Saturday, 2 August 2014

47. அசுவாருட மூர்த்தி

47. அசுவாருட மூர்த்தி


மாணிக்கவாசகர் சிவபெருமானின் கூற்றுப்படி ஆவணி திங்களில் குதிரைகள் வரும் என அரண்மனையில் காத்திருந்தார். அரசரும் மாணிக்கவாசகரை அழைத்து குதிரைகள் எப்பொழது வருமென கேட்டார். இன்னும் ஓரிரண்டு நாட்களில் வரும் என்றார். அனைவரும் காத்திருந்தனர், ஆனால் குதிரைகள் வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. ஆகவே மாணிக்கவாசகரைத் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி சிறையிலடைத்தார். சிறையில் மாணிக்கவாசகர் சோர்ந்துவிடாமல் சிவபெருமானைத் துதித்தபடியே இருந்தார் பாடல்கள் பலப்பாடியபடி இறைவனை துதித்தார். இதனால் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவர் தனது கணங்களை அழைத்து கானகத்திலுள்ள நரிகள் அனைத்தையும் பிடித்து வருமாறும், பின்னர் நரிகளை பரிகளாக்கி அவற்றை அழைத்துச் செல்லும் பொறுப்பை தனது கணங்களுக்கு ஒப்படைத்து விட்டு, அதன் தலைவர் பொறுப்பை ஏற்று அதனை வழிநடத்தியபடி சிவபெருமான் உயர்ந்த வகை குதிரைமீதேறி வந்தார்.

குதிரைகள் வருவதைக் கண்டு மன்னன் மனம் மகிழ்ந்து அனைவரையும் உபசரித்தார் குதிரைகளை லாயத்தில் கட்டினார். இதனால் மாணிக்கவாசகரை விடுவித்தான். இரவில் குதிரைகள் தனது சுயரூபத்தைக் காட்டி நரிகளாக மாறி கானகத்திற்கேச் சென்றனர். இச்செய்தி மன்னனை அடைந்ததும் மாணிக்கவாசகர் பழையபடி கொடுமைபடுத்தப்பட்டு சிறைக்குச் சென்றார். அச்சமயத்தில் மாணிக்கவாசகரின் எண்ணத்தின் விளைவாகவும், சிவபெருமான் மேல்கொண்ட நிந்தனையாலும், வைகையில் வெள்ளம் வந்து கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. அதையும் அடைக்கும் பணியில் வீட்டிற்கொவர் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வயதானப்பாட்டி தனக்கு ஆள்இல்லாமல் வருந்தினார். அப்பொழுது கூலியான் போல் வேடமுற்று பாட்டியின் பிட்டுவை உண்டு வேலை செய்யாமல் படுத்திருந்தார். அச்சமயம் அங்குவந்த மன்னன் சிவபெருமானைப் பிரம்பால் அடிக்க அவ்வடி உலக உயிர்கள் ஒவ்வொருவரின் மேலும் பட்டது. உடன் வானில் அசரீரீ தோன்றி மாணிக்கவாசகரை விடுவிக்கும்படி சொன்னது உண்மையறிந்த மன்னன் அவரை விடுவித்து சிவபெருமானிடமும், அவரிடமும் மன்னிப்பு வேண்டினான். மாணிக்கவாசகர்க்காக நரிகளை பரிகளாக்கி அதன் தலைவனாக சென்று வந்த கோலமே அசுவாருட மூர்த்தி யாகும்.


மதுரையில் கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் சொக்கநாதர். இறைவி திருநாமம் மீனாட்சி யாகும். இங்கமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பக்தி நமக்கு மேலிடும். இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க வாகன யோகம், மனம் பக்குவமடையும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer