Saturday 2 August 2014

28. கேசவார்த்த மூர்த்தி


28. கேசவார்த்த மூர்த்தி

முன்னொரு காலத்தில் திருமால் சிவபெருமானை நோக்கி தவமியற்றினார். சிவபெருமான் திருமாலின் தவத்தினால் மெச்சி என்ன வரம் வேண்டும் ? என்றுக் கேட்டார். உடன் திருமாலும் தேவர்களும், அசுரர்களும் மயங்கத்தக்க மாயை தனக்கு வேண்டும்மென்றும், தேவர்களும் அழிக்கமுடியாதபடியான வல்லமையும் வேண்டுமென்றார். சிவபெருமான் கேட்ட வரங்களைத் தந்துவிட்டு திருமாலை மாயன் என அழைத்தார். நீயே என் இடபுறமாக இருப்பாய் என்று மறைந்தார். அத்தகைய வரம்பெற்ற திருமாலே பராசக்தியாகவும் பார்வதியாகவும் ஆணுருக் கொள்கையில் திருமாலாகவும், கோபமுற்ற நிலையில் காளியாகவும், போர்க் காலங்களில் துர்க்கையாகவும் விளங்குகிறார். ஒருமுறை உமாதேவியார் சிவபெருமானை குறித்து சிறந்த தான சோமவார விரதம் மேற்கொண்டார். பின் விரதம் முடிந்து அன்னதானம் நடைபெறும் போது அவரது தவச் செயலை நேரில் காண சிவபெருமான் வேதியராகவும், அவரருகே பெண்ணுருவில் திருமாலும் மாறி, தவச்சாலைக்கு வந்து விரதத்தில் மகிழ்ந்து இருவரும் சுயரூபம் காட்டினர்.

அதாவது சிவம் வேறு, திருமால் வேறல்ல. திருமாலே சிவசக்தியாகும். ஆண்பாகம் வலதாகவும் பெண்பாகம் இடதாகவும் உள்ளக் காரணத்தால் சிவனிலிருந்து பிரிந்தவரையே நாம் திருமால் என்போம். இத்தகைய சிறப்புப் பெற்ற இருவரையும் நாம் எப்படிப் பார்க்கலாமெனில் வலப்புறம் மான், மழு தாங்கியுள்ளவர் சிவனென்றும், இடபுறமாக சக்கராதாரியாக உள்ளவர் திருமாலென்றும் அவ்விருவரும் இணைந்துள்ள நிலையை நாம் சங்கர நாராயணன் என்றும் கூறுவோம். இத்தகைய சிறப்பான கேசவனைப் பாதியாகவும், தான் பாதியாகவும் அமைந்துள்ள திருவுருவத்தையே நாம் கேசவார்த்த மூர்த்தி என்போம். இத்திருவுருவத்தை அரிகரம் என்னும் இடத்தில் காணமுடியும். இங்கு நாம் தரிசிக்கப் போவது சங்கர நாராயணனை. நெல்லை  செல்லும் வழியில் உள்ளது சங்கரன் கோயில். இங்குள்ள இறைவன் சங்கர நாராயணன் இறைவி கோமதி அம்மையார். இங்குள்ள இறைவனை வேண்ட எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும், மேலும் முழுக்குணம் பெற்றதும் பாதிக்கப்பட்ட பகுதியாக கிடைக்கும் அங்கப்பொருட்களை (உதாரணம் கை-கால்) <உண்டியலில் சேர்க்கின்றனர். இந்த இறைவியின் எதிரேயுள்ள கருங்கல் தரையில் ஆறு அங்குல வட்டமுடைய குழி போன்ற அமைப்பு உள்ளது. அதில் அமர்ந்து சிவதியானமோ, தியானமோ செய்ய குண்டலினி பகுதிக்கு ஒருவித ஈர்ப்பு கிடைக்கின்றது. இங்கு புற்றுமண்னே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றது. வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், புதன் அல்லது சோமவாரங்களில் செய்ய மறுபிறவியிலும் மோட்சம் கிட்டும். மேலும் இங்குள்ள தெப்பத்தில் உள்ள மீனிற்கு பொரியும், யானைக்கு வெல்லமும் கொடுத்தல் வேண்டும். உடல்ஊனமுற்ற சாதுக்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு இறைவனை வணங்கினால் கடுமையான நோய் விலகும் என்பது ஐதீகம்.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer