Friday, 26 December 2014

புத்தாண்டு பலன்கள்- 2015

2015 மேஷம்

மேஷம்  
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக  ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால்  உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு  உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல்  ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள்  போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால்  வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால்  தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

பெண்களுக்கு 

அஷ்டமச் சனி நடைபெறுவதும், குரு 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கிய வர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றிக் கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு எதிலும் லாபமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள் வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிகை நண்பர் களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஒரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்க நிலை ஏற்படும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப்பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். சுக வாழ்க்கைக்கு பஞ்சம் இருக்காது.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

மாதப் பலன்கள்

ஜனவரி 

உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிலிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலனையும் லாபத்தையும் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-01-2015 அதிகாலை 02.42 மணிமுதல் 18-01-2015 காலை 07.33 மணி வரை.

பிப்ரவரி

மாதக் கோள் என வர்ணிக்கப்படும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. அசையும்- அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். திருமண சுப காரியங்களுக்கான  முயற்சிகளில் சிறுசிறு தடைகள் உண்டாகும். தட்சிணாமுர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 12-02-2015 காலை 11.08 மணி முதல் 14-02-2015 மாலை 05.37  மணி வரை.

மார்ச்

உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகுவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடையமுடியும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லதுகொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 11-03.2015 மாலை 05.41 மணிமுதல் 14-03-2015 அதிகாலை 01.31 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 4-ல் குருவும் 8-ல் சனியும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 07-04-2015 இரவு 11.19 மணி முதல் 10-04-2015 காலை 07.28 மணி வரை.

மே

ராசிக்கு 2-ல்  சுக்கிரனும் 6-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக முன்னேற்றமும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் உண்டாகும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுகவாழ்வு பாதிப் படையும். கடன்கள் சற்று குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 05-05-2015 அதிகாலை 05.33 மணி முதல் 07-05-2015 மதியம் 01.02 மணிவரை.

ஜூன்

ராசிக்கு 6-ல் ராகுவும் மாத பிற்பாதியில் 3-ல் செவ்வாய், சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நினைத்ததை ஓரளவுக்கு நிறைவேற்று வீர்கள். என்றாலும் ஜென்ம ராசிக்கு 8-ல் சனி சஞ்சாரம் செய்வதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிருக்காது. கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் வீண் விரயங்கள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்ய இயலாது போகும். உற்றார்உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-06-2015 மதியம் 01.06 மணி முதல் 03-06-2015 இரவு 07.49 மணி வரை. மற்றும் 28-06-2015 இரவு 09.46 மணி முதல் 01-07-2015 அதிகாலை 04.17 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதாரரீதியாக நல்ல மேன்மைகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் அனைத்தையும் பெறமுடியும். கொடுக் கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 26-07-2015 காலை 06.40 மணி முதல் 28-07-2015 மதியம் 01.50 மணி வரை.

ஆகஸ்ட்

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சாரம் செய்தாலும் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. தேவையற்ற வீண் பயணங்களைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையி ருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-08-2015 மதியம் 02.42 மணி முதல் 24-08-2015 இரவு 11.10 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-09-2015 இரவு 09.22 மணி முதல் 21-09-2015 காலை 07.03 மணி வரை

அக்டோபர்

ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் சூரியனும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரமும் முன்னேற்றமான நிலையில் நடைபெறும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் சாதகமாகச் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்குத் தகுந்த பாராட்டு கிடைக்கப்பெறும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 16-10-2015 அதிகாலை 03.09 மணிமுதல் 18-10-2015 மதியம் 01.11 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பது உடல் நிலையில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். என்றாலும் 5-ல் குருவும், 6-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறமுடியும். நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக்கும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சமுதாயத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது,

சந்திராஷ்டமம்: 12-11-2015 காலை 09.11 மணி முதல் 14-11-2015 மாலை 06.44 மணி வரை.

டிசம்பர்

5-ல் குருவும் 6-ல் செவ்வாய், ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரரீதியாக லாபங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள். பணம் சேமிக்க முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 09-12-2015 மாலை 04.28 மணி முதல் 12-12-2015 அதிகாலை 01.19 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1, 2, 3, 9; நிறம் - ஆழ் சிவப்புகிழமை - செவ்வாய்; கல்- பவளம்; திசை - தெற்குதெய்வம் - முருகன்.

பரிகாரம்


மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றுவது நல்லது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். சுக ஸ்தானமான 4-ல் குரு பகவான் 05-7-2015 வரை சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைதோறும் கொண்டைக் கடலை மாலை சாற்றுவதும் நல்லது.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer