Saturday, 2 August 2014

34. வீணா தட்சிணாமூர்த்தி


34. வீணா தட்சிணாமூர்த்தி

திருக்கையிலையில் பக்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள் செய்ய தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளினார். அப்போது நாரதர். சுக்ரமுனிவர்களின் இசைஞானத்தை உணரவும், சாமவேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப்பாடவும் தங்களுக்கு அருள்புரிய வேண்டினார். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையையும், இசைக்கலையைப் பற்றியும் கூறத் தொடங்கினார். அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும். அதனால் என்னப் பலன், என்றும் எம்மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக்குற்றம் ஏற்படுமென்னும் விளக்கிக்கொண்டு வந்தார். அப்போது கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றார். அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட நால்வகை வீணைகளையும் செய்யலாம் என்றார். அந்த நால்வகை வீணையாவன பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பனவாகும். இதில் பேரியாழுக்கு 21 நரம்பும், மகரயாழுக்கு 17 நரம்பும், சகோடயாழுக்கு 16 நரம்பும், செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்கவேண்டும். மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும். முக்கியமான வீணையுடன் பாடும்போது <உடல் குற்றம் இல்லாமலும், பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும் என்பது மரபு. இவ்வாறாக வீணையைப் பற்றியும், இசையைப் பற்றியும், அதன் பாடல்களைப் பற்றியும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்து விரிவாகக் கூறி அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக்காட்டினார். இதனைக்கண்ட, கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர். தங்கள் கண்களையே நம்பமுடியாமல் ஆச்சர்யப்பட்டனர். இவ்வாறு நாரதர், சுகர் பொருட்டு வீணையுடன் காட்சிதருவதால் அவர்க்கு வீணா தட்சிணாமூர்த்தி என்றப் பெயர் உண்டானது.


திருச்சிக்கருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தி இருக்கின்றார். இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக்கிழமைகளில் இவர்க்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer