மூன்றாம்
அத்தியாயம்
பகவத்கீதை
| கர்ம யோகம்
கர்ம யோக ஞான யோகங்களுள்
ஞான யோகமே கடுகப் பலனை
அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத்
தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு
தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன்
துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும்
புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே
கொண்டுவந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில்
நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே
செய்யக் கடவன். ஏனெனில், இவனது
உண்மை நிலையறியாத பாமரர்களும், இவனைக் கண்டு தாங்களும்
கர்மங்களைவிட்டு ஞானத்துறையில் துணிவுறுகிறார்கள்.
அதனால்
அவர்கள் கர்ம யோகத்தை யிழந்ததுமன்றி
ஞான யோகத்தையுமிழந்து முன்னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்து
விடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே
காரணமாவான். ஆகையால் ஞானயோகத்தில் திறமையுள்ளவனுக்கும்,
திறமையில்லாதவனுக்கும் கர்ம யோகமே மேலானது.
கர்மங்களைச் செய்யும்போது, இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால்
வந்தேறியதென்றும், ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடையை பிரீதிக்காகவே
செய்கிறோம், என்றும் எண்ணிச் செய்ய
வேண்டும்.
அர்ஜுனனுக்கு
ஏற்பட்ட ஐயம் 1-2 -ஒன்றை ஒன்று அனுசரித்து
இரண்டு மார்க்கங்கள் உள 3-8 -யக்ஞத்தின் சிறப்பு
9-13 -பிரவிருத்திச் சக்கரம் 14-16 -ஆத்ம நிஷ்டனுக்குக் கர்மமில்லை
17-18 -சாதனதசையில் இருப்பவன் செய்யவேண்டியது 19-26 -அஹங்காரத்தை அகற்றும் விதம் 27-32 -சுபாவத்துக்கு ஏற்ற சாதனம் 33-35 -பாபத்துக்குப்
பிறப்பிடம் 36-43.
அர்ஜுன
உவாச
1. ஜ்யாயஸீ
சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
தத்கிம்
கர்மணி கோரே மாம் நியோஜயஸி
கேஸவ
அர்ஜுந
உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஜநார்தந-ஜநார்த்தனா, கர்மண:
புத்தி ஜ்யாயஸீ-செய்கையைக் காட்டிலும்
புத்தியே சிறந்ததென்பது, தே மதா சேத்-நின் கொள்கையாயின், தத்
கோரே கர்மணி-இந்தக் கொடிய
செய்கையில், மாம் கிம் நியோஜயஸி
கேஸவ-என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
பொருள்
: அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக்
கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
2. வ்யாமிஸ்ரேணேவ
வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம்
வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோऽஹமாப்நுயாம்
வ்யாமிஸ்ரேண
இவ வாக்யேந-குழம்பியது போன்ற
பேச்சினால், மே புத்திம் மோஹயஸி
இவ-என் புத்தியை மயங்கச்
செய்கிறாய் போல! யேந அஹம்
ஸ்ரேய: ஆப்நுயாம்-எது எனக்கு நன்மை
தருமென்பதை, தத் ஏகம் நிஸ்சித்ய
வத-அந்த ஒன்றை நிச்சயப்
படுத்தி சொல்
பொருள்
: குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச்
செய்கிறாய். ஆதலால் எது எனக்கு
நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.
எக்காரணத்தாலும்
அர்ஜுனன் கர்மத்தைப் புறக்கணிக்கலாகாது என்று பகவான் எடுத்தோதினார்.
கர்மத்தில் அவனைத் தூண்டியவர் கர்மத்தைக்
கர்மயோகமாக மாற்றிவிடவேண்டுமென்று மேலும் உபதேசித்தார். கர்மயோகிதான்
அனைத்தையும் சாதிக்கவல்லவன் என்பது பகவானது கோட்பாடு.
பின்பு ஞானமடைந்தவனது சம்பூரண நிலையை சந்தேகத்துக்கு
இடமில்லாது அவர் சிலாகித்துப் பேசினார்.
அதனால் அர்ஜுனனுக்கு இந்த ஐயம் வருவதாயிற்று.
அவன் சொல்லுவதாவது: பிரபோ, தாம் உயிர்களின்
அக்ஞானத்தைப் போக்குபவர்; துன்பங்கள் அனைத்தையும் துடைத்து வைப்பவரும் தாமே. அத்தகைய தாம்
என்னைமட்டும் ஏன் குழப்பத்தில் ஆழ்த்திக்கெடுத்து
விடுகிறீர்? பகவானுடைய பேச்சில் முரண்பாடு இருப்பது போன்று என் புல்லறிவுக்குத்
தென்படுகிறது. அதனால் என்னிடத்துள்ள சிறிய
அறிவு மேலும் கலங்குகிறது. என்னைக்
கெடுத்து விடுவது உமது எண்ணம்
அல்ல என்று நான் உறுதியாக
நினைக்கிறேன். எனக்கு சிரேயஸைப் புகட்டவேண்டுமென்று
நான் பணிந்து தங்களிடத்து விண்ணப்பித்திருக்கிறேன்.
ஆதலால் எனக்கு நலம் தரும்
கோட்பாடு ஒன்றைமட்டும் நன்கு எடுத்துப் புகட்டுவீராக.
ஸ்ரீ பகவாநுவாச
3. லோகேऽஸ்மிந்
த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா
மயாநக
ஜ்ஞாநயோகேந
ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
அநக-பாபமொன்று மில்லாத அர்ஜுனா
லோகே மயா-இவ்வுலகில் என்னால்,
த்விவிதா நிஷ்டா-இரண்டுவித நிஷ்டை,
புரா ப்ரோக்தா-முன்னர் கூறப்பட்டது, ஸாங்க்யாநாம்
ஜ்ஞாநயோகேந-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால், யோகிநாம்
கர்மயோகேந-யோகிகளின் கர்ம யோகத்தால்.
பொருள்
: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பாபமொன்று
மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால்
கூறப்பட்டது. ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது,
யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது
என.
விவேகம்,
வைராக்கியம், துறவு முதலியவைகள் வாயிலாகத்
தெளிவுபட்ட அறிவானது ஆத்ம சொரூபத்தை நேரே
கிரகிக்குமானால் அதற்கு ஞானயோகம் என்று
பெயர். கர்மானுஷ்டானத்தை முறையாகச் செய்து வருவதால் அறிவு
தெளிவடைகிறது. தெளிந்த அறிவு ஆத்ம
சொரூபத்தை விளக்குகிறது. ஆக ஞானயோகம், கர்மயோகம்
ஆகிய இரண்டும் ஆத்ம சொரூபத்தை விளக்குதற்கு
உபாயங்களாயிருப்பதால் இரண்டும் நன்னெறிகளாகின்றன. விசாரத்தில் ஈடுபடுபவரும் செயலில் ஈடுபடுபவரும் என்றென்றும்
இருக்கிறார்களாதலால் ஞான மார்க்கம், கர்மமார்க்கம்
ஆகிய இரண்டு நிஷ்டைகளும் தொன்று
தொட்டு உலகில் இருந்து வருகின்றன.
இவ்விரண்டு
சாதனங்களும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள்
என்று கேட்குமிடத்து விடை வருகிறது :
4. ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புரு÷ஷாऽஸ்நுதே
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம்
ஸமதிகச்சதி
புருஷ:
கர்மணாம் அநாரம்பாத்-தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால், நைஷ்கர்ம்யம் ந அஸ்நுதே-செயலற்ற
நிலை அடைவதில்லை, ஸந்ந்யஸநாத் ஏவ-துறவினாலேயே
ஸித்திம்
ச ந ஸமதிகச்சதி-ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்,
பொருள்
: தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன்
செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே
மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.
கல்வி வேண்டுபவர்கள் எல்லாரும் பள்ளிக்கூடத்துக்குப் போகக் கடமைப்பட்டிருக்கின்றனர். ஆனால் பள்ளிக்கூடத்திலேயே
எக்காலமும் இருப்பது மக்களின் லட்சியமன்று. கற்க வேண்டியவைகளைக் கற்றானபிறகு
பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற வேண்டும்.
கல்வி பூர்த்தியாகும் முன்பு வெளியேகுதல் பொருந்தாது.
உலக வாழ்க்கை என்கிற பள்ளிக்கூடமும் அத்தகையதே.
நைஷ்கர்ம்யம்
என்பதற்கும் சித்தி என்பதற்கும் பொருள்
ஒன்று. பழம் முற்றும் பழுக்குமிடத்து
அது சித்தியாய்விட்டது எனலாம். அதற்கு முன்பு
அது காய்த்து முதிர்ந்து கனிகிற செயல்களெல்லாம் அதனுடைய
கர்மமாகிறது. முற்றும் கனிந்த நிலை நைஷ்கர்ம்யம்.
ஆக, நைஷ்கர்ம்யமும் சித்தியும் ஒன்றே. பழுத்த பழம்
மரத்தைவிட்டுப் பிரிவது அதன் சந்யாசம்.
பிஞ்சு அல்லது காயாக இருக்கும்பொழுது
அதை மரத்தைவிட்டுப் பறித்து எடுப்பதால் அது
சித்தியடைந்ததாகாது.
மனிதனுடைய
வாழ்க்கை இதற்கு ஒப்பானது. ஓயாது
காய் முதிர்வது போன்று கர்மத்தின் மூலம்
மனிதன் ஞான முதிர்ச்சியடைகிறான். பரிபூரணம் அடைதற்கு
முன்பு அவன் கர்மத்தைத் துறப்பதால்
ஒரு நன்மையையும் பெறுகிறதில்லை. முறையாகக் கர்மம் செய்துகொண்டிருப்பதே நிறைநிலை
எய்துதற்கு உற்ற உபாயமாகிறது.
5. ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது
திஷ்டத்யகர்மக்ருத்
கார்யதே
ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:
ஹி கஸ்சித் ஜாது க்ஷணம்
அபி-எவனும் ஒரு கணப்பொழுதேனும்,
அகர்மக்ருத் ந திஷ்டதி-செய்கையின்றிருப்பதில்லை,
ஹி ப்ரக்ருதிஜை குணை:-இயற்கையில் விளையும்
குணங்களே, ஸர்வ: அவஸ:-எல்லா
உயிர்களையும் தன் வசமின்றி, கர்ம
கார்யதே-தொழில் புரிவிக்கின்றன.
பொருள்
: எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை.
இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத்
தொழில் புரிவிக்கின்றன.
சத்வம்,
ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது
பிரகிருதி. அது கர்ம சொரூபம்.
ஆதலால் அதில் கட்டுண்டு கிடப்பவர்கள்
கர்மம் செய்தே ஆகவேண்டும். உண்பது,
உறங்குவது, சுவாசிப்பது, ஹிருதயம் அடிப்பது ஆகிய எல்லாம் கர்மம்.
இயற்கையில் இயங்காதிருப்பது எது? அணுமுதல் அண்டம்
வரையில் எல்லாம் அசைகின்றன. அதில்
பிணிக்கப்பட்டுள்ள உயிர்க்குக் கர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது.
பிரகிருதியில்
கட்டுண்டிருக்கும்போது கர்மத்தை விட்டுவிட முயலுதலின் விளைவைக் கேட்குமிடத்து அதற்கு உத்தரம் வருகிறது:
6. கர்மேந்த்ரியாணி
ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா
ஸ்மரந்
இந்த்ரியார்தாந்விமூடாத்மா
மித்யாசார: ஸ உச்யதே
ய: விமூடாத்மா-எந்த மூடாத்மா, கர்மேந்த்ரியாணி
ஸம்யம்ய-கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, இந்த்ரியார்தாந்-இந்திரிய விஷயங்களை, மநஸா ஸ்மரந் ஆஸ்தே-மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ, ஸ மித்யாசார: உச்யதே-பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள்
: கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை
மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பிரகிருதியில்
ஆத்மா கட்டுண்டிருக்குமளவு மனது இருக்கிறது. ஓயாது
சங்கற்பித்துக்கொண்டிருப்பது
அதன் தொழில். மனது எண்ணுகிறது;
அதே வேளையில் புறக்கரணங்கள் தடுக்கப்படுகின்றன. அப்படிச் செய்வது முறையன்று. உபமானத்தால்
இதை விளக்குமிடத்து நீராவி யந்திரத்தில் ஆவி
நிறைந்திருக்கிறது. ஆவி ஒருபுறம் சக்கரத்தை
உந்தித்தள்ளுகையில் மற்றொரு புறம் அதற்கு
முட்டுப்போடுவது சரியன்று. முதலில் ஆவியை அடைக்க
வேண்டும். பிறகு சக்கரத்துக்கு முட்டுப்
போட வேண்டும். ஆவியை அடைக்காது சக்கரத்துக்கு
முட்டுப் போட்டால் யந்திரம் ஒடியும் அல்லது பழுதுபடும்.
மனிதன் மனதை அடக்காது வெளிக்கரணங்களை
அடக்குவதால் தன் இயல்பை அவன்
பிளவுபடுத்துகிறான். ஆகையால் அது மித்தியாசாரம்
(பொய்யொழுக்கம்) எனப்படுகிறது. எது வாழ்வைக் குலைக்கிறதோ
அது பொய்யொழுக்கம். அக்ஞானத்தில் இருப்பவன் கர்மத்தை விட்டுவிடுவதாகப் பாசாங்கு செய்வது மித்தியாசாரம் ஆகிறது.
அது துராசாரத்துக்கு ஒப்பானது.
7. யஸ்த்விந்த்ரியாணி
மநஸா நியம்யாரபதேऽர்ஜுந
கர்மேந்த்ரியை:
கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே
து அர்ஜுந-ஆனால் அர்ஜுநா,
ய மநஸா இந்த்ரியாணி-எவன் இந்திரியங்களை மனத்தால்
நியம்ய
அஸக்த:-கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல், கர்மேந்த்ரியை: கர்மயோகம் ஆரபதே-கர்மேந்திரியங்களால் கர்ம
யோகம் பண்ணுகிறானோ, ஸ விஸிஷ்யதே-அவன்
சிறந்தவன்.
பொருள்
: அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால்
கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ,
அவன் சிறந்தவன்.
முன்பு
கூறப்பட்டுள்ள மித்யாசாரி இந்திரியங்களை அடக்கினான்; ஆனால் மனதை அடக்க
முடியவில்லை. அவனை விட மேலானவன்
ஈண்டு எடுத்துச் சொல்லப்படுகிற கர்மயோகி. இவன் மனதை ஒழுங்குப்படுத்திக்கொண்டு
இந்திரியங்களைப் பயன்படுத்துகிறான். பசித்த நாய் ஒன்று
தன் முன்னே வைத்துள்ள உணவுக்காகப்
பதைபதைக்கிறது. அவிழ்த்துவிட்டவுடன் அது பேர் ஆர்வத்துடன்
உண்கிறது. அடங்காத மனதையுடையவனுடைய நிலைமை
கிட்டத்தட்ட இது போன்றது. ஆசை
சர்வ காலமும் அவனது உள்ளத்தில்
குடிகொள்கிறது. அறிவுடையவனோ உணவு சர்வேசுவரனுடைய ஆராதனைக்கு
நைவேத்யமாகச் சமைக்கப்படுகிறது என்று அதன்கண் பற்றற்றிருக்கிறான்.
பிறகு உண்ணும்பொழுது பகவானது பிரசாதம் என்று
அமைதியோடு, தூய உணர்ச்சியோடு அதை
ஏற்கிறான். இத்தகைய மனநிலையுடன் எல்லாக்
கர்மங்களையும் செய்வது மேலானது. ஞானேந்திரியங்களைக்
கையாளும் வகையும் இதில் அடங்கப்பெறுகிறது.
உணவை உண்பது கர்மம். அதைச்
சுவைப்பது ஞானம். சுவையைத் தனக்கேற்ற
இன்பம் தருவது என்று ரசிப்பது
போகம். அதே சுவையை ஈசுவரப்
பிரசாதமாகப் போற்றுவது யோகம். ஆக, இந்திரியங்களைப்
பாழ்படுத்துவது ஒண்ணாது; அடங்கிய மனதால் அவைகளை
மேம்படுத்துவது முறை.
ஆகையால்
சாதன தசையில் இருக்கிற ஒவ்வொருவனும்
செய்யவேண்டியது யாதெனில் :
8. நியதம்
குரு கர்ம த்வம் கர்ம
ஜ்யாயோ ஹ்யகர்மண:
ஸரீரயாத்ராபி
ச தே ந
ப்ரஸித்த்யேதகர்மண:
நியதம்
கர்ம த்வம் குரு-விதிக்கப்பட்ட
தொழிலை நீ செய், ஹி
அகர்மண: கர்ம ஜ்யா ய:-ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும்
தொழில் சிறந்ததன்றோ, அகர்மண:-தொழிலின்றி, தே
ஸரீரயாத்ரா அபி-உனக்கு உடம்பைப்
பேணுதல் கூட, ந ப்ரஸித்த்யேத்-சாத்தியம் ஆகாது.
பொருள்
: விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்.
தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டுசெலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.
உண்பது,
உறங்குவது, நீராடுவது இவைபோன்றவைகளுக்கு நித்திய கர்மங்கள் என்று
பெயர். உயிர் வாழ்க்கைக்கு இவைகள்
முற்றிலும் இன்றியமையாதவைகள். நித்திய கர்மங்களைச் செய்வதால்
புண்ணியம் ஏதும் கிடையாது. ஆனால்
அவைகளைச் செய்யாவிட்டால் பாபம் உண்டு. உதாரணம்
ஒன்று எடுத்துக்கொள்வோம். உணவு அருந்துதலில் புண்ணியம்
ஒன்றும் இல்லை. ஆனால் உண்ணாது
பட்டினி கிடந்தால் உடல் நலிதல் என்ற
பாபம் ஏற்படுகிறது. குறித்த இடத்துக்குப் பயணம்
போய்ச் சேருதற்கு வாகனம் வேண்டும். அங்ஙனம்,
குறித்த லட்சியத்தை அடைவதற்குச் சரீர வாழ்க்கை முற்றிலும்
வேண்டப்படுகிறது. ஆகையால் உடலைக் காப்பாற்றி
வைப்பதே ஒரு பெரும் பயணம்
போவதற்கு ஒப்பாகிறது. கர்மத்தாலன்றி இது சாத்தியப்படாது. மேம்பட
வாழ விரும்புபவர் ஓயாது கர்மம் செய்தே
ஆக வேண்டும். நித்திய கர்மத்தைமட்டும் செய்தால்
போதுமா? போதாது. ஏனென்றால் தான்
அடைந்த பண்பை இருந்தபடி காப்பாற்றி
வைப்பதற்குமட்டும் நித்திய கர்மம் பயன்படும்.
ஒரு பருவத்தில் தவழ்தல் குழந்தைக்கு நித்தியகர்மம்.
அவ்வளவில்
நின்று விட்டால் அதன் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை.
நிற்கவும் நடக்கவும் ஓடவும் ஆகிய புதிய
கர்மங்களில் குழந்தை ஈடுபட்டாக வேண்டும்.
அங்ஙனம் மனிதன் புதிய புதிய
கர்மங்களைச் செய்வதால்தான் ஜீவிதத்தில் முன்னேற்றமடைகிறான். ஆனால் முன்னேற்றத்துக்கு ஈடாக
மற்றொரு புறம் இவன் கர்மபந்தத்தில்
தளைக்கப்படுகிறான். ஆகையால் முன்னேற்றமும் வேண்டாம்,
கர்மபந்தமும் வேண்டாம் என்று கருதிக் கர்மத்தைச்
சுருக்கிக்கொள்வார் உளர். அது தகாது.
முன்னேற்றமும் அடையலாம்; கர்மபந்தத்தில் கட்டுப்படாதும் இருக்கலாம். எப்படி எனின், பகவானே
பகர்ந்தருள்கிறார்:
9. யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர
லோகோऽயம்
கர்மபந்தந:
ததர்தம்
கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர
யஜ்ஞார்தாத்
கர்மண:-வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது, அந்யத்ர அயம் லோக
கர்மபந்தந:-தவிர (மற்றைத் தொழில்)
மனிதருக்குத் தளையாகிறது, கௌந்தேய முக்தஸங்க:-குந்தி
மகனே, பற்றைக் களைந்து, ததர்தம்
கர்ம ஸமாசர-அந்த வேள்வியின்
பொருட்டே தொழில் செய்து கொண்டிரு.
பொருள்
: வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில்
மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே,
பற்றைக் களைந்து தொழில் செய்து
கொண்டிரு.
கர்மத்தில்
பறித்தல், பங்கிடுதல், படைத்தல் என்று மூன்று இயல்புகள்
உண்டு. கடைநிலையில் உள்ள உயிர்கள் பறித்துப்
புசித்து உயிர்வாழ்கின்றன. இந்நிலையில் வாழ்க்கை என்பது ஓர் ஓயாத
போராட்டம். வலிவுடையது முன்னணிக்கு வருகிறது. வலிவற்றது பின்னணியில் வருந்தி வாழ்கிறது அல்லது
அறவே துடைக்கப்படுகிறது. விலங்கு உலகு இக்காட்சியளிக்கிறது.
இடைநிலையில் உள்ள உயிர்களுக்கிடையில் பறித்தல்
குறைகிறது. பங்கிடுதல் அதிகரிக்கிறது. போட்டிக்கு ஈண்டு அதிக இடமில்லை.
ஓர் உயிர் மற்றோர் உயிர்க்குத்
துணைபுரிந்து வாழ்கிறது. மானுட சமூக அமைப்பு
இதை அடிப்படையாகக் கொண்டது.
தலைநிலை
என்பது இதனிலும் மேலானது. தனக்கென்று தேடாது, தன்னிடத்திருப்பதைப் பிறர்க்கென்றே
பண்புடன் படைத்துவருவது இதன் கோட்பாடாகும். வகையறிந்து
அன்புடன் கொடுப்பதால் கொடுப்பவனுக்கும் ஏற்பவனுக்கும் குறையொன்றும் வருவதில்லை. இறைக்க இறைக்கக் கேணிநீர்
ஊறுவது போன்று, எடுத்து முறையாக
வழங்க வழங்க ஆற்றலும் ஆக்கமும்
உயிரின்கண் உயர்கிறது. தலைசிறந்த இச்செயலுக்கு யாகம் என்று பெயர்.
இது வாழ்க்கையின் மேலாம் கோட்பாடாகும். கல்வியை
மற்றவர்களுக்குப் புகட்டுகிறவளவு ஒருவன் தானே கல்விமான்
ஆகிறான். ஞானத்தை வழங்குபவனுக்கு ஞானம்
வளர்கிறது. செல்வத்தையும் அப்படியே பொது நன்மையின் பொருட்டு
முறையாகத் தேடிப் பயன்படுத்துகிறவளவு அது
வளர்கிறது. பொது நன்மையில் தனி
நன்மை அடங்கியிருக்கிறது.
தனி நலம் கருதாத புண்ணியச்
செயல், தியாக புத்தியோடு செய்யும்
சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே செய்யப்படும் செயல், ஈசுவர ஆராதனையாக
ஆற்றும் வினை, பாரமார்த்திகப் பெரு
நோக்கத்தோடு செய்யப்படும் கர்மம் ஆகிய இவையாவும்
யக்ஞம் என்று அழைக்கப்படுகின்றன. போர்புரிவதை
ஒருவன் உலக நன்மைக்காகவென்று செய்வானாகில்,
பொருள் ஈட்டுவதையும் பயிர்த்தொழில் செய்வதையும் ஒருவன் பொதுநலத்துக்காகவென்ற பாங்குடன் இயற்றுவானாகில்,
குற்றேவல் புரிவதையும் சமூகத் தொண்டாக ஒருவன்
ஆற்றுவானாகில் இவை யாவும் யக்ஞமாகின்றன.
எங்கு யக்ஞம் நடைபெறுகிறதோ அங்கு
தெய்வ சான்னித்தியம் இருக்கிறது. விஷ்ணுவே யக்ஞசொரூபம் என்பது மறைமொழி. இப்படி
யாகமாகக் கருதிச் செய்யும் கருமங்கள்
மனிதனைப் பந்தப்படுத்தமாட்டா. யாக கர்மங்களை வேண்டிய
அளவு விரிக்கலாம். அதனால் யாண்டும் சிறப்பே
உண்டாகிறது. ஒழுங்கான உலக நடைமுறைக்கு ஆதாரமாயுள்ள
திட்டம் யாது என்று வினவில்
:
10. ஸஹயஜ்ஞா:
ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக்
புரா-முன்பு, ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா:
ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா-பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து, உவாச-சொல்லினான், அநேந
ப்ரஸவிஷ்யத்வம்-இதனால் பல்குவீர்கள், ஏஷ:
வ: இஷ்டகாமதுக் அஸ்து-இது (இந்த
வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களையெல்லாம் தருவதாக ஆகட்டும்.
பொருள்
: முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: இதனால் பல்குவீர்கள், நீங்கள்
விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
உலகில்
பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்வதும் துன்பம்
என்று சிலர் கருதுகின்றனர். இன்னும்
சிலர் அதை இன்பமாக எண்ணி
இறுதியில் ஏமாற்றமடைந்து துன்பப் படுகின்றனர். போட்டி
போடுதலை வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டவர்கள் ஏமாற்ற மடைந்தே ஆகவேண்டும்.
அதற்கு விலக்கு என்பது இல்லவே
இல்லை. ஒரே ஒரு வழியில்தான்
அதற்கு விலக்கு உண்டு. வாழ்க்கையில்
அமைந்த செயல்கள் அனைத்தையும் யாகமாகச் செய்கிறவர்களுக்குத் துவக்கத்திலும் துன்பமில்லை; இடையிலும் துன்பமில்லை; இறுதியிலும் துன்பமில்லை. இன்பமே எந்நாளும் துன்பமில்லை
என்னும் பெரும் பேறு அடையப்பெற்றவர்கள்
சிருஷ்டியின் உட்கருத்தை அறிந்தவர்களாம். தங்களுக்கென்று தேடுபவர்க்குச் செல்வம் சேர்ந்து பிறகு
தங்களைவிட்டுச் சென்று விடுகிறது. ஒன்றையும்
எதிர்பாராது கொடுத்துக்கொண்டே இருப்பவர்க்குக் கொடைக்கு வேண்டிய பொருள் தானே
வந்தமைகிறது. அந்த மனநிலையே அக்ஷய
பாத்திரம் எனப்படுகிறது. ஆகையால் அதில் துன்பமில்லை.
இதுதான் சிருஷ்டியின் மேலாம் திட்டம். அனுஷ்டித்துப்
பார்ப்பவர்களுக்கெல்லாம் இவ்வுண்மை விளங்கும். ஆக, யாகத்தை ஆதாரமாகக்
கொண்டுள்ளது சிருஷ்டி. யாகம் செய்பவர்க்கு வேண்டிய
பொருள்களெல்லாம் தாமாக வந்தமைகின்றன. அதாவது
பொது நன்மைக்கென்றே பொருள் தேடுபவர்க்கும், பொது
நன்மைக்கென்றே பொருளைப் சேகரிப்பவர்க்கும் தடையின்றிப் பொருள் வந்துகொண்டேயிருக்கும். அவர்களுடைய மனதும்
விரிவடைகிறது. மனது விரிவடைவது ஒப்பற்ற
பேறு ஆகும்.
காமதேனு
என்பது ஒருவகை தெய்வீகப் பசு
என்று புராணம் கூறுகிறது. அதை
வைத்திருப்பவர்களுக்கு எப்பொழுதும் நிறை செல்வமும் சிறப்பும்
உண்டு. அக்காமதேனு யக்ஞத்துக்குப் புறம்பானதல்ல. யக்ஞமே காமதேனு என்று
உருவகப்படுத்தி இயம்பப்படுகிறது. வாழ்க்கையை யக்ஞமாக நடாத்துபவனுக்கு ஆக்கமே
அதிகரிக்கிறது. யக்ஞம் சிறப்பு ஈனும்,
செல்வமும் ஈனும், முக்தி ஈறாக
அனைத்தையும் ஈனும். இதை அறிபவரே
சிருஷ்டியின் உட்கருத்தை உள்ளவாறு அறிபவர் ஆகின்றனர்.
இதை அறிந்தவர் இதை அனுஷ்டானத்தில் கொண்டுவருவது
எப்படி? அதற்கு விடை வருகிறது:
11. தேவாந்பாவயதாநேந
தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம்
பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத
அநேந தேவாந் பாவயத-இதனால்
தேவர்களைக் கருதக் கடவீர், தே
தேவா வ: பாவயந்து-அந்த
தேவர் உங்களைக் கருதக் கடவர், பரஸ்பரம்
பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால், பரம்
ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை, அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.
பொருள்
: இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த
தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்)
பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த
நலத்தை எய்துவீர்கள்.
ஆத்மப்
பிரகாசம் பொருந்தியவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்பு சரீரத்திலுள்ள
இந்திரியங்களுக்குத் தேவர்கள் என்று பெயர் உண்டு.
சில நாட்களாக உடலுக்கு உணவு கொடாது விட்டுவைத்தால்
இந்திரியங்கள் தொழில் புரியா. கண்
பூத்துப்போம், காது அடைக்கும். மறுபடியும்
உணவு கொடுத்தால் இந்திரியங்கள் தத்தம் வேலைகளைப் புரியும்.
இந்திரியங்கள் ஒழுங்காக வேலை செய்தால் வாழ்க்கையானது
செவ்வனே நடைபெறும். இப்படி உடல் வாழ்பவர்
இந்திரியங்களைப் பேண, இந்திரியங்கள் அவர்களைப்
பேண, பரஸ்பர உதவியால் வாழ்க்கை
இனிது நடைபெறுகிறது.
மண்ணுலகிலும்
விண்ணுலகிலும் உள்ள மேலோர்க்கு தேவர்
என்று பெயர். மேதக்க செயல்களிலேயே
அன்னவர் ஈடுபடுவார்கள். அவர்களது நல்வினையில் ஒத்துழைப்பது யாகமாகிறது. கைம்மாறு கருதாது சான்றோர்க்குத் துணைபுரிகின்றவளவு
சான்றோர் அவர்களுக்குச் சகாயம் செய்வார்கள். சமூகத்
தொண்டிலேயே ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தேவையாயிருப்பவைகளை யெல்லாம் சமூகத்தார் எடுத்து வழங்குவதைக் கண்
கூடாகக் காணலாம். ஒரு மனிதன் உலகத்தவர்க்கென்றே
உயிர் வாழ்ந்திருக்கும்போது உலகம் முழுவதும் அவனது
நன்மையில் கருத்துடையதாகிறது. தெய்வத்தை மனிதன் யாண்டும் முழுமனதோடு
ஆராதித்தால் அத்தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம்மனிதனை வந்தடைகின்றன. பிறர்க்கு மனிதன் எதை எடுத்து
வழங்குகின்றானோ அதையே இயற்கையானது எடுத்துப்
பன்மடங்கு அதிகமாக அவனுக்கு வழங்குகிறது.
இப்படிப் பரஸ்பரம் பேணுதல் என்ற யாகத்தால்
எல்லார்க்கும் நன்மையே வந்தமைகிறது.
பிறரைப்
பேணாதார் யார்? அதற்கு விடை
வருகிறது :
12. இஷ்டாந்போகாந்ஹி
வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:
தைர்தத்தாநப்ரதாயைப்யோ
யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:
யஜ்ஞபாவிதா:
தேவா:-வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்,
வ: இஷ்டாந் போகாந்-உங்களுக்கு
விரும்பிய போகங்களையெல்லாம், ஹி தாஸ்யந்தே-தருவர்,
தை தத்தாந்-அவர்கள் தந்தவற்றுக்கு,
ஏப்ய: அப்ரதாய ய: புங்க்தே-அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன், ஸ: ஸ்தேந ஏவ-கள்வனே ஆவான்.
பொருள்
: வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்
உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு
செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன்
கள்வனே யாவன்.”
உலகில்
பிறந்தது முதல் ஒருவன் அனுபவிக்கும்
நன்மைகளெல்லாம் பிறர் செய்த யாகத்தின்
பயனாகும். குழந்தை பரிபாலிக்கப்படுகிறது. அது பெற்றோர்
செய்த யாகத்தின் பயன். இளைஞன் கல்வி
பெறுகிறான். கலாசாலை நிறுவியவர்களின் யாக
பலன் அது. உண்ண உணவும்,
குடியிருக்க வீடும், விதவிதமான இன்ப
நுகர்ச்சிகளையும், பிரயாண வசதிகளையும், இதர
சுகங்களையும் மனிதன் பெறுகிறான். இவை
யாவும் மற்றவர் செய்த யக்ஞத்தின்
பயனேயாம். இனி, தன்னுடைய வாழ்க்கை
உலகுக்கு எப்படிப் பயன்படுகிறது என்று மனிதன் எண்ணிப்
பார்க்கவேண்டும். ஒருவனால் உலகம் எவ்வளவு நன்மையடைந்திருக்கிறதோ
அவ்வளவு அரும்பெரும் செயல்கள் அவனிடத்திருந்து உருவெடுத்தவைகளாகின்றன. ஆற்றுகின்ற வினையைப் பிறர்க்குப் பயன்படும்படி விரிக்குமளவு அது வேள்வியாக வடிவெடுக்கிறது.
கணக்குப் பார்க்குமிடத்து மனிதன் உலகிலிருந்து நன்மைகளைப்
பெறுவதைவிட அதிகம் உலகுக்கு எடுத்து
வழங்க வேண்டும். பெறுவது பெரியது, வழங்குவது
சிறியதாயிருக்குமிடத்து அவன் கடன்பட்டவனாகிறான். உலகுக்கு
ஒன்றையும் கொடாது உலகத்திலிருந்து எல்லாம்
தனக்காகவென்று ஏற்றுக் கொள்ளுதலிலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பவன்
திருடனாகிறான். இத்தகைய இழி நிலை
அறிவுடையோர்க்கு ஒவ்வாது. அப்படியாயின் வாழ்க்கைக்குத் தக்கது எது? தகாதது
எது? விடை வருகிறது :
13. யஜ்ஞஸிஷ்டாஸிந:
ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே
தே த்வகம் பாபா யே
பசந்த்யாத்மகாரணாத்
யஜ்ஞஸிஷ்டாஸிந:
ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர், ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்,
யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்,
தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.
பொருள்
: வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும்
விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்
பாவத்தை உண்ணுகிறார்கள்.
கர்மம்
தன்னளவில் புண்ணியமுமல்ல, பாபமுமல்ல. எண்ணத்திற்கு ஏற்றாற்போன்று அது புண்ணியம் அல்லது
பாபம் ஆகிறது. தீயாரைத் தகர்த்து
நல்லாரைப் பேணுதற்கென்று புரியும் வெம்போர் புண்ணியச் செயலாகும். தனது தனி நலத்தை
நாடிச்செய்யும் தேவாராதனை பாபச் செயலாகும். எத்தொழிலைச்
செய்தாலும் அதன்மூலம் உலக நன்மையும் இறைவனது
பெருமையும் முன்னணியில் நிற்கவேண்டும். தான் தனது என்னும்
செருக்குப் பின்னணிக்குப் போகுமளவு அது புண்ணியச் செயலாம்.
நித்திய கர்மத்தில் தக்கதொரு சான்று எடுத்துக்கொள்ளுமிடத்து, சமைத்த உணவை
மற்றவர்களுக்கு முதலில் வழங்கியபின் மிஞ்சியதை
உண்பவன் மேலோன். மற்றவர்களைப்பற்றிய எண்ணமில்லாது
தனக்கென்றே உணவைச் சமைப்பவன் அல்லது
தேடிக்கொள்பவன் கர்மபந்தத்தைப் பெருக்குகிறான். அந்த அளவில் அவன்
பாபத்தைப் புசிப்பவன் ஆகிறான்.
யக்ஞம்
செய்யாத வாழ்நாளோ வீண்நாள் ஆகிறது. இல்வாழ்வான் ஒருவன்
வீண்நாள் வழியடைப்பதற்கு ஐம்பெரும் வேள்விகளை நாள்தோறும் செய்தாக வேண்டும். அவையாவன
:
1. தேவயக்ஞம்
: கடவுள் வழிபாடு இல்லாது ஒரு
நாளும் கழியலாகாது. இஷ்ட தேவதையை முறைப்படி
நாள்தோறும் வாழ்த்தி வணங்கவேண்டும். 2. ரிஷியக்ஞம்: உலக நன்மையின் பொருட்டுச்
சான்றோர் சிறந்த சாஸ்திரங்களை இயற்றி
வைத்திருக்கின்றனர். அவர்களில் பலர் தங்கள் பெயரையும்
வெளிக்குக்காட்டாது வைத்துச் சென்றனர். அவர்கள் அமைத்த தெய்வ
நெறி நூல்களை முறையாக ஆராய்வதும்
அவைகளை மற்றவர்களுக்கு எடுத்து ஓதுவதும் ஆகிய
செயல்கள் அன்னவர்களைப் போற்றுதலுக்கு ஒப்பாகும். நூல்களை ஓதுதலிலும் ஆராய்தலிலும்
ஒவ்வொரு நாளும் கழியவேண்டும். இதற்குப்
பிரம்மயக்ஞம் என்றும் பெயர் உண்டு.
3. பித்ருயக்ஞம்: மனிதன் வாழ்ந்து வரும்
உடல் வாழ்க்கையில் தன் முன்னோர்களுக்குக் கட்டுப்பாடு
உடையவன் ஆகிறான். அவர்கள் எவ்வுலகில் எந்நிலைமையில்
இருப்பினும் இன்புற்றிருப்பார்களாக, என்று அவர்களைக் குறித்து
நித்தமும் நல்லெண்ணம் எண்ணுதல் வேண்டும். உயிரோடிருக்கும் பெற்றோர்களுக்கு நாள்தோறும் பணிவிடை செய்வதும் பித்ருயக்ஞத்தின்
பிரிவினையாகும். 4. நரயக்ஞம்: மக்களது பசியைப் போக்குதல்,
பிணியை நீக்குதல், வாழ்க்கையைப் பண்படுத்துதல், கல்வியைப் பெருக்குதல் ஆகிய இவை யாவும்
நரயக்ஞத்தில் அடங்குகின்றன. காலத்துக்கு ஏற்றாற் போன்று நரயக்ஞத்தை
மாற்றியமைத்தல் வேண்டும். 5. பூதயக்ஞம்: ஆடு மாடு முதலிய
ஜீவஜந்துக்கள் மக்களது வாழ்க்கைக்குப் பல
விதங்களில் பயன்பட்டு வருகின்றன. அவ்வுயிர்வகைகளை மக்கள் நன்கு பேணிவருதல்
பூதயக்ஞமாகும்.
இங்ஙனம்
பஞ்ச மகாயக்ஞத்தில் மனிதன் உறுதியாக ஈடுபடவேண்டும்.
வேள்வியாக அமைத்து வினைகளை வெவ்வேறு
விதமாக விரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கைக்கு உற்ற துணை. அதனால்
இயற்கையின் நடைமுறை என்னும் சக்கரத்தின்
பிரவிருத்தியும் நன்கு நடைபெறுகிறது. அது
எப்படி எனின் :
14. அந்நாத்பவந்தி
பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:
யஜ்ஞாத்பவதி
பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:
பூதாநி
அந்நாத் பவந்தி-உயிர்கள் அன்னத்தால்
உண்டாகின்றன, பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:-மழையால்
உணவு தோன்றுகிறது, பர்ஜந்ய: யஜ்ஞாத் பவதி-மழை
வேள்வியால் ஆகிறது, யஜ்ஞ: கர்ம
ஸமுத்பவ:-வேள்வி செய்கையினின்று பிறப்பது.
பொருள்
: அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது.
மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று
பிறப்பது.
முறைப்படி
கர்மம் செய்தால் அது யக்ஞமாகிறது. அந்த
யக்ஞத்தில் கர்மபலன் சூக்ஷ்ம வடிவெடுக்கிறது. வைதிக
பரி பாஷையில் அது அபூர்வம் என்று
அழைக்கப்படுகிறது. இரண்டொரு உதாரணங்களால் இதை அறியலாம். கடலில்
உள்ள நீர் ஆவியாக மாறுகிறது.
அந்த ஆவி கண்ணுக்குத் தென்படுவதில்லை.
அது அபூர்வமாகிறது. பிறகு மழையாக மாறி
வீழ்கிறது. குப்பை செத்தைகளை வைத்துக்
கொளுத்தினால் அவை எரிந்து கரியமிலவாயு
ஆகின்றது. கரியமிலவாயு கண்ணுக்குத் தென்படாததாகிறது. அந்நிலையில் அது அபூர்வம். செடிகள்
அவ்வாயுவை இலைகள் வாயிலாக உண்டு
வளர்கின்றன. அதே போன்று யாகம்
மந்திரசக்தி அல்லது மனோ தத்துவத்தோடு
கூடியிருக்கும் போது அது அபூர்வமாகிறது.
உச்சரிக்கிற வார்த்தையே சக்தி படைத்த மந்திரமாகாது.
அந்த வார்த்தைக்கு அடிப்படையாயிருக்கும் உணர்ச்சி மந்திர சக்தியாகிறது. அறச்செயல்
புரிந்து வருபவர் நல்லார் ஆகின்றனர்.
அவர்களே நல்ல மனமுடையவர். மழை
வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் மழை
பெய்யும். யக்ஞத்தினின்று மழை வருகிறது என்னும்
கோட்பாடு இதுவே. அறத்துப்பாலுக்கு முகப்பில்
வான் சிறப்பை வள்ளுவர் வைத்ததின்
உட்கருத்து இதுவே. முறையாக மழை
பெய்யுமிடத்து அதினின்று உணவு உண்டாகிறது. உணவிலிருந்து
உயிர்கள் தோன்றுவதும் நிலைபெற்றிருப்பதும் வெளிப்படை.
15. கர்ம
ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
தஸ்மாத்ஸர்வகதம்
ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்
கர்ம ப்ரஹ்மோத்பவம்-செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்,
ப்ரஹ்ம: அக்ஷரஸமுத்பவம் வித்தி-பிரம்மம் அழிவற்ற
பரமாத்மாவில் தோன்றுவது, தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம-ஆதலால் எங்கும் நிறைந்த
பிரம்மம், நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்-எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
பொருள்
: செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த
பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
வேதம் அல்லது பிரம்மா என்பது
முக்குணமயமாய், கால தேச வர்த்தமான
மயமாய் உள்ள இயற்கையேயாம். தோன்றியுள்ள
அனைத்தும் இயற்கையின் கூறுபாடுகளாதலால் அதை எங்கும் நிறைபொருள்
எனலாம். அது வித்யாசாகரம் அல்லது
அறிவுக்கடல். அனைத்தையும் அது விளக்குவதாதலாலும் அதை
எங்கும் நிறைபொருள் எனலாம். சர்வக்ஞனாகிய பரமாத்மாவினிடத்திருந்து
இந்த வேதம் அல்லது இயற்கை
உதித்துள்ளது. பிரபஞ்ச முழுவதும் கர்மசொரூபமாக
இருப்பதால் கர்மம் இந்த இயற்கையினிடத்திருந்து
வந்ததாகிறது. இனி, இக்கருமத்தைச் சிறந்த
முறையில் கையாளுமிடத்து இது யக்ஞம் என்ற
பெயர் பெறுகிறது. உண்ணுதல் என்கிற கர்மத்தை முறையாகச்
செய்தால் அது யக்ஞமாகிறது. வாழ்க்கை
என்ற கர்மத்தைப் பண்புடன் செய்தால் அது யாகமாகிறது. நாட்டிலுள்ள
மக்களெல்லாம் சட்டத்திற்கு நன்கு கீழ்ப்படிந்தால் ஆட்சிமுறை
சிறப்படைகிறது. அங்ஙனம் உயிர்கள் அனைத்தும்
யக்ஞம் செய்தால் தொகைவினை மயமாயுள்ள இயற்கையே சிறப்புற்று விளங்குகிறது. உயிர்கள் யக்ஞத்தைப் பலன் கருதிச் செய்தால்
ஆக்கத்தை அடைகின்றன. பலன் கருதாது நிஷ்காமியமாகச்
செய்தால் ஆக்கத்தையும் அடைகின்றன; பெரும்பேறு ஆகிய முக்தியையும் அடைகின்றன.
பலன் கருதியோ, பலன் கருதாதோ யாகம்
செய்கின்றவளவு இயற்கை தெய்வ சொரூபமாகத்
திகழ்கிறது. ஆகையால்தான் வேதம் யாண்டும் யக்ஞத்தில்
நிலை பெற்றுள்ளது எனப்படுகிறது. பூலோகத்தைச் சுவர்க்கமாக மாற்றியமைப்பது மனிதனுக்குச் சாத்தியமாகிறது. நல்வினையை நல்லெண்ணத்துடன் ஆற்றுவதே அதற்கு உற்ற உபாயம்.
இது இயற்கையின் பெருந்திட்டம். ஆயினும் இதில் ஈடுபடாவிட்டால்
மனிதனுக்கு ஏதாவது குறை வந்துவிடுமோ?
விடை வருகிறது :
16. ஏவம்
ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ
மோகம் பார்த ஸ ஜீவதி
பார்த ய: இஹ-பார்த்தா
எவன் இவ்வுலகில், ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்-இங்ஙனம் சுழலும் வட்டத்தை,
ந அநுவர்தயதி-பின்பற்றி
ஒழுகாதவனாக, இந்த்ரியாராம:-புலன்களிலே களிக்கிறானோ, ஸ: அகாயு:-அவன்
பாப வாழ்க்கையுடையான், மோகம் ஜீவதி-(அவன்)
வாழ்க்கை விழலேயாம்.
பொருள்
: இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில்
பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்; புலன்களிலே
களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.
பண்டங்களைப்
பண்படுத்துதற்குத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அங்ஙனம் உயிர்களை ஓம்பி
அவைகளை உயர்த்துதற்கு இயற்கைச் சக்கரம் இறைவனால் இயக்கப்பெற்றுள்ளது.
பாடம் படிக்காவிட்டால் மாணாக்கன் பள்ளிக்கூடத்துக்குப் போயும் போகாதவனாகிறான். ஓர்
ஊருக்குப் போனவன், போன காரியத்தைக்
கவனிக்கா விட்டால் அங்குப் போயும் போகாதவனாகிறான்.
இவ்வுலகுக்குள் மக்கள் வந்துள்ளது இந்திரிய
போகத்தில் உழல்தலுக்காகவன்று. ஜகத் பிரவிருத்தி சக்கரத்தில்
கலந்துகொண்டு, யாகங்கள் செய்து, இயற்கை நடைமுறையை
இனியதாக்கி, தம் வாழ்க்கையைப் பண்படுத்துதற்கென்றே
மக்கள் இங்கு வந்துள்ளனர். அப்பெரு
நோக்கத்தைப் புறக்கணித்து விட்டுச் சிற்றின்ப வாழ்க்கையில் புகுபவர் பிறந்தும் பிறவாதவர் ஆகின்றனர்.
முறையாகக்
கர்மம் செய்தே ஆகவேண்டும் என்னும்
விதிக்கு விலக்கானவர் யாருமில்லையா? விடை வருகிறது :
17. யஸ்த்வாத்மரதிரேவ
ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:
ஆத்மந்யேவ
ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம்
ந வித்யதே
து ய: மாநவ:-ஆனால்
எந்த மனிதன், ஆத்மரதி ஏவ
ச-தன்னிலேதான் இன்புறுவான்,
ஆத்மத்ருப்த ச-தன்னிலேதான் திருப்தியடைவான்,
ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத்-தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில், தஸ்ய கார்யம்
ந வித்யதே-அவனுக்குத்
தொழிலில்லை.
பொருள்
: தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.
பிரகிருதி
கர்ம சொரூபம். ஆத்மாவிடத்துக் கர்மம் இல்லை. மனதோ
பிரகிருதியின் கூறுபாடாகும். ஆகையால் அதனிடத்து ஓயாது
கர்மம் நடந்துகொண்டிருக்கிறது. ஆயினும் அக்கர்மத்தில் ஒரு
விசேஷம் உண்டு. மனது உலகப்
பொருள்களை இந்திரியங்கள் வாயிலாகப் பற்றுங்கால் அதன் கர்மம் அதிகரிக்கிறது.
அது ஆத்மாவைப் பற்றுங்கால் அதன் கர்மம் ஓய்கிறது.
அதன் கர்மங்களில் கடைசியானது ஆத்மாவைப் பற்றுதல் என்ற கர்மம். ஆத்மாவானது
ஆனந்த சொரூபம். ஆதலால் மனது ஆத்மாவைப்
பற்றும்பொழுது அதற்கு நிலைத்த இன்பமும்
திருப்தியும் மகிழ்வும் உண்டாகின்றன. நதியானது கடலை அடையும் பரியந்தம்
ஓடுதல் என்ற கர்மம் அதற்கு
இருக்கிறது. கடலை அடைந்தான பிறகு
அதற்குக் கர்மம் ஒன்றுமில்லை. ஆத்மாவைச்
சார்ந்து ஆத்மாவில் லயமாவது ஒப்பற்ற கர்மமாகிறது.
எல்லா ஜீவர்களும் அறிந்தோ அறியாமலோ குறிக்கோளாகக்
கொண்டிருப்பது இதுவே. ஆக, ஆத்மாவில்
ஒடுங்கியிருக்கும் மனதுக்குக் கர்மமில்லை.
உலகத்தவரிடமிருந்தாவது
அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லையா? விடை வருகிறது:
18. நைவ
தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:
தஸ்ய இஹ க்ருதேந-அவனுக்குச்
செய்கையில், கஸ்சந அர்த ந-யாதொரு பயனுமில்லை. அக்ருதேந:
ஏவ ந-செயலின்றி இருப்பதிலும்
(அவனுக்கு பயன்) இல்லை, ச
ஸர்வபூதேஷு-எந்த உயிரிலும், அஸ்ய
அர்த வ்யபாஸ்ரய:-அவனுக்கு எவ்வித பயனும், கஸ்சித்
ந-சிறிது கூட
இல்லை.
பொருள்
: அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி
இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த
உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.
ஆத்மாவை
அடைந்தவன் பூர்ணானந்தத்தைப் பெற்றவன் ஆகிறான். அதற்குமேல் அவன் பெறவேண்டியது ஒன்றுமில்லை.
பெற்ற அப்பரமானந்தத்தை இழப்பதும் கிடையாது. ஆகையால் புல் முதல்
பிரம்மா பரியந்தம் எந்த உயிரிடத்திருந்தும் எவ்விதமான
தயவையும் அந்த ஆத்மஞானி எதிர்பார்ப்பதில்லை.
இந்நிலையை
அடைந்து விட்டதாகப் பாசாங்கு செய்வதில் பயனில்லை. இப்பெருநிலையின் பொருட்டுக் கர்மத்தின் வாயிலாகத் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும்.
எப்படிக் கர்மம் செய்யவேண்டும்? விடை
வருகிறது :
19. தஸ்மாதஸக்த:
ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ
ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:
தஸ்மாத்
ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும்
பற்று நீக்கி, கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை, ஸமாசர-செய்து
கொண்டிரு, ஹி அஸக்த:-ஏனெனில்
பற்றில்லாமல், கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன், பரம்
ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.
பொருள்
: ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க
தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல்
தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.
ஓயாது ஹிருதயம் அடித்துக்கொண்டிருப்பதால் உடல் வாழ்க்கை நன்கு
நடைபெறுகிறது. ஆனால் ஹிருதயம் அடிப்பதில்
மனிதன் கருத்துச் செலுத்துவதில்லை. அதுபோன்று பல கருமங்களைப் பற்றற்றுச்
செய்யவேண்டும். பற்று நீங்குமளவு வேலைகளுக்கிடையில்
விச்ராந்தி தானே உண்டாகிறது. ஆத்ம
சொரூபத்தை அறிதலும் அத்தகைய மனதுக்கு எளிதாகிறது.
வேலை செய்யாது விச்ராந்தி பெறமுடியாது. விச்ராந்தி என்பது மனவமைதி.
அப்படி
ஏராளமாக வியவகாரங்களைச் செய்து கொண்டிருப்பதற்கு இடையில்
விச்ராந்தியடைந்தவர்கள் உண்டா? உண்டு. அவர்கள்
யார் எனின் :
20. கர்மணைவ
ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
லோகஸங்க்ரஹமேவாபி
ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி
ஜநகாதய:
ஹி-ஜனகன் முதலியோரும், கர்மணா
ஏவ-செய்கையாலேயே, ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த
பேற்றை) பெற்றார்கள், லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும்,
அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல்
தகும்.
பொருள்
: ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக
நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல்
தகும்.
ஜனகர்,
அசுவபதி முதலிய ராஜரிஷிகள் ராஜ்யபரிபாலனம்
என்ற நானாவிதமான கர்மங்களில் பிரவேசித்திருந்தனர். நன்கு அரசாளுதலோடு அவர்களுடைய
பிரவேசித்திருந்தனர். நன்கு அரசாளுதலோடு அவர்களுடைய
வாழ்க்கை நின்றுவிடவில்லை. கர்ம மார்க்கத்தைப் கைப்பற்றியே
அவர்கள் முக்தியடைந்தார்கள்.
ஞானியர்கள்
கர்மத்தில் ஈடுபடுதலில் இன்னொரு சிறப்பு உண்டு.
குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது. கண்ணுடையவன் தான் கண்ணில்லாதவனைக் கையைப்
பிடித்து அழைத்துக் கொண்டு போகமுடியும். ஞானக்
கண்ணுடையவர்கள் கர்மத்தைத் தவறுதலின்றிச் செய்யவல்லவர் ஆவர். கர்மம் செய்தே
முன்னேற்றம் அடைந்தாகவேண்டிய உலக மக்களை நல்வழியில்
நடாத்துதல் அவர்களுக்கு இயலும். ஆக, அப்
பொறுப்பை எண்ணிப்பார்க்குமிடத்து, கர்மம் செய்வது அவசியமாகிறது.
உலகத்தைப்பற்றிய
பொறுப்பு அனாவசியமாக வருவித்துக் கொள்ளப்பட்டதல்லவா? அப்படியன்று. ஏனெனில் :
21. யத்யதாசரதி
ஸ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே
ஸ்ரேஷ்ட
யத் யத் ஆசரதி-எதனை
யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ, இதர ஜந: தத்
தத் ஏவ-மற்ற மனிதர்
அதை அதையே (பின்பற்றுகிறார்கள்), ஸ யத்
ப்ரமாணம் குருதே-அவன் எதை
பிரமாணம் ஆக்குகிறானோ, லோக தத் அநுவர்ததே-உலகத்தார் அதையே தொடருகிறார்கள்.
பொருள்
: எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ
அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.
அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே
உலகத்தார் தொடருகிறார்கள்.
மனிதன்
ஈசுவரானுக்கிரகத்தால் மேலோன் ஆகிறான். அப்படி
மேன்மையுற்றவர்களிடத்து ஈசுவர விபூதியும் விசேஷமாக
மிளிர்கிறது. உலகுக்கு மாதிரி மனிதனாக அல்லது
வழிகாட்டும் ஆசாரியனாக அமைந்திருப்பவனும் அவனே. அவன் செய்வதையே
முன் மாதிரியாக உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆதலால்
அவனுடைய பொறுப்பு மிகப் பெரியது. உடலை
விட்டு உறுப்பு ஒன்றை எப்படிப்
பிரிக்க முடியாதோ அப்படியே சமூகத்தை விட்டு மனிதன் பிரிந்திருப்பவன்
அல்லன். அவனுடைய எண்ணமும் செயலும்
நேர்முகமாக அல்லது மறைமுகமாக சமூகத்தைப்
பாதிக்க வல்லவைகளாம். ஆதலால்தான் அவனுடைய செயல்களெல்லாம் நல்வழியில்
செல்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தாக வேண்டும். ஈசுவரன் கொடுத்துள்ள பொறுப்பைப்
புறக்கணிப்பது ஈசுவரனையே புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.
பிறகு ஈசுவரனே எத்தகைய பொறுப்புடையவர்
என்று வினவுமிடத்து அவர் விடையளிக்கிறார் :
22. ந மே பார்தாஸ்தி கர்தவ்யம்
த்ரிஷு லோகேஷு கிஞ்சந
நாநவாப்தமவாப்தவ்யம்
வர்த ஏவ ச கர்மணி
பார்த-பார்த்தா, மே-எனக்கு, த்ரிஷு
லோகேஷு-மூன்றுலகத்திலும், கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி-யாதொரு கடமையுமில்லை, அவாப்தவ்யம்
அவாப்தம் ச ந-பெற்றிராத
பேறுமில்லை, கர்மணி ஏவ வர்தே-தொழிலிலேதான் இயங்குகிறேன்.
பொருள்
: பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை.
நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான்
இயங்குகிறேன்.
ஈசுவரன்
செயலை எண்ணிப்பார்க்குமிடத்து அண்டம் முழுதும் நீக்கமற
அவன் நிறைந்திருந்து அனைத்தையும் இயக்குகிறான். ஓர் அவதார மூர்த்தியாக
அவனைப் பார்க்குமிடத்து மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீ
கிருஷ்ணனுக்கு வருகிற லாப நஷ்டம்
ஒன்றுமில்லை. எனினும் மற்றவர்களையெல்லாம்விட அதிகமாகக் கருமத்தில்
ஈடுபட்டவர் கிருஷ்ணபகவான் ஒருவரேயாம். ஏன் அவர் அப்படிச்
செய்யவேண்டுமென்று கேட்குமிடத்து :
23. யதி
ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது
கர்மண்யதந்த்ரித:
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:
ஹி பார்த-ஏனெனில் பார்த்தா!
ஜாது அஹம் அதந்த்ரித:-ஒருக்கால்
நான் சோம்பலில்லாமல் யதி கர்மணி ந
வர்தேயம்-எப்போதும் தொழில் கொண்டிராவிடின், ஸர்வஸ:
மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே-எல்லாப் பக்கங்களிலும் மனிதர்
என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
பொருள்
: நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா,
எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே
பின்பற்றுகிறார்கள்.
நன்மை கடைப்பிடித்தல், ஓயாது உழைத்தல் முதலிய
நல்வழிகளில் பெரியாரைப் பின்பற்றுதல் உலகில் மிகக் குறைவு.
சோம்பித்திரிதல், முயற்சி குன்றுதல் முதலியன
மேலோரிடத்தும் இருக்கின்றனவென்று சாக்குச் சொல்லி வாழாதொழிதல் பெரும்பாலோரது
போக்காகும். நரோத்தமனாகிய பகவான் வீணே செயலற்றிருப்பதில்லை.
மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக அவர் ஓயாது உழைக்கிறார்.
பின்பு வினை வழுவுவதில் வரும்
கேடு யாது? பகவான் பதில்
அளிக்கிறார் :
24. உத்ஸீதேயுரிமே
லோகா ந குர்யாம் கர்ம
சேதஹம்
ஸங்கரஸ்ய
ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா:
ப்ரஜா:
அஹம் கர்ம ந குர்யாம்
சேத்-நான் தொழில் செய்யாவிட்டால்,
இமே லோகா: உத்ஸீதேயு-இந்த
ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள், ஸங்கரஸ்ய
கர்தா-குழப்பத்தை ஆக்கியோன், இமா: ப்ரஜா:-இந்த
மக்களை, உபஹந்யாம் ஸ்யாம்-கொல்வோன் ஆவேன்.
பொருள்
: நான் தொழில் செய்யாவிட்டால், இந்த
ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை
நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை
யெல்லாங் கொல்வோனாவேன்.
விதைகளுக்கிடையில்
தரத்தில் அதிகம் வித்தியாசம் தெரிவதில்லை.
அப்படி வித்தியாசம் தெரிந்தாலும் அவைகளின் வலிவும் வனப்பும் முளைத்து
வளர்தல் என்னும் வினையால்தான் நன்கு
தெரியும்.
தொழில்
புரியாதிருப்பது உயிர் வாழாதிருப்பதற்கு ஒப்பாகிறது.
செயல் புரியாதவர்களுக்கும் செத்தவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்
மிகக் குறைவு. செத்தவர்களுடைய உடல்
கண்ணுக்குத் தென்படுவதில்லை. செயல் புரியாதிருப்பவர்களுடைய உடல் கண்ணுக்குத்
தென்படுகிறது. செயல் ஒன்றும் அதனிடத்திருந்து
உதிப்பதில்லை. உலகுக்குச் சுவையாக அது வளர்கிறது.
உடலை வளர்ப்பது கீழோர் மேலோர் ஆகிய
எல்லார்க்கும் பொதுவானது. வெறுமனே உடலை வளர்த்துக்கொண்டிருப்பவர்களுக்கிடையில்
தக்கார் தகவிலர் என்னும் வேற்றுமையைக்
காணமுடியாது. அது ஜாதிக்கலப்புக்கு ஒப்பாகும்.
முறையாகத் தத்தம் தொழில்புரியும்பொழுது அதன் மூலம்
அவரவர் மேன்மை மிளிரும். ஒவ்வொருவனுடைய
வகுப்பு அல்லது ஜாதியும் அவன்
புரியும் கர்மத்தினின்று விளங்குகிறது. ஆக, வினையாற்றாவிடின் வாழ்வு
குன்றுகிறது; மேன்மையும் மறைகிறது. பகவான் பிரகிருதிகளைச் செயலில்
தூண்டாவிடில் இத்தகைய சீர்கேடுகள் வந்தமையும்.
வினையாற்றுதலில்
விவேகிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேற்றுமை வருமாறு
:
25. ஸக்தா:
கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர்
லோகஸங்க்ரஹம்
பாரத-பாரதா, அவித்வாம்ஸ: கர்மணி
ஸக்தா:-அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய், யதா குர்வந்தி-எப்படித்
தொழில் செய்கிறார்களோ, ததா வித்வாம்ஸ: அஸக்த:-அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி, லோகஸங்க்ரஹம்
சிகீர்ஷு-உலக நன்மையை நாடி,
குர்யாத்-தொழில் செய்ய வேண்டும்.
பொருள்
: பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே
அறிவுடையோன் பற்றை நீக்கி உலக
நன்மையை நாடித் தொழில் செய்ய
வேண்டும்.
வினைப்பயனை
அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையானது பாமரரைக்
கர்மத்தில் தூண்டுகிறது. ஞானிக்கோ ஆசையொன்றும் கிடையாது. ஆயினும் அவன் ஓயாது
வினையாற்றவேண்டும். சான்றோரைப் பின்பற்றி உலகம் நல்வழிக்கு வருதல்
அதனால் விளையும் சீரிய பயனாகும்.
சொல்லாலும்
செயலாலும் ஞானி எதைச் செய்யலாகாது
எனின் :
26. ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
ஜோஷயேத்ஸர்வகர்மாணி
வித்வாந்யுக்த: ஸமாசரந்
யுக்த:
வித்வாந்-அறிவுடையோன், கர்மஸங்கிநாம் அஜ்ஞாநாம்-தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு, புத்திபேதம்
ந ஜநயேத்-புத்தி
பேதம் விளைவிக்கக் கூடாது
ஸர்வகர்மாணி
ஸமாசரந்-எல்லா கர்மங்களையும் செவ்வனே
ஆற்றி, ஜோஷயேத்-(அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்.
பொருள்
: அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி
பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில்
நின்று தொழில் செய்து எல்லாத்
தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.
தேகம் எடுத்தவன் ஒருவன் கர்மம் செய்யாது
வீணில் வாழ்வதைவிட மேலானது பற்றுடன் கர்மம்
செய்வது. பெரும்பான்மையோர் பற்றுடையவராயிருத்தால்தான் கர்மம் செய்ய வல்லவராயிருக்கின்றனர்.
பற்றற்றுக் கர்மம் செய்தற்கு மிக
மிகச் சிலருக்கே சாத்தியப்படும். பற்றற்றுக் கர்மம் செய்பவர் இகம்,
பரம் ஆகிய இரண்டையும் பெறுகின்றனர்.
எல்லாரும் இகபரமிரண்டையும் பெறுக, என்னும் நல்லெண்ணத்துடன்
அனைவர்க்கும் நிஷ்காமிய கர்மம் புகட்டினால் அதனால்
நன்மையை விடக் கேடே அதிகம்
விளையும். நிஷ்காமிய கருமத்தின் தத்துவத்தை அறியாமையே புத்திபேதமாகும். பண்டிதரைப் போன்று பாசாங்கு செய்து
கர்மத்தைக் கடைப்பிடியாது அவர்கள் இம்மையையே இழந்துவிடுவார்கள்.
இம்மை ஒன்றையாவது பெறுதற்கு அவர்கள் பற்றுடன் கர்மம்
செய்துகொண்டிருக்கட்டும். ஞானியர்கள் தீவிரமாகக் கர்மத்தில் ஈடுபடுவதைப் பார்த்து மற்றவர்கள் இகலோக வாழ்க்கையைப் பலப்படுத்த
முயலுவார்கள்.
பாமரர்
பூணும் பற்றுக்குப் பிறப்பிடம் யாது எனின் :
27. ப்ரக்ருதே:
க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா
கர்தாஹமிதி மந்யதே
ப்ரக்ருதே:
குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால்
எங்கும், கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள்
செய்யப்படுகின்றன, அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால்
மயங்கியவன், கர்தா அஹம் இதி
மந்யதே-“நான் செய்கிறேன்” என்று
நினைக்கிறான்.
பொருள்
: எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று
நினைக்கிறான்.
சத்வம்,
ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால்
ஆகிய பிரகிருதி அல்லது இயற்கை கர்ம
சொரூபமானது. பிரகிருதி வேறு, ஆத்மா வேறு
என்று அறியாதவன் அக்ஞானி. தனக்குப் புறம்பான ஒன்றைத் தன் மயமாகக்
கருதுதல் அகங்காரம். பிரகிருதியை ஆத்மாவென்று அகங்கரித்து கர்மம் செய்யாத ஆத்மா
கர்மம் செய்வதாக எண்ணி அவன் மயங்குகிறான்.
எதிரில் நிற்கும் ஒரு ரயில்வண்டித் தொடரைப்
பார்த்துகொண்டிருப்பவன், அவ்வண்டி ஓட ஆரம்பித்ததும் தானிருக்கும்
ரயில்வண்டியே ஓடுவதாக மயங்குதலை ஒத்தது
இது.
பின்பு
ஞானியோவெனின்,
28. தத்த்வவித்து
மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி
மத்வா ந ஸஜ்ஜதே
து மஹாபாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
குண கர்ம விபாகயோ:-குணம்,
செய்கை இவற்றினுடைய பிரிவுகளின், தத்த்வவித்-உண்மையறிந்தோன், குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன, இதி மத்வா ந
ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.
பொருள்
: குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்
உண்மையறிந்தோன், குணங்கள் குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.
மேகம் மேகத்தின் மீது மோதினாலும் ஆகாசம்
செயலற்றிருக்கிறது. இந்திரியங்களாக வடிவெடுத்துள்ள குணங்கள் விஷயங்களாக வடிவெடுத்துள்ள குணங்களில் பிரவர்த்திக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம்.
ஒளி வீசுவது அக்கினி தத்துவத்தின்
குணம். ஒளியைக் காணும் பாங்கு
கண்ணில் அமைந்திருக்கிறது. அக்கினியின் குணம் கண்ணாக வடிவெடுத்து
அக்கினியின் குணமாகிய வெளியுலக ஒளியை நுகர்கிறது. பஞ்சேந்திரியங்களுக்கும்
இக்கோட்பாடு பொருந்தும். ஆத்மசைதன்யத்தை இவை வந்து தொடுவதில்லை.
இவ்வுண்மையை அனுபவத்தில் கண்டுகொண்டவனுக்குப் பற்று உண்டாவதில்லை. இனி,
29. ப்ரக்ருதேர்குணஸம்மூடா:
ஸஜ்ஜந்தே குணகர்மஸு
தாநக்ருத்ஸ்நவிதோ
மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்
ப்ரக்ருதே:
குணஸம்மூடா:-இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள், குணகர்மஸு ஸஜ்ஜந்தே-குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள், தாந் அக்ருத்ஸ்நவித:-அந்த
முற்றும் அறிந்திராத, மந்தாந் ந விசாலயேத்-சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக்
கூடாது.
பொருள்
: இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த
ஞானி உழல்விக்கக் கூடாது.
பிஞ்சு
ஒன்றில் மேல் தோலுக்கும் சுளைக்கும்
வித்தியாசம் தெரிவதில்லை. முதிர்ந்து பழுத்த பின்பே அது
விளங்குகிறது. அங்ஙனம் அறிவு தெளிவடையாதவர்களுக்குப்
பிரகிருதியின் இயல்பு கர்மம் என்பதும்,
ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை யென்பதும்
தெரியாது. ஆதலால் அவர்கள் கர்மபந்தத்தில்
இருந்தே ஆகவேண்டும். ஆத்ம அநாத்ம விசாரம்
வெறும் குழப்பத்தைத் தான் அவர்கள் உள்ளத்தில்
உண்டுபண்ணும். அவர்கள் பற்றுடன் கர்மம்
செய்துகொண்டிருப்பதில் தோஷமில்லை. தம் இயல்புக்கு ஏற்றபடி
கர்மம் செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்துதற்கிடையில், அறிவுடையோர் செய்யவேண்டியது யாது எனில்:
30. மயி
ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா
நிராஸீர்நிர்மமோ
பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:
அத்யாத்மசேதஸா:-என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக, ஸர்வாணி
கர்மாணி-எல்லாச் செய்கைகளையும், மயி
ஸந்ந்யஸ்ய-என்னில் அர்ப்பணம் செய்து
விட்டு, விகதஜ்வர:-மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்,
நிராஸீ நிர்மம: பூத்வா-ஆசை
நீங்கி, எனது என்பது அற்று,
யுத்யஸ்வ-போர் செய்.
பொருள்
: எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு,
ஆசை நீங்கி, எனது என்பது
அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப்
போர் செய்யக் கடவாய்.
எல்லாம்
ஈசன் செயல், எல்லாம் அவன்
உடைமை. நான் அவனது தொண்டன்
என்கின்ற எண்ணம் வரும்பொழுது மனக்
கொதிப்புப் போய்விடுகிறது. பின்பு கடமையும் நன்கு
ஆற்றப்படுகிறது.
அனைத்துக்கும்
தலைவன் ஈசுவரன் என்பதை அறியாவிட்டாலும்;
31. யே
மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:
ஸ்ரத்தாவந்தோऽநஸூயந்தோ
முச்யந்தே தேऽபி
கர்மபி:
யே மாநவா: அநஸூயந்த:-எந்த
மனிதர் பொறாமையின்றி, ஸ்ரத்தாவந்த:-சிரத்தையுடையோராய், மே இதம் மதம்-என்னுடைய இந்த கொள்கையை, நித்யம்
அநுதிஷ்டந்தி-எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ, தே அபி கர்மபி:
முச்யந்தே-அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
பொருள்
: என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை
எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப்
பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
ஓர் ஊருக்குச் செல்லுதற்கு வழி இன்னதென்று ஒரு
மனிதன் யூகத்தாலும் தெரிந்துகொள்ள இயலாதவனாயிருக்கிறான். ஆனால் அவன் அவ்வூருக்குச்
செல்பவர்கள் சொல்லில் விசுவாசம் வைத்து அவர்களைப் பின்பற்றுகிறான்.
அப்படிச் செய்வதால் அவன் அவ்வூரை நிச்சயமாகப்
போய்ச் சேருவான். ஆத்ம சாதன சம்பந்தமான
விஷயங்கள் ஒரு மந்த அதிகாரிக்கு
நன்கு விளங்காவிட்டாலும் சான்றோர் சொல்லும் நெறியில் சிரத்தை வைத்துத் தானும்
அவ்வழியில் செல்லுவானாகில் வினைத்தளைகளினின்று அவன் விடுபடுவான்.
சிரத்தை
என்பது சிறந்ததோர் மனநிலை. எடுத்துக்கொண்ட கருமத்திலேயே
கண்ணாயிருத்தல், பணிந்திருத்தல், எல்லார்க்கும் வணக்கம் காட்டுதல், விசுவாசம்
பூணுதல் இவையாவும் சிரத்தையில் அடங்குகின்றன. குருவை வணங்குதல் அவரிடத்துச்
சிரத்தை காட்டுவதாகும். பகவத்கீதையினிடத்துச் சிரத்தை கொள்ளுதல் என்பது
அதில் அறிவுக்கு எட்டுகிற பகுதிகளைப் பாராட்டுதலும், எட்டாத பகுதிகள் கூடத்
தனக்கு நன்மை பயப்பனவென்று விசுவாசம்
வைத்தலுமாம். சிரத்தையோடு வறியோர்க்குத் தானம் கொடுத்தல் வேண்டும்.
கொடுக்கிற பொருளை அம்மனிதர் ஏற்றுக்
கொள்ளவேண்டுமென்றும், அப்பொருள் அவர்களுக்குப் பயன்படவேண்டுமென்றும் அடக்க ஒடுக்கத்தோடு உணர்வது
சிரத்தையாகும்.
தன்னால்
அடைய முடியாத நல்லது ஒன்றை
மற்றவர்கள் அடைந்தால் அதைக் கண்டு சகியாத
மன நிலைக்குப் பொறாமையென்று பெயர். ஒரு மனிதனுடைய
மேன்மைகளையெல்லாம் பொறாமையானது தேய்த்துவிடுகிறது. மற்றவர்களது முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்கின்றவளவு ஒரு
மனிதன் தானே முன்னேற்றமடைகிறான்.
சிரத்தையோடு
நன்னெறியைப் பின்பற்றுதலுக்குப் பதிலாக :
32. யே
த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி
நஷ்டாநசேதஸ:
து யே அப்யஸூயந்த:-யாவர்
பொறாமையால், மே எதத் மதம்
ந அநுதிஷ்டந்தி-என்னுடைய
இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ, தாந் அசேதஸ:-அந்த
மூடர்களை, ஸர்வஜ்ஞாந விமூடாந்-முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள்
என்றும், நஷ்டாந் வித்தி-நாசமடைந்தோராகவே
தெரிந்துகொள்.
பொருள்
: என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது
விடுகிறார்களோ, எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை
நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.
தீயில்
கையை வைத்தால் அது சுடும். அதே
அக்கினியை முறையாகப் பயன்படுத்தினால் அதைக்கொண்டு சமைக்கலாம். இதைத் தெரிந்துகொள்ளாதவர்கள் நஷ்டத்தையடைகிறார்கள். அங்ஙனமே ஆத்ம
தத்துவங்களை அறிந்து அவைகளுக்கேற்றபடி வாழ்க்கை
வாழாதவர்கள் நஷ்டத்தையும் கேட்டையும் அடைகிறார்கள்.
ஞானிகள்
அக்ஞானிகள் ஆகிய எல்லோரையும் பற்றிய
ஒரு பேருண்மை யாதெனின்:
33. ஸத்ருஸம்
சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி
ப்ரக்ருதிம்
யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம்
கரிஷ்யதி
பூதாநி
ப்ரக்ருதிம் யாந்தி-எல்லா உயிர்களும்
(இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன,
ஜ்ஞாந்வாந்
அபி-ஞானமுடையவன் கூட, ஸ்வஸ்யா: ப்ரக்ருதே
ஸத்ருஸம்-தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே, சேஷ்டதே-நடக்கிறான், நிக்ரஹ:
கிம் கரிஷ்யதி-(என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?
பொருள்
: ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே
நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.
செடிகள்
தத்தம் இயல்புக்கேற்றாற்போன்று ஓங்கி அல்லது படர்ந்து
வளர்கின்றன. அவைகள் இனிப்பதும் கைப்பதும்
அவ்வகைகளின் இயல்பின்படியே. அவைகளின் இயல்பைத் தடுப்பது வளர்ச்சியையே தடுப்பதற்கு ஒப்பாகும். இயல்புக்கு ஒப்ப ஓங்கி வளரும்படி
செய்தலே சாலச்சிறந்த முறையாகும். மனிதர்களுக்கிடையில் ஞானியர்களே வெவ்வேறு இயல்புடையவர்களாயிருக்கின்றனர். ஒருவர் அந்தர்முக திருஷ்டியிலேயே
ஆழ்ந்து செல்லுகிறார். மற்றொருவர் பகிர்முக திருஷ்டியில் அனைத்தையும் கடவுள் மயமாக இந்திரியங்களைக்
கொண்டு பொருள்படுத்துகிறார். ஒருவர் பக்தியில் பிரியமுடையவர்.
வேறு ஒருவர் ஞான விசாரத்தில்
விச்ராந்தி பெறுகிறார். இப்படி இயல்புகளுக்கேற்ற படி
நெறிகள் மாறினும், சாதகர்கள் அடையும் குறி ஒன்றே.
ஆக, அவரவர் இயல்பின்படியே ஞானியர்கள்
முன்னேற்றமடைந்து வருகின்றனர்.
பிரகிருதியில்
கட்டுண்டு கிடக்கும் பாமரர் பல ஜன்மாந்தரங்களின்
வாசனையினூடு வசப்பட்டவர்கள். அவர்கள் இயல்பைத் தடுப்பது
வளர்ச்சியைக் கெடுப்பதற்கு ஒப்பாகும். அப்படி வளர்ச்சியை வீணாக்காது
இயல்புக்கு ஏற்றபடியே வினையாற்றி முன்னேற்றமடைய அவர்களைத் தூண்டவேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வோர்
இயல்பு உண்டு. அதைப் பின்பற்றுவதே
அவனுடைய போக்கு என்றால் சுயப்பிரயத்தனம்
அல்லது புருஷாகாரத்துக்கு இடமில்லை. இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே
என்று சாஸ்திரம் ஆணையிடுதலிலும் அர்த்தமில்லை. இத்தகைய ஆட்சேபம் ஈண்டு
இயல்பாக எழலாம். அதற்கு விடை
வருகிறது.
34. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே
ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந
வஸமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ
இந்த்ரியஸ்ய
இந்த்ரியஸ்ய அர்தே-இந்திரியத்துக்கு இந்திரிய
விஷயத்தில், ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ-விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன, தயோ: வஸம் ந
ஆகச்சேத்-இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது, ஹி தௌ அஸ்ய
பரிபந்திநௌ-ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு
வழித்தடைகளாம்.
பொருள்
: இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை
இவனுக்கு வழித்தடைகளாம்.
இத்தனைவித
இயற்கைபேதம் உயிர்வகைகளுக்கிடையில் இருப்பதற்கு மூல காரணம் ஈண்டு
இயம்பப்படுகிறது. மூன்று குணங்களின் தாரதம்மியத்தால்
பிரபஞ்சம் முழுதும் உண்டாயின. அதே போன்று ஐந்து
இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுதற்கிடையில் உண்டாகும் விருப்பு வெறுப்பின் தாரதம்மியத்தால் உயிர்களின் இயல்புகள் கணக்கற்ற விதங்களில் பிரிகின்றன. மல்லிகைப்பூவின் மணத்தை உதாரணமாக எடுத்துக்
கொள்வோம். அதை வெறுப்பவர் பலர்.
அதன் பெருமித மணத்தால் ஒருவர்க்குத்
தலைவலி. சிற்றின்ப நுகர்ச்சியை ஞாபக மூட்டுவதால் இன்னொருவருக்கு
அது பிடிப்பதில்லை. சிறுமிகள் அதன் பொருட்டுக் காசை
விரயம் செய்வதால் வேறு ஒருவருக்கு அதன்
மீது வெறுப்பு. இனி, இதை விரும்புபவர்க்கிடையில்
நறுமணத்தை முன்னிட்டும், இன்ப நுகர்ச்சியை முன்னிட்டும்,
அம்பிகையின் ஆராதனையை முன்னிட்டும் அதைப் போற்றுவார் பலர்
உளர். இப்படியே எல்லா இந்திரியங்கள் வாயிலாகவும்
எல்லாப் பொருள்களிடத்தும் வெவ்வேறு படித்தரங்களில் விருப்பு வெறுப்பு வளர்க்கப்படுகின்றன. விருப்பு வெறுப்பின் தொகுதியே ஒவ்வொரு ஜீவனது இயல்பு
ஆகிறது.
இனி, சுயப் பிரயத்தனத்துக்கும் சாஸ்திரத்துக்கும்
இடம் இந்த விருப்பு வெறுப்பை
மாற்றியமைப்பதில்தான் இருக்கிறது. விருப்பு வெறுப்பை ஒரு மனிதன் ஒரு
நெடிப்பொழுதில் மாற்றி விட முடியாது.
விஷயங்களில் கொண்டுள்ள விருப்பு வெறுப்பை மீட்டெடுத்து சர்வேசுவரனிடம் வைத்தால் அவைகள் சத்துருக்கள் ஆகமாட்டா.
விருப்பு
வெறுப்பு வாழ்க்கையை இன்னும் எப்படிக் குலைத்துவிடுகிறது
எனின் :
35. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ
விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வதர்மே
நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:
ஸ்வநுஷ்டிதாத்
பரதர்மாத்-நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்,
விகுண: ஸ்வதர்மோ ஸ்ரேயாந்-குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது, ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய:-ஸ்வதர்மத்தில்
இறந்துவிடினும் நன்றேயாம், பரதர்ம: பயாவஹ:-பரதர்மம்
பயத்துக்கிடமானது.
பொருள்
: நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்
குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.
இன்பம்
தருவதில் விருப்பும், துன்பம் தருவதில் வெறுப்பும்
கொள்ளுதல் மனிதனது இயல்பு. அர்ஜுனன்
இளமையிலிருந்து பெற்ற பயிற்சி போர்
புரிதற்கானது. அப்பயிற்சியில் அவன் பெருமகிழ்ச்சியும் பெறலானான்.
அதுவே அவனது ஸ்வதர்மம். இப்பொழுது
அறப்போர் தொடுத்தவிடத்து அது பாட்டனாரையும் ஆசாரியரையும்
கொல்லுதல் என்ற துன்பத்தைத் தருமாதலால்
ஸ்வதர்மத்தில் அவன் வெறுப்புக்கொள்ளலானான். காட்டில் போய்
நிஷ்டை புரிதல், ஐயமேற்றுண்ணல் என்ற பரதர்மத்தில் பிரவேசிக்கப்
பார்த்தான். வெறுப்பினால் அல்லது அச்சத்தினால் ஒருவன்
தன் தொழிலை விட்டுவிடுவானானால் அதனால்
ஒரு நன்மையும் வந்தமையாது. இனிய வாழ்க்கை கிட்டுமென்ற
விருப்பத்தால் பரதர்மத்தில் பிரவேசிப்பதும் ஒண்ணாது. மனதைப் பக்குவப்படுத்துதலே வாழ்க்கையின்
குறிக்கோள். விருப்பு வெறுப்பின் வசப்பட்டுத் தொழிலை மாற்றுவது உறுதியற்ற
மனதின் போக்காகும். உயிரையே வழங்கவேண்டிவரினும் தன்
கடமையினின்று பிறழாதிருத்தல் பக்குவமான வீரனது செயலாகும். பயப்படுவது
சாதற்கு ஒப்பாகிறது. பயந்து தொழிலை மாற்றுபவன்
ஓயாது செத்துக்கொண்டே இருக்கிறான். அத்தகையவன் அழியாப் பெருநிலையைப் பெறுதல்
எங்ஙனம்.
கேடுகளுக்கெல்லாம்
மூலகாரணம் யாது என்று அத்-2
சுலோ-62 லும், அத்-3 சுலோ-34
லும் பகவான் குறிப்பாகச் சொல்லியிருந்தும்
வெளிப்படையாக விடை வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன்
அர்ஜுனன் ஈண்டு ஒரு கேள்வியைக்
கேட்கிறான்.
அர்ஜுந
உவாச
36. அத
கேந ப்ரயுக்தோऽயம்
பாபம் சரதி பூருஷ:
அநிச்சந்நபி
வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:
அர்ஜுந
உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே
அத அயம் பூருஷ:-பின்
இந்த மனிதன், அநிச்சந் அபி-இச்சையில்லாத போதும், பலாத் நியோஜித:
இவ-வலியக் கொண்டு புகுத்துவதுபோல்,
கேந ப்ரயுக்த: பாபம் சரதி-எதனால்
ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?
பொருள்
: அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு
இச்சையில்லாத போதும் அவனை வலியக்
கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?
ஸ்ரீ பகவாநுவாச
37. காம
ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
மஹாஸநோ
மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்
ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான், ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
ஏஷ: காம: க்ரோத-இஃது
விருப்பமும் சினமும், மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு
செய்வது; பெரும்பாவம், யேநம் இஹ வைரிணம்
வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து
கொள்.
பொருள்
: பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்;
ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும்பாவம்.
இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து
கொள்.
உலகத்தவர்
எல்லார்க்கும் பரம சத்துருவாயிருப்பது ஆசை,
அந்த ஆசைக்குத் தடையுண்டாகும்போது அது கோபமாக வடிவெடுக்கிறது.
ஆகையால் காமத்தையும் குரோதத்தையும் ஒன்றாகப் பகவான் பகருகிறார். அது
ரஜோ குணத்திலிருந்து உதிக்கிறது. மேலும் ரஜோகுண வளர்ச்சியையும்
உண்டுபண்ணுகிறது. நெருப்புக்கு எவ்வளவு விறகு கொடுத்தாலும்
அதைப் பொசுக்கிவிட்டு மேலும் விறகை வேண்டி
நிற்கிறது. அங்ஙனமே காமத்துக்கு விஷயங்களை
ஊட்ட ஊட்ட அது அவைகளை
உண்டு வளர்க்கிறது. விஷயம் என்னும் உணவை
வேண்டியவாறு அது உண்ண வல்லது.
ஆசை பெருகப் பெருக பாவமும்
பெருகுகிறது. மனிதனுக்கு வரும் கேடுகளெல்லாம் ஆசையிலிருந்து
வந்தவைகள். ஆகையால் அது இவ்வுலக
வாழ்க்கையில் எல்லார்க்கும் பகையாம்.
ஆசை எப்போக்கில் பகை என்பது இனி
விளக்கப்படுகிறது :
38. தூமேநாவ்ரியதே
வஹ்நிர்யதாதர்ஸோ மலேந ச
யதோல்பேநாவ்ருதோ
கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்
யதா தூமேந வஹ்நி- எப்படி
புகையினால் தீயும், மலேந ஆதர்ஸ:
ச-அழுக்கால் கண்ணாடியும்,
ஆவ்ரியதே-மறைக்கப் படுகிறதோ, யதா உல்பேந கர்ப
ஆவ்ருத:-எப்படி தசையால் கர்ப்பம்
மூடப் பட்டிருக்கிறதோ, ததா தேந இதம்
ஆவ்ருதம்-அதே போல இது
(ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.
பொருள்
: புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும்,
கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும் இது இவ்வுலகைச்
சூழ்ந்திருக்கிறது.
ஆசை என்னும் திரையினால் ஆத்மசொரூபம்
மூடப்பட்டிருக்கிறது. மூன்று குணங்களை ஆதாரமாகக்கொண்டு
ஆசையும் மூன்று படித்தரங்களில் இருக்கிறது.
தீயைப் புகை மூடிக்கொண்டிருப்பது முதல்
உபமானமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சத்வ குணத்தோடுகூடிய ஆசை
இத்தகையது. புகைந்துகொண்டிருக்கிற தீயின்மீது சிறிது காற்று அடித்தால்
அது பற்றி எரிகிறது; புகையும்
மறைகிறது. தீயின் சுடர் நன்கு
தென்படுகிறது. அங்ஙனம் சிறிது விவேகம்
என்னும் காற்று வீசினால் சாத்வீக
ஆசை என்னும் புகை பறந்தோடிவிடும்.
ஆத்ம சொரூபம் உள்ளபடி ஒளிரும்.
இரண்டாவது ஆசை ரஜோகுண மயமானது.
கண்ணாடியின் மீது படிந்துள்ள அழுக்கைப்
போக்குதற்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ரஜோகுணத்தோடு கூடிய ஆசையைச் சிறிது
முயற்சி செய்தே போக்கமுடியும். மூன்றாவது
ஆசையோ தமோகுணமயமானது. காலக்கிரமத்தில் தான் தக்க வாழ்க்கையின்
மூலம் சிசுவைக் கருப்பையிலிருந்து விடுவிக்கமுடியும். அங்ஙனம் தமோகுணத்தில் உதித்த
ஆசையைப் போக்கக் காலமும் ஆயத்தமும்
தேவை.
மேல் சுலோகத்தில் இயம்பப்பட்ட ஆசையானது இன்னும் தெளிவுபட இங்கு
விளக்கப்படுகிறது:
39. ஆவ்ருதம்
ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா
காமரூபேண
கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச
ச கௌந்தேய-மேலும் குந்தியின்
மகனே, துஷ்பூரேண அநலேந-திருப்தி அடையாத
நெருப்பைப் போன்றதும், காமரூபேண-விருப்பமேனும் வடிவில் இருப்பதும், ஜ்ஞாநிந:
நித்யவைரிணா-ஞானிக்கு நித்தியப் பகை, ஏதேந ஜ்ஞாநம்
ஆவ்ருதம்-இந்த காமம் (ஆசை)
ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
பொருள்
: குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந்
நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப்
பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
உலகம் முழுதுக்குமே பகையாகிய ஆசையை அக்ஞானியானவன் அதன்
வசப்பட்டிருக்கும்பொழுது நலம் செய்யும் நண்பனாக
நினைக்கிறான். பிறகு அதனால் விளையும்
கேடு வலுத்துவிடும்பொழுதே அதை ஹிதசத்துரு என்று
அறிகிறான். ஆயினும் இந்த அனுபவம்
நிலைத்திருப்பதில்லை. திரும்பவும் அவன் ஆசையின் வசப்படுகிறான்.
ஆனால் ஞானியின் நிலை அத்தகையதன்று. ஆசையின்
வசப்பட்டிருக்கும்பொழுதும்
வசப்படா திருக்கும்பொழுதும் அதைப் பகையென்று அவன்
நன்கு உணர்கிறான். ஆகையால் ஆசை அவனுக்கு
மட்டும் நித்திய சத்துருவாகிறது; என்றென்றும்
அது அவனுக்கு எதிரி. ஆசையின் வடிவு
ஒன்று இரண்டு அல்ல. விரும்பியவாறெல்லாம்
அது வடிவெடுக்கிறது. ஒரே நாளில் ஒரு
மனிதனது ஆசை எத்தனை விதமான
வடிவெடுக்கிறது என்பதை அவன் கொஞ்சம்
ஆராய்ந்துபார்த்தால் தெரியும். ஆதலால் அது காமரூபம்
என்று அழைக்கப்படுகிறது. ஓட்டைச் சட்டியில் நீர்வார்த்து
நிரப்பமுடியாது. ஆசையையும் நிரப்பி ஒரு முடிவுக்குக்
கொண்டு வர முடியாது. விஷய
சுகத்தைப் போதும் என்று ஆசையானது
ஒருபொழுதும் பகர்வதில்லை.
ஆசைக்கு
இருப்பிடம் எது? விடை வருகிறது
:
40. இந்த்ரியாணி
மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ
ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்
இந்த்ரியாணி
மந: புத்தி-இந்திரியங்களும், மனமும்,
புத்தியும், அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே-இதற்கு நிலைக்களன் என்பர்,
ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய-இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து,
தேஹிநம் விமோஹயத்-மனிதனை மயங்குவிக்கிறது.
பொருள்
: இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு
நிலைக்களன் என்பர். இவற்றால் இது
ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.
எதிரி எந்தக் கோட்டையில் எப்படி
வாசம் செய்கிறான் என்பது தெரிந்தால் பின்பு
அவனை எதிர்ப்பது எளிதாகிறது. ஆசை என்னும் எதிரி
மனிதனது மனக்கோட்டையில் வசிக்கிறான். இந்திரியங்களையும், மனதையும், புத்தியையும் தன் கருவிகளாக அவன்
கைப்பற்றிக்கொண்டான். கண்கொண்டு பார்ப்பதெல்லாம் காமத்தை வளர்ப்பதற்கேயாம். அப்படியே
காது முதலிய மற்ற இந்திரியங்களும்
காமத்தைப் பெருக்குதற்கே தொழில் புரிகின்றன. மனதில்
உதிக்கும் உணர்ச்சிகளும். சங்கற்பங்களும் காமத்துக்கு உட்பட்டவைகளாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றன. அறிவைக்கொண்டு
தீர்மானிப்பது, நூல்கள் பல கற்பது,
வாதாடுவது இவையாவும் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளுதற்கென்றே நடைபெறுகின்றன. ஆத்மாவுக்கு அடிமைபூண அமைந்துள்ள கருவி கரணங்கள் ஆசைக்கு
அடிமைகளாயின; அந்தோ!
இந்த ஆசையை வெல்லுதல் எங்ஙனம்?
விடை வருகிறது :
41. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ
நியம்ய பரதர்ஷப
பாப்மாநம்
ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம்
தஸ்மாத்
பரதர்ஷப-ஆதலால் பாரத ரேறே,
ஆதௌ இந்த்ரியாணி நியம்ய-தொடக்கத்தில் இந்திரியங்களைக்
கட்டுப்படுத்திக்கொண்டு, ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்-ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய, ஏநம் பாப்மாநம் ஹி
ப்ரஜஹி-இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.
பொருள்
: ஆதலால் பாரத ரேறே, நீ
தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.
முதலில்
இந்திரியங்களை முற்றுகைபோட்டுக் கைப்பற்றிக் கொண்டால் எதிரியாகிய ஆசைக்கு இருப்பிடம் இல்லாது
போய்விடுகிறது. அதில் எதிரியின் பலம்
பெரிதும் குறைகிறது. பிறகு அதை வெல்தலும்
எளிதாகிறது. நூலறிவு ஞானமென்றும், சுவானுபவம்
விக்ஞானமென்றும் சொல்லடுகின்றன. இவ்விரண்டையும் தொலைக்கவல்லது ஆசை. ஆத்ம சொரூபத்தை
மறைப்பதால் அது பாப சொரூபமானது.
அத்தகைய ஆயையை வெல்லுதல் வீரனது
செயல்.
சாதகன்
எந்த இடத்தில் நின்றுகொண்டு ஆசையை முற்றுகை போடவேண்டும்
என்ற கேள்வி எழுவதால் அதற்கு
விடை வருகிறது.
42. இந்த்ரியாணி
பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:
மநஸஸ்து
பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:
இந்த்ரியாணி
பராணி ஆஹு-இந்திரியங்களை உயர்வுடையன
என்பர், இந்த்ரியேப்ய: பரம் மந:-அவற்றிலும்
மனம் மேல், மநஸ: து
பரா புத்தி-மனத்தைக் காட்டிலும்
புத்தி மேல், புத்தே: பரத
து ஸ:-புத்திக்கு மேலே
அவன் (ஆத்மா).
பொருள்
: இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனத்தைக்
காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு
மேலே அவன் (ஆத்மா).
சூக்ஷ்மமானது
ஸ்தூலத்தைவிட யாண்டும் மேலானது. பொறிகள் ஐந்து உள.
பருத்த உடலைவிடப் பொறிகள் மேலானவை. ஏனென்றால்
உடலைவிடப் பரந்த போக்கில் அவைகள்
செயல் புரிகின்றன. மனதோ இந்திரியங்களைவிட சூக்ஷ்மமானது.
அது உணரவல்லது; சங்கல்ப விகல்ப மயமானது
மனதில் தொழிலாகிய எண்ணத்துக்கு இந்திரியங்களின் தொழிலைவிட அதிக வியாபகமுண்டு. அதனினும்
பெரியது புத்தி. மனது சந்தேகம்
கொள்கிறது. மற்று, புத்தியோ மெய்ப்
பொருளை நிச்சயிக்கிறது. ஆகையால் அது பெரியது.
புத்திக்கும் எட்டாதது தேகி அல்லது ஆத்மா.
ஆசையானது மனம் முதலியவைகளைப் பற்றிக்கொண்
ஆத்ம சொரூபத்தை மறைக்கிறது.
பழம் ஒன்றின் மேல்தோலினின்று உட்பகுதிக்குப்
போகப் போக அது சுளையின்
பாங்கைப்பெறுகிறது. அங்ஙனம் தேகம், இந்திரியங்கள்,
மனது, புத்தி ஆகியவைகளுள் பிந்தியவைகள்
படிப்படியாக உள்ளிருக்கும் ஆத்ம சொரூபத்தை அடைகின்றன.
நுண்ணியத்தைப் பற்றுமளவு ஆசையும் வலிவு மிகப்
பெறுகிறது. இந்திரியங்களைப் பற்றும் ஆசை உடல்
ஆசையை வெல்லுகிறது. தூசி நிறைந்த காற்றும்
மின்னலும் இடியும் வரும்போது உடலில்
தூசி படிவதில் தடையில்லை. ஆனால் கண்ணும் காதும்
காப்பாற்றப்படுகின்றன. நோய்வாய்ப்பட்ட கண்ணை நீக்காவிட்டால் அது
மூளையைத் தாக்கி, பைத்தியம் பிடிக்கும்
என்ற பிரச்னை ஏற்படுகிறது. அப்பொழுது
நல்ல மனதின் பொருட்டுக் கண்
என்ற இந்திரியம் பறிகொடுக்கப்படுகிறது. அறிவை வளர்ப்பதற்காக எத்தனை
துன்பங்களையும் சகிக்கும் தன்மை மனிதனுக்கு வருகிறது.
ஏனென்றால் புத்தியைப் பற்றியுள்ள ஆசையானது மனதைப் பற்றியுள்ள ஆசையை
அகற்றுகிறது. இங்ஙனம் நுண்ணியதற்குப் போகப்போக
ஆசையின் வலிவும் அதிகரித்துக் கொண்டே
போகிறது.
புத்தியைப்
பற்றியுள்ள ஆசையும் பந்தத்துக்கு ஏதுவானதே.
ஆதலால் அதை அறுப்பது எங்ஙனம்?
விடை வருகிறது:
43. ஏவம்
புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா
ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம்
துராஸதம்
ஏவம் புத்தே: பரம்-இங்ஙனம்
புத்திக்கு மேலான, புத்த்வா-பொருளை
(ஆத்மாவை) உணர்ந்து, ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்ய-தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, துராஸதம் காமரூபம்-வெல்லற்கரிய விருப்பமாம், ஸத்ரும் ஜஹி மஹாபாஹோ-பகையைக் கொல்லக் கடவாய்,
பெருந்தோளுடையாய்!
பொருள்
: இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை)
உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம்
பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!
ஆசையானது
இந்திரியங்களையும் மனதையும் புத்தியையும் பற்றி நிற்கும்பொழுது ஜீவபோதம்
தடிக்கிறது. அதனால் மனிதனுக்குத் துன்பமே
அதிகரிக்கிறது. மற்று, வாழ்வானது இன்பம்
நிறைந்திருக்கிறது என்று மக்கள் கருதுகின்றனர்.
ஒவ்வோர் இன்பமும் இறுதியில் துன்பமாகப் பரிணமிப்பதை அவர்கள் நாளடைவில் அறிவார்கள்.
இந்திரியங்கள், மனது புத்தி ஆகிய
இவை யாவும் பரமாத்மாவைச் சார்ந்திட
அருள்தாகம் பெருக்கெடுக்கும்பொழுது விஷய ஆசை அடிபட்டு
ஒழிகிறது. ஜீவபோதம் தேய்கிறது; பரபோதம் வளர்கிறது; பேரானந்தம்
ஊற்றெடுக்கிறது. அது பின்பு துன்பமாக
மாறுவதில்லை.
No comments:
Post a Comment