Friday, 26 December 2014

2015 தனுசு

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகள் பல பெறக்கூடிய தனுசு ராசி நேயர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ராசியாதிபதி குரு பகவானும் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராசிக்கு 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இது அவ்வளவு சாதகமான அமைப்பில்லை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மேற்கூறிய பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தாலும் உங்களின் உழைப்பாலும் எதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து  வெற்றி நடைபோடுவீர்கள். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ராசியாதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் சனியால் ஏற்படும் பிரச்சினைகள்  யாவும் ஓரளவுக்கு குறையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள்  கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒருசில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது.

உடல் ஆரோக்கியம்

 இந்த ஆண்டு முழுவதும் ஆயுள் காரகன் சனி பகவான் விரயஸ்தானமான 12-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தேவையற்ற பயணங்கள் அலைச்சல், டென்ஷன், மந்த நிலை, கை கால் வலி போன்றவை உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ணமுடியாத நிலை ஏற்படும். அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் நிதானமாகத்தான் செய்வீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் உடல் உபாதைகளும், வீண் செலவுகளும் படிப்படியாகக் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமையானது ஆண்டின் தொடக்கத்தில் சுமாராகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்யநேரிடலாம். வரும் ஜூலை 5-ஆம் தேதி ராசியாதிபதி குரு பகவான் 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் சனியால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைந்து குடும் பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்பு போன்றவை உண்டாகும். கடன்களும் படிப்படியாகக் குறையும். செலவுகளும் கட்டுக்குள்ளிருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகம்

 உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சிறுசிறு பிரச்சினைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், புதிய இடத்தில் உணவு முறைகளோடும், உடன்பணிபுரிபவர்களிடமும் ஒத்துப்போகமுடியாத நிலை உண்டாகும்என்றாலும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிட்டும். உயரதிகாரிகளின்  ஆதரவு உங்களை மேலும் உற்சாகக் கடலில் ஆழ்த்தும் என்றாலும் வேலைப் பளு குறையாது. நிறைய உழைக்க வேண்டி வரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாகச் செயல்படமாட்டார்கள். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். சனி இந்த வருடம் சாதகமின்றி சஞ்சரித்தாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். ஓரளவுக்கு லாபமும் கிட்டும். போட்டிகளையும் சமாளித்து விடுவீர்கள். வெளியூர்வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். இந்த ஆண்டு சனி விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு 8-ல் சாதகமற்று சஞ்சரிப்பதாலும், சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகள்விரயங்கள் ஏற்படும். எனவே பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும்வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் எதிலும் கவனமுடன் செயல்படவேண்டிய ஆண்டாகும். மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் மக்களிடம் ஆதரவு குறையும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாமல் போகும்கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகளை செய்யநேரிடும். எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

விவசாயிகளுக்கு

 விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்குமென்றாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காதுதாமதம் ஆகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. புழு, பூச்சிகளின் தொல்லைகளால் சில வீண் விரயங்களும் உண்டாகும். குடும்பத்தில் ஆண்டின் பிற்பாதியில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும்.

கலைஞர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் வாய்ப்புகள் நல்லதாகத் தேடிவரும். இந்த ஆண்டு நிறைய தேவையற்ற அலைச்சல்களும், சுகவாழ்வு பாதிப்படையக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பணவரவுகள் ஆண்டின் பிற்பாதியில் சிறப்பாக இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும்.

மாணவமாணவியருக்கு

கல்வியில் மந்தமான நிலை இருக்கும். எதையும் எளிதில் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு ஞாபக மறதி, மனக் குழப்பங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை

மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியுமென்றாலும் ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நம்பிய கூட்டாளிகளே துரோகம் செய்வார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களும் அதிகரிக்கும். பணவிஷயத்தில்  பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சனிக்கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 06-01-2015 அதிகாலை 04.55 மணி முதல் 08-01-2015 மாலை 04.28 மணி வரை.

பிப்ரவரி 

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணவரவுகள் ஏற்றத்தாழ்வுடன் இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதமடையும். தினமும் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 02-02-2015 11.28 மணி முதல் 04-02-2015 இரவு 11.17 மணி வரை.

மார்ச்

ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதும் ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், குடும்பத்தில் வீண் விரயங்களும் உண்டாகும் என்றாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும், நல்ல வரன்கள் தேடிவரும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிலிருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-03-2015 மாலை 05.17 மணி முதல் 04-03-2015 காலை 05.26 மணி வரை; மற்றும் 28-03-2015 இரவு 11.35 மணி முதல் 31-03-2015 பகல் 11.40 மணி வரை.

ஏப்ரல்

சுக ஸ்தானமான 4-ல் சூரியனும் 5-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளே ஏற்படும். கடன்கள் சற்று குறையும். நிறைய பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வுகளைப் பெற்றாலும் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-04-2015 காலை 07.12 மணி முதல் 27-04-2015 மாலை 06.37 மணிவரை.

மே

இம்மாதம் 2-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாயும் மாத பிற்பாதியில்  6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பணவரவுகளில் தடைகள் ஏற்படாது. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் சற்று லாபம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தேக்கமடையாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை  வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-05-2015 மதியம் 03.53 மணி முதல் 25-05-2015 அதிகாலை 02.27 மணி வரை

ஜூன்

ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் 12-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் வீண் விரயங்கள் குறையும். உங்களது பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பணவரவுகளில் நல்ல மேன்மைகள் ஏற்படுவதால் கடன்கள் சற்றே தீரும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-06-2015 இரவு 12.40 மணி முதல் 21-06-2015 காலை 10.41 மணி வரை.

ஜூலை

களத்திர ஸ்தானமான 7-ல்  சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும் 5-ஆம் தேதி முதல் குரு 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் திருமண சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் குடியேறும். கணவன்- மனைவியிடையே கடந்த காலங்களிலிருந்த  மனசஞ்சலங்கள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும்திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் மனதில் நினைத்தவரையே கைப்பிடித்து மகிழ்வர். பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 16-07-2015 காலை 08.30 மணி முதல் 18-07-2015 மாலை 06.31 மணி வரை.

ஆகஸ்ட்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுமென்றாலும் குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. மங்களகர மான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிகள் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். புதிய பூமி, நிலம், வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். சஷ்டி விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 12-08-2015 மதியம் 02.59 மணி முதல் 15-08-2015 அதிகாலை 01.28 மணி வரை.

செப்டம்பர் 

குரு 9-ல் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும், செய்யும் தொழிலில் நல்ல மேன்மைகள் ஏற்படும். என்றாலும் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டிவாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 08-09-2015 இரவு 08.38 மணி முதல் 11-09-2015 காலை 07.34  மணி வரை.

அக்டோபர்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 9-ல் குரு, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம், அசையும்- அசையாச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வுகளைப் பெற்றாலும் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில்  சிறப்பான லாபம் அமையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆஞ்சநேயரை  வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 06-10-2015 அதிகாலை 02.38 மணி முதல் 08-10-2015 மதியம் 01.27 மணி வரை.

நவம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குருவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமெடுப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். கனவுகள் அனைத்தும் நனவாகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 02-11-2015 காலை 10.11 மணி முதல் 04-11-2015 இரவு 08.03 மணி வரை; மற்றும் 29-11-2015 இரவு 07.27 மணி முதல் 02-12-2015 அதிகாலை 04.01 மணி வரை.

டிசம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குருவும், 11-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வது தாராள தனவரவுகளை உண்டாக்கும் அமைப்பென்றாலும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் ஏற்படுமென்பதால் எதிலும் கவனம் தேவை. தனவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 27-12-2015 காலை 05.18 மணி முதல் 29-12-2015 மதியம் 01.03 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  1, 2, 3, 9; கிழமை - வியாழன், திங்கள்; திசை - வடகிழக்கு; நிறம் - மஞ்சள், சிகப்பு; கல் -புஷ்பராகம்; தெய்வம் - தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்


தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு  ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் எள் எண்ணெயில் தீப மேற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது, திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer