பதினெட்டாம்
அத்தியாயம்
பகவத்கீதை
| மோஷ சந்நியாச யோகம்
சந்நியாசமென்றாலும்
தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை
அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில்
பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும். எல்லாக்
கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று
சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று.
நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில்
பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு
காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.
அப்படியிருக்கத்
தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம்,
உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும்
சாத்விகம், ராஜசம், தமசம் என்று
மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம்
கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று
நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான்
என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.
ஸந்யாஸத்துக்கும்
தியாகத்துக்கும் விளக்கம் 1-6 -தாமஸ, ராஜஸ தியாகம்
உதவாது 7-8 -ஸாத்விக தியாகம் வேண்டும்
9-12 -கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16 -ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 -முக்குணங்கள்
கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40 -நான்கு
வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48 -கர்மயோகமே கர்மஸந்யாஸமாகிறது 49-57 -அஹங்காரம் கொடியது 58-60 -எல்லாம் ஈசன் செயல்
61-62 -உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி
63 -சரணாகதி தத்துவம் 64-66 -கீதைக்கு அதிகாரி யார்? 67-71 -ஞானோதயம்
72-73 -ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.
அர்ஜுந
உவாச
1. ஸந்ந்யாஸஸ்ய
மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்
த்யாகஸ்ய
ச ஹ்ருஷீகேஸ ப்ருதக்கேஸிநிஷூதந
அர்ஜுந
உவாச மஹாபாஹோ-அர்ஜுனன் சொல்லுகிறான்,
உயர் புயத்தோய், ஹ்ருஷீகேஸ-ஹ்ருஷீகேசா, கேஸிநிஷூதந-கேசியைக் கொன்றவனே, ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம்-சந்நியாசத்தின் இயல்பையும், த்யாகஸ்ய ச-தியாகத்தின் இயல்பையும்,
ப்ருதக் வேதிதும் இச்சாமி-பிரித்துக் கேட்க
விரும்புகிறேன்.
பொருள்
: அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா,
கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
ஏற்கனவே
இயம்பியுள்ள முக்கியமான கோட்பாடுகள் முடிவுரையில் மீண்டும் ஒருமுறை விமர்சனம் செய்யப்படுகின்றன.
ஆக, இந்த அத்தியாயத்தின் முதற்பகுதியானது
யோகங்களையெல்லாம் தொகுத்து சமரசப்படுத்தும் பாங்கில் அமைகிறது. ஒரே கோட்பாட்டை சந்தர்ப்பத்துக்கு
ஏற்றவாறு வேறு வேறு விதங்களில்
விளக்கலாம். புதிய வடிவம் பெறுமிடத்து
அது புதிய கோட்பாடாகவே தென்படும்.
சந்தர்ப்ப பேதத்தை முன்னிட்டும் பழைய
கோட்பாடு புதிய போதனை போன்று
தென்படுவது இயல்பு. யானையின் அவயவம்
ஒவ்வொன்றுக்கும் தன்னளவில் அழகு இருக்கிறது. அவைகளையெல்லாம்
தொகுத்து யானை வடிவத்தில் பார்க்குங்கால்
அவைகளின் அழகு பன்மடங்கு அதிகரிக்கிறது.
பதினெட்டு அத்தியாயங்களும் பதினெட்டு யோகங்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.
அவைகள் அனைத்துக்கும் பொதுவாக யோக சாஸ்திரம்
என்னும் பெயர் இந்த அத்தியாயத்தில்
பூர்த்தி பெறுகிறது.
கேசி என்ற அசுரன் குதிரை
வடிவெடுத்துக் கிருஷ்ணனை விழுங்க வாயைத் திறந்துகொண்டு
வந்தான். கண்ணனோ தன் கையை
அதன் வாயினுள் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக்
குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டான். ஆதலால் அவனுக்கு கேசி
நிஷூதனன் என்ற பெயர் வந்தது.
கை வலிவை இங்குக் காட்டியதால்
அவன் மகாபாகு என்றும் அழைக்கப்படுகிறான்.
இச் செயல்களுக்கிடையில் அவன் இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனா யிருந்தமையால்
ஹிருஷீகேசனாகிறான்.
அத் 5-சுலோ 13, அத் 9-சுலோ 28 இவைபோன்ற
இடங்களில் பகவான் சந்நியாசத்தைப் பற்றிப்
பகர்ந்தார்.
அத் 4-சுலோ 20, அத் 12-சுலோ 11 இவைபோன்ற
இடங்களில் தியாகத்தைப்பற்றிச் சொன்னார். இவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன வென்பது கேள்வி.
வாழ்க்கையைப்பற்றிய
கோட்பாடுகளில் சந்நியாசமும் தியாகமும் மிகச் சீரியவைகளாகும். அவைகளை
வெறும் சாஸ்திரத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியாது.
தீப்பற்றி எரிவது போன்று படம்
வரையலாம். ஓவியத்தில் தீட்டிய தீயானது உணவு
சமைக்க உதவாது. உண்மையாக எரிந்துகொண்டிருக்கும்
தீ ஒன்றே அச்செயலுக்கு உதவும்.
எரிகின்ற தீ போன்றவை தியாகமும்
சந்நியாசமும். யார் ஒருவர் சந்நியாசியோ
அல்லது தியாக மூர்த்தியோ அவர்தான்
அவ் உயர் நிலையை மற்றவர்க்கு
வழங்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணன் அச்
செயலைச் செய்யத் தகுந்தவரா என்ற
கேள்வி எழுகிறது.
அர்ஜுனனால்
அவர் ஹிருஷீகேசன் என்றும் மஹாபாகு என்றும்
கேசிநிஷூதனன் என்றும் அழைக்கப்பட்டார். சிற்றுயிர்
பேருயிராகப் பரிணமித்துப் பரிபூரணன் ஆகும் வரையில் உள்ள
படித்தரங்கள் எல்லாம் இம் மூன்று
சொற்களில் அடங்கியிருக்கின்றன. அசுரனைக் கொல்லுதல் தீமையை எதிர்த்துப் போராடி
வெற்றிபெறுதற்கு அறிகுறியாகும். எல்லா உயிர்களும் தீமையை
எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் உயிருக்கும் அதனதன்
நிலையில் எதிர்ப்பும், பகையும், தீமையும் உண்டு. இயற்கையில் யாண்டும்
இக்காட்சியைக் காணலாம். தீமையை வெல்லுதலில் மற்ற
உயிர்கள் ஏகதேசம் வெற்றி பெறுகின்றன;
மனிதனோ பெரும் வெற்றி பெறுதற்கு
அடையாளமாகக் கிருஷ்ணன் பெருந் தோள்வலிவு பெற்றவன்
(மகாபாகு) ஆகிறார். உடல் அமைப்பில் பரிபூரணநிலை
அவரிடத்திருக்கிறது. மனத்தகத்து உள்ள கேடுகள் இந்திரியங்கள்
மூலம் வெளியாகின்றன. கிருஷ்ணனோ இந்திரியங்களையும் மனதையும் முற்றிலும் வென்றவர். ஆதலால் அவருக்கு ஹிருஷீகேசன்
என்ற பெயர் வந்தது. ஜன்மம்
எடுத்தவனது பரிபூரண நிலைக்கு எடுத்துக்காட்டு
ஸ்ரீ கிருஷ்ணன். யோகேசனாகிய அவரே சந்நியாசத்தையும் தியாகத்தையும்
விளக்கவல்லவர். அத்தகையவரிடம் அர்ஜுனன் இக்கேள்வி கேட்டது முற்றிலும் பொருத்தமானதாம்.
ஸ்ரீபகவாநுவாச
2. காம்யாநாம்
கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ
விது:
ஸர்வகர்மபலத்யாகம்
ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம்-விருப்பத்தால் செய்யப்படும்
கர்மங்களை துறப்பது, ஸந்ந்யாஸம் கவய: விது:-சந்நியாசமென்று
புலவர் தெரிவித்துளர், ஸர்வகர்மபல த்யாகம்-எல்லாவிதச் செயல்களின்
பலன்களையும் துறந்துவிடுதல், த்யாகம் விசக்ஷணா: ப்ராஹு-தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
பொருள்
: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால்
செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச்
செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
காமிய கர்மம் என்பது இம்மையில்
தனக்குப் பட்டம், புகழ், பேர்,
புத்திர பாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம் முதலியன அமையவேண்டுமென்று ஆசைப்படுவதும்,
மறுமையில் சுவர்க்காதி பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம்.
இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சந்நியாசம்.
இது சில ஞானியர்கள் கருத்து.
வேறு சில ஞானிகள் நித்திய,
நைமித்திய, காமியமாகிய எல்லாக் கர்மங்களின் பயனை
விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர். சந்நியாசம்
என்பதும் தியாகம் என்பதும் ஒரே
கருத்தைத்தான் விளக்குகின்றன. அற்றது பற்று எனில்
உற்றது வீடு. இது விஷயத்தில்
பேரறிஞர்களுக்கிடையில் அபிப்பிராய வித்தியாசமில்லை. தனது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா
யிருப்பவைகளை யெல்லாம் துறந்துவிட வேண்டும். காமிய கர்மங்கள் புதிய
பந்தங்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளை நிறைவேற்றுதற்குப் புதிய
பிறவிகள் எடுத்தாகவேண்டும். பிறவிப்பிணி வேண்டாமென்கிற விவேகிகள் அதற்குப் புதிய வித்துக்களை விதைக்கலாகாது.
ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்துக்கு ஒப்பான இவ்வுடல் வாழ்க்கை
தானாகப் பட்டுப்போம் பரியந்தம் அதைத் தன் போக்கில்
விட்டுவிடுவது முறை என்பது சில
ஞானிகளின் கோட்பாடு. வேறு சிலர் புதிய
மரத்துக்கு விதையும் நடவேண்டாம், பழைய மரத்தை விட்டும்
வைக்கவேண்டாம் என்கின்றனர். அனைத்தையும் வேரறக் களைதல் வேண்டும்
என்பது அவர்களது கோட்பாடு. கர்மத்தை அறவே ஒழித்துவிடவேண்டுமாம்.
சத்வகுணமுள்ளவர்களுக்குக்
கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள் தாமாகவே அவர்களைவிட்டு விலகிவிடுகின்றன.
வலிய முயன்றாலும் அவர்களால் கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்ய
விடமாட்டார். கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங்
கொஞ்சமாக விடுவிக்கப்படுகிறாள்! குழந்தை பிறந்த பிறகு
அவள் முழுக் கவனத்தையும் குழந்தையைப்
பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள். அதேபோல, சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும்
பகவான் அகற்றிவிடுகின்றார். ஆனால் சத்வகுணம் வாய்க்கப்பெறாத
மக்கள், எல்லா உலகக் கடமைகளையும்
கவனிக்க வேண்டும். ஒரு பணக்காரனுடைய வேலையாள்போலத்
தன்னைப் பாவித்துக்கொண்டு, வீட்டு அலுவல்களையெல்லாம் கவனிக்க
வேண்டும். இதுவே கர்மயோகமெனப்படும். இவ்வித
பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு,
பகவந் நாமத்தை உச்சரித்து அவனை
தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம்
அடங்கும்.
3. த்யாஜ்யம்
தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி
சாபரே
ஏகே மநீஷிண:-சில அறிஞர்,
கர்ம தோஷவத்-கர்மங்கள் அனைத்தும்
குற்றம் போலே கருதி,
த்யாஜ்யம்
இதி ப்ராஹு-விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்,
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம்
என்ற செயல்களை, ந த்யாஜ்யம் இதி
ச அபரே-விடக்கூடாது
என்கிறார்கள் வேறு சிலர்.
பொருள்
: சில அறிஞர், செய்கையைக் குற்றம்
போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்.
வேறு சிலர், வேள்வி, தானம்,
தவம் என்ற செயல்களை விடக்கூடாது
என்கிறார்கள்.
கர்மங்கள்
அனைத்திலும் காரணம், காரியம் என்று
இரண்டு பிரிவுகள் உண்டு. காரணம் இருக்கும்
வரையில் காரியமும் உண்டு. மழை பெய்கிறது;
அது காரணம். பூமி நனைகிறது;
புதிதாகக் கட்டுகிற வீடும் நனைகிறது. இவ்விரண்டும்
காரியங்கள். பூமி நனைதல் என்னும்
காரியம் கிருஷிகனுக்கு நல்லது. புதிதாகக் கட்டுகிற
வீடு நனைதல் என்பது கட்டுகிறவனுக்குக்
கெட்டது. ஆக, மழைபெய்தல் என்னும்
கர்மத்தில் நலம் கேடு ஆகிய
இரண்டும் உண்டு. தீபம் எரிகிறது.
அது பகவத்கீதை வாசிக்க உதவுகிறது. அச்செயலை
நலம் எனலாம். தீபத்தில் பூச்சிகள்
பறந்து வந்து வீழ்ந்து சாகின்றன.
அச்செயலோ கொடியது. ஆக, தீபம் எரிதலில்
நலம் கேடு ஆகிய இரண்டும்
உண்டு. உயிர் வாழ்ந்திருக்க சுவாசிக்கிறோம்.
உயிர் வாழ்க்கை தேவாராதனைக்கென்றே பயன்படுத்தப்படுகிறது. அது சீரிய செயல்.
சுவாசிக்கும் மனிதன் காற்றிலுள்ள எண்ணிறந்த
சிற்றுயிர்களைக் காற்றுடன் உறிஞ்சி ஒழிக்கிறான். அது
கொடிய செயல். இங்ஙனம் எல்லாச்
செயல்களிலும் நலமும் கேடும் நிறைந்திருக்கின்றன.
கர்மத்திலுள்ள கேடுகளையெல்லாம் கருத்தில் வாங்கும் மனிதர் கர்மம் துறத்தற்குரியதென்று
பகர்கின்றனர். வேள்வி, தானம், தபசு
ஆகிய வினைகளில் கேடு இருந்தாலும் அவைகளை
விடலாகாது. மக்கள் அவைகளைச் செய்து
கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டும் சிலரது
கருத்து. ஏனென்றால் வாழ்க்கையிலேயே கேடு இருக்கிறது. அதை
முன்னிட்டு வாழ்க்கையை யாரும் அழித்துவிடுவதில்லை. ரோஜாச்
செடியில் முள் உண்டு. முள்செடி
என்று எண்ணி அதைப் பயிர்
செய்யாவிட்டால் மணமும் அழகும் நிறைந்த
மலர் நமக்குக் கிடைக்காது. விஷம் கொடியது. உடலினுள்
சென்றால் அது உயிரை வாங்கிவிடும்.
பின்பு அதே விஷத்தை ஒளஷதமாக
மாற்றியமைத்தால், அதை உடலினுள் செலுத்தலாம்;
உயிரையும் அது காப்பாற்றவல்லது. கர்மம்
அத்தகையது. மனிதனை அது பந்தப்படுத்தும்
தன்மையுடையது. ஆனால் அதே கர்மத்தை
யாகமாகவோ, தபசாகவோ, தானமாகவோ செய்தால் தோஷம் நீங்கப்பெற்று நலன்
உண்டாகும். ஆக, இத்தகைய ஸத்
கர்மங்களை நீத்தலாகாது என்பது அவ் அறிஞரது
கோட்பாடு.
அப்படியானால்
இவைகளைப் பற்றிப் பகவானது கோட்பாடு
யாது? விடை வருகிறது :
4. நிஸ்சயம்
ஸ்ருணு மே தத்ர த்யாகே
பரதஸத்தம
த்யாகோ
ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:
பரதஸத்தம-பாரதரில் சிறந்தவனே, புருஷவ்யாக்ர-புருஷப் புலியே, தத்ர
த்யாகே மே நிஸ்ச, யம்
ஸ்ருணு-தியாக விஷயத்தில் நான்
நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள், ஹி த்யாக:
த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:-தியாகம் மூன்று வகையாகக்
கூறப்பட்டது.
பொருள்
: பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக
விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்;
கேள், தியாகம் மூன்று வகையாகக்
கூறப்பட்டது.
சந்நியாசமும்
தியாகமும் ஒன்றே என்பது பகவானுடைய
கோட்பாடு. தியாகமே வாழ்க்கைக்குப் பற்றுக்கோடு
ஆகிறது. பார்க்குமிடமெங்கும் இயற்கை இக்கோட்பாட்டை விளக்கிக்
கொண்டிருக்கிறது. தன்னிடத்துள்ள வெப்பத்தை சூரியன் ஓயாது தியாகம்
பண்ணிக்கொண்டிருக்கிறது. அதனால் கோளங்களில் உள்ள
உயிர்கள் வாழ்ந்திருக்க முடிகிறது. மரத்தைப் பற்றிப் பிடித்திருக்கிற காயானது
கனிந்ததும் தனக்குப் பற்றுக்கோடாயிருந்த மரத்தைத் தியாகம் செய்கிறது. அப்படி
அது மரத்தை விடுதலில் பண்பும்
பயனும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன. தாய் ஒருத்தி தன்
சொரூபமாகக் கர்ப்பத்தில் சிசுவை வைத்திருக்கிறாள். பத்து
மாசம் ஆனதும் அதை அவள்
தன் உடலினின்று தியாகம் செய்யாவிட்டால் அவளுக்கும்
கெடுதல், அக்குழவிக்கும் கெடுதல். பழுதுபட்ட சரீரத்தை ஜீவன் தியாகம் செய்கிறான்.
சுகம் பெறுதற்கு தியாகம் ஒன்றே உற்ற
உபாயம். மனிதனுக்குப் பாடம் புகட்டுதற்கென்றிருக்கிறது கர்மம். தனக்குப்
பயன்படுகிற பள்ளிக்கூடத்தை மாணாக்கன் ஒருநாள் தியாகம் பண்ணியாகவேண்டும்.
ஆயுளெல்லாம் அப்பள்ளிக்கூடத்தில் கட்டுண்டு இருப்பது அவனுடைய குறிக்கோள் அன்று.
கர்மத்தை மனிதன் முடிவில் துறந்து
அதற்கு அதீதத்தில் போக வேண்டும். கர்மத்தை
விடுதற்கு முன்பு கர்ம தத்துவத்தைத்
தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதாவது :
5. யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம்
கார்யமேவ தத்
யஜ்ஞோ தாநம் தபஸ்சைவ பாவநாநி
மநீஷிணாம்
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம்
என்ற செயல்களை, ந த்யாஜ்யம்-விடக்
கூடாது,
தத் கார்யமேவ-செய்யவே வேண்டும், யஜ்ஞ:
தாநம் ச தப ஏவ-வேள்வியும் தானமும், தவமும், மநீஷிணாம் பாவநாநி-அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
பொருள்
: வேள்வி, தானம், தவம் என்ற
செயல்களை விடக் கூடாது. அவற்றைச்
செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
பட்டுப்புழு
தனக்கென்று கூடு கட்டுகிறது. கட்டிய
கூட்டுனுள் பிறகு அது அடைபட்டுப்
போகிறது. சிறைவாசம் செய்வது போன்று நெடுநாள்
அதனுள் கிடக்கிறது. தன்னைப் பந்தப்படுத்தும் செயலை
அது தனக்குத்தானே செய்துகொள்கிறது. அப்படித் தன்னை அடைத்து வைப்பதில்
பயன் ஒன்று உண்டு. புழுவாக
இருந்தது, அழகிய பட்டுப்பூச்சியாக மாறுகிறது.
இனி வெளிச்சத்தையும், காற்றையும், வெட்ட வெளியையும் காண
அது வெளியே வந்தாக வேண்டும்.
அதற்காகத் தான் கட்டிய கூட்டை
அது தானே உடைத்துத் தள்ளுகிறது.
முதலில் கூட்டைக் கட்டுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு
அவசியம் பின்பு கூட்டை உடைப்பதில்
இருக்கிறது. மனிதனுக்குக் காமிய கர்மங்ளெல்லாம் கூடு
கட்டுதற்கு ஒப்பானவை. காமிய கர்மத்தின் வாயிலாக
உலக வாழ்வின் தரத்தை மனிதன் கற்றுக்கொள்கிறான்.
அவனைப் பக்குவப்படுத்துதற்கு அது பயன்படுகிறது. பக்குவம்
அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது. பக்குவம்
அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது; அதாவது
பற்று நீங்குகிறது. இவ்வுலக வாழ்வைக் கடந்து
பரத்தினைச் சார வேண்டுமென்ற எண்ணம்
உதிக்கிறது. அதன் பிறகு செய்கிற
செயல்கள் யக்ஞமாகவும், தானமாகவும், தபசாகவும் மாறியமைகின்றன. பட்டுப்பூச்சி கூட்டை உடைத்தல் என்கிற
செயலைச் செய்கிறது. ஆத்ம சாதகனிடத்து அதற்கு
நிகரான செயல் யக்ஞம், தானம்,
தபசு ஆகியவைகளில் அடங்கியிருக்கிறது. ஆகையால் வேள்வி, தானம்,
தபசு ஆகியவைகளை எல்லா மனிதர்களும் செய்யவேண்டும்.
அவைகளைச் செய்கின்றவளவு உலகுக்கு நன்மை உண்டாகிறது. இப்பூவுலக
வாழ்க்கை அதனால் மேன்மையடைகிறது. அதற்குமேல்
மற்றொரு பிரயோஜனமும் உண்டு. அவைகளைக் கையாளும்
வகை தெரிந்துள்ள அறிஞர்களை அவைகள் புனிதப்படுத்துகின்றன.
அறிஞர்
யார்? விடை வருகிறது :
6. ஏதாந்யபி
து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா
பலாநி ச
கர்தவ்யாநீதி
மே பார்த நிஸ்சிதம் மதமுத்தமம்
து பார்த-ஆனால் பார்த்தா,
ஏதாநி கர்மாணி ஸங்கம் த்யக்த்வா-இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்,
பலாநி ச-பயன்களை வேண்டாமலும்,
கர்தவ்யாநி இதி-செய்ய வேண்டும்
என்பது, மே உத்தமம் நிஸ்சிதம்
மதம்-என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.
பொருள்
: ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்,
பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது
என் உத்தமமான நிச்சயக் கொள்கை.
தாய் ஒருத்தி தன் உடலினின்று
பாலை உண்டுபண்ணித் தன் குழந்தைக்கு ஊட்டுகிறாள்.
குழந்தையின் பொருட்டுத் தான் பத்தியம் இருக்கிறாள்;
ஊண் உறக்கத்தை ஒழிக்கிறாள். பசு ஒன்று தன்
கன்றுக்கும் உலகுக்கும் பாலைத் தன் உடலிலிருந்து
உண்டுபண்ணிக் கொடுக்கிறது. இவ்விரண்டும் சுயநலம் கருதாத கர்மத்துக்கு
நல்ல சான்றுகளாகின்றன. தியாகத்தின் உச்ச நிலையை ஆங்குக்
காணலாம். தவத்துக்கு விளக்கமும் அச்செயல்களில் அடங்கியிருக்கிறது. பின்பு அதற்கு நிகரான
தானத்தை வேறு எங்கும் காணமுடியாது.
இடையறா யக்ஞம் இவ்வுயிர்களிடத்து ஓயாது
நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பற்றற்ற செயலின் பண்பை
இங்குக் காண்கிறோம். கொடுக்கின்றவர், ஏற்கின்றவர் ஆகிய இரு தரத்தாரும்
புனிதமடைகின்றனர். பற்றுதலையும் பயனையும் ஒழித்தவர்களே மேன்மைக்கு இருப்பிடமாகின்றனர். ஆசையை வென்ற மேலோர்
இவ்வுலகக் கிருத்தியங்களை யக்ஞமாகச் செய்வார்களானால் இவ்வுலகமே பரலோகமாகக் காட்சி கொடுக்கும். உலகம்
மேன்மையடைதற்கு ஏற்ற கோட்பாடு இதுவாதலால்
இது பகவானுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை யெனப்படுகிறது.
ஈசுவரனை
அடைய விரும்புவோரும் ஸாதன மார்க்கத்தில் அபி
விருத்தியைக் கோருவோரும் ஆசையாகிய வலையில் விழாமல் தங்களைப்
பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்களாகார்.
7. நியதஸ்ய
து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே
மோஹாத்தஸ்ய
பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:
து நியதஸ்ய கர்மண:-ஆனால்
நியமத்தின் படியுள்ள செய்கையை, ஸந்ந்யாஸ: ந உபபத்யதே-துறத்தல்
தகாது, மோஹாத் தஸ்ய பரித்யாக-மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல், தாமஸ:
பரிகீர்தித:-தமோ குணத்தால் நேர்வதென்பர்.
பொருள்
: நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை
விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
பருவத்தில்
பழுத்த பழங்களை உதிர்த்து உலகுக்கு
ஊட்டுவது பழம் உதிர் சோலையின்
தியாகமாகும். அதற்காகப் பூத்துக் காய்த்துக் கனியாக்குவது அச்சோலையின் நித்திய கர்மமாகும். சோலையின்
தியாகத்தை விரைவில் பயன்படுத்தவேண்டுமென்று எண்ணிய அறிவிலி காய்களை
மரங்களினின்று பிடுங்குகின்றான். அது பலவந்தத்தில் செய்த
தியாகமாகும். அங்ஙனம் பறித்த காய்கள்
கனிதற்குப் பதிலாக வெம்பிப்போம். சுவையற்ற
கனியும் முளைக்கப்போடத் தகுதியற்ற விதையும் அதன் பயனாகும். அறியாமையினால்
செய்வித்த கர்மத் தியாகத்தின் விளைவு
அது.
மனிதனுடைய
பரிபாகத்துக்கு ஏற்றவாறு நித்திய கர்மம் உயர்கிறது.
உண்பதும் உறங்குவதும் அறிவிலிக்கு நித்திய கர்மமாயிருப்பது போன்று
விவேகிக்கு யக்ஞம், தானம், தபசு
முதலியன நித்திய கர்மமாகின்றன. உடல்
இருக்கும் பரியந்தம் நித்திய கர்மம் நடைபெறவேண்டும்.
ஏனென்றால் உடல் வாழ்வும் நித்திய
கர்மமும் இணைபிரியாதவைகள். மேலோனை அது மேலும்
மேலும் பரிசுத்தப்படுத்திக்கொண்டே வருகிறது. அவிவேகத்தால் அதை விடுவதால் கேடு
விளையும். அக்ஞான இருள் இன்னும்
அதிகரிக்கும். பணக்காரனைப் போன்று தானும் சுகஜீவனம்
செய்ய வேண்டுமென்று கூலியாள் தன் வேலையை நிறுத்தினால்
அவன் வருந்துவான். தமோகுணத்தினின்று உதித்த நித்திய கர்மத்
தியாகம் அது போன்றது.
மனம் சச்சிதானந்தத்தில் லயமாகிற வரையில் ஒருவன்
பகவந் நாமத்தை உச்சரிப்பதும், உலகக்
காரியங்களைக் கவனிப்பதும் ஆகிய இரண்டையும் செய்து
வரவேண்டும்.
8. து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஸபயாத்த்யஜேத்
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ
த்யாகபலம் லபேத்
யத் கர்ம-எது செய்ய
வேண்டிய கருமமோ, து:கம்
ஏவ இதி-துன்பமாகக் கருதி,
காய க்லேஸ பயாத்-உடம்புக்கு
வருத்தம் நேருமென்ற பயத்தால், த்யஜேத்-செய்யாமல் விடுவானேயானால்,
ஸ:-அவன். ராஜஸம் த்யாகம்
க்ருத்வா-அவன் ராஜஸ தியாகம்
செய்து, த்யாக பலம் ந
லபேத் ஏவ-தியாகப் பயனை
அடையமாட்டான்.
பொருள்
: உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக்
கருதி, அதனை விட்டு விடுவோன்
புரியும் தியாகம் ரஜோ குணத்தின்
பாற்பட்டது. அதனால் அவன் தியாகப்பயனை
அடையமாட்டான்.
மெய் வருத்தமில்லாத மண்ணுலக வாழ்க்கையில்லை. உலகக்
கடமைகளைச் செய்து வருத்தப்பட வேண்டாமென்றும்,
சந்நியாச ஆஸ்ரமம் எடுத்துக்கொண்டு பிறர்
செய்யும் உபகாரத்தைப் பெற்று நிம்மதியாக சுகஜீவனம்
செய்யலாமென்றும் தியாகம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடத்துக்குப் போவது சிரமமென்றெண்ணிச் சிறுவன்
ஒருவன் பள்ளிக்கூட வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவானாகில், அங்குப்
படித்து முடித்தவன் அடைகிற பயனை அவன்
அடையமாட்டான். அதாவது அவனுக்கு நல்லறிவும்
மேலாம் படிப்பும் உண்டாகமாட்டா. பரிபூரணமடைந்தவன் செய்கிற கர்மத்தியாகம் மோக்ஷமாகிறது.
ஆகையால் அதுவே தியாகபலன் எனப்படுகிறது.
உழைப்புக்கு அஞ்சுபவனுக்கு அது கிட்டாது.
போர்க்களத்துக்கு
யுத்த சன்னத்தனாக வந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று
தியாகபுத்தி வருகிறது. உற்றாரைக் கொன்று துன்பமடைதல் வேண்டாமென்கிற
மனப்பான்மை வருகிறது. வலிய வந்துள்ள அறப்போர்
புரிவது அவனுடைய நித்திய கர்மமாகிறது.
நெறிவழுவாத வேந்தனுக்கு உறவினரைவிட அறம் பெரியது. அறப்போரை
அவன் புறக்கணிக்க எண்ணியது ரஜோ குணத்தினின்று உதித்த
தியாகம். ஆகவே பகவான் அதற்குச்
சம்மதம் கொடுக்கவில்லை.
9. கார்யமித்யேவ
யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந
ஸங்கம்
த்யக்த்வா பலம் சைவ ஸ
த்யாக: ஸாத்த்விகோ மத:
அர்ஜுந
நியதம் யத் கர்ம-அர்ஜுனா
நியமத்துக் கிணங்கிய செய்கையை, கார்யம் இதி ஏவ-இது செய்தற்கு உரியது
என்னும் எண்ணத்தால், ஸங்கம் பலம் ச
த்யக்த்வா - ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து,
க்ரியதே-செய்தால், ஸ: ஏவ ஸாத்த்விக
த்யாக: மத:-அதுவே சாத்விக
தியாகம் எனப்படும்.
பொருள்
: நியமத்துக் கிணங்கிய செய்கையை, இது செய்தற்கு உரியது
என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும்
பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய
தியாகமே சாத்விகம் எனப்படும்.
தாமஸத்
தியாகத்திலும் ராஜஸத் தியாகத்திலும் கர்மமே
செய்யாது விட்டொழிக்கப்படுகிறது. சாத்விக தியாகத்திலோ கர்மம்
நின்றுபோவதில்லை. கர்மம் முறையாக நடைபெறுகிறது.
நித்திய கர்மம் உட்பட எல்லாக்
கர்மங்களுக்கும் கர்மபலன் உண்டு. சாத்விக சாதகனோ
கர்மத்துக்குத் தான் கர்த்தா என்று
அபிமானிக்காது, கர்மத்தில் பற்றுவைக்காது, வினைப்பயனை விரும்பாது தன் கடமையென அதைச்
செய்து வருகிறான். அத்தகைய மனநிலையே அமைதியையும்
அந்தக்கரண சுத்தியையும் உண்டுபண்ணுகிறது.
மருத்துவ
சாலையில் சிகிச்சை பெறுகிற நோயாளி மருத்துவ
சாலையிலேயே இருக்கவேண்டும் என்ற பற்றுதல் உடையவன்
அல்லன்; சிகிச்சை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வினைப்பயனை விரும்புபவனும்
அல்லன். ஆயினும் அங்குத் தங்கியிருந்து
தன் கடமையாகிய சிகிச்சை பெறுதல் என்ற கர்மத்தை
அவன் முறையாகச் செய்கிறான். அவனே உண்மையில் நோயைத்
தியாகம் பண்ணியவன் ஆகிறான். கர்மபலத் தியாகம் சாத்விக சாதகனுக்கு
அத்தகையதாகிறது.
ஆனால் நோயினிடத்து நோயாளிக்குக் கசப்பு ஏற்படுகிறது. தனது
நித்திய கர்மத்தை சாத்விக குணமுடைய தியாகி
மேலான பாங்கில் கருதுகிறான். சுவாசிப்பது உயிர் வாழ்பவைகளுக்கு நித்திய
கர்மமாகிறது. அவ் உயிர் வகைகளுள்
ஆரோக்கியமுடைய மனிதன் முறையாக ஆழ்ந்து
சுவாசிக்கிறான். ஆயினும் சுவாசிப்பதற்குத் தான்
கர்த்தா என்ற உணர்ச்சி அவனிடத்தில்லை.
உண்மையில் உடல் உணர்ச்சியின்றி உடல்
வாழ்க்கை வாழ்பவனே நோயற்ற நிலையில் இருப்பவன்
ஆகிறான். கடவுள் வழிபாடு. சமூக
சேவை. தியானம் முதலியன நல்ல
ஆத்மசாதகனது நித்திய கர்மங்களாகின்றன. அவைகளை
அவன் ஒழுங்காகச் செய்கிறான். அப்படி வினையாற்றுதற்கிடையில் அவன் கர்மத்தைப்பற்றிய
உணர்ச்சியில்லாதிருக்கிறான்.
ஆத்ம போதத்தில் அவன் நிலைத்திருக்கிறான். அந்த
மனநிலையே சாத்விகத் தியாகமாகிறது.
அவன் பற்றற்றவன் என்பதை எத்தகைய மனப்பான்மை
விளக்குகிறது? விடை வருகிறது :
10. ந த்வேஷ்ட்யகுஸலம் கர்ம குஸலே நாநுஷஜ்ஜதே
த்யாகீ
ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஸய:
ஸத்த்வஸமாவிஷ்ட:
மேதாவீ-சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்,
சிந்நஸம்ஸய: த்யாகீ =ஐயங்களையறுத்த தியாகி,
அகுஸலம் கர்ம-இன்பமற்ற செய்கையை,
ந த்வேஷ்டி-வெறுப்பதில்லை,
குஸலே ந அநுஷஜ்ஜதே-இன்பமுடைய
செய்கையில் பற்றுக் கொள்வதில்லை.
பொருள்
: சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப்
பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.
சத்வ குணத்திலேயே உறுதியாக நிற்பவன் தெளிந்த மனமுடையவனாகிறான். தூயதும்
தெளிந்ததுமாகிய உள்ளத்தில் ஞானம் உருவெடுக்கிறது. ஆத்ம
சொரூபத்தையும் பிரகிருதி சொரூபத்தையும் அவன் உள்ளபடி உணர்கிறான்.
அக்காரணத்தை முன்னிட்டு அவன் மேதாவியென்று அல்லது
பேரறிஞனென்று அழைக்கப்படுகிறான். அத்தகையவனுக்குக் கர்மமும் அகர்மமும் நன்கு விளங்குகின்றன. நிலைக்கண்ணாடி
போன்றது அகர்மமாகிய ஆத்ம சொரூபம். பிம்பங்களைக்
காட்டும்பொழுதும் காட்டாதிருக்கும்பொழுதும் கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. கர்மம்
நடைபெறும் பொழுதும் நடைபெறாத பொழுதும் ஆத்ம சைதன்யம் தன்மயமாயிருக்கிறது.
அழகான வடிவம் எதிரில் வருவதால்
கண்ணாடிக்குப் புதிய பெருமை யொன்றும்
வருவதில்லை. கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால்
கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை. பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பிப்பதற்கிடையில் கண்ணாடி யாண்டும்
தன்மயமாயிருக்கிறது. ஆத்ம சாக்ஷியின் முன்னிலையில்
நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன்
எதார்த்த சொரூபத்தைப்பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.
அர்ஜுனனது
ஸ்வதர்மம் அறப்போர் புரிவதாம். உழைத்துப் பாடுபடுவது எல்லார்க்கும் ஏற்பட்டுள்ள தர்மம். இச்செயல்களைத் துன்பம்
நிறைந்தவைகளாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைத் தத்துவத்தை
அறிந்த பேரறிஞருக்கு அவைகளைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. அவைகளை
வெறுக்காது, மனதை நடுநிலையில் நிறுத்தித்
தம் கடமையை அவர்கள் முறையாகச்
செய்கின்றனர். உண்டு, உடுத்துக் களித்திருப்பது
பாமரர்களுக்கு இன்ப வினைகளாகின்றன. அவர்கள்
அவைகளைப் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் சத்வம் நிறைந்த
விவேகி அவைகளில் மகிழ்வுறுவது கிடையாது. இன்ப துன்ப வினைகளைச்
சமனாக அவன் நினைக்கின்றான். அதுவே
அவனது பற்றற்ற நிலைக்கு அறிகுறியாகும்.
பற்றற்றுக்
கர்மம் செய்தற்குப் பதிலாகக் கர்மத்தை ஏன் அடியோடு விட்டு
விடலாகாது? விடை வருகிறது :
11. ந ஹி தேஹப்ருதா ஸக்யம்
த்யக்தும் கர்மாண்யஸேஷத:
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே
ஹி தேஹப்ருதா-மேலும் உடம்பெடுத்தவனால், அஸேஷத:
கர்மாணி-முழுதுமே செய்கைகளை, த்யக்தும் ந ஸக்யம்-விட்டுவிட
முடியாது, ய கர்ம பலத்யாகீ-எவன் செய்கைகளின் பயனைத்
துறக்கிறானோ, ஸ: து த்யாகீ
இதி அபிதீயதே-அவனே தியாகி யெனப்படுவான்.
பொருள்
: (மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத்
துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.
ஒருவன்
ஆகாய விமானத்தில் ஊர்ந்து செல்லுகிறான். அதனுள்
அமர்ந்திருக்கும் பரியந்தம் அவனுக்குப் பிரயாணி என்று பெயர்.
அவ் விமானம் அழகான சமவெளிக்கு
மேலே பறக்கிறது; ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்துக்கு
மேலே பறக்கிறது; மேகப் படலங்களைப் பொத்துக்கொண்டு
போகிறது; மழையில் நனைகிறது; வெயிலில்
காய்கிறது; கடலுக்கு மேலே வானத்தில் நீந்துகிறது;
ஆங்கு மேலும் கீழும் ஆக
இரண்டு இடங்களிலும் ஆபத்து உண்டு. விமானத்தின்
உள்ளே இருக்கும் பிரயாணி இத்தனைவிதச் செயல்களுக்கும்
உட்பட்டாக வேண்டும். அவனுக்கு விருப்பமில்லாத இடத்துக்கும் அவன் அஞ்சுகிற இடத்துக்கும்
விமானம் செல்லாது இருக்கமுடியாது. பயணத்தின் திட்டப்படி அது போயாகவேண்டும். விமானத்தின்
போக்கில் நிகழ்வனவற்றைப்பற்றிக் கவலையற்றவனாகப் பிரயாணி தன் அலுவலைப்
பார்த்துக்கொண்டிருக்கலாம்.
தொல்லையை ஒழிப்பதற்கு அது ஒன்றே உற்ற
உபாயம். உடல் வாழ்வு என்ற
பயணத்தில் ஆத்மா அங்ஙனம் இருந்து
பழகவேண்டும்.
தேகம் இருக்கும் வரையில் கர்மமும் உண்டு.
மூச்சு விடுவதே கர்மம். சுவாசிக்காது
யார் வாழ முடியும்? உண்பது
கர்மம்; உறங்குவது கர்மம். ஆக, உடல்
எடுத்தவனுக்குக் கர்மத்தை விடுதல் என்பது வெறும்
பேச்சு. கர்மத்தை விடமுயலுபவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான்.
மற்று, கர்மத்தைப் பற்றற்றுச் செய்யவேண்டும். விவேகி ஒருவனது விவேகத்துக்கு
ஏற்றவாறு பற்றற்றுக் கர்மம் செய்தல் அமைகிறது.
உடலில் பட்ட காயத்தை நாம்
நன்கு கவனிக்கிறோம். அதை ஜாக்கிரதையாகக் கட்டி
வைக்கிறோம். அதன் பொருட்டுப் பணச்
செலவு செய்து மருந்து முதலியன
போடுகிறோம். அப்படியெல்லாம் செய்வது அக்காயம் நிலைத்திருக்கவேண்டும்
என்ற எண்ணத்துடன் அல்ல; காயத்தை ஒழித்தல்
பொருட்டே அவ்வளவு கவனம் செலுத்துகிறோம்.
அதில் பற்றற்றிருந்து அதைப் பாங்கு படுத்துகிறோம்.
அவரவர் கர்மத்தை அங்ஙனம் பற்றற்றுச் செய்ய
வேண்டும். கர்மத்தை மனிதன் நீத்துவிட முடியாது;
கர்மத்துக்குத் தான் கர்த்தா என்னும்
எண்ணத்தை நீத்துவிடவேண்டும். அப்படிச் செய்கின்றவனே தியாகி யாகின்றான். பற்றற்றவனுக்கு
வினைப்பயன் இல்லை.
பின்பு
பற்றுடையவனுக்கோ? விடை வருகிறது :
12. அநிஷ்டமிஷ்டம்
மிஸ்ரம் ச த்ரிவிதம் கர்மண:
பலம்
பவத்யத்யாகிநாம்
ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம்
க்வசித்
அநிஷ்டம்
இஷ்டம் மிஸ்ரம் ச-வேண்டப்படாதது,
வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என, த்ரிவிதம் கர்மண:
பலம்-மூன்று வகைப்பட்ட கர்மப்
பயன்கள், அத்யாகிநாம் ப்ரேத்ய பவதி-தியாகிகளல்லாதோருக்கு
இறந்த பின்னர் ஏற்படுகிறது, ஸந்ந்யாஸிநாம்
து க்வசித் ந -சந்நியாசிகளுக்கு
எங்கும் பயன் கிடைப்பதில்லை.
பொருள்
: வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட
கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர்.
சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
நரகப் பிராப்தியும் விலங்கு இனமாகப் பிறப்பதும்
இன்னாதது அல்லது அனிஷ்ட கர்மபலனாகிறது.
சுவர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இஷ்ட
கர்மத்தின் பலன். பூவுலகப் பிராப்தியும்,
மக்களாகப் பிறத்தலும் கலப்புக் கர்மத்தின் பயனாகும். இனியது, இன்னாதது ஆகிய
இரண்டும் சேர்ந்தது கலப்புக் கர்மம். கர்ம பலத்தில்
பற்று வைக்கிறவர்களுக்குப் பிறவிகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன.
அவைகள் வாயிலாக சுகதுக்கங்களுக்கு அவர்கள்
ஆளாக வேண்டும். கர்மபலனில் பற்று வைக்காதவர்களுக்குப் பிரபஞ்ச
சம்பந்தமான இன்பமுமில்லை, துன்பமுமில்லை; பிறப்பும் இறப்பும் உண்டாவதில்லை. அவர்கள் முக்தியடைகிறார்கள்.
எடுத்த
பிறவிகளுள் இது கடைசி ஜன்மம்;
இத்துடன் பிறவியை ஒழித்துவிட்டு முக்தியடையும்
நிலையில் இருப்பவர்களைச் சில அறிகுறிகளால் கண்டுகொள்ளலாம்.
அத்தகைய ஜீவன் முக்தர்கள் எப்பொழுதும்
ஆத்ம திருப்தர்களாக இருக்கிறார்கள். நிழல் போன்று உடல்
அவர்களைச் சார்ந்திருக்கிறது. அவ்வுடலின் மூலம் ஒழுங்காகக் கர்மம்
நடைபெறுகிறது. ஆனால் அதை ஜீவன்
முக்தர்கள் கருத்தில் வாங்கிக்கொள்ளார்கள்.
தியாகியல்லாதவர்கள்
இனி எடுக்கப்போம் பிறவி எத்தகையது என்பதையும்
இப்பொழுது இவ்வுலகிலேயே யூகித்துத் தெரிந்துகொள்ளலாம். தூங்கி எழுந்திருப்பது போன்றவை
ஜனன மரணம். தூங்குகிற மனிதன்
அதே சரீரத்தில் எழுந்திருக்கிறான். செத்தவன் புதிய சரீரத்தில் புதிய
இடத்தில் எழுந்திருக்கிறான். படுக்கப்போம்பொழுது கெட்டவனாயிருந்தவன் தூங்கியெழுந்திருக்கும்போதும் கெட்டவனே. நல்லவனுடைய நிலைமையும் அத்தகையது. இங்கு இவ்வுலகில் இருக்கும்
போதே நரகத்தில் இடர்ப்படுபவர் உண்டு; விலங்கு போன்று
வாழ்பவர் உண்டு. சுவர்க்க வாழ்வை
இங்கேயே காண்பவர் உண்டு. இவ்விரண்டுக்கும் இடையில்
உள்ள மனுஷ நிலையில் இருப்பாரும்
உளர். இதே அமைப்பு சரீரத்தை
மாற்றும்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆக, இயல்புக்கு ஏற்ற
உடல் அமைப்பு உண்டாகிறது.
கர்மத்துக்குத்
தன்னைக் கர்த்தாவென்று நினைக்கிறவனுக்குக் கர்ம பலன் உண்டாகிறது.
அவன் சுக துக்கங்களுக்கு ஆளாகிறான்
உண்மையில் மனிதன் கர்மத்துக்குக் கர்த்தாவா?
இக் கேள்விக்கு விடை வருகிறது :
13. பஞ்சைதாநி
மஹாபாஹோ காரணாநி நிபோத மே
ஸாங்க்யே
க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்
மஹாபாஹோ-பெருந்தோளாய், க்ருதாந்தே ஸாங்க்யே-கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய
சாஸ்திரத்தில், ஸர்வகர்மணாம் ஸித்தயே-எல்லாச் செயல்களும்
நிறைவேறுதற்கு, ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி-ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன, மே நிபோத-(அவற்றை)
என்னிடம் கேட்டுணர்.
பொருள்
: எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக்
கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர்,
பெருந்தோளாய்.
சாங்க்ய
சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம்.
கபில முனிவர் இயற்றியுள்ள சாங்கியம்
வேறு. ஆறு சாஸ்திரங்களில் அது
நான்காவது ஸ்தானம் பெறுகிறது. பிரபஞ்சத்தின்
அமைப்பைப் பற்றிய கோட்பாடுகளை அது
விளக்குகிறது. வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி கர்மம் செய்வதெல்லாம் விரைவில்
ஒழுங்காகக் கர்மத்தை முடித்துக்கொண்டு கர்மாதீதத்தில் போவதற்கே யாம். கர்மசொரூபமாயுள்ள இயற்கையானது
ஜீவாத்மாவுக்கு ஒரு பள்ளிக்கூடம் போன்று
இருக்கிறது. அறிவு வேண்டுமென்கிற ஒவ்வொரு
குழந்தையும் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும். அங்கு வீண்காலம் கழிக்கலாகாது.
ஒழுங்காகப் பயிற்சி பெறவேண்டும்; அறிவை
வளர்க்க வேண்டும். கற்றபின் பள்ளிக் கூடத்தைவிட்டு வெளியில்
வருவதுதான் மாணாக்கனது குறிக்கோள். பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே அவ்வுண்மையை அவன் தெரிந்துகொள்கிறான். மனிதன்
கர்ம மயமான உலகில் இருக்கும்போதே
கர்மத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எது எவ்விதத்தில் கர்மத்துக்குக் காரணமாகிறது என்பது இனிப் பகரப்படுகிறது
:
14. அதிஷ்டாநம்
ததா கர்தா கரணம் ச
ப்ருதக்விதம்
விவிதாஸ்ச
ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்
அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும்,
கர்தா ச-செயலை செய்பவன்,
ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக்
கரணங்கள், விவிதா: ப்ருதக் சேஷ்டா
ச-வெவ்வேறு வகைப்பட்ட
செயல் முறைகள், தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து
(காரணங்கள்).
பொருள்
: அவை இடம், கர்த்தா, பலவிதக்
கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை
என ஐந்து.
ஒரு மோட்டார் வண்டி ஓடுகிறது. அதன்
இயக்கத்துக்கு முகாமையாயிருப்பவைகள் எவை என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
அத்தகைய வண்டி ஒன்றைப் பூட்டுதற்கு
முன்பு கணக்கற்ற ஆணிகள், வில்லைகள், தகடுகள்,
சக்கரங்கள். இரும்புச் சட்டங்கள் குவியல் குவியலாகத் தொழிற்சாலையில்
வைத்திருப்பதைக் காணலாம். மரத்தில் ரப்பர் பால் இருக்கிறது.
மண்ணினுள் பெட்ரோல் என்னும் எண்ணெய் இருக்கிறது.
மண்ணின்மேல் நீர் இருக்கிறது. விண்ணில்
காற்று இருக்கிறது. இனி, இவைகளை முறையாகப்
பொருத்தியமைக்குமிடத்தே வண்டி யுண்டாகிறது. தொழிற்சாலை
அதற்கு அதிஷ்டானம் அல்லது இருப்பிடம். தொழிற்சாலைக்குச்
சொந்தக்காரன் அதற்குக் கர்த்தாவாகிறான். சக்கரங்கள், ஓட்டும் கருவி, நிறுத்தும்
கருவி முதலியன அதன் இந்திரியங்கள்
ஆகின்றன. அதற்கு விசைகொடுக்கும் பெட்ரோல்
எண்ணெய் அதன் பிராணன் ஆகிறது.
பலப்பல காரியங்களுக்கு அவ்வண்டியைப் பயன்படுத்தலாம். அதை ஓட்டும் சாரதி
அதற்கு அதிஷ்டான தெய்வமாகிறான். இதே முறையில் தான்
உடல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.
விருப்பு
வெறுப்பு, இன்ப துன்பம், ஞானம்
முதலியவைகளை விளக்குதற்கு இருப்பிடமாயிருப்பது உடல். ஆகையால் அது
அதிஷ்டானம் எனப்படுகிறது. இன்ப துன்பங்களாகிய உபாதிகளை
ஏற்றுக்கொண்டு அவைகளை அனுபவிக்கும் அகங்காரமே
கர்த்தா எனப்படுகிறது. ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து
ஆகிய இவைகள் வெவ்வேறு இந்திரியங்களெனப்படுகின்றன.
பிராணன், அபானன் முதலியவைகளின் பலவகைப்பட்ட
செயல்கள் அதன்பின் குறிக்கப்படுகின்றன. பிராணனுடைய துணையின்றி ஒரு செயலும் நடைபெறாது.
அந்த ராத்மாவாகிய தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு
அதிஷ்டான தெய்வமாகிச் செயல்புரிகிறது.
15. ஸரீரவாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:
ந்யாய்யம்
வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய
ஹேதவ:
நர: ஸரீர வாக் மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும்
மனத்தாலும், யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும்,
தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே
காரணங்கள்.
பொருள்
: மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும்,
அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.
வெவ்வேறு
காரணங்களைக் கொண்டு அமைத்துள்ள மோட்டார்
வண்டியைக் கொலை, களவின் பொருட்டு
ஒரு சாரார் எடுத்துச் செல்லலாம்.
ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னொரு சாரார் அவ்வண்டியைச்
செலுத்தலாம். நோயாளிக்கு விரைவில் சிகிச்சை செய்வதற்கு அது உதவுகிறது. களியாட்டத்தில்
வீண்பொழுது போக்குதற்கும் அது பயன்படுகிறது. வெவ்வேறு
இடங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்குதற்கும்
அதே வாகனம் உதவுகிறது.
கிட்டத்தட்ட
அதே முறையில் உடலை நாம் பயன்படுத்துகிறோம்.
தர்ம÷க்ஷத்திரம் என்று இவ்வுடல் இயம்பப்படுகிறது.
செய்கின்ற ஸத்கர்மங்கள் அனைத்துக்கும் ஐந்து ஹேதுக்களாலாகிய உடல்
வாழ்வு பயன்படுகிறது. இதே உடலத்தைத் தேவாலயமாகப்
பாராட்டிப் பயன்படுத்துபவரும் உளர். இத்தகைய செயல்களெல்லாம்
தர்மத்துக்கு உடன்பாடானவைகள். ஆகவே அவைகள் நியாயமானவைகள்.
அதர்மமே வடிவெடுத்து வந்து அடாத செயலைச்
செய்தற்கும் இவை காரணங்களாகின்றன. இவ்
ஐந்தின் துணையின்றி நலம் கேடு ஆகிய
எச்செயலும் நடைபெறுவதில்லை.
உடலின்
மூலம் நிகழ்கின்ற செயல்களைச் சாதாரண வாழ்க்கை முறையில்
திரிகரணங்களைக்கொண்டு செய்தவைகள் என்கிறோம். மனம், வாக்கு, காயம்
ஆகிய மூன்றும் கரணங்களாகின்றன. எண்ணுவதும், பேசுவதும், செய்வதும் ஒவ்வொன்றும் தன்னளவில் கர்மமாகிறது. எண்ணத்தால் நிகழும் கர்மங்கள் எண்ணிறந்தவை.
இனிக் கர்ம நடைமுறைக்கும் ஆத்மாவுக்கும்
உள்ள தொடர்வு யாது? விடை
வருகிறது :
16. தத்ரைவம்
ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:
பஸ்யத்யக்ருதபுத்தித்வாந்ந
ஸ பஸ்யதி துர்மதி:
து ஏவம் ஸதி-இங்ஙனமிருக்கையில்,
ய: அக்ருதபுத்தித்வாத்-எவன் புத்திக் குறைவால்
ஆத்மாவை, தத்ர கேவலம் ஆத்மாநம்-அங்கே (கர்மங்களைச் செய்வதில்)
தனிப்பொருளாகிய, ஆத்மாவை, கர்தாரம் பஸ்யதி-கர்த்தாவாக (தொழில்
செய்பவனாக) காணுகிறானோ,
ஸ துர்மதி: ந பஸ்யதி-அந்த
மூடன் காட்சியற்றவனேயாவான்.
பொருள்
: இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன்
புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
இக்கோட்பாட்டை
அறிதற்கும் மோட்டார் வண்டி ஒன்றை அமைப்பதையே
மீண்டும் உபமானமாக எடுத்துக்கொள்ளலாம். மண், நீர், தீ,
காற்று ஆகிய நான்கு பூதங்களும்
அவ்வண்டியமைப்புக்கு இன்றியமையாதவைகளாகின்றன. வண்டிக்குத் தேவையானவைகளெல்லாம் பூமியினின்று வந்தவைகள். அவைகளை யெல்லாம் கொடுத்து
உதவியது பூமி. பிறகு வண்டி
ஓடுதற்கு நிலைக்களமாயிருப்பதும் பூமி. ஆனால், மோட்டார்
வண்டியின் செயல் ஒன்றிலும் பூமி
சம்பந்தப்பட்டதல்ல. அது எப்பொழுதும் தன்மயமாயிருக்கிறது.
வண்டி ஓடும் விஷயத்தில் பூமியைக்
கர்த்தாவென்று கருதுவது பொருந்தாது.
எது கர்மம் செய்கிறதோ அது
கர்த்தா. பிரகிருதியின் கூறுபாடுகள் கர்மம் செய்கின்றன. மேலே
சொன்ன ஐந்தும் பிரகிருதியினுடைய கூறுபாடுகள்.
ஐந்து காரணங்களில் ஒன்றாகிய அந்தராத்மா அல்லது தெய்வம் பிரகிருதியோடு
சேர்ந்ததா அல்லது ஆத்ம சொரூபமா
என்ற கேள்வி எழுகிறது. எங்கும்
வியாபகமாகிய ஆகாசத்துக்கு அடுத்தபடியில் இருப்பது வாயு. அது கிட்டத்தட்ட
ஆகாசம் போன்றது என்றாலும் அது
ஆகாசம் ஆகாது. ஆகாசம் அசைவற்றது.
வாயு அசையும் தன்மையது. இங்குத்
தெய்வம் என்று சொல்லுவது சித்
ஆபாசனாகிய ஜீவாத்மா. அது சேதனம் போன்று
தோன்றுகிறது. உண்மையில் அது ஜடமாகிய பிரகிருதியே.
ஆத்மாவின் சன்னிதான விசேஷத்தால் பிரகிருதி வேலை செய்கிறது. சித்
ஆகாசத்தில் அது தோன்றி, நின்று
பிறகு நீங்குகிறது. ஆத்மாவோ செயலற்றது. அது
சுத்த சைதன்யம். மாயாசக்தியாகிய பிரகிருதி அதை ஆரோபித்து அதன்மீது
தோன்றிக்கொண்டிருக்கிறது. அதனால் ஆத்ம சொரூபத்துக்கு
லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை.
கர்மத்துக்கு அப்பாற்பட்டுள்ள சுத்த சைதன்யம் அல்லது
பேரறிவு மனிதனது எதார்த்த சொரூபம்.
புத்தி தெளிவடையாதவனுக்கு இது விளங்குவதில்லை. ஆகையால்
அவன் உண்மையைக் காண்கிறானில்லை.
17. யஸ்ய
நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந
லிப்யதே
ஹத்வாபி
ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி
ந நிபத்யதே
யஸ்ய அஹங்க்ருதோ பாவ ந-எவருடைய
(உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும்
எண்ணம் இல்லையோ, யஸ்ய புத்தி ந
லிப்யதே-பற்றுதல்கள் அற்று மதியுடையவன், ஸ:
இமாந் லோகாந்-அவன் இந்த
உலகங்கள் அனைத்தையும், ஹத்வா அபி ந
ஹந்தி ந நிபத்யதே-கொன்ற
போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட
மாட்டான்.
பொருள்
: நான் எனுங் கொள்கை தீர்ந்தான்,
பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன்
இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி
யாகான், கட்டுப்பட மாட்டான்.
தன்னைக்
கர்த்தாவென்று கருதுவதிலும், அகங்காரம் கொள்ளுதலிலும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் காட்டுகிறான்.
நாடக மேடையில் ஒருவன் கொலை புரிபவன்
போன்று நடிக்கிறான். மற்றொருவன் கொலையுண்பவனாக நடிக்கிறான். மற்று, இதே செயல்
உலகில் உண்மையாக நிகழ்கிறது. பாசாங்காகச் செய்த கர்மம் அகங்காரத்தையோ
கர்த்ருத்வத்தையோ உண்டு பண்ணவில்லை. வாஸ்தவத்தில்
நிகழ்ந்த கொலைச் செயலானது அதில்
சம்பந்தப்பட்டவர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தது. இவ்விரண்டு
நிகழ்ச்சிகளும் ஒன்று கூடியது ஞானியின்
செயல். போர்க்களத்தில் அர்ஜுனன் தன் பாட்டனாராகிய பீஷ்மரைக்
கொன்றான். ஆயினும் கொன்றவனாக அவன்
தன்னைக் கருதவில்லை. ஏனென்றால் அகங்காரமும் பற்றுதலும் அவனுடைய மனதைவிட்டு அகன்றுவிட்டன.
பீஷ்மர் கொல்லப்பட்டவராகத் தம்மைக் கருதவில்லை. அணிந்திருந்த
சட்டையைப் பலவந்தமாகக் கிழித்து எறிந்ததற்கு ஒப்பாயிற்று அவர் உடலைக் களைந்த
செயல்.
கண்ணாடியில்
ஒருவனுடைய பிம்பம் தோன்றி ஆடுகிறது.
அத்தோற்றத்துக்கும் ஆட்டத்துக்கும் கர்த்தா கண்ணாடியல்ல. இனி,
அந்தப் பிம்பம் கண்ணாடியில் பதிந்திருப்பதும்
இல்லை. பிம்பத்தை விளக்குதற்கிடையில் கண்ணாடி பற்றற்றிருக்கிறது.
ஆத்ம சைதன்யத்தின்மீது பிரகிருதியின் செயல்களெல்லாம் தோன்றுகின்றன. அதனால் ஆத்மா ஒரு
செயலும் செய்வதன்று. அப்பேரறிவு பிரகிருதியை விளக்கியதால் அது பிரகிருதியில் பந்தப்பட்டதுமல்ல.
தனது நிஜசொரூபமாகிய சைதன்யத்தில் உறுதிபெற்றிருப்பவன் உடலும் இந்திரியங்களும் செய்கின்ற
செயலிலே கட்டுண்டு போவதில்லை. கொல்லுதல் முதலியன பிரகிருதியின் வியவகாரங்களேயாம்.
புருஷன்
யாதொரு காரியத்தையும் செய்யாது சலனமற்றுக் கிடக்கிறான் என்றும், பிரகிருதியே சகலத்தையும் செய்துவருகின்ற தென்றும், புருஷன் வெறும் சாக்ஷிமாத்திரமாகத்தானிருக்கிறானென்றும்
சாங்கியதர்சனம் கூறுகின்றது. மேலும், பிரகிருதியும் புருஷனில்லாது
எதனையும் செய்யவியலாது என்றும் அது கூறுகின்றது.
18. ஜ்ஞாநம்
ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித:
கர்மஸங்க்ரஹ:
ஜ்ஞாநம்
ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா-அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்,
த்ரிவிதா கர்மசோதநா-இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன, கர்தா கரணம் கர்ம
இதி த்ரிவித:-கர்த்தா, கருவி, செய்கை என்று
மூன்று விதங்களும், கர்மஸங்க்ரஹ:-கர்மத்தின் அமைப்பு ஆகும்.
பொருள்
: அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத்
தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா
எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.
அறிவு அல்லது ஞானம் என்பது
இவ்வுலக சம்பந்தமான ஞானம். அறியப்படுபொருள் அல்லது
ஞேயம் என்பது பொதுவாயுள்ள உலகப்
பொருள்கள். அறிபவன் அல்லது பரிக்ஞாதா
என்பவன் உபாதிகளோடு கூடியுள்ள ஜீவன். இம்மூன்றும் சேர்ந்து
திரிபுடி எனப்படுகிறது. ஒன்று உள்ள இடத்தில்
மற்ற இரண்டும் இருக்கும். அதாவது அறிபவன் ஒருவன்
இருந்தால் அறிவு என்னும் இயல்பு
அவனுக்குரியதாகிறது. அத்தகையவன் எதை அறிகிறான் என்ற
கேள்வி வருகிறது. முக்கோணம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதுபோன்று திரிபுடியும் இணைந்திருக்கிறது. இம்மூன்றினுடைய சேர்க்கையால் மனம், மொழி, மெய்
ஆகிய மூன்றின் கர்மம் நடைபெறுகிறது. கர்மத்தில்
இனியது எது, இன்னாதது எது
என்ற பாகுபாடு திரிபுடியால் ஏற்படுகிறது.
கருவியில்
அகக்கருவி, புறக்கருவி என இருவகை உண்டு.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
ஆகிய இவை அந்தக்கரணம் அல்லது
அகக்கருவி. மெய், வாய், கண்,
மூக்கு, காது ஆகிய ஐந்தும்
புறக்கருவிகளாம். இவைகள் ஞானேந்திரியம் ஐந்து,
கர்மேந்திரியம் ஐந்து ஆகப் பரிணமிக்கின்றன.
கர்மம் செய்பவனாகிய ஜீவனே கர்த்தாவாகிறான். இங்ஙனம்
ஞானமும் கர்மமும் ஜீவனிடத்து இணைபிரியாது அமைந்திருக்கின்றன. ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துதற்கு ஞானமும் கர்மமும் இன்றியமையாதவைகள்.
படிப்பும் விளையாட்டும் சேர்ந்திருந்தால்தான் சிறுவன் ஒருவன் முன்னேற்றமடைய
முடியும். அவனது உடலும் உள்ளமும்
சேர்ந்தே வளரவேண்டும். ஜீவாத்மாவோ ஞான அனுபவம் இருக்கிறவளவு
கர்மத்தைச் செவ்வையாகச் செய்கிறான். முயன்று வினையாற்றும்பொழுது அது
ஞான அனுபவத்தை உண்டுபண்ணுகிறது. ஆக, ஞான திரிபுடியும்
கர்ம திரிபுடியும் அவனுக்குத் தேவை.
ஜீவன் பெறுகிற ஞானத்திலும், செய்கின்ற
கர்மத்திலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாட்டைக் காண்கிறோம்.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம் யாது? விடை
வருகிறது :
19. ஜ்ஞாநம்
கர்ம ச கர்தா ச
த்ரிதைவ குணபேதத:
ப்ரோச்யதே
குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி
குணஸங்க்யாநே-குணங்களை யெண்ணுமிடத்தே, ஜ்ஞாநம் கர்ம ச
கர்தா ச-ஞானம், கர்மம்,
கர்த்தா, குணபேதத:-இவை குண பேதங்களால்,
த்ரிதா ஏவ-மும்மூன்று வகைப்படும்
என்று,
ப்ரோச்யதே-சொல்லப் படுகின்றன, தாநி
அபி யதாவத் ச்ருணு-அவற்றையும்
உள்ளபடி கேள்.
பொருள்
: குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா
இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.
ஆறு சாஸ்திரங்களுள் சாங்க்ய சாஸ்திரம் நான்காவது
ஸ்தானம் பெறுகிறது. இது கபில முனிவர்
இயற்றியது. பிரகிருதி தத்துவங்களை விளக்குதற்கு இது முடிவான பிரமாணம்.
ஆகையால் குணங்களின் பாகுபாடுகளை இந்நூலினின்றே தெரிந்துகொள்ளவேண்டும். பல புருஷர்கள் இருப்பதாக
சாங்க்ய சாஸ்திரம் சொல்லுகிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரமாத்மா
உள்ளது என்பதை சாங்க்ய சாஸ்திரம்
சொல்லுவதில்லை. பரபிரம்மத்தை அறிதற்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமல்ல.
அதற்கு வேதாந்த சாஸ்திரமே பிரமாணமாகிறது.
முக்குணமயமாயுள்ள இயற்கைத் தத்துவங்களுக்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமாகிறது.
அவைகளை உள்ளபடி கேள் என்று
பகவான் பகர்வது யுக்திக்கும் அனுபவத்துக்கும்
அவைகள் ஒவ்வும் என்பதாம்.
அதிகாரி
பேதம் என்பது முக்கியமானதொரு கோட்பாடாகும்.
உத்தமம், மத்திமம், அதமம் என்று அதிகாரியின்
பேதம் பிரித்தெடுக்கப்படுகிறது. தலைமாணாக்கன், இடைமாணாக்கன், கடைமாணாக்கன் என்பது இதுவே. உத்தம
அதிகாரிக்குச் சிறிது புகட்டினாலும் உண்மை
விளங்குகிறது. அவனுக்கு மௌனோப தேசம் ஒப்பற்ற
உபதேசமாகிறது. கீழ்நிலைக்குப் போகப் போக உபதேசம்
வெவ்வேறு வடிவெடுத்தாகவேண்டும். பின்பு, புகட்டுகின்றவனிடத்து வல்லமையிருந்தால் மிக
மந்த அதிகாரிக்கும் ஓரளவு உண்மையைப் புகட்டலாம்.
20. ஸர்வபூதேஷு
யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே
அவிபக்தம்
விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்
ஏந விபக்தேஷு-எந்த ஞானத்தினால் தனித்தனியான,
ஸர்வபூதேஷு-உயிர்கள் அனைத்திலும், அவிபக்தம் அவ்யயம் ஏகம் பாவம்-பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை,
ஈக்ஷதே - காணுகிறானோ, தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம்
வித்தி-அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி.
பொருள்
: பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற
நாசமற்ற ஒரே இயல்பைக் காணும்
ஞானம் சாத்வீகமென்றறி.
பிரகிருதியின்
கூறுகள் வேறுவேறாய்ப் பிரிந்துள்ளன. சராசரங்களனைத்தும், ஜட சேதனங்களனைத்தும் மாயா
காரியங்களே. அவைகளுக்கெல்லாம் ஆதாரமாயிருப்பது பரமாத்மா. அது ஏக வஸ்து.
ஆகாசத்தைப் போன்று அது பிளவுபடாதது.
ஜகத் அதனிடத்திருந்து தோன்றி வருவதால் அது
குறைவுபடுகிறதில்லை. ஏனென்றால் அது அகண்ட வஸ்து;
கூடுதல் குறைதல் என்பது அதற்கு
இல்லை. ஆகையால் அது அழியாதது.
ஆகாசமானது பாண்டங்களில் பிளவு படுவதில்லை. அங்ஙனம்
வெவ்வேறு பூதத்திடத்து ஆத்மா வெவ்வேறு ஆத்மாவாக
வடிவெடுக்கவில்லை. துவைதமல்லாத இந்த ஆத்மாவை உள்ளபடி
அறிவது சாத்விக ஞானமாம்.
காற்று
நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும்கொண்டு வீசுமாயினும்
அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.
21. ப்ருதக்த்வேந
து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்
வேத்தி
ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி
ராஜஸம்
து யத் ஜ்ஞாநம்-ஆனால்
எந்த ஞானத்தின் மூலமாக, ஸர்வேஷு பூதேஷு-உயிர்களனைத்திலும், ப்ருதக்விதாந் நாநாபாவாந்-வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள், ப்ருதக்த்வேந
வேத்தி-பிரித்துக் காணும், தத் ஜ்ஞாநம்
ராஜஸம் வித்தி-அந்த ஞானம்
ராஜசம் என்றுணர்.
பொருள்
: உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப்
பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.
ஒவ்வொரு
தேகத்திலும் ஒரு தனி ஆத்மா
இருக்கிறதென்றும், அதற்கு அலாதி லக்ஷணங்கள்
இருக்கின்றன வென்றும் அறிவது ராஜஸ அறிவு.
பொன் தாதுவைப் பூமியில் வெவ்வேறு பிரதேசங்களில் வெட்டி யெடுக்கலாம். தாதுவில்
படிந்துள்ள அழுக்கு தேசத்துக்கு ஒருவிதமாயிருக்கலாம்.
அவ் அழுக்குகளை யெல்லாம் நீக்குதல் முறை. அழுக்கு நீங்கப்பெற்ற
பின் தூய தங்கம் ஒரே
பாங்குடையது. இது இன்ன தேசத்துத்
தங்கம் என்ற வேற்றுமை போய்விடுகிறது.
உபாதிபேதத்தால் ஆத்மாக்கள் பலவாகத் தென்படுகின்றன. உபாதிகளுக்கு
முதன்மை கொடுப்பது ரஜோகுண அறிவின் இயல்பு.
உபாதிகள் என்ற அழுக்கை நீக்கிவிட்டால்
எஞ்சியிருக்கிற சுத்த சைதன்யம் அல்லது
ஆத்ம சொரூபம் யாண்டும் ஒன்றே
என்பது விளங்கும். கனவு இல்லாத ஆழ்ந்த
உறக்கத்துக்கு சுழுத்தி என்று பெயர். ஆங்கு
வெவ்வேறு பிரக்ஞைகள் இல்லை. வேற்றுமையைக் கடந்துள்ள
அந்நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒற்றுமையை உணர அது உதவும்.
22. யத்து
க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே
ஸக்தமஹைதுகம்
அதத்த்வார்தவதல்பம்
ச தத்தாமஸமுதாஹ்ருதம்
து யத் ஏகஸ்மிந் கார்யே-ஆனால் எந்த ஞானம்
யாதேனும் ஒற்றைக் காரியத்தை, க்ருத்ஸ்நவத்
ஸக்தம்-அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்,
தத் அஹைதுகம்-யுக்திக்கு பொருந்தாததும், அதத்த்வார்தவத்-உண்மையில் அறியாததும், அல்பம் ச-அற்பத்
தன்மை உடையதும், தாமஸம் உதாஹ்ருதம்-தாமசமென்று
கூறப்படும்.
பொருள்
: காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக்
கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும்,
அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று
கூறப்படும்.
பஞ்ச பூதங்களால் ஆகிய தேகத்தை ஆத்மாவென்று
கருதுபவர் இருக்கின்றனர். கடவுள் வழிபாட்டுக்கு விக்கிரகம்
துணைபுரிகிறது. கல்லால் அல்லது மரத்தால்
செய்த விக்கிரகத்தையே கடவுளாக நினைப்பவர் உளர்.
அந்த விக்கிரகம் சிதைவுபட்டுப் போனால் கடவுள் அழிந்துபோய்விட்டார்
என்பது அத்தகையவர் நம்பிக்கையாகும். ஒரு காரியத்தை முழுதுமென்று
பற்றிக் கொள்ளுதற்கு இது சான்று ஆகும்.
தான் தேகத்தைவிட மேலானவன் என்பதையும், கடவுள் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர்
என்பதையும் மந்த புத்தியுள்ள அம்மனிதன்
அறியான். விக்கிரகமானது கடவுளுடைய சொரூபத்துக்கு வெறும் புறச் சின்னமாகிறது.
கடவுள் அவ்வடிவத்தில் அடங்கியவர் அல்லர். புல்லறிவாளர்க்கு இது
விளங்குகிறதில்லை. தமோ குணத்தில் உதித்துள்ள
அவ்வறிவை ஆராய்ந்து பார்த்தால் அது யுக்திக்குப் பொருந்தாதது
என்பது விளங்கும். யுக்திக்கு அது முற்றிலும் முரண்பட்டது.
உண்மைக்கும் அப்புல்லறிவுக்கும் வெகுதூரம். நன்மை ஒன்றும் அவ்வறிவினின்று
விளைவதில்லை. ஆக, அது அற்பமானதென்று
இயம்பப்படுகிறது.
23. நியதம்
ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்
அபலப்ரேப்ஸுநா
கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே
யத் கர்ம-எந்த செய்கை,
நியதம் ஸங்கரஹிதம்-விதிப்படி பற்றுதல் இன்றி, அபலப்ரேப்ஸுநா-பயனைக்
கருதாமல், அராகத்வேஷத:-விருப்பு வெறுப்பின்றி, க்ருதம்-செய்யப் படுகிறதோ,
தத் ஸாத்த்விகம் உச்யதே-அது சாத்விக
மெனப்படும்.
பொருள்
: பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு
வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை,
சாத்விக மெனப்படும்.
சுவாசிப்பது
உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கர்மமாகிறது. ஆயினும் அது விருப்பு
வெறுப்பு அற்றுச் செய்யப்படுகிறது. ஒருவனுக்கு
நியமிக்கப்பட்டுள்ள கர்மமே அவனுடைய நித்திய
கர்மமாகிறது. நித்திய கர்மம் மனபரிபாகத்துக்கு
ஏற்றபடி மாறுகிறது. கணிதத்தில் கூட்டல் கழித்தல் போடுவது
புதிதாகப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கும் சிறுவன் ஒருவனுக்கு நித்திய
கர்மமாகும். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கனுக்கு அத்தகைய கணக்குப்போடுவது நித்திய
கர்மமாகாது. அவனது வகுப்புக்கேற்ற மேலான
கணக்குகளை அவன் போடவேண்டும். அதுபோன்று
அவரவர் பரிபாகத்துக்கு ஏற்றபடி சமுதாயத்தில் எல்லார்க்கும்
கடமையுண்டு. அறப்போர் புரிந்து தீமையைக் களைந்து நலத்தைக் காப்பாற்றுவது
அர்ஜுனனுக்கு நியமிக்கப்பட்ட கர்மமாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகைய
மேலான கடமையுண்டு. அதை முறையாகச் செய்யவேண்டும்;
சுவாசிப்பது போன்று இடைவிடாது செய்யவேண்டும்.
பின்பு, அதில் பற்றுவைக்காது செய்யவேண்டும்.
பற்று அற்றவன் தன்னை எக்கர்மத்துக்கும்
கர்த்தாவென்று எண்ணுவதில்லை; வெறும் கருவியென உணர்கிறான்.
அது சாத்விகமான கர்மமாகும்.
சாத்விக
இயல்புடையவன் செய்யும் ஆத்ம சாதனங்களை ஆடம்பரமாக
மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதில்லை. கூடிய வரையில் தனியாக
அவன் அவைகளைச் செய்து முடிக்கிறான். இரவில்
மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கொசு
வலைக்குள் உட்கார்ந்துகொண்டு அமைதியாகத் தியானம் செய்கிறான்.
24. யத்து
காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா
புந:
க்ரியதே
பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்
து யத் கர்ம-ஆனால்
எந்த செயல், புந: காமேப்ஸுநா-விருப்பங்களுக்கு வசப்பட்டவனால், வா ஸாஹங்காரேண-அல்லது
அகங்காரமுடையவனால், பஹுலாயாஸம்-செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை,
தத் ராஜஸம் உதாஹ்ருதம்-அது
ராஜசம் எனப்படும்.
பொருள்
: விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும்
மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.
ஆசையில்
இரண்டுவிதமுண்டு. ஒன்று மனிதனுடைய முன்னேற்றத்துக்குத்
துணைபுரிவது. அருள் தாகம், சீலத்தில்
விருப்பம், பரோபகாரச் சிந்தனை முதலியன வேண்டப்படும்
ஆசைகளாகின்றன. ஆனால் மனிதனை உலக
பந்தத்தில் மேலும் ஆழ்த்தும் கீழான
ஆசைகளை அகற்றவேண்டும். முறையாக, அளவாகப் பணம் சம்பாதிப்பதும்
செலவிடுவதும் திரவிய யக்ஞமாகும். ஆனால்
பொருந்தாத வழிகளில் மனிதன் பணம் சம்பாதிக்கும்
யந்திரமாய் மாறிவிடலாகாது. அப்பேராசையானது அவனிடத்திருக்கும் மனுஷத்தன்மைகளையெல்லாம் பாழாக்குகிறது.
சரீரம்
உடைத்திருப்பதே ஒருவித அகங்காரம். அதை
சுகபோகத்துக்கென்றே வைத்திருப்பது, அதை அலங்கரிப்பது, கொழுக்கச்
செய்வது முதலியன கொடிய அகங்காரமாகும்.
கிடைப்பதற்கு அரிய மானுடப் பிறவி
அதனால் அனர்த்தமாய்ப் போகிறது. தனக்கு நிகரானவர் யார்
இருக்கிறார் என்ற எண்ணத்துடன் உடலை
வளர்ப்பவருடைய தடித்த அகங்காரம் ரஜோகுணத்திலிருந்து
உண்டானது. சரீரம் ஈசனுடைய ஆலயம்
என்ற எண்ணத்தால் அதை வெல்லவேண்டும்.
துஷ்ட அகங்காரம் என்பது யாது? என்னைத்
தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது;
என்னிலும் மேம்பட்டவர் யார்? என்று சொல்லுகிற
அகங்காரந்தான்.
25. அநுபந்தம்
க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்
மோஹாதாரப்யதே
கர்ம யத்தத்தாமஸமுச்யதே
யத் கர்ம அநுபந்தம்-எந்தச்
செய்கையின் பின்விளைவையும், க்ஷயம்-அதனால் பிறருக்கு
நேரக்கூடிய நாசத்தையும், ஹிம்ஸாம்-துன்பத்தையும், பௌருஷம் ச-செய்வானது
திறமையையும், அநவேக்ஷ்ய-கருதாமல், மோஹாத் ஆரப்யதே-அறிவின்மையால்
தொடங்கப்படுகிறதோ, தத் தாமஸம் உச்யதே
-தாமச மெனப்படும்.
பொருள்
: செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய
நாசத்தையும், துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.
தமோகுணம்
நிறைந்த மனிதனுக்குத் தான் தொடுத்த கர்மத்தினின்று
விளைவது நன்மையா, கேடா என்று எண்ணிப்பார்க்கும்
நல்லறிவு இல்லை. உடலின்கண் உள்ள
வலிவு நஷ்டமும், பொருள் நஷ்டமும், ஆயுள்
நஷ்டமும் சேர்ந்து உண்டாகும் என்பது அறிவின்மையில் ஆழ்ந்திருப்பவனுக்கு
விளங்காது. அவனுடைய முயற்சி தனக்கு
மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் துன்பத்தை உண்டு பண்ணும் தன்மையது.
தான் படைத்துள்ள திறமையானது தான் எடுத்துக்கொண்டுள்ள கர்மத்தைச்
சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான்.
விவேகமின்மையே அதற்குக் காரணமாகும்.
மிகுந்த
தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள். கள்ளங் கபடமற்ற மனதையுடையவராயிருந்தால்
கடவுள் காட்சி கிடைக்கும். அவ்வித
எளிய மனதை யுடையவர்க்கே கடவுள்
தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது
வழக்கம். ஆனால் எளிமை, உண்மை
இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக்
கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும்
உண்டு. பக்தனாக இருக்கவேண்டும்; ஆனால்
அதன்பேரில் மூடனாக இருக்கக்கூடாது. எப்பொழுதும்
மெய்ப்பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்தியத்திலிருந்து அநித்தியத்தையும் அகற்றுவதற்காக மனதிலே விசாரணை செய்து
பார்க்கவேண்டும். பிறகு அநித்தியத்தை அகற்றிவிட்டு
நித்திய வஸ்துவின்மீது மனதை நிறுத்த வேண்டும்.
ஞானத்தையும்
கர்மத்தையும் பாகுபடுத்தியான பிறகு பகவான் இனி
கர்த்தாவைப் பாகுபடுத்துகிறார்.
No comments:
Post a Comment