுக்கு எளிதாயிருப்பது சகுண பிரம்ம உபாஸனை.
அதில் துவக்கி மேல் நோக்கிப்
போகின்றவனுக்கு சாதனத்தில் அதிக சிரமம் ஏற்படுவதில்லை.
ஞானயோகி
நானே பிரம்மம் என்கிறான். ஆனால் சரீரத்தை ஆத்மன்
என்று கருதும் வரையில் அவ்வித
பாவனை கெடுதியை உண்டுபண்ணும். அவனை அத்யாத்மிக வாழ்க்கையில்
முன்னேறச் செய்யாமல் நாசப்படுத்திவிடும். அவன் மற்றவர்களை ஏமாற்றுகிறதோடு
தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறான்.
இனி, ஈசுவர உபாஸனை எப்படிச்
செய்யவேண்டும்? விடை வருகிறது :
6. யே து ஸர்வாணி கர்மாணி
மயி ஸந்ந்யஸ்ய மத்பரா:
அநந்யேநைவ
யோகேந மாம் த்யாயந்த உபாஸதே
7. தேஷாமஹம்
ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்
பவாமி நசிராத்பார்த மய்யாவேஸிதசேதஸாம்
து மத்பரா:-ஆனால் என்னையே
கதியாகக் கொண்ட, யே ஸர்வாணி
கர்மாணி-எந்த பக்தர்கள் எல்லா
கர்மங்களையும், மயி ஸந்ந்யஸ்ய-என்னிடம்
சமர்ப்பணம் செய்து, மாம் ஏவ
- என்னையே, அநந்யேந யோகேந-பிறழாத
யோகத்தால், த்யாயந்த உபாஸதே-இடையறாது நினைத்து
வழிபடுவார்களோ,
பார்த-பார்த்தா! மயி ஆவேஸித சேதஸாம்-என்பால் அறிவைப் புகுத்திய,
தேஷாம் நசிராத்-அவர்களை சீக்கிரமாகவே,
அஹம் ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்-நான்
மரணவடிவான சம்சாரக் கடலிலிருந்து, ஸமுத்தர்தா பவாமி-கரையேற்றுபவனாக ஆகிறேன்.
பொருள்
: எல்லாத்
தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு,
பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர்
யாவர்?
பொருள்
: என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை
நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்
விசுவ ரூபத்தையுடைய ஈசுவரனைத் தவிர வேறு ஒன்றையும்
பற்றுக்கோடாகக் கொள்ளாது அவனையே சார்ந்து யார்
அவனுக்கென்றே பணி செய்யும் பான்மை
யுடையவர்களாயிருக்கிறார்களோ
அவர்கள் பிறப்பு இறப்பு மயமாயுள்ள
சம்சாரப் பெருங் கடலினின்று விரைவில்
கரையேற்றப்படுகிறார்கள்.
ஈசுவரானுபவத்துக்கும்
அடையாளங்கள் உள்ளன. பக்தி எவனிடம்
பொங்கித் ததும்புகின்றதோ அவனுக்கு வெகு சீக்கிரத்தில் ஈசுவர
தரிசனம் கிடைக்குமென்று தெரிந்துகொள்.
அதற்காக
ஜீவன் செய்யவேண்டியதென்ன? விடை வருகிறது : (6-7)
8. மய்யேவ
மந ஆதத்ஸ்வ மயி புத்திம்
நிவேஸய
நிவஸிஷ்யஸி
மய்யேவ அத ஊர்த்வம் ந
ஸம்ஸய:
மயி ஏவ மந: ஆதத்ஸ்வ-என்னிடமே மனதை நிலைநிறுத்து, மயி
புத்திம் நிவேஸய -என்னிடமே புத்தியை
ஈடுபடுத்து, அத: ஊர்த்வம்-அதற்கு
மேல், மய்யேவ நிவஸிஷ்யஸி-என்னிடமே
வாழ்வாய், ந ஸம்ஸய:-ஐயமில்லை.
பொருள்
: மனதை என்பால் நிறுத்து; மதியை
என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே
உறைவாய்; ஐயமில்லை.
உணர்ச்சி
மயமாயிருப்பது மனது. தீர்மானிக்கும் தன்மையது
புத்தி. இவ்விரண்டும் அந்தக் கரணத்தின் பிரிவுகள்.
ஒருவனது உடல் எங்கே இருக்கிறது
என்பதிலிருந்து அவனது வாசஸ்தானத்தை அறிய
வொண்ணாது. உள்ளம் எங்கிருக்கிறதோ மனிதன்
அக்கணமே அங்கிருக்கிறான். இப் பூவுலகிலேயே சிலர்
நரக வாசம் செய்கின்றனர்; வேறு
சிலர் விண்ணுலகு நண்ணியவர் போன்று இன்பமடைகின்றனர். இங்கு
இருந்தபடியே சித்தத்தைச் சிவத்தின்பால் வைத்து அவனது சந்நிதி
சேருவார் உளர். அகம் எப்படியோ
புறம் அப்படி. உள்ளத்தை இறைவனிடம்
வைத்தது முதற்கொண்டு ஒருவன் இறைவனிடத்தே வசிக்கிறான்
என்பதற்கு அவனது மனநிலையே சான்று.
ஆதலால் அதைப் பற்றி ஐயமில்லை
என்கிறார் பகவான்.
உலகத்தில்
மனிதன் பிறக்கும்போது, வித்தியாகுணம் அவித்யா குணம் என்ற
இரண்டு குணங்களுடன் பிறக்கிறான். வித்தியா குணம் முக்தியை அடையச்
செய்யும். அவித்யா குணமோ மனிதனை
உலகப் பற்றுக்குள்ளாக்கும். பிறக்கும்போது இவ்விரு குணங்களும் தராசின்
தட்டுகளைப் போலச் சரிசமமாக இருக்கும்.
சீக்கிரமத்தில் உலக இன்பங்கள் ஒரு
தட்டிலும் ஆத்ம விஷயங்கள் மற்றொரு
தட்டிலும் ஏற்றப்படுகின்றன. மனம் உலக சுகங்களை
விரும்புமானால் அவை வைக்கப்பட்டிருக்கும் தட்டு கனத்துக்
கீழே செல்லும். அவ்வாறன்றி ஆத்ம விஷயத்தை மனம்
பற்றுமானால் அவ்வாத்ம விஷயங்களடங்கிய தட்டு ஈசுவரனை நோக்கித்
தாழும்.
உள்ளத்தை
உறுதியாக இறைவன்பால் வைக்க இயலாதவர் என்ன
செய்வது? விடை வருகிறது:
9. அத சித்தம் ஸமாதாதும் ந
ஸக்நோஷி மயி ஸ்திரம்
அப்யாஸயோகேந
ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய
அத சித்தம்-ஒரு வேளை
சித்தத்தை, மயி ஸமாதாதும்-என்னிடம்
நிறுத்தி வைப்பதற்கு, ந ஸக்நோஷி-முடியாவிட்டால்,
தத: அப்யாஸ யோகேந-அப்போது
(இறைவன் திருநாமம் ஓதுதல் போன்ற) பயிற்சியினால்,
மாம் ஆப்தும் இச்ச தநஞ்ஜய-என்னை அடைய விரும்பு
அர்ஜுனா!
பொருள்
: என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த
நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய
விரும்பு.
மனது உறுதியாக இறைவன்பால் நிலைத்து நின்றுவிடுமானால் அது முதிர்ந்த பக்தியாகிறது.
அப்படியல்லாது அது விஷயாதிகளில் சலித்து
ஓடும் தன்மையதானால் பழக்கத்தால் அதை ஒழுங்குப்படுத்தவேண்டும். விஷயங்களிலிருந்து அதை
மீட்டெடுத்து பகவானிடம் வைப்பதற்கு அப்பியாச யோகம் என்று பெயர்.
நல்லியல்பு, கெட்ட இயல்பு இரண்டுக்கும்
அப்பியாசமே காரணமாகிறது. பழக்கத்தால் ஆகாததை ஆகும்படி செய்யலாம்.
ஒரு மனிதன் ஒரு நாயை
வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான்;
விளையாடுவான். அதைக் கைகளில் தூக்கிக்கொண்டு
போவான்; அதை முத்தமிடுவான். இந்த
முட்டாள்தனத்தைக் கவனித்த ஓர் அறிஞர்
நாயுடன் அப்படிப் பழகலாகாது என்றார். நாயின் சொந்தக்காரன் அதைக்
கேட்டதும் நாயைத் தூர எறிந்துவிட்டான்.
இனி, அதனோடு கொஞ்சிக் குலாவுவதில்லை
என்றும் தீர்மானித்தான். தன் எஜமானனது மாறிய
மனதை நாய் அறியவில்லை. அது
அடிக்கடி அவனிடம் ஓடிவந்து குலாவத்
தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட
பிறகுதான் அது தன் எஜமானனைத்
தொந்தரவு செய்வதை விட்டது. உனது
நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனதில் இதுவரையில்
வைத்துப் போற்றி வந்த ஆசை
என்னும் நாயை நீ விடவேண்டுமென்றாலும்
அது உன்னை எளிதில் விடாது;
இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல்
கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம்
அதை நன்றாய் அடி. காலக்கிரமத்தில்
அதனுடைய தொந்தரைகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே
அகன்றொழியும்.
மனது அப்பியாசம் என்ற கட்டுக்கு அடங்குவது
இல்லவே இல்லை. அப்பொழுது என்
செய்வது? விடை வருகிறது :
10. அப்யாஸேऽப்யஸமர்தோऽஸி
மத்கர்மபரமோ பவ
மதர்தமபி
கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி
அப்யாஸே
அபி அஸமர்த அஸி= (இவ்விதமான)
பயிற்சியில் கூட திறமை அற்றவனாக
இருந்தால், மத் கர்ம பரம:
பவ-எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே
மேலான லட்சியமாகக் கொண்டிரு, மதர்தம் கர்மாணி குர்வந்
அபி-என் பொருட்டுத் தொழில்கள்
செய்து கொண்டிருப்பதனாலும், மாம் அவாப்ஸ்யஸி-என்னை
அடைவாய்.
பொருள்
: பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என்
பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக்
கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள்
செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.
அப்பியாசம்
செய்ய மனது ஒருப்படாதவிடத்து அது
நெடு நாளாக வழக்கமாகச் செய்துவந்த
வினையில் ஈடுபடுகிறது. பற்றுதலால் வந்த வினையைத் தனக்கென்று
செய்யாது ஈசுவரனுக்காக வென்று செய்யுங்கால் சாதகன்
இறைவன் கையில் கருவி போல
ஆகிறான். கருவிக்குத் தனிச் சுதந்திரம் கிடையாது.
சாதகன் தன்னைக் கருவியாக எண்ணி
வினையாற்றுவதால் சித்த சுத்தி உண்டாகி
ஞானத்தைப் பெற்றுப் பக்குவமடைகிறான். இறைவனுக்குக் கைங்கரியம் செய்வதால் ஜீவபோதம் போய்ப் பரபோதம் வருகிறது.
எல்லாம்
ஈசுவரனுடைய ஆக்ஞையால் நடக்கின்றனவென்றும் தான் ஈசுவரன் கையில்
வெறும் கருவியென்றும் எவனுடைய மனதில் பதிகின்றதோ
அவன் ஜீவன் முக்தனாவான். ஈசுவரா,
உனது காரியத்தை நீயே செய்தருள்கிறாய். ஆனால்
நான் செய்கிறேன் என்று ஜனங்கள் சொல்கின்றனர்.
கர்மத்தைத்
தனக்காகவென்றே செய்யும் தன்மை யுடையவனுக்குக் கர்மபந்தம்
ஒழிய வழியில்லையா? விடை வருகிறது :
11. அதைததப்யஸக்தோऽஸி
கர்தும் மத்யோகமாஸ்ரித:
ஸர்வகர்மபலத்யாகம்
தத: குரு யதாத்மவாந்
மத்யோகம்
ஆஸ்ரித:-என்னை அடைவது என்ற
யோகத்தை சார்ந்து நின்று, தத் அபி-இதைக் கூட, கர்தும்
அத: அஸக்த: அஸி-செய்யத்
திறமையற்றவனாக இருந்தால், தத: யதாத்மவாந்-அப்போது
தன்னைத்தான் கட்டுப்படுத்தி, ஸர்வகர்மபலத்யாகம் குரு-எல்லாச் செயல்களின்
பயன்களையும் துறந்துவிடு.
பொருள்
: இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி
எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
முழு மனதை இறைவனுக்கென்றே ஒப்படைத்து
விடுவது சிறந்தது. அதில் சாதனம் பூர்த்தியடைகிறது.
அப்பெருநிலையில் நிலைத்திருக்க இயலாதவர்கள் பழக்கத்தால் மனதை இறைவன்பால் திருப்பவேண்டும்.
மனம் வெளிஉலகப் பிரவிருத்தியில் நாட்டம் கொள்ளும் தன்மையதானால்
அப்பியாசம் செய்வதும் கடினமாகும். அப்பொழுது பகவானுக்கென்றே பணிவிடை செய்வது
சிலாக்கியம். கர்மத்தில் வைத்த பற்றுதலாலும், தன்
கர்மத்துக்குத் தானே கர்த்தாவென்று எண்ணுவதாலும்
கர்மபலத் தியாகம் உண்டாவதில்லை. பெரும்பற்றுடையவன்
குறிப்பிட்ட சில வேளையிலாவது தன்
கர்மமெல்லாம் ஈசனுடைய கர்மம் என்று
தனக்கு ஞாபகமூட்டி வருவானாகில் அந்த எண்ணம் நாளடைவில்
அவனைப் பக்குவப்படுத்தும்.
உன்னால்
கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஸ்வபாவம்
ஒவ்வொருவனையும் கர்மம் செய்யும்படி ஏவுகின்றது.
ஆகையால் கர்மங்கள் முறையாகச் செய்யப்படட்டும். கர்மம் பற்றுதலின்றிச் செய்யப்படுமானால்
அது பகவானிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். இகபரங்களில் உண்டாகும் பாவ புண்ணியங்களில் வெறுப்பு
விருப்புக் கொள்ளாமல் செய்யப்படும் கர்மம் பற்றுதலற்றதாகும். இவ்வித
மனோபாவத்துடன் செய்யப்படும் கர்மம் முடிவில் கடவுளிடம்
கொண்டுபோகும் மார்க்கமாக அமைகிறது.
பக்குவமடைதலின்
அறிகுறி யாது? அதன் விளக்கம்
வருகிறது :
12. ஸ்ரேயோ
ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஸிஷ்யதே
த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம்
அப்யாஸாத்
ஜ்ஞாநம் ஸ்ரேய:-பழக்கத்தைக் காட்டிலும்
ஞானம் சிறந்தது, ஜ்ஞாநாத் த்யாநம் விஸிஷ்யதே-ஞானத்தைக்
காட்டிலும் தியானம் சிறந்தது, த்யாநாத்
கர்மபல த்யாக:-தியானத்தை காட்டிலும்
செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது, த்யாகாத் அநந்தரம் ஸாந்தி-அத்துறவைக் காட்டிலும்
சாந்தி உயர்ந்தது (தியாகத்தின் மூலம் அமைதி கிடைக்கிறது).
பொருள்
: பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக்
காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தை
காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.
ஒருவன்
ஆலயத்தை வலம் வந்து சர்வ
திக்கிலும் திரும்பி நமஸ்காரம் செய்கிறான். தான் ஏன் அப்படிச்
செய்யவேண்டுமென்று அவனுக்குத் தெரியாது. எல்லாரும் செய்வதைப் பார்த்துக் குருட்டுப் போக்காக அவனும் அப்பழக்கத்தில்
ஈடுபடுகிறான். கடவுள் எங்கும் நிறைந்தவர்
என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுதற்கே அத்தகைய வழிபாடு ஏற்பட்டுள்ளது
என்பது அவனுக்குத் தெரியாது. விவேகமில்லாத அந்த அப்பியாசத்தைக் காட்டிலும்
கடவுள் எங்கும் நிறைபொருள் என்ற
வாசா ஞானம் சிறந்தது. அந்த
வாசா ஞானத்தோடு நின்று விடுவதை விட
சாதகன் காண்கின்ற அனைத்தும் பரமன் மயம் என்று
தியானிப்பது மேலானது. அனைத்தையும் கடவுள் மயமாகத் தியானித்து
அவைகளைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என்று எண்ணலாகாது. தான்
வாழ்ந்திருப்பது கடவுளுக்காக வென்று கருதித் தனது
கர்மத்தின் பயன் முழுவதையும் அவனுக்கு
அர்ப்பணம் பண்ணவேண்டும். தான் செய்கின்ற கர்மம்
தனக்காகவல்ல, கடவுளுக்காகவே செய்யப்படுகிறது என்ற நினைவு தோன்றுகிற
அதே வேளையில் சாந்தியும் வருகிறது. தனக்கென்று தொழில் புரிபவன் அசாந்தியடைகிறான்.
இறைவனுக்கென்று தொழில் புரிபவன் இன்பமடைகிறான்.
ஒரு பருந்து அலகில் ஒரு
மீனைக் கௌவிக் கொண்டிருந்தது. அதைப்
பிடுங்குதற்காகச் சில காக்கைகளும் பருந்துகளும்
அப் பருந்தைப் பின்தொடர்ந்து கொத்தி ஆரவாரித்தன. அது
எத்திக்கில் சென்றாலும் காகங்களும் பருந்துகளும் கூடவே பறந்து சென்றன.
தொந்தரவைப் பொறுக்கமாட்டாமல் அப்பருந்து மீனை அப்பால் போட்டுவிட்டது.
உடனே அதை வேறொரு பருந்து
கௌவிக்கொள்ள காகங்களும் மற்ற பருந்துகளும் இந்தப்
புசிய பருந்தைத் தொந்தரவு செய்யத் தொடங்கின. ஆனால்
உபத்திரவத்தினின்று தப்பித்த முதல் பருந்து சாந்தமாய்
ஒரு மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. இப்படி சாந்தமாய் விருக்கும்
பக்ஷியைப் பார்த்து வணங்கி, ஓர் அவதூதர்,
பருந்தே, நீ எனக்கு குரு.
உலகப்பற்றுக்களாகிய சுமையை மனிதன் கீழே
போடாத வரையில் அவனால் உலக
சஞ்சலங்களினின்றும் தப்பித்துக்கொள்ள முடியாது. அவனுக்குச் சமாதானம் ஏற்படாது. இதை நீ எனக்குக்
கற்பித்தாய் என்றார்.
எத்தகையவன்
கடவுளுக்கு உவந்த பக்தனாகிறான்? விடை
வருகிறது :
13. அத்வேஷ்டா
ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ
ச
நிர்மமோ
நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ
14. ஸந்துஷ்ட:
ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய:
மய்யர்பிதமநோபுத்திர்யோ
மத்பக்த: ஸ மே ப்ரிய:
ய: ஸர்வபூதாநாம் அத்வேஷ்டா-எவர் எவ்வுயிரையும் பகைத்தலின்றி,
மைத்ர: கருண ஏவ -அவற்றிடம்
நட்பும் கருணையும் உடையவனாய், நிர்மம நிரஹங்கார:-யானென்பதும்
எனதென்பதும் நீங்கி, ஸமது:கஸுக:
க்ஷமீ-இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்.
ஸததம் ஸந்துஷ்ட:-எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், யதாத்மா த்ருடநிஸ்சய:-தன்னைக்
கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், மயி
அர்பித மந: புத்தி:-என்னிடத்தே
மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து, மத்பக்த: ஸ:
யோகீ-என் தொண்டனாகிய யோகி,
மே ப்ரிய:-எனக் கினியவன்.
பொருள்
: எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய்,
யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும்
நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,
பொருள்
: எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட
நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என்
தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.
வெறுப்பானது
வேற்றுமையை வளர்க்கிறது; உடலெங்கும் விஷத்தை உண்டுபண்ணுகிறது. ஆதலால்
வெறுப்பு நல்வாழ்க்கைக்கு உதவாது. வெறுப்பு அற்றிருந்தால்
மட்டும் போதாது. ஜடப்பொருள்கள் வெறுப்பதில்லை.
உயிர் வாழ்பவன் எல்லா உயிர்களிடத்தும் நட்புக்கொள்ளவேண்டும்.
அன்பின் வழியது உயிர் நிலை;
அஃது இலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. ஆக,
நட்பே உயிர்களை இணைக்கின்றது. பிறரைத் தன் காரியத்துக்குப்
பயன்படுத்திக் கொள்ளுதற்கு ஒருவன் உறவாடலாம். அது
பொருந்தாது. தன் வாழ்க்கை பிறருக்குப்
பயன்படும்படி செய்யவேண்டும். அப்பொழுதே அது கருணை எனப்
பெயர் பெறுகிறது. பிறரிடத்துக் கருணை காட்டுவதால் தன்
பொருளுக்கே நஷ்டம் வரலாம். அதைப்
பொருள்படுத்தாத நிலை மமகாரம் அற்ற
நிலையாம். எனது என்ற எண்ணம்
ஒழிந்து பட்டுப்போகிறது. உடல் அபிமானம் அஹங்காரம்
என்று சொல்லப்படுகிறது. கருணையின் மேலீட்டால் பக்தன் ஒருவனுக்கு அஹங்காரம்
அறவே அகன்றுவிடுகிறது. தன் பொருள், தன்
உடல்வாழ்க்கை இவைகளை மதியாமையினால் ஒருவனுக்கு
இன்பமே வந்தமையலாம் அல்லது துன்பமே வந்தமையலாம்.
அவைகளை இன்ப துன்பமாக அவன்
பாகுபடுத்துவதில்லை. தனக்குற்ற துன்பத்தைச் சகித்துக்கொண்டு துன்பம் செய்தவனிடத்துப் பொறாமை
பூணலாம். பக்தன் ஒருவன் அப்படிப்
பொறாமை கொள்வதில்லை. தன்னைத்தானே மன்னிப்பது போன்று மற்றவர்களையும் மன்னிக்கிறான்.
துன்பத்தைச் சகித்தல் ஒருவித எதிர்மறை நிலையாகிறது.
பக்தனோ இன்பமே எந்நாளும் துன்பமில்லை
என்ற கோட்பாட்டின்படி சந்தோஷமுடையவனாயிருக்கிறான். வாழ்க்கையில் அடக்கமும் ஒழுங்குப்பாடும் நன்கு அமைந்திருப்பதால் அவன்
யோகியாகிறான். பாரமார்த்திக விஷயத்தில் அவனுக்குச் சந்தேகம் கிடையவே கிடையாது. அதைப்பற்றி
அவனுக்கு உறுதியான நிச்சய புத்தி யிருக்கிறது.
யோகத்தால் தான் பெற்ற தெள்ளிய
மனதையும் புத்தியையும் அவன் கடவுளுக்கென்றே ஒப்படைக்கிறான்.
இங்ஙனம் பகவானிடத்து பக்தி பண்ணுபவனே அவனுக்கு
முற்றும் உவந்த தோழனாகிறான்.
மனிதன்
சமர்ப்பிக்கும் சொத்துக்களையெல்லாம் ஈசுவரன் மதிக்கிறானோ? இல்லவே
இல்லை. பக்தியையும் பிரேமையையும் எவனொருவன் ஸமர்ப்பிக்கிறானோ அவனுக்கு மட்டுந்தான் ஈசுவரனுடைய கிருபை உண்டாகும். தன்
பொருட்டு உண்டாகும் பக்திப் பிரேமைகளையும் விவேக
வைராக்கியங்களையுமே ஈசுவரன் சிலாகித்துக் கொண்டாடுகிறான்.
(13-14)
இன்னும்
யார் அவனுக்கு உவந்தவர்கள்? விடை வருகிறது :
15. யஸ்மாந்நோத்விஜதே
லோகோ லோகாந்நோத்விஜதே ச ய:
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ
ய: ஸ ச மே
ப்ரிய:
யஸ்மாத்
லோக: ந உத்விஜதே-எவனை
உலகத்தோர் வெறுப்பதில்லையோ, ச லோகாத் ந
உத்விஜதே-எவன் உலகத்தாரை வெறுப்பதில்லையோ,
ச ஹர்ஷ அமர்ஷ
பய: உத்வேகை-களியாலும் அச்சத்தாலும்,
சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும், ய: முக்த: ஸ:
மே ப்ரிய:-எவன் விடுபட்டானோ
அவனே எனக்கினியவன்.
பொருள்
: எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும்
அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே
எனக்கினியவன்
பக்தன்
ஒருவனுடைய வாழ்க்கை உலகுக்கு ஒரு நாளும் இன்னல்
விளைவிப்பதில்லை. இன்னல்போன்று தோன்றும் சில செயல்கள் உண்மையில்
ஹிதமாகவே முடியும். ஆசிரியர் மாணாக்கனைக் கண்டிப்பது, மருத்துவர் ரணவைத்தியத்தில் நோயாளிக்குத் துன்பம் விளைவிப்பது, அறப்போரில்
வீரன் எதிரியைத் தாக்குவது இவையாவும் வெளித்தோற்றத்திற்கு இடர் போன்று இருப்பினும்
உண்மையில் உலகுக்குச் செய்த நன்மைகளாகும். இனி,
தனது உடல் வாழ்க்கையில் தனக்கு
என்ன தான் கேடுவந்தாலும் அதனால்
அவன் கிலேசமடைவதில்லை. துன்பப்படாத உயர்ந்த மன நிலையையுடைய
ஒருவனைப் புற உலகம் எவ்விதத்திலும்
வருத்தப்படுத்த முடியாது. அப்பர், பிரஹ்லாதன் போன்றவர்கள்
இதற்குச் சான்றாகிறார்கள்.
எத்தகைய
பயிற்சியால் இத்தகைய மனநிலை வருகிறது
என்ற கேள்வி எழுகிறது. அதற்கு
விடை இதே சுலோகத்தில் வருகிறது.
இன்பந்தரும் பொருள்களைப் பெற்று ஒருவன் களிப்புறலாகாது.
களிப்புக்கு வசப்படும் மனது துன்பத்துக்கும் வசப்படக்
கூடியது என்பதாகிறது. உறுதியான மனதே இன்பதுன்பம் இரண்டையும்
சமனாகப் பாராட்டுகிறது. அமர்ஷம் என்பது சினம்.
ஒருவனுக்குக் கோபம் வருகின்றவளவு மனவலிவு
குறைகின்றது. வலிவுடைய மரம் காற்றில் அசைவதில்லை.
வலிவில்லாத கொடி காற்றில் அசைகிறது.
கோபத்துக்கு உட்படாத மனது வலிவு
பெற்று இன்பதுன்பங்களை நிகராகக் கருதுகிறது. பயம் மரணத்துக்கு ஒப்பானது.
அஞ்சும் போதெல்லாம் ஒருவன் அழிந்துபட்டுப் போகிறான்.
அஞ்சாதிருப்பவனே உயிர் வாழ்கிறான். அச்சம்
கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. கலங்கிய
நீரில் பிம்பம் தெரிவதில்லை. தெளிந்த
நீரில் பிம்பம் தெரிகிறது. அங்ஙனம்
கலங்கிய மனதில் ஆத்ம சொரூபம்
விளங்குவதில்லை. கலங்கா நெஞ்சம் படைத்தவனே
இறைவனைக் காண்கிறான் இறைவனைக் கண்டதும் அவனுக்கு உவந்த பக்தனாகிறான்.
பிறருடைய
குணதோஷங்களைப் பற்றிப் பேசுவதில் காலத்தைச்
செலவிடுபவன் தன் காலத்தை வீணிலே
கழிப்பவனாகிறான். ஏனெனில் அப்படிச் செலவிடப்பட்ட
காலம் தன்னையாவது ஈசுவரனையாவது பற்றிச் சிந்திக்கப்படாமல் பிறரைப்பற்றி
யாதொரு பிரயோஜனமுமில்லாமல் சிந்திக்கப்பட்ட காலமாகிறது.
16. அநபேக்ஷ:
ஸுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத:
ஸர்வாரம்பபரித்யாகீ
யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:
அநபேக்ஷ:
ஸுசி:-எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், தக்ஷ உதாஸீந:-திறமுடையோனாய்,
பற்றுதலற்றவனாய், கதவ்யத:-கவலை நீங்கியவனாய்,
ஸர்வ ஆரம்ப பரித்யாகீ-எல்லா
ஆடம்பரங்களையுந் துறந்து, ஸ: மத்பக்த: மே
ப்ரிய:-என்னிடம் பக்தி செய்வோனே எனக்
கினியவன்.
பொருள்
: எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா
ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி
செய்வோனே எனக் கினியவன்
இந்திரியங்கள்
வாயிலாக வரும் இன்பங்களில் ஆசையற்றவன்
அனபேக்ஷனாகிறான். அங்ஙனம் ஆசைகளை யகற்றுமளவு
அவன் (சுசி:) தூயவனாகிறான். மனம்,
மொழி, மெய் மூன்றும் மாசற்றிருப்பது
தூய்மை. அதனால் செயலில் சாமர்த்தியமுண்டாகிறது.
எதிர்பாராது ஒரு கணப்பொழுதில் வந்தமையும்
கருமத்தை உள்ளபடி அறிந்து கொள்ளவும்
அதற்கேற்ப நடந்து கொள்ளவும் அவனுக்கு
இயலுகிறது. அதை முன்னிட்டே அவனை
தக்ஷ: என்று அழைக்கவேண்டும். செயலாற்றும்
வல்லமையைத் தனக்கு ஒத்தவர்களுக்கு ஒருவிதமாகச்
செய்தலும் ஒவ்வாதவர்களுக்கு வேறு விதமாகச் செய்தலும்
அவனிடத்தில்லை. நிறைகோல் போன்று ஓரம் சாராது
எல்லார்க்கும் பொதுவாக நடந்து கொள்வதனால்
அவன் உதாஸீனன் ஆகிறான். அப்படி நேர்மையாக நடந்து
கொள்பவனுக்கு மனத்துயரம் ஒரு நாளும் உண்டாவதில்லை.
அவனுக்குக் கவலை கிடையாதெனினும் கர்ம
பலனில் பற்றுவைத்திருக்கலாம் என்று நினைத்தல் கூடும்.
ஆனால் உண்மையில் அவன் பற்று அற்றவன்.
தனக்கென்று கருமம் செய்வதையெல்லாம் அவன்
அறவே துறந்தவன் ஆகிறான். இறைவனிடத்திருந்து அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை
யாதலால் அவன் உண்மையான பக்தனாகிறான்.
ஆகையினாலே அவன் பகவானுக்கு மிக
இனியவன் ஆகிறான்.
தன் மனதை ஏமாற்றாத ஒருவனே
பகவானது சந்நிதானத்தை அடையப்பெறுவான். அதாவது கள்ளங்கபடமற்ற தன்மையும்
உண்மையான அன்பும் பரமனை அடைய
உற்ற பாதைகளாகும்.
17. யோ
ந ஹ்ருஷ்யதி ந
த்வேஷ்டி ந ஸோசதி ந
காங்க்ஷதி
ஸுபாஸுபபரித்யாகீ
பக்திமாந்ய: ஸ மே ப்ரிய:
ய: ந ஹ்ருஷ்யதி-எவன்
எதற்காகவும் மகிழ்வதில்லையோ, ந த்வேஷ்டி-எதையும்
வெறுப்பதில்லையோ, ந ஸோசதி-எதற்காகவும்
துயரப் படுவதில்லையோ, ந காங்க்ஷதி-எதற்காகவும்
ஆசைப் படுவதில்லையோ, ஸுப அஸுப பரித்யாகீ-நன்மையையுந் தீமையையுந் துறந்த,
ஸ: பக்திமாந் மே ப்ரிய:-தொண்டனே
எனக் கினியவன்.
பொருள்
: களித்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந்
துறந்த தொண்டனே எனக் கினியவன்.
இன்பமூட்டுகிற
பொருளைப் பெற்றால் உலக மக்கள் மகிழ்கின்றனர்.
பக்தனுக்கோ அத்தகைய பொருள் வருவதால்
மகிழ்ச்சி உண்டாவதில்லை. வேண்டாதவை வந்து வாய்க்குமிடத்து அவர்கள்
வெறுக்கின்றனர். பக்தனுக்கு அது கிடையாது. விரும்பிய
பொருள் கிடைக்கவில்லை அல்லது கைவிட்டுப் போய்விட்டது
என்ற துன்பம் அவனுக்கில்லை. கடவுள்
பக்தியிலேயே அவனுக்குத் திருப்தியுண்டாகிறபடியால் ஆசைப்பட வேண்டிய அவசியம்
பக்தனுக்கில்லை. அன்புருவாய் இருக்கும் குழந்தைக்குப் பாபபுண்ணியம் இரண்டும் தெரியாது. பக்தியின் மேலீட்டால் பக்தனும் நன்மை தீமை யிரண்டையும்
மறந்துவிடுகிறான். இத்தகைய பாங்குள்ளவனே பகவானுக்கு
உவந்த பக்தனாகிறான்.
விருப்பு,
வெறுப்பு, அச்சம் இவைகள் குடிகொண்டிருக்குமிடத்துக்கு
ஈசுவரன் வருவதில்லை.
18. ஸம:
ஸத்ரௌ ச மித்ரே ச
ததா மாநாபமாநயோ:
ஸீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித:
19. துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ
ஸந்துஷ்டோ யேந கேநசித்
அநிகேத:
ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர:
ஸத்ரௌ ச மித்ரே ச-எவன் பகைவனிடத்தும், நண்பனிடத்தும்,
மாந அபமாநயோ: ஸம: - மானத்திலும், அவமானத்திலும்
சம பாவனையுடன் எவன் இருக்கிறானோ, ததா
ஸீதோஷ்ண ஸுகது:கேஷு ஸம:-குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டவன்,
ஸங்கவிவர்ஜித:-பற்றறுத்தவனோ.
துல்ய நிந்தா ஸ்துதி மௌநீ-புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யேந
கேநசித் ஸந்துஷ்ட:-யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான், அநிகேத:-குறியற்றான் (வசிக்கும் இடத்தில் தனக்கு என்ற பற்று
அற்றவன்), ஸ்திரமதி:-திடமான புத்தி உடையவன்,
பக்திமாந் நர: மே ப்ரிய:-இத்தகைய பக்தன் எனக்
கினியவன்.
பொருள்
: பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.
பொருள்
: புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யாதுவரினும்
அதில் மகிழ்ச்சியுறுவான். குறியற்றான், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய
பக்தன் எனக் கினியவன்
எல்லாரும்
ஈசனுடைய குழந்தைகள். ஈசனுடைய வடிவங்களைப் பகையென்றும்
நட்பென்றும் பிரிப்பது பொருந்தாது. புதிதாக ஏற்படும் களவுக்
காதலர் அவமானத்துக்கு அஞ்சுகின்றனர்; மானத்தைக் காப்பாற்ற முயலுகின்றனர். முதிர்ந்த காதலோ அஃதொன்றையும் பொருள்படுத்துவதில்லை.
முதிர்ந்த பக்தியின் போக்கும் அத்தகையது. உடலில் அபிமானம் உடையவனுக்குக்
குளிர் உண்டு; வெப்பம் உண்டு.
அவைகளின் காரியமாக வரும் இன்ப துன்பம்
முதலியனவுண்டு. உழைப்பாளி உடலைப் பொருள்படுத்தாது உழைப்பிலேயே
கண்ணும் கருத்துமாயிருப்பது போன்று பக்தன் பகவத்
சேவையிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கிறான். வெயில், மழை,
உணவு, ஓய்வு இவைகளைப் பற்றி
அதிகம் நினைக்க அவனுக்கு நேரமில்லை.
உடல் அபிமானம் நீங்குமளவு அவன் இயல்பாகவே பற்றற்றவன்
ஆகிறான் நடு வீதியில் நின்றுகொண்டு
அழுகின்ற ஆள் ஒருவனைப் பார்த்து
உலகம் இகழ்கிறது. அவன் உற்றானை இழந்த
துயரத்தால் அழுவானாயின் உலகத்தவர் இகழ்ச்சியைப் பொருள்படுத்தான். பக்தன் கடவுளைக் காண
விரும்பி அழுகிறான். அவனைப் பித்தன் என்று
உலகம் இகழ்தலைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை. மேடையில் நன்றாகப் பாடும் ஒருவனை உலகம்
புகழ்கிறது. அது பாடகனுக்கு உற்சாக
மூட்டுகிறது. பக்தனோ பரம்பொருளைப் போற்றிப்
பாடுகிறான். பரம்பொருளின் பெருமையே அவனைப் பாடச் செய்கிறது.
உலகத்தவர் புகழ்ச்சியில் அவனுக்குப் பொருள் ஒன்றுமில்லை. இறைவனது
புகழைத் தவிர வேறு எதையும்
அவன் பேசாதிருப்பதால் அவன் மௌனியாகிறான். சொந்த
ஊருக்கு மகிழ்வுடன் திரும்பிப்போகிறவனுக்கு வழிப் பயணத்தில் வசதிகள்
அதிகம் அமையாவிட்டால் அவன் அவைகளைக் குறித்து
மனக்கிலேசமடைவதில்லை. ஊருக்குப் போகும் உற்சாகம் முன்னணியில்
நிற்கிறது. பக்தனோ தனது தாய்
தந்தையாகிய தெய்வத்தைக் குறித்துப் பயணம் போகிறான். உலக
வாழ்க்கை என்ற வழியில் கிடைக்கின்ற
எதைக்கொண்டும் அவன் திருப்தியடைகிறான். நன்றே
வரினும் தீதே வரினும் அவனுக்குத்
தொல்லை யொன்றுமில்லை. மேலும் தனக்கென்று வசிக்குமிட
மொன்றை அவன் உரிமைப்படுத்துவதும் கிடையாது.
அகப்பட்ட வளையில் ஸர்ப்பம் சிறிது
காலம் சுருண்டிருப்பது போன்று தற்செயலாய் நேர்ந்த
இடத்தைப் பக்தன் தங்குமிடமாக்குகிறான். ரயில் வண்டியில்
எவ்விடத்தில் இருக்க இடம் கிடைத்தாலும்
பிரயாணிக்கு ஒன்றே. பக்தனது நிலையும்
அத்தகையதே. மாறுபடுகிற உலகில் மாறுபடாத கடவுள்
நாட்டத்திலேயே பக்தன் கண்ணுங்கருத்துமாயிருப்பதால் அவன் ஸ்திர புத்தியுள்ளவனாகிறான்.
நாட்டமெல்லாம் கடவுளிடத்திலேயே இருப்பதால் அவனே பக்தனாகிறான். ஆக,
அவன் கடவுளுக்கு இனியவன் ஆவது இயல்பு.
உலகத்தைப்பற்றிய
எண்ணங்களும் கவலைகளும் உன் மனத்தைச் சஞ்சலப்படுத்தும்படி
செய்துகொள்ளாதே. செய்யவேண்டிய காரியம் ஒவ்வொன்றையும் அதனதன்
காலத்தில் செய். ஆயினும் உன்
மனம் எப்போதும் ஈசுவரனிடம் நிலைத்திருக்கட்டும். (18-19)
20. யே
து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே
ஸ்ரத்ததாநா
மத்பரமா பக்தாஸ்தேऽதீவ
மே ப்ரியா:
தர்ம்யாம்ருதமிதம்-இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை,
யதா உக்தம் பர்யுபாஸதே-யான்
சொல்லியபடி வழிபடுவோர், ஸ்ரத்ததாநா-நம்பிக்கையுடையோர், மத்பரமா-என்னை முதலாகக்
கொண்டோர், தே பக்தா: மே
அதீவ ப்ரியா:-அத்தகைய பக்தர்
எனக்கு மிகவுமினியர்.
பொருள்
: இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர்,
நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர்,
அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.
எல்லாவிதமான
சாதனங்களுக்கும் சிரத்தை இன்றியமையாததாதலால் அது
ஈண்டு பக்தியோடு இணைத்து இயம்பப்படுகிறது. பகவானைக்
கதியாகக்கொள்வது பக்தனுடைய இயல்பு. அதனால் அவன்
செயலற்றவன் ஆய்விடுகிறானல்லன். தர்மத்தை உறுதியாக அனுஷ்டிக்கிறான். அருளோடு முக்தி என்னும்
பெருநிலம் தர்மத்தினின்று வருவதால் தர்மமே அமிர்தத்துக்கு (மூவா
மருந்துக்கு) ஒப்பாகிறது. தர்மத்தைக் கையாளுபவன் யாரும் அழிந்துபட்டுப் போகமாட்டான்.
அன்பும் அறநெறியும் யாரிடத்திருக்கிறதோ அவன் இறைவனுக்கு உவந்தவன்
ஆகிறான்.
பக்தியில்
வைதிக பக்தி என்பது ஒன்று.
அதாவது சாஸ்திரங்கள் விதிக்கிறபடி பக்தி பண்ணுதலாம். பகவந்
நாமத்தைப் பலதடவை உச்சாரணம் பண்ணுதல்,
உபவாசமிருத்தல், தீர்த்த யாத்திரை போதல்,
வேண்டிய ஸாமக்கிரியைகளைக் கொண்டு பூஜை பண்ணுதல்
முதலியன வைதிக பக்தியில் சேர்ந்தவை.
இப்படி நெடுங்காலம் பக்தி செய்தால் ஈசுவர
பக்தியில் இன்னும் உயர்ந்த நிலையாகிய
ராக பக்தி யைக் பெறக்கூடும்.
எல்லாவற்றிற்கும் பிரேமைதான் முக்கியம். உலகப்பற்று முற்றிலும் அகல வேண்டும். முழுமனதும்
ஈசுவரனிடம் பொருந்தவேண்டும். அப்போதுதான் அவனை அடையமுடியும். ராக
பக்தியில்லாமல் அவனை அடையமுடியாது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே
ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
பக்தி யோகோ நாம த்வாதசோऽத்யாய:
பிரம்ம
வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன
சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் பக்தியோகம் என்ற
பன்னிரண்டாம் அத்தியாயம்.
No comments:
Post a Comment