Friday, 26 December 2014

2015 மகரம்


மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

பிடித்ததை விடாத பிடிவாதக்காரர் என்றாலும், வீண் பிடிவாதக்காரராக இல்லாமல் எதிலும் கவனமுடன் செயல்படும் மகர ராசி நேயர்களே! இந்த ஆண்டில் உங்கள் ராசியாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். ஆண்டுக் கோளான குரு பகவானும் 7-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால்  நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாளக்கூடிய வாய்ப்பும், அதனால் லாபமும் அபிவிருத்தியும் பெருகக்கூடிய அமைப்பும் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களும் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெறுவார்கள். சிலருக்கு நினைத்த இடத்திற்கு மாற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் அதாவது ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்றாலும் சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கமுடியும். சர்ப்ப கிரகங்களான கேது 3-ஆம் வீட்டிலும், ராகு 9-லும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்துசென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். சனியின் பலமான சஞ்சாரத்தால் இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாகவே இருக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய ஆற்றலுண்டாகும். குடும்பத்தி லுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். ஆயுள்காரகன் சனி பகவான் 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் தேக ஆரோக்கியத்தில்  எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாகச் சரியாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் இருக்கும்.

குடும்பம்பொருளாதார நிலை

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த வகையிலும் பணநெருக்கடியோ, உற்றார்- உறவினர்களிடம் கருத்து வேறுபாடோ ஏற்படாது. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். ஆண்டின் முற்பாதியில் குரு 7-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள்கூட நிறைவேறிவிடும். இதுவரை உங்களை விரோதிபோல பார்த்தவர்களும் உரிமையோடு நட்புபாராட்டுவார்கள். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் யாவும் சேரும். குடும்ப ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும்.

உத்தியோகம்

உங்கள் ஜென்ம ராசியாதிபதியான சனி பகவான் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில்  சஞ்சாரம் செய்வதால் உத்தியோக நிலையில் உயர்வான பலன்களை அடைவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உத்தியோகத்தில் ராஜ மரியாதை கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறனும், செயலாக்கமும், அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடிவரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

தொழில்வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையுமென்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் ஆதாயம் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல மேன்மைகள் அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். தெய்வீக, ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, யோகம், வண்டி, வாகன யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் குரு 7-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சாதகமான பலனை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். இந்த ஆண்டு பிற்பாதியில் குரு பகவான் 8-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் துணிவும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு

இந்த வருடம் மக்கள் செல்வாக்கிற்கு காரகனாகிய சனி பகவானே லாப ஸ்தானமான 11-ல்  சஞ்சரிப்பதால் உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு அரசியல் காரணங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

 விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையாச் சொத்து வகையிலிருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தொழிலில் புதிய புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதால் உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். அரசு வழியில் கௌரவிக்கப்படுவீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். ஆடம்பர பங்களாக்களும், கார் வசதிகளும் உண்டாகும். வெளிநாடுகளுக்கும் படப் பிடிப்புக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மாணவமாணவியருக்கு

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். நல்ல முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபட்டு பரிசுகளை தட்டிச்செல்வீர்கள்.

மாதப் பலன்கள்

ஜனவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும் லாப ஸ்தானமான 11-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம்கிட்டும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகி, பொருளாதாரம் மேன்மையடையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும்- அசையாச் சொத்துகளையும் வாங்குவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 08-01-2015 மாலை 04.28 மணி முதல் 11-01-2015 அதிகாலை 05.23  மணி வரை.

பிப்ரவரி 

ராசிக்கு 3-ல் கேதுவும், 7-ல் குருவும், 11-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் வெற்றிமேல் வெற்றிகள் கிட்டும், இம்மாதம் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் அபரிமிதமான லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்தினமும் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 04-02-2015 இரவு 11.17 மணி முதல் 07-02-2015 மதியம் 12.09 மணி வரை.

மார்ச்

3-ல் செவ்வாயும், 11-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சேமிப்பு பெருகும். சுபகாரியங்கள் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபத்தைப் பெருக்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெறமுடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-03-2015 காலை 05.26 மணி முதல் 06-03-2015 மாலை 06.20 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியனும் 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் எளிதாக லாபத்தை அடையமுடியும். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக் கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 31-03-2015 பகல் 11.40 மணி முதல் 02-04-2015 இரவு 12.36 மணி வரை; மற்றும் 27-04-2015 மாலை 06.37 மணி முதல் 30-04-2015 காலை 07.32 மணிவரை.

மே

சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பது வீண் அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு  என்றாலும் 7-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதால்  பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் ஒற்றுமை நிலவும். மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். தொழில், வியாபாரத்திலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 25-05-2015 அதிகாலை 02.27 மணி முதல் 27-05-2015 மதியம் 03.10 மணி வரை.

ஜூன்

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன், செவ்வாய் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் பெருகுவதுடன் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 21-06-2015 காலை 10.41 மணி முதல் 23-06-2015 இரவு 11.07 மணி வரை.

ஜூலை 

இம்மாதம் 3-ல் கேது, 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் ஓரளவுக்கு ஏற்றங்களைப் பெறமுடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைகளுக்குப்பின் பதவி உயர்வுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 18-07-2015 மாலை 06.31 மணி முதல் 21-07-2015 காலை 06.49 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாயும், 8-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள், தடைகள், அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய காலமென்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியாவிட்டாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-08-2015 அதிகாலை 01.28 மணி முதல் 17-08-2015 மதியம் 01.48  மணி வரை.

செப்டம்பர் 

அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் உண்டாகும். வரும் 5-ஆம் தேதி முதல் சனி 11-ல் சஞ்சாரம்   செய்யவிருப்பதால் பிரச்சினைகள் சற்றே விலகும். தனவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷகால விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 11-09-2015 காலை 07.34 மணி முதல் 13-09-2015 இரவு 08.07 மணி வரை.

அக்டோபர்

லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பல புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும்பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளிவைக்கவும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 08-10-2015 மதியம் 01.27 மணி முதல் 11-10-2015 அதிகாலை 02.11 மணி வரை.

நவம்பர்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் எதிர்பார்த்த லாபங்களை அடையமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பல புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். குடும்பத்தின் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைக்கவும். சிவன் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-11-2015 இரவு 08.03 மணி முதல் 07-11-2015 காலை 08.39 மணி வரை.

டிசம்பர்

ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரனும் லாபஸ்தானத்தில் சனியும் சஞ்சாரம் செய்வதால் செய்யும் உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். அசையும்- அசையாச் சொத்துகளையும் வாங்குவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 02-12-2015 அதிகாலை 04.01 மணி முதல் 04-12-2015 மாலை 04.00  மணி வரை; மற்றும் 29-12-2015 மதியம் 01.03 மணி முதல் 31-12-2015 இரவு 12.13 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5, 6, 7, 8; கிழமை - சனிபுதன்; திசை - மேற்கு; நிறம் - நீலம், பச்சை; கல்நீலக்கல்; தெய்வம்- ஐயப்பன்.

பரிகாரம்


மகர ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு வரும் 05-07-2015 முதல் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. கேது 4-லும் ராகு 10-லும் சஞ்சரிப்பதால் சர்பசாந்தி செய்வது, துர்க்கையம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை உண்டாக்கும்.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer