Saturday, 16 August 2014

பதினெட்டாம் அத்தியாயம் 3


47. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம் 

ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும், விகுண: ஸ்வதர்ம: ஸ்ரேயாந்-தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று, ஸ்வபாவ நியதம் குர்வந்-இயற்கையி லேற்பட்ட தொழிலை, கில்பிஷம் ஆப்நோதி-பாவமடைய மாட்டான்.

பொருள் : பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.

சுபாவத்திலமைந்த கர்மமே ஸ்வதர்மம் அல்லது தனக்கு உகந்த தொழில் எனப்படுகிறது. அர்ஜுனனுக்கு நன்றாகப் போர்புரிய முடியாவிட்டாலும் யுத்த நெருக்கடியில் அவன் போர் புரிவதே உசிதம். துஷ்டர்கள் சமூகத்துக்குக் கேடு செய்து கொண்டிருக்கையில் தான் வனத்துக்குச் சென்று நன்கு தவம் புரிவது அவனுக்கு ஒவ்வாது. போக்கிரிகளை எதிர்த்துப்போராடி மாய்வது மேல்.

வைத்தியத்தில் பயிற்சிபெற்ற ஒருவன் தனக்கு வாக்குவன்மையிருக்கிறதென்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது. விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தன் தொழிலை மாற்றலாகாது. அதனால் காலமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றன. குறைந்த முயற்சியில் பரந்த காரியத்தைச் சாதிப்பவன் நல்ல யோகியாகிறான். உலக வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதும் ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவதும் யோகிக்குக் குறிக்கோள். எந்த நகையை வேண்டுமானாலும் பொன்னாக மாற்றலாம். பொன்னாக்கும் விஷயத்தில் பாதி வேலையை ஒரு நகையிலும் மற்றப் பகுதியை இன்னொரு நகையிலும் செய்யலாகாது; பொருள் நஷ்டம், அறிவின்மை ஆகிய இரண்டும் ஆங்குப் புலப்படும். எக்கர்மத்தை முறையாகச் செய்தாலும் அது கடவுள் வழிபாடாகிறது. தனக்கு வாய்த்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரபுத்தியில்லாதவன் யோகியாக முடியாது. அப்படியானால் பொல்லாங்கு நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை ஆயத்தப்படுத்தியவன் அதை வேண்டாமென்று விலக்கிவிட்டுத் தூய்மை திகழும் தவச் செயலில் துணியலாகாதா என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது.

48. ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா

கௌந்தேய-குந்தி மகனே, ஸஹஜம் கர்ம ஸதோஷம் அபி-இயல்பான தொழில் குறையுடையதாயினும், த்யஜேத்-கைவிடலாகாது, ஹி தூமேந அக்நி: இவ-ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல, ஸர்வாரம்பா-எல்லா தொழில்களிலும், தோஷேண ஆவ்ருதா:-சூழ்ந்தே நிற்கின்றன.

பொருள் : குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது. எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.

விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நின்று ஆராய்பவனுக்கு இப்பேருண்மை விளங்கும். அதாவது கேடு இல்லாத கர்மம் இப்பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம்; அதனால் காற்றிலுள்ள அணுப்போன்ற உயிர்கள் மடிகின்றன. உண்கிறோம்; மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாது போகிறது; கருவி கரணங்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம். பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை. அப்படியானால் நல்வினை தீவினை யென்று பிறகு ஏன் பாகுபடுத்துகிறோம் ? தீவினையகற்றி நல்வினையை நன்கு இயற்றுக, என்று சான்றோர் சாற்றியிருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. விறகுக்கட்டை எரிகிறது. எந்த விறகில் அதிகம் புகையிருக்கிறதோ அது கெட்ட விறகு. எதில் புகை குறைந்திருக்கிறதோ அது நல்ல விறகு. ஒரு சந்தர்ப்பத்தில் அதிக நலத்தையும் குறைந்த கேட்டையும் உண்டு பண்ணும் ஒரு வினையானது மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகையான கேட்டையும் குறைந்த நலத்தையும் விளைவிக்கலாம். காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு ஒருவினையில் அமைந்துள்ள நலமோ, கேடோ மாறுபாடு அடைகிறது. வினைப்பயனை விரும்புவர் இவைகளையெல்லாம் தூக்கி வினைசெய்கிறார்கள். யோகியின் இயல்பு மிக உயர்ந்தது. தனக்கு அமைந்த கடமையை அவன் தேவ ஆராதனையாகச் செய்கிறான். வழிப்போக்கன் ஒருவன் ஒரு சத்திரத்தில் கிடைத்த விறகைக்கொண்டு சமைத்துப் புசித்துவிட்டுப் புறப்படுகிறான். நல்ல விறகு கிடைக்கவில்லையென்று ஆங்கு அவன் காத்திருக்க மாட்டான். யோகி ஒருவன் எடுத்த உடல் எக் கர்மத்துக்குத் தகுதியானதோ அக்கர்மத்தை தேவ ஆராதனையாகச் செய்து முடிக்கிறான். தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும். ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதோ அதைச் செய்வது முறை.

தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது :

49. அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதிகச்சதி 

அஸக்தபுத்தி:-பற்றற்ற மதியுடன், விகதஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந-விருப்பம் தவிர்த்தவனாக, ஜிதாத்மா-தன்னை வென்றவன், ஸர்வத்ர-எங்கும், பரமாம் நைஷ்கர்ம்யஸித்திம்-செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி), அதிகச்சதி-அடைகிறான்.

பொருள் : யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.

கர்மயோகி ஒருவன் ஓயாது வினையாற்றுகிறான். ஓய்வு ஒழிவை அவன் அறிந்தவன் அல்லன். அவனைப் பார்ப்பவர் கண்ணுக்கு அவன் இத்தகைய காட்சி கொடுக்கிறான். மற்று மனதினுள் அவனுடைய இயல்பு எத்தகையது என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தையாவது தேசத்தையாவது தனக்குச் சொந்தமானதென்று அவன் அபிமானிப்பதில்லை. ஊரெல்லாம் அவனுக்குச் சொந்தமெனலாம்; அல்லது ஓர் ஊரும் இல்லான் எனலாம். பொருள்கள் பல அவனால் கையாளப்படுகின்றன. அவைகள் வந்ததும் போனதும் அவனுடைய மனதில் ஒரு விகாரத்தையும் உண்டுபண்ணவில்லை. பாலத்தில் ஒருபுறம் நீர் வருகிறது; மற்றொருபுறம் அது வடிகிறது; நீரில் பற்றற்றுப் பாலம் இருக்கிறது. பொருளில் யோகியின் மனது அங்ஙனம் பற்றற்று இருக்கிறது. மக்களுள் எத்தனைபேர் தன்னைச் சார்ந்திருக்கின்றனர், உதாசீனராயிருப்பவர் யார், பகை கொள்பவர் யார் என்றெல்லாம் அவன் எண்ணுவதில்லை. பற்றற்ற புத்தியின் பாங்கு இதுவாம். கடலில் அலைகள் தோன்றுவது போன்று சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம். யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது. சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பவன் என்று அவனை இயம்பவேண்டும். போகத்துக்கு உரிய பொருள்களை ஏராளமாகச் சிறு குழந்தையின் முன்னிலையில் கொண்டுவரலாம். அவைகளைப் போகவஸ்து என்று குழந்தை பொருள்படுத்துவதில்லை. யோகியின் மனநிலையும் அப்படிப்பட்டது. ஏனென்றால் அவன் ஆசையற்றவன். நிராசையின் நேர்மை அத்தகையது. அதுபோன்ற மன நிலையுடையவன் சந்யாசி யாகிறான். ஏனென்றால் கர்மாதீதத்திலுள்ள பிரம்மத்தில் அவன் நிலைபெற்றவனாகிறான். நைஷ்கர்ம சித்தி அல்லது வினையொழிந்த பெருநிலையென்பதும் பரப்பிரம்மம் என்பதும் ஒன்றேயாம்.

50. ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா 

ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா-ஞானத்தினுடைய உயர்ந்த நிலை, யா-எதுவோ, ஸித்திம் ப்ராப்த:-(அந்த) நிலையை அடைந்த மனிதன், யதா ப்ரஹ்ம ஆப்நோதி-எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ, ததா-அந்த நிலையை, ஸமாஸேந ஏவ-சுருக்கமாக, மே நிபோத - என்னிடமிருந்து தெரிந்து கொள், கௌந்தேய-குந்தி மைந்தனே!

பொருள் : சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.

சித்தியடைதல் என்பது பக்குவப்படுதல் என்று பொருள்படுகிறது. பக்குவப்படுத்துதல் இயற்கையின் இடையறாத் தொழில் ஆகிறது. சேதனம் அசேதனம் ஆகிய எல்லாப் பொருள்களும் ஓயாது பண்பட்டுக்கொண்டு வருகின்றன. பூமியிலே ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அடுப்புக்கரியானது நாளடைவில் வைரமாக மாறுகிறது. பளபளப்புடைய ஆபரணமாகி அது காதை அலங்கரித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு களிக்கிறோம். அத்தகைய பரிபாகம் அடைதற்கு அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. சுவை நிறைந்த ஆப்பிள் கனியொன்றை உண்டு மகிழ்வடைகிறோம். அது அடைந்துள்ள சித்தியானது நமக்கு ஆனந்தத்தை ஊட்டுகிறது. மகிழ்வடையும் நாம் சித்தியின் பொருட்டு ஆப்பிள் செடி எடுத்துக்கொண்ட முயற்சியை எண்ணிப்பார்ப்பதில்லை. வெயிலும், மழையும், பனியும், நீரும், நிலமும், காற்றும் அதன் பண்பாட்டுக்குத் துணைபுரிந்திருக்கின்றன. ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் சித்தியடைய முயன்று வருகிறது.

எல்லா உயிர்களின் முயற்சிகளுக்கிடையில் மனிதனது முயற்சி மிக மேலானது. மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவத்தில் அமைகிறது. ஸ்தூல வடிவத்தோடு அழிந்தும் போகிறது. மனிதனுடைய பரிபாகம் மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனைப்போன்று இன்னொரு மனிதன் இருப்பதில்லை. எத்தனை மனிதரோ அத்தனைவித மனபரிபாகம் உண்டு எனலாம். பல ஜன்மாந்தரங்களில் அது வந்து அமைகிறது.

யோக சாதனங்கள் எல்லாம் மனதை ஒழுங்குபடுத்துதற்கென்றே அமைந்துள்ளன. திண்ணிய மனதையுடையவனே சித்தன். பிறகு அம்மனிதன் பரஞானத்தைப் பெறுதலும் பரத்தை அடைதலும் எளிதில் கைகூடுகின்றன. ஆகையால் அதை விஸ்தரித்து விளக்க வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால் போதுமானது.

51. புத்த்யா விஸுத்த்யா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய
ஸப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய  

விஸுத்த்யா புத்த்யா யுக்த:-தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், த்ருத்யா ஆத்மாநம் நியம்ய -உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஸப்தாதீந் விஷயாந் த்யக்த்வா-ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து, ராக த்வேஷௌ வ்யுதஸ்ய -விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு.

பொருள் : தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,

சுத்தியடைந்துள்ள ஒரு பொருளில் அதற்கு அன்னியமானது ஒன்றும் இருக்கலாகாது. சுத்த ஜலம் என்று சொல்லுமிடத்து அது ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து உண்டானது. வேறு எப்பொருளுக்கும் அதில் கலந்திருக்க இடமில்லை. பரிசுத்தமான புத்தி எது என்பது கேள்வி. தூய கண்ணாடி போன்றது அது. நீலக்கண்ணாடியில் மஞ்சள் வஸ்துவைப் பார்த்தால் அது பச்சை நிறமுடையது போன்று தென்படும். நிறமில்லாத தூய கண்ணாடியில் பார்த்தால் மஞ்சள் மஞ்சளாகவே தோன்றும். புத்தியின்கண் உள்ள கலக்கம் அதை அழுக்குப்படுத்துகிறது. கோணலான புத்தியில் காணப்படு பொருளும் குற்றமுடையதாகத் தென்படும். சுத்தியடைந்த புத்தியானது ஐயமும் திரிவும் நீங்கப் பெற்றுள்ளது. இறைவனைப்பற்றிய நினைவு அதனிடத்து இடையறாது நிலைத்திருக்கும். உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளுபவன் மேலோன் ஆகிறான். மிகைப்பட்ட பொருள்களை ஆத்ம சாதகன் தனக்கென்று வைத்துக் கொள்வதில்லை. உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள், உடை முதலியவைகளைத் தவிர வேறு ஆடம்பரமான பொருள்களை அவனிடத்துக் காண முடியாது. அப்பொருள்களிடத்தும் அவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக இருக்கிறான். அடக்கமும் எளிய வாழ்வும் வடிவெடுத்தவன் ஆகிறான் அவன். மேலும் :

52. விவிக்தஸேவீ லக்வாஸீ யதவாக்காயமாநஸ:
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித

விவிக்தஸேவீ-தனி இடங்களை நாடுவோனாய், லக்வாஸீ-எளிய உணவு உண்பவனாக,
யதவாக்காயமாநஸ:-வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி, நித்யம் த்யாநயோகபர:-தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து, வைராக்யம் ஸமுபாஸ்ரித:-பற்றின்மையை நன்கு பற்றியவனாய்.

பொருள் : தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,

விஷயப் பற்றுடன் கூடிய லௌகிக புத்தியுடைய ஒருவன் பலபேருடன் சேர்ந்திருந்து காலங்கழிக்க விரும்புகிறான். பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போன்று அவன் ஆகிறான். யோகிக்கோ தனித்திருக்குமளவு பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு மனதைப் பரிசீலனை பண்ண இயலுகிறது. உணவு உடலைப் பேணுவதுபோன்று ஏகாந்தம் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது. சாதனத்தில் முதிர்ந்தவன் தனித்திருக்கும்போது ஆத்ம போதத்தில் திளைத்திருக்கிறான். மிகைபட்ட உணவு உடலுக்குச் சுமையாகிறது; சோம்பலையும் உண்டுபண்ணுகிறது. குறைபட்ட உணவு பலவீனத்தில் கொண்டுசேர்க்கும். அளவுடன் உண்பவன் யோகியாகிறான். மனதில் தெளிவும் உடலில் ஊக்கமும் அதனால் உண்டாகின்றன. யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே அவனுடைய உள்ளத்தில் உண்டாகின்றன. மனது அடங்கியிருப்பதற்கு அது அறிகுறியாகும். அவன் மிகைபடப் பேசான். பயன் படாத புன்மொழிகள் அவன் வாயினின்று வரமாட்டா. மொழியை அடக்கியதன் பயன் அதுவாம். நல்ல சாதகனது உடல் யாண்டும் அசைவற்றிருக்கும். அனாவசியமாக அது இயங்காது. ஆத்ம சொரூபத்தில் மனது மகிழ்ந்து குவிந்திருப்பது தியானமாகிறது. உலக வியவகாரம் பண்ணுவது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானது அவனுக்குத் தியானம் பண்ணுவது. வைராக்கியம் என்பது பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில் பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம்.

53. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே 

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்-அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல், விமுச்ய-விடுத்து, நிர்மம: ஸாந்த:-மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்,
ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மமாகத் தகுவான்.

பொருள் : அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.

மனிதன் வேறு, அவன் அணிந்திருக்கும் உடை வேறு. உடையைத் தன் சொரூபமாக எண்ணி இன்பமும் துன்பமும் அடைவார் உண்டு. அது ஒருவிதமான அகங்காரம். ஜன்மாந்தரங்களில் தனக்கு வந்தமையும் எண்ணிறந்த தேகங்களைத் தான் என்று அபிமானித்தல் பிறவிக்கு ஏதுவான அகங்காரமாகும். ஆத்ம போதத்தில் வளரும் வன்மை அல்லது பலம் வேண்டப்படுகிறது. அத்தகைய சீரிய பலமில்லாதவன் ஆத்மாவை அடையமாட்டான். பின்பு ஆசைக்கு ஒருவிதமான பலம் உண்டு. அதை ஆசையின் வேகம் என்று சொல்லுகிறோம். ஆசையின் வேகம் கெட வேண்டும். காமங்களை நிறைவேற்றுதற்கு வருவிக்கப்படும் பலம் வேண்டப்படுவதன்று. தனக்கு உடல் வலிவு மிகவும் அமைந்திருக்கிறதென்று மகிழ்ந்து ஒருவன் அதர்மத்தில் ஈடுபடுவதுண்டு. அத்தகைய இயல்பு செருக்கு என்னும் பெயர் பெறுகிறது. குற்றங்கள் பல செய்வதற்குச் சிலர்க்கு உடல் வலிவே முதற்காரணமாகிறது. இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்குக் காமம் என்று பெயர். காமத்துக்கு இடைஞ்சல் பண்ணுகிறவனிடத்து சினம் வருகிறது. குரோதம் என்பது இதுவே. உடல் வாழ்க்கைக்குப் பொருள் தேவை. ஆனால் நான் பொருள் படைத்தவன் என்ற எண்ணம் உதவாது. ஆத்ம சாதனத்துக்கும் தர்மானுஷ்டானத்துக்கும் அது இடைஞ்சலாகிறது. பொருள் படைத்தவன் என்ற உணர்வு பரிக்கிரஹமெனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில் அகப்படுவதுமாகிய பொருளை யோகி ஒருவன் உடைத்திருக்க வேண்டும். பின்பு, அதைத் தன்னுடையதென்று அவன் கருதலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரமெனப்படுகிறது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் யாரிடத்து அமைந்திருக்கின்றனவோ அம்மனிதன் சாந்தியடைகிறான். அவனுக்கு மனத்தெளிவு இயல்பாக உண்டாகிறது. அதனால் அவன் பிரம்மத்தையடையத் தகுந்தவனாகிறான். அது எப்படியெனில் :

54. ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ஸோசதி காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம் 

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், ஸோசதி காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன், ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

பொருள் : பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

ஞானம் பெரியதா, பக்தி பெரியதா என்னும் கேள்வி பலர் உள்ளத்தில் எழுகிறது. சிலர் ஞானம் பெரியது என்பர்; இன்னும் சிலர் பக்தி பெரியது என்பர். அப்படி யெல்லாம் பகர்வது அவரவர் மனப்பான்மையை விளக்குகிறது. முதிர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் ஒன்றே. குழந்தை ஒன்றுக்குத் தாயினிடத்து அன்பு பெருக்கெடுத்திருக்கிறது. தாயும் தன் குழந்தையினிடத்து ஆழ்ந்து அன்பு காட்டுகிறாள். பக்தியின் தோற்றத்தை இருவரிடத்திலும் காண்கிறோம். இதில் ஞானம் எங்கே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். குழந்தை தாய்க்குரியது; தாயே அக்குழந்தையாக வடிவெடுத்திருக்கிறாள் என்ற ஞானம் அதில் மறைமுகமாயிருக்கிறது.

ஒரு பணக்காரனிடம் எத்தனையோ யாசகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களை யார் என்று கவனியாது அம்மனிதன் தானம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் தோன்றிய வயிராகிகள் கூட்டத்தில் இருந்த பதினைந்து வயது இளைஞன் அப்பணக்காரனுடைய மனதைச் சிறிது கவர்ந்தான். அவ் இளைஞனது இடக் கன்னத்தில் இருந்த தழும்பும் முகச்சாயலும் ஆராய்ச்சிக்கு உரியவைகளாயின. பிரக்ஞைகெட்டு ஆற்றங்கரையில் கிடந்த குழந்தையைத் தாங்கள் எடுத்து வளர்த்ததாக வயிராகிகள் சொன்னார்கள். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு படகு விபத்து ஒன்றில் தான் இழந்துவிட்ட குழந்தை இப்பொழுது அகப்பட்டான் ! விசாரித்து உண்மையைத் தெரிந்தவுடன் தந்தையின் மனதில் அன்பு சுரந்தது. ஞானத்தினின்று அன்பு தோன்றுவதற்கு இது சான்று ஆகும். ஆக ஞானமுள்ள இடத்தில் பக்தியிருப்பதும், பக்தியுள்ள இடத்தில் ஞானம் இருப்பதும் இயல்பு. பிரம்ம ஞானத்தில் உறுதி பெறுகின்றவனுக்கு ஈசுவர பக்தி மேலிடுகிறது. தன்னையும் மன்னுயிர்கள் எல்லாவற்றையும் ஒரே பாங்குடன் அவன் காண்கிறான். ஏனென்றால் எல்லா உயிர்களும் ஈசுவரனுடைய பல்வேறு தோற்றங்கள் என்பது அவனுக்கு நன்கு விளங்குகிறது. தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென்று அவன் துயரப்படுவதுமில்லை; தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதுமில்லை. ஏழாம் அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தில் பகர்ந்த மேலாம் பக்தி ஈண்டுக் குறிப்பிடப்படுகிறது.

55. பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம் 

மாம் : -என்னை யார் எனவும், யாவாந் அஸ்மி -எத்தன்மை உடையவன் என்றும், பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான், தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர், ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

பொருள் : யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு. டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில், அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும். அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.

பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது. ஞானத்தோடுகூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது. உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான். இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.

ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும். ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம். வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும். இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால் இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே. ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.

56. ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம் 

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன், ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும், ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், மத்ப்ரஸாதாத்-எனதருளால், ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை, அவாப்நோதி-எய்துகிறான்.

பொருள் : எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

முடிந்த நிலையில் எப்படி ஞானமும் பக்தியும் ஒன்றோ அதை விதத்தில் முடிந்த நிலையில் ஞானமும் கர்மமும் ஒன்றாகின்றன. சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தைத் தியாகம் பண்ணுவதில்லை; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்ற எண்ணத்தைத் தியாகம் செய்கிறான். தான் கர்த்தா என்ற எண்ணம் போய்விடும்பொழுது அத்துடன் ஜீவபோதமும் போயொழிகிறது. தன்னைக் கர்த்தாவென்று எண்ணிக்கொள்ளாது ஏராளமாகக் கர்மம் செய்பவனுக்கு ஆயாசம் வருவதில்லை. தன்னைக் கர்த்தா வென்று எண்ணிக்கொள்பவனுக்கோ விரைவில் ஆயாசம் வருகிறது. அவன் சிறிது வினையாற்றினாலும் அது ஏராளமானதாகத் தோன்றும். மனநிலையே அதற்குக் காரணம். ஈசுவரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈசுவரனை நினைக்கிறான். தன்னை நினைப்பதில்லை. ஈசுவர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான். கடலைச் சென்று அடையும் வரையில் நதிக்குச் சொந்த வியக்தியிருக்கிறது; சொந்தச் செயலும் இருக்கிறது. கடலினுள் நுழைந்த பிறகு நதி என்று பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்துகொள்ளலாம்; நதியினுடையதன்று. ஈசுவரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனது பாங்கு அத்தகையது. சரீரம் என்ற வடிவம் இருக்கிறது எனினும் அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் பரபோதமாம். அச்சரீரத்தில் நிகழ்கின்ற கிருத்தியங்கள் எல்லாம் ஈசன் செயலேயாம். அங்ஙனம் வித விதமான செயல்கள் நிகழலாம். போர் புரிவது போன்ற பயங்கரமான செயல் நடைபெறலாம். அக்கர்மங்களைச் சொந்தம் பாராட்டுதற்கு ஜீவபோதம் மிச்சமில்லை. நிலைத்த நித்தியமான பரபோதம் ஜீவனால் அடையப்பெற்றதாகிறது.

கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின் முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள் கொள்ளவேண்டாம். ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

ஆகையால் நீ வாழவேண்டிய விதமாவது :

57. சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ 

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம், சேதஸா-அறிவினால், மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு, புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று, மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு, ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

பொருள் : அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

ஒரு மனிதனை ஓர் அரசாங்க உத்தியோகத்தில் வைத்தால் அந்த அரசாங்கத்துக்குரிய ஆதிக்கம் அவனிடத்துச் சிறிது வருகிறது. தன் கடமையை முறையாகச் செய்துகொண்டுபோனால் இன்னும் அதிகமான பொறுப்பும் ஆதிக்கமும் அவனுக்கு வரும். அந்த உத்தியோகஸ்தன் சமூகத்தில் ஆணை செலுத்துதற்கிடையில் அப்பதவியில் தனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லையென்றும் எல்லாம் அரசாங்கத்தினுடைய தென்றும் அறிவானாகில் அவன் தனது பதவியைப்பற்றிய புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். அதைத் தனது என்று சொந்தம் பாராட்டுவானாகில் அவன் விவேகத்தைப் பெற்றவன் ஆகான். அதே முறையில் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் வியக்தியைப்பற்றிய உண்மையை ஜீவன் அறிவானானால் அவன் புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். தான் என்பதற்கு இலக்காகத் தன்னிடத்து இருப்பது யாது என்று அவன் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தனது என்பதற்கு இலக்காக இருப்பது எது என்று அடுத்தபடியாக விசாரித்துப் பார்க்க வேண்டும். கர்மத்தையும் அதே விதத்தில் துருவிப் பார்ப்பது அவசியம். தான் என்பதும், தனது என்பதும், தன் செயல் என்பதும் உண்மையில் இல்லை.

புத்தியோகத்தைச் சார்ந்திருப்பவன் இங்கு பகவான் இடுகின்ற ஆணைகளை யெல்லாம் அப்படியே நிறைவேற்றி வைப்பான். காயத்தால் அவன் கர்மங்களை விட்டொழிக்க மாட்டான். விவேகத்தின் துணைகொண்டு கர்மத்தில் வைத்த பற்றுதலையே ஒழித்து விடுவான். சர்வேசுவரனுடைய கிருத்தியமே யாண்டும் நிகழ்கிறது. எந்த ஜீவன் அதற்குக் கருவியாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் செயல் நின்றுவிடாது. ஈசுவரன் செயலை ஈசுவரனுக்காகச் செய்வது சந்நியாசமாகிறது. பரம்பொருளில் ஒடுங்குவதைத் தவிர ஜீவாத்மாவுக்கு வேறு ஒரு அலுவலும் கிடையாது. அதற்காகத் தனது முழு மனதையும் பரம்பொருளிடத்து நாட்டி வைத்தல் வேண்டும்.

பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள், குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா? இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் நமக்கு உண்மையாகத் தோன்றும். ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும். ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால் மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம் பகவான் என்பதை அவ் அன்பினின்று நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.

புத்தியோகத்தால் விளையும் நலன் எது வெனின்:

58. மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி
அத சேத்த்வமஹங்காராந்ந ஸ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி 

மத் சித்த:-என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய், ஸர்வதுர்காணி-எல்லாத் தடைகளையும், மத்ப்ரஸாதாத்-எனதருளால், தரிஷ்யஸி-கடந்து செல்வாய், அத அஹங்காராத் த்வம் ஸ்ரோஷ்யஸி சேத்-அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், விநங்க்ஷ்யஸி-அழிந்து போவாய்.

பொருள் : என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.

உலக வைபவத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம்; மற்றது அகவுலகம். விக்கினங்களும் இடைஞ்சல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகமாகிய மனதிலும் உண்டு. வெளியுலகைத் திருத்தியமைக்கின்றோம். நோய் வரக் கூடிய இடத்தை நோயற்ற இடமாக்கலாம். நீர் இல்லாத இடத்துக்கு நீர் கொண்டு வரலாம். வெப்பம் நிறைந்த இடத்தில் வெப்பத்தைக் குறைக்கலாம். இப்படியெல்லாம் செய்வது புறவுலகில் உள்ள விக்கினங்களை அகற்றுவதாகும். நவீன பௌதிக சாஸ்திரத்தின் துணைகொண்டு அச்செயல் ஏராளமாகச் செய்யப்படுகிறது. ஆனால் அதனாலேயே உலகுக்கு இன்பம் வந்தமையாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட முக்கியமானது அகவுலகமாகிய மனதைத் திருத்தியமைப்பது மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு கெட்டதாயிருந்தாலும் மனதைத் திருத்தியமைத்துக்கொண்டவனுக்கு அது கேடு செய்யாது.

இடைஞ்சல்களும் விக்கினங்களும் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மன நிலையில்தான் இருக்கின்றன. மனதை ஈசன் பால் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடைஞ்சல்களும் ஈசன் செயலாகவே தோன்றும். அதற்குச் சிறந்த சான்று அப்பரது வாழ்க்கையில் நிகழ்கிறது. வந்த விக்கினங்களைக் குறித்து அவர் பகர்ந்ததாவது :

நாமார்க்குங் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலையில்லோம்;
ஏமாப்போம், பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பமில்லை;
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்
சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

ஆனால் துன்பங்கள் எல்லாம் அஹங்காரத்தினின்றே வருகின்றன.

என்னதான் முயன்றாலும் ஈசுவரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது. நீ ஈசுவரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்து விடும் என்று நம்பாதே. உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். நான் கர்த்தா என்ற எண்ணம் உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈசுவரனைக் காணமாட்டாய். நானே கர்த்தா வென்று எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈசுவரன் ஒரு போதும் தோன்றுவதில்லை.

அஹங்காரத்தில் விளையும் கேடு யாது? விடை வருகிறது :

59. யதஹங்காரமாஸ்ரித்ய யோத்ஸ்ய இதி மந்யஸே
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி 

யத் அஹங்காரம் ஆஸ்ரித்ய-எந்த அகங்காரத்தின் வசப்பட்டு, யோத்ஸ்யே இதி மந்யஸே-நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ, தே ஏஷ: வ்யவஸாய: மித்யா-இந்தத் தீர்மானம் பொய்யானது, ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி-(ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்.

பொருள் : நீ அகங்காரத்திலகப்பட்டுஇனிப் போர் புரியேன்என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.

கைக்குழந்தை ஒன்றின் முன்னிலையில் கொலையும், களவும், சூதும் நிகழ்கின்றன. கொலை புரிவதைப் பார்த்துக் குழந்தை சிரித்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதனிடத்து இன்னும் அஹங்காரம் தோற்றத்துக்கு வரவில்லை. பெரியவனாக வளர்ந்த பின் வியாபகத்துக்கு வரக்கூடிய அவனுடைய சுபாவமும் இப்பொழுது குழந்தைப் பருவத்தில் தோன்றா நிலையில் இருக்கிறது. கொலையையும், களவையும், சூதையும் குழந்தை ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது. அஹங்காரம் அடையப்பெறாத குழந்தையின் காட்சியில் அக்கொடிய செயல்கள் இல்லை. ஆனால் கொடுமையை உலகில் காண்பவர்களின் கடமை வேறு. குழந்தை போன்று தாங்கள் ஆயிருப்பதாக அவர்கள் பாசாங்கு செய்யலாகாது. அர்ஜுனனுக்கு பகவான் பகர்வதாவது :

இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்திரிய சுபாவத்துக்கு ஒத்தது. தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவன் நீ. தீமை தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு நீ சும்மாவிருக்க முடியுமா? தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக்கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது. அங்ஙனம் உன் சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாகத் தீர்மானிப்பது உன் ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும். எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்குக் கேடு வேறு ஒன்றுமில்லை.

தீமையைப் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் காயத்தால் செயல் புரிய மாட்டேன் என்று உன் இயல்பைக் கரக்கின்றாய். ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அகங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணாகத் தீர்மானிக்காதே.

அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா. மேலும் :

60. ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோபி தத் 

கௌந்தேய-குந்தியின் மகனே! யத் மோஹாத் கர்தும் இச்சஸி-எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தத் அபி ஸ்வேந ஸ்வபாவஜேந கர்மணா-அதையும் நீ, உன்னுடைய இயல்பான கர்ம வினையால், நிபத்த:-கட்டப் பட்டு, அவஸ: கரிஷ்யஸி-தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

பொருள் : இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது இயல்பு அல்லது சுபாவம் உள்ளுற உறைந்து கிடக்கிறது. அதன் வேகம் எத்தகையது என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு கொடிய நோயைப் போக்குதற்கு ஒருவன் மருந்து உண்ண வேண்டியது அவசியமாயிற்று. மருத்துவனும் அதற்கேற்ற மருத்தைக் கொடுத்தான். பிறகு அதற்குப் பத்தியம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது. நோயாளி மருந்து உண்ணும்போது குரங்கைப்பற்றி நினைக்கலாகாது என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதுதான் பத்தியம் ! அது மிக எளியது என்று நோயாளி எண்ணிக்கொண்டு பத்தியத்துக்கு உட்பட இசைந்தான். காலையில் மருந்து ஜாடியைக் கையில் எடுத்த பொழுதெல்லாம் குரங்கைப்பற்றிய எண்ணம் முன் வந்து நின்றது. பத்திய நிபந்தனையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை! எணணத்துக்கு எவ்வளவு வலிவோ அதைவிட அதிகம் வலிவுண்டு இயல்பில் பிறந்த வினைக்கு.

மற்றொரு சான்றும் இங்குத் தேவையாகிறது. பிறரைத் தாக்கித் துன்புறுத்தும் ஒருவன் தானே அடியுண்ண விரும்புவதில்லை. அத்தகையவன் பிறரால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டான். கனவில் அவனுடைய நிலைமை அனுதாபத்துக்கு உரியதாயிருக்கிறது. உண்மையில் பிறர் யாரும் வந்து அவனைப் புடைக்கவில்லை. அவனது சுபாவத்தினின்று உதித்த சித்த விருத்தி அச்செயலை வரவழைத்துக்கொண்டது. கனவில் அடிபடுவதினின்று தப்பித்துக்கொள்ள அவனுக்குச் சுதந்தரம் இல்லை. தன் இயல்பில் பிறந்த வினையின் வன்மை அத்தகையது. சுவர்க்கத்துக்குச் சென்றாலும் நரகத்துக்குச் சென்றாலும் மனிதன் தன் இயல்பைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறான். தன் நிழல் எப்படித் தன்னைவிட்டுப் பிரிவதில்லையோ, தன் சுபாவமும் அப்படியே தன்னைவிட்டுப் பிரிவதில்லை. அதிலிருந்து உதிக்கும் கர்மத்தை அவன் செய்தே ஆகவேண்டும். மற்று அதன் வேகத்தை முறையாகக் கையாளுதலே அதை ஒடுக்குதற்கு உற்ற உபாயமாகும்.

வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும் அது நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகுபிடிவாதமுள்ள அக்ஞானம். எவ்வளவுதான் சிரமப்பட்டபோதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.


வினையின் வேகத்தை முறையாகக் கையாளுதல் என்பதன் பொருள் யாது? விடை வருகிறது:








No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer