Friday, 26 December 2014

2015கும்பம்


கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

வெள்ளை உள்ளமும், நெறிதவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! இந்த 2015-ஆம் ஆண்டு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. ஆண்டுக்கோளான குரு பகவான் ஆண்டின் முற்பாதிவரை ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகளைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் வம்பு வழக்குகளும் ஏற்படும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால்  குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும்.

உடல் ஆரோக்கியம்

இந்த வருடம் முழுவதும் ஆயுள்காரகன் சனி பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பற்ற நிலை, எந்தவொரு பணியிலும் முழுமையாக கவனம் செலுத்தமுடியாத நிலை உண்டாகும்வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குரு ஆண்டின் தொடக்கத்தில் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும்.

குடும்பம், பொருளாதாரம்

குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே எதிலும்  ஒற்றுமையுடன் செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 7 -ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும்.

உத்தியோகம்

இந்தாண்டு சனி 10-ல் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் இருப்பதாலும் செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்துமுடிக்க முடியாத நிலை, மேலிடத்தில் அவப்பெயர் எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமைய சற்று தாமத நிலை உண்டாகும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் சமசப்தம  ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும், கிடைக்கும் என்றாலும் இந்த ஆண்டு முழுவதும் சனி 10-ல் இருப்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில்வியாபாரம்

இந்த வருடம் முழுவதும் தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகளும் வீண் விரயங்களும், தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களும் உண்டாகும். என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் வருவாய் சூடுபிடிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். அரசு வழியில்  எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் மறைவதால் மந்த நிலை விலகி லாபம் பெருகும். கூட்டாளிகளும் சாதகமாகவே செயல்படுவார்கள்.

பெண்களுக்கு

இந்த ஆண்டு முழுவதும் சனி 10-ல் சஞ்சரிப்பதாலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் இருப்பதாலும்  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லதுபணவிவகாரங்களில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உத்தமம். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வது, குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் சமசப்தம  ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.

கொடுக்கல்வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்கு கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் 7-ல் குரு சஞ்சரிக்கவிருப்பதால்  பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். ஜூலை 5-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல்களில் நிறைய இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள், வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும், உற்றார்- உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். காய், கனி, பூ வகைகளாலும் கால்நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்,

கலைஞர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் சனி 10-லும் குரு 6-லும் சஞ்சரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லதுநிறைய போட்டி பொறாமைகள் நிலவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. ஜூலை 5-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதோடு சுகவாழ்வு சொகுசு வாழ்வும் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

மாணவமாணவியருக்கு

கல்வியில் சற்று மந்தநிலையே இருக்கும் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக ஈடுபாட்டுடன் செயல்படவேண்டியிருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும் வீணான பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப்பெற நல்ல முறையில் நடந்து கொள்வது நல்லது.

மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும்  குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 11-ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக முடித்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 11-01-2015 அதிகாலை 05.23 மணி முதல் 13-01-2015 மாலை 05.37 மணி வரை.

பிப்ரவரி

அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், விரய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்களிடையே கருத்துவேறுபாடும் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அபிவிருத்தி குறையும். பிரிவு, பிரச்சினைகள் உண்டாகும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-02.2015 மதியம் 12.09 மணி முதல் 09-02-2015 இரவு 12.47  மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசியில் சூரியனும், 2-ல் செவ்வாயும், 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால், உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாமல் போகும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரி பவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பயணங்களால் தேவை யற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 06-03-2015 மாலை 06.20 மணி முதல் 09-03.2015 காலை 06.50 மணி வரை

ஏப்ரல்

முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்  உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பான நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.   உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம்  நற்பெயரை எடுக்கமுடியும். விநாயகரை தினமும் வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 02-04-2015 இரவு 12.36 மணி முதல் 05-04-2015 மதியம் 12.50 மணி வரை.

மே

மாத முற்பாதிவரை சூரியன் 3-ல் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்துமென்றாலும் குரு 6-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் சற்றே அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்திலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு  பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யாதிருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 30-04-2015 காலை 07.32 மணி முதல் 02-05-2015 மாலை 07.38 மணிவரை; மற்றும் 27-05-2015 மதியம் 03.10 மணி முதல் 30-05-2015 அதிகாலை 03.24 மணி வரை.

ஜூன் 

சுகஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாயும் 6-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போடவேண்டி யிருக்கும். எதிர்பாராத வீண் விரயங்களால் பண நெருக்கடிகள் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவவழிபாடு, முருகவழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 23-06-2015 இரவு 11.07 மணி முதல் 26-06-2015 காலை 11.41 மணி வரை.

ஜூலை

இம்மாதம் 5-ஆம் தேதி முதல் குரு 7-லும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடந்த காலப் பிரச்சினைகள் சற்றே விலகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். ஆஞ்சனேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 21-07-2015 காலை 06.49 மணி முதல் 23-07-2015 மாலை 07.43 மணி வரை.

ஆகஸ்ட்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாயும் 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகி எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளின் உதவியால் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ள முடியும்ஆஞ்சனேயரை வழிபட்டால் எதையும் சமாளித்து வெற்றியடைய முடியும்.

சந்திராஷ்டமம்: 17-08-2015 மதியம் 01.48 மணி முதல் 20-08-2015 அதிகாலை 02.54  மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாயும்  7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால்  குடும்பத்தில் மகிழச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தாராள தனவரவுகள், சமுதாயத்தில் கௌரவமான நிலை போன்ற நற்பலன்களை அடையமுடியும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைத் தடையின்றிப் பெறுவர். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-09-2015 இரவு 08.07 மணி முதல் 16-09-2015 காலை 09.11 மணி வரை.

அக்டோபர்

ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சமேற்படாது என்றாலும் 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திரவழியில் பூரிப்புண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 11-10-2015 அதிகாலை 02.11 மணி முதல் 13-10-2015 மதியம் 03.10 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் 9-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக மேன்மைகளும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்களும் தேடிவரும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 07-11-2015 காலை 08.39 மணி முதல் 09-11-2015 இரவு 09.37 மணி வரை.

டிசம்பர்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 04-12-2015 மாலை 04.00 மணி முதல் 07-12-2015 அதிகாலை 05.00 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  5, 6, 7, 8; கிழமை - வெள்ளிசனி; திசை - மேற்கு; நிறம் -வெள்ளை, நீலம்; கல் - நீலக்கல்; தெய்வம்ஐயப்பன்.

பரிகாரம்


கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு  எள் எண்ணெய் தீபமேற்றுவது சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். வரும் 05-07.2015 வரை குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. சர்ப கிரகங்களான கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer