25.சார்த்தூலஹர
மூர்த்தி
தாருவனத்தில்
வாழ்ந்து
வந்த முனிவர்களை மோகினி அவதாரமெடுத்த திருமால் சோதித்தார். அம்முனிவர்களின் ரிஷிபத்தினிகளை பிட்சாடன அவதாரமெடுத்து சிவபெருமான் சோதித்தார். இதனையெல்லாம் ஞானதிருஷ்டியில் கண்ட முனிவர்கள் வேள்வியால் சிவபெருமானை அழிக்கமுடிவு செய்தனர். எனவே பிறர்க்கு தீங்கு செய்யக்கூடிய அபிசார ஹோமம் வார்த்தனர். அதிலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி வந்தது. அதனைக் கொண்டு சிவபெருமானிடம் ஏவினர். அதனை அடக்கிய சிவபெருமான் அதனைக் கொன்று தோலினை ஆடையாக்கினார். மீண்டும் எவற்றையும் எதிர்க்கும் இணையில்லா மழு எனும் ஆயுதத்தை ஏவினர். அதனை சிவபெருமான் தனது படையாக மாற்றினார். பின் மான் வான் மார்க்கமாக உலகமே அச்சுறுத்தும்படி வந்தது. அதைத்தனது இடக்கரத்தில் ஏந்தினார். பின் நாகம் வந்தது அதனை ஆபரணமாக்கி அணிந்துக் கொண்டார். பின் அடக்கமுடியாத பூதகணங்களை ஏவினர். அவையும் சிவபெருமானின் படைப்பரிவாரமாகின. பின்னர் வெண்ணிற மண்டையோடு உலகமே அதிரும்படி வந்தது. அதை அடக்கி தன் தலையில் அணிந்தார்.
பின்னர்
கர்ணகடூர
ஓசையுடன்
துடி (உடுக்கை) அனுப்பினர். அதனை தனதாக்கினார். பின் முயலகனை ஏவினர். அதனைக்கண்ட சிவபெருமான் நெருப்பைக் கையில் ஏந்தியபடி முயலகனைத் தன் காலினால் நிலத்தில் தள்ளி அதன் முதுகில் ஏறி நின்றார். இனியும் சிவபெருமானை ஒன்றும் செய்ய இயலாது என்<றுணர்ந்த முனிவர்கள் திகைத்தனர். முண்டகன் அசைந்ததால் சிவபெருமான் நடனம் ஆட ஆரம்பித்தார். இதனைக் கண்ட முனிவர்கள் அவரைச் சரணடைந்தனர். சிவபெருமான் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி ஆசி கூறி அனுப்பினார். பின் அவரவர் இருப்பிடம் திரும்பினர். முனிவர் ஏவிய புலித்தோலை ஆடையாகக் கொண்ட கோலத்தை நாம் சார்த்தூலஹர மூர்த்தி என்கிறோம். மாயவரம் அருகே அமைந்த வழுவூரில் தான் தாருவனத்து முனிவர்கள் ஏவிய புலியை அடக்க இங்கு சிவபெருமான் தோன்றினார். இங்குள்ள மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் உள்ளது. அதற்கு சந்தன காப்பிட்டு வழிபட பில்லி, சூனிய செய்வினை முறியும். ஏழு பிரதோஷம் இறைவனுக்கு அபிசேக ஆராதனை செய்ய இழந்த சொத்துக்கள் மீண்டும் கைவரும். தும்பை, வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இம்மூர்த்திக்கு ருத்திராட்ச அபிசேகம் செய்ய செய்வினை அக<லும் முடியும்.
No comments:
Post a Comment