Saturday, 2 August 2014

61. வராக சம்ஹார மூர்த்தி

61. வராக சம்ஹார மூர்த்தி



இரணியாக்கன் எனும் அசுரன் பிரமனை நோக்கி தவமிருந்தான், அவனது தவத்திற்கு மெச்சிய பிரமன் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்தார். இதனால் அந்த அசுரன் உலகை பாய்போல் சுருட்டி கடலில் சென்று மறைந்தான். தேவர்கள் இதனால் செய்வதறியாது திகைத்தனர். பின் திருமாலிடம் முறையிட்டனர். திருமாலும் அனைவரது ஆசியுடன் கருடவாகனத்தில் சென்று வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம் கொண்டார். அது மலையை விட உயரமாகவும். ஒவ்வொரு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளியும். அதன் வால் அசைவு எட்டுத் திக்கையும் தொட்டு அதன் மூச்சுக்காற்றின் வெப்பத்தினால் உலகமே குலுங்குகிறது. இப்படியாக பயங்கரமான உருவம் கொண்ட திருமால் கடலையே பிரட்டிப்போட்டு அசுரனைக் கண்டுபிடித்தார். அவனை தன் கொம்பினால் கொன்று, உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார். பின் அவ்வராகம் பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் கொன்று தின்றது. இதன் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த அவர் வேட வடிவம் கொண்டு வராகத்தை தன் சூலாயுதத்தால் கொன்று, அதன் ஒரு கொம்பொடித்து தன்மேனியில் ஆபரணமாக்கினார். அதனால் வராகத்தின் அகந்தை ஒழிந்தது. சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியது. இதனால் அதனுடைய மற்றொரு கொம்பு பிழைத்தது. பின்னர் சிவனருளால் வராக உருவம் நீங்கி பழைய உருவம் அடைந்ததும் அனைவருக்கும் வராக புராணம் கூறி வைகுந்தம் சென்றார்திருமால் தேவர்கள் துயர்துடைக்க வராகத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காசியிலும், தமிழகத்திலும் உள்ள பழமலைக் கோயிலிலும் காணலாம். இவர்க்கு புதன்கிழமைகளில் நெய்விளக்கும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் கொடுக்க வியாபாரம் கொழிக்கும் பகைவர் பார்வையால் வளம் பெருகும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer