Friday, 26 December 2014

2015 கன்னி


கன்னி  
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

அனைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளந்துபேசும் தன்மையுடைய கன்னி ராசி நேயர்களே! கடந்த காலங்களில் நடைபெற்ற ஏழரைச்சனி முழுமையாக முடிந்து இந்த 2015-ஆம் ஆண்டில் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், பொருளாதாரரீதியாக மேன்மையும் கொடுக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லா தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்தொழில், வியாபாரரீதியாக மேன்மைமிகு பலன்கள் உண்டாகும். எடுக்கும்  புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் கௌரவங்களும் தேடி வரும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு விரய ஸ்தானமாகிய 12-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு வீண் செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும், சனி பகவான் 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்துசென்ற உறவினர்கள் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்களனைத்தும் குறையும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டிருப்பவர்களும் படிப்படியான ஆரோக்கிய முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த வருடம் முழுவதும் ஆயுள் காரகனான சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானத்திலிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் இருந்த பிரச்சினைகள் மருத்துவச் செலவுகள் யாவும் குறைந்து நிம்மதி நிலவும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள்கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு விரய ஸ்தானத்திற்குச் செல்லவிருப்பதால் பணவிஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள் உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும். நல்ல நிர்வாகத் திறமையும் உங்களிடம் பளிச்சிடும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடையமுடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெறமுடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியமானது இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு போன்றவையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி யுண்டாகும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள் சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். பணிபுரியக்கூடிய பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போருக்கு நல்ல வருமானம் கிட்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வரும் குருப்பெயர்ச்சிக்குப்பின் பண விஷயங்களில் கவனமுடனிருத்தல் நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்கள் செல்வாக்குக்கு காரகனான சனியே 3-ல் சஞ்சரிப்பதால் மக்களின் அமோக ஆதரவும் உங்கள் பக்கமே இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலும் மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் வலிமையும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை, காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையைப் பெறமுடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தனசேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி சுபிட்சமும் யாவும் சிறப்படையும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமே. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த கதாபாத்திரங்களில் நடிக்கமுடியும். உங்களின் திறமைகளுக்கு நல்ல தீனி கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிக்குவிப்பீர்கள்.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளும் உங்களால் பெருமையடையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தேடிவரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச்செல்வீர்கள்.

மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம  ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகள னைத்திலும் வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் போட்டிகளின்றி நடைபெற்று லாபத்தை அள்ளித்தரும். பெயர், புகழ், உயர்வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 26-01-2015 பகல் 11.48 மணி முதல் 28-01-2015 மாலை 05.12 மணி வரை.

பிப்ரவரி 

முயற்சி ஸ்தானமான 3-ல் சனியும் 6-ல் செவ்வாயும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியன் 6-ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பலமும் வலிமையும் கூடி எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விநாயகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-02-2015 இரவு 08.01 மணி முதல் 24-02-2015 இரவு 11.46 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் சூரியனும் சஞ்சாரம்செய்வது அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் லாபத்தினைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக்கூட லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர் களும் உயர்வடைவார்கள். 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறு பாடுகள் தோன்றிமறையும். முருக வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 22-03-2015 காலை 06.29 மணி முதல் 24-03-2015 காலை 08.35 மணி வரை.

ஏப்ரல்

இம்மாதம் ராசிக்கு 7-ல் சூரியனும் 8-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்திலிருப்பதால் வீண் விரயங்களும், பொருளாதாரத் தடைகளும் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் சில காலம் தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகஸ் தர்களுக்கு இடமாற்றங்கள் உண்டாகும். சஷ்டி விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 18-04-2015 மாலை 05.22 மணி முதல் 20-04-2015 மாலை 06.54 மணி வரை.

மே

ஜென்ம ராசியில் ராகுவும் 8-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென் றாலும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். சிவனையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-05-2015 அதிகாலை 02.41 மணி முதல் 18-05-2015 அதிகாலை 04.52மணி வரை.

ஜூன் 

லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரனும் மாத பிற்பாதியில் 10-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்து லாபமும் அபிவிருத்தியும் பெருகும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளையும் தற்போது மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 12-06-2015 காலை 09.31 மணி முதல் 14-06-2015 மதியம் 01.04 மணி வரை.

ஜூலை

ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாயும் 11-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழிலில் லாபங்கள் பெருகும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். வரும் 5-ஆம் தேதி முதல் குரு விரய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 09-07.2015 மதியம் 03.07 மணி முதல் 11-07-2015 இரவு 07.18 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொட்டது துலங்கும். எதிலும் நற்பலன்களையே பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய காலமென்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-08-2015 இரவு 08.57 மணி முதல் 07-08-2015 இரவு 12.41 மணி வரை.

செப்டம்பர்

இம்மாதம் 5-ஆம் தேதி முதல் சனி 3-ல் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றங்களை ஏற்படுத்துமென்றாலும் விரய ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத வீண் விரயங்கள்  உண்டாகும். உடல் ஆரோக்கியமும் பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். பிரதோஷ விரதமிருப்பது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-09-2015 அதிகாலை 04.48 மணி முதல் 04-09-2014 காலை 07.02 மணி வரை; மற்றும் 29-09-2015 மதியம் 03.00 மணி முதல் 01-10-2015 மதியம் 03.39 மணி வரை.

அக்டோபர்  

ஜென்ம ராசியில் சூரியன், ராகுவும், 12-ல் குரு, செவ்வாயும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பென்பதால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். என்றாலும் சனி பகவான் சாதகமாக 3-ல் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாமலிருக்கும். தொழில், வியாபாரம் செய் பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 27-10-2015 அதிகாலை 02.12 மணி முதல் 29-10-2015 அதிகாலை 02.14 மணி வரை.

நவம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க விருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். முருக வழிபாடு, சஷ்டி விரதம் இருக்கவும்.

சந்திராஷ்டமம்: 23-11-2015 மதியம் 12.07 மணி முதல் 25-11-2015 மதியம் 01.04 மணி வரை.

டிசம்பர் 

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரித்தாலும் 3-ல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்கும் பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். குரு 12-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் மேலோங்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்

சந்திராஷ்டமம்: 20-12-2015 இரவு 07.44 மணி முதல் 22-12-2015 இரவு 10.04 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 4, 5, 6, 7, 8; நிறம் - பச்சைநீலம்; கிழமை- புதன், சனி; கல்- மரகதப் பச்சை; திசை - வடக்கு; தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு.

பரிகாரம்


கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமற்று சஞ்சரிப்பதால்  சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. குரு பகவான் 05-07-2015 முதல் 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer